Thursday, June 15, 2017

காணாமல் போன எழுத்தாளன்

            ஒரு புத்தகம் வெளிவந்த பிறகு அதை எப்போதும் வாசகன் படிக்கலாம்.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னால் எழுதப்பட்ட நூல்களை இன்று முதல் முறையாக வாசிப்பவர்கள் பல்லாயிரம் உண்டு.  திருக்குறளையோ சங்க இலக்கியப் பாடல்களையோ ஒருமுறையேனும் கேட்காத, அல்லது படிக்காத தமிழர்களைப் பார்ப்பது அரிது. 

            நான் தேடிய அந்த நூலை ஒரு முறை இருபது வயதில் படித்திருக்கிறேன்.  அதாவது சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் முன்னால்.  அப்போது ஏதோ பிதற்றலாகத் தோன்றியது.  புத்தகத்தின் பெயரையும் மறந்துவிட்டேன்.  ஆனால் மரணம் குறித்து விரிவாக எழுதப்பட்டிருந்த்து என்பது நினைவுக்கு வந்த்து.  அதற்கும் ஒரு காரணம் இருந்தது.  ‘இன்ஃபேச்சுவெஷன்ஸ்” என்ற ஸ்பானியக் குறு நாவலை வாசித்த கணத்தில் அது நினைவுக்கு வந்தது.  ஏதோ ஒரு இடத்தில் ஒரு கோழிக்கறியைச் சாப்பிடும் போது, பல ஆண்டுகளுக்கு முன்னால் அதே சுவையில் சாப்பிட்ட கோழிக்கறி ஞாபகம் வருகிறதல்லவா? அது போன்றது தான் இதுவும்.   தமிழில் படித்த வரிகள் சில அப்படியே ஆங்கிலத்தில் படித்த நாவலில் எழுதப்பட்டிருந்தது போல் தோன்றியது. ‘தோன்றியது’ என்பது முக்கியம்.  ஏனெனில் தமிழில் படித்த நாவலை அதற்கப்புறம் தேட ஆரம்பித்தேன். ஒரு புத்த்கத்தில் அதுவும் தமிழ்ப்புத்தகத்தில் படித்த சிந்தனையின் தொடர்ச்சி ஒரு ஆங்கிலப் புத்தகத்தில் இருப்பது அடிக்கடி நேர்வதல்ல.  ஆசிரியர் பெயர் உடனே ஞாபகம் வந்து விட்டது என்றாலும் எந்தப் பதிப்பகம் வெளியிட்டது என்பது ஞாபகம் வரவில்லை.   ஆனால் அந்த நினைவு என்னைக் குடைந்து கொண்டே இருந்தது.  முழுவதாகப் படித்திருந்தாலும், கதையின் சிறு கோட்டோவியம் போன்ற உருவம் தவிர எதுவும் ஞாபகம் இல்லை.  எனக்கு வயதாகிவிட்டது ஒரு காரணமாக இருக்கும்.  படித்த சமயத்தில் அந்த நாவல் எனக்கு ஒரு புத்துணர்ச்சியை, அல்லது எழுச்சியைத் தரவில்லை என்பதனாலும் இருக்கலாம்.  ஆனால் இத்தனை வருடங்களுக்குப் பிறகு கொக்கி போட்டு இழுக்கிறதென்றால் அதில் ஏதோ இருந்திருக்க வேண்டும். 

            இந்த நவீன உலகத்தின் முழுமுதற் பொருளான இணையத்தில் தேடத் துவங்கினேன்.   அந்த நாவல் வெளிவந்த காலத்தில் இணையம் இருந்ததில்லை. இருந்தாலும் ஒரு நப்பாசைதான். அழியாச் சுடர்கள் போல ஓரிடத்தில் அது கிடைக்கக் கூடும்.   தமிழ் வாசகப் பரப்பு மிகவும் குறைவென்றாலும்,  அந்தக் குறைந்த வாசகப் பரப்பில் இயங்குகிறவர்கள் மிகவும் தீவிர ஆர்வம் உடையவர்கள்.  நல்ல நூல் எங்கிருந்தாலும் அதை தான் மட்டும் அல்ல மற்றவர்களும் படிக்கவேண்டும் என்பதில் ஆர்வம் உள்ளவர்கள்.   ஆனால் துரதிருஷ்டவசமாக, இந்த எழுத்தாளரை இணையத்தில் தேடிக் கண்டுபிடிக்க பிடியவில்லை.  தமிழ் இலக்கிய உலகம் அவரை மறந்து விட்டிருக்குமா?  இணைய எழுத்துக்களில் இருந்து துப்புத் துலக்க முடியவில்லை.  தமிழ் இலக்கியவாதிகள் அவரை முப்பத்திஐந்து வருடங்களுக்குள் மறந்துவிட்டார்கள்.   எந்த இலக்கியம் குறித்த உரையாடலிலும் அவர் எழுதிய ஒரே நாவலான அது குறித்த விவாதங்கள் இல்லை.  அவர் பெயர் கூடச் சொல்லப்படவில்லை.  அந்த எழுத்தாளன் மறைந்து விட்டான் என்பது எனக்குத் தெரியும்.   ப. சிங்காரம் என்ற எழுத்தாளர் 1959 ஆம் ஆண்டுகளில் எழுதிய நாவல்களை யாரும் பேசாமல் விட்டுவிட்டனர்.  90களின் மத்தியில் யாரோ அவற்றைப் படித்துவிட்டு விதந்தோத, பலர் படித்தனர்.  அனைவருக்கும் அவர் எழுதிய கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி இரண்டு நூல்களும் மிகவும் பிடித்துப் போய் விட்டது.  திருக்குறள் 19ஆம் நூற்றாண்டு வரை சுவடிகளில் மறைந்திருந்து, ஒரு ஆங்கிலேயரால் பதிப்பிக்கப்பட்ட பின்னரே பரவலாக வாசிக்கப்பட்டது என்பதும் நினைவுக்கு வந்தது.

