Friday, December 18, 2009

அத்தியாயம் 7

சடையப்ப பிள்ளை எழுதிவைத்திருந்தது நாவலா கதையா சிறுகதையா என்றெல்லாம் ஒண்ணும் புரியவில்லை. அப்படியெல்லாம் ஒரு வரையறைக்குள் அவை வருகிற மாதிரித் தெரியவில்லை. நானும் ஆராய்ச்சி செய்யும் ஆளும் இல்லை. தினம் இருக்கிற வேலையைச் செய்வதற்கே நேரமில்லை. கஞ்சப் பிசினாறிட்ட ஒரு பைசாப் பேறாது. என்னால முடிந்தது இதைப் படிப்பதுதான். அதே எரிச்சலா இருக்கு. எல்லாப் பயலும் எழுதி என்னத்தக் கண்டான்? இதுல நடை, தீம், பிளாட் எல்லா ஒண்ணும் எனக்கு விளங்கல. நானும் எங்கம்மா சொன்னத கேட்ருக்கணும். எதாவது படிச்சு முன்னேறப் பாத்திருக்கணும். பெரிய எழுத்தாளனாகுணும்னு சென்னைக்கு வந்திட்டேன். பத்தி திருத்திரதில இருந்து, லைபர்ரி ஆர்டர் வாங்கிற வரைக்கும் செட்டியார் பெண்ட நிமித்திருவாரு. ஏதோ உழைக்கிற அளவுக்கு சம்பளம் இல்லைன்னாலும், தனியா இருந்து சமாளிக்க முடியிது. கவனத்தைச் சிதைக்கக்கூடாது. அவரு எழுந்திருக்கிறதுக்கு முன்ன படிச்சிறலாம். மீண்டும் படிக்கத் தொடங்கினேன்.
அடுத்தநாள் காலை பிள்ளை மீண்டும் கேட்டார். எழுத்தாளர் ‘அ’ விடம் போவோமா?” போய் என்ன செய்வது? அவர் வெகு நிதானமாகச் சொன்னார் “இந்தக் கதைகள்”
எழுத்தாளர் ‘அ’ வீட்டுக்கு யாரும் போக முடியாது. போனால் பொண்டாட்டி விளக்கமாத்தை கொண்டு அடிப்பாள் என்று அவன் கேள்விப்பட்டிருந்தான். இரண்டு பேரும் போன போது வீட்டில் எழுத்தாளர் ‘அ’ மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். புத்தகங்கள் ஒன்றிறண்டு இறைந்து கிடந்தன. வீசி எறிந்திருக்க வேண்டும். தமிழ் எழுத்தாளனின் தலைவிதி ‘மன்னார் அண்ட் கம்பெனி’ தங்கவேலு நிலையிலேயே தங்கிவிட்டது. தமிழில் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் என்று பறையடிக்கப் படுபவர்களின் நூல்கள் ஐநூறு விற்றால் ‘சுபர் ஹிட்’. சோறு தின்ன என்ன செய்வாள் பத்தினி. அதுவும் இந்தக் காலத்தில் வீடு ஏசி பிரிட்ஜ், கட்டில் கண்ணாடி என்று எழுத்தாளனுக்கும் வேண்டியிருக்கிறது. ரொம்ப நேர்த்தியா இல்லைன்னா ச.பிள்ளை சொன்னார் ‘நம்ம பாடு தேவலை. இதுமாதிரியாகல”
அ’ பனியன் போடாமலேயே சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு எங்களுடன் கிளம்பினார். “டீக்குடுச்சிக்கிட்டே பேசுவோம்” அவர் பின்னால் இருவரும் போனார்கள். டீக்கடைக்கார்ர் வரவேற்றார். முகத்திலிருந்த சிரிப்பு “வாங்கடா, அ கிட்ட மாட்டிக்கிட்டீங்களா என்று கேட்பது போலிருந்தது. கடை ரொம்ப மோசமில்லை. நடுத்தர வர்க்கத்துக்கேற்றாற் போலிருந்தது.
“சார் நான் செட்டியார் பதிப்பகத்தில இருக்கிறேன்”
ஆமா தெரியுமே சொல்லுங்க”
இவங்க, எங்க ஊர்க்காரர். சிறுகதைகள், எழுதி வச்சிருக்கிறாரு. வெளியிடணும்னு நினைக்கிறாரு’
“தாராளமா வெளியிடுங்க” ‘அ’ விடம் எப்படிச் சொல்வதென்று புரியவில்லை.
“இல்லை உங்களுக்குத் தெரிஞ்ச யாராவது இருந்தா” பாம்பைத் தொட்டதுபோல் அலரினார் ‘அ’. பிறகு கொஞ்சநேரம் அமைதியாக இருந்தார். வந்த ஆள் எப்படி என்று அளப்பது போல் பிள்ளையைப் பார்த்தார். பிள்ளையின் வெள்ளை வேட்டி, பட்டை எல்லாம் எந்த மார்டன் எழுத்தாளனுக்குப் பிடிக்கும? குறைந்த பட்சம் சட்டை பட்டனையாவது திறந்து, நெஞ்சைக்காட்டிக் கொண்டிருந்தால், ரசிகர்களின் நெஞ்சைத் திறந்து பார்க்க முடியும். மூணு டீக்குக் கொடுத்த காசு வீணாய்ப் போச்சே என்பது போல் முகத்தைச் சுழித்தார். ஊர் எந்த ஊர்? அது இது என்று கேட்டு, குறிப்பாக கதையைப் பற்றியும், பிள்ளையின் படிப்பு வாசனை பற்றியும் கேட்பதை தவிர்த்து மிச்சமிருந்த எல்லாக் கேள்விகளையும் கேட்டார். அரைமணி நேரம் பேசியும், ஒரு பாச்சாவும் பலிக்கவில்லை அவரிடம். கடைசியில், படிச்சுக் கருத்தாவது சொல்லுங்க என்று காகிதக் கட்டுக்களை எடுத்தார் பிள்ளை. ‘படிச்சு பாத்துட்டு கண்டிப்பாச் சொல்றேன் என்று உறுதிமொழி கொடுத்துக் கையை நீட்டினார். நான் தான் தடுத்தேன். “சார் அவர்ட்ட வேற பிரதிகள் கிடையாது. போட்டோக் காபி எடுத்திட்டு தர்றேன்..” என்று உண்மையும் பொய்யும் கலந்து சொல்ல வேண்டியதாயிற்று. வெளியே வந்ததும் பிள்ளை தவறாக நினைத்த்து விடக்கூடாதென்று சொன்னேன் “அவரு வாங்கி வச்சுக்கிட்டுப் படிக்கவும் மாட்டார் திரும்பக் கொடுக்கவும் மாட்டார். அவரு பொண்டாட்டி, வென்னி வைக்கத்தான் உதவும்” நல்ல வேளை நீங்க கொடுக்கல.” இப்படித்தான் எல்லா எழுத்தாளனும் இங்க மானங்கெட்டு வாழ்க்கையைத் தொடங்குதான் என்று இவரிடம் சொல்ல வேண்டுமென்று ஆசைப் பட்டேன். ஆனால் முடியவில்லை. ரொம்ப வேண்டியவர். மனசைப் புண்படுத்தி விடக்கூடாது.
அடுத்தநாள் குண்டலகேசிப் பதிப்பகத்துக்குப் போனோம். கணக்குப் பிள்ளைபோல தெரிந்தவர், சார், வெளியூர் போயிருக்காரே, வர இரண்டு நாளாகும்” என்றார். “ஒண்ணும் இல்லை சிறுகதைத் தொகுப்பு ஒண்ணு வெளியிடணும்”
“ஓ அப்படியா? கொண்டு வந்திருக்கீங்களா?”
பிள்ளை முந்திக் கொண்டு “ஆமா” என்றார். “கொடுத்திட்டுப் போங்க பாக்கச் சொல்றேன்” மீண்டும் தடுத்தாட்கொண்டேன் என்று தான் சொல்ல வேண்டும். “இல்லை சார் வந்ததும் வர்றோம். அங்கே, புத்தகம் போடுவார்களா என்று எனக்கே நம்பிக்கையில்லை. நவீன இலக்கியத்துக்கென்றே ஆரம்பிக்கப் பட்ட பதிப்பகம். தொடை முலை, க(கா)ம்பு என்று தொடங்கினால் அது நவீன இலக்கியம் என்று வரவேற்பார்கள். செக்ஸைக் கடந்தால்தான் அதிலிருந்து விடுதலை. பிள்ளை பழம் பஞ்சாங்கம். ஆனாலும் வீட்டிற்குப் போகும் வழியில் இருந்ததால், பிள்ளையின் ஆசையை ஏன் கெடுப்பானேன் என்று ஒரு போக்குக் காட்டினேன். நானும் ஒரு பதிப்பகத்தில் வேலை செய்வதால் இந்தப் புத்தி வந்திருக்க வேண்டும். நம்ம ஊர்க்கார்ருக்கு ஏதோ உதவி செய்தோம் என்று இருக்கும் அல்லவா?
தனிப் பதிப்பகம் ஒன்று இருக்கிறது. அதில் எழுத்தாளரே காசு கொடுத்தால் பதிப்பித்துக் கொடுப்பார்கள். மேலதிகமாக ஜம்பம் வேறு. ஏதோ உலகத் தரத்தில் புத்தகங்களை வெளியிடுவதாக பாவனை. அங்கே ஐம்பதாயிரம் வரையாகும். பிள்ளையிடம் ஐம்பது தேறுமா என்பதே சந்தேகம். பிள்ளையிடம் சொன்னேன் “ அடப் பாவிகளா எழுதிட்டுக் காசுவேற கொடுக்கணுமா?” அவருடைய அதிர்ச்சி எனக்குப் புரிந்தது. தமிழ்நாட்டு வாசகர்களைப் பற்றி அவருக்குத் தெரியாது. பத்தாயிரம் ரூபாய் கொடுத்துப் படிக்கப் புத்த்கமும் கொடுத்து படிக்கச் சொன்னால் கூட படிக்கவும் வேண்டாம், ரூபாயும் வேண்டாம் என்று சொல்லும் ஞானிகள்.
“ஆமாங்க. தமிழ்நாட்ல் புத்தகம் படிக்கிறவங்க எத்தனை பேரு இருக்கான்?. வாசகர்களைவிட எழுத்தாளர்கள் அதிகம் இருக்காங்க. எழுத்தாளருக்கே காசு கொடுக்கலைன்ன அவனும் என்னத்தப் புத்தகம் வாங்க முடியும். காலைல ஆபிஸ்ல கணக்கெழுதிட்டு, கூட்டிப் பெருக்கி விட்ட விடைகளைத் தூக்கத்தில் நாவல்ல எழுதறது இன்னொரு வகையான நவீனம். எல்லாம் இலக்கியந்தான். சவத்துக்குப் பொறந்த பயலுக. லைபரெரி ஆர்டர் கிடைக்குதுன்னு ஒண்ணுல இருந்து பத்தாம் வாய்ப்பாடுவரை எழுத்தில எழுதி கதைப் புத்தகம்னு வெளியிட்ட்ருவானுக” எனக்கும் இதுதான் சான்ஸ். இந்தப் பயலுகளை திட்ட இப்படி வாய்ப்புக் கொடுத்த பிள்ளையை மனசுக்குள் பாராட்டினேன்.
வீட்டில் சாப்பிட்டு விட்டுப் படுத்தபோது, மணி ஒன்பது தான் ஆகியிருந்தது. பிள்ளை அடுத்த அறையில் என் அலமாரியைப் பார்த்துக் கொண்டிருந்தார். மிகப் பிரபலமான ஒரு நாவலாசிரியரின் நாவலை எடுத்து வந்தார். அட்டை பளபளப்பில் மயங்கியிருக்க வேண்டும். அச்சு முறையும் அழகாக இருந்தது. “அதுல புத்தக வடிவுதான் அழகா இருக்கும். உள்ளடக்கம் சுத்த மோசம்”. என்றேன்
“ஓஹோ இப்படியெல்லாம் கூட இருக்கா?” புத்திசாலிகள்தான் புத்தகம் எழுத வருவாங்க அதுதான் வெளியிடுவாங்கன்னு நெனச்சிருந்தேனே”
“அந்தக்காலத்தில இந்து நேசன் இல்லையா? அது மாதிரித்தான்”
“இப்ப என்ன? எல்லாரும் இந்து நேசன் மாதிரி எழுதறானுக. உடலின் சுதந்திரம், உள்ளத்தின் சுதந்திரம்னு பேசிட்டு ஏதாவதொரு சாமியார்ட்ட அல்லது கோயில்ல சரணாகதி ஆகிரானுக. எழுதறத விட வாய் கிழியப் பேசுறாங்க. இதைப்பத்தி எவனும் நாவல் சிறுகதை எழுதக் காணோம். உலகத்தில நடக்கிற அநீதி எல்லாம் பேசுறவனுகளுக்குத் தங்களைப் பத்தி எழுத முடியல. வியாபாரம் கெட்டுடுமோன்னு பயம். சினிமாவில சினிமா இசையில எப்படி, இதாலி, பிரேஸில் அங்க இங்க போய்க்காப்பி அடிக்கிறாங்களோ அதே மாதிரி எழுத்தாளனுகளும் காபி அடிக்கிறானுக. என்ன இசையும் சினிமாவும் எல்லோரும் பாக்றதுனால தெரிஞ்சுபோய்ருது. இது தெரியறது கஷ்டம். ஆயிரம் பிரதி வித்ததும் தான் பெரிய எழுத்தாளன்னு ஊருக்கெல்லாம் டமாரம் அடிச்சித் தண்டோரா கொட்டி கூட பஜனை பாட பெரியகூட்ட்த்தைக் கூட்டி கொண்டாட ஆரம்பிச்சிரானுக. சொறிவது சுகம். அதை அனுபவிக்க அடுத்தவனையும் சொறிய வேண்டும்.
திராவிட இயக்கத்துக் கதைகள்ள கற்புப் படாத பாடு படும். கற்பழிஞ்சிட்டாள்ங்கிற வார்த்தையை வச்சே பல கதைகள் எழுதுனாங்க. பளபளன்னு காகித்தில தொடவே நல்லா இருக்குற மாதிரிப் புத்தகம் போட்டு நூலகங்கள்ல வாங்கச் சொல்லில் அரசு ஆணை போட வச்சிருவாங்க. பிறகென்ன “நான் முப்பது புத்தகம் எழுதினேன் அத்தனையும் பேரிலக்கியங்கள்’ அப்படின்னு கட்சிக்காரனுங்கள விட்டே சொல்ல வைக்க வேண்டியது. சடையப்ப பிள்ளையின் கணக்கில் ஒரு புத்தகங்கூட திராவிட இயக்கத்தில இருந்து நல்ல புத்தகம் வரலே. அம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் அரசியல் இயக்கத்திலிருந்து, பாரதிதாசனுக்கு அப்புறம் ஒண்ணுமேயில்ல. நல்ல புத்தகங்களைப் படிப்பாங்களான்னு அவருக்குச் சந்தேகம். திருக்குறள்ல சொல்லிருக்குன்னு நாலடியார்ல உள்ள செய்யுளச் சொல்லுவாங்க. புலியை விரட்டிய தாய்க்குலம்னும் புறநானுறுன்னும் ஏதேதோ சொல்லுவாங்க. புறநானூறுல அப்படி ஒருபாட்டே கிடையாது. ஏதோ அடிச்சு விடவேண்டியதுதான். புத்திசாலிகள் அறிவுஜீவிகளைப் பற்றி யெல்லாம் அவங்களுக்குக் கவலயில்ல.
இடதுசாரி எழுத்தாளர்கள் உணர்வுகளின், மனிதர்களின் இயல்பான இயக்கத்தைவிட கதையில் தத்துவங்களின் இயக்கமே அதிகமாக இருந்தது. படிக்கிறாங்களோ இல்லையோ படிச்சமாதிரிக் காட்டிக்கிறவங்களுக்கு மதிப்பு இருக்கும். படிக்கிறது நல்லது. அதை மறுக்க மாட்டாங்க. ஏக மனதா ஆதரிப்பாங்க. ஆனா தாங்க நினைக்கிற மாதிரி எல்லோரும் நினைக்கணும்னு எதிர்பாப்பாங்க. இப்ப எல்லாம் தேங்கிப் போச்சு. டாலர் சம்பாத்தியம் எல்லாத் தத்துவங்களையும் வெள்ளமா வந்து தள்ளிக்கிட்டுப் போயிருச்சு. நிறையப் பணம் புரள்ற காலத்தில சோஷலிஸம் வேகாது. ஒருவேளை தரித்திரகாலம் திரும்பி வந்தா சான்ஸ் கிடைக்கும். அப்பவும் இலக்கியம் படிப்பாங்களாங்கிறது சந்தேகந்தான். இப்படி ஆளுக்கொரு வீடு பிடிச்சிக்கிட்டு, தானும் புதுவீடு கட்டாமே, மத்தவனையும் இருக்கவிடாம இதுதான் தமிழ் எழுத்தாளனுக கதை.
சடையப்ப பிள்ளைக்கு இவன் சொல்லாமல் விட்டது என்ன என்று புரிந்தது. நீங்கள்ளாம் ஏன் எழுத வாரீங்க. இருக்கிற எழுத்தாளனுக்கே எழுதவும் முடியல. எழுதாம இருக்கவும் முடியல. புத்தகத்தை பதிப்பிக்க முடியல. பதிப்பிச்சா விக்க முடியல. ஒருவிஷயத்த நல்லா செய்வானுங்க. நல்ல உரத்த, கரகரத்த, குரலில் தன் பெருமைகளைப் பேச முடியும். முதலின் தமிழின் ஆதியை அப்புறம் அதன் வளமையை பேசிட்டு கடைசியில தன் பேரைப் போட்டுக்கிட்டு.. அடக்கமாப் பேசறமாதிரி அகங்காரமா பேசறதக் கலையாக்கி வச்சிருக்கானுக..
இவ்வளவு புரியாதவராக இருக்கிறாரே என்று வியப்பாக இருந்தது. பற்பசை விற்பதைப் போல புத்தகங்களையும் விற்கிறார்கள். இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம். கூப்பனைப் பூர்த்தி செய்தனுப்பினால் டெலிவிஷன் செட் இலவசம். புத்தகம் எழுதுவதைப் பற்றி யோசிப்பதைவிட டெலிவிஷன் விற்கப் போகலாம்.
கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளை மேகங்கள் வானில் பஞ்சு பஞ்சாகப் பிரிவதைப் தன் கனவு கலைவதை சடையப்ப பிள்ளையும் புரிந்துகொண்டார். ஆனாலும் ஒரு எழுத்தாளனாகிவிடவேண்டும் என்று ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் கண்ட கனவு மனதை விட்டு அகல மறுத்தது. அந்தக் கனவுடனேதான் அன்றும் தூக்கிப் போனார். அன்று இரவில் பெரிய பத்திரிக்கையின் ஆசிரியராக ஏகப்பட்ட வேலைகளுடன், கதாசிரியர்களிடம் பேசுவது படைப்புகளை எடிட் செய்வதுமாக தூங்கிய நேரம் கழிந்தது. விழித்த போது அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. இட்லிக்கடையின் கனவுகள் சென்னையிலும் வதைத்தன. முன்னர் பகலில் மட்டும் அவ்வப்போது இருமலைப் போல் இருந்த நோய் இப்போது இரவிலும் தொடர்ந்து தீராத காய்ச்சல் ஆகிவிட்டது.
அத்தியாயம் 6

