Wednesday, November 06, 2013

வேலுச்சாமியின் கோயில்

        வேலுச்சாமி மரத்தடியில் அப்போதுதான் உட்கார்ந்தான்.  வெய்யில் தாழ ஆரம்பித்து விட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தைக் கடத்தி விட்டால், பொழுது சாய்ந்துவிடும்.  காட்டிலிருந்து ஊர்வரை ஆடுகளை ஓட்டிச் சென்று பட்டிகளில் அடைப்பதற்குள் நன்றாக இருட்டி விடும்.  இன்னைக்கு சொல்லும்ப்ப்டியாக எதுவும் நடக்கவில்லை.  ஒரு கொம்புவளைந்த வெள்ளாடு இட்து கால் கெந்திக் கெந்தி நடக்கிறது.  கழுத எங்க இடிச்சதோ தெரியல.  இந்த மந்தையில் மொத்தம் நூற்றிச்சொச்சம ஆடுகள் இருந்தன.  கஞ்சி குடித்த கலையைத்தைத் திறந்து பார்த்தான்.  அதில் ஒன்றும் இல்லை என்று தெரியும் ஆனாலும் பார்த்தான்.  மதியம் நல்ல பசி. ஞாபகம் வந்த்து விரலை உள்ளே விட்டு வழித்து நக்கிவிட்டான்.  புளிச்ச மோர் விட்ட கம்பங்கஞ்சி ருசியாக இருந்தது.  ஆடுகள் இடம்நகராமல் அங்கேயே நின்று கொண்டு மேய்ந்தன. அதுகளுக்கும் தெரியும். போக வேண்டிய நேரம் வந்தாச்சு. 

        சட்டென்று கிழக்கில் புழுதி கிளப்பிக் கொண்டு ஏதோ வண்டி வருவது போலிருந்தது. விரட்டிக் கொண்டு வந்தான்.  யாரென்று தெரியவில்லை.  வில்வண்டிதான்.  எதுக்கு இந்த வேகாத வெய்யில்ல விரட்டிக்கிட்டு வாரான்?  எழுந்து நின்றான். வண்டிப்பாதையில் இருந்து ஒரு நடை தள்ளித்தான் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அவனிருந்த மரத்தடியும் பாதையில் இருந்து தள்ளியே இருந்த்து.  வில்வண்டியின் வேகத்துடனே செம்மண் புழுதியும் கூடவே வந்து கொண்டிருந்தது.  உள் மனத்தில் ஏதோ உறுத்தியது.  வண்டி பாதையில் தன்னைக் கடந்து போய்விடும் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.  வரவர வண்டியின் வேகம் குறைந்து, இவனிடத்திற்கு நேராக வந்ததும் நின்று விட்டது.  வண்டியில் இருந்து நாலைந்து வேட்டி, துண்டு போட்ட நாலு பேர் இறங்கினார்கள்.  ஒருத்தனுக்கும் பெரிய மீசை. நல்ல தாட்டியம். கம்பீரமாக இருந்தாலும் சட்டைத் துண்டேல்லாம் புழுதி படர்ந்திருந்தது.  கூட இருந்தவர்களில் இருவர் ஒல்லியாக இருந்தார்கள்.  இன்னொருத்தன் நடுத்தரமாக குண்டா இருந்தான்.  அவன் கையில் வீச்சரிவாள் இருந்தது. மற்றவர்கள் கையிலும் ஏதாவதொரு ஆயுதம் இருந்ததை அப்போதுதான் பார்த்தான்.  என்ன சிக்கலோ? எவன் மண்டையப் பிளக்க வாரானுகளோ?என்று நினைத்துக் கொண்டே வேலுச்சாமி அவர்களைப் பார்த்தான்.  பெரிய மீசைக்காரன் அவனைக் கைகாட்டி அசைத்து வரச்சொன்னான்.  கையில் இருக்கும் ஆயுதங்களைப் பார்த்த்து “ என்ன சாமி வேண்டும்? என்று மெனக்கட்டு மரியாதை போட்டுக் கேட்டான்.  “வால மயிராண்டி, வந்து பதில் சொல்லுஎன்று நடுத்தரமான ஆள் கூப்பாடு போட்டான்.  மரியாதைக் குறைவாக்க் கூப்பிட்டதற்குக் கோபம் வந்தாலும், அவர்களிடம் அரிவாள், வேல்கம்பு இவற்றைப் பார்த்த்தால், அடங்கித்தான் பேச வேண்டியிருந்த்து.  அவர்களை நோக்கி நடந்தான்.  ‘வெரசா வாலே என்று அவர்களில் ஒருத்தன் மீண்டும் கூப்பாடு போட்டான்.  ஏதாவது பண்ணையாராகத்தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் இந்த மாதிரிப் பேச மாட்டான். இடத்தூர்க்காரனாகத்தான் இருக்க வேண்டும்.  இரண்டு பேர் கையாள் வேற கூட்டிக்கிட்டு வரானே? வேகமாக நடப்பது போல் பாவலாக் காட்டினான்.  அடிக்க கிடிக்க வந்திட்டான்ங்கன்னா? என்று மனதில் ஒருபுறம் ஓடிக் கொண்டிருந்த்து.  சண்டியர்கள் என்ன செய்வார்கள் என்பது தெரியாது. 