            ஓலைச்சுவடுகளின் காலத்தில் திருக்குறளுக்கு நேர்ந்தது புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.  ஆனால், 1980களி வெளிவந்த நூல் மறைந்து போக என்ன காரணம்?  மீண்டும் தமிழ்ப்பதிப்புலகின் நிலை ஞாபகம் வந்தது.  1921இல் மறந்து போன பாரதியின் வரலாற்றைக் கூட நாம் ஆவணப்படுத்த இன்னும் முயன்று கொண்டிருக்கிறோம்.  தனிப்பட்ட சிலரின் அயராத உழைப்பு இல்லையெனில் அவை மறைந்தே போயிருக்கும்.   பாரதியின் நிலையே இப்படி என்றால் அதற்கு முன்னும் பின்னும் இருந்த எழுத்தாளர்களின் நிலைமை சொல்ல வேண்டியதில்லை.   புதுமைப் பித்தனுக்கு நல்ல வேளையாக தொ.மு. சி கிடைத்தார்.  மற்றவர்களின் வாழ்க்கை வரலாறுகள் எழுதப்பட வேண்டியவை இன்னும் எழுதப்படவில்லை.   உ.வே சாமிநாத அய்யரின் சுய சரிதம் முக்கியமானது.  உள்ளார்ந்த பொறுப்புணர்வோடு எழுதிச் செல்கிறார்.  ஆனால் அது அவரது பார்வையில் எழுதப்பட்ட ஆவணம். இன்னொருவர் அதை எழுதும் போது புதிய தரவுகளின் அடிப்படையில், புதிய பார்வையில் பல புதிய உண்மைகளை வெளிக் கொண்டுவரலாம்.   மஹாத்மா காந்தி சொல்வது போல, ஒருவன் தன்னைப் பற்றி வழக்குமன்றத்தில் சாட்சி சொன்னால் எப்படி இருக்கும்? அது போன்றதுதான் சுய வரல்லாறு. பல சங்கடந்தரும் உண்மைகளை எழுதுகிறவன் மறைத்துவிடக் கூடும்.

            தமிழகத்தில் பல முக்கிய ஆளுமைகளின் வரலாறு எழுதப்படவில்லை.  எழுதப்பட்டவைகளில் பல தலைவனின்/ தலைவியின் புகழ்பாடும் காவியங்களாக இருக்கின்றன.ஆளுமைகளின் வெற்றிகள், தொட்ட உயரங்கள் இவற்றுடன் அவர்கள் செய்த தவறுகள், மனிதப் பண்புகள் இவற்றை எங்கிருந்தும் பெறமுடியாத வகையில் தமிழ்ச்சூழல் இருக்கிறது.

            இந்தப் புகை மூட்டங்களுக்கு நடுவே ஒரே ஒரு நூலை எழுதிய எழுத்தாளனையும் அவனது நூலையும் கண்டுபிடிப்பது எப்படி?  மரணம் என்ற சாசுவதமான பொருள் குறித்த அந்த நாவலைக் கண்டுபிடுத்து விடுவேன் என்றே நம்புகிறேன். 
           
            தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறைக்கு எழுதினேன்.  அவர்களுக்கு அது வேலை இல்லையாம்.  பணக்கொடை வளங்குவதுடன் அது முடிந்து விடுகிறது.  நூலக ஆணைக்குழுவிற்கு எழுதினேன்.  பதில் இல்லை.  பல்கலைக் கழகங்களுக்கும் எழுதினேன்.  பதில் இல்லை.  மேன்மைமிகு தமிழக அரசின் மூன்றாந்தரப் பணியாளனுக்கு நாயினும் கீழான அடியேனின் கடித்ததுக்குப் பதிலெழுதத் தகுமோ?