ஒருநாள் ஓட்டப்பிடாரத்துக்கு ஒரு சாமிகள் வந்தார். ஜகத்குரு ஸ்ரி ராமானுஜதாச ஸ்வாமிஜி ன்னு கோட்டை ஐயங்கார் சொன்னார். – கோட்டை எல்லாம் போய் மூணு தலைமுறை ஆனாலும் கோட்டை ஐயங்கார்தான். கோட்டை விட்ட ஐயங்கார் – கோட்டை விட்டில் தங்கியிருந்தார். ரொம்ப ஆசாரமான குடும்பம். அப்படிப்பட்ட இடத்தில்தான் இருப்பார். கோட்டை ரொம்பப் பெருமையாச் சொன்னார். ஜகத்குரு ஏன் சின்ன ஊருக்கு வருகிறார்? பெரிய ஊர்களில் பெரிய குருக்கள் சின்ன ஊரில் சின்ன குருக்கள். பெரிசும் சிறிசும் சொத்துக்கள்.
கணபதியா பிள்ளை அதைக் கேள்விப்பட்டு பிள்ளையிடம் பேச்செடுத்தார். “ரொம்ப்ப் பெரிய’வாளாமே?”
“நீங்க வேற ஏடாகூடமாச் சொல்லிச் சண்டை இழுத்துவிட்ராதீரும்.. அவரு என்னை வேற வரச்சொல்லிட்டுப் போய்ட்டார். போகவா வேண்டாமான்னு இருக்கேன்.”
“ஸ்வாமிஜியெல்லாம் வந்தா ரொம்ப ஆசாரம் பாப்பாங்க. ஏற்கனவே ஆசாரமான இடமே பெரிய தொல்லையா இருக்கும். அவரு வேற இன்னும் ஆசாரம் பாத்தா.. உண்டு இல்லைன்னு ஆக்கிருவாங்க.. நான் வரலையா.. என்னையும் கூப்பிட்டாரு. நிறையப் பேரு போனா அவருக்குப் பெருமைதான். ஆனால் குனிஞ்சு கும்பிடு கால்ல விழு அப்பிடி இப்பிடிம்பாரு. நமக்குக் கஷ்டம்.”
“நம்ம மடாதிபதி ஆதீனம் வந்தா ஐயங்கார் வர்றாருல்ல. பிரசங்கம் முழுக்க கேட்டுட்டுத்தான் போவார். சாமிகள்ல் இந்த சாமி அந்த சாமி அப்படின்னு கிடையாதில்ல.” அவர் சொல்லச் சொல்ல கணபதியா பிள்ளையும் போக வேண்டியதாகிவிட்டது.
அங்கே சிம்மாசனம் போன்ற நாற்காலியில், பட்டுத்துணி விரித்து, அதில் தெய்வக்களை பொருந்திய ஸ்வாமிஜி உட்கார்ந்திருந்தார். காவி வேஷ்டியும், காவித்துண்டுமாக இருந்தாலும் அதன் பார்டரில் தங்க நிறத்தில் பட்டுவைத்து இழைத்திருந்த்து. அவர் முன்னால் தேங்காய பழம், பூ, அரிசி, மாவிலை வைத்த தண்ணீர்ச் செம்பு, எல்லாம் இருந்த்து. சடையப்ப பிள்ளைக்கு இது சாமியாரா கடவுளா என்று குழப்பமாக இருந்த்து. கந்தசாமி பிள்ளை இருந்திருந்தால் கேட்டிருக்கலாம், நம்ம ஆளுக இந்தச் சாமியாரைக் காலில் விழுந்து கும்பிடலாமா அல்லது கைகூப்பித் தொழுதால் போதுமா?
பத்து-இருபது பேர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் பின்னால் ச.பிள்ளையும், கணபதியா பிள்ளையும் போய் நின்று கொண்டார்கள். ஊதுபத்திப் புகையும், சாம்பிராணிப் புகையும் இன்னும் ஏதோ வாசனைகளும் வந்தன. முன்னாலிரண்டு பேர் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து கொண்டிருக்க பின்னால் ஒவ்வொருவராகச் செல்ல நின்று கொண்டிருந்தனர். பக்திமணம் கமழ்ந்து கொண்டிருந்தது. மனிதர்களின் நடுவே முன்னால் பார்த்தார். அங்கே ஆண்டாளம்மாள் நின்று கொண்டிருந்தாள். ஊரிலிருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவச்சி. அவர் ஏதோ பேசினார் அதைக் கேட்டு எல்லோரும் அமைதியாக இருந்தனர்.
“மன அமைதியே இல்லாமலிருக்கின்றது.”
“தினமும் குத்து விளக்க ஏத்தி வப்பேளோல்லியோ? வச்சு. அம்பாளைப் பூஜை பண்ணுங்கோ. இப்படி தொடர்ந்து பண்ணினா மன அமைதி வரும்.”
அந்த அம்மாள் சொன்னாள் “நான் ஆஸ்பத்திரியில இருக்கேன். பிரசவமெல்லாம் பாக்கணும். வீட்டுக்கு வந்தா சுத்தமில்லையேன்னு விளக்குத் தெனமும் ஏத்தறதில்ல. எப்பவாவது தான் ஏத்துவேன்”
“அதாம் பாத்தேளா. சுத்த பத்தமா இருந்து, அம்பாளப் பூஜை செய்யுங்கோ. சாந்தி கிடைக்கும்.”
அந்த அம்மாள் கண்ணிலிருந்து கண்ணீர் வந்த்து. பாவம் அவள், என்ன செய்வாள்? வேலை அப்படி. தினமும் ஒரு கேஸாவது வந்து விடும். பிரசவம் பார்ப்பது லேசா? எவ்வளவு கஷ்டமான வேலை. அவ ஒருத்திதான் இந்த ஊர் டிஸ்பன்சரில இருக்கா. வேற யாரு பண்ணுவா. பிறகு இந்த ஊர்ல இந்த வேலைய யார்பாப்பா? என்னேன்னத்தை எல்லாம் அள்ளிப்போடணும். எல்லாம் அழுக்குத் தானே. அம்பாளுக்குச் சுத்தம் வேண்டும். தீட்டாயிடுமே”. குழந்தை பெறுவது கடவுளின் அருளால். பிரசவம் பார்ப்பது மட்டும் எப்படி அசுத்தமான செயலாகிவிடுகிறது? அப்போதிருந்து இந்த முரண்பாடை எப்படித் தீர்ப்பதென்று அவர் யோசிக்க ஆரம்பித்தார். அவருடைய எழுத்தாளப் புத்தி சும்மாவிடவில்லை. அவரைக் குடைந்து கொண்டே இருந்த்து. ஆனாலும், சாமியாரை வணங்கி ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு, கடைகு வந்து சேர்ந்தார். ஊர்ப் பெரிய மனிதர்களிடம் அதுவே பேச்சாக இருந்த்து.
என்னைக்கும் இல்லாத திருநாளா ஆண்டாளம்மாள் கடைக்கு வந்து கொண்டிருந்தாள். பொதுவா வரமாட்டாளே? இங்க ஏன் வர்றா என்று யோசித்தார். ‘” ஒரு டீ குடுங்க “ என்றாள். குடுத்துக் கொண்டே கேட்டார் “வேலைய்யா இல்லையா?”
“கோவில்பட்டி போயிருக்காக”. “
சாமியார் என்ன சொன்னார்” கேட்டார்.
“தினம் பூஜை பண்ணனுமாம். அவுகளை கோவில்பட்டிக்கு மாத்திட்டாக. பிள்ளைகள் எங்கூட இருக்கு. ஆஸ்பத்திரி வேலையப் பாக்கவா? வீட்டு வேலையப் பாக்கவா? இல்லைன்னா கட கண்ணிக்குப் போகவா? இதுல தினம் சுத்தமா இருந்து பூஜை பண்ணவா? ரொம்பக் கஷ்டம். அந்தக் கடவுளுக்குத் தான் வெளிச்சம். நாம் படற கஷ்டம் அம்பாளுக்குத் தெரியாமலா இருக்கு. ஏதோ மனச் சாந்திக்குப் இவார்ட்டப் போனேன். அவரு இப்படிச் சொல்றாரு. என்ன செய்ய?” ஆண்டாளம்மா சொல்லிவிட்டுப் போன பின்னாலும் அவள் குரல் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. சடையப்ப பிள்ளையின் மனம் அப்படி? அவரின் இந்தக்குணம் அவருக்கே ஒரு குறையாகத்தான் பட்டது. உலகத்தில யார் கஷ்டப் பட்டாலும் அது தனக்கு வந்த கஷ்டம் மாதிரி யோசிப்பார். ஒரு உதவியும் செய்ய முடியலைன்னாலும் யோசிப்பார். அத்த்தவிர என்ன செய்ய முடியும்? அவருக்கு வக்கு அவ்வளவுதான்.
சாயந்தரம் கணபதியா பிள்ளை டீக்குடிக்க வந்தார். வழக்கம் போல இன்னைக்குப் பேச்சில சாமியார் வந்தார். அவர் வருவது பெரிய அதிசயம் என்று ஐயங்கார்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஐயர்களுக்கு அது பெரிதாகத் தெரியவில்லை என்றாலும், அவரைப் பார்த்து சேவித்தார்கள். இன்னும் நடுவில் பிள்ளை ஆண்டாளம்மாவின் பிரச்சனையைச் சொன்னார். ஒருமாதம் முன்பு தன் மனைவிக்குப் பிரசவம் பாத்திருந்த ஆண்டாளம்மாவை நல்ல வேலை செய்பவள் என்று காமாட்சி ஐயர் சொல்லிக் கொண்டிர்ந்தார். கணபதியா பிள்ளை குரலைக் கனைத்துக் கொண்டு தொடங்கும் போதே ஏதோ முக்கியமானதைச் சொல்ல வருகிறார் என்று சடையப்ப பிள்ளை கவனமாக்க் கேட்டார். எல்லா நாளையும் போல அன்றும் டீக்கடை மாநாட்டில் அவர் பேச்சு தான் எடுபடும்.
ஸ்வாமிஜியைப் பற்றித் தனக்கு ஒன்றும் தெரியாதென்றும், தன் மனைவிக்கு ஆண்டாளம்மாள் அன்றைக்குப் பிரசவம் பார்க்கவில்லையெனில் அவளும் குழந்தையும் இறந்திருக்கக் கூடும் என்று காமாட்சி ஐயர் சொன்னார். கணபதியா பிள்ளை அதை ஆமோதித்தார். கடவுள் பூஜை என்று எவ்வளவுதான் நம்பினாலும், ஆண்டாளம்மாள் இல்லையென்றால் ஊரில் பலருக்கு சுகப்பிரசவம் நடந்திருக்காது. ரொம்ப நாள் விண்ணப்பங்கள் கொடுத்து, கலெக்டர்முதல் எம்.எல்.ஏ ., மந்திரி என்று பார்த்து அழுது ஊருக்கு வந்த அரசு டிஸ்பன்ஸரி ரொம்ப ஓகோ என்றில்லாவிட்டாலும் சில விஷயங்களில் செயல்பட்டு வந்தது. முதன் முதலாக ஆணுறைகளை விநியோகித்து, அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் வெட்கத்தோடும் கூச்சத்தோடும் ஆண்கள் சிரிப்பாய்ச் சிரித்து வெடித்தனர். சிலர் பலூனைப் போல் ஊதி வேடிக்கை காட்டி விளையாடினார்கள். இதெல்லாம் செய்வதைச் சொன்னால் அம்பாள் என்ன செய்வாளோ என்று ஊர்க்கார்ர்களுக்கு பயமும் இருந்தது. நீ சுத்தமில்லை பூஜை செய்யக் கூடாது என்று ஆண்டாளம்மாவிடம் சொல்லிவிட்டார். ஆண்டாளம்மா ரொம்ப பக்தி. வீட்ல பஜன பூஜை எல்லா ஏற்பாடு பண்றாங்க. சாமியார் அவங்க கிட்ட சொன்னது வர்றவங்களுக்குத் தெரிஞ்சா, எல்லாம் ஏடா கூடமாகிடும்.
மூன்றாவது நாளில் ஆண்டாளம்மா வீட்டில் சத்ய சாயிபாபா பூஜை என்று அவரையும் கூப்பிட்டிருந்தார்கள். அவர் போனபோது இருபது முப்பது பேர் உட்கார்ந்து பாபாவின் படத்தின் முன் பஜனை பாடிக்கொண்டிருந்தனர். வெள்ளைப் புடவை கட்டியிருந்த செல்லம்மாவும் இருந்தாள். அவளருகில் புளியனூத்து கிராம பாபா சமிதி தலைவர் செத்துப் போன கனகாம்பரம் பிள்ளையின் மனைவி கல்யாணி அம்மாள் கலர்ப் புடவை கட்டி உட்கார்ந்திருந்தாள். சடையப்ப பிள்ளைக்கு ஆச்சரியமாக இருந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை. அதற்குள் பஜனை முடிந்து சுண்டல் விநியோகம் செய்தார்கள். பாபா புதிய ஸ்வாமியாகத் தோன்றினாலும், இவரைக் கும்பிடலாமா வேண்டாமா என்று அவருக்குச் சந்தேகமாக இருந்தது. பஜனை முடிந்ததும் கல்யாணியம்மாள் குட்டிப் பிரசங்கம் நடத்தினாள். அங்கே எந்த விதமான பேதமும் கிடையாது. யார் வேண்டுமானாலும் சமிதியில் சேரலாம். கட்டுப்பாடுகள், தீட்டு, பெண்கள் என்ற வித்தியாசம் பார்க்க வேண்டியதில்லை. அன்றிலிருந்து ஆண்டாளம்மா வீட்டில் பெருமாளுக்குப் பக்கத்தில் சாயிபாபா சேர்ந்து கொண்டார். நாளாக நாளாக சடையப்ப பிள்ளையின் மனைவி கோமதியம்மாளும் சேர்ந்து கொண்டாள். அவளும்‘ எந்த பேதமும் கிடையாது’ என்பதை மந்திரம் போல் சொல்லிக்கொண்டிருந்தாள். அவரும் சேரவேண்டுமென்று அவள் விரும்பினாலும், கடை கண்ணி வேலை என்று அவர் ஒதுங்கிக் கொண்டார்.
சாயிபாபாவின் படமும் புகழும் பரவிவிட்டது. அடுத்தமுறை கோட்டை ஐயங்கார் வீட்டுக்கு ராமானுஜ தாச ஸ்வாமிஜி வந்ததும் போனதும் நிறையப் பேருக்குத் தெரியவே இல்லை. அதற்கப்புறம் அவர் வருவதேயில்லை. ஐயங்கார் பேரன் ஆண்டாளம்மா வீட்டுப் பஜனையில் சிங்கி அடித்துக் கொண்டிருந்தான். அவன் அம்மா வீட்டில் சும்மா இருக்கும் நேரங்களில் புதிய பாடல்களை பஜனையில் பாட மனப்பாடம் பண்ணிக் கொண்டிருந்தாள். அவள் சமிதியின் இந்த வருட்த்திலிருந்து தலைவியாம். கோமதியம்மாள் சடைவுடன் முனகிக் கொண்டிருந்தாள். அவள் தலைவியாக வர திட்டம் போடுகிறாளோ என்று சடையப்ப பிள்ளைக்குச் சந்தேகம். அங்கே தான் எந்த பேதமும் கிடையாதே.
அத்தியாயம் 5

மூணாந் தெருவில் பரமசிவ நாடார் எழுவது வயதில் கல்யாணம் முடித்துக் கொண்டார் என்று அவர் காதில் விழுந்தாலும் பெரிதாகத் தோன்றவில்லை. பரமசிவ நாடார் என்றதும் அவருக்கு நினைவுக்கு வருவது அவர் அந்தக் காலத்தில் பனைமரக்காட்டில் நிலத்தில் குழிதோண்டி பணத்தை புதைத்து வைத்துப் பாதுகாத்த்துதான். பேச்சுவாக்கில் சொன்னார். இப்படி ஒரு வழி இருக்குமென்று பிள்ளைக்குத் தோன்றியதில்லை. அதனால் தான் ஞாபகம் இருந்த்து. “ரெண்டு பொண்டாட்டி கட்டாதவன் எவன் இருக்கான் ? எனக்கென்னவோ நல்ல நேரம். இதுமாதிரி ஒண்ணும் இல்ல.”
ஒருநாள் அந்தப் பெண் இட்லி வாங்க வந்த போது பார்த்தார். அவள் தூரத்தில் வரும்போதே ஜாடை காட்டி முனகிவிட்டான் முருகன். இதுமாதிரி குசும்புகளில் எல்லாப் பயகளும் வெவரமாத்தான் இருக்கானுக. ரொம்பச் சின்னப் பிள்ளை. இருபது வயசு கூட இருக்காது. நல்ல கிண்ணென்ற உடற்கட்டு. இட்லி சாம்பார் சட்னியைக் கொடுத்து அனுப்பும் போதே ஆளைக் கணித்தார்.
பரமசிவ நாடார் காம்பவுண்டில் குடியிருக்கும் பெருமாள் டீக் குடிக்க வந்த போது சொன்னான் “அதுவா ஏங்கேக்கிறீங்க, உங்களுக்கெதுக்குங்க…என்று சொன்னாலும், தொடர்ந்தான். “அது தட்டழிஞ்ச கழுத. … புருஷன் கைவிட்டானாம். பலவட்ற….தாய் தகப்பன் இல்லை. பாவந்தான். அங்கயும் இங்கயுமாத் திரியுது. அவனவன் பூந்து விளையாடுதான்”
“அதாங் கிழவன் துள்ளி விளையாடுதானா?”
“சத்த்த்தைக் குறைத்துக் கொண்டு சொன்னாள்” கிழவன் எங்க விளையாடுதான். பக்கத்துவீட்டு செல்லப்பாண்டியன் தான் விளையாடுதான்.
என்னடா கரும்ம். எழவெடுத்த பயபுள்ளிக. சடையப்ப பிள்ளை அமைதியானார். அவர் மன உறுத்தல் ஆறவில்லை. காலையில கண்மாய்க்குப் போறவழியில செல்லப் பாண்டியனைப் பார்த்தார். “ஏய் என்ன உங்காம்புவுண்ட்ல கிழவன் கல்யாணமாம்ல”
‘உங்களுக்கு என்ன சாமி? அந்தப் பெருமாளு அடிக்க கூத்து தாங்கல. கிழவனுக்கு வேலைபாக்க வந்துருக்கா. அவருக்கும் அவரு பொண்ட்டாட்டிக்கும் சமைக்க அந்தக் கஞ்சக்கூதி மகன் சோறு போடமாட்டக்கானாம். அந்தப் பிச்சக்காரத் தேவடியா, ஏம் பொண்டாட்டிட்ட நெதம் கஞ்சி வாங்கிட்டு போறா அவ”கோபத்தில் கிழவனைத் திட்டிக் கொண்டே போனான்.
பிள்ளைக்கு மத்தியானத் தூக்க்ம் இல்லை. எந்தப் பயலும் உண்மையச் சொல்ல மாட்டுக்கானுக. அவனவன் வசதிக்கேப்ப கதைய மாத்தறானுக. இவனுகளும் அரைத் தூக்கத்திலயும், மயக்கத்திலயும் பேசுதானுக போல. உண்மையத் தெரிஞ்சும் என்ன பிரயோசனம்? கண்டுபிடிச்சா என்ன பரிசா கிடைக்கப் போகுது? ஒண்ணுமே மாறப் போறதில்ல. நம்ம நம்ம சோலியப் பாக்கவேண்டியதுதான். நினைத்தாரே தவிர, முடியவில்லை. பிள்ளைக்கு இளகிய மனசு. யார் கஷ்டப் பட்டாலும், அவருக்குத் தாங்காது. கோமதியம்மா கிண்டல் பண்ணுவா. “ பெரிய மஹாத்மா காந்தி”. ஒன்றிரண்டு நாட்கள் இட்லி வடை ஏதாவது வாங்க வந்தாள். அவள் ஊர்க்காரன் மாடன் சொன்னான்” இது எத்திக்கிட்டு திரியிர கழுத. இதுக்குப் பேரு கல்யாணமா? எனக்குத் தெரிஞ்சு பரமசிவ நாடார் எழாவது ஆளு. பேரு பொன்னாத்தா. கண்ணும் காலும் ஒரு இட்த்ல நிற்காது”.
அவருக்கு என்னமோ அவளைப் பார்க்கப் பாவமாக இருந்த்து. இவர்கள் சொல்வது போல் மினுக்கலும் சிலுப்பும் இல்லை. இந்தப் பயகள்ட்ட ஏதவது சொல்லப் போனா தனக்குக் குழந்தை இல்லை என்பதால் சபலம் அது இது என்று சொல்லுவாங்க. குத்திக் காட்றது மாதிரி இருக்கும். முதுகுக்குப் பின்னால் எதுவானாலும் பேசுவார்கள்.
ஒருநாள் மூக்கைச் சிந்திக் கொண்டே வந்தாள். கையில் ஒரு துணிமூட்டை.. கண்கள் சிவந்திருந்தன. முகம் வீங்கியிருந்த்து. கடையிலிருந்த பெஞ்சில் உட்காராமல் தரையில் குத்தவைத்து உட்கார்ந்து கொண்டாள்.
ஒரு டீயும் வடையும் கொடுங்க” கடையில மந்தமான நேரம். முருகன் பலசரக்குக் கடைக்குப் போயிருந்தான். பிள்ளைக்குக் குறுகுறுப்பு.. என்ன ஆச்சு?
ஒண்ணுக்கு ரெண்டாய்க் கொடுத்தார். “ஒரு வடை போதும்”
“சும்மா சாப்பிடு”..என்னம்மா ஊருக்கா?.
.மூணு மணிக்குத்தான் மேட்வீல் வரும். தூத்துக்குடிக்கு. அவரிடம் சொன்னால் என்ன கிழிக்கப் போறாரு.
டீயைக் குடித்துவிட்டுச் சொன்னாள். “நாடார் துரத்திவிட்டாரு. ..” அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. “எங்க போகன்னே தெரியல.” கொஞ்சநேரம் என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியானார். இப்படியெல்லாம் நடக்குமா? முறித்துக் கொள்வது அவ்வளவு எளிதா? இரண்டு நாள் முன்னால் செல்லப் பாண்டியனும் பெருமாளும் அவளைப் பற்றிச் சொல்லியிருந்தார்கள்.
“கடையில வேலைக்கு வச்சுக்குங்க சாமி. புண்ணியமாப் போவும்.” கையெடுத்து கும்பிட்டாள். அவர் மனதில் ஏதோ அழுத்தியது. “கொடுக்கதக் கொடுங்க.. ஒரு வேளைச் சோறு போதும். நல்லா வேலை செய்வேன்” கண்ணிலிருந்து ஒன்றிரண்டு திவலைகள் விழுந்தன. ஒருவேளைச் சோத்துக்கு இந்தப் பாடா?
“எங்கிட்ட ஆளு இருக்காம்மா. ரொம்ப ஒண்ணும் ஓட்டங்கிடையாது”
“ஒண்ணும் தரவேண்டாம். ஒரு வெளச்சோறு….”
ஏற்கனவே இவளைப் பத்தி ஊர்ல நல்ல பேரு இல்ல. அவளை வேலைக்கு வைத்துக் கொள்வதை நினைத்துப் பார்க்க்க்கூட முடியாது. கோமதி, முருகன், ஊரு. கொஞ்ச நேரம் அமைதியானார். அவளும் தலைமுடியையும் துணி மூட்டையும் இறுக்கிக் கொண்டாள். அவருக்கும் புரிந்த்து.
“எந்த ஊரு’
‘முடிமனுக்கு அந்தப் பக்கம் கருமாப்பட்டி’
அம்மா அப்பா இருக்காகளா?
‘யாரும் இல்ல’
அண்ணந் தம்பி கூடப் பிறந்தவுக.
‘யாரும் இல்ல’ குரல் சலித்திருந்த்து. எத்த்னையோ தடவைகள் இதே பதில்களைச் சொல்லியிருந்தாள்.
யாரும் இல்லைன்னா எப்படி?
‘அதான எனக்கும் தெரியல. முந்தானை மூடிக்கொண்டு லேசாக்க் குலுங்கினாள் “சொல்லி அழக்கூட ஆளில்ல”
“இப்ப எந்த ஊருக்கு கிளம்பிட்டுரிக்க”
நாடாரு இரண்டு ரூபாய் கொடுத்தாரு. தூத்துக்குடி போறேன்”
“அங்க போயி?”
எங்கயாவது வேலை பாக்கணும். பிழைக்கணும்ல”
கொஞ்ச நேரத்தில் பஸ் ஏறிப் போய்விட்டாள். சடையப்ப பிள்ளைக்குத் தூக்கமில்லை. அன்று முருகனுக்குப் புரியவில்லை. பிள்ளை ஏன் சிடுசிடுப்பாக இருக்கிறார்?”
பரமசிவ நாடாரே ஒருநாள் மாட்டிக்கொண்டார். “பலவட்றக் கழுத. இதுக்கு முன்னால ஆறேழு பேரு கூட இருந்திருக்கா. வீட்டுக்காரிக்கு வேல செய்ய முடியல. எனக்கும் எழுவது வயசாச்சு. பாவப்பட்ட புள்ள சோத்தப் போட்டு ஏதாவது கொடுப்போம்னு பாத்தா. துப்புக் கெட்ட தேவடியா.. இங்கயும் வந்து என் சட்டைப் பைல கைய வக்கா. அவ பெட்டியில நோண்டுறா. ஊர் மேயறா. கொஞ்சம் சோறு தின்னதும் கொழுப்பு ஏறிறுது. துரத்திவிட்டேன்” பெருமித்த்துடன் சொல்லிக் கொண்டிருந்தார்.
பரமசிவ நாடார் மொதப் பொண்டாட்டி நாண்டுக் கிட்டுச் செத்தா. இரண்டாவது கூலிக்காரப் பய கூட ஓடிப்போனா. மூணாங்காரி இவர் குடுமிய புடிச்சிக்கிட்ருக்கா.
முடிமன்ல இருந்து வந்த பால் கார்ர் சொன்னார். “அந்தக் கழுதையா..எட்டு வயசில இருந்தே இப்படித்தான் அலையுதா. எங்க வீட்ல கூட வேல பாத்தா. வீட்டுக்காரிக்கும் அவளுக்கும் ஆகல. கொஞ்சம் நிறுத்திக் கொண்டார்.
அவர் எதையோ சொல்லாமல் விடுவது போலிருந்த்து. வெளியூருக்கு வேலைக்குப் போனாலும் கொஞ்சநாளைக்கு பிறகு ஓடி வந்திருவா. கூலிக்காரன் கல்யாணம் பண்ணான் நகை வேணும்னு துரத்திவிட்டான். அவ எங்க போவா நகைக்கு…
‘நல்ல வாட்டசாட்டமானவ” ரசித்துச் சொல்வது போலிருந்த்து.
சின்ன வயசு அதனால கண் டவனும் சேத்துக்கிடுதான். அவளும் சோத்துக்கு என்ன செய்வா. பிள்ளையும் கதை கேட்டுவிட்டுச் சும்மா இருக்க வேண்டியதுதான்.
* * * * * * * * *
• அத்தியாயம் -4- * * * * * * * * * * * * * * *

