Thursday, September 24, 2009

அழகு


முன்நாளில் ஆல்ஃபிரட் என்ற சிற்பி இருந்தான். விலை மதிப்புள்ள தங்கப் பதக்கம் வாங்கிய புகழ்பெற்று, இதாலிக்குச் செல்லும் உதவித்தொகை கிடைத்து அங்கு சென்று சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்தான். அப்போது இளைஞனாக இருந்தான். பத்தாண்டுகள் கழிந்தாலும் இப்போதும் இளைஞன்தான். திரும்பி வந்ததும் சின்னத் தீவு நகரமான ஜீலண்ட்’டை பார்க்கச் சென்றான். ஊரில் எல்லாருக்கும் அந்தப் புதியவன் யார் என்று தெரிந்திருந்தது. ஊரிலுள்ள மிகப் பெரிய பணக்காரர் அவனுக்காக ஒரு விருந்து வைத்தார். ஊரிலுள்ள முக்கியமானவர்கள் சொத்த்து உள்ளவர்கள் அனைவரும் அழைக்கப் பட்டிருந்தனர். ஊரில அது பெரிய விசேஷம். அதனால் அதுபற்றி எல்லோருக்கும் தெரிந்திருந்தது. தண்டோரா போட்டு அறிவிக்க வேண்டியிருக்கவில்லை. வேலைக்காரப் பையன்கள், ஏழைகளின் குழந்தைகள், ஏழைகள், வீட்டின் முன்னால் நின்று வெளிச்சம் வரும் ஜன்னல்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். காவல்காரன் தான் விருந்து கொடுப்பதாக கற்பனை செய்து கொள்ளலாம். தெருக்களில் அவ்வளவு கூட்டம் இருந்தது. சிற்பி ஆல்ஃபிரட் அங்கு இருந்ததால், ஒரே கொண்டாட்டமாக இருந்தது. வீட்டுக்குள்ளும் அப்படித்தான். அவன் பேசும் போதும் கதைகள் சொல்லும் போதும் மிக மகிழ்ச்சியுடன் பெரும் வியப்புடன் எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தனர். அதில் குறிப்பாக ஒரு கடற்படை அதிகாரியின் விதவை மற்ற அனைவரையும் விட மிக மரியாதையாக அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். மையை உறிஞ்சும் பிளாட்டிங் பேப்பர் போல ஆல்பிரட் சொல்வதனைத்தையும் உறிஞ்சினாள். இன்னும் பேச வேண்டுமென்று விரும்பினாள். ரொம்பவும் பாராட்டினாள். ஒன்றுமே தெரியாத அசடு.
“நான் ரோம் நகரைக் பார்த்தே ஆகவேண்டும். வெகு அழகான நகரமாக இருக்கவேண்டும் இல்லையென்றால் இவ்வளவு வெளிநாட்டினர் அங்கே போய்க்கொண்டிருக்க மாட்டார்கள். ரோம் நகரைக் கொஞ்சம் வர்ணியுங்களேன். அதன் வாசலின் நுழையும்போது எப்படி இருக்கும்?” என்று கேட்டாள்.
“என்னால் சரியாக வர்ணிக்க முடியாது. ஆனால் நீங்கள் உள்ளே நுழையும்போது பெரிய திறந்தவெளியின் நடுவில் ஆயிரம் ஆண்டு பழமையான சதுரமான ஞாபகச்சின்னம் இருக்கும்.”
“இசைக்கலைஞனா?” வியந்து கேட்டாள் அந்த மாது. அவள் அதுவரை ஞாபகச் சின்னம் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. விருந்தினர்களில் பலருக்கு சிரிப்பை அடக்குவது கடினமாக இருந்தது. சிற்பியும் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளக் கஷ்டப்பட்டான். அவன் உதட்டிலிருந்த புன்னகை மறைந்து விட்டது.
அப்போது கேட்பதில் ஆர்வமுள்ள அந்தப்பெண்ணின் அருகில் கருநீலக் கண்கள் இருப்பதைப் பார்த்தான். அவளைப் போன்ற பெண்ணைப் பெற்றவள் ஒன்றும் தெரியாதவளாக இருக்க முடியாது. அம்மா கேள்விகளின் ஊற்று. மகள் ஒன்றும் பேசாமல் கேட்டுக் கொண்டேஇருந்தாள். நீரூற்றின் அருகில் இருக்கும் பெண் பொம்மை போல் இருந்தாள். என்ன அழகு? சிற்பி படிக்க விரும்பும் சிற்பம். பேசுவதற்கல்ல. அவள் பேசவே இல்லை,
“போப் ஆண்டவருக்கு பெரிய குடும்பமா?” என்று கேட்டாள் அந்த அம்மா.
வேண்டுமென்றே வேறோரு கேள்விக்குப் பதில் சொல்வதுபோல் அவன் பதில் சொன்னான் “இல்லை. அவர் மிகப்பெரிய குடும்பத்தில் பிறந்தவர்”
“நான் அதைக் கேட்கவில்லை அவருக்கு மனைவி மக்கள் உண்டா?” அவள் விடவில்லை.
“போப் ஆண்டவர் திருமணம் செய்துகொள்ளமுடியாது”
“அது சரியில்லையே”
அதைவிட கொஞ்சம் புத்தியோடு கேள்வி கேட்டிருக்கலாம். அவள் நினைத்ததைக் கேட்க முடியாவிட்டால் மகள் அவள் தோளில் சாய்ந்துகொண்டு, அழகாக, சோகமான புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருப்பாளா?. ஆல்பிரட் மீண்டும் இத்தாலி பற்றிப், அதன் வண்ணமயமான காட்சிகள் பற்றிப் பேசினான். செந்நிற மலைகள், நீல நிற மத்தியதரைக் கடல், இளம் பெண்ணின் கண்களின் நீல நிறத்தை வெல்லமுடியாத தெற்குவானின் அடர்நீலநிறம்; இதைச் சொல்லும் போது அவன் குரலில் ஒரு மாற்றம் இருந்தது. அதை புரிந்து கொள்ள வேண்டிய அவளோ, அது புரியாமலிருந்தாள். அது கூட ஓரழகுதான்.
“அழகிய இத்தாலி” விருந்தினர்கள் வியந்தனர்.
“அங்கே செல்லவேண்டும்” என்றனர் பலர்
“என்ன அழகு அங்கே” என்று எல்லொரும் ஆமோதித்தனர்.
ஒரு வேளை ஒரு லட்சம் டாலர் லாட்டரி பரிசு எனக்கு விழலாம். அப்போது, நான், என் மகள், நீங்கள் மூவரும் பயணம் போகலாம். நீங்கள் தான் வழிகாட்டியாக இருக்கவேண்டும். சில நண்பர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்”. அவள் தலை அசைத்ததைப் பார்த்து ஒவ்வொருவரும் தங்களைத்தான் கூட அழைக்கிறாள் என்று நினைத்தனர். “கண்டிப்பாகப் போகவேண்டும் கொள்ளைக்காரர்கள் இருக்கும் இடங்களுக்குச் செல்லக் கூடாது. ரோமுக்கு மட்டும் போவோம். பொது இடங்களில் தான் பாதுகாப்பு”.
மகள் மெலிதாகப் புன்னகைத்தாள். அந்தப் பெருமூச்சில் எவ்வளவு இருக்கிறது? அல்லது எவ்வளவு அர்த்தம் அதில் காண்பது? இளைஞர்கள் அதில் பெரும் அர்த்தங்கள் கண்டனர். அவனுக்காக ஒளிவிடும் அந்த நீலநிறக் கண்களில், பல புதையல்கள், இதயத்திலும், மனதிலும் ஒளிந்திருக்கும் புதையல்கள், ரோமின் பெருமைகளைவிட நிறைவுதரும். அன்றிரவில் விருந்து முடிந்து போகும்போது அவன் அவளிடம் தன்னை இழந்துவிட்டிருந்தான். அவன் அடிக்கடி செல்லும் இடமாக ஆகிவிட்டது கடற்படைத்தளபதியின் விதவை வீடு. அவனும் விதவையும் பேசிக் கொண்டிருந்தாலும், அவளுக்காக அவன் அங்கு போகவில்லை என்பது புரிந்துவிட்டது. மகளைப் பார்க்கத்தான் வந்தான். அவளைக் கேலா என்று அழைத்தார்கள். அவளுடைய பெயர் கரன் மலேனா. இரண்டு பெயர்கள் சுருங்கி ஒரு பெயராகி விட்டது. அவள் ரொம்ப அழகு. ஆனால் கொஞ்சம் மக்குஎன்று சொன்னார்கள். காலையில் நேரம் கழித்தே எழுந்திருப்பாள்.