            என் நண்பரிடம் முறையிட்ட போது அவர் சொன்னார் ’எவனோ கிறுக்கன் இன்னொரு கிறுக்கனைத் தேடிக்கொண்டிருக்கிறான்.  அப்படி என்ன அந்த எழுத்தாளன் பெரிய கம்பனோ கொம்பனோ அல்லது பெரிய ஆளா? கலைமாமணி விருது சாகித்ய அகாடமி விருது கிடைத்த்தா? அல்லது நோபல் பரிசுதான் கிடைத்துவிட்டதா?”  நான் சொல்ல நினைத்துச் சொல்லாமல் விட்டது இதுதான் ‘ இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் இலக்கியப் பாரம்பரியமும் தொடர்ச்சியும் உள்ள மொழிக்கு இன்னும் உலக அரங்கில் திருக்குறளுக்கு இணையான் இன்னொரு நூலைத் தரமுடியவில்லை என்பதற்கு இங்கிருக்கு வாசகப் பரப்பும், எழுதாளர்கள் மீது சமூகம் காட்டும் புறக்கணிப்புத் தானே காரணம்.”  வாசகன் ஒரு கிறுக்கன் என்பதில் சந்தேகம் இல்லை.  எவனோ எழுதிய ஒரு நூலின் பெயரையும், அதன் உள்ளடக்கத்தையும் நினைவில் வைத்துக் கொண்டு ஒரு காதலன் அல்லது காதலியைப் போலத் தேடிக் கொண்டிருக்கிறான். 

            கடைசியில் தெரிந்த விஷயம் இதுதான்.  எழுத்தாளாரின் குடும்பத்தினர் மறுபதிப்பு வெளிவர அனுமதி கொடுக்கவில்லை.  அதனால் அந்த நூல் மீண்டும் வெளிவர வாய்ப்பில்லை.

            ஒரு எழுத்தாளன் படைப்பும் அதன் உரிமையும் அவனது சொத்துக்களின் ஒன்றாக கருதப்பட்டு, வாரிசு உரிமை அடிப்படையில் குடும்பத்தாரிடம் இருக்கிறது.   ஒரு புறம் அந்த உரிமையை ஏற்றுக் கொள்ளும் அவர்கள், எழுத்தாளனின், படைப்பின் அடிப்படை விஷயமான அனைவருக்கும் படைப்பின் உன்னதத்தை சென்று சேர்த்தல் என்பதையே தடை செய்வது தகாதது.  படைப்பை குடும்பத்தினரே தணிக்கை செய்வது எவ்வளவு கொடுமையானது?.

            குழந்தைகள், மனைவி குடும்பத்தினர் மீது வன்முறை நிகழ்த்தும் மனிதன், அதை கணவன் என்ற உரிமையைக் காரணம் காட்டுகிற கொடுமையைப் போல,  படைப்பாளியின் படைப்பை உலக மெங்கும் கொண்டு சேர்க்க விரும்பவேண்டிய அவனது குடும்பத்தினர் தணிக்கை செய்து தடை செய்வது படைப்பின் மீதும் அந்த எழுத்தாளன் மீது நிகழ்த்தும் வன்முறையே ஆகும். 

            ஏற்கனவே குடும்பம், பள்ளி, அலுவலகம், அரசு, சமூகம், பத்திரிக்கை என்று ஒவ்வொரு தடங்கலாக, பல வடிகட்டல்களுக்குப் (அவற்றில் பல மறைமுகமானவை) பிறகே தன்னையும் தனது கருத்துக்களையும் வெளிக்கொணர வேண்டியிருக்கிறது.

            அமெரிக்காவைல், சில்வியா பிளாத் என்றா கவிஞரின் கணவர், கவிஞர் குறித்த தகவல்களை, ஆவணங்க்களை யாரிடமும் காட்டுவதில்ல்லை என்று கவிஞரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆசிரியர் எழுதியிருக்கிறார்.

            படைப்பாளியோ உலகம் முழுவதற்கும் சொந்தமானவன்.  அவன் மானிட சிந்தனையில் ஒரு பகுதியாகிவிடுகிறான்.  அவன் பேச்சும் எழுத்தும், மானிட குலத்தின் சொத்து.  அவன் வரலாற்றின் ஒரு பகுதி.  அவன் எழுதிய நூல் உலக வரலாற்றின் ஒரு ஆவணம். 

            அவனுக்கு இத்தனை தடைகள் என்றால் மனிதகுலம் என்ன செய்ய வேண்டும்?