சடையப்ப்பிள்ளையின் கடைக்குத் தினமும் டீக்குடிக்க வந்தவர்களில் கணபதியாபிள்ளையை அவரால் மறக்க முடியாது. ஆறு பத்துக்கெல்லாம் வந்து விடுவார். ‘உங்க கையால டீக் குடிச்சாத்தான் நல்லா இருக்கு”. நெட்டையான மெலிந்த தேகம். கண்ணு நல்ல முண்டக்கண்ணு. நாலுமுழக் கைத்தறி வேட்டியைக் கட்டிக் கொண்டிருப்பார். அவர் உயரத்துக்கு அது பத்தாது என்றாலும் அந்தப் பழக்கம்தான். பாகவதர்மாதிரிக் கிராப்பு.. குளித்துவிட்டு மேலெல்லாம் திருநீறு தீட்டிப் பக்திப் பழமாகத்தான் வருவார். வரும்போதே “சேக்கிழார் மாதிரி இருக்கீக அண்ணாச்சி. நீண்ட வெண் முடிச்சடையும், தழையத் தொங்கும் வெண்தாடியும், பரந்த் நெற்றிமுழுக்கப் பதாகையிடும் திருநீறும்’ என்று நக்கலடிப்பார். சிலநேரம் இரண்டு பேருமாய்ச் சேர்ந்து சிவன் கோவிலில் நடக்கு பக்திப் பேருரைகளில் முன் வரிசையில் அமர்ந்து உரையாற்றுபவர்களை பரவசத்தில் ஆழ்த்தியதும் உண்டு. முன்னைப் பழம்பொருளும், பின்னைப் பெரும்பொருளும் என்று ராத்திரி பேச ஆரம்பித்தால் பண்டார சந்நிதானத்தின் பெருசும் சிறுசும் பேசுவது போலிருக்கும்.
ஆபீஸுக்குப் போகும் போது இன்னொருதரம் டீக் குடிக்க வருவார். ஆறுமணிக்குப் பேப்பரில் படித்த விஷயங்களைச் செரித்து ஒன்பது மணிக்கு கடைக்கு வரும்போது விமரிசனம் செய்வார். அவர் பேச்சைக் கேட்பதற்கென்று பலர் காத்திருப்பது போல் கூட்டம் இருக்கும். பேப்பர் படித்துக் கொண்டிருப்பவர்கள் அரட்டை அடித்துக் கொண்டிருப்பவர்கள் இரைச்சலுக்கு நடுவில் .அவர் குரல் தனித்து ஒலிக்கும். அன்றைக்கும் அப்படித்தான் ஒலித்த்து.
“கடையத் திறக்கப் போறானாம்ல” என்று தொடங்கினார்.
தலைப்பாய அவிழ்த்து உட்கார்ந்து கொண்டிருந்த பாண்டித் தேவர் சொன்னார் “டீக்கடையை திறந்தாங்க டீக்குடிச்சுப் பழக்கமாயிட்டுது. அறுபது வருஷம் முந்தி டீக்கடை, காபிக்கடை சிகரெட்டுக் கடை ஏது?”
“டீக்கடையத் திறந்த்துக்கு அப்பறம் டீக் குடிக்காம இருக்க முடியல. அதை வேற திறந்தா?” கணபதியாபிள்ளை நிறுத்திவிட்டு நமட்டுச் சிரிப்புச் சிரித்தார். அவர் கூட பிளாக் ஆபிஸில் வேலை பார்க்கும் ராம்மூர்த்தி முகத்தில் சிரிப்புப் கொப்பளித்த்து. அவ்வப் போது கிடைத்த போது ரகசியமாக குடித்து வந்தவர் சொன்னார் “பிள்ளைவாள், இட்லிக்கடை வச்சா. இட்லி சாப்பிட்டோம். அடுத்துடீப் போட ஆரம்பிச்சார் டீக்குடிக்க ஆரம்பிச்சோம். ஒரு நாளைக்கு மூணு நாலு டீக் குடிக்கிறோம். அடுத்துப் பிள்ளை…..” அத்துடன் நிறுத்திவிட்டார். இருந்தவர்கள் எல்லோரும் வந்த சிரிப்பை உள்ளுக்குள் அடக்கிக் கொண்டனர்.
சடையப்ப பிள்ளையின் உருவம் அப்படி. நல்ல உயரம். தாட்டியமான உடம்பு. பிள்ளையாருக்கிருப்பது போல் தொந்தி. தலையில் சிவபெருமான் போல கொண்டை. நெற்றியில் மூன்றுவிரல் பட்டை. தோளிலும் கைகளில் மூன்று இடங்களிலும், வயிற்றிலும் முப்பட்டைகள். கழுத்தில் பெரிய பெரிய உருத்திராட்சக் கொட்டை. முக்கால்வாசித் தொந்தியை மூடிக்கொண்டிருக்கும் வேட்டி. அந்த நேரம்தான். கீய்…ய்ய் என்று சத்தம் கேட்ட்து. ஒன்பது மணி லயன் வந்திட்டான். நடராஜ பிள்ளைதான் டிரைவர்.
ராம்மூர்த்தி நிறுத்தி கொஞ்ச நேரம் கழித்து பிள்ளை சொன்னார் “ஹூம் சாராயக்கடை திறந்தா ஜனம் தட்டழிஞ்சில்ல போகும்” அவர் சுபாவம் அப்படி. அதிகமாகப் பேசமாட்டார். அப்ப்ப பாத்து கதர் ஜிப்பாவும் வேட்டியுமா சி.ஆர்.எஸ். வந்தார். அவருக்கு சடையப்ப பிள்ளை டீக்கடையக் கண்டாலே பிடிக்காது. லோ கிளாஸ் ஆளுக, பேச்சு கூப்பாடு. கணபதியா பிள்ளை சொன்னார் “ராஜாஜி வர்றார்” பக்கத்தில் ரேஷன் கடை வைத்திருந்தார். நாள் பூராம் இருந்தாலும் வெளியில இருந்து பச்சைத் தண்ணி கூடச் சாப்பிட மாட்டாரு. கௌரவக் குறைச்சல். , .
நல்ல நேரம்பார்த்து கீழ முடிமன் போற வழியில போலிஸ் ஸ்டேஷன் பக்கத்தில் அரசாங்க அனுமதியோட சாராயக் கடை திறந்தான். கவர்மெண்ட்டுக்கு வருமானம் காணாதாம். கணபதியா பிள்ளையும், ராம்மூர்த்தி ஐயரும் முதலில் சாயந்தர டீயை நிறுத்தினார்கள். அப்பவே சடையப்ப பிள்ளைக்குப் புரிந்துவிட்ட்து. ரண்டு மூன்று தடவை ஜாடைமாடையாகச் சொல்லிப் பார்த்தார். கேட்கிற மாதிரி இல்ல. வீணாச் சடவு எதுக்குன்னு விட்டுட்டாரு. கடைக்கு வர்றத் நிறுத்திட்டாங்க.
தூக்கம் கலைந்துவிட்ட்து. பலவருஷம் முன்னால செத்துப் போன கணபதியாபிள்ளை இன்னைக்குத் தூக்கத்தைக் கலச்சிட்டார். “மணி மூணரை ஆச்சு” முருகன் சொன்னது எழுந்து உட்கார்ந்தார். முகத்தை கழுஇ திருநீறு போசி வருவதற்கும் கடை வாசலில் பிரேமா வந்து நிற்பதற்கும் சரியாக இருந்த்து.
என்ன அழகான முகம். லக்ஷ்மிகரம். நல்ல சிவப்பு அப்பனைப் போல. கன்னம் ரோசாப்பு மாதிரி இருக்கு. அவ அம்மாவும் அழகுதான். அவர் டீக் குடிக்கத விடாம இருந்தா இப்படி ஆய்ருக்குமா?
“என்னம்மா வேணும்?”
“தாத்தா, ரெண்டு வடையும், ஒரு டீயும்” சின்னத் தூக்குச் சட்டியை நீட்டினாள். அவுக அம்மாவுக்கு மட்டும் வடையா? இவளுக்கும் கிடைகுமா? ஒரு வடையை சும்மா குடுத்து விடலாம். முருகன் இருக்கானே. கோமதிட்ட குசும்பு சொல்லிட்டா? அவ கத்துவா? பெரிய இவுஹோ? தானம் தண்ணிபட்டபாடு.. அவள் இழுப்பதை கற்பனை பண்ணிக் கொண்டு சும்மா இருந்தார். கருணை இருந்தா மட்டுங்காணாது செய்யத் தைரியம் வேணும். இன்னொண்ணும் இருக்கு. ஒரு நாக் கொடுத்தா, தெனம் எதிர் பாப்பா. இட்லிக்கடைக்காரனுக்கு கருணை கசப்பைக் கொடுக்கும். ஏதோ கிராமத்தில வியாபாரம் ஓடுது. இதுமாதிரி ஆரம்பிச்சா.. அறிவு எச்சரிக்கை கொடுத்த்தும் கை சுருங்கிக் கொள்ளும். பகலில் காணும் கனவுக்கும் பிரேமாவுக்கும் சம்பந்தம் உண்டா? எழுதறவனுக்கும் எழுதறதுக்கும் உள்ள சம்பந்தந்தான. கொஞ்சநேரம் குழம்பினாலும் சுதாரித்துக் கொள்வார். பிள்ளை குட்டி இருந்தா இப்படித் தோணாதோ?
பிரேமாவின் அம்மா, அதான் பார்வதி, செத்துப் போன கணபதியாபிள்ளை சம்சாரம். சாயங்காலம் சீவி சிங்காரிச்சுத் தயாராக இருப்பாள். அவள் நிறத்துக்கும் முகத்துக்கும் இந்தச் சின்ன ஊரில் நல்ல கிராக்கி உண்டு. அவரு இட்லிக் கடை ஓடலயா?
டீப் போட்டுக் கொண்டே யோசித்தார். “அவளுந்தா என்ன செய்வா? ஆபிஸ் பணத்தை கையாடிக் குடிச்சு கும்மாளம் போட்டு, சீரழிஞ்சு சஸ்பெண்ட் ஆகி அவர் சாகும் போது ஒத்தக் காசில்ல கைல… கூடவே சுத்தி வந்து லட்சுமணப்பய கவுத்திட்டான். விளங்குவானா? எத்த்னையோ வெள்ளப் புடவைக்காரி இருக்காளுக, உலகம்மா இல்லையா? மாவாட்டி, முருக்குச் சுத்தி பிழைக்கிற பொம்பளைக..வாழ்ந்த வாழ்வுன்னு ஒண்ணு இருக்குல்ல.. அந்தப் பவுசிலயே இருக்கணும்னா? பிறவு அழகுன்னு ஒண்ணு இருக்கே. சுத்திவர நாய்களும் இருக்கு… சும்மா இருக்க முடியுமா?
வடையத் தாளில் சுத்தி..டீயைத் தூக்குச் சட்டியில் அவளிடம் கொடுத்தார். “அவ அம்மா… இவளையும்….” நினக்கும் போதே பதட்டமாக இருந்த்து. கள்ளுக் கடைகளைத் திறந்துவிட்ட முதலமைச்சரைத் திட்டினார். அவருக்கென்ன பவுசாத்தான் இருக்கார்.
பிரேமா போய்விட்டாள்.
அதற்கு மேல் கடையில் சாயந்தரக் கூட்டம் வர ஆரம்பித்துவிட்ட்து.
இரவு பத்தரை மணிக்கு கடையைப் பூட்டும்போது…லக்ஷ்மணனும் கூட லோகநாதனும் மைனர் மாதிரி வாயில் புகையும், கையில் பூவும் இன்னொரு கையில் சிகரெட்டும்… நடையில் ஆட்டமுமாக நடுத் தெருவுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள்.
சடையப்ப பிள்ளைக்கு இருந்த களைப்பில் இரவில் படுத்த்தும் தூங்கிப் போய்விடுவார். இரவில் கனவு காண்பது அவருக்குப் பழக்கமில்லை.
* * * * * * * * * * * *
அத்தியாயம் - 3
நாற்பது வருஷங்களுக்கு மேலாக்க்கனவு காண்பது எளிதல்ல.. கனவு காண்பது ஒரு கலை. கனவு காணத் தெரியணும். கனவு காண்றவங்களைத் தெரியணும். கனவு காண முதல்ல தூங்கத் தெரியணும். பகல் கனவுக்கு பகல் தூக்கம். ஈஸி சேர் வந்த்து கொஞ்சவருஷமாத்தான். அடுப்புக்களுக்குப் பின்புறம் இருக்கும் நீளவாட்டு இடத்தில் மணைப் பலகையின் மேல் தலை வைத்துஏதாவது புத்தகமோ பத்திரிக்கையோ வாசிக்கத் தொடங்குவார்.
“மணி மொழி என்னை மறந்துவிடு என்று தமிழ்வாணன் கேட்டால் மறுக்கமுடியாது அவரால். ‘கொலையுதிர்காலம் என்று புதிய காலம் அடுத்த மாதம் தொடங்கிவிடுமோ என்று பயந்து பகலில் காலை உதறியதும் உண்டு. ‘புளிய மரத்தின் கதையைப் படித்துக் கொண்டிருக்கும் போதே புத்தகம் கை நழுவிக் கீழே விழுந்துவிடும். ‘என்ன தூக்கம்யா’ என்று முனகிக் கொண்டே கண்ணாடியைச் சரி செய்த்டு கொண்டு மீண்டும் படிக்கத் தொடங்குவதுண்டு. ரொம்பக் கண்ணசந்தால் பத்திரமாக எடுத்து வைத்துவிட்டுப் படுப்பதும் உண்டு. ராத்திரி படித்துக் கிழிப்பது கிடையாது. வீட்டம்மாள்,எரிச்சலில் புத்தகத்தை கிழித்துப் போட்டுவிடுவாள் என்றபயம். இட்லிக் கடை வைத்தவர் எழுத்தாளர் ஆவதில் மனைவிக்கு ஆர்வமில்லை. கண் கெட்டால் ஊர்ல கண் டாக்டர் கூடக் கிடையாது. இன்னொரு செலவு.
நெல்லை மாவட்ட ஆணைக்குழுவின் ஓட்டப்பிடாரம் கிளையில் சடையப்ப பிள்ளைக்கு ஏகச் சுதந்திரம். நூலகருக்கு பலவேளைகளில் அவர் கடையிலிருந்து டீ கொடுத்தனுப்புவார். பொண்டாட்டி ஊருக்குப் போயிருந்தால் மூணு வேளையும் நூலகருக்குக் கதி சடையப்ப வள்ளல் தான். இது தவிர பத்து அஞ்சு என்று கொடுக்கல் வாங்கல் உண்டு. புதிய புத்தகம் வந்துஅதிசயம் நடந்தால் சடையப்பருக்காக எடுத்து வைத்திருப்பார் நூலகர். கறிச்சட்டியின் கரிபட்ட விரல் அச்சு சில புத்தகங்களில் இருப்பதாக இந்தச் சலுகையைக் கவனித்த மற்ற வாசகர்கள் கேட்டால் அமைதியாக இருப்பார்.
கொஞ்ச நாளாக எழுத்துப் பைத்தியம் பிடிக்க சில காரணங்கள் இருந்தன. “தமிழ்ல எவனுக்குய்யா எழுத்த் தெரியுது?” நான் தமிழ்ல படிக்கிறதேஇல்ல” என்று தமிழைக் குப்பையைப் போல் தள்ளிவிடுவோரின் அலட்டல்களும், மறுபடி மறுபடி அதே சரக்கை சமூக நாவல் என்றோ மர்ம நாவல் என்றோ மாதந்தோறும் பன்றிக் குட்டி போடும் சிலரும், இலக்கிய மடங்கள் உருவாக்கி நாந்தான் பெரியவாள், இவாள் அடுத்தவாள் என்று வாள் வாள் என்று கத்திக் கொண்டே வாள் சண்டைக்கு வருவோரும், பட்டம் மகுடம் என்று முடிசூட்டுவோரும் எழுதுவதை எல்லாம் படித்துப் புளித்துக் கிழித்துவிட்டார்.
எல்லோரையும் விட தனக்கு அதிகம் தெரியும் என்று சடையப்பருக்கு அபிப்பிராயம் இருந்தாலும், நூலகர் தன்னை பெரிய விமரிசகர் என்று நினைத்த்தில்லை. சோத்துக்கு இதுதான் வழி என்று வந்த பிறகு…. வண்டியிழுப்பவனுகு லாட்டரி விழுந்த்துபோல் சடையப்ப பிள்ளை எழுத்தாளனாகி விட்டால், ? அதனால் நூலகர் சடையப்ப பிள்ளையை ஆதரித்தார்.
“யாருங்க ஒழுங்கா எழுதுறா அவனவன் முதுகு சொறிய கூட்டம் தேடுதான். நல்ல எழுத்தாளன்ன எழுதிட்டுச் சும்மா இருக்க வேண்டியது தான. படிக்கிறவனுக்குத் தெரியாதோ? இதுல விமரிசனம்னு புருடாவேற. ஐநூறு காபி கூட விக்காத பயலுக நான் உலகத்தையே மாத்திப் போட்டேன்னு சொன்னா? நூலகரின் கருத்தில் சடையப்பருக்கும் உடன்பாடு உண்டு. நாற்பது வருஷத்துக்கு மேலாக எல்லாக் குப்பைகளையும், கோமேதகங்களையும் படித்துக் கொண்டிருக்கும் அவருக்குத் தெரியாத எதையும் எந்தக் கொம்பனும் எழுதிவிட முடியாது.
தினமும் பகல் தூக்கத்தில் அவர் கனவில் எழுதித் தள்ளிய கதைகளைக் காவியங்களை நாவல்களை எவனும் எழுத முடியாது. இவரே எழுதவில்லையே? பிறகு எவன் மிஞ்சுவான். அவை பகல் கனவுகள் மட்டுமல்ல. கனவுகாணும் நேரத்தில் நிஜம். கனவில் பயணம் செய்யும்போது அதற்கு வெளியிலும் பயணம் செய்ய முடியுமா?
மணி மூன்றாகிவிட்ட்து. கொஞ்சம் லேட். ‘திருப்புகழ் வாரியார் விரிவுரை’யைத் தலைக்கடியில் வைத்துவிட்டு… தூக்கத்தைத் தழுவினார். இன்று முருகன் பக்கரை விசித்ரமணி, பொற்கலனை இட்டநடையில் வருவானோ?(சாட்சாத் அவனே தான்) அல்லது கோமதியம்மாள் விளக்குமாற்றை எடுத்துக் கொண்டு வருவாளோ?
அத்தியாயம் 2