அவளுக்குப் பழக்கமாகிவிட்டது. அவள் மிக அழகு. அதனால் சீக்கிரம் களைத்துவிடுகிறாள். வெகு நேரம்வரை தூங்குகிறாள் ஆனால் கண்கள் அதனால்தான் மிகவும் தெளிவாக இருக்கின்றன
அந்தக் கண்களின் ஆழத்தில் எவ்வளவு சக்தி மறைந்துகிடக்கிறது. அமைதியாக இருக்கும் நீரில் ஆழம் அதிகம் என்ற பழமொழியில் உண்மையிருப்பதை அந்த இளைஞன் கண்டுகொண்டான். அவன் தன்னுடைய சாகஸங்களைச் சொன்னான். அவர்கள் சந்தித்த முதல் நாளில் கேட்டமாதிரியே அம்மா எளிய கேள்விகளை கேட்க விரும்பினாள். அவன எதைப் பற்றிப் பேசினாலும் கேட்பது இன்பமாக இருந்தது. நேபிள்ஸ் நகரின் வண்ணத் தட்டுகளைக் காட்டினான். வெசூவியஸ் மலைக்கு போனதைப் பற்றியும் அந்த எரிமலை தீயை உமிழ்ந்தது பற்றியும் பேசினான். கடற்படை அதிகாரியின் விதவை அவை பற்றி முன்னர் கேள்விப்பட்டதே இல்லை.
“அடக் கடவுளே அப்ப எரியும் மலை. அதற்குப் பக்கத்தில் வாழும் மக்களுக்கு ஆபத்து இல்லையா?” என்று ஆச்சரியத்தில் கேட்டாள்.
ஹெர்குலினியம் பாம்பீ பெரிய நகரங்கள் முழுதாக அழிந்துபோயிருக்கின்றன
பாவம் அந்த மக்கள். நீங்கள் உங்கள் கண்களால் அதையெல்லாம் பார்த்தீர்களா?”
“இந்தப் படங்களில் இருப்பதைப் போல் எரிமலை பொங்குவதைப் பார்த்ததில்லை.
நான் பார்த்த எரிமலை பொங்குவதைப் படமாக வரைந்திருக்கிறேன் அதைக் காட்டுகிறேன்.
பென்சிலால் வரைந்த படத்தை மேஜையில் வைத்தான். வண்ணப் படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த்த அந்த அம்மா, வெளிறிய பென்சில் படத்தைப்பார்த்து இன்னும் கலக்கமடைந்தாள்”அது வெள்ளை தீயை வீசி எறிவதைப பார்த்தீர்களா?”

ஒரு நொடி ஆல்ஃபிரட்டுக்கு, அந்த அம்மா மீதிருந்த மதிப்பு அதிர்ச்சியில் உறைந்து, குறைந்தது. ஆனால், கேலாவைச் சூழ்ந்திருந்த ஒளியில் தடுமாறிய அவன் அந்த அம்மாவுக்கு வண்ணங்களைப் பற்றித் தெரியாதது ஒன்றும் பெரிதல்ல என்று தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டான். ஏனெனில் அது ஒரு பெரிய விஷயமல்ல. எல்லாவற்றையும் விட மதிப்புள்ள சொத்து கேலாவின் அம்மாவிடம் இருந்தது. அது கேலா’தான்.

ஆல்ஃபிரட்டுக்கும் கேலாவுக்கும் திருமணம் நிச்சயமானது. இயல்புதான். திருமணம் அந்தச் சின்ன நகரத்தின் செய்தித் தாள்களில் அறிவிக்கப்பட்டது. நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அதில் வந்த போட்டோவை அனுப்புவதற்காக, அம்மா முப்பது பிரதிகள் வாங்கினாள். திருமணம் நிச்சயமானது குறித்து, மணமக்களும், அம்மாவும் மகிழ்ந்தனர். தோர்வால்சென்னுடன்* தனக்குத் தொடர்பு ஏற்பட்டதுபோல் தோன்றுவதாக சொன்னாள்.