தணிக்கை அதிகாரியாக குடும்பம், சமூகம், ஊர் நாடு, நீதி மன்றங்கள், ஜாதி அமைப்புக்கள் செயல்பட்டால், எழுத்தாளன் இவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளின்படி எழுத வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டால், எந்த மாற்றமும் சமூகத்தில் சாத்தியமா?  மாற்றமே நிகழாமல் ஒரு சமூகம் உயிர்ப்ப்புடன்  இருப்பதும் சாத்தியமா?  முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

Monday, June 12, 2017

18 துறவாடைக்குள் மறைந்த காதல் மனம் – பிரபஞ்சன்

          தமிழ்பண்டிதராகத் (புலவர் பட்டம் பெற்ற) தொடங்கிய ஒருவர், நவீன இலக்கியத்தால் ஈர்க்கப்பட்டு, சிறுகதைகளால் புகழ்பெற்று, புதிய பார்வையில் பழைய தமிழ் இலக்கியத்தைப் பார்க்கிறார் என்றால் அது ஒரு அதிசயம்.  அப்படிப்ப்ப்ட்ட அதிசயங்களில் ஒருவர் பிரபஞ்சன்.  நவீனமனம் எவ்வளவு நாகரீகமாகச் செயல்பட முடியும் என்று உதாரணமாக விளங்குகிறார். எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலை கொண்டவராக இருக்கிறார்.  பண்டிதர் என்ற நவீனத்துக்கு முந்தையகால விளக்கத்துக்கு முற்றிலும் எதிர்மறையில், இந்தக் காலத்தின் நவீனச் சிந்தனைகள் அனைத்திலும் தேர்ந்து, அவற்றை விதந்தோதுகிறவராக இருக்கிறார். இவையெல்லாம் அவருடையநூல்களை சமீபத்தில் படித்ததன் காரணமாக எழுந்த கருத்துக்கள்.

             சங்க இலக்கியம் பற்றிப் பெருமை பேசும் நூல்கள் மிக ஏராளமாக உள்ளன. அவையாவும் மேட்டுக்குடியினரால், மேட்டுக்குடி மனப்பான்மையுடன் எழுதப்பட்டவை.  சங்க இலக்கியத்தில் உள்ள பாடல்களை எழுதிய மேட்டுக்குடிக் கவிஞர்களின் பார்வையை விட்டு எள்ளளவும் விலகாமல் ஆய்வு நோக்கின்றி எழுதப்பட்டவை.  இதனாலேயே நவீன மனம் கொண்ட ஒருவருக்கும் பழம்பெருமை பாடும் இந்நூல்களைப் படிப்பது வீண் என்றே தோன்றுகிறது.

            ஆனால் பிரபஞ்சனின் இந்த நூல் ஏற்கனவே சொன்னது போல் ஒரு விதிவிலக்கு.  சங்க இலக்கியத்தின் மேட்டுக்குடிப் பார்வையை சந்தேகம் இல்லாமல் சொல்வது பிரபஞ்சனின் சிறப்பு.  எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, என்றெல்லாம் யார் தேர்வு செய்தது, அவர்கள் இவற்றைத் தேர்ந்தெடுத்ததன் பின்புலம் என்ன? என்ற கேள்விகளை முன்வைக்கிறார்.  (பல ஆண்டுகளுகு முன்னால் நான் இந்தக் கேள்வியை ஒரு வரலாற்று பேராசிரியரிடம் கேட்டேன்.  பதில் அவருக்கும் எனக்கும் இன்றுவரை கிடைக்கவில்லை – காரணம் இது குறித்துப் தமிழ்ப் பண்டிதர்கள் சிந்திக்கவில்லையோ என்னவோ?).  அதைவிட தேர்வின் தரவுகள் குறித்துச் சந்தேகம் எழுப்புகிறார்.

இந்தக் கட்டுரைகளில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சமூகப் பார்வை, அவற்றில் விளிம்புநிலை மனிதர்களைப் பற்றிய குறிப்புகள், எதிர்மறை விமரிசனங்கள்,  மேட்டுக்குடி மக்களைக் குறித்த விவரங்கள், குடும்பம் சமூகம் இவை குறித்த மிக நவீனப் பார்வை கொண்ட கட்டுரைகள் அடங்கிய நூல் இது.

சுதந்திர இந்தியாவில் தமிழின் ஆளுமைய நிலை நிறுத்த, தொடக்கத்தில் குருட்டுத்தனமான பெருமிதம் ஒரு தேவையாகக் கூட இருந்திருக்கலாம்.  ஆனால் இன்றும் குருட்டு வழிபாடு தேவையா?