ரொம்ப நாளாக சடையப்ப பிள்ளைக்கு ஆசை. ரொம்ப வருஷங்களாக என்று தான் சொல்ல வேண்டும். ஐம்பது வயசு வரை மனசுக்குள் மூடி வைத்திருந்த அக்கினிக் குஞ்சு இப்போது கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிவிட்ட்து. சிறிய மெழுகுதிரி போல் தொடங்கி…சொக்கப்பனையாக …அதைவிடப் பெரிதாக…
அவருடன் இட்லிக் கடையில் கூடமாட ஒத்தாசை செய்யும் முருகனுக்கு இது விபரீதமாகத் தோன்றியது. இந்த வயசில் இந்த ஆசையா? பெரிய எழுத்தாள்னாகனும்… சின்ன வயசில் பள்ளிக்கூட்த்தில பதினொண்ணாங்கிளாசில பெயிலானதுல இருந்து அவருக்குள்ள நுழைந்த வெறி. நான் எவ்வளவு பெரிய அறிவாளியாக்கும் என்று நிரூபிக்க…இந்தப் பரிட்சை எழவெல்லாம் என்னை ஒடுக்க முடியாது என்று அவருக்குள் ஒரு சங்கல்பம்.
“பதினொண்ணாங் கிளாஸ் பாஸ் ஆனதுங் கூட்டு வாங்க பேங்க்ல வேல போட்டுத் தாரேன்ன்னு பெரிய ஆபிசராக இருந்த முத்தையா பிள்ளை சொல்லிட்டுப் போனதில இருந்து உலகநாத பிள்ளைக்கு மகன் பேங்க்ல வேலை பாக்றதாக் கனவு. கழுத கெட்டாக் குட்டிச் செவருன்னு ஓட்டப்பிடாரத்தில இட்லிக்கடை போடவேண்டியதாச்சு. ஆசை இருக்குத் தாஸில் பண்ண..
முருகனுக்கு ஒரே குழப்பமாக இருந்த்து. ஐயா ஏதாவது பத்திரிக்கைல எழுதப் போய் மெட்ராஸுக்குப் போனா…கடைய என்ன செய்வாரு…? நமக்குத் தெரிஞ்சது இட்லிக்கடையும் இவரும் இந்த ஊருந்தான். சடையப்பரின் வீட்டம்மாவிடம் பேச்சுக் கொடுத்தான். …கோமதியம்மாளுக்கு அந்த குழப்பமில்லை. “அவுகளுக்கென்ன.. ஏதாவது பேசுவாக…ரொம்ப வருஷம்மா கேட்டுக்கிட்ருக்கேன். பிள்ளையில்லாத வீட்ல கிழவன் துள்ளி விளையாண்டானாம்” ஒரே வரியில் அவரைச் சிலுவையில் அறையும் தைரியம் யாருக்கு வரும்?
வெய்யில் கொளுத்திக்க் கொண்டிருந்த மே மாதம் பதின்மூன்றாம் தேதி ஓட்டப்பிடாரத்தில் பெரிய பெரிய எழுத்தாளர்களெல்லாம் கூடினார்கள். மாபெரும் இலக்கிய மாநாடு என்று தெருக்களில் மூன்று இடங்களில் துணிப் பேனர்கள் மறித்துக் கை காட்டின. பல வெற்றுச் சுவர்களில் ‘இலக்கியக் கூத்தர்’ கந்தசாமிப் பிள்ளையின் அறுபதாவது பிறந்தநாள் மற்றும் இலக்கிய விழா’ என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் எல்லோரையும் வரவேற்றன. கழுத்தில் மாலையுடன் கந்தசாமிப் பிள்ளை வருக வருக என்று தங்கப் பதக்கம் சிவாஜி மீசையுடன் வரவேற்று மிரட்டிக் கொண்டிருந்தார்.
சாப்பாடும் தங்குமிடமும் ஓசி. தமிழ் எழுத்தாளர்களுக்கு அது போதாதா. காக்காய்க் கூட்டமாய்ப் பறந்து வந்துவிட்டார்கள். ரொம்ப நல்ல புத்தகம்னா ஐநூறு பிரதி விற்றுவிடும் தமிழ் ஞான உலகின் பிதாமகன்கள்.
சடையப்ப பிள்ளைக்கு தானே தலைமை தாங்குவது போலிருந்த்து. கந்தசாமிப் பிள்ளையும் அவரும் வேறா என்ன? முப்பது வருடங்களுக்கு முன்னால் ஏதொ கையெழுத்துப் பத்திரிக்கையில் கொசுறுப்பணி ஆற்றியதில் வந்த பெயரையும் புகழையும் வைத்துக் கதையை ஓட்டிக் கொண்டிருந்தார் கந்தசாமிப் பிள்ளை. அவ்வப்போது புத்தகங்கள் படிப்பதும் உண்டு. அலமாரி நிறையப் புத்தக்ங்கள் இருந்தாலும் யாருக்கும் கொடுப்பது கிடையாது. படிப்பதும் கிடையாது என்பது அவரறிந்த ரகஸியம். தமிழ் எழுத்தாளர்கள், படிப்பாளிகள் பலர் திருடர்கள் – புத்தகத்தை மட்டுமல்ல உள்ளடக்கத்தையும் திருடுவார்கள் - என்பது மட்டும் காரணமல்ல. லட்சங்கள் கிடைத்தால் கொள்ளைக்கார்ர்கள் கூட்ட்த்தில் தலைமை தாங்கும் தகுதி உள்ள நல்லவர்கள் என்பது அவருக்குத் தெரியும்.
கந்தசாமிப் பிள்ளையின் இலக்கியப் பங்களிப்புகளைவிட சடையப்ப பிள்ளையின் இலக்கிய ஆர்வம் மிக அதிகம். ஆனால் இட்லிக்கடை வைத்திருப்பவர் திருவள்ளூவரே ஆனாலும் தமிழ் இலக்கிய உலகில் எடுபடமாட்டார் என்பது கந்தசாமிப் பிள்ளைக்குத் தெரியும். நகைக்கடைக்கார்ரும் துணிக்கடைக்கார்ரும் இலக்கியம் படைக்கும் போது நான் இட்லிக்கடையிலிருந்து இலக்கியம் படைக்க முடியாதா என்பது சடையப்பரின் வாதம்.
அவர் தமிழில் (பிறகென்ன இங்கிலீஷிலா? ஏன்யா வயித் தெரிச்சலக் கிளப்புதியோ) இதுவரை ஒன்றுமே எழுதியதில்லை என்பதோ, யாரும் அவரை எழுத்தாளர் பட்டியலில் சேர்க்கமாட்டார்கள் என்பதோ ஒரு பொருட்டல்ல. தினமும் மதிய உணவிற்குப் பின் அரைத்தூக்கத்தில் எழுதிக் குவித்த காவியங்கள் எத்தனை என்பது இந்த அலட்டல் சிகாமணிகளுக்குத் தெரியுமா?
இருபது பேர் தாடிக்கார்ர்கள். மூன்றுபேர் முழுவழுக்கை, ஏழுபேர் பேண்ட் ஜீன்ஸ், வேட்டி சிகர்ரெட் சகிதமாக ஐந்துபேர், ஜிப்பாவில் நான்கு, ஜோல்னாப் பையுடன் பதினொருபேர்… இன்னும் எந்த தனித்துவமும் இல்லாமல் இருபத்தி மூன்றுபேர். சாப்பாட்டுக் கணக்காக சடையப்ப பிள்ளை மனதில் இத்தனைபேர் வெளியூர்க்கார்ர்கள். உள்ளூரில் ஒத்தாசையாக பன்னிரண்டுபேர் – கணக்கெழுத அரைகுறையாப் படித்த எதிர்காலத்து மலர் பதிப்பக எடிட்டர்.
சடையப்ப்பிள்ளை கூடுதலாக நாலைந்து பேரை வைத்துக் கொண்டு வயிற்றுத் தேவைகளுக்குச் செய்த சிறந்த சேவையில் பட்ட படாத பாட்டில் இலக்கியவாதிகளின் கருத்துப் பறிமாற்றங்களைக் கேட்க முடியாததாகி விட்டது. மூன்று நாட்களிலும் வேலை வேலை வேலை. இலக்கியத்துக்குப் பெருநஷ்டம் என்று சடையப்ப பிள்ளை வருத்தப் பட்டார். வந்திருந்த எழுத்தாளர்களும் சடையப்ப பிள்ளையைச் சட்டை செய்யவில்லை. அவனுக எதோ வானத்தில இருந்து வந்த தேவதைகள் மாதிரி. எகத்தாளம் புடிச்ச பயலுக. எதையொ நினச்சுக்கிட்டு எதையொ சொல்லுவானுக. குத்தல் குறும்பு நக்கல் ஒண்ணும் குறைச்சல் கிடையாது.
கந்தசாமிப் பிள்ளையும் கூட்டத்துக்கெல்லாம் கூப்பிடாமல் எல்லோருக்கும் நன்றி சொல்லும்வாக்கில் சொல்லிவிட்டார். இவருக்குக் கொஞ்சம் வருத்தம். காசு எப்போது கிடைக்கும் என்பது கவலையாக இருந்தது. இலக்கியத்தைப் பற்றித்தான் பேசமுடியவில்லை. இட்லிக் காசாவது வந்து சேர வேண்டுமே? இன்னொருபக்கம் யாருமே தன்னை இலக்கியவாதியாகச் சொல்லாத்து மனதில் பெரிதாக உறுத்தியது. எழுதுறவன் தான் இலக்கியவாதியா? அவனுக என்னத்தப் படிக்கானுக? எப்பவுமே எழுத முயலாத, தெளிவுள்ள வாசகனைவிடப் படிக்க முடியுமா? அவன விட பெரிய இலக்கியவாதி யாரு? எந்தச் சார்பும் இல்லாம வாழ்க்கையப் பார்க்க முடியுமா? இவனுக எழுதிக் கிழிக்கதெல்லாம் படிச்சுத் தொலைக்கானே அது என்ன லேசான வேலையா? ஏதோ ஒரு ஞானமுள்ள வாசகனுக்காக எழுதறதா பீத்ரானுக..
நடுநடுவில் சாப்பாடு பறிமாறும் போது, அவர் காதில் விழுந்த்து. ‘சிறுகதைன்னா தொடக்கம் உச்சம்னு இருக்கணும்”
“ஆமா பெரிய இவனுக …வாழ்கையென்ன தொடக்கம் உச்சம் என்று கிரம்ம் வைத்துக் கொண்டா போகிறது”
“நாவல்னா விரிந்த கென்வாஸில் த்த்துவம் பேசவேண்டும்”
வாழ்க்கை த்த்துவமாகவா பூக்கிறது. நாவலில் வாழ்க்கை வெளிப்பட்டால் போதாதா? மற்றதை வாசகன் பார்த்துக் கொள்ள மாட்டானா? தாடிக்காரர்களும் மொட்டைத் தலையர்களும் ஜிப்பாக்கார்ர்களும் பயமுறுத்துவதினால் தான் நிறையப் பேர் படிப்பதில்லை. படித்தவன் எழுதுவதில்லை. ஏன் நான் கூட எழுதுவதில்லை. ஏதாவதொரு அளவு கோலை வைத்துக்கொண்டு, எந்த குரூப் எந்தநடை, நம்ம கூட வருவானா விசுவாசமா இருப்பானா என்று ரகளை பண்ணிவிடுவார்கள். இப்படி வெளுப்பவர்களிடம் தன்னைப் போன்ற அப்பாவிகளின் வார்த்தைகள் எடுபடாது என்றே சடையப்ப பிள்ளைக்குத் தெரிந்திருந்த்து.
மதியக் கனவுகளில் எல்லா வகைக் கதைகளையும் எழுதி, மற்றவர்களின் கதையைக்கூட்த் திருத்தி எழுதி – இது கனவில் தானே கைகூடும். – கிட்டும் சுகமே தனி. புதுமைப் பித்தனோ, கோணங்கியோ இன்றுவந்த …….வோ அவருடைய கனவுக் கத்தரிக் கோலில் எவரும் தப்பியதில்லை. இதுமாதிரிக் கிறுக்கன் எவனாவது உண்டா? என்று அவரே கேட்டுக் கொள்வதுண்டு. ஆனால் கந்தசாமிப் பிள்ளையவிட தான் பெரிய இலக்கியவாதிங்கிறதல சந்தேகம் இல்லை.
தனக்கும் விடிவு வராதான்னு கனவு கண்டு கொண்டிருந்தார். அவ்வப்போது சாயந்தரத்துக்கு மேல போகும் எல்லோருக்கும் கனவு மிட்டாய்கள் கிடைக்கும்.
ஒருநாள் தில்லையாடும் எம்பெருமான் திரிகால மூர்த்தி அவர் கனவில் வந்தார். “சடையப்பா நீ பாட்டுக்கு கனவு கண்டுகொண்டு இரு. நீ நினைக்க நினைக்க கணபதி எழுதிக் கொள்வான். வெற்றி உனக்கே” என்று அருள் கூறிச் சென்றுவிட்டார். சடையப்பருக்கு ஆச்சரியம். வேண்டுதல் வேண்டாமை இல்லாமலேயே எப்படி வந்தார் கடவுள். கனவில் வந்த்து சிவபெருமானா? சிவாஜி கணேசனா? கணபதின்னா ஆதிமூல கணபதியா எப்படி எழுதுவான். யார் அச்சடிப்பா? சடையப்பருக்குப் பெருங்கவலையாகிவிட்டது.
“எல்லாம் எனையாளும் ஈசன் செயல் என்று கனவு காணும் பணியைத் தொடர்ந்தார். அவ்வப்போது குறட்டையில் மாட்டிக்கொண்டு கனவுகள் சிதறிப் போனதும் உண்டு. நடுப்பகலில் ஹோட்டலின் பின்னறையில் பெஞ்சில் முருகன் அரைத்தூக்கத்தில் விழித்திருந்தான்.
எழுத்தாளனாகி ஊருவிட்டுப் போனார்னா கடையப் பாத்துக்கோடான்னு விட்டார்னா புண்ணியமாப் போகும். “வயசு வேற முப்பதாச்சு. ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு… இப்ப எவம் பொண்ணு தாரேங்கான்.. வீட்லயே குத்தவச்சிக்கிட்டு மண்ணாப் போவாளுக இட்லிக்கடை முருகனுக்கு பொண்ணு கிடையாதாம்… முத்துலகஷ்மிக் கழுத கூட நான் கண்டா முகத்தைச் சிலுப்புறா”
சடையப்ப பிள்ளை காலைல அஞ்சரை மணிக்கு குளிச்சிட்டு ஆறுமணிக்கு கடையில் டீப் போட ஆரம்பிச்சார்ன்னா … மதியம் ரெண்டு மணிவரைக்கும் இட்லி,வடை, காபி, சாப்பாடுன்னு ஓடும். மத்தியானம் இரண்டரை மணிக்கு மேல்தான் கொஞ்சம் தலை சாய்க்கிற நேரம். முருகன் சொல்வான் “நாய்த்தூக்கம்” பாதித் தூக்கம் பாதி விழிப்பு. கல்லாப் பெட்டியில் எத்தனைகாசு விழுது யாரு பேசுறா…. எல்லாங் கேட்கும். அது அவர் பகல் கனவு காண்ற நேரம். நாற்பது வருஷமாக் கண்டுக்கிட்டே இருக்காரு.
***************************
சடையப்ப பிள்ளையின் பகல் கனவுகள் 1

சடையப்ப பிள்ளை திடீரென்று என் வீட்டுக்கு வருவாரென்று எதிர்பார்க்கவில்லை. தெரு முனையில் நின்று கொண்டிருப்பதாகவும் வந்து அழைத்துப் போகும் படியும் செல்போனில் சொன்னார். எப்படி வந்தார்? என் நம்பர் எப்படிக் கிடைத்தது? என்றெல்லாம் யோசிக்க நேரமில்லை.
இரண்டாவது தளத்திலிருந்த என் வீட்டிலிருந்து கீழே சென்று நிற்கும் போது கொஞ்சம் தள்ளியிருந்த தொகுப்பு வீடுகளின் முன்னே நின்றுகொண்டிருந்தார். அவர் என்னைப் பார்க்கவில்லை. அழைத்தால் வந்துவிடுவார். எப்படிக் கூப்பிடுவது? “ஐயா, இங்க” நான் இரண்டாவது முறை கூப்பிடுவதற்குள் என்னைப் பார்த்துவிட்டார்.
வியப்பாக இருந்தது. நீண்ட வெண்தாடியும், தொப்பையும் முப்பது வருடங்களுக்கு முன்னிருந்தவாறே இருந்தன. தலை கலைந்திருந்த்து. கையில் ஒரு பெரிய சூட்கேஸ். வாங்கிக் கொண்டேன்.
நானொன்றும் பெரிய வீட்டில் இல்லையென்றாலும், அவர் முன்னரே தகவல் சொல்லாமல் வந்திருந்தாலும், சடையப்ப பிள்ளையை என்னால் மறக்க முடியாது. இப்போது குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு வகையில் அவரும் காரணம். புத்தகம் படிப்பதில், அதை விவாதிப்பதில் சிறுவயதில் எனக்குத் துணையாய் இருந்தவர்.
நகரத்தில் அனுபவிக்கும் அனைத்துத் துயரங்களோடும் கிராமத்திலிருந்த ஒரு பொன்னான உலகின் கற்பனையில் மூழ்கியிருக்கும் எனக்கு அவர் வந்தது கனவுலகிலிருந்து ஒரு நினைவுப் பொக்கிஷம் வந்தது போலிருந்தது. காலையில் வேலைக்குப் போகும் போது அவருக்கும் சேர்த்து சாப்பாடு வாங்கி வைத்து விட்டுப் போனேன். “இன்னைக்கு ரெஸ்ட் எடுங்க..சாயந்தரம் வந்து பேசுவோம்.. வேற ஏதாவது அவசர வேலையிருக்கா?” கேட்டேன். “ஒண்ணும் இல்லை” என்று மிக மெதுவாகச் சொன்னார். பொதுவாக சத்தம் போட்டு பேசும் அவர் குரல் அமைதியாக ஒலித்து என்னமோ போலிருந்தது எனக்கு. படியிறங்கிப் போகும் போது அவர் கண்களைக் கூர்ந்து கவனித்தேன். அசாதாரணமான கூர்மை தெரிந்தது. பஸ் ஏறி அலுவலகம் செல்லும் வரை அவரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன்.
என்னுடைய பதினைந்து பதினாறு வயதுப் பருவத்தில் அவர் கடையில் அமர்ந்து, நானும், சேகரும் பாலுவும் அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். அவ்வப்போது இட்லி வடை இவற்றின் விற்பனைக்கு நடுவில் சடையப்ப பிள்ளையும் கலந்து கொள்வார். முதலில், அவர் கடையில் டீகுடிக்கிறோம் என்பதனால் பேசுகிறார் என்று நான் நினைத்ததுண்டு. போகப் போகத்தெரிந்த்து. கதை கவிதைகளில் அவருக்கு ஆர்வம் இருந்த்து. எனக்கும் அவருக்கும் இருபத்தைந்து வருடங்கள் வயது வித்தியாசம் இருக்கும். ‘நம்ப கணபதியா பிள்ளையின் பேரன்” என்ற பாசம் இருந்திருக்கலாம். எனக்கும் புதிதாய் அம்மா அப்பாவுடன் குடிபோன சின்ன ஊரில் வசதியாக இருந்தது.
சாயந்திரம், ஆறுமணிக்கு வந்தேன். அவர் குளித்து முடித்து வழக்கம் போல கம்பீரமாக என் அறையில் எப்போதும் உடையக் காத்திருக்கும் நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்திருந்தார். ‘தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்று அந்தக்காலத்தில் சொல்வது போல் சொல்வார் என்று எதிர் பார்த்தேன். அமைதியாக இருந்தார். மாறியிருக்க்க் கூடும். முப்பது வருடங்களுக்கு மேலாகிவிட்ட்து. நானே எத்தனையோ மாறிவிட்டேன்.
நேற்றியிலிருந்த திருநீற்றுப் பட்டை அளவு குறைந்திருந்த்து. கைகளிலும் முப்பட்டை, தெரிந்தும் தெரியாத மாதிரித் தீட்டியிருந்தார்.. வெள்ளைச்சட்டையும், வேட்டியும் அணிந்து தாடியுடன் மிகத்தெளிந்த ஞானிபோலத் தெரிந்தார். துவைக்கப் பயந்து பல வண்ணச் சட்டைகளைப் பல நாட்கள் அணியும் எனக்கு அது எவ்வளவு கஷ்டம் என்று தோன்றியது. சட்டைக்குள் உருத்திராட்சக் கொட்டை தெரிந்த்து. இன்னும் விடவில்லை. கீழிரங்கி முருகன் கடையில் டீக்குடித்துவிட்டு நடந்து கொண்டே பேச ஆரம்பித்தோம்.
“தம்பி, சில கதைகள் எழுதியிருக்கேன். அதை வெளியிடணும்” அவர் சொன்ன வேகமும் அப்போது முகத்திலும் உடலிலும் ஏற்பட்ட பதட்டமும் ஏதோ தண்ணீருக்குல் மூழ்கிக் கொண்டிருப்பவர் மாதிரித் தெரிந்த்து. கண்களைப் பார்த்தேன் தீர்க்கமான அசாதாரணமான பார்வை.
“சரி முயற்சிப்போம்”
“நிறைய இருக்கு. நாலஞ்சு புத்தகம் தேறும். இப்பவே வேலையை ஆரம்பிச்சாத்தான் முடியும்.” அவருக்கு இந்த வயதில் என்ன அவசரம் என்று புரியவில்லை. எழுவது எழுவத்தைந்து வயதில். ஹூம் அவசரம் இருக்க்க் கூடும். ஏதாவது வியாதியோ? பயமாக இருந்த்து எனக்கு. சரியான வருமானம் இல்லாமல் திருமணம் குடும்பம் எல்லாவற்றுக்கும் பயந்து வாழும் நானொன்றும் அவ்வளவு பெரிய ஆசாமி அல்ல என்று இவருக்குத் தெரியுமோ? நான் என்னுடைய இயலாமையைச் சொன்னேன். இருபது வருடமாக இந்தப் பெரிய நகரத்தில் இருந்தாலும் நான் சிபாரிசு செய்த்தும் புத்தகம் வெளியிடும் அளவுக்கு எந்த புத்தக வியாபாரியையும் தெரியாது.
“தம்பி நீங்க மலர் பதிப்பகத்தில தான இருக்கீங்க?’
“ஆமா, அங்க சாதாரண வேலையாள்.” ஊரில் பெருமைக்கு எடிட்டர் என்று சும்மா சொல்லி வைத்திருந்தேன். அதை நம்பி வந்து விட்டாரோ? சில நேரங்களில் இப்படி நேர்ந்துவிடுகிறது. அவரும் என்னைப் போன்றே எழுத்தாளனாக வேண்டும் என்ற கனவில் வாழ்ந்தவர்தான். சின்ன வயதில் நகரத்துக்கு வந்து ‘வாழக் கற்றுக் கொண்டுவிட்டேன்.’ பசிக்காக கனவுகளை விற்றுவிட்டேன். பாவம் இவர் இத்தனை வருடங்களாக கனவுகளைச் சுமந்திருக்கிறார். கனவுகளின் பாரம் அதீதமானது. அவற்றைத் தூக்கிக்கொண்டு இத்தனை வருட்ங்கள் வாழ அமானுஷ்யப் பலம் வேண்டும். வந்திருக்கிறார்.
அவருக்குச் சமாதானமாகச் சொன்னேன். “கொஞ்சநாள் முயற்சிசெய்தால் நடக்கும்…எனக்கும் துணைக்காச்சு.”
“உங்க கடை.அதான் இட்லிக்கடை என்னாச்சு என்ன செஞ்சீங்க?
“அதான் நம்ப முருகண்ட்ட குடுத்திட்டேன்”
“அப்போ கோமதியம்மா?”
“அவ போயி நாலு மாதமாகுது”
அதிர்ச்சியிலிருந்து மீள ஒரு நிமிடம் ஆனது. மரணம் எப்போதும் எதிர்பார்க்க முடியாததாக இருக்கிறது. “ஐயோ எப்படி ஆச்சு?”
“போய்ட்டா திடீர்னு”
“வயசொண்ணும் அவ்வளவு இல்லையே?”
“ஊஹூம்” சொல்லிவிட்டுக் கலங்கினார்.
கொஞ்ச நேரம் இருவரும் அமைதியாக இருந்தோம். நிரந்தரமாக இருக்கும் எண்ணத்தில்தான் வந்திருக்க வேண்டும். இருபது முப்பது வருடங்கள் தாமதித்து விட்டாரோ? அலைய வேண்டியிருக்குமே? சின்ன வயசில வந்த என்னாலயே முடியல. எழுத்தாளன எவன் மதிக்கான் இந்த ஊரில.

சாப்பிட்டுவிட்டுத் இருவரும் தூங்கும் போது மணி பத்தாகிவிட்டது. அவர் குறட்டை சன்னமாகத் தொடங்கி கொஞ்ச நேரத்தில் பெரியதாக்க் கேட்ட்து. சீராக இல்லாமல், விட்டுவிட்டு. சில நொடிகளில் நின்று அமைதியானது மூச்சு. எனக்குச் சிறிது அச்சமாக இருந்தது. ஏதாவது ஆகிவிட்டால்? புதுச் சத்தத்தில் தூங்க முடியும் என்று தோன்றவில்லை.
இத்தனை வருடங்களாகி விட்ட்து. கதை கவிதை கனவு வேகம் எல்லாம் போய் மரக்கட்டையாய் இருந்து கொண்டிருந்த எனக்கு.. அவர் என்ன எழுதியிருக்கிறார் என்று படிக்க வேண்டும் என்று தோன்றியது. நம்முடன் இருந்த ஒருவர் நம்மைவிட நன்றாக எழுதினால் மனதில் வரும் பொறாமையும் பெருமையும், .. எனக்கும் அதுதானோ?
நான் சின்னவயதில் எழுதாத எதை எழுதியிருப்பார்? ஒரே ஊரில் ஒரே கடையில் உட்கார்ந்து அவருடன் ஊரிலிருந்த பலரைப் பற்றி அரட்டை அடித்துக் கொண்டிருந்த்தெல்லாம் ஞாபகம் வந்தது. அவரும் நானும் கனவு கண்ட காலங்கள். என்னை அதைப் படி இதை எழுது இப்படி எழுதுன்னு சொல்லிக் கொண்டிருப்பார். நான் வெற்றி பெற்றிருந்தால் அந்தப் பெருமையில் மகிழ்ந்திருப்பார். இப்போதென்ன? அவர் எழுத்துக்கள் வெளிவந்தால் எனக்குப் பெருமைதான்.
பதினொரு மணிக்கு அவருடைய சூட்கேஸை சத்தமில்லாமல் திறந்தேன். நானும் ‘எடிட்டர்’ என்பது ஞாபகம் வந்தது. உள்ளே ஒரு பிளாஸ்டிக் பையில் ஒரு பேப்பர் கட்டுத் தெரிந்தது. இருட்டில், இன்னும் இரண்டு கட்டுக்கள் தெரிந்தன. ஒரு கட்டை மட்டும் எடுத்துக் கொண்டு உள்ளறையின் கதவைச் சாத்திவிட்டு, காகிதங்களைப் பிரித்தேன்.
எனது கடந்த காலம், ஊர், மனிதர்கள் உள்ளே நினைவுகளாய் கோணல் கோணலான எழுத்துக்களில் வரிவரியாய் பக்கம் பக்கமாய்க் கிடந்தது. ரெடிமேட் துணிக்கடையில் ஒவ்வொரு சட்டையாய் எடுத்துப் பார்ப்பது போல் படிக்க ஆரம்பித்தேன். எது கதை எது நினைவு எது பொய் எல்லாம் நானாகத்தான் தெரிந்தேன் இருந்தேன்.
மறக்க முடியாத கனவு