“நீ தோர்வால்சென்னின் உண்மையான வாரிசு’ என்று அம்மா சொன்னாள். இம்முறை அவள் புத்திசாலித்தனமாக பேசிவிட்டாள் என்று தோன்றியது. கேலா அமைதியாக இருந்தாள். அவள் கண்கள் ஒளிர்ந்தன; உதடுகள் புன்னகைத்தன; ஒவ்வொரு அசைவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது; அவள் அழகாக இருந்தாள். அதையே மீண்டும் மீண்டும் சொல்ல முடியாது. கேலாவையும், அம்மாவையும் போல் நெஞ்சு வரையிலான சிற்பம் செதுக்க முடிவு செயதான். அவன் சொன்னது மாதிரி இருவரும் உட்கார்ந்திருந்தனர்.அவன் மிருதுவான களிமண்ணை விரல்களால் வடிவமைப்பதைப் பார்த்தனர்.
“நீ எங்களுக்காகத்தான் இதுமாதிரி சாதாரண வேலையை வேலைக்காரர்களிடம் தராமல் நீயே செய்கிறாய் என்று நினைக்கிறேன்”
“நானே வடிவமைப்பது மிகவும் அவசியம்”
ஓ நீ எப்போதுமே ரொம்பப் பணிவு.” அம்மா சொன்னாள்; கேலா அமைதியாக களிமண்ணாக இருந்த அவன் கைகளை அழுத்தினாள்.
அவன் இருவருக்கும் இயற்கையின் அழகைப் பற்றிச் சொன்னான். படைப்பில் உயிரினங்கள் உயிரற்ற பொருட்களைவிட மேன்மையானவை என்பதையும், பொருட்களைவிட செடிகொடிகள், செடிகொடிகளை விட மிருகங்கள் அனைத்துக்கும் மேலாக மனிதன் என்பதை குறிப்பிட்டான். மனதின் அழகை எப்படி வெளியே காட்டமுடியும் என்று காட்ட முயன்றான். அழகு வெளிப்படும் விதத்தைப் புரிந்துகொண்டு சிற்பி தன் சிற்பதில் காட்டுகிறான் என்றும் சொன்னான். கேலா அமைதியாக ஆனால் அவன் சொன்னது சரியென்று தலையை அசைத்துக் கொண்டு இருந்தாள். மாமியார் சொன்னாள் “நீ சொன்னது ஒன்றும் புரியவில்லை. ஆனால் கேட்டுக் கொண்டே இருந்தேன். நீ சொன்னது கேட்டுத் தலை சுற்றுகிறது. என்னால் முடிந்தவரை புரிந்து கொள்ள முயன்றேன்”.
கேலாவின் அழகில் ஆல்ஃபிரட் மயங்கிவிட்டான். அது ஆன்மாவில் நிறைந்து அவனை அடிமையாக்கி விட்டது. கேலாவின் உடம்பிலிருந்து அழகு ஒளிவிட்டது. கண்களில் பளபளத்தது. இதழ்களின் ஓரத்தில் மறைந்திருந்தது. விரல்களின் ஒவ்வொரு அசைவிலும் கலந்திருந்தது. ஆல்ஃபிரட் என்ற சிற்பி அதைக் கண்டான். அவளையே நினைத்தான், அவளிடமே பேசினான், இருவரும் ஒன்றாகிவிட்டனர். அதனால் இப்படியும் சொல்லலாம். அவள் நிறையப் பேசினாள், ஏனெனில் அவன் எப்போதும் அவளிடமே பேசினான், அவர்கள் இருவரும் ஒன்றுதான். நிச்சயதார்த்தம், திருமணம், மணப்பெண்ணின் தோழியர், பரிசுகள், எல்லாம் திருமண உரையில் குறிப்பிடப்பட்டது.
மாமியார் தோர்வால்சென்னின் மார்பளவுச் சிலையை மேஜையின் ஒரு ஓரத்தில்வைத்தாள். அவன் விருந்தினனாக இருக்க வேண்டும் என்பது அவள் விருப்பம். பாடல்கள் பாடினர், மகிழ்ச்சிக் கூச்சலிட்டனர். கோலாகலத்திருமணமாக இருந்தது. அவர்கள் அழகான ஜோடி. “பிக்மலியன் தனது கலாடியை காதலித்தான் என்றிருந்தது ஒரு பாடல்.