        அவன் அருகில் வரும் வரைக்கும் காத்திருக்க பொறுமை இல்லாமல், ‘இங்கிட்டு ஒரு பொண்ணும் பையனும் போறதப் பாத்தியா?என்று கையாள் ஒருவன் கேட்டான்.  இன்னைக்கு ஒருத்தரையும் பாக்கல்லையே?”  ”அப்ப நேத்துப் பாத்தியா?” ”ஆமாஞ்சாமி நேத்து, ஒரு இளவட்டப் பயலும், ஒரு சின்னப் பொண்ணும் அந்தால அந்த கருங்குளம் கம்மாய்க் கரைக்குக் கீழ்ப்பக்கமாப் போய்க்கிட்டிருந்தாக 
“ஏல தேவிடியா மகனே, சரியாச் சொல்லு, ஏதாவது தப்பாச் சொன்ன இங்கெயே மண்டை பிளந்திறும்இப்போது பெரிய மீசைக்காரன் தான் பேசினான்.  அவர்தான் பண்ணையோ? கெட்ட வார்த்தைகளில் திட்டியதைக் கவனத்தில் கொள்ளாமல், “இல்லை சாமியோ, கீழ்ப்பக்கம்தான் போனாக.  கோடித்துணி போட்டிருந்தாக.  நான் இங்கே இருந்துதான் பார்த்தேன்.  “பிறகு இந்தப் பக்கம் வரலை. அந்தால போய்ட்டாங்கன்னு நினைக்கேன். குளத்துக்கு கிழக்க, ஊர்ல கேட்டுப் பாருங்க. குறிமட்டும் தப்பாச் சொன்ன நாளப் பின்ன இங்கிட்டு நடமாட முடியாது.  கால எடுத்துருவோம்பெரிய மீசை அரிவாளைக்காட்டி மிரட்டி விட்டு, வண்டியில் ஏறி விட்டது.  வில்வண்டி கருங்குளம் கம்மாய்க் கரையப் பக்கம் வெகு வேகமாய்ப் போனது. 

        வேலுச்சாமிக்கு ஞாபகம் வந்தது.  நேற்றுச் சீக்கிரமே வந்து விட்டான். வெய்யில் ஏறுவ்தற்கு முன்னால் இங்கே இருந்த போதுதான் ஒரு இளவட்டப் பையன், ஒரு பெண்ணை இழுத்துக் கொண்டு இந்த மரத்தடிக்கே வந்தான்.  “எங்களை இவுக அப்பா ஜமீன் வெள்ளைத்துரை விரட்டிக் கிட்டு வாராக.  பிடி பட்டொம் செத்தோம். என்ற ஓடி வந்த களைப்பில் உட்கார்ந்தார்கள்.  பையன் அரும்பு மீசையுடன் இருந்த இளவட்டம்.  களையாகத்தான் இருந்தான். பொண்ணும் அழகுதான். பத்துப் பதினேழு வயதிருக்கும்.  கழுதக, ஒண்ணு மேல ஒண்டு பாசமாகி, சேர்ந்துக் கிடலாம்ன்னு நினைச்சிருக்கும்.நீங்க ரெண்டு பேரும் யாரு? உங்க ஜமீன் ஐயா எங்கிட்ட வந்து வழி கேட்டு, சொல்லாட்டி என்னை வெட்டிப் போட்டுருவாகளே