கமலா மதுரையில் இருந்து கிளம்பி இரண்டரை மணிநேரமாகிறது, இன்னும் ஊர் வந்த பாடில்லை. கரிசல் நிலங்கள் சன்னல் வழியே பின்னால் சென்று கொண்டிருந்தன. தூரத்தில் ஏதோ ஒரு ஊர் தெரிந்தது. மூன்று மணி நேரமாகும் என்று அவர் சொல்லியிருந்தார். இரண்டு மணி நேரத்துக்கு மேலாகிவிட்டது. “இத்தனை வருடங்களுக்குப் பிறகு அவள் வீட்டுக்கு ஏன் போகிறாய்? வேறு யார் வீட்டு விலாசமாவது வாங்கித்தருகிறேன். இல்லை என்றால் போய் வேலையில் ஜாயின் பண்ணிவிட்டு பிறகொருநாள் அவள் வீட்டுக்குப் போ. இது தேவையா இப்போது?” என்று கேட்டார். அவருக்கும் தெரியும். சொன்னாலும் கேட்கப் போவதில்லை. அவள் ஒரு முடிவெடுத்தால் அதுதான். ரிடையராகி வீட்டில் இருப்பவன் அவள் பின்னாலே ஓட முடியுமா?”.
ஒரு வேகத்தில் கிளம்பிவிட்டாள். நாற்பது ஆண்டுகளுக்கு முன் மனதில் ஆழமாகப் பதிந்திருந்த காட்சிகள் மீண்டும் மீண்டும் நிழலாடியிருக்கின்றன. அவளுக்குக் பாலாம்பாளைப் பற்றித் தோன்றியிருக்காது. சாம்புவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, பக்கத்திலிருந்த கௌதமி ஒரு ஆர்வத்தில் யாரைப் பற்றிப் பேசினீர்கள் என்று கேட்டாள். பாலாம்பாளைப் பற்றிச் சொன்னதும் அவளது கேள்விகள் அதிகமாகி விட்டன. கமலாவால் பதில் சொல்ல முடியாத கேள்விகள். கல்லூரியில் பெண்கள் உரிமைகளைப் பற்றிப் பேசுவது அவள் ஒருத்திதான் என்று கௌதமிக்கு பாடம் எடுக்கும் ஆங்கில பேராசிரியை சொல்லியிருந்தாள். பாலாம்பாளை மறந்து ஐம்பது வருடம் கழித்து பிரச்சனை ஆக்கியவள் அவள். முகம் தெரியாத அவளுக்காக வருத்தப்பட்டாள். கமலாவும் அவளுடைய அப்பாவும் மற்றவர்களும் இழைத்தது பெரிய கொடுமை என்று கோபப்பட்டாள். கமலா தனக்குத் தெரிந்த கொஞ்ச நஞ்ச விஷயத்தைச் சொன்னாள். கௌதமி திருப்தி அடையவில்லை. “எனக்கும் இருபது வயதாக வில்லை. ஆனாலும் எத்தனை கேள்வி கேட்கிறேன். அதெல்லாம் உங்களுக்கு அந்த வயதில் தோன்றவில்லையா?” என்று மடக்கினாள். “நாங்களெல்லாம் உங்களை மாதிரி இல்லடி வெறும் பேக்குகள்” என்று சமாளித்தாலும் விடவில்லை. இந்தக் காலத்துப் பெண்களிடம் பேச முடியாது. அவளை சமாதானம் செய்வதற்கும் போதும் போதுமென்றாகி விட்டது. அவள் கேட்ட கேள்விகள் கமலாவின் மனதில் பதில் தேடி குடைய ஆரம்பித்தன. பாதிவரை படித்து, பின் எங்கோ தொலந்து போன மர்மக்கதையின் முடிவைத் தெரிந்து கொள்ள விரும்பியது அவள் மனசு.
கிளம்பியது தவறோ என்று சில நேரம் தோன்றியது. கேட்பதற்கோ பார்ப்பதற்கோ சகிக்க முடியாத நிலையில், ரொம்ப ஏழ்மையில் அல்லது கொடிய வியாதியோடு பாலாம்பாள் இருந்தால், கமலாவின், கௌதமியின் நிம்மதி போய்விடும். வாழ்வில் மற்றவர்களைப் பாதிக்கும்படி எத்தனையோ பாவங்கள் செய்கிறோம். பின்விளைவுகளை பார்ப்பதில்லை. ஒருவேளை பார்க்க நேர்ந்தால் அந்தப் பாவங்களைச் செய்ய மாட்டோமோ என்னவோ?. எப்போதோ பாலாம்பாளுக்கு நேர்ந்த விபத்தின் விளைவைத் தங்களால் தாங்க முடியுமோ என்று கமலாவுக்கு எழுந்த சந்தேகம் குடைந்து கொண்டிருந்தது. இந்த வயதில் யாருக்கும் உதவி செய்யும் நிலையில் அவள் இல்லை. திடீரென்று வேண்டாத சிக்கலில் மாட்டிக் கொண்டேனோ?. அவள் செய்தது எதுவுமிலலை என்றாலும், செய்யாமல் விட்டதைப் பற்றி கௌதமி பேசிக் கொண்டிருந்தாள். கண்முன் நடந்தது. அவளால் முனகுவதைத் தவிர ஒன்றும் செய்திருக்க முடியாது. நாற்பத்தி இரண்டில் ஒரு பெண்ணின் வாழ்வை மாற்ற அதுபோதாது. இத்தனை வருடங்கள் போராடியபின் அவளுக்குத் தெரிந்தது. அந்தப் பெண்ணுக்கு, பதினாறு வயதில் என்ன புரிந்திருக்கும்?
கமலா, பாலம்பாள் பாட்டியைப் பார்த்தாலும் அடையாளம் தெரியாது. உறவுக்குப் பாட்டி என்றாலும் பதினைந்து-இருபது வயதுதான் வித்தியாசம். இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அது கூட ஞாபகமில்லை. முத்தூர் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ பிடித்துப் போவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஊரை வேடிக்கை பார்த்துக் கொண்டே போனாள். இந்த ஊருக்கு மாற்றலாகி விட்டது. நாளை காலையில் வேலையில் சேரவேண்டும். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் சென்னையிலிருந்து இவ்வளவு தூரம் மாற்றி விட்டார்கள். முப்பத்தைந்து வருஷமாய் சென்னையில் இருக்கிறாளாம். கண்டிப்பாய் போகவேண்டும் என்று ஆகிவிட்டது. இந்த தெரியாத ஊரில் யாராவது தெரிந்தவர் இருந்தால் நல்லது. அதுவுமில்லாமல் தனியாக இருக்கவேண்டும். யாரோ சொந்தக்காரி பக்கத்தில் இருந்தால் நல்லதுதானே.
அங்கங்கே நிறுத்தி, யார் யாரிடமோ கேட்டுக்கொண்டு, ஒரு பழைய வீட்டின் முன்னால் ஆட்டோக்காரன் இறக்கிவிட்டான். வாசலின் இருபுறமும் மரங்கள். ஒரு வேப்பமரம். இன்னொன்று என்னவென்று தெரியவில்லை. இடுப்பளவு சுவருக்குள் இருந்த சின்ன வீடு மழையில் நனைந்து கருப்பும் வெண்மையும் வழிந்து போல் கறை படிந்திருந்தது. வெள்ளையடித்துச் சில வருடங்களாவது ஆகியிருக்கும். சின்ன இரும்பு கேட்டைத்திறந்து உள்ளே போய் வாசலில் நின்றாள். முன் அறையில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த வயதான மாது நிமிர்ந்து, உரக்கக் கேட்டாள் “யாரு வேணும்?’
“பாலாம்பாள் இருக்காங்களா?”
சட்டென்று தன்னைத் தேடி வந்தது யாரென்று இனங்காண முடியாமல், குரலைத் தணித்துக் கொண்டு கேட்டாள் “நீங்க யாருன்னு…தெரியலையே”….
“நான்..” கொஞ்சம் யோசித்துத் தடுமாறி பின்னர் மெல்லிய குரலில் “மணியண்ணாவோட பேத்தி” அதற்குமேல் என்ன சொல்வது ?. புரிந்திருக்குமா? “ஞாபகம் இருக்கா? கமலா?” என்று கேட்டாள். பாலாம்பாள் யோசித்தாள் “உள்ள வாங்க” நாற்காலியை இழுத்துப்போட்டு உட்காரச் சொன்னாள். அவளுக்கு எண்பது வயதிருக்கும். முகச்சாடை கொஞ்சம் இருந்தது. சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கிறாள். முகத்திலும் கைகளிலும் சுருக்கங்கள். கன்னங்களில், நெற்றியில், கழுத்தில் சதைகள் சின்னச் சின்ன மடிப்புகளாய்த் தொங்கிக் கொண்டிருந்தன. மெல்ல ஞாபகப்படுத்தும் விதமாக “மெட்ராஸ்ல மணியண்ணா வீட்டுக்கு வந்தது..” பாலாம்பாளுக்கு நினைவு வந்திருக்க வேண்டும். கண்கள் அசையாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் நினைவு எங்கோ இருந்தது. கொஞ்ச நேரமாகியும் ஒன்றும் பேசவில்லை. நடந்த நிகழ்ச்சிகளின் கனம் அவளை அழுத்திக் கொண்டிருக்கவேண்டும். கமலாவுக்கு ,வருத்தமாகவும், படபடப்பாகவும் இருந்தது. பாலாம்பாளின் சஞ்சலத்தை, மறந்து போன கவலைகளை மீண்டும் உசுப்ப்பிவிட்டேனோ? வெளியில் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்தாள்.
பாலாம்பாளுக்கு மணி என்ற சுப்பிரமணியன், ஞாபகம் வந்தது. நல்ல நெட்டை. அவர் நிமிர்ந்து நின்று அவள் பார்த்த்தில்லை. எப்போதும் படுக்கைதான். கிட்னியில் ஏதோ நோய். மணவறையில் மட்டும் கொஞ்சநேரம் உட்கார்ந்திருந்தார். முகத்தில் வலியைத் தாங்கிக் கொண்டிருக்கும் மெல்லிய முனகல். அவருடன் இருந்த சிலமாதங்களில் சிரித்துப் பார்த்ததில்லை. அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள். இவ்வளவு நேரம் ஒன்றும் பேசவில்லை என்று நினைத்தோ என்னவோ, அமைதியான குரலில் “எப்ப வந்தீங்க,? என்று கேட்டாள். “நீங்க சென்னைல தான இருந்தீங்க..?” முகம் சிவந்திருந்தது. தலையை ஒருபுறம் சரித்துக் கொண்டு பேசினாள். மிகவும் கஷ்டப்பட்டு உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டதில் பேச்சுத் தடுமாறியது.
“இப்ப முத்தூர் டிரான்ஸ்பர் ஆகிருச்சு. . ரெண்டு வருஷம் முந்தி. அங்க ஒரு பஜனையில நம்ப சாம்புவைப் பார்த்தேன். அவர்தான் அட்ரஸ் கொடுத்தார். இப்பத்தான் இங்க வர முடிஞ்சது”
பாலாம்பாளுக்கு ஒன்றும் புரியவில்லை. நாற்பது வருடம் கழிந்த பின் அந்த வீட்டிலிருந்து பார்க்க வந்திருக்கும் ஒருத்தி. என்ன நினைத்து வந்திருப்பாள்?. அப்பா என்னை அங்கே போக விடவில்லை என்றாலும் அவர்களிடமிருந்து ஒரு வார்த்தை, தகவல் இல்லை. பதினைந்து வயதுப் பெண்ணைப் பற்றி நினைத்ததில்லையா? ஒரு பெண்ணின் வாழ்வைப் பாழாக்கி விட்டோமே என்ற பரிதாபம் கூடவா கிடையாது. சென்னையிலேயே இருந்திருந்தால் பிராமண வீட்டு ஆச்சாரங்களோடு கௌரவமாக வாழ்ந்திருக்கலாம். வீடு தேடி வந்தவளிடம் என்ன பேசுவதென்று புரியாமல் தான் ஏதோ கேட்டாள்.
”எந்த டிபார்ட்மண்ட்ல வேலை பார்க்கிறீங்க?”
“போஸ்டாபீஸ்ல. பிரமோஷன்ல போட்டாங்க. ரிடையராக ஒரு வருஷந்தான் இருக்கு. வேற வழியில்ல ஒரு வருஷம் இந்த ஊர்ல இருந்து ஆகணும். வேற எங்கயாவது போறத விட உங்காத்துக்கு வர்றதுதான் எனக்கு விருப்பம். சின்ன வயசில இருந்தே அடிக்கடி உங்கள நினச்சுப்பேன். இருக்கீங்கனு கேள்விப்பட்டுத்தான் வந்தேன். இதுக்கு முன்னால பார்க்க முடியல. ஒரு தயக்கம் இருந்தது. சான்ஸ் கிடைச்சதும் ஏன் விடுவானேன்னு. என் மேல வருத்தம் இருந்தா மன்னிச்சுக்கோங்கோ” சில நேரங்களில் மரியாதைக்காகச் பொய் சொல்ல ஆரம்பித்து, அதை நம்பவும் செய்கிறோம்.
“இவ்வளவு பாந்தமா பேசறவ கிட்டே கோபம் எப்படிப் படறது?. ”நீங்களும் அப்போ சின்னப் பொண்ணுதான. எல்லாந் தலைவிதி. யாரையும் குத்தம் சொல்ல முடியாது. சரி அதெல்லாம் விடுங்கோ. எல்லாருமா சேந்து என் வாழ்க்கைய பாழாக்கிட்டா முதல் காரணம் எங்கப்பா. மத்தவாளப் பத்தி என்ன சொல்ல?” அவள் கண்ணில் இழந்து விட்ட ஒரு உன்னதவாழ்வின் காட்சிகள் தெரிந்தன.. கண்கள் எங்கோ பார்த்து நிலைகுத்தி நின்றன. அவள் கண்களிலிருந்து வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டாள். கமலாவுக்கும் தொண்டை அடைத்தது.
மீண்டும் அமைதி நிலவியது. கொஞ்சங் கொஞ்சமாக பொது விஷயங்களைப் பேசினார்கள். சின்ன வயதில் ஏமாந்து விட்டோம் என்ற கசப்பு அவள் முகபாவத்தலும் வார்த்தைகளிலும் வெளிவந்தது. அதை மீறி இவ்வளவு நாள் வாழ்ந்திருக்கிறாள். தோற்கடிக்கப்பட்டவன் வெறியுடன் விளையாட்டைத் தொடர்வது போல.
பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனது தெரியவில்லை. அடுத்த வாரம் கொஞ்சம் சாமான்களை எடுத்துக் கொண்டு வருவதாக சொன்னாள். அதற்குள் பக்கத்திலிருந்த ஒருவீடு காலியாகிவிடுமென்றும் அதில் வாடகைக்கு கமலா இருந்து கொள்ளலாமென்றும் பாலாம்பாள் உறுதியாகச் சொன்னாள். தனது சொந்தக்காரி, பிராமணத்தி, அரசு அதிகாரி, பக்கத்தில் இருப்பது பாலாம்பாளுக்குப் பெருமையாக இருக்கும். அதே நேரத்தில் பழைய விஷயங்களைக் கிளறிவிட்டு, இந்த ஊரில் மரியாதையாக வாழ்வதை கெடுத்துவிடுவாளோ என்ற பயமும் கூடவே வந்தது.
மாலையில் கமலா மதுரைக்குக் கிளம்பிவிட்டாள்.
கமலா அடுத்தமுறை வரும்போது கணவனுடன் வந்தாள். பாலாம்பாள் சொன்னபடி எதிர் வரிசையில் கொஞ்சம் தள்ளி ஒரு காம்பவுண்டு வீட்டில் குடிவந்து விட்டாள். தினமும் காலையில் அலுவலகம் கிளம்பும் போது பாலாம்பாள் தன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருப்பாள். கண்களில் ஒரு ஏக்கம் தென்படும். இப்படி நானும் இருந்திருக்கலாமே.
மாலையில் ஒருநாள் அலுவலகத்திலிருந்து வரும் போது, பாலாம்பாள் வீட்டில் அவளை விட வயதான பெரியவர் நின்று கொண்டிருபதை கமலா பார்த்தாள். புருஷனாக இருக்கவேண்டும். அடுத்தநாள், அலுவலகம் போகும் போது, பாலாம்பாள் தெருவில் வந்து மெல்லச் சொன்னாள் “நீங்க ‘எனக்குப் பேத்தி முறை வேணும்னு எங்க வீட்டுக் காரர்ட்ட சொல்ல வேண்டாம். தூரத்துச் சொந்தம்னு நான் சொல்லி வச்சிருக்கேன், வேற மாதிரின்னு தெரிஞ்சாக் கோபப்படுவார் என் சொந்தக் காரங்களைக் கண்டாலே அவருக்குப் பிடிக்காது.” அதற்குப் பிறகு அவரில்லாத நேரங்களில்தான் கமலா பாலாம்பாள் வீட்டுக்குப் போனாள். போனபின் அவரிருப்பது தெரிந்தால், சட்டென்று கிளம்பி விடுவாள்.
உயர்ந்த ஜாதிப் பெண்ணை காதலிக்கும் போது அவள் ஜாதிக்காரனெல்லாம் நெருக்கமாகத் தெரிகிறது. அவர்கள் அவனை மனதுக்குள் கறுவிக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை என்று தோன்றுகிறது. அவளே பொண்டாட்டி ஆனபின் அவள் ஜாதி ஆண்கள் ஏதோ இளக்காரமாகப் பார்ப்பது போலத் தெரிகிறது. ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது. பொண்டாட்டி மீது சந்தேகம் வருகிறது. சின்ன பயம். ஜாதி அபிமானத்தில் புருஷனை ஒதுக்கி விடுவாளோ? ஒரே ஜாதியில் திருமணம் முடித்தால் கூட பொண்டாட்டி வீட்டுக்காரன் யாராவது வந்துவிட்டால், கணவன் மனதில் ஒரு சலனமும் குறுகுறுப்பும், எதாவது அள்ளிக் கொடுத்துவிடுவாளோ என்ற சந்தேகமும் வந்துவிடுகிறது. புருஷன் வீட்டுக்காரன் எவராவது வந்துவிட்டால் பொண்டாட்டிக்கும் இதே சந்தேகம். இப்படியெல்லாம் இல்லாவிட்டால் கூட சண்டை வரும். எதாவதொரு சாக்கு வேண்டும் சண்டையிட. குடும்பம் என்பதே ஆணுக்கும் பெண்ணுக்குக் உள்ள ஆதிக்கப் போட்டிதான். கமலாவும் அதை அனுபவித்தவள். கொஞ்சம் தூர ஒதுங்கியிருந்தாள்.
ஒருநாள் வீட்டில் நுழையும் போது பாலம் ஏதோ பூஜை செய்து கொண்டிருந்தாள். முடிந்து வரும் வரை கமலா அங்கே கிடந்த வாரப் பத்திரிக்கைகளை படித்துக் கொண்டிருந்தாள். “என்ன பூஜையெல்லாம் பலமாயிருக்கே?”
“ஆமா என் பக்திதான் என்னை இதுவரை காப்பாத்திண்டு இருக்கு. இல்லைன்னா எப்படி இவ்வளவையும் தாண்டி வரமுடியும்.இந்தாங்கோ, குங்குமம் இட்டுக்கோங்கோ?” அவள் குரலில் தன் பக்தியைப் பற்றிப் பெருமிதமும் பகவான் அருள்புரிந்தார் புரிவார் என்ற நம்பிக்கையும் தெரிந்தது. வாங்கி இட்டுக் கொண்டாள். “நான் பூஜ புனஸ்காரமெல்லாம் எப்பவாவது தான். அதுவும் மாமியார் இருந்த வரைக்கும் அவா சொன்னதுக்காக செய்வேன். இப்ப நேரமே கிடையாது ஆபிஸ் போய்ட்டு வர்றப்பவே அடுத்து என்ன வேலன்னு செய்ய ஆரம்பிச்சிருவேன்.”.
பிராமணத்தியாக வாழ்பவளுக்கு இந்தக் காலத்தில் பூஜை புனஸ்காரம் ஒரு சடங்குதான். சடங்குக்காகவே சடங்கு. அவைகளைச் செய்யாவிட்டாலும் சமூகத்தில் மரியாதை, ஜாதிப் பெருமை ஒன்றும் குறையப் போவதில்லை. சடங்குகள் முக்கியமில்லை என்று பகுத்தறிவு பேசலாம். எதுவும் குறைந்துவிடாது.
பாலாம்பாளுக்கு அப்படி அல்ல. பூஜை புனஸ்காரங்கள் பண்ணினால் அவளுக்கு எங்கிருந்து வந்தோம் என்பது ஞாபகம் இருக்கும். பெரிய குடும்பத்தில், பிராமண ஜாதியில் பிறந்தவள் என்பதை அடிக்கடி நினவூட்டிக் கொள்வாள். பூஜை புனஸ்காரங்களை விட்டுவிட்டால் தன்னை மற்றவர்கள் கீழ்ஜாதிக்காரி என்று தவறாக நினைத்துவிடக்கூடும். நான் கீழ்ஜாதிக்காரி இல்லையே. அவளுடைய சொந்தக்கார்ரகள் பெரிய இடங்களில் ஆச்சாரத்தோடு இருக்கிறார்கள். பழைய காலத்து பேச்சில் சொன்னால், அவள் ஜாதி கெட்டவள். பிறந்த ஜாதியும், பிறந்த வீடும் சமூகத்தில் மேல் நிலையில் இருக்கும் போது அதோடு இணைத்துக் கொள்ளத்தான் வேண்டும். தாழ்ந்த ஜாதியில் கல்யாணம் பண்ணிக் கொண்டதால் தான் தாழ்ந்து போய்விடவில்லை என்பது எல்லோருக்கும் புரியவேண்டும். அவள் மனம் முழுவதும் நிறைந்திருப்பது அதுதான். நான் மேலானவள். சாக்கடையில் விழுந்துவிட்டேன். ஆனாலும்……
பாலாம்பாளும் ரிடையரானபின் பூஜை புனஸ்காரங்களை அதிகரித்து விட்டாள். பிள்ளைகளும் திருமணம் முடிந்து அவர்கள் வெளியூர்களுக்குப் போனபின், வீட்டில் சும்மா இருக்க முடியாமல் பூஜை செய்ய ஆரம்பித்தாள். அவள் வயதுப் பெண்களிடம் இயல்பாகவே அதற்கு பெருமிதம் இருந்தது. நான் உன்னைவிட பெரிய பக்தை என்று காட்டிக் கொள்வது ஒரு போட்டிதான். இன்னைக்கு வரலக்ஷ்மி, பூஜை, இன்னைக்கு அம்மாவாசை, என்று பெருமாள் கோயில்ல, பிள்ளையார் கோயில்ல அந்த பூஜை இந்த பூஜை என்றும் பலவேறு சாமி பெயர்களும், நாளின் பெயர்களும், பூஜையின் பெயர்களும் உதிர்த்துக் கொண்டிருப்பதில் திருப்தி. கமலாவுக்கு இதிலல்லாம் ஈடுபாடு இல்லாவிட்டாலும், ஏற்கனவே தீர்மானித்தபடி பாலாம்பாளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். தன்னைப் போல் ஒருத்தி, இந்தச் சமூகத்தில் வேறு வகையான வாழ்க்கை அமைத்துக்கொண்டிருந்தால், எப்படி இருப்பாள் என்பது கமலாவுக்கு சுவாரஸ்யமாக இருந்தது.
அவளையும் சின்ன வயசில் ஒருவன் காதலித்தான். அவளுக்காக எதுவேண்டுமானாலும் செய்திருப்பான். அந்த வயதில் அவளுக்கு அவன் இல்லாவிட்டால் உலகமே மறைந்துவிட்டது போலிருந்தது. ஜாதி வேறு என்று அம்மா அப்பா யாரும் நடக்கவிடவில்லை. இருபத்தி நாலு மணிநேரமும் காவலிருந்தார்கள். அவன் எங்கே எப்படி இருக்கிறானென்று தெரியவில்லை. ஒவ்வொருவரும் தாங்கள் நினைத்தபடி வாழ்வை மாற்றி எழுதிக் கொள்ளமுடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அவ்வப் போது கதை எழுதுவது போல சம்பவங்களையும், சந்தர்ப்பங்களையும் மாற்றிக் கொண்டிருந்தால் . . . . வாழ்க்கை என்னவோ ஒருமுறைதான் எழுதப் படுகிறது. அது சரியில்லை என்றால் நடந்ததை திருத்தி எழுத முடியாது. வரப்போவதை வேண்டுமானால் யோசித்து முடிவெடுத்துக் கொள்ளலாம்.
பாலாம்பாளும் இதே போல தன்னைப் பற்றி இப்படி ஒரு கனவு கண்டு கொண்டிருந்தாள். கமலாவைப் பார்க்கும் போதெல்லாம் அவள் கனவின் திரி தூண்டப்பட்டு பெரிய ஜோதியாக எரிந்தது. கமலாவைப் போல் தானும் படித்து அதிகாரி ஆகியிருக்கலாம். அதில் அவள் முகத்தில் தெளிவும், உறுதியும் தெரியும். அன்றைக்கு அப்படித்தான் இருந்தாள். அப்பா மட்டும் கெட்டவனாக இல்லாமல்… எல்லாமே மாறிப் போயிருக்கும்.
பேச்சுவாக்கில் கமலா கேட்டாள் “என்ன, நீங்க ஜானகி மாமி வீட்ல சுமங்கலி பூஜைக்கு வரலயா? மாமியைக் கேட்டேன். கூப்பிட்டேன்னு சொன்னாங்களே.” பாலாம்பாளின் முகம் சுருங்கிவிட்டது. கோபத்தில் மூக்குச் சிவந்து, ஏதோ வேகமாகச் சொல்ல வந்தவள் எதுவும் சொல்லவில்லை. சுமங்கலி பூஜை செய்ய தகுதி இல்லை என்று ஜானகி முடிவு கட்டிவிட்டாள். அதுதான் கூப்பிடவில்லை. கமலாவுக்கும் பழையகதை தெரியும். “பிராமணத்தி அவ புத்தியைக் காட்டிட்டா”. அவள்மீது எவ்வளவு தவறுகள் இழைக்கப் பட்ட போதும், அவள் ஒருமுறை விதவையானவள் என்பது சடங்குகளின் புனிதங்களுக்கு முன்னால் மாறவில்லை. பாலாம்பாள் தன்னை ஒரு விதவையாக இப்போது கருதவில்லை. இரண்டாவது மணம் முடித்தவனுடன் பூவும் பொட்டுமாகத்தான் வலம் வந்தாள். அன்று பாலாம்பாள் சரியாக முகம் கொடுத்துப் பேசாதது கமலாவுக்கு வருத்தமாக இருந்தது. தவறு செய்துவிட்டாள். “அது ஒண்ணும் சரியா நடக்கல. பூஜாரி ஏதோ கடனுக்குச் செய்தான். எனக்கு இதுலல்லாம் ரொம்பவும் நம்பிக்கை கிடையாது. அதற்கப்புறம் அவள் ஒன்றும் பேசவில்லை. ஜானகி மாமி பயந்திருப்பாள். சுமங்கலி பூஜை செய்யும் போது பாலம்பாளைக் கூப்பிட்டு பகவத் காரியத்ல ஏதாவது தப்பாயிடுத்துன்னா? சுமங்கலி பூஜை செய்றது வீணாகி விடுமே. கமலா பழைய கதை கேட்க வந்தவள். இன்னொருநாள் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்
கமலா போனபின் பாலாம்பாள் யோசித்துப் பார்த்தாள். பூஜைகள் செய்தாலும், சைவச்சாப்பாடு சாப்பிட்டாலும், பிள்ளைகளை அப்படியே வளர்த்தாலும் அத்தனை பிராமண ஆச்சாரங்களையும் கடைப்பிடித்தாலும் யாரும் பிராமணத்தி என்று ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு முறை ஜாதியின் விதிமுறைகளை மீறீனால், அதன் தண்டனை கடைசி வரை வந்தே தீருகிறது. யாரும் எழுதாத, ஆனால் எல்லாரும் பின்பற்றுகிற விதி. ஆனால் சிறுவயதிலிருந்து அவளுக்குக் கற்பிக்கப்பட்ட நம்பிக்கைகளை, சடங்குகளை அவளால் மறக்க முடியவில்லை. மறக்க விரும்பவுமில்லை.மூன்றாம் தெருவிலிருக்கும் “மாதவியும் பூஜைக்கு வந்தாளாம். அவள் புருஷன் இருக்கான். பலவட்ரயா அலையிறா. அவபூஜையில கலந்துக்கலாம். தேவடியாள் போகலாம் அவள் போகக்கூடாது. இதையெல்லாம் யார்ட்ட கேட்பது? பாரம்பரியம், கலாச்சாரம், அனுஷ்டானம் எதேதோ சொல்லி மனுஷங்கதான் கஷ்டப் படுத்தறா. பகவான் மீது இவ்வளவு பக்தியிருந்தும் இப்படியெல்லாம் அவமானப் பட வேண்டியிருக்கிறது. திருவோண, மூல நட்சத்திரமும் அவள் விதியும்… படுவதெல்லாம் படவேண்டியிருக்றது. இப்பல்லாம் மாறிடுத்துங்றா. ஆனா என்னப் போல கஷ்டம் பட்டத கடந்து போனத மாத்த முடியுமா? கடைசியில் எனக்கென்ன என் சாமி சத்யசாயி பாத்துக்குவார்.” என்று அவ்வப்போது எழும் மனக்குழப்பங்களுக்கு முப்பது வருடங்களாக அமைதி தந்து கொண்டிருக்கும் சாயிபாபாவை மீண்டும் ஒருமுறை நினைத்து வணங்கிக்கொண்டாள். அவள் மகன் சொன்னது அப்போது ஞாபகம் வந்தது. சாய்பாபா என்ன கடவுளா?
சங்கராச்சாரியார் மடத்தில பெண்களையும் விதவைகளையும் சரியா மதிக்கிறது கிடையாது. சனாதனப்படி புனிதங்களைக் கடைப்பிடிக்கிறதனால, வாழ்க்கையின் புதிய சிக்கல்ல மாட்டிக்கிறவங்களுக்கு அங்கே இடமில்ல. படித்த வசதியுள்ள, விஷயமறிந்த ஆனால் பக்தியையும் நம்பிக்கையையும் விடமுடியாத பாரம்பரியப்படி மடத்தில் சரியான பெருமித்ததுடன் சேர முடியாதவங்கள்லாம் சாய்பாபாட்டப் போய் சரணாகதியாகிர்றாங்க. அங்கயும் எடம் இல்லாதவங்க இன்னும், மேல்மருவத்தூர், யோகி, புது சாமியார் பெண்சாமியார் என்று கண்டுபிடித்து வைத்துக் கொண்டு மனசைச் சாந்தப்படுத்திக்கிறாங்க” அவன் சொல்வது சரியாகவும் அதே நேரத்தில் தவறாகவும் பட்டது. அவன் நாத்திகம் பேசறதனால பார்வையில கோளாறு வந்திருது. இப்படியெல்லாம் மனுஷங்களுக்கு அமைதி கிடைக்குதுன்னா கிடைக்கட்டுமே. ஒண்ணும் கேட்டுப் போகலையே? மனசு கஷ்டம் குறையறதாங்கிறதுதான் நமக்கு வேண்டியது.
*** * ***
கமலா வீட்டுக்குள் நுழையும்போது, பாலாம்பாள் டி.வியில் சங்கீதம் கேட்டுக்கொண்டிருந்தாள். “வாங்க.. வா.. நல்ல சங்கீதக் கச்சேரி போட்டுட்ருக்கான். …கேப்பயா? கேளு ரொம்ப சொகமாப் பாடறா” கமலாவுக்குக் சங்கீதம் கேட்கும் பழக்கம் உண்டு. உள்ளறையில் போய் உட்கார்ந்தாள். ‘நானொரு விளையாட்டுப் பொம்மையா?’ பாடகி உருகிப்பாடிக் கொண்டிருந்தாள். போன் மணி அடித்தது. கமலாவுக்கு பாலாம்பாள் பேசுவது மட்டும் கேட்டது.
“நான் இருப்பேன். வா. அப்பா எப்படி இருக்கா. நல்லாப் பாத்துக்கோ”
“………………”
“நீ வர்றதானா ஒண்ணாந்தேதிக்கு அப்பறம் வா. லீவு எடுக்கணுமா? அப்ப ஞாயித்துக் கிழமை வா.. இருப்பேன்……சரி வா…வா…”
போனை வைத்துவிட்டாள். கொஞ்ச நேரம் அமைதியாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்.
“என் தம்பி மக. மதுரையில இருக்கான். அவ தான் பேசுனா. வர்றாளாம்.” சற்று இடைவெளிவிட்டு…”உனக்குத் தெரியுமா? என் தம்பி.. ராமன்.”
“தெரியாது.. “ மன்னிப்புக் கோரும் குரலில் கமலா சொன்னாள்.
“எனக்கு ஒரே தம்பி. ஊமை. பிறந்ததிலிருந்தே பேச்சுவராது. எங்கப்பா அவனையும் வாழவிடாம கெடுத்து….அப்பன் சரியில்லைன்னா என்ன நல்லாயிருக்கும் சொல்லு?”
“சரி என்ன சொல்ல? எல்லாம் முடிஞ்சுபோச்சு. நானே இன்னைக்கோ நாளைக் கோன்னு இருக்கேன். அந்த சத்ய சாயி புண்ணியத்தில நல்லா இருக்கேன். நல்லா வச்சிருக்கார். பிள்ளைகள் செட்டில் ஆயிட்டாங்க” அவள் பேசிக் கொண்டே இருந்தாள். பிராமணத் தமிழும் சூத்திரத் தமிழும் கலந்துதான் பேசினாள். பழக்கம். மெனக்கட்டுப் பிராமணத் தமிழில் பேசுவது போலிருந்தது.
பாலாம்பாள் கேட்டாள் “நான் ஒண்ணு கேட்கிறேன் தப்பா நினச்சுக்காதே. என்ன பதில் சொன்னாலும் ஒண்ணும் ஆகப் போறதில்ல. நாப்பது வருஷத்துக்கப்புறம். எனக்கும் எழுவதாச்சு. ஒரு நாப்பது வயசானவருக்கு பதினைஞ்சு வயசு பொண்ணைக் கல்யாணம் பண்றமேன்னு உங்க வீட்ல யாருக்கும் அப்பத் தோணலையா? பொண்ணால என்ன செய்ய முடியும்? இறந்த்துக்கு அப்புறமாவது யாராவது வந்து பாத்தாளா?” அவள் கேட்டுக் கொண்டே போனாள். கமலா ஒன்றும் பேசவில்லை.
“அது தப்பு. அந்தக் காலத்துல நினச்சிருப்பா. சாகப் போறவனுக்கு ஒரு சாந்தி கல்யாணம் பண்ணுவமேன்னு. வீட்டுக்காரியா வர்றவ என்னபாடு படுவான்னும் தெரிஞ்சுதான் இருக்கும். ஆனா அதைப்பத்தி யோசிச்சிருந்தாலும் கவலைப் பட்டுருக்கமாட்டா. மகன் சொர்க்கம் போறது முக்கியமாச்சே. அதுனாலதான் வசதியில்லாத பொண்ணாப்பாத்து நகை நட்டு ஒண்ணும் வேண்டாம். பையன் ரொம்ப நல்ல பையன்னு ஏமாத்திக் கல்யாணம் ஏற்பாடு பண்ணாளாம். பொண்ணை வீட்ல வச்சு நம்மளே காப்பாத்துவோம் அப்படீன்னு நினச்சாளாம். உங்கப்பா மட்டும் உங்கள எங்காத்துல விட்டிருந்தா, நாங்க உங்கள நல்லாப் பாத்துண்டு இருந்திருப்போம். எல்லாம் சொல்லக் கேள்வி. யாரு கண்டா? நானோ சின்னப் பொண்ணு. இதெல்லாம் கூட கௌதமி கேட்டதனாலதான் எனக்கே தெரியவந்தது. அம்மாகூட அந்தப் பொண்ணு எங்கருக்கானு தெரிஞ்சா எதானும் பண்ணலாம்னு சொல்லுவா. செத்துப் போய் இருபத்தைந்து வருஷமாச்சு. நான் உங்களத் தேடி வர்றதுக்கு அதுவும் ஒரு காரணந்தான்”.
ரொம்ப நேரம் கழித்து பாட்டி சொன்னாள் ”எங்கப்பா என்னை ஒண்ணுமே செய்ய விடல. படிக்க விடல. வேலைசெய்ய விடல. அவரை மீறி வந்ததுக்கப்புறந்தான் நிலச்சு நின்னேன்” அவள் நினைவுகளில் மூழ்கிப் போனாள். அப்படியே அவர்கள் வீட்டில் தங்கி இருந்தாலும், இன்னொரு திருமணம் பற்றி யோசிக்கவே முடியாது. மொட்டை அடிச்சு உட்கார வைக்கலன்னாலும் பல வைதவ்ய ஆசார்ங்கள கடப் பிடிச்சிதான் இருக்கச் சொல்லியிருப்பா. இப்ப என்ன வேணா யோசிக்கலாம் பேசலாம். அப்படி நடந்திருந்தா? இப்படி நடந்திருந்தா? சரி கழுதைய விடுவோம். இப்படி இரண்டாந்தாரமாக இவருக்கு வாக்கப்பட்டு, இன்னொருத்தி பாவத்தையும் சொமந்திருக்க வேண்டாம். என்னதான் சமாதானம் பண்ணிக் கொண்டாலும், இன்னொருத்தி பாவத்தில விழுறது…. பாலாம்பால் யோசித்துக் கொண்டே இருந்தாள். கமலா அதற்குமேல் ஒன்றும் பேசவில்லை. டி.வி இன்னும் ஓடிக்கொண்டிருந்தது. இப்போது சினிமாப்பாட்டு.
கொஞ்சம் கொஞ்சமாக விலகும் திரைக்குப் பின் தெரியும் நாடகம் போல பாலாம்பாளின் கடந்த காலம் வெளிவந்தது. கமலாவுக்கும் ஒன்றும் அவசரமில்லை. ஒவ்வொரு முறையும் பாலாம்பாள் பேச்சு உணர்ச்சிகரமான உச்சத்தில் கண்ணீருடன் முடிந்தது. இன்னொருத்தரைக் கஷ்டப்படுத்துகிறோம் என்று கமலாவுக்குத் தோன்றியது. ஆனாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை.
“எங்கஷ்டத்தையும் யார்ட்டயாவது சொல்லணும்ல. ஆறுதலா இருக்கும்.” கேட்பதற்கு கமலாவுக்கு விருப்பம்தான். பாவம் ரொம்பக் கஷ்டப்பட்டவ. கண்ணீர் துளிர்க்கும் போது வேறு ஏதாவது பேசி முடிவுக்குக் கொண்டு வந்துவிடுவாள். கமலாவுக்கு நிறையத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ஆர்வம் இருந்தது. சொல்ல பாலாம்பாள் விருப்பப்படுவாளோ என்னவோ? தெரிந்ததையெல்லாம் கௌதமியிடம் சொன்னாள். அவளும் கேள்விமேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள். நானும் அந்தப் பாட்டியைப் பார்க்க வர்றேன் என்று ஒருமுறை சொன்னாள். கமலாவுக்கு என்ன சொல்வதென்னு புரியவில்லை. ஏற்கனவே அப்பாவை, தாத்தாவை அவருடைய அப்பாவை கொடுமைக்காரர்களாக நினைத்துக்கொண்டிருக்கும் கௌதமிக்கு இன்னும் சாட்சி கிடைத்துவிடும். நடந்ததை எண்ணிப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. அனுபவித்தவளுக்கு எப்படி இருக்கும்?
கமலா பத்துநாள் லிவில் சென்றுவிட்டு, வந்தாள்.
பாலாம்பாள் வீட்டில் புதிதாக யாரோ இருப்பது தெரிந்தது. அதுவும் பிராமணர்கள் மாதிரி இல்லை. அவள் புருஷனுடைய சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும். அவர்கள் போகும் வரை பாலாம்பாளை தெருக்களில் கடையில் பார்த்து பேசிவிட்டுச் சென்று விட்டாள். அவள் நினைத்தது சரிதான். கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து கொண்டாள். பாலாம்பாளின் புருஷன் தங்கையாவின் முதல் மனைவியின் பிள்ளைகள். இரண்டாவது பெண் பேறுகாலத்தைக் கழிக்க இங்கே வந்திருக்கிறாள். பாலாம்பாள் அவள் புருஷனுக்கு இரண்டாந்தாரம். மனிதர்கள் வாழ்வில் ஒவ்வொரு திருப்பத்திலும் ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. பாலாம்பாளுக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு ஆண் ஒரு பெண். முதல் மனைவிக்கு ஐந்து பிள்ளைகள். தங்கையா முதல் மனைவியை ஏமாற்றியிருக்கவேண்டும். கணவன் இன்னொரு திருமணம் முடிப்பது எந்தப் பெண்ணுக்குப் பிடிக்கும்?
தங்கையாவை ஒருநாள் சந்திக்கும்படி நேர்ந்துவிட்டது. நல்ல தாட்டியமான உடம்பு. கூர்மையான மூக்கு, நீள் வட்ட முகம், நல்ல நிறம் இந்த ஜாதியில் இப்படி ஆட்கள் உண்டு என்று அவள் நினைத்ததில்லை. நமஸ்காரம் பண்ணிவிட்டு போய்விட்டாள்.
இரண்டு மூன்று மாதங்கள் கழித்து, அந்த வீட்டில் ஆளரவம் குறைந்தபிறகு சென்றாள். பாலம் (சுருக்கிக் கூப்பிட ஆரம்பித்து விட்டாள்) முகம் சற்று வாடி இருந்தாள். “அவ அம்மா கொண்டுவந்து விட்டுட்டுப் போய்ட்டா. எல்லாச் செலவும் என் செலவு. ஒன்பதாம் மாசத்தில இருந்து பிள்ளை பிறந்து போகும் வரை. மாத்திரை மருந்து, டானிக். நல்லவேளை பென்ஷன் வருது. செலவழிச்சிட்டு ஒண்ணும் மிச்சமில்லை. இவரும் அப்படித்தான். ஒரு சாமான் வாங்கவிட மாட்டார். அவ கேப்பா. இங்க நிறையா இருக்கிறமாதிரி தோணும். எதையாவது சொல்லி விடுவார். பிறந்த்திலிருந்து சிலபேர் ராசி. மத்தவங்களுக்குச் செய்து போட்டுக்கிட்டே இருக்கணும்னு. அவமட்டுமா வர்றா. பிள்ளைகள், பாக்க வர்ற சொந்தக்காரங்க….எனக்கும் நகை நட்டுப் போடணும்னு ஆசை இருக்காதா.” சொல்லிக்கொண்டே போனாள். கமலாவுக்குப் புரிந்தது போலிருந்தது.
தங்கையாவின் வருமானம் ஒரு மனைவிக்கே காணாது. இதில் இன்னொரு மனைவி. ஆண்கள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். கேட்பார் கிடையாது. பெண்கள் அடங்கித்தான் போய்க்கொண்டிருக்கிறார்கள். இப்போதும் அப்படித்தான். பாலம் வருத்தத்துடன், புலம்பிக்கொண்டே இதைக் கடந்துவிட்டாள். அவளே சொன்னமாதிரி வேறு வழி? அப்பன் கைவிட்டு விட்டான். புருஷனும் இல்லையென்றால், தனியாக வாழமுடியுமா? அதுவும் சின்ன வயதில் விதவையான பெண். தங்கையா இரண்டாவது தாரமாக இவளைக் கட்டியது மோசம் தான். ஆனால் அவளை எந்த “நல்ல ‘பிராமணன்’ இந்தப் பொண்ணைக் கட்டுவான்? எல்லோரும் முடிந்தவரை ஆச்சாரங்களை அனுஷ்டானங்களை பின்பற்றவே விரும்புகிறார்கள். பின்பற்றுவது போல நடிக்கவேண்டியும் இருக்கிறது. மற்றவர்கள் ஏதாவது சொல்லிவிடக்கூடாதே என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.
“தங்கையாவை கல்யாணம் முடிக்கவில்லை என்றால் பாலாம்பாள் என்ன ஆகியிருப்பாள்?” கமலா நினைத்துப் பார்த்தாள். இப்போது இருப்பதைவிட நிலைமை மோசமாக இருந்திருக்கும். அதையும் உறுதியாகச் சொல்லமுடியாது. மனிதன் வாழ்வில் எதையும் இப்படித்தான் நடக்கும் என்று சொல்லவே முடியாது. அவளுக்கு ஐம்பத்தி ஐந்து வயசுக்கு மேல் புரிகிறது. எல்லாச் சூத்திரங்களையும் கலைத்துப் போடுவதுதான் மனித வாழ்க்கை.
* * * * * * * * *