“ஓ அது உங்கள் புராணக் கதைகளில் ஒன்று”, என்றாள் மாமியார்.
அடுத்தநாள் புதிய தம்பதிகள் இருவரும் கோபன்ஹாகன் நகருக்குப் புறப்பட்டனர். அங்குதான் அவர்கள் குடியிருக்கவேண்டும். வீட்டில் கடமுட வேலைகள்- வீட்டு வேலைகளை மாமியார் அவ்வாறுதான் குறிப்பிட்டாள்- செய்வதற்காக மாமியாரும் உடன் சென்றாள். அங்கே எல்லாம் புதியதாக பளிச்சிட்டன. கேலா கொலுவிலிருக்கும் பொம்மைபோல் இருந்தாள். மூவரும் ஓரிடத்தில் அமர்ந்தனர். ஆல்ஃபிரட், பழமொழியில் சொல்வது போல வாத்துக்களின் நடுவில் அன்னம் போலிருந்தான். மாய உருவம் அவனை மயக்கிவிட்டிருந்தது. உள்ளிருப்பது என்னவென்று கேட்க விருப்பமின்றி முடியிருந்த பெட்டியைப் பார்த்தான். அப்படிச் செய்வது திருமண வாழ்வில் பெரும் துன்பத்தைத்தரும். பெட்டி அடிபட்டிருக்கக் கூடும், பூச்சு உதிர்ந்து விடலாம். அதை வாங்கியவன் வருத்தப்படலாம்.
பெரிய விருந்தின்போது ஒரு பட்டன் பிய்ந்தபின் அதை சரிபண்ண ஒன்றும் செய்ய முடியாதிருந்தால்; அதைவிட மோசமான நிலை. உங்கள் மனைவியும், மாமியாரும் முட்டாள்த்தனமாக பேசிக்கொண்டிருக்க, அவர்களின் முட்டாள்த்தனத்தின் விளைவை உங்களுடைய புத்திசாலித்தனமான பேச்சால் சரிக்கட்டிவிட முடியாது.
இளம் தம்பதியர் அவ்வப்போது கைகோர்த்து உட்கார்ந்திருந்தனர். அவன் பேசுவான். அவள் எப்போதாவது இசைபோன்ற தன் குரலில் ஒரு வார்த்தை, மணியொலிபோலச் சொல்லுவாள். சோஃபி என்ற அவள் தோழி வந்தது மனசுக்கு நல்லதாகப் போயிற்று. சோஃபி ஒன்றும் அழகல்ல. ஆனால், உடல் அமைப்பில் எந்தக் குறையும் இல்லை. அவள் கொஞ்சம் கோணல்புத்திக்காரி என்று கேலா சொல்லுவாள். ரொம்ப நெருங்கியவர்கள் தவிர யார் கண்ணிலும் அது படாது.
அவள் புத்திசாலிப் பெண். இந்த வீட்டில் ஒரு ஆபத்தான பெண்ணாக ஆகிவிடக்கூடிய நிலை இருந்தது அவளுக்குப் மனதில் படவில்லை. அவள் வந்தது அந்தப் பொம்மைகளின் வீட்டில் புதிய சூழலை ஏற்படுத்தியது. அந்த மாற்றம் எல்லோருக்கும் தேவைதான். அது எல்லோருக்கும் புரிந்தது. அதனால் தம்பதிகளும் அம்மாவும் இத்தாலிக்குச் சென்றனர்.
“நமது வீட்டின் நான்கு சுவர்களுக்குள் வந்ததற்கு கடவுளுக்கு நன்றி” ஒரு வருடத்திற்குப் பின் வீடு திரும்பிய அம்மாவும் மகளும் சொன்னார்கள்.
“பயணம் செய்வது உண்மையான மகிழ்ச்சியைத் தரவில்லை” அம்மா தொடர்ந்தாள். “உண்மையைச் சொல்வதானால், அது மிகவும் களைப்பைத்தருகிறது; அப்படிச் சொல்வதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். என் குழந்தைகள் என்னுடன் இருந்தாலும் சீக்கிரத்தில் நான் களைத்துவிட்டேன். அது மட்டுமல்ல ரொம்பச் செலவாகிறது இந்த வேலைக்கு, ரொம்ப. எல்லா கவின்கலைக்கூடங்களுக்கும் செல்லவேண்டியிருக்கிறது. ஏகப்பட்ட விஷயங்களுக்குப் பின்னால் ஓடவேண்டியிருக்கிறது. செய்தே ஆகவேண்டிய வேலைகள். இல்லை என்றால் மானம் போய்விடும். திரும்பி வந்ததும் எல்லாவற்றையும் பார்த்துவிட்டீர்களா என்று கேட்டுவிட்டு, இருப்பதிலேயே முக்கியமானதைப் பார்க்காமல் வந்துவிட்டீர்களே என்று சொல்வார்கள். மாறி மாறி மடொன்னாக்களையே பார்த்துக் களைத்துவிட்டேன். நானே மடொன்னாவாகி விட்டேனோ என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன்”.
“அப்புறம், வாழ்க்கை, அம்மா” கேலா சொன்னாள்.
“ஆமா, நல்ல கறி சூப் கூட கிடையாது. சமையல் ரொம்ப மோசம்”
இந்தப் பயணத்திலும் கேலா களைத்தாள். எப்போதுமே அவள் களைப்படைந்து காணப்பட்டாள். அதுதான் ரொம்ப மோசம். சோஃபிக்குச் சொல்லிவிட்டார்கள். அவர்களுடன் அவள் தங்கிக்கொண்டாள். அவள் இருந்தது ரொம்ப வசதியாக இருந்தது. வசதி குறைந்த அவளிடம், எதிர்பார்க்க முடியாத குணங்கள் அவளிடம் இருந்தன. மாமியார் ஒத்துக் கொண்டாள், அவள் புத்திசாலியான பெண் மட்டுமல்ல. நிறைய விஷயங்களைத்தெரிந்து வைத்திருந்தாள். கெட்டிக்காரி. கருணை உள்ளம் கொண்டவள்; நம்பிக்கைக்குரியவள். கேலாவுக்கு உடம்பு சரியில்லாமல் வெளிறிக் கிடந்த நாட்களில் இதெல்லாம் வெளிப்பட்டன. மேல்மூடிதான் எல்லாம் என்னும் போது, அது நல்லதாக இருக்க வேண்டுமல்லவா? அல்லது எல்லாம் முடிந்துவிடும். அப்படித்தான் மேல்மூடியின் கதை முடிந்துவிட்டது. கேலா இறந்துவிட்டாள்.
“அவள் ரொம்ப அழகு” அம்மா சொன்னாள்; “புராதன அழகு என்று சொல்லும் அனைத்தையும் விட வேறு மாதிரியான அழகு, ஏனெனில் புராதனப் பொருட்கள் ரொம்ப சேதமடைந்திருக்கும். எழில் மிகவும் கச்சிதமாக இருக்கவேண்டும். அவள் கச்சிதமான அழகு.
ஆல்ஃபிரட் அழுதான். அம்மாவும் அழுதாள். துக்கநாள் அனுசரித்தனர். அம்மாவுக்கு கறுப்பு உடை நன்றாக இருந்தது. ரொம்ப நாள் அதை அவள் அணிந்திருந்தாள். அவள் இன்னொரு துயரத்தையும் அனுபவிக்க வேண்டியிருந்தது. ஆல்ஃபிரட் இன்னொரு திருமணம் செய்துகொண்டான். அதுவும் பார்க்க ஒன்றுமில்லாத சோஃபியை. “ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்கே சென்றுவிட்டான் ரொம்ப அழகிலிருந்து, ரொம்ப கோரத்திற்குச் சென்றுவிட்டான். முதல் மனைவியை மறந்துவிட்டான். ஆண்கள் நிதானமற்றவர்கள். என் கணவர் மிக வித்தியாசமானவர். ஆனால் எனக்கு முன்னால் போய்ச்சேர்ந்துவிட்டார்.
“பிக்மாலியன் கலேட்டியைக் காதலித்தான் என்று என் திருமணத்தில் பாடினார்கள்”. ஆல்ஃபிரட் தொடர்ந்தான். முன்னால், என் கைகளில் உயிர்பெற்று எழுந்த, அழகிய சிலையைக் காதலித்தேன். ஒரு கனிந்த இதயத்தை, வானிலிருந்து வந்த பரிசை, என்னைப் புரிந்து கொண்டு நம்மை உன்னத நிலைக்கு உயர்த்தும் ஒரு தேவதையை நான் இன்னும் காணவில்லை, அடையவில்லை. சோஃபி, நீ வந்தாய், தேவைக்கு அதிகமாகவே நீ அழகாக இருந்தாலும், வெளிப்படையான பேரழகின் மேன்மையுடன் அல்ல. முக்கிய விஷயம் மீதமிருக்கிறது. சிற்பியின் வேலை மண்ணாலும் தூசியாலும் ஆனது என்று கற்பிக்க வந்தாய். அந்த உருவம் அழிந்துவிடும். நாம் மனதின் ஆத்மாவின் சாரமான உன்னதத்தை அடைய முயலவேண்டும். பாவம் கேலா. போகும் வழியில் ஏற்பட்ட சந்திப்புப் போன்றது எங்கள் வாழ்வு. இன்னொரு உலகில் நாங்கள் மனங்கள் ஒன்றாகி ஒருவரை ஒருவர் அறியும் போது, நாங்கள் பழகியவர்களாகத்தான் இருப்போம்.
“இது மிக அன்புள்ள பேச்சல்ல” சோஃபி தொடர்ந்தாள் “கிறிஸ்தவனுடைய பேச்சுமல்ல. எதிர்காலத்தில் திருமணங்களோ, திருமணம் செய்துகொடுப்பதோ இல்லாத காலத்தில், நீ சொன்னமாதிரி, இதயங்கள் அன்பினால் ஈர்க்கப்படும். எல்லாம் தானாக அழகாக பரிணமிக்கும். வளர்ந்து இன்னும் மேலான நிலைக்கு உயரும். என்னைவிட அதிகமாக உன் ஆன்மாவுடன், இசைவுறும் அளவுக்கு அவளுடைய ஆன்மா முழுமை பெறும். அப்போது நீ முதலில் சொன்னது போல காதலில் ரொம்ப வியந்து சொல்லுவாய் “அழகு என்ன அழகு”.

மொழிபெயர்ப்பு

Saturday, September 19, 2009

டார்வின் பற்றி
ஆயிரத்து எண்ணுற்று ஐம்பத்தி ஒன்பதுக்கு முன்னால் அருட்தந்தை விலியம் பாலே சொன்னதை ஒத்துக் கொள்வது எளிதாக இருந்திருக்கும். அவர் தான் எழுதிய “இயற்கையான் ஆன்மீகம்” என்ற புத்தகத்தில் இப்படி எழுதினார் “உயிர்களைப் படைத்ததே கடவுளின் மாபெரும் செயல்”.. (- குறிப்பாக மனித உயிர்- என்று பொய் கௌரவத்துடன் நாம் சேர்த்துக் கொள்ளலாம்) இன்று இந்த கூற்றைச் சற்று மாற்றிவிடுவோம்: பரிணாமம் தான் பிரபஞ்சத்தின் மாபெரும் செயல். பரிணாமம்தான் உயிர்களின் (பரம)பிதா. இதுவரை இயற்பியல் படைத்த அனைத்தையும் விட உயிர் ஒன்றுதான் மிக வியப்பானது மிக அழகானது. பெயர் தெரியாத யாரோ எனக்கு அனுப்பியிருந்த டி-ஷ்ர்ட்டில் எழுதியிருந்ததைப்ப் போல் பூமியிலேயே மிகப் பெரிய வேடிக்கை. ஒரே விளையாட்டு.