சங்க இலக்கியத்தில் பாணர்கள் நிலை என்ன? காலமாற்றம் ஏற்பட்டதும் அவர்களைப் பற்றிய விவரங்கள் எப்படி மாறுகின்றன, அந்தக் காலத்தில் பரத்தைமைக்கும், குடும்ப நிறுவனத்துக்கும் உள்ள சமூக உறவும் அதன் தேவையும் என்ன? அரசமைப்புக்கும் இவைகளுக்கும் உள்ள மறைமுக நியாயங்கள் என்ன? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பும் கட்டுரைகள், மிக முக்கியமானவை. இப்படிக் கேள்விகள் இதுவரை எழவில்லை.  சமூகம் குறித்த நவீனப் பார்வை இல்லாத தமிழ்ச் சமூகத்தில் இது சாத்தியமாகவில்லை. ஆனால் பிரபஞ்சன் இந்தக் கேள்விகளை எழுப்புகிறார்.  திணை குறித்தும், ஒவ்வொரு திணையிலும் வாழ்வின் அம்சங்களை மட்டுமன்றி அவற்றில், சில கருத்துக்கள் எழுந்த பின்புலம் குறித்துச் சிந்திக்கிறார்.

சிலப்பதிகாரத்தில், கண்ணகி (வயது பன்னிரண்டு) கணவன் மாதவியிடம் சென்றுவிட்டான் என்றறிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் எது தடுத்தது? மாதவி போன்றோரின் நியாயங்கள் என்ன? மாதவி கோவலன் ஒருவனுக்கு விசுவாசமாக இருக்க முடிந்ததா? சமூகம் என்ன செய்தது? அவளுடைய தாயின் நிலை என்ன? அவளது மகள் மணிமேகலை சாதாரணமாக வாழ முடிந்திருக்குமா? அவள் மீது சமூகத்தின் பார்வை என்ன? அவளுக்கும் காதல் ஏற்பட்டதா? அதற்கு அவள் விடை என்ன? உதய குமாரன் என்ற மேட்டுக்குடி மனிதன் அவளை எப்படிப் பார்க்கிறேன்.  அவள் விடுதலைக்காக புத்தமதத்தை நாடுவது என்ன நிலையில் நடக்கிறது?


இப்படிப்பட்ட ஆய்வுக் கேள்விகளை எழுப்பிப் பதில் தேட விழைவதே பிரபஞ்சனின் கட்டுரைகள்.  சரியான காலத்தில் சரியான கேள்விகளை கேட்கிறார். பதில் தேடவேண்டும்.  மிகச் சிறப்பாக எழுதப்பட்ட நூல்.   

மரி என்கிற ஆட்டுக்குட்டி- பிரபஞ்சன் (கதைகள்) -17

பிரபஞ்சன், இலக்கியப் பிரவேசம் செய்து 55 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டிய நிகழ்வை யூடியுபில் பார்த்தேன்.  அந்நிகழ்வில் பல பேச்சாளர்கள் அவர் எழுதிய ‘மரி என்கிற ஆட்டுக்குட்டி’ கதையைக் குறிப்பிட்டனர்.  கதையின் சுருக்கம் எனக்குப் பிடித்திருந்தது.  வீகேன்ஷாப்பிங்.காம் தளத்தில் அத்துடன் அவர் எழுதிய மூன்று மற்றப் புத்தகங்களையும் வாங்கினேன்.  கண்மணி குணசேகரன் எழுதிய ‘நெடுஞ்சாலை’ கேட்டதற்கு, அது இல்லை, அவர் எழுதிய புதிய நாவலாகிய ‘வந்தாரங்குடி’ நாவலை வாங்கித் தருகிறோம் என்றார்கள்.  சரியென்று பெற்றுக் கொண்டேன்.

இனி ‘மரி என்கிற ஆட்டுக்குட்டி’ தொகுப்புப் பற்றி.  எல்லோரும் சொன்னது போலவே அது ஒரு சிறப்பான கதை.  நிலையற்ற ஒரு குடும்பத்தில் தனியாக வதைபடும் பதின்வயதுப் பெண், பள்ளியில் படிப்பில் கவனமின்றி இருக்கிறாள்.  அவள் உடுத்தும் பேண்ட்டைக் காரணம் காட்டி, அவள் பள்ளியிலிருந்து நீக்கப் படுகிறாள்.  அவள் தனியாகவே வசிப்பதால், எதுவும் நடப்பதில்லை.  தலைமை ஆசிரியரின் நடவடிக்கை சரியில்லை என்று கருதும் ஆசிரியர் ஒருவர், தன் மனைவியக் கூட்டிக் கொண்டு மரியின் இல்லத்துக்குச் சென்று, அவளது நிலைகுறித்து அறிகிறார். 