இவபேரு இசக்கி. இவதான் புத்தூர் ஜமீந்தாரோட மூத்த மக. நானு அவங்க கொலந்தான். ஆனான் வீட்ல வேல பாக்கே.  எங்க ரெண்டுபேருக்கும் பிடிச்சிப் போச்சு.  அதான் ஓடியாந்திட்டோம்.  அவுக அப்பன் விரட்டி வருவான். அதுக்குள்ள தப்பிக்கணும். 

இந்தப் பக்கம் வந்தீங்கண்ணா எப்படியும் தெரிஞ்சு போகும்.  அந்தால மேக்க போங்க.  மூணு நாலுமைலு நடந்தா அங்கிட்டு கோவில்பட்டி ரோடு வரும்.  உச்சி வெய்யிலுக்குள்ள போனா ஒரு பஸ்ஸுவரும். அதில ஏறிக் கோவில்பட்டி போயிருங்க.  அதுக்கப்புறம் உங்க பொழப்பு.

அவர்கள் அவன் சொன்னதை நம்பி மேற்குப் பக்கம் போய்விட்டார்கள்.   தேடி வந்தவர்களை வேலுச்சாமி கிழக்குப் பக்கம் அனுப்பிவிட்டான்.  வண்டியில் வந்திருந்தால் தட்த்தை வைத்துக் கண்டு பிடித்திருப்பார்கள். நல்ல வேளை நடந்து வந்தார்கள்.  செம்மண் பாதையில், காத்து அடிக்கிற வேகத்தில கால்த்தடம் கூட இருக்காது.  யாரும் மீண்டும் வந்ததில்லை.  

வேலுச்சாமியின் பிழைப்பு அப்படி.  இப்படி இரண்டு மூன்று தடவைகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு முறையும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் எங்கிருந்தாவது செய்தி கிடைத்துவிடும்.  ஓடிப்போனவர்கள் மாட்டிக் கொண்டார்கள்.  இரண்டு பையன்கள் கொலை செய்யப்பட்டார்கள்.  மூன்றாவதில் பையன் பெண் இருவருமே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள்.  வேலுச்சாமிக்கு கொஞ்சநாட்கள மனக்கலக்கமாக இருக்கும். அதற்கு அப்புறம்தான் யார்வந்து கேட்டாலும் வழியை மாற்றிச் சொல்லி விடுவது என்று முடிவு கட்டினான்.  ஆனாலும் உள்ளுக்குள் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும்.  “ஏண்டா வழிய மாத்திச் சொன்னே என்று எவனாவது அரிவாளைத் தூக்கிக் கொண்டு வந்தால், தலை போய்விடும்”.  புள்ளைகளைக் கண்டு பிடிச்ச உடனே அவர்கள் மீதிருக்கும் கோபத்தில், அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் மத்தவுகளுக்கும் வேறொண்ணும் நினைவிருக்காது. 

இப்ப்ப் போன குடும்பம் ராசா குடும்பம் (அதாவது ஜமீன் குடும்பம்).  துப்பாக்கி எல்லாம் வச்சிருப்பாங்க.  அன்று யோசித்துக் கொண்டே இருந்ததில், மந்தையை பட்டிகளுக்குள் அடைத்து, கஞ்சியைக் குடித்துவிட்டுப் படுக்கும் போதுதான் தன்னினைவு வந்தது. அவ்வளவு நேரமும் அவர்களைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தான். சின்னப் புள்ளைக செஞ்சது தப்பா? அல்லது அப்பனும் ஆத்தாளும் செய்றது தப்பா? என்று அவனுக்குப் புரியவில்லை. 

