Tuesday, December 01, 2009

சின்ன நாச்சியார் கதை

விஷ்ணு குடுமியை இழுத்துச் சுற்றிக் கொண்டான். துண்டும் சேர்ந்தே இருந்த குடுமி காய எவ்வளவு நேரமாகும் என்று தெரியவில்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் விடிந்துவிடும். கோவிலைச் சுத்தப்படுத்திவிட்டு பண்டாரம் போயிருப்பான். வானத்தைப் பார்த்தான். விடிவதற்கு இரண்டு மூன்று நாழிகை இருக்கலாம் என்று கணித்துக் கொண்டான். அக்ரஹாரத்துக்குள் வந்த போது சில்லென்று காற்று நெஞ்சில் அடித்தது. குளிர் காலம் இல்லையென்றாலும் இந்த நாழிகையில் இப்படித்தான் இருக்கும். இங்கிருந்து மலையடிவாரம் சில கல் தூரம்தான் அதைத் தாண்டினால் பெரும் மலைத்தொடரின் வரிசைகள் வந்துவிடும்.

கோயிலின் ஒருவாசல் கதவு மட்டும் திறந்திருந்தது. இந்த இருளில் அங்கங்கே கோயிலில் வைத்திருந்த எண்ணெய் விளக்குகள் காற்றுடன் போராடிக் கொண்டிருந்தன. யாரும் உள்ளே இருப்பதாகக் காணோம். பண்டாரம் கோவிலைவிட்டுப் போயிருப்பான் போலும். வெளிப்பிரகாரம் வழியே சுற்றிக் கொண்டு, கோவிலின் பின்புறத்திலுள்ள மலர் வனத்துக்குச் சென்றான். அங்கு இருளாக இருந்தாலும், விடிகாலை வெளிச்சமும் இருந்தது. எல்லாம் துலக்கமாகத் தெரிந்தன. செடிகளின் கரும் பச்சையில் வெள்ளை மலர்கள் தெளிவாகத் தெரிந்தன. மஞ்சள், சிவப்பு மலர்களும் நிறையப் பூத்திருந்தன. தினந்தினமும் பார்த்த பழகிப் போன காட்சிகள். சர்ப்பங்களும் உண்டென்று கொஞ்சம் நிதானமாக காலடி எடுத்து வைத்தான். பகவான் அருளிருக்க இதுவரை அப்படி ஏதும் நிகழவில்லை. ஆனாலும் பயம் இருந்தது.

மனம் பதட்டத்துடனேயே அலைமோதிக் கொண்டிருந்தது. முகத்தில் என்றும் இருக்கிற சாந்தம் இல்லை. நாமாகவே கற்பனை பண்ணிக் கொள்கிறோம் என்றும் நினைத்தான். கொஞ்ச நாட்களாக அப்படித்தான் இருக்கிறது. காரணம் அவனுக்கும் பண்டாரத்துக்கு மட்டும்தான் தெரியும். சிறுகிழாருக்குத் தெரிந்தால் இந்தப் பணியைத் தொடரமுடியாது. உஞ்சவிருத்தி எடுத்துப் பிழைக்க வேண்டியதாகிவிடும். இதுவும் ஒருவகையில் உஞ்சவிருத்திதான். தெருவில் போகவேண்டியதில்லை. கிழார் வீட்டிலிருந்து அரிசியும் மற்ற உணவுப் பொருட்களும் விளைந்ததும் அனுப்பி விடுவார்கள். கேட்கவேண்டியதில்லை. கேட்டாலும் கிடைக்குமா என்பது சந்தேகம். விஷ்ணுவும் வயதான அம்மாவும் அதை நம்பித்தான் இருந்தார்கள். கோயிலுக்கு எண்ணைய் கொடுப்பவர்கள் பட்டருக்கும் கொடுத்துவிடுவார்கள்.

புதிதாகப் பின்னிய மலர்க்கூடையில் மலர்களைப் பறித்துப் போட ஆரம்பித்தான். பெருமாளுக்கு ஆழ்வார் பாசுரங்கள் கிழார் வந்து முதல் ஆரத்தி காட்டும் வரை மலர் தூவிக்கொண்டே பாடவேண்டும். அதற்குத் தேவையான அளவு மலர்கள் வேண்டும். அது தவிர மாலைகள் கட்டிப் போடவேண்டும். வேக வேகமாக கைவிரல்கள் வேலை செய்தன. நடு நடுவில் செவத்தாள் ஞாபகம் வந்தாள். என்ன சொல்லியும் கேட்கவில்லை அவள். பிடிவாதக்காரி. அவள் இங்கிருந்தாள் அவள் பெயரோடு அவன் பெயரும் களங்கமாகி இருக்கும். ஒரு பிராமணன் தன்னை நேசித்ததே அவளுக்குப் பெரிதாக இருந்திருக்க வேண்டும். ஏதாவது செய்து விடுவோம் என்று குறிப்பாகச் சொல்லிப் பார்த்தான். அவள் கேட்பதாக இல்லை. இறைவன் கொடுத்த வரம். அதை அழித்துவிடக்கூடாது என்று அவள் நம்பினாள். அவள் அப்பனான சாமிப் பண்டாரமும் அவளுக்கு உதவினான். அனேகமாக அவள் குழந்தை பெற்றிருக்க வேண்டும். எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லை. அவள் மீது விஷ்ணுவுக்கு ரொம்பப் பாசம் என்று அவளே பலபேரிடம் சொல்லியிருக்கிறாள். அவனுக்கு அவள் ஞாபகம் வந்தாலும், அது அவள் மேல் உள்ள நேசமா அல்லது உளைச்சலா என்று அவனுக்குப் புரிந்ததில்லை. அவன் ஆண், அந்தணன். அதிலும் கோயிலில் வழிபாடு நடத்துபவன். அவனுக்கும் அவளுக்கும் உள்ள உறவை எப்படி எடுத்துக் கொள்வது அல்லது மற்றவர்கள் முன் எப்படிச் சொல்வது என்று அவனுக்குக் குழப்பமாக இருந்தது.


