Monday, June 12, 2017

மரி என்கிற ஆட்டுக்குட்டி- பிரபஞ்சன் (கதைகள்) -17

பிரபஞ்சன், இலக்கியப் பிரவேசம் செய்து 55 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டிய நிகழ்வை யூடியுபில் பார்த்தேன்.  அந்நிகழ்வில் பல பேச்சாளர்கள் அவர் எழுதிய ‘மரி என்கிற ஆட்டுக்குட்டி’ கதையைக் குறிப்பிட்டனர்.  கதையின் சுருக்கம் எனக்குப் பிடித்திருந்தது.  வீகேன்ஷாப்பிங்.காம் தளத்தில் அத்துடன் அவர் எழுதிய மூன்று மற்றப் புத்தகங்களையும் வாங்கினேன்.  கண்மணி குணசேகரன் எழுதிய ‘நெடுஞ்சாலை’ கேட்டதற்கு, அது இல்லை, அவர் எழுதிய புதிய நாவலாகிய ‘வந்தாரங்குடி’ நாவலை வாங்கித் தருகிறோம் என்றார்கள்.  சரியென்று பெற்றுக் கொண்டேன்.

இனி ‘மரி என்கிற ஆட்டுக்குட்டி’ தொகுப்புப் பற்றி.  எல்லோரும் சொன்னது போலவே அது ஒரு சிறப்பான கதை.  நிலையற்ற ஒரு குடும்பத்தில் தனியாக வதைபடும் பதின்வயதுப் பெண், பள்ளியில் படிப்பில் கவனமின்றி இருக்கிறாள்.  அவள் உடுத்தும் பேண்ட்டைக் காரணம் காட்டி, அவள் பள்ளியிலிருந்து நீக்கப் படுகிறாள்.  அவள் தனியாகவே வசிப்பதால், எதுவும் நடப்பதில்லை.  தலைமை ஆசிரியரின் நடவடிக்கை சரியில்லை என்று கருதும் ஆசிரியர் ஒருவர், தன் மனைவியக் கூட்டிக் கொண்டு மரியின் இல்லத்துக்குச் சென்று, அவளது நிலைகுறித்து அறிகிறார். 

அவளுடைய அப்பா அவளுடைய அம்மாவை விட்டுச் சென்றுவிட்டார்.  அம்மா இன்னொரு திருமணம் புரிந்து கொண்டுவிட்டார்.  புதிய வளர்ப்புத் தந்தையுடன் வாழ மரிக்குப் பிடிக்கவில்லை.  எனவே மரி தன்வீட்டில் தனியாக வாழ்கிறாள். மரி அன்புக்காக ஏங்குகிறவள். அது கிடைக்காததால், அவளுடைய மனம்படும் பாட்டில் எதிலும் நாட்டம் இல்லாமல் இருக்கிறாள்.  இதைப் புரிந்து கொண்ட ஆசிரியர் அவளை தங்களுடன் கடற்கரைக்கு உலவ வருமாறு அழைக்கிறார்.  அவளும் மகிழ்ச்சியாக பேண்ட் போட்டுக் கொண்டு வருகிறாள்.  இரவு உணவுக்கும் அவருடைய வீட்டுக்கே செல்கிறாள்.   பத்து நாட்கள் அவர்களிடையே ஒரு பாசம் ஏற்படுகிறது.  மரி ஆசிரியரிடம் கேட்கிறாள் “ நீங்கள் ஏன் நான் பள்ளிக்கு வராமல் இருப்பது குறித்துக் கேட்கவில்லை?” அவர் சொல்கிறார் ‘நீயாகக் கேட்க வேண்டும் என்றுதான் நான் கேட்கவில்லை’.  அவள் மீண்டும் பள்ளிக்குச் செல்கிறாள்>

மிக எளிமையான கதை, ஆனாலும் மிகச்சிறந்த கதைகளில் ஒன்று. 

அபஸ்வரம் கதை துரோகம் செய்த நண்பனை மன்னிக்கும் நண்பரைப் பற்றியது. நெகிழ்ச்சியை உண்டாக்குகிறது. ‘அப்பாவுக்குத் தெரியும் கதையில் வரும் சுமதி, மாமா வீட்டில் அவரது ஆளுகைக்குள் வாழ்ந்தாலும், அவர் தன் மகனுக்கு அவளை மணம்முடிக்க விரும்பினாலும், அவளைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் அவரது மகனை அவள் மிக இயல்பாக, நாகரீகமாக  நிராகரிப்பதைச் சொல்கிறது. அவளது சுயத்தைத் தக்கவைத்துக் கொள்ள மாமாவும் அனுமதிக்கிறாள்>  ‘செடிகள் இன்னும் ஆழமாக வேர் பிடிக்கலை போல இருக்கே’ என்ற கடைசி வார்த்தைகள் மூவருடைய உணர்வுகளையும் ஒரே இடத்தில் பதிவு செய்கிறது. தோழமை கதையில், புதியதாக வேலைக்குச் சேர்ந்த இளைஞனொருவன் தன்னை விட மூத்த வேலைக்க்காரரின் பெருமையக் காக்க, தான் செய்த வேலையை அவர் செய்ததாக முதலாளியிடம் சொல்கிறான்.  பெரியவர் நெகிழ்ந்து போகிறார்.  பெருந்தன்மை இளைஞர்களிடமும் உண்டு, இருக்க வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் கதை.

இப்படிப் பல யதார்தத் தளத்தில் எழுதப்பட்ட கதைகளில் முடிவில் மனிதனின் உன்னதமும் மிக யதார்த்தமாகவே வெளிப்படுகிறது.  அறம் என்பது அன்றாடம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு சாதாரணக் குணமாக வெளிப்படுகிறது.  வானத்திலிருந்தோ, குருவிடமிருந்தோ அது குதிப்பதில்லை.  சூழலைக் குறித்துச் சொந்தமாக ஒருவன் யோசித்தாலே – அதுவும் மற்றவர்களின் மனத்தைப் புரிந்து கொள்ள முயற்சித்தாலே - பெரும்பான்மையான நேரங்களில் சரியான வழியில் சென்று விடுவோம் என்பதை எடுத்துக்காட்டும் கதைகள்.  இதற்கு உபதேசியார்கள் தேவையில்லை. 

            பிரபஞ்சனின் கதைகளில் அறம் ஓதப்படுவதில்லை.  நிகழ்கிறது. அதுவும் தானாகவே நிகழ்கிறது.  மோசமான குணமுள்ள பாத்திரங்களைக் கூட அனுதாபத்தோடும், புரிதலோடும் நம்மால் அணுக முடிகிறது.  அறம் குறித்த தீர்மான்ங்கள் ஏதும் இல்லை.  இலக்கியத்திலிருந்து வாழ்வின் விழுமியங்களை நாம் கற்றுக் கொள்ளலாம் ஆரவாரம் இல்லாமலேயே.  மனிதர்களை அவர்களது எல்லைகளுக்குள் ஆனாலும் உன்னதங்களை நோக்கி நகர்த்தும் கதைகள். 

No comments:

Post a Comment