தங்கையாவுக்கும் கொஞ்சநாள் கழித்து புதிதாய் வந்து உறவு கொண்டாடும் பிராமணத்தி யாரென்று தெரிந்துவிட்டது. “இந்தப் பிராமணத்தியக் கல்யாணம் பண்ணது தப்பாப் போச்சு. எவளாவது எங்கிருந்தாவது சொந்தக்காரின்னு வந்திர்றா அவா இவான்னு எதயாவது பேசிட்ருப்பாளுக. அவனுக்கு எல்லாவற்றுக்கு பதில் ஒன்று இருந்தது. “எவனாவது பிராமணன் உன்னை வைச்சுக் காப்பாத்தி இருப்பானா?” இந்தக் கேள்விக்குப் பாலாம்பாளிடம் பதில் கிடையாது. தனியாக, அப்பா உதவி இல்லாம ஒருபெண் அந்தக் காலத்தில் தனித்து வாழ்வது சாத்தியமே இல்லை. அப்பா எதிரியான பிறகு வேறு யார் துணைக்கு வருவார்?
தங்கையாவுக்கும் பழைய ஞாபகம் வந்தது. பாலாம்பாளை முதலில் பார்த்தது…கவனித்த்து …எப்போ?...
முதலில் அவருக்கு பக்கத்து வீட்டு, ராமம்மா ஞாபகம் வந்தாள். பதினைந்து வயதில் ருசி காட்டியவள். முகத்தைப் பார்க்கவே முடியாது. அந்த வயதில் முகத்தைப் பார்த்ததில்லை. அவளை மட்டுமா? இன்னும் எத்தனையோ பேரின் முகத்தை அவர் பார்த்தது இல்லை. அதனாலெல்லாம் எதுவும் குறைந்துவிடவில்லை. ஆனால் பாலாம்பாள் அப்படி அல்ல.
புதிதாய் வேலைக்குச் சேர்ந்திருந்த பாலம்பாள் பற்றி அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. வழுக்கைத்தலைப் பிராமணன் ஒருத்தனுடன் வேலையில் சேர வந்திருந்தாள். எல்லாருக்கும் இருக்கும் குறுகுறுப்பு அவனுக்கும் இருந்தாலும் யார்? என்ன என்பதெல்லாம் தெரியவில்லை? நிறம் அவனைப் போல இருந்தது பிடித்திருந்தது. முகத்தில் நல்ல களை. ஆனால் ஒரு சோகம் எப்போதும் முகத்தில் இருந்தது. மேல் ஜாதி. கூட ஆள் வேற வருகிறது. அவளெல்லாம் தனக்கு ஒத்து வராது என்று ஒதுங்கி இருந்தான்.
தினமும் சாயங்காலமானால், சுப்புராஜ் மோட்டார் ஷெட்டில் போய் உட்கார்ந்து விடுவான் அல்லது மணி அண்ணாச்சி கடை. பேச்சு சுவராஸ்யமாக நடக்கும். சுப்புராஜ் மோட்டார் ஷெட் மெயின் ரோட்டில் பஸ்டாண்டுக்கு எதிர்ப்புறத்தில் இருந்தது. காரோட்டுவதிலிருந்து, கார் மெகானிஸம் வரை கொஞ்சம் தெரிந்து கொண்டிருந்தான். வேலை உறுதியாகி விடும் என்று அப்பா சொல்லி இருந்தாலும், மூன்று வருடமாக ஒன்றும் நடக்கவில்லை. டிஸ்ட்ரிக்ட் போர்டு என்ன செய்வார்கள் என்று கணிக்க முடியாது.
ஒருநாள் சுப்புராஜ் சொன்னார் “உன்னைத் தேடி வானரமுட்டித் தேவமாரு ரெண்டு பேரு வந்தானுக. என்ன விஷயம்னு கேட்டா, ஒண்ணும் சரியாச் சொல்லல. கமுக்கமாப் பேசுனானுக. ஏதாவது தகறாரா? அவனுக சகவாசம் ஆகாதே”
தங்கையா கொஞ்சம் ரவுடித்தனம் பண்ணுகிறவந்தான். அதெல்லாம் விட்டுக் கொஞ்ச நாளாச்சு. அப்பாவும் டாக்டரும் சொல்லி இருக்காங்க. வேலை நிரந்தரம் ஆகணும்னா அதெல்லாம் விட்ரணும். இப்போதெல்லாம் அடி தடிக்குப் போவதில்லை. ஆனால் இன்னும் தகராறு வந்தால் விடுபவன் இல்லை. முரட்டு சுபாவம். மிலிடெரியில் இருந்து லீவில் வந்தவன் திரும்பவில்லை. அங்கிருந்து பலமுறை கடிதங்கள் வந்து விட்டன. தற்போது வம்பு தும்புகளுக்கு போகாமலிருக்க அதுவும் ஒரு காரணம். போலிஸ் கேஸ் அது இது என்றாகிவிட்டால் மிலிடெரிக்காரனிடம் அனுப்பிவிடுவார்கள். அப்பாவுக்குத் தபால்காரனும், போலிஸ்காரர்களும் பழக்கம். அதனால், கடித்த்தைப் பெறுபவர் இந்த விலாசத்தில் இல்லை என்று மிலிடெரிக்கடித்த்தை திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்.
இந்த நேரத்தில் வானரமுட்டித் தேவமாரு ஆட்கள் தேடி வந்தால் என்ன அர்த்தம். அந்த ஏரியாவில் எவளிடமும் தொடர்பில்லையே. எங்கும் தகராறு இல்லை. யோசித்துக் கொண்டே உட்கார்ந்திருந்தார்கள்.
“திரும்பி வருவேன்னு சொன்னாங்களா?”
“இரண்டு நா கழிச்சு வாரோம்னாங்க”
என்ன விஷயம்னு சொல்ல்லையா?
“அவரிட்ட ஒரு துப்புக் கேக்கணும்னு சொன்னானுக. மேல என்னவிவரம்னு சொல்லலை”
தங்கையாவுக்கு கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும், துப்புக் கேக்கணும் என்ற வார்த்தைகள் ஆறுதலாக இருந்தன. விவகாரம் தன்னைப் பற்றியதாக இருக்காது போல் தோன்றியது. ஆனாலும், நெட்டையான கட்டுடல் ஆட்கள். என்ன செய்வார்களோ தெரியாது. எங்கே எல்லாம் சேட்டைகள் பண்ணினோம் என்று நினைத்துப் பார்த்தான். சுப்புராஜ்தான் இவன் கூட்டாளி. விஸ்கி குடிப்பது, விளையாடப் போவது, பெண்களைத் தேடுவது எல்லாம். மிலிடெரிக்காரர்கள் திருட்டுத்தனமாய் விஸ்கி கொண்டுவந்து கொடுப்பார்கள். அவ்வப்போது போலீஸ்காரர்களுக்கும் ஓரிரண்டு தம்ளர் ஓசி கிடைக்கும். சுப்புராஜ் ஷெட்டில் இரவு எட்டு மணிக்கு மேல்.
மூன்றாவது நாள் வானரமுட்டி ஆட்கள் வந்தார்கள். தங்கையாவை அழைத்துத் தனியே பேசிக்கொண்டிருந்தார்கள். சுப்புராஜ் சந்தேகப் பட்டு, இரண்டு மூன்று அடியாட்களைத் தயார் செய்து வைத்திருந்தான். என்ன நடக்குமென்று யாருக்குத் தெரியும்? திடீரென்று தகராறு ஆகிவிடக்கூடும். ஆனால் அப்படி எதுவும் ஆகவில்லை. கொஞ்சநேரம் பேசிவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்.
காலையில் வேலைக்குப் போனதும் பாலாம்பாளைத் தேடினான். அவள் பிரசவ அறைக்குள் இருந்தாள். திரும்பி வந்து விட்டான். எதற்குத் தேடினான் என்று மற்றவர்களுக்குப் புரியவில்லை. அவன் இரண்டு முறை வந்து போனதை அறிந்தும் பாலாம்பாள் அமைதியாக இருந்தாள். விதவையான அவளை ஒரு ஆண் தேடிவந்தது தவறான எண்ணத்தைத் தோற்றுவிக்கக் கூடும்.ஆனாலும் கூட வேலை பார்க்கிறவன் அதனால் பெரிசாகச் சொல்ல முடியாது. சாயங்காலம், சித்தப்பா அவளை அழைத்துச் செல்ல வந்திருந்தார். அலுவலகத்தை விட்டு வெளியே வரும்போது, தங்கையா சித்தப்பாவுடன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தாள். வழக்கம்போல் சித்தப்பாவும் அவளும் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். கூடவே அவனும் வந்தான். மணி ஆறாகிவிட்டது. இருட்டு மெல்லப் பரவ ஆரம்பித்திருந்தது. அவன் எதற்காகக் கூட வருகிறான்?
தங்கையாவைப் பற்றி அந்த அலுவலகத்தில் யாரும் நன்றாகச் சொல்லவில்லை. முரடன், சண்டையிடுபவன். சண்டியர்த்தனம் பண்ணுகிறவன். தங்கையா வருவது கொஞ்சம் பயமாக இருந்தாலும், சித்தப்பா பக்கத்தில் இருப்பது ஒரு வகையில் ஆறுதலாக இருந்தது. ஆனால் ஏதோ பிரச்சனை வருகிறது என்பது புரிந்துவிட்டது. அவள் பிறந்ததிலிருந்தே பிரச்சனைதான்.
சித்தப்பா காலையில் அவளை காலையில் கூட வந்தார். அவர் கண்கள் சிவப்பாக இருந்த்தைக் கவனித்தாலும் அவள் ஒன்றும் கேட்கவில்லை. வேலை கிடைத்ததைலிருந்து பாதி நிம்மதி வந்தது போலிருந்தது. ரொம்பக் கஷ்டப்பட்டு கோபத்தை அடக்கிக் கொண்டு பேசுவது போல் இருந்தது. வானரமுட்டி சண்டியர்கள் இரண்டு பேரை அவள் அப்பா ஏற்பாடு செய்திருக்கிறாராம். அவளைக் கடத்திக் கொண்டுபோய் அவரிடம் விட்டுவிட வேண்டுமென்றும் அதற்கு பணம் தருவதாகவும் சொல்லியிருக்கிறாராம். சொல்வதற்கே கூச்சப்பட்டுச் சொன்னார். அதிர்ச்சியில் ஒன்றும் யோசிக்கத்தோன்றவில்லை. இதையெல்லாம் செய்யக் கூடியவர்தான். இதைவிட மோசமாகப் போகலாம். கோபம் உடலில் ஜிவ்வென்று ஏறியது. சாலையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதையும் மறந்து, சத்தம் வெளியே வராமல் அடக்கிக் கொண்டு அழ ஆரம்பித்தாள். எதிரே வந்த ஒன்றிரண்டு பேர் சித்தப்பாவையும் அவளையும் உற்றுக் கவனித்தனர். சித்தப்பாவுக்கும் குரல் தடுமாறியது. “சரி சரி ரோட்ல அழாதெ. வேண்டாம். உனக்கு ஒண்ணும் ஆகாது தங்கையாவும் பாத்துக்கறேன்னு சொல்லிருக்கான். அவனுக தங்கையாவை மீறி நடக்க மாட்டாங்களாம். இருந்தாலும் உனக்கும் தெரியணுமேண்ணுதான் சொன்னேன். கொஞ்சம் ஜாக்கிரதயா இருக்கணும்மில்லயா?” அவர்களுக்கு எதிரே கூட்டமாக இரட்டைக்காளை சின்னத்தில் ஓட்டுப் போடுங்கள் என்று கத்திக் கொண்டே பலர் போனார்கள். பேச்சை மாற்றுவதற்கு சித்தப்பா சொன்னார் “முதல் தேர்தல் வரப் போகுது. ராமசாமிப் பூங்காவில ராத்திரி கூட்டமாம். நம்ம ஊர்ல…” அவர் பேசியதை அதற்கு மேல் அவள் கேட்கவில்லை. கூட்டம் தாண்டியதும் சொல்லிக் கொண்டே போனார்.
தங்கையாவுக்கு இரண்டு சண்டியர்களையும் தெரியும். அதனால் அவனைக் கேட்டிருக்கிறார்கள். “கவர்மண்ட் ஆளுகளைக் கை வைக்காதீங்க. வேலையப் பாத்துக்கிட்டுப் போங்க. பிராமணத்தி பாவத்தில விழாதீங்க. அவளும் உங்க ஊர் வெள்ளைப் பாண்டியைக் கும்பிடறவதான்” என்று ஏதேதோ சொல்லி அனுப்பி விட்டான். இனி ஆபத்தில்ல. ஆனாலும் இன்னும் என்னென்ன செய்வார் என்பது அவளுக்குப் பயமாக இருந்தது. நாலாட்டின்முத்தூர் வெள்ளைப் பாண்டிச் சாமி கைவிடமாட்டார். என் வாழ்க்கை நன்றாக அமைந்தால் உனக்கு நூத்தம்பது தேங்காய் வெடலை போடுகிறேன் என்று பலமுறை கும்பிட்டிருக்கிறாள். அதை நிறைவேற்றும் நாள் வருமா? அந்த வெள்ளைப் பாண்டிதான் தங்கையா மாதிரி ஆளை தனக்கு ஆதரவாக அனுப்பி இருக்க வேண்டும் என்று நம்பினாள். ரொம்பச் சக்தியுள்ள சாமி. ஊர்ல உள்ள பெருமாள் கோவில் சாமியை வேண்டாமல் ஏன் வெள்ளைப் பாண்டிச் சாமியை வேண்டிக்கொண்டோம் என்று நினைத்தாள். பெருமாள் நின்று கொல்வார். உடனடியாக் காப்பாத்தும் வீரம், சக்தி உடனடிப் பாதுகாப்பு எல்லாம் வெள்ளைப் பாண்டிச் சாமியால்தான் முடியும்.
பாலம் மெல்ல மெல்ல தங்கையாவைப் பற்றி ஊரில் அலுவலகத்தில் என்ன பேசுகிறார்கள் என்பதை கவனிக்க ஆரம்பித்தாள். ஐந்து பேரைக் காதலித்துக் கொண்டிருந்தான். எதுவுமே தெய்வீக்க் காதல் அல்ல. எல்லாம் மண்ணுக்கே உரிய காதல். அவன் கூட வேலை பார்த்த செவிட்டுப் பேச்சியம்மாள், அவனுடைய மேலதிகாரியின் நண்பராக அறிமுகமாகிய ஒரு டாக்டரின் மனைவியான கோதை, எட்டாங்கிளாஸ் வரை அவன் படித்த பள்ளியின் ஆசிரியருடைய நான்கு பெண்களில் இரண்டாவது பெண்ணான திலகவதி, மூன்றாவது பெண்ணான புனிதவதி, பஸ்டாண்ட் அருகில் டீக்கடை வைத்திருக்கும் கணேச ஐயரின் மனைவி. எல்லோரும் அவர்மீது அதீத காதல் கொண்டிருந்தனர். எங்கே எப்படி தங்கையாவைச் சந்தித்தார்கள் என்பது யாருக்கும் புரியவில்லை. இது தவிர அவன் மனைவியும் அவனைத் தேடித்தேடி அலைந்தாள். அவ்வப்போது சாராயம் குடிப்பான். அடிதடி சண்டை போடுவான். ஆள்பலம் இருக்கிறதாம்.
இப்படிப்பட்ட ஒருவனுடன் சாதாரணமாக எப்படி பேசமுடியும்? வேலை பற்றித்தான் அவளால் பேச முடிந்தது. தனிமையில் எங்காவது சந்தித்த போதும், அவன் கண்கள் அவள் உடலின் ஒவ்வொரு ரோமத்தையும் அளந்து கண்களில் பதிந்து கொண்டிருந்தன. தன்மீது அவளுக்குச் சந்தேகம் வர ஆரம்பித்த்து. அவன் கவனிப்பதை அவளும் கவனித்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு பெண்ணின் முன்பும் இப்படித்தான் செய்தான் என்பது அவள் அவனைத் திருமணம் முடித்து இருபது ஆண்டுகள் கழித்துத்தான் தெரிந்தது.
கொஞ்ச நாட்களில் இரவில் உறக்கம் வராமல் தவித்தாள். முதலில் அவ்வப்போது இரவில் கனவில் வந்த அவன், இப்போது தினமும் பகல் கனவுகளிலும் தோன்ற ஆரம்பித்தான். அவள் உடலும் கனவுப் படுக்கையில் உறங்கிப் பழகி விட்டது. இதற்குமேல் அவன் தொல்லையை தாளமுடியாது என்று அவள் உடல் ஒருநாள் அறிவித்த போது அவன் அவள் எதிரே நின்றிருந்தான். அலுவலகத்தில் அன்று எல்லோரும் அவன் சொல்லி ஏற்பாடு செய்தபடி சீக்கிரம் போய்விட்டார்கள். தவிர்க்கமுடியாத அந்திமாலை நேரத்தில் அவள் அந்த வலையில் விழுந்தாள்.
அவளுடைய வாழ்க்கை மட்டும் தறிகெட்டு ஓடிக்கொண்டிருப்பது போலிருந்தது. ஆனாலும், இருட்டுக்குள் குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்வது போல் சூத்திரக் கயிரொன்றைப் பிடித்துவிட்டதாகவே நினைத்தாள். நாற்பது வருடங்கள் கழித்து அது தவறல்ல என்று தெரிந்தது. அவன் அவளுடன் இருந்ததே அதிசயம்தான். அதற்கு அவள் கொடுத்த விலை மிக அதிகமானதென்று தோன்றியது.
ஆகஸ்ட் இருபத்தி ஐந்தாம் தேதி 1954 தான் அவளின் இந்த வாழ்க்கை தீர்மானிக்கப் பட்டது. இனிமேல் வாழ்ந்து பலனில்லை என்று முடிவுக்கு வந்தாள். அன்று இரவு அவளுக்குப் பிடித்த மோர்சாதத்துடன் பக்டோன் கலந்து சாப்பிட்டுவிட்டும் படுத்துவிட்டாள். மூன்று நாள் கழித்து கண்விழித்த போது கழுத்தில் ஏதோ உறுத்துவது போலிருந்தது. . மஞ்சள் கயிறு. இரண்டு வருடங்களுக்கு மேலாக வற்புறுத்தியும் அவன் தாலி கட்ட மறுத்தான். பிறகு பிறகு என்று தள்ளிப் போட்டான். குழந்தை பிறந்துவிட்டது. அப்போதும் மறுத்தான். தொட்டிலுக்கருகில் வைத்திருந்த மண்ணெண்ணை விளக்கு சரிந்துவிழுந்து, தீயேரிந்து தொட்டிலுடன் குழந்தையும் எரிந்துவிட்டது. இரண்டு மணி நேரத்தில் இறந்துவிட்டது. அதன் கிரியை கூட ஊரிலிருந்த தெரிந்தவர்களால் நடத்தப் பட்டது.
இப்படி ஒரு பெண்ணைப் பார்த்ததில்லை என்று ஊரில் பேசிக் கொண்டார்கள். ரொம்ப நெஞ்சழுத்தம். அதிலிருந்து இருபத்தி எட்டாம் நாள் வைத்தியநாத ஐயர் வீட்டில் பாலாம்பாள் கழுத்தில் தங்கையா மீண்டும் ஒருமுறை தாலிகட்டினான். இரண்டு நிபந்தனைகள் விதித்தாள். மாமிசம் சமைக்கச் சொல்லக் கூடாது. சாப்பிடச் சொல்லக் கூடாது.
இரண்டுமாதம் கழித்து, முதல் மனைவி பச்சையம்மாவின் அப்பா மூன்று பேரைக் கூட்டிக் கொண்டு வந்தார். தாலி கட்டியது தெரிந்துவிட்டது. தாலி கட்டாமல் இருந்தவரை அவர்களுக்கு பிரச்சனை இல்லை. இரண்டு கட்டு வீட்டில், உள் வாசலில் தங்கையா நின்று யாரும் வீட்டுக்குள் வந்துவிடக்கூடாதென்று கொண்டான். அவளை விட்டுவிட்டு வந்துவிடும்படி நிர்ப்பந்தித்தார்கள். ஒருகட்டத்தில் ‘உள்ளே நுழைந்தால் காலை வெட்டுவேன்’ என்று சொன்ன பிறகுதான் உள்ளே இருந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த பாலாம்பாளுக்கு நம்பிக்கை வந்தது. இனிமேல் வைத்துக் காப்பாற்றுவான். அவர்கள் நிலைமை தலைக்கு மேல போய்விட்டதென்று போய்விட்டார்கள்.