அவளுடைய அப்பா அவளுடைய அம்மாவை விட்டுச் சென்றுவிட்டார்.  அம்மா இன்னொரு திருமணம் புரிந்து கொண்டுவிட்டார்.  புதிய வளர்ப்புத் தந்தையுடன் வாழ மரிக்குப் பிடிக்கவில்லை.  எனவே மரி தன்வீட்டில் தனியாக வாழ்கிறாள். மரி அன்புக்காக ஏங்குகிறவள். அது கிடைக்காததால், அவளுடைய மனம்படும் பாட்டில் எதிலும் நாட்டம் இல்லாமல் இருக்கிறாள்.  இதைப் புரிந்து கொண்ட ஆசிரியர் அவளை தங்களுடன் கடற்கரைக்கு உலவ வருமாறு அழைக்கிறார்.  அவளும் மகிழ்ச்சியாக பேண்ட் போட்டுக் கொண்டு வருகிறாள்.  இரவு உணவுக்கும் அவருடைய வீட்டுக்கே செல்கிறாள்.   பத்து நாட்கள் அவர்களிடையே ஒரு பாசம் ஏற்படுகிறது.  மரி ஆசிரியரிடம் கேட்கிறாள் “ நீங்கள் ஏன் நான் பள்ளிக்கு வராமல் இருப்பது குறித்துக் கேட்கவில்லை?” அவர் சொல்கிறார் ‘நீயாகக் கேட்க வேண்டும் என்றுதான் நான் கேட்கவில்லை’.  அவள் மீண்டும் பள்ளிக்குச் செல்கிறாள்>

மிக எளிமையான கதை, ஆனாலும் மிகச்சிறந்த கதைகளில் ஒன்று. 

அபஸ்வரம் கதை துரோகம் செய்த நண்பனை மன்னிக்கும் நண்பரைப் பற்றியது. நெகிழ்ச்சியை உண்டாக்குகிறது. ‘அப்பாவுக்குத் தெரியும் கதையில் வரும் சுமதி, மாமா வீட்டில் அவரது ஆளுகைக்குள் வாழ்ந்தாலும், அவர் தன் மகனுக்கு அவளை மணம்முடிக்க விரும்பினாலும், அவளைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் அவரது மகனை அவள் மிக இயல்பாக, நாகரீகமாக  நிராகரிப்பதைச் சொல்கிறது. அவளது சுயத்தைத் தக்கவைத்துக் கொள்ள மாமாவும் அனுமதிக்கிறாள்>  ‘செடிகள் இன்னும் ஆழமாக வேர் பிடிக்கலை போல இருக்கே’ என்ற கடைசி வார்த்தைகள் மூவருடைய உணர்வுகளையும் ஒரே இடத்தில் பதிவு செய்கிறது. தோழமை கதையில், புதியதாக வேலைக்குச் சேர்ந்த இளைஞனொருவன் தன்னை விட மூத்த வேலைக்க்காரரின் பெருமையக் காக்க, தான் செய்த வேலையை அவர் செய்ததாக முதலாளியிடம் சொல்கிறான்.  பெரியவர் நெகிழ்ந்து போகிறார்.  பெருந்தன்மை இளைஞர்களிடமும் உண்டு, இருக்க வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் கதை.

இப்படிப் பல யதார்தத் தளத்தில் எழுதப்பட்ட கதைகளில் முடிவில் மனிதனின் உன்னதமும் மிக யதார்த்தமாகவே வெளிப்படுகிறது.  அறம் என்பது அன்றாடம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு சாதாரணக் குணமாக வெளிப்படுகிறது.  வானத்திலிருந்தோ, குருவிடமிருந்தோ அது குதிப்பதில்லை.  சூழலைக் குறித்துச் சொந்தமாக ஒருவன் யோசித்தாலே – அதுவும் மற்றவர்களின் மனத்தைப் புரிந்து கொள்ள முயற்சித்தாலே - பெரும்பான்மையான நேரங்களில் சரியான வழியில் சென்று விடுவோம் என்பதை எடுத்துக்காட்டும் கதைகள்.  இதற்கு உபதேசியார்கள் தேவையில்லை. 

            பிரபஞ்சனின் கதைகளில் அறம் ஓதப்படுவதில்லை.  நிகழ்கிறது. அதுவும் தானாகவே நிகழ்கிறது.  மோசமான குணமுள்ள பாத்திரங்களைக் கூட அனுதாபத்தோடும், புரிதலோடும் நம்மால் அணுக முடிகிறது.  அறம் குறித்த தீர்மான்ங்கள் ஏதும் இல்லை.  இலக்கியத்திலிருந்து வாழ்வின் விழுமியங்களை நாம் கற்றுக் கொள்ளலாம் ஆரவாரம் இல்லாமலேயே.  மனிதர்களை அவர்களது எல்லைகளுக்குள் ஆனாலும் உன்னதங்களை நோக்கி நகர்த்தும் கதைகள். 