உண்மையாக, பரிணாமம்தான் பிரபஞ்சம் முழுவதிலும் மிகப் பெரிய வேடிக்கை. விஞ்ஞானிகளின் ஊகப்படி, பிரபஞ்சம் முழுவதிலும் பல கிரகங்களில், ஒன்றிற்கொன்று தொடர்பற்று, தீவுகளாக உயிரினங்கள் இருக்க்கின்றன. ஆனால் உயிர்கள் இருக்கும் ஒரு கிரகத்துக்கும் இன்னொன்றுக்கும் தொடர்பேற்படமுடியாத வகையில் பிரபஞ்சத்தின் மிகப்பெரும் வெளியில் அவை பரவி இருக்கின்றன. வேறு எங்காவது உயிர் இருந்தால் அந்த உயிர்கள் டார்வின் சொன்னபடி அமைந்திருக்கும் என்பது ஊகம் என்பதற்கு மேலாக, உண்மையுடன் தொடர்புடையதாக இருக்கும். வேறு உயிர்கள் வாழக்கூடும் என்ற வாதத்தின் வலு, அப்படி உயிர்கள் இருந்தால் டார்வின் சொன்னபடி இருக்கக்கூடும் என்ற வாதத்தின் வலுவைவிடக் குறைந்ததுதான். ஆனால் பிரபஞ்சத்தில் நாம் தனித்திருப்பது சாத்தியமே. அப்படி இருந்தால், மிகப் பெரிய வேடிக்கை நடக்கும் இந்த பூமி பிரபஞ்சத்தில் குறிப்பிடத்தக்க கிரகமாக இருக்கும்.
உயிரின் மிகப்முக்கியமான சிறப்பு என்ன? அது இயற்பியலின் விதிகளை ஒருபோதும் மீறுவதில்லை.( அப்படி மீறல்கள் நடந்தால் விஞ்ஞானிகள் இயற்பியலின் புதிய விதிகளை எழுதவேண்டியுருக்கும் – விஞ்ஞானத்தின் சரித்திரத்தில் இது அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது.) அது கற்பனையை வியக்கவைக்கும் எதிர்பாராத வழிகளில் விஞ்ஞானத்தை முன்தள்ளி இருக்கிறது. நமக்கு உயிர்களைப் பற்றித் தெரியாதிருந்தால், உயிர்கள் இருப்பது சாத்தியம் என்று நம்பியிருக்கமாட்டோம். அது தவிர, உயிர்களே இல்லாவிட்டால், அதை நம்பாமலிருப்பதற்கும் யாரும் இருக்கமாட்டார்கள்.
டார்வினின் பரிணாமக் கொள்கை வெடித்தெழும் முன்னால், இயற்பியலின் விதிகள், கல்லையும்-மண்ணையும், வாயு மேகங்களையும்-விண்மீன்களையும், நீர்ச்சுழல்களையும்-அலைகளையும், நீர்ச்சுழலைப் போன்ற கேலக்ஸிகளையும், அலைகளைப் போல் சென்றுகொண்டே துகள்கள் போல் செயல்படுகிற ஒளியையும் உருவாக்கியிருக்கலாம். சுவராஸியமானதாகவும், வியக்கவைப்பதாகவும் பல நேரங்களில் மர்மமானதாகவும் இந்தப் பிரபஞ்சம் இருக்கிறது. உயிர்கள் இப்போது (நாடகத்தில்) நுழைகின்றன. இயற்பியல் விஞ்ஞானியின் பார்வையில் குதித்தோடும் கங்காரு, விருட்டெனப் பாயும் வவ்வால், குதித்தெழும் டால்பின், உயரப் பறக்கும் பறவை இவற்றைப் பாருங்கள். ஒருபோதும் பாறை குதித்ததில்லை; வண்டுகள் போல் ஊர்ந்து சென்று கற்கள் துணை தேடியதில்லை; மணல் துகள், நீர்ப்பூச்சி போல் நீந்திச் சென்றதில்லை. இந்த உயிர்கள் இயற்பியல் விதிகளின் சிறு புள்ளியைக் கூட மீறியதில்லை. வெப்பஇயக்கவியல் விதிகளை மீறுவதாக சொல்லப் படுவதற்கு மாறாக அவை அவ்விதிகளின்படியே செயல்படுகின்றன. இயக்கவிதிகளை மீறாமல், அவற்றை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மிருகங்கள் நடக்கின்றன; ஓடுகின்றன; திடீரென்று விலகி ஓடுகின்றன; பறக்கின்றன; இரைமீது பாய்கின்றன; ஏமாற்றித் தப்புகின்றன.
ஒருபோதும் இயற்பியல் விதிகளை மீறாமல், உயிர்கள் புதிய விதத்தில் எழுகின்றன. எப்படி இந்த மாயம் நடக்கிறது? பல வியப்பூட்டும் நுண்ணிய விவரங்களில் வேறுபட்டாலும், இவை ஒரே பெயரில் அழைக்கப்பட வேண்டிய அளவுக்கு ஒற்றுமைகளும் உண்டு. இந்த நடைமுறைக்கான ஒரே விடை, டார்வினின் பரிணாம வளர்ச்சி; எப்போதாவது மாறும் தகவல்கள் பொதிந்த நியதிகளின் உயிர்பிழைத்தல். விஞ்ஞானத்தில் வேறுபல விஷயங்கள் எவ்வளவு தீர்மானமாக நமக்குத் தெரியுமோ, அதே அளவு தீர்மானமாக, உயிர்கள் இப்படித்தான் ஜனித்தன என்ற இந்த விஷயமும் நமக்குத் தெரியும். பிரபஞ்சத்தில் வேறு எங்கு உயிர்கள் இருந்தாலும் அவைகளும் இப்படித்தான் ஜனித்திருக்க வேண்டும் என்று என்னால் உறுதியாக சொல்லமுடியும்
உலகத்தின் (உயிர்கள் என்னும்) இந்தப் பெரிய வேடிக்கை, பிரபஞ்சத்தின் மிகப்பெரிய வேடிக்கை அல்ல என்றானால் என்ன ஆகும்? ஒருவேளை, மற்ற கிரகங்களில் வேறு உயிர்கள் இருந்து, அவை நம்மைவிட அறிவாளிகளாகவும், படைப்புத்திறன் அதிகம் உள்ளவர்களாகவும் இருந்து, நாம் அவர்களைக் கடவுளாகக் கருத வேண்டிய நிலையும் ஏற்பட்டு, அவர்களைச் சந்திக்க வேண்டிய அதிர்ஷ்டமோ, துரதிருஷ்டமோ ஏற்பட்டால் என்ன ஆகும்? அவர்கள் உண்மையிலேயே கடவுளாகி விடுவார்களா? மத்திய காலத்து மனிதன் முதல் முதலாக போயிங் 747 விமானத்தையோ, மொபைல் போனையோ அல்லது கூகிள் எர்த்தையோ திடீரெனப் பார்த்திருந்தால் செய்வதுபோல, நாமும் அவர்கள் முன் மண்டியிட்டு துதிபாட நினைப்போமா? பார்ப்பதற்கு கடவுளைப் போலவே அவர்கள் இருந்தாலும், வேற்று கிரக உயிர்கள் கடவுளாக இருக்க முடியாது. ஒரு மிக முக்கியக் காரணம் உண்டு. அவர்கள் பிரபஞ்சத்தைப் படைக்கவில்லை; பிரபஞ்சம், நம்மைப் படைத்தது போலவே அவர்களைப் படைத்தது. எவ்வளவு அதிமனிதனாக இருந்தாலும், எந்த அறிவாலும் படைக்க முடியாத அளவு மிகச் சிக்கலானது இந்த அறிவு. அது புள்ளி இயலின் படி நடக்கவே முடியாதது. எனவே, -உயிரற்ற பிரபஞ்சத்திலிருந்து – மாய மந்திரங்கள் அற்ற- இயற்பியலில், எளிமையாகத் தொடங்கி மெல்ல பல நிலைகளில் வளர்ந்துதான் அறிவு எழுந்திருக்க வேண்டும்.