பாலாம்பாளைப் பற்றி எல்லா விஷயத்தையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று கமலா விரும்பினாள். ஆனால் அது சாத்தியமாகவில்லை. நினைத்த்தையெல்லாம் நாம் அறிந்து கொள்ள முடிவதில்லை. ஒருவருடத்தில் கமலாவுக்கு மாற்றலாகி சென்னை சென்று விட்டாள். பாலாம்பாளைப் பற்றிய நினைவு குடைந்து கொண்டிருந்தது. பாலாம்பாளின் மகனிடமிருந்து வந்த கடைசிக்கடித்ததில் அவள் இறந்துவிட்டாள் என்று தெரிந்து கொண்டாள். விஷேசத்துக்கு அவளால் போக முடியவில்லை. ஆனால் கமலாவால் பாலாம்பாளை மறக்க முடியவில்லை. பாலாம்பாளும் கடைசிவரை, தன் விருப்பத்தை வெளியே சொல்ல வில்லை. ஒரு பிராமணப் பெண்ணாக சகல சாவுச் சடங்குகளோடும் அவள் சாக விரும்பினாள். சொன்னாலும் நிறைவேறாது என்று அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

Sunday, December 06, 2009

வில்லேருழவர் 4

நிற்கும் முறை

வில், அம்பு இலக்கு இவற்றின் தன்மையைப் புரிந்து கொண்டபின்னால், அம்பை எய்வதைக் கற்றுக் கொள்ள அமைதியும், பெருமிதமும் கொள்ளவேண்டும். அமைதி இதயத்திலிருந்து வரும். இதயம் பாதுகாப்பற்றுத் துன்பப்பட்டாலும், நல்ல நிலையில் நின்றுகொண்டால் எதையும் நன்றாகச் செய்யமுடியும் என்பதை அறியும். அழகு என்பது மேலோட்டமானதல்ல. அது மனிதன் தன்னையும், தன் வேலையையும் பெருமைப்படுத்தும் வழி. சில நேரங்களில் நிற்கும்முறை வசதியாக இல்லை என்றால், அது பொய் அல்லது செயற்கையானது என நினைக்காதே. அது கடினமாக இருப்பதால் உண்மையானது. வில்வீரன் தன் மரியாதையால் பெருமைப்படுத்துவதாக இலக்கு நினைத்துக் கொள்ள அது உதவுகிறது. நிற்கும் அழகு ரொம்ப வசதியானதல்ல அது அம்பை எய்வதற்கான மிகப் பொறுத்தமான நிலை. தேவையற்றவைகளை நீக்கினால் வருவது அழகு. வில்வீரன் எளிமையை, மனம் ஒருமுகப்படுவதைக் கண்டுகொள்கிறான். எவ்வளவு எளிமையானதாக, அமைதியானதாக நிற்கும் முறை இருக்கிறதோ அவ்வளவு எழிலானது. ஓரே நிறத்தில் இருப்பதால் பனி அழகாக இருக்கிறது, கடல் சமதளமாகத் தோன்றுவதால் கவர்ச்சியாக இருக்கிறது. ஆனால் பனியும் கடலும் ஆழமானவை. தங்களை அறிந்தவை..

அம்பைப் பிடிக்கும் முறை

அம்பைப் பிடிப்பதென்பது உன் உத்தேசத்தை தொடுவதாகும். அம்பு முழுவதையும் நீ பார்க்கவேண்டும், அதைச் பாதையில் செலுத்தும் இறகுகள் சரியாக இருக்கிறதா என்று பார். முனை கூர்மையாக இருக்கிறதென்பதை நிச்சயம் செய்து கொள்.

அது நேராக இருகிறதா, வளைந்தோ முந்தைய எய்தலில் பழுதுபட்டோ இருக்கிறதா என்பதை நிச்சயம் செய்துகொள். அம்பு அதன் எளிமையினாலும், எடைக்குறைவாலும் பலமில்லாததாக தோன்றக்கூடும். ஆனால் வில்வீரனின் பலம் என்பது அம்பு அவன் உடலின் மனதின் சக்தியை வெகுதூரம் கொண்டு போவதாக இருக்க வேண்டும்.

ஒரே அம்பினால் கப்பல் மூழ்கியதாக பழைய கதை ஒன்று உண்டு. கப்பலின் மரத்தில் எங்கே பலங்குறைந்த இடம் என்று வில்விட்டவனுக்குத் தெரியும். அதனால் கப்பலில் ஓட்டைவிழுந்து தண்ணீர் மெல்ல உள்ளே சென்று விட்ட்து. அதனால் அவனுடைய கிராமத்தை நோக்கிப் படைஎடுத்துவந்த எதிரிகளின் எண்ணம் சிதறியது.

அம்பு என்பது விட்டவனின் எண்ணம். தன்னிச்சையாகச் செல்கிறது. அதை விட்டபோது வில்வீரன் தேர்ந்தெடுத்த பாதையில் செல்கிறது. அது காற்றாலும், புவிஈர்ப்பினாலும் பாதிக்கப் படுகிறது. இவை அதன் பாதையின் ஒரு பகுதிதான். மரத்திலிருந்து புயலினால் கிழிந்தாலும் இலை இலையாகவே இருக்கிறது. மனிதனின் குறி நேராக, மிகச்சரியானதாக, உறுதியாக, இருக்கவேண்டும். இலக்கை நோக்கிய இடைவெளியை அது கடக்கும் போது யாரும் அதை நிறுத்த முடியாது.

வில்லைப் பிடிக்கும் முறை

அமைதியாக இரு. மூச்சை நன்றாக இழுத்து விடு. உன்னுடைய ஒவ்வொரு அசைவையும் உன் தோழர்கள் கவனிப்பார்கள். தேவையெனில் உதவுவார்கள். உன் எதிரியும் உன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்பதை மறவாதே. அச்சமற்ற கைகளுக்கும் நடுங்கும் கைகளுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்குத் தெரியும். எனவே பதட்டமாக இருந்தால் மூச்சை நன்றாக இழுத்துவிடு அது ஒவ்வொரு அடியிலும் உன் மனதை ஒருமுகப்படுத்த உதவும்.

வில்லைக் கையில் எடுத்து உன் உடல்முன் –தகுந்த முறையில் - வைக்கும் தருணத்தில், அம்பு விடுவதற்கு, அதுவரை நீ செய்த ஒவ்வொரு செயலையும் மீண்டும் நினைத்துப் பார். பதட்டம் இல்லாமல் இதைச் செய். ஏனெனில், எல்லா விதிகளையும் ஞாபகத்தில் வைக்க முடியாது. அமைதியான மனதில் நீ ஒவ்வொரு செயலையும் மீண்டும் நினைக்கும்போது, மிக கடினமான எல்லாத் தருணங்களையும் அவற்றை நீ எவ்வாறு கடந்தாய் என்பதையும் காண்பாய். இது உனக்குத் தன்னம்பிக்கையைத் தரும் உன் கைகள் நடுங்குவது நின்றுவிடும்.

வில்லின் நாணை இழுக்கும் முறை

வில் ஒரு இசைக்கருவி. நாண் மூலம் அதன் ஒலி வெளிப்படுகிறது. நாண் மிக நீளமானது. வில் அதன் ஒரு புள்ளியைத்தான் தொடுகிறது. வில்வீரனின் அறிவும், அனுபவமும் அந்தப் புள்ளியில் தான் குவிக்கப்பட வேண்டும்.

அவன் இடப்புறமோ வலப்புறமோ சிறிதும் சாய்ந்தால், அந்தப் புள்ளி வில்செல்லும் வழியிலிருந்து கீழோ மேலோ இருந்தால், அவன் இலக்கை அடிக்க முடியாது. எனவே நாணை இழுக்கும்போது, இசைக்கருவியை இயக்கும் கலைஞன் போல் இரு. இசையில் இடத்தை/ இடைவெளியை விட, காலம் முக்கியமானது. எழுதப்பட்ட இசையின் சுர வரிகள் பொருளற்றவை. அதைப் வாசிக்கத் தெரிந்தவன் சுர வரிகளை இசையாகயும், தாளகதியாகவும் மாற்றமுடியும்.

இலக்கை, அதன் இருப்பை வில்வீரன் சாத்தியப்படுத்துவது போலவே, அம்பு வில்லின் இருப்பை சாத்தியப்படுத்துகிறது. அம்பைக் உன் கைகளால் நீ வீசலாம். ஆனால் அம்பு இல்லாத வில் பயனற்றது.
அதனால், கைகளை நீட்டும் போது வில்லின் நீட்சியாக உன்னை நினைக்காதே. அம்பு சலனமற்ற மையம் எனவும் நீ வில்லையும், நாணையும் அருகில் கொண்டுவருவதாகவும் நினை.