மூணு நாலு மாசம் கழித்துத் தகவல் கிடைத்தது.  தேடிவந்தவங்க புத்தூர் ஜமீன் ஆளுகதான்.  பையனையும் புள்ளையையும் வெட்டிக் கொன்னுட்டாங்களாம்.  இது மாதிரி முன்னால் நடந்திருந்தாலும், வேலுச்சாமிக்கு அந்தப் பெண்ணின் முகம் ஞாபகம் வந்து கொண்டே இருந்த்து.  சின்னப் பிள்ளை. அதைப் போய் வெட்டியிருக்கானே அவுக அப்பன்.  வெளங்குமா? அது தெய்வம் மாதிரி. அந்தப் பிள்ளையின் முகம் அடிக்கடி கனவில் வந்து கொண்டே இருந்தது. ஒருவாரம் கழித்துக் காய்ச்சல் வந்தது. வேலுச் சாமிக்குச் சந்தேகம்.  அந்தப் சின்னப் பிள்ளைதான் ஏதோ வந்து தொந்தரவு பண்ணுகிறது.  மனைவியிடம் மட்டும் சொன்னார்.  “உன்னை சாமியா நினைச்சுக் கும்பிடுதோம்மா. என்னை ஒண்ணும் பண்ணீராத. ஒரு சேவலறுத்து, எங்களால ஏண்ட அளவு பூசை போடுதோம்.  உடம்பை மட்டும் சரியாக்கிரு.  கண்டிப்பாச் செய்தோம்என்று ரெண்டு பேரும் வேண்டிக்கிட்ட மூணாம் நாளு காய்ச்சல் விட்டது.


வேலுச்சாமிக்கு உடம்பு தேறியதும் ஆட்டு மந்தைய மேய்க்கிற இடத்தில ஒரு கல்ல நட்டு, சின்னப் புள்ளைய நெனச்சிக்கிட்டே சேவலறுத்து, பூசை போட்டனர்.  வருசா வருசம் பூசை போடுதோம்னு வேண்டிக்கிட்டு வந்தார்கள். சாமி சில செஞ்சு, பூசை போடற அளவுக்கு வசதி இல்லாததனால, ஒரு மண்ணையும் சாணியையும் கரைத்துப் பூடம் கட்டி வைத்தார்கள். வேலுச்சாமி வருசா வருசம் அங்க கோழி வெட்டி பூசை போட்டு, தன் குடும்பத்துக்கு ஏதும் கேடு வந்துவிடக் கூடாதென்று வேண்டிக் கொள்வார்.  இசக்கி என்ற பெயர் யாருக்கும் தெரியாத்தால் அது விக்கிரகம் வைத்துச் சாமியாகவில்லை. எதற்காகப் பூடம் இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. வருசா வருசம் கொடை கொண்டாட வேண்டும் என்பது பரம்பரைப் பழக்கமாகி விட்டது. இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

Thursday, October 31, 2013

தொலைக்காட்சி

 

       தற்போதெல்லாம், பிரதமராகத் தகுதி உடையவர், நரென்ந்திர மோதியா அல்லது ராகுல் காந்தியா என்ற பிரச்சனை ஊடகங்களில், முக்கியமாக ஆங்கில ஊடகங்களில், அதிலும் குறிப்பாகதொலைக்காட்சி ஊடகங்களில் தலையாய செய்தியாக, விவாதமாக ஆகிவிட்ட்து.

       

        இந்த ஆங்கில ஊடகங்களைப் பார்ப்பவர்கள், இந்தியாவைப் பொறுத்தவரை மத்திய உயர்ந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள்.   நகரங்களில் வாழ்பவர்கள், எந்த மாநிலத்தில் வாழ்ந்தாலும், அந்த மக்களுடைய பண்பாட்டின் கூறுகளில் இருந்து விலகி, உயர்ந்து நிற்பவர்கள்.  சுதந்திரத்திற்குப் பிறகு வெகு வேகமாக வளர்ந்து வந்த இந்த வகுப்பினருக்கு இந்தியா என்ற கருது கோள் மிகவும் விருப்பமானத்7.  இந்தக் கருது கோள் மூலம் அவர்கள் அடைந்த பலன்கள் மிகப்பல>  படித்துவிட்டாலும் தங்களுடைய மாநிலத்தில் குறைந்த வருமானத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. 