டார்வினின் பரிணாம தத்துவம் இப்படி (உயிர்) பிறப்பதற்குத் தாதியாக இருப்பதுதான் அதன் மாபெரும் சிறப்பு. இது ஆதிகால எளிமையில் தொடங்குகிறது. படிப்படியான நிலைகளில் வளர்ந்து, சிக்கலான அமைப்பாக எழுகிறது: பார்க்கையில் முடிவற்ற சிக்கலாக-மனிதன் வரைக்கும் சிக்கலானதாக,-அநேகமாக இன்னும் மிகச் சிக்கலானதாக வளர்கிறது. மானுட நிலையைத் தாண்டிய, நாம் கற்பனை செய்யமுடியாத அளவு அதிமானுட நிலையில் உயிர்கள் வாழும் பல உலகங்கள் இருக்கலாம். மானிட நிலையை தாண்டியிருக்கலாம் என்பதற்கு அர்த்தம் இயற்கையைத் (விதிகளைத்) தாண்டிய நிலை என்று கொள்ள முடியாது. டார்வினின் பரிணாம வளர்ச்சி ஒன்றுதான் கடைசியில் சிக்கலான சுயமாக சிந்திக்கும் அறிவை(உயிர்களை) உருவாக்கும் ஒரே வழி என்பதை நாம் அறிவோம். அது அப்படி உண்டாக்கிய பின், இயல்பாகவே அந்த (புத்திசாலி)உயிர்கள் இன்னும் சிக்கலான பொருட்களை உருவாக்கும்; கலைகள், இசை, தொழில்நுட்பம், கணிணி, இணையம், யாருக்கு தெரியும் இன்னும் என்னென்னவென்று. டார்வினின் பரிணாம வளர்ச்சி ஒன்றுதான் பிரப்ஞ்சத்தில் இப்படி படைக்கும் வழி என்பதில்லை. நம்மால் கண்டுபிடிக்கப் படாத, கற்பனை செய்யாத, பல பரிணாம வளர்ச்சிகள் இருக்கலாம். எவ்வளவு வியப்பானதாகவும், வித்தியாசமானதாகவும் இருந்தாலும் அவை ஒருபோதும் மாய மந்திரமாக இருக்க முடியாது. டார்வின் பரிணாம வளர்ச்சியைப் போலவே, ஒருபோதும் இயற்பியல் விதிகளை மீறாமல் எளிமையிலிருந்து சிக்கலானதற்கு எழும் குணாதிசயங்களைக் கொண்டிருக்கும்.
இப்போது கடவுள் எங்கே போவார்? கருணையுடன் சொல்வதானால் அவருக்குச் செய்வதற்கு ஒன்றும் இருக்காது. நம் பாராட்டுக்களை, துதிகளை, பயங்களைக் கோரும் சாதனைகள் ஒன்றுமிராது. பரிணாம வளர்ச்சி என்பது கடவுள் தேவையில்லை என்பதற்கான நோட்டீஸ், வேலை கிடையாது என்பதற்கான சீட்டு. ஆனால் நாம் இன்னும் செல்ல வேண்டியதிருக்கிறது. ஒன்றும் வேலையில்லாத சிக்கலான படைப்பாற்றல் கொண்டது தேவையில்லை என்பது மட்டுமல்ல. கடவுள் என்ற தெய்வீக வடிவமைப்பாளர் (டிசைனர்) குறைந்த பட்சம் அவர் படைத்து விட்ட பொருட்களைப் விளக்குவதற்காகவேனும் அவற்றைப் போல, சிக்கலானவராக இருக்கவேண்டும். கடவுள் சாகவில்லை. அவர் ஒருபோதும் இருந்ததே இல்லை.(இருந்தால் தானே சாக).
இப்போது ரொம்ப நாகரீகமான ஒரு வகை தெய்வீகவாதி சொல்லுவான். ”ஐயோ கடவுளே, கடவுள் இருக்கிறாரா என்று கேட்கும் அளவுக்கு ஒன்றும் புரியாதவரா? கடவுள் இருப்பதும் இல்லாததும் பற்றிப் பேசுவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் வேலையாகிவிட்டதா? விஞ்ஞானத்தின் பார்வையில் கடவுள் இருக்கிறாரா என்பது ஒரு பொருட்டல்ல. முக்கியமானது எதுவெனில் கடவுள் உனக்கும் எனக்கும் இருக்கிறாரா இல்லையா என்பதே. கடவுள் எனக்கு உண்மையாக இருந்தால், விஞ்ஞானம் அவரை வேண்டாதவராக்கிவிட்டதா இல்லையா என்பதைப் பற்றி யாருக்குக் கவலை. அவ்வளவு திமிர். அவ்வளவு மேட்டிமைத்தனம்.”
அது சரி அதில்தான் உங்கள் படகு மிதக்கும் என்றால் நீங்கள் தனித்துறையில் துடுப்பை வலித்துக் கொண்டிருப்பீர்கள். பெரும்பான்மையான உலக மக்களின் நம்பிக்கை மிகத் தெளிவானது. அவர்கள் கடவுள் இருப்பதை நம்புகிறார்கள். ஜிப்ரால்டர் ஜலசந்தியின் பாறையைப் போல் பருப்பொருளாக, சத்தியமாக அவர் இருக்கிறார். ரொம்பப் படித்த மதவாதிகளோ போஸ்ட் மாடர்ன்(பின் நவீனத்துவ) ஆட்களோ தேவையற்ற குப்பை மேட்டிலிருந்து கடவுளைக் காப்பாற்றுவதாக,நினைப்பார்களெனில், அவரின் இருப்பின் மகிமையை குறைத்தார்களெனில், அவர்கள் இப்போது சிந்திக்க வேண்டியதிருக்கும். கிறித்தவக் கோவிலிலோ மசூதியிலோ கடவுளின் மீது அவர்கள் திணித்திருக்கும் குணங்கள் ரொம்ப கோரமாக இருப்பதாக சொன்னால் நீங்கள் ஒரு நாத்திகர் என்று சொல்வார்கள். அவர்கள் சரியாகத்தான் சொல்வார்கள்.
-ரிசர்ட் டாகின்ஸ்-
மொழி பெயர்ப்பு.

Saturday, September 12, 2009

கடைசி மனிதனின் முதல் கதை

முன் குறிப்பு:- இந்த எழுத்து காகிதம் போன்ற ஏதோ ஒன்றில் எழுதப்பட்டிருந்தது. கீழ்க்கண்ட விபரங்களை வைத்து யாருக்காவது ஏதாவது தோன்றினால், எழுதியவனைத் தொடர்பு கொள்ளலாம். அவன் எங்கே என்பது முன்குறிப்பின் ரகசியம்.