வில்லின் நாணை மெல்லத் தொடு. அதன் துணையை வேண்டு.

Wednesday, December 02, 2009
காந்திஅடிகள் - சாதாரணப் பிரஜையின் பார்வையில்..

காந்தி அடிகள் என்ற பெயரைக் கேட்டதும் ஒரு இந்தியப் பிரஜை பெருமிதம் கொள்கிறான். வன்முறையை நம்புகிறவனாக இருந்தாலும், அஹிம்சையை (இன்முறை என்று சொல்லலாமா? – என் பள்ளியில் இந்த வார்த்தையை அஹிம்சைக்கு மாற்றாக, அதே பொருளின் உபயோகித்த, மார்டின் லூதர் கிங் பற்றிய ஒரு புத்தகத்தைப் படித்த ஞாபகம்) நம்புகிறவனாக இருந்தாலும் இந்தப் பெயர் ஒரு மனதில் பேரலையை உண்டாக்குகிறது. அது ஒரு ரசிகனுக்கு மட்டும் தோன்றும் மயக்கமல்ல. மிகவும் உண்மையானது. 1915ல் இருந்து 1948 வரை இந்திய சமூகத்தை மிக நேரடியாக அசைத்த பேரலையின் நினைவுகள் தான் அது. அது நல்லது அல்லது கெட்டது என்று வாதிடும் அறிவுஜீவிகள் உண்டு. ஆனால் அதன் தாக்கம் இல்லாத இந்தியரைக் காண்பது அரிது. புத்தருக்குப் பிறகு இரண்டாவது அலையாக அது நிகழ்ந்தது.
காந்தியைப் பற்றிய நமது பெருமிதம் எப்போதும் உவகை தரக்கூடியதாக இருக்கும் அதே வேளையில், அவரைப் பார்த்து, அறிந்து ஏற்படும் பிரமிப்பும் அது போன்று ஒரு சத்தியவானாக சாதாரண மனிதராகிய நாம் ஒருபோதும் ஆக முடியாது என்ற இயலாமையும் ஒருங்கே ஏற்படும். அவருடைய அரசியல் கருத்துக்கள், ஆன்மீக தேட்டம், சமூகக் குறிக்கோள்கள் அவருடைய காலத்தாலும், அவருடைய அனுபவத்தாலும் வரையறுக்கப் பட்ட போதும், அவர் உண்மைமீது கொண்ட அசைக்க முடியாத பற்றினால், பெரும்பாலான விஷயங்களில் சிந்தனையையும், விவாதத்தையும், தர்க்கத்தையும் அரசியல் உலகின் நடைமுறையாக்கிக் காட்டினார்.
ஒரு சாதாரண மனிதன் காந்தி இன்றைய நிலையில் அவரிடமிருந்து பெறக்கூடியது என்ன? இன்றைய நிலையில் தான் சரியென்று நம்புவதை சொல்வதும், கடைப்பிடிப்பதும், அன்பும் பரிவும் அடுத்தவர்கள் மீது அவர்கொண்ட கருணையும், கனிவும் அவரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். அவரை விட மிக புத்திசாலிகள் தோன்றிவிடலாம். தோன்றி இருக்கலாம். இனிமேலும் தோன்றலாம். அஹிம்சை/இன்முறை என்பது வீரரின் ஆயுதம், கோழைகளின் கேடயமல்ல என்று நிரூபித்தார். காட்டுமிராண்டிகளின் குணமான வன்முறையை நாம் கைவிட முடியும் என்பதை நிரூபித்தார். அதாவது மனிதன் மிருகங்களை விட உயர்ந்தவன் என்பதை செய்கையில் காட்டினார்.
எவ்வளவு கசப்பான ஒப்பந்தங்களைச் செய்து கொள்ள நேர்ந்த போதிலும், அதன் மூலம் எவ்வளவு ஏமாற்றங்கள் ஏற்பட்ட போதிலும், மாறுபட்ட கருத்துடையவர்கள், எதிரிகள், வன்முறையைக் கைவிட்டுப் பேச்சு வார்த்தை நடத்துவதே நாகரீகம் அடைந்த மனிதனின் செயல் என்று நடைமுறைப் படுத்தினார். இந்த நடைமுறை இது அவர் வாழ்வின் செய்தி.
ஒரு வன்முறையாளன் அவர் வாழ்வை முடித்துவைத்தான் என்பது முரண் ஆனாலும், தன் உயிரை விட தன் செய்தியை (அது அவர் வாழ்வே) மிகவும் நேசித்தவர். அந்த செய்தி என்றும் இருக்கும்.
இந்த நேரத்தில் ஈழத்திலும், மேற்கு வங்கத்திலும் நிகழும், நிகழ்ந்த வன்முறையை கருத்தில் கொள்வது மிகப் பொருத்தம். பிரபாகரனும் அவர் சார்ந்த இயக்கமும், மாவோயிஸ்டுகளும் வன்முறை ஒன்றே வழி என்று சொல்வதால் செயல்படுவதால் உயிர் இழப்புகளைத்தவிர எதுவும் நிகழ வாய்ப்பில்லை. ஈழத்தில் இறந்த தியாகிகளின், மாவோயிஸ்டுகளின் தன்னலமற்ற தன்மை பாராட்டுக்குரியதாக இருந்தபோதும் அவர்களின் நடைமுறைத் தந்திரம் இப்படிப் பட்ட தியாகிகளின் தியாகத்தைச் சமூகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாதவாறு செய்கிறது. வீரம் என்பது வன்முறையினால் மட்டும் நிரூபிக்கப் படக்கூடியதல்ல. ஈழத்தில் இறந்து போன ஆயிரக்கணக்கானவர்கள் சத்தியாகிரகத்திலோ, உண்ணாவிரத்ததிலோ இறந்திருந்தால் அவர்களின் தியாகம் இப்போது இருந்ததை விட இன்னும் கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். அப்படிப் பட்ட நடவடிக்கை ஏற்படுத்தும் அற உணர்வு சாதாரணமாக இருந்திருக்காது.
வன்முறையை அரசியல் இயக்கங்கள் கையில் எடுப்பது, நிலைமையை அரசைப் பொறுத்தவரை எளிதாக்கி விடுகிறது. அரசின் வன்முறை தேவையானதாக, தவிர்க்க முடியாததாக மக்கள் மத்தியில் நம்பவைக்க எளிதாகி விடுகிறது. வன்முறையின் மிகப் பெரிய பலவீனம் இதுதான். இதன் மூலம் அரசு அற உணர்வைத் தான் தக்க வைத்துக் கொண்டுவிடுகிறது. காந்தி இந்த தந்திரத்தை மிகச் சாதுரியமான அஹிம்சை என்ற வழியில் முறியடித்தார். அற உணர்வு அவருடைய நடவடிக்கைகளில் இருந்தது. அரசு எப்போதும் தன்னிடம் அற உணர்வு இருப்பதாக உணர அவர் விடவில்லை. அப்படிக் காட்டிக் கொள்ள அவர் அரசை அரசியல் ரீதியாக, தந்திரமாக அனுமதிக்கவில்லை. இப்படிப்பட்ட தலைமையின் தந்திரம் பிரபாகரனிடமோ மாவோயிஸ்டுகளிடமோ இல்லை. இன்றைய நிலையில் காந்தி நமக்கு இதைத்தான் சொல்கிறார்.

Tuesday, December 01, 2009

கல்வி கல்லூரி கட்டுப்பாடு காதல், கற்பு இன்னபிற.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் அறிவு மனிதனின் அறிவுதேட்டத்தை, தாகத்தை, வாழ்வு மற்றும் சூழல் குறித்த புரிதலை வளர்க்கவேண்டும் என்பது தான் அவற்றை அமைப்பதற்கான காரணம், குறிக்கோள். நமது வசதிக்காக அறிவியல், சமூகவியல் போன்ற பெயர்களாக, துறைகளாக பிரித்தாலும் அறிவும் ஞானமும் அப்படிப் பிரிக்கக் கூடியவை அல்ல. நமது கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே உள்ள தகவல்களைப் புகட்டும்/திணிக்கும் இடங்கள் என்ற வரையறையில் தான் இங்கு செயல் பட்டுக் கொண்டு இருக்கின்றன. அறிவைத் தேடும் இடங்கள் என்று மாற்றி அமைத்தால் தான் கல்வியின் உண்மையான குறிக்கோள் நிறைவேறும். ஞானத்தைத் தேடும் எந்த இடத்திலும் இருக்க வேண்டியது சுதந்திரம். சுதந்திரமும், சிந்தனையும் மிக நெருங்கியவை. இந்தச் சுதந்திரம் நமது கல்லூரிகளில் பல்கலைக் கழகங்களில் இருக்கிறதா?
இப்போது இருக்கும் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் இருக்கும் பல கட்டுப்பாடுகளுக்கும், கல்வியின் முதற்பணியான அறிவுத் தேடலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
கல்லூரிகள் தொழிற்துறைக்கான வேலையாட்களைத் தயார் செய்யும் அறிவுத் தொழிற்சாலைகளாக மாற்றப்பட்டு இருக்கின்றன. ஓரளவுக்கு இது தேவை என்றாலும் இதுமட்டுமே கல்வியின் பணி அல்ல. தகவல் தொழில் நுட்பப் பட்டதாரிகள் தொழிற்துறைக்குத் தேவை என்று நாம் பல்லாயிரக்கணக்கான தகவல், தொழிற்நுட்பத் துறைசார்ந்த கணிணியியல் பட்ட்தாரிகளை உருவாக்கிவிட்டோம். அவர்களும் நன்றாகச் சம்பாதிக்கிறார்கள் நல்லது. இருபத்தி ஒராம் நூற்றாண்டில் ஒரு நாட்டுக்கு கணிணி வல்லுனர்கள் மட்டும் போதுமா? மிகச் சிறப்பாகப் பயிலும் அனைவரும் தொழில்நுட்பக் கல்வி பயிலப் போய்விட்டால், மற்ற துறைகளில் மிகச் சிறந்த மாணவர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் தேவை இல்லையா? இலக்கியத்துக்கோ, வரலாற்றுக்கோ, சமூகவியலுக்கோ மிகச்சிறந்த மாணவர்களின் தேவையில்லையா?
இப்படிக் கேள்விகளை நமது கல்வியாளர்கள் ஏன் கேட்கவில்லை? கேட்டார்களெனின் பெற்ற விடை என்ன? நிலைமையை மாற்ற என்ன செய்திருக்கிறார்கள்? இந்தக் கேள்விகள் நமது ஊடகங்களில் எழவே இல்லை. இந்தக் கேள்விகளை அதற்கான பதில்களை, புதிய தலைமுறையினர் சந்திக்கவேண்டும்.
மிகச்சிறப்பாக இயற்பியல் படிக்கும் மாணவன் இயற்பியலில் கல்வியைத் தொடராமல், தொழில்நுட்பப் படிப்பைப் படிப்பதால் அவனுக்கு லாபம் என்றாலும் தேசத்துக்கு நட்டம்தானே? தனிமாணவனைக் குறை சொல்ல முடியாது. அவன் நல்ல சம்பளம் பெறும் இடத்தில் தான் சேருவான். அந்த மாணவனைப் பொறுத்தவரை அதுதான் சரி.
அடுத்த தலைமுறையினருக்கு ஆங்கிலம், தமிழ் வரலாறு, இயற்பியல், வேதியியல் கணிதம் கற்பிக்க பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மிகச் சிறந்த ஆசிரியர்கள் தேவை இல்லையா? மிகச் சிறந்த மாணவர்கள் அனைவரும் இந்தத் துறைகளைத் தவிர்த்தால், நல்ல ஆசிரியர் வேலைக்கு யார் வருவார்கள்? நல்ல ஆசிரியர்கள் இந்தப் பாடங்களைக் கற்பிக்க வில்லையென்றால் அடுத்த தலைமுறைக்கு தேர்ந்த தொழில்நுட்பப் பாடங்களைப் படிக்கும் மாணவர்களை யார் தயார் செய்வார்கள்? ஆங்கிலம் கணிதம் இயற்பியல் வேதியில் பாடங்களுக்கும் பொறியியல் பாடங்களுக்கும் உள்ள உறவு எல்லோரும் அறிந்தது தானே.
எனவே அறிவியல் பாடங்களை படிப்பதற்கும், ஆசிரியப்பணி செய்வதற்கும் நமது மிகச்சிறந்த மாணவர்களை ஊக்குவிப்பது அவசியம். நல்ல வருமானம் தான் நல்ல படிப்பாளிகளை ஈர்க்கும் என்றால், ஆசிரியப்பணிகளுக்கும் அத்தகைய ஈர்ப்பை ஏற்படுத்துவது அவசியம்.
பள்ளிகளையும் கல்லூரிகளையும் வியாபாரமாக நடத்தினால், குறைவான சம்பளம் நிறைய வேலை என்று கூலி வேலை செய்வது போல் நடத்தினால் அறிவு எப்படி வளரும்? ஆத்திரம்தான் வளரும். இன்னொன்றையும் பார்க்க வேண்டியிருக்கிறது. இன்று கல்லூரி, பள்ளி நடத்தும் பெரும்பாலோர், அதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று பார்ப்பதிலேயே அவர்களின் கல்வி ஆர்வம் தெரிந்துவிடும். ரவுடிகளாகவும், மோசமான சூதாடிகளாகவும் இருந்தவர்கள் கல்வித்துறைக்கு வந்தால், அங்கே என்ன நடக்கிறது? தாங்கள் ஒழுக்கமாக இல்லாதவர்கள் பெரிய கல்வி நிறுவனங்களை நிறுவி, மாணவர்களுக்கு ஒழுக்கம் என்று அவர்கள் கருதுகிற விஷயங்களைத் திணிப்பது எந்த அளவுக்கு நியாயம்? இவர்களின் மனத் திரிபுகளுக்கும் கல்விக்கும் என்ன உறவு இருக்கிறது?
உதாரணமாக, மாணவனும் மாணவியும் கல்லூரி வளாகத்தில் பேசக்கூடாது. கல்லூரிப்பேருந்தில் பேசக்கூடாது. (சிரிப்பது என்பது மரணதண்டனைக்குண்டான குற்றம்). அவர்கள் எல்லாம் என்ன சர்க்கஸ் மிருகங்களா? கல்விக்கூடங்களை மருத்துவமனைகளாக ஆக்கிவிடுவார்களா? மதிப்பெண் குறையக் கூடாது. குறைந்தால் பெற்றோரைக் கூட்டி வரவேண்டும். தாளாளர் அவர்களை அவமானப் படுத்துவதைப் மாணவன் சகித்துக் கொண்டிருக்க வேண்டும். இவர்கள் எல்லாம் எந்த நூற்றாண்டில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வியப்பாக இருக்கிறது. எதற்கெடுத்தாலும் வெளிநாடுகளை உதாரணம் காட்டும் நாம் இந்த விஷயத்தில் வெளிநாடுகளைப் போன்று செயல்படமுடியுமா? முடியாதா?
அறிவை வளர்ப்பதை விட்டு, கல்விக்கூடங்களைப் தொழிற்சாலைகள் போல், ஆசிரியர்களைப் பிச்சைக்கார்ர்களைப் போல், மாணவர்களைக் கைதிகளைப் போல், நடத்தும் கல்லூரிகள் நமக்கு அடிமைகளைத்தான் உற்பத்தி செய்து தரும். சுதந்திரச் சிந்தனை, எதையும் கேள்வி கேட்கும் தேடல் இதையெல்லாம் நசுக்கிவிட்டால், புதிய சிந்தனையாளர்கள் எங்கே பிறப்பார்கள்?
பெரிய ஆச்சரியம் என்ன என்றால் பெற்றோர்களுக்கும் இந்த அடிமை வளர்ப்பு முறைதான் பிடித்திருக்கிறது. பையன் சுதந்திரமாகச் சிந்தித்துவிட்டால், போச்சு. காதலித்துவிடுவான். கெட்டுவிடுவான். வரதட்சணை வாங்கமாட்டான். ஜாதிவிட்டு திருமணம் முடித்துவிடுவான். நாம் சொன்னதை செய்ய மாட்டான். சுருக்கமாகச் சொன்னால், நமக்கும் அடிமையாக இருக்க மாட்டான். அவர்களுக்கும் அடிமைதான் வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி இருந்தார்களா? அல்லது எதிர்காலம் அடிமைகளில் காலமாகத்தான் இருக்க வேண்டுமா?
கெட்டுவிடுதல் என்ற விஷயத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. திருமணத்திற்கு முன்னர் உடல் உறவு கொள்ளுதல் என்பது கெட்டுவிடுதல் என்பதாக கருதப் படுகிறது. பன்னிரண்டு-பதின்மூன்று வயதிலிருந்து எழும் இயல்பான, (உணவைப்போலவே தேவையான) இன்னொரு பசியை அடக்கிவைப்பதால் தேவையற்ற மனக்குழப்பமும், உடல் அவதியும் ஏற்படுகின்றன. இந்த பதின் பருவப் பசியை காதலென்று கருதி, திருமணத்தில் அது முடியவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தால், (ஏனேனில் காதல் திருமணத்தில் தான் முடியவேண்டும் அல்லது பெண்ணோ ஆணோ – கெட்டுப் போய்விட்டதாக அர்த்தம்) திருமணம் முடித்து, படித்து முன்னேராமல் பாழாகிற ஆண்களும் பெண்களும் உண்டு. இது பதின்பருவத்தின் பசி என்று உணர்ந்து, அதற்கு வடிகால் கிடைத்தால், அதை அனுபவித்து ஒதுக்கிவிட்டு, மற்ற நேரங்களில் படிப்பையும், வேலையையும் மனஉளைச்சல் இன்றித் தொடரும் வழியே சரியானதெனப் படுகிறது. மற்றும் ஒரு பலனும் உண்டு. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் புரிந்து கொள்ள முடியும். அதனால், கல்விக் கூடங்களில் குறிப்பாக கல்லூரிகளில் பேசக்கூடாது பார்க்கக் கூடாது என்ற தடைகள் இருப்பது மன, சமூக வளர்ச்சிக்கு உதவாது. இப்போது என்ன நடக்கிறதென்றால், இந்தப் பதின் பருவத்துப் பசியை அடக்கமுடியாமல் அனுபவிக்கவும் முடியாமல், மன அழுத்தத்துடன் இந்தப் பருவத்தைக் கழிக்கும் இளம் வயதினரைத்தான் காண்கிறோம். பெண்களைப் பற்றி ஆண்களுக்கும் ஆண்களைப் பற்றிப் பெண்களுக்கும் இருக்கும் பல தவறான புரிதல்களுக்கு இது தான் காரணம். நமது கலாச்சாரம் இப்படி இருந்ததில்லை. இலைமறை காயாகவும் நேரடியான விழாக்கள் மூலமாகவும் நடந்தே வந்திருக்கிறது. இப்போதும், இந்த வயதினர் வாய்ப்புக் கிடைக்கும் போது அதைப் பயன்படுத்தவே செய்கின்றனர். நிலைமை இப்படி இருக்க அதை மூடி வைத்து விடுவதால் எந்தப் பயனும் இல்லை. வெளிப்படையாக பிரச்சனைகளைப் பேசினால் தான் இது வெளிவரும்.
மேலும் கற்பு என்ற கருத்தே மிகவும் அயோக்கியத்தனமாகத்தான் சமூகத்தில் கையாளப்படுகிறது. பலருக்கும் இதே கருத்து இருந்தாலும் சொன்னால், குஷ்புவுக்கு நேர்ந்த கதி நேரும் என்று பயந்துபோய் சொல்லாமல் இருக்கின்றனர்.
பெண் உடல் பெண்ணுக்குச் சொந்தமானது. குறிப்பிட்ட வயதுக்கப்புறம் அவள் அதை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். அது போலவே ஆணுடலும் ஆணுக்குச் சொந்தமானது. இப்போது உடல் இச்சையைப் பொறுத்தவரை திருமணம் ஒன்றுதான் சமூகத்தால் அனுமதிக்கப் பட்ட முறை. அது பெற்றோர் கையில் ஒரு அடக்கியாளும் ஆயுதமாக கையாளப்படுகிறது. வரதட்சணை,(பெரும்பாலான) மாமியார்-மருமகள் சண்டைகள், போலிச் சடங்குகள் அவற்றை நிறைவேற்றுவதில் ஆடம்பரம், (பணம் இல்லாதவர்களைப் பொறுத்தவரை) வெட்டிச் செலவுகள், அனைத்தும் இதன் விளைவுகள். முதல் முதலாக பெண்ணை அல்லது ஆணை திருமணத்தன்று இரவில் சந்திக்கும் ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு இல்லறம் நடத்த வேண்டிய அளவு மன, உடல் பக்குவம் திடீரென்று எப்படி வரும்?
இப்போது எழும் புதிய தலைமுறை இதையெல்லாம் மீற எத்தனிக்கிறது. அது நல்லதென்றேபடுகிறது. காதல் திருமணங்கள் அதிகமாகி வருகின்றன. குறிப்பாக, தகவல் தொழிற்நுட்பக் கணிணித்துறையில், சமூக கட்டுக்களை உடைத்தல் இயல்பாக நடைபெறுகிறது. உடலுறவு என்பது தேனீர் குடிப்பது அல்லது உணவு உண்பது போன்று நடைபெறும் நிலையில் அது தனக்கான சரியான இடத்தை அடைகிறது. எந்த கலாச்சார மேதை, கலாச்சாரப் போலீஸாராலும் கட்டுப்படுத்த முடியாத வகையில் இது மேலெழும். இளைஞர்களின் பாதை புதியதாகவும், சமூகத்துக்குத் தேவையானதாகவும் இருக்கிறது.
உடனே கூக்குரல் எழும். காட்டுமிராண்டித்தனமாக வாழ வேண்டுமா? நாம் இப்போது காட்டுமிராண்டிகளாக வாழவில்லை. இனிமேலும் வாழப்போவதும் இல்லை. மனிதகுலம் தனக்கு நல்லது எது என்று காலப்போக்கில் நிர்ணயித்துக் கொள்ளும். எப்படி இப்போது மனிதகுலம் சுற்றுச் சூழலைப் பற்றி யோசிக்கிறதோ அப்படியே உடலுறவு முறைகளைப் பற்றியும் சிந்திக்கும். காட்டுமிராண்டிகள் ஆவோமா என்பது கேள்வி அல்ல. இப்போது இருக்கும் அடக்குமுறைக் காதல்களை மீறி எழுவோமா என்பதே கேள்வி.
யாரையும் யாரும் தெரிந்து ஏமாற்றக்கூடாது. ஒத்து வரவில்லை என்று ஆனபின்னால் அதை மூடிவைத்து என்ன பயன்? பிள்ளைகள் நிலைமை மோசமாகிவிடும் என்பது இன்னொன்று. மனம் ஒன்றியிராத தாய்-தகப்பன் நடுவில் வாழும் பிள்ளைகள் மட்டும் மோசமாக ஆகிவிடாதா? இப்போது ஆகவில்லையா? ஆண்களும் பெண்களும் விவாகரத்துச் செய்துகொள்ளும் வழியை எளிமையாக்கிவிட்டால், பல குடும்பங்களில் மகிழ்ச்சியின்றிக் குமைந்துகொண்டிருக்கும் மனங்கள் அமைதிபெறும். நாம் வாழப்போவதென்னவோ கொஞ்ச வருடங்கள் அதில் மகிழ்ச்சியாகக் கழிப்பதை விட்டு, மனக்கஷ்டத்துடன் ஏன் வாழவேண்டும்? தினமும் சண்டையிட்டு, டென்ஷனாகி, நோய்கள் உண்டாகி, வாடி வதங்கி ஏன் சாகவேண்டும். வாழும் போது சுய கௌரவத்துடன் வாழ வேண்டும்.
இந்தக் காலத்து தலைமுறையும் இதைப்பற்றி சிந்திக்கும் என்றுதான் நினைக்கிறேன்.