Thursday, June 08, 2017

அடையாள அட்டை

             என்னிடம் உள்ளன
ஏராளமாய் அடையாள அட்டைகள்
சில நானே மாட்டிக் கொண்டவை
சில மற்றவர்கள் மாட்டிவிட்டவை

அலுவலகத்திற்கெனவொன்று
வங்கின்கென இன்னொன்று
கல்விக்கூடத்திற்கென மற்றொன்று
கடன் வாங்க வொன்று
வீட்டுக்கு ஒன்று 
ஜாதிக்கெனவொன்று
மொழிக்கு,
நட்புக்கு
கிளப்புக்கு
எத்தனை அட்டைகள்
எத்தனை பெயர்கள் இட்டாலும்
எனது அடையாளத்தைக்
கட்டிவிட முடியாது

பலூன்களை விட்டுக் காற்றும்
பாட்டில்களை விட்டு நீரும்
மலைகளை விட்டுப் பனியும்
வெளியேறும் வேகத்தில்
நானும் 
அட்டைகள் என்ன
அடையாளங்களை விட்டே
             வெளியேறிக் கொண்டே இருப்பேன்
             ஒவ்வொரு கணத்திலும்

Tuesday, June 06, 2017

Age of Anger By Pankaj Mishra

                I have read one book by Pankaj Mishra (I don’t recall the title) about the birth of national/ international leaders and thinkers in India, China, Afghanistan etc.  I liked the book.  The tile of this book resembles the tiles of Eric Hobsbawm who wrote ‘Age of Extremes, Age of Empire, Age of Revolution etc.  I have read only Age of Extreme. These kinds of books survey the global history and society.  They interest me because they are about humanity and not about narrow identities of human beings like area, language or nation. 

            Age of Anger, starts with the instances when murder, terror and aggression were incorporated in politics by national  political activists in their own discourse, particularly those who are not Muslim in religion or origin.  This book contests understanding often repeated in India that ‘all Muslims are not terrorists but all terrorists are Muslims’.  It also falsifies the theory of ‘Clash of Civilizations’ not by arguments but by facts and history.  Several historical incidents have been cited to establish the case that the cult of belief in violence had been prevalent in the Western thought and action long before the arrival of Muslim terrorists and ISIS.

            He states that the concepts of ‘Liberty, equality and fraternity’ entered the political arena with the french revolution and has since become part of the understanding of the masses.  But masses also imbibed the horrible reality that these have remained only slogans in the political arena for the last 200 or more years and they may never attain the benefits of such a concepts in real life.   

            Pankaj Mishra, brings out the difference in the approaches of Voltaire, one of the representatives of people who have earned reputation and wealth etc through the working of the concepts of Liberty, equality and fraternity’ and who went on to defend these principles of modernity and Rousseau who contested the benefits of such modern concepts in real life situations. He tried to establish a balance between older useful values and modern values. 

            While modernity has been sold for its dreams of having modern facilities in life to millions of people, it has not given even a hint about the unattainable nature of the dreams for vast majority of people because of inherent inequality and modernists who believe in the so called progress never venture to think the environmental and other consequences of such progress and development even if such progress is possible for millions of people.  The development as represented by the western societies cannot be sustained forever.  But having sold these dreams, they have to make others believe in these dreams. 
           
            Those who have imbibed these dreams of progress now have come to realize that progress is very slow and the benefits of progress do not reach not even majority if not everyone.  These frustrations lead to ‘ressentiment’ (angst) which in turn fuels the anger,  the kind of mindless violence, nobody wants, everybody hates but everybody has to face in their ordinary life.

            There is no relationship between a particular religion and violence.  Violence is in the nature of politics which were formulated when feudal societies started to change.    Reality of lack of progress hits ordinary citizens Unattainable aspirations of millions and millions of citizens spew a few thousand extremist elements who thrive and ultimately pay the price.  But societies which are inherently unequal and which do not have the wisdom to distribute wealth among its citizens on the basis of some other ideology or programme pay a heavier price in the form of unparalleled violence in the long run, irrespective of the outcome of that violence..


            One of the wonderful books I have read.  Particularly in the context of false theories of ‘Clash of Civilization’ types.   It will open new horizons. 

Thursday, June 01, 2017

பிரபஞ்சன் கட்டுரைகள் (தொகுப்பு- முருகேசபாண்டியன்)

        பிரபஞ்சனின் மிகச் சிறந்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது.   தமிழில் புனைவு நூல்களுடன் ஒப்பிடும் போது கட்டுரைத் தொகுப்புக்களை மிகக் குறைவாகவே படிக்கிறேன்.   தமிழில் மிகத் தரமான கட்டுரைகள் மிகக் குறைவாக வெளிவருகின்றன என்ற கருத்துக் கொண்டிருந்தேன்.  தற்போது சில கட்டுரை நூல்களை வாங்கிப் படித்து வருகிறேன். அவற்றில் பிரபஞ்சனின் கட்டுரை நூல்கள் அடங்கும்.  காத்திரமான கட்டுரைகளை அவர் எழுதியிருக்கிறார்.

