Thursday, August 10, 2017

தாய்மொழி

            தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பது நெடுங்காலமாக சொல்லப்பட்டு வரும் அறிவுரை.   பலமொழிகள் புழங்கும் நாட்டில், பல மொழிகளில் கல்வி கற்கப்படும் நாட்டில் இந்த அறிவுரை எவ்வளவு பொருத்தமானது என்பதைப் பார்க்க வேண்டும்தாய்மொழி என்பது என்ன என்பதையும் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறதுநம் நாட்டில், சுமார் 1600 மொழிகள் வழங்கிவருகின்றனஅவற்றில் எழுத்துருக்கள் இல்லாத மொழிகள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றனஎழுத்துருக்கள் இருந்தபோதிலும், இந்திய அரசியல் சாசனத்தில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் இருபது இருக்கலாம்இவையெல்லாம் தவிர ஆங்கிலம் இருக்கிறதுஇந்தப் பின்னணியில் தாய்மொழி என்பதை எப்படி வரையறுப்பது? அப்படி தாய்மொழி என்று வரையறுத்தாலும் அந்தந்த மொழிகளில் கல்வி புகட்ட வாய்ப்பு இருக்கிறதா?

            எனவே தாய்மொழியில் கல்வி என்பது இந்திய அரசியல் சூழலில், இந்தி, அல்லது மாநில மொழிகளில் கல்விகற்பிப்பதும் கற்பதும் என்றாகிறதுமற்ற மொழிகள், மொழிகளின் துணை மொழிகள் இவற்றுக்கான இடம் என்ன? அந்தந்த மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் அரசியல் உரிமைகளை விடுங்கள், குறைந்த பட்சம் அவற்றின் பெயர்களையாவத் அரசின் ஆவணங்களில் மக்களின் மொழியாகப் பதிவு செய்ய வேண்டாமா? தொடக்கநிலைக் கல்வியை அந்த மொழிகளில் தரவேண்டாமா?

            மாநில மொழியாக இருக்கும் தமிழில் கடைசிவரை கல்வி கற்பவர்கள் யாரும் இல்லைஆங்கிலம் படிக்காமல் பள்ளி இறுதிகூட முடிக்க முடியாதுஇதே நிலைமை பெரும்பாலான மாநிலங்களில் இருக்கிறது. எனவே தாய்மொழிக் கல்வி என்று  பேசும் போது அவற்றில் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்படவில்லை என்பதையும் தெரிந்தேதான் பேசுகிறார்கள். வெட்டிப் பேச்சாகவே நின்று விடுகிறது. இதை இன்னும் தீவிரமாக சிந்தித்தால், ஒரு இனத்தின் அடையாளமாக நிலம் மொழி இரண்டையும் வைத்துக் கொண்டால், மொழியை கற்பிக்காததன் மூலம்  ஒரு இனத்தின் அடையாளத்தை, பண்பாட்டை அழித்துவிட முடியும். இது பெரும்பாலும் நிலத்தைப் பிடித்து அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே நடக்கிறது. ஒரு நாடு ஒரே மொழி, ஒரே கொடி ஒரே மதம், ஒரே கடவுள் என்ற எல்லாக் கருத்துருவங்களும் எதேச்சாதிகாரத்தின் உச்சகட்டத்தை அடைவதற்கான படிக்கட்டுகள்.  ஒவ்வொரு மனிதனும் வேறுவேறானவன், ஒவ்வொரு இனமும், மொழியும் வேறுவேறு பண்புகள் கொண்டவை ஆனால் நாம் ஒரு நாட்டில், ஒரு அரசின் கீழ் வாழ முடியும் என்பதே இந்தியாவில் ஒரு வளர்ச்சிக்கான பாதையாக இருக்க முடியும்.

            சில நூறு மக்கள் பேசும் மொழிகளையும் கற்பிக்க வேண்டும். சிந்தனைச் செல்வம் அப்போதுதான் வளரும். வளர்ச்சிக்கான விரைவுப்பாதை இதுவே. 

Thursday, August 03, 2017

நீ
ஆகாயத்தில் பறக்கிறாய்
வானவில்லில் அம்பு கோர்க்க எண்ணுகிறாய்
நடைமுறைக்கு ஒவ்வாததைப் பேசுகிறாய்

நான்
துயரங்களை மறப்பதற்காக அல்ல
உலகத்தில் துயரங்கள் இல்லாதொழியக்
கனவு காண்கிறேன்

நீ
பெண்ணுரிமை பேசுகிறாய்
உனக்கு வந்தால் தெரியும்

நானும்
ஆண் வர்க்கத்தின் மோசமான
பிரதிநிதிதான்
ஆனாலும் கனவுகாணும் நேரத்தில்
எனக்கும் அவர்களுக்கும் சேர்த்தே
கனவு காண்கிறேன்

அதிகாரத்தின் மடியில் அமர்ந்து கொண்டே
அதை எதிர்ப்பது குறித்துப் பேசுகிறாய்

முதல் அடிமை என்பதால் மட்டும்
எனக்கு என்ன
விடுதலை வேட்கை கிடையாதா?

உணர்ச்சியைக் கிளத்தும்
தேசம், மொழி, குடும்பம்
இவற்றின் அமைப்பைக்
கேள்வி கேட்கிறாய்?
இவையன்றி எதுவும் இல்லையே?

கடலில் கிடக்கும் மீன்கள்
கடலுக்கு வெளியில் எதுவும் இல்லை
என்று நினைக்கலாம்
அதனால் கடலுக்கு வெளியில்
எதுவும் இல்லாமல் போய்விடுமா?

அறம் அற்றுப் போன உலகில்
கடவுள்
அறத்தின் குறியீடாக இல்லையா?

அறம் அற்றுப் போகவும் அவரது
பெயர் ஒரு காரணமல்லவா?
கடவுளின் பெயரால்,
மதத்தின் பெயரால்
அடையாளங்களின் பெயரால்
நடந்த கொலைகள் எத்தனை எத்தனை?

உன்னால் எதுவும் செய்ய முடியாது
நாங்கள் தான் பெரும்பான்மை

செய்ய முடிந்தால் எழுதிக் கொண்டிருக்கமாட்டேன்
மீண்டும் மீண்டும் எழுதப்பட்டவைகள்தான்
வரலாற்றை உந்துகின்றன
சிறுபான்மையினர் அல்லது
ஒரே ஒருவன் கூட
உலகைப் புரட்டிவிட முடியும்

கூட்டத்தோடு போக வேண்டியது தானே

கூட்டத்தோடுதான் போகிறேன்

கூவிக்கொண்டே போகிறேன்