 

        தமிழ்நாட்டில்பிறந்தாலும், இந்தியா என்ற பரந்த நாட்டில் எந்த நகரத்தில் இருந்தாலும் பொருளீட்ட வழி இருக்கிறது.  எந்த மண்ணோடும் (மாநிலத்தின் நிகழ்காலத்தோடும்) நேரடியான அரசியல் பொருளாதார பண்பாட்டுத் தொடர்புகளால் நேரடியான பாதிப்புக் கிடையாது.   இவர்கள் இந்தியா என்ற கனவுத் தோணியில் மிதப்பவர்கள். 

       

        இந்த வகுப்பினருக்கு தங்கள் பிரச்சனைகள்தான் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சனைகள்.   உதாரணமாக, விமான நிலையங்களில் கண்ணாடி சரியில்லை, அமெரிக்காவில் இருப்பது போன்ற சாலைகள் இல்லை, ரயில் பெட்டிகள் அழகாக இல்லை, பஸ்கள் சொகுசாக இல்லை. பேரங்காடிகள்(மால்கள்) நிறைய இல்லை.

 

        ஒரு நகரத்தின் முனிசிபல் அரசியல், அல்லது மாநிலத்தின் முதல்வராக யாரிருப்பார் என்பது பற்றி இவர்களுக்கும் இந்த ஊடங்கங்களுக்கும் எப்போதாவது தான் கவலை ஏற்படும்.  இந்த வகுப்பினரும், மற்றப் பெருநகரங்களில் வாழும் இவர்களது தோழர்களூம் நோக்கும் பொதுப் பிரச்சனை, அதிலும் எந்த அரசியல் நடவடிக்கையிலும் இறங்காமல் வாய்வீச்சிலேயே காலந்தள்ளும் பிரச்சனைகள் சில.  மோடியா அல்லது ராகுலா, காங்கிரஸா பி.ஜே.பியா, நீயா நானா, அமெரிக்காவா ரஷ்யாவா? தினமும் நிறைவேறும் நாடகத்தைத் தவிர வேறு பிரச்சனைகள் கிடையாது. இதுவே தமிழ் ஊடகங்களில் கருணாநிதியா, ஜயாவா, ஸ்டாலினா அழகிரியா என்று இடம்பிடிக்கும்.  அரசியல் என்பதை இப்படிச் சில தனி நபர்களின் பிரச்சனைகளாகச் சுருக்குவதில் ஊடகங்களுக்குப் பெரும் வசதி உண்டு. இப்படி எல்லா விஷயங்களையும் எளிய கதாநாயகன் வில்லன், இன்னும் சொல்லப் போனால், (இராமாயாணமாக, அதாவது,) இராமன், இராவணன் என்ற இரட்டை நிலையில் பார்ப்பது வசதியாக இருக்கும்.  இப்படித் தெருச்சண்டையைப் போல் மாற்றினால் தான் காட்சிப் பொருளாக( Spectacle) மாற்ற முடிகிறது.  சிக்கல்களை விவாதிக்க ஆரம்பித்தால், நேயர்கள் புரிந்து கொள்ளத் தடுமாறுவார்கள். அவர்கள் புரிந்து கொள்ளும் வித்த்தில், அதாவது தெருச்சண்டை வடிவத்தில் கொடுப்பதே ஊடகங்களூக்கு நல்லது. பார்ப்பவர்கள் எண்ணிக்கை பெருகும் வருமானம் பெருகும்.  இந்தப் பின்னணியில் தான் அரசியல் செய்திகள், விவாதங்கள் அளிக்கப் படுகின்றன.

 

        தெருச்சண்டை ஊடகங்கள் என்று இவற்றைச் சொல்லாமா?