            கடினமான வாழ்க்கைத் தருணங்களையும் எளிதாக எடுத்துக் கொண்டு, நகைச்சுவை ததும்பும் மொழியில் விவரித்துச் செல்கிறார்.  வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும் எல்லாம் கடந்து போகும் என்ற தொனி அவைகளின் அடிநாதமாக இருக்கிறது. இப்படி ஒரு அறிவுஜீவி நம்மிடையே வாழும்போது, பொய்வேஷ அறிவாளிகளின்  புளுகுகளுக்கு தமிழ்ச்சமூகத்தில் கிடைக்கும் இடம் என்னைக் கவலைக்கு உள்ளாக்குகிறது.

  தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் என்பதான் விஷயகனம் மிகுந்தவற்றையே சேர்த்திருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் வாங்கினேன். நம்பிக்கை வீண்போகவில்லை.

            சுயவாழ்க்கை பற்றிய எள்ளலும், மனச் சங்கடத்தை உண்டாக்கும் சம்பவங்களையும் உள்ளடக்கிய நானும் நானும் உறங்கும் அறை, தொன்மங்களும் வாழ்க்கையின் தேவைகளும் சந்திப்பதை விவரிக்கும் ‘முனீஸ்வரனைப்’ பற்றிய கட்டுரையும் நினைவுகூரலாக இருந்தாலும், சமூகம் பற்றிய புரிதலைத் தருகின்றன. பேய்களைப் பற்றிய கட்டுரை வித்தியாசமானது.  இலக்கியத்தில் வரும் பேய்களும் வந்து போகின்றன.

            சிறுமிட்டாய்களை விற்றுப் பிழைக்கும் மிட்டாய்த் தாத்தா பற்றிய கட்டுரையும் நன்றாக இருக்கிறது.  இப்படிச் சிற்றுண்டிப் பொருட்களைத் தாமே தயாரித்து காலையிலிருந்து மாலைவரை விற்கிற சிறு வியாபாரிகள், கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருக்கிறார்கள்.  பெருநிறுவனங்களின் கொறிப்புப் பண்டங்கள், சாக்லெட்டுகள் பிரபலமாகி பணம் வெளிநாடுகளுக்குப் போய்க்கொண்டிருக்கிறது.  உள்ளூரில் பிழைப்பு மோசமாகி, தயாரித்து விற்றவர்கள் கூலி வேலைக்குப் போய்க்கொண்டிருக்கலாம்.  மகன் செய்த துரோகமும், அவர் மகனுக்காக விட்டுச் சென்ற சேமிப்பும் அவர்களுக்கு இருக்கும் விழுமியங்களைத் தெரிவிக்கின்றது.

            எல்லாவற்றிலும் எனக்குப் பிடித்தமான கட்டுரை ‘ வன்முறையைப் பயிற்றுவிக்கும் வகுப்பறைகள்” பள்ளிக் கூடத்தைப் பற்றிச் சொல்லப்படும் ஒவ்வொரு நிகழ்வும் என் பள்ளிநாட்களை நினைவுபடுத்தியது.  ஒழுக்கத்தின் பெயரால், அறிவை சேகரிக்கும் பெயரால் வகுப்பறை சிறைக்கூடமாக மாறிப்போனதை மிக விரிவாக எடுத்துப் பேசுகிறது.  கல்வியின் பெயரால் நிகழும் வன்முறைகளைப் பற்றிப் பேச யாருக்கும் தெம்பில்லாமல் போனது ஏன்?  இடம்கிடைக்காமல் போய்விடும் என்ற பயத்தில் இருந்து தொடங்கிய பயத்தில் முதுகெலும்பு நிமிர்வதே இல்லை.  பள்ளிப் படிப்பு முடிந்தபின் பள்ளிக் கல்வி பற்றிய சிந்தனை தேவையற்றதாகிவிடுகிறது. அதனால் அதுபற்றி யாரும் பேசுவதில்லை.  சமீப நாட்களில் படித்த, கல்வி குறித்த நல்ல கட்டுரை இது.  எத்தனை காலை இதன் விமரிசனம் சமூகத்திற்குப் பொருந்தி வருகிறதோ அத்தனை கேடுகாலம் நமக்கு. 


            பழைய திணைக் கோட்பாட்டை விளக்கும் கட்டுரைகள், சென்னைத் தெருக்கள் மாறிவருவதை, அவற்றின் பண்பாடுகள் மாறிவருவதை கவனிக்கும் கட்டுரைகள், இன்னும் பல நல்ல கட்டுரைகள் கொண்ட தொகுப்பு.  படிக்க வேண்டிய நூல்.