இந்தக் கதை ஒரு எதிர்பாராத விதத்தில் என் கையில் கிடைத்தது. நான் யார் என்பதை இப்போதே சொல்லிவிடுவது அவசியம். நான் கவிஞனொ கதைஞனொ அல்ல. எனக்கு நன்றாக எழுதவோ படிக்கவோ சரியாகத் தெரியாது. மிருகங்களின் உலகில், ஒரு மனிதக் காட்சி சாலையில், மிக உயர்ந்த சுவர்களால் சூழப்பட்ட மிகப்பெரிய நிலப்பரப்பில், மிகக் குறைந்த சுதந்திரத்துடன் உலவ விடப்பட்டிருக்கும் மனிதன். மிருகங்கள் பூமியை மீண்டும் கைப்பற்றிவிட்டன. எவ்வளவு கொடுமையுடன் மனிதன் மிருகங்களை அடக்கி ஆண்டு வந்தானோ அதே வழியில் மிருகங்கள் மனித குலத்தை சிறைப்பிடித்து இப்போது அடக்கி ஆண்டு வருகின்றன. நான் சாந்தமாக இருப்பதால், என்னைக் கொஞ்சம் சுதந்திரமாக விட்டு வைத்திருக்கின்றன. இது நான் எழுதிய கதை அல்ல. இதே மனிதக் காட்சி சாலையில் முன்னெப்போதோ இருந்த ஒரு மனிதன் எழுதிய கதை. மிருகங்கள் இதைப்படித்துப் புரிந்து கொண்ட விஷயங்கள் சரியா என்று அறிந்து கொள்ள என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லி இருக்கின்றன. நான் புரிந்து கொண்டதை அவர்களுக்குச் சொல்லவேண்டும். என் மொழி அவர்களுக்குத் தெரியாது அவர்கள் கத்துவது எனக்குப் புரியாது. எந்த நூற்றாண்டிலோ எவனொ எழுதியதை எப்படி நான் புரிந்து கொள்வது? அப்புறம் இந்த மிருகங்களுக்கு எப்படி விளக்குவது? இதற்குத்தான் உங்கள் உதவி எனக்குத் தேவைப்படுகிறது.
அடிக்கடி மிருகங்கள் வந்து படித்தாயா சொல்லு என்று முறைவைத்துக் கொண்டு வந்து மிரட்டுகின்றன. சிங்கம் புலி மிரட்டுவதாவது பரவாயில்லை. அவை ஏற்கனவே மனிதனை விட பலம் வாய்ந்த்திருந்தவை. அடங்குவதில் தவறில்லை. குறிப்பாக இரண்டடி உயரமும் நாலடி நீளமும் இருக்கும் எலிகள். அவற்றைக் கண்டாலே எனக்குப் பயம். அதுவும் வெள்ளை எலிகள். சிலவை வெள்ளையாக மாற முயற்சித்துக் கொண்டிருந்த எலிகள். இவைகள் வரும் போதே எனக்கு வயிற்றைக் கலக்கும். சரி விஷயத்துக்கு வருகிறேன். மிருகங்களின் ஆராய்ச்சியில் நான் மாட்டிக்கொண்டதால் மீள ஏதாவது வழி சொல்லுங்கள். அதாவது இந்தக் கதையை என் மனித ஜாதியைச் சேர்ந்த யாராவது படிக்க நேர்ந்தால். சீக்கிரம் படித்துச் சொல்லுங்கள். கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் படிக்கிற நேரத்தில் நான் உயிரோடு இருப்பேனோ என்பது கூட நிச்சயமில்லை. எனவே அவசரம். அவைகள் கொடுத்து விட்டுப் போன வேலையைச் செய்யவில்லை என்று என்மீது கோபப் பட்டு, வளர்ப்பது வீணென்று என்னை இந்த மிருகங்கள் கொன்றுவிடக்கூடும். ரொம்ப அவசரம். மனிதன் மிருகங்களைச் செய்த கொடுமையின் வரலாற்றை அறிந்து கொள்வதில் இந்த மிருகங்களுக்கு என்ன ஆர்வமோ? எவனொ செய்த பாவத்துக்கு நான் விலை கொடுக்க வேண்டியதிருக்கிறது. அந்த மனிதர்களுக்குப் புரிந்திருக்குமோ வரலாறு இப்படி ஆகுமென்று? என் புலம்பலை விடுங்கள் ஐயா. இதை முதலில் படியுங்கள்:-

இதை எழுதவேண்டும் என்று எனக்கு ஏன் தோன்றியது என்று சொல்லத் தெரியவில்லை. மனிதர்களை மிருகங்கள் அடக்கி மனிதச் சாலைகளில் சிறைவைத்த கொடுமையைக் ஏதோ ஒரு காவியக் கொம்பனோ அல்லது குறைந்தது ஒரு கிம்பனோ எழுதியிருக்க வேண்டும். சிறந்திருந்தும் சிறு தவறுகளால் வீழ்ந்த மாபெருங் காவிய நாயகர்களைப் படைத்தவர்கள். ஆனால் இப்படிப்பட்டவர்கள் எல்லாம் தம் அறிவை அதிகம் காட்டி மிருகங்களுடன் சண்டை போட்டதால், அவர்களிடமிருந்த திறமைகளே அவர்களுக்கு எதிரியாகிப் போயின. மனிதன் மீது எல்லா மிருகங்களும் கூட்டணி அமைத்துப் போரிடும் போது அவர்களின் முதல் விதி புத்திசாலி, திறமைசாலி எவனையும் உயிரோடு விடக்கூடாது என்பது தான். மனிதர்களாகிய நமக்கு இது எப்போதும் அடுத்தநாட்டை, கலாச்சாரத்தை குலைத்து அழிப்பதற்கான வழி என்பது தெரிந்திருப்பது ஆச்சரியமில்லை. மனிதகுல வரலாறில் எண்ணற்ற முறைகள் மிகச் சரியாக இவற்றை அரங்கேற்றி இருக்கிறோம். இந்தியாவிலும், ஆஸ்திரேலியாவிலும், அமெரிக்காவிலும் காவு கொடுக்கப்பட்ட காட்டுவாசிகள் கோடிப் பேருக்கு மேல் தேறும். அவர்களைவிட இன்னும் பல கோடி மிருகங்களை அழித்து விட்டோம். ஆனால் மிருகங்களும் இதை நம்மிடமே கற்று நமக்கே பாடம் எடுத்து வெற்றி கண்டுவிட்டன. இதுதான் புதிய சோக காவியம். ஏற்கனவே சொன்னபடி, நான் முட்டாளாக இருப்பதால் உயிரொடிருக்கிறேன். கதைசொல்லும் முறையில் புத்திசாலித்தனத்தைத் தேடாதீர்கள். எனது முன்னோர்களும், அவர்களது முன்னோர்களும் சொன்ன, கேட்டவைகளில் எனக்குத் தெரிந்ததை ஞாபகமிருப்பதை இதில் எழுதுகிறேன்.
எனது மூதாதையர்கள் எதற்கெடுத்தாலும் சண்டை போட்டார்களாம். உதாரணமாகச் சில. திருநீறு பூசுவதா? பட்டைநாமம் அடிப்பதா? மாமிசம் உண்பதா வேண்டாமா? யாருமே வாழமுடியாத நிலா உனக்கா? எனக்கா?. மிருகங்களுடனும் சண்டை போட்டார்கள். மனிதன் குரங்கிலிருந்து வந்தானா? இல்லையா. கடைசிக் கேள்விக்கு மட்டும் சரியான விடை கிடைத்துவிட்டது. இப்போதைய நிலவரப்படி குரங்குகளே மனிதனின் பரிணாம வளர்ச்சியால் வந்தவர்கள்.(அவர்கள் என்றுதான் பேசவேண்டும்- அவர்கள் ஆட்சிசெய்கிறார்கள்).