சிறு வயது முதல் இருவரும் ஓரே இடத்தில் வளைய வளைய வருபவர்கள். சாமிப் பண்டாரம் அவன் அப்பா வயது. ஜாதியில் தாழ்ந்திருந்தாலும் இருவரும் கோயில் சார்ந்தே வாழ்வதனால் ரொம்பப் பழக்கமாகிவிட்டது. ஆனால் இந்த உடம்பு ஒன்று இருக்கிறதே அது மாயம் அது இது என்று என்ன சொன்னாலும், ஜாதி ஆச்சாரங்களைப் பார்க்காது. அதனுடைய பசி அவனையும் அவளையும் சாப்பிட்டுவிட்டது. மூன்று மாதமாக அவளைக் காணவில்லை.


சாமிப் பண்டாரம் சொன்னான் “அவள் பத்ரமா இருக்கா சாமி. ஏதோ தெய்வச் செயல். நடந்தது நடந்துபோச்சு. ரெண்டுபேரும் சாமிக்குப் பணி செய்றீங்க. நம்ப ஒரு பாவமும் செய்யக் கூடாது. அது பொறந்தா பொறக்கட்டும். கிழாருக்குத் தெரியாது என்ன நடந்ததுன்னு. நான் வெளியூர் போயிருக்கான்னு சொல்லி வச்சிருக்கேன். அவருக்கும் அவ மேல ஆசைதான். ஆனா வெளிப்படையா ஒண்ணும் செய்ய முடியாம இருந்தார். இனிமே அவளுக்குத் திருமணம் கைகூடாது. அந்தக் குழந்தையை வச்சுக் காப்பாத்த வேண்டியது தான். நேத்துக் குழந்த பொறந்த்துன்னு சொல்லிவிட்ருக்கா. என்ன நடக்கணுமோ அது ஆண்டவன் செயல்”

ஏதாவது ஏடாகூடமாக நடந்துவிடும் என்று விஷ்ணுவுக்குத் தோன்றிக் கொண்டேஇருந்தது. அவள் அப்படி. ரொம்ப அவனை விரும்பினாள். விளையாடும் போதும் அடிக்கடி எதிர்த்துக் கேட்பாள். அவள் பிராமணத்தியாக இல்லாதது அவளுக்கு வசதியாகப் போய்விட்டது. அவனை அச்சுறுத்தலாம். என்ன நடந்தது என்று கிழாருக்குத் தெரிந்தால்… ஆனால் அவளும் சாமிப் பண்டாரமும் அப்படி ஆட்களாகத் தெரியவில்லை. கோயிலையும் அக்ரஹாரத்தையும், சிறுகிழாரையும் நம்பித்தான் அவர்கள் கதை நடக்கிறது. பகைத்துக் கொள்ளமுடியாது. அல்லது அடிமைச் சேவகம் செய்யவேண்டும். கோவிலடிமையாக இருப்பது தேவலை. அதுவும் பட்டருடன் இருப்பது ரொம்ப வசதி.

விஷ்ணும் எதிர்பார்த்தபடி நடந்தது.

மலர் பறித்துக்கொண்டு கோயில் உள்நடையில் எப்போதும் உட்கார்ந்து பூக்கோத்துக் கொண்டிருக்கும் இடத்துக்குப் போனான். அங்கே திண்ணை மீது அவனும், நாலைந்து படிக்குக் கீழ் சாமிப் பண்டாரமும் அமர்ந்து பேசிக்கொண்டே வேலை நடக்கும். ஏதாவது எடுபிடி வேலை என்றால் சாமிப் பண்டாரம் செய்வான். ஆனால் அவன் அப்படி வேலை செய்வது ஊரார் யாருக்கும் தெரியக் கூடாது என்பது வழக்கம். தெரிந்தாலும் கிழார் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளமாட்டார். கோவிலில் எவ்வளவு வேலை என்பது அவருக்குத் தெரியும். ஒண்டி ஆளாக விஷ்ணுவால் முடியாது.

எப்போது உட்காரும் இடத்தில் சாமிப் பண்டாரத்தைக் காணவில்லை. விஷ்ணுவுக்கு வேலைசெய்து களைத்துவிட்டது. அப்போதுதான் சாமிப்பண்டாரம் ஓடிவந்தான், கையில் ஏதோ துணிகட்டு மாதிரி இருந்தது. இந்த நேரத்தில் அவன் பதைத்து ஏன் ஓடி வருகிறான் என்பது அவனுக்குப் புரியவில்லை.

===


விஷ்ணு அன்று வழிபாடு முடிந்ததும் கிழார் வீட்டுக்கு வழக்கம் போல அவர் பின்னாலேயே போனான். நன்றாக விடிந்து விட்டது. வெய்யில் வரவில்லை. சிறுகிழார் வீட்டை விட்டு ஒதுங்கிச் சாமிப் பண்டாரம், கையில் எதையோ துணியால் சுற்றிவைத்து தாங்கிக்கொண்டு நின்றிருந்தான். விஷ்ணுவுக்கு பதைபதைப்பு மிகவும் அதிகமாகி விட்டது. ஓடோடி வந்து கையிலிருந்த மூட்டையுடன் கிழார் காலில் விழுந்தான். கையில் ஒரு பச்சைக் குழந்தை. பிறந்து சில நாட்களே ஆகியிருக்க வேண்டும். விஷ்ணுவும் அப்போதுதான் பார்த்தான். மனது அடித்துக் கொண்டது. ஏதாவது சொல்லி பிழைப்பைக் கெடுத்துவிடுவானோ? அதை வெளிக்காட்டமலிருக்க முயன்றான். ஆனால் பேச்சு எழவில்லை.

“என்னடா கையில?” நிமிர்ந்த தலை திரும்பாமலே கேட்டார்.

“சாமி, குழந்தை…கோவில் வாசலில் காலையில் கிடந்தது”.
திடுக்கிட்டு நின்றார். கிழார் விஷ்ணுவைப் பார்த்தார்.

“யாரு பெத்த பிள்ளையோ? களையான முகம் மேல்ஜாதிக் குழந்தையாகத்தான் இருக்கணும். நல்ல மூக்கும் முழியுமா இருக்கு” அவன் வருத்தத்தில் பேசுவது மாதிரித் தெரியவில்லை. ஏதோ புதையல் எடுத்த மாதிரிப் பேசிக் கொண்டிருந்தான். அவருடைய முகத்திலும் அதிர்ச்சி இருந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை. பிறந்து இரண்டு மூன்று நாட்கள்தான் ஆகியிருக்கும் என்று கிழாரின் மனைவி சொன்னாள். அந்தணக் குழந்தை என்பது அவளின் ஊகம். விஷ்ணுவைப் பார்த்தாள். அதில் இருவருக்கும் ஏதோ புரிந்தது. அவள் கிழாரின் காதில் எதையோ சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள். மூவரும் வீட்டினுள் சென்று எதையோ பேசிக் கொண்டிருந்து விட்டுப் போனார்கள்.

விஷ்ணு ஊகிக்க வேண்டியிருக்கவில்லை. அதற்குப் பின் செவத்தாளைக் காணவில்லை. விஷ்ணுவுக்கு சாமிப் பண்டாரம் எதையோ மறைக்கிறான் என்று புரிந்தது. வெளிப்படையாக கேட்க முடியவில்லை. கேட்டால் ஏதாவது சொல்லி தன் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து கொண்டிருந்தான். கோயிலில் கிடைத்த அழகான குழந்தை, பகவானின் அருளால் கிடைத்த குழந்தை, திருமணம் ஆகாத விஷ்ணுவில் வீட்டில் வளர்ந்து வந்தது. அவனுடைய அம்மாவும் குழந்தையை கொஞ்சிக் குலாவினாள். அதன் முக லட்சணம் ஒரு காரணம். ஒருவேளை குழந்தை அவளைப் போல் பிறந்திருந்தால் கண்டுபிடித்து … அதற்கு மேல் அவனால் கற்பனை செய்ய முடியவில்லை. அவனும் இனிமேல திருமணம் செய்து கொள்வதில்லை என்று முடிவு கட்டிவிட்டான்.

சின்ன நாச்சியார் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்தாள். ஊரில் அவள் விஷ்ணு பட்டரின் மகளென்RU தெரிந்தும் தெரியாத ரகஸியமாய் இருந்தது. செவத்தாள் அதற்கப்புறம் எங்கே போனாள் என்று தெரியவில்லை.

இந்தச் சின்ன நாச்சியார்தான் ஆண்டாளாக மாறி இருக்கலாம் என்று மடையர்கள் சொன்னால் நாம் ஒத்துக் கொள்ளமுடியாது. மறுக்கவும் முடியாது. ஏனெனில் எல்லாம் புராணக்கதை.

No comments:

Post a Comment