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் மேல் எழுந்து பூமியின் எல்லாப் பாகங்களும் கடல்நீரில் மூழ்கிவிட்டன. மலைகளில் தங்கியிருந்த, மனிதர்களால் துரத்திவிடப்பட்ட, மிருகங்கள் மட்டும் உயிரோடிருந்தன. பிழைத்த ஒன்றிரண்டு மனிதர்கள் மிருகங்களின் ஆட்சிக்கு அடங்கவேண்டிய தாயிற்று. எனது மூதாதையர்கள் அப்படித்தான் சிறைப்பிடிக்கப் பட்டனர். பெரிய பெரிய விஷயங்களைக் கண்டுபிடித்திருந்த மனித சமூகம் ஏறக்குறைய முற்றிலும் அழிந்துவிட்டது.
, இப்போது உலகையாளும் மிருகங்கள், என்னைப் போன்ற மனிதர்கள் மூலம், மனித மூளையின் வளர்ச்சியை தங்கள் பயனுக்கு உபயோகப் படுத்த முடியுமா என்று பரிசோதிக்கவே கூண்டில் வைத்துப் பராமரித்து வருகின்றன. எங்களால் உபயோகம் இல்லை தெரிந்து கொண்டால் கொன்று புசித்துவிடும் இந்த மிருகங்கள். எனது மூதாதையர்கள் சொல்வதுண்டு. எலிகளை கூண்டில் வைத்துத்தான் மனிதர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளின் பயனை ஆராய்ச்சி செய்வார்களாம். அவர்கள் நினைத்துப் பார்த்திருப்பார்களா இரண்டாயிரம் வருடங்களில் விஷயம் இப்படித் தலைகீழாக மாறிவிடும் என்று. மனிதர்கள் பூமியில் ஆதிக்கம் செய்த காலத்தை “மிருக அறிவு வரலாற்றின் ஆரம்ப காலம்” என்று இப்போது மிருகங்கள் அழைக்கின்றன போலும். என்ன எழவோ? எப்படியும் அழைக்கட்டும். என்னை உயிரோடு வெளியில் விடுவதாகத் தெரியவில்லை. கொன்றுவிட்டால் தேவலை. ஊசி, மருந்து, சோதனை, பரிசோதனை என்று தினம் நான் படும் பாடு மனித குலத்தார் பட்டதில்லை.

இன்று காலையில் ஒரு பெரிய எலியும், சிங்கமும் ஊசியில் மருந்தேற்றி எனக்கு வயிற்றில் குத்திவிட்டன. ..ம்ம்…எலிக்கு வந்த வாழ்வு. அது மனிதனுக்கு ஊசிபோடுகிறது. துணைக்கு சிங்கம் வேறு. உறுமிக்கொண்டிருந்தது. அதுகள் ரெண்டும் ஏதேதோ கத்திக் கொண்டன. மிருக மொழியாக இருக்க வேண்டும். என்னிடமிருந்து எதை எதிர்பார்க்கின்றன என்பது எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை இந்தக் கதையை எழுதுவதற்காக ஊசி குத்தியிருக்கக் கூடும்.

மனிதன் பேசுவது எழுதுவதும் அவைகளுக்குப் புரியாது. புரியும் முயற்சியாக இருக்கும். மனித சமூகம் வளர்ந்தது உலகை ஆண்ட விதத்தைத் தெரிந்து கொண்டால், மிருகங்கள் எளிதாக உலகை ஆளலாம். ஆனாலும் நான் அதைப் பற்றிச் சொல்லப் போவதில்லை. முதலில் மனிதன் உலகின் மூளை பலமுள்ளவனாக எப்படி ஆனான் என்பது எனக்குத் தெரியாது. யாருக்கும் தெரியாததாகக் கூட இருக்கலாம். மனித வரலாற்றுக்கு முன்னால் யாரும் திட்டமிட்டு இதைச் செய்திருக்க முடியாது. ஒரு விபத்தாக, எதிர்பாராததாக நடந்திருக்கும். இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னால் மிருகங்கள் என்ன திட்டமிட்டா ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன?. என்ன ஆனதோ தெரியவில்லை. கடல்நீரின் மட்டம் மிகமிக அதிகமாகிவிட்டதாம். பனிப்பாறைகள் உருகி கடலை நிரப்பிவிட்டதால் பூமியில் தரையே தெரியாமல் இமயமலை மட்டும் அதுவும் எவரஸ்ட் இருக்கும் மலைகள் மட்டும் தப்பித்தன.

மீண்டும் தண்ணீர் மட்டம் இறங்குவதற்கு பல ஆயிரம் ஆண்டுகள் ஆயின. அதற்குள் பூமியின் உயிரினங்கள் செடிகள், மரங்கள், எல்லாம் வேறுமாதிரியாக வளர்ச்சியடைந்தன. இதெல்லாம் நான் கேட்ட கதைகள். சரித்திரம், சான்றுகள் இலக்கியம், தரவுகள் எதுவும் எனக்குத்தெரியாது. படிக்கிறவர்கள் நம்பினால் நம்புங்கள். தெரிந்ததைச் சொல்லுகிறேன்.

மூன்று நாட்கள் முன்னால் நடந்ததைச் சொல்லுகிறேன். நானும் இன்னும் இரண்டு பேரும்,(ஒரு பெண்ணும்), இந்தப் பெரிய கூண்டில் இருந்தோம். திடீரென்று இரண்டு நாய்கள் வந்து மற்ற இருவரையும் வேறு எங்கோ கூட்டிச் சென்று விட்டன. இனி எனக்குத் துணையில்லை. அந்த வருத்தத்தில் தான் இதை எழுத ஆரம்பித்தேன். துயர்மிகுந்த நிலையில் மனிதன் எழுத ஆரம்பிக்கிறான் என்று என் முன்னோர்கள் சொல்வதுண்டு. அது உண்மைதான். அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. கொன்று விட்டார்களா? இன்னும் பெரிய கூட்டத்தில் வைத்துவிட்டார்களா?

நான் உயிருடனிருந்து இந்த மிருகங்களுக்கு எந்தப் பயனுமில்லை என்று நினைக்கிறேன். ஒருவேளை இதுவே எனது கடைசி நாளாக இருக்கக்கூடும்.

எனது மூதாதையர்கள் மிருகங்களைச் சிறையில் அடைத்து வைத்திருந்ததைத் தெரிந்து கொண்டே புலிகள் ஒன்று சேர்ந்து என்னைச் சிறையில் அடைத்தன. பூனைகள், எலிகள் எல்லாம் குடும்பத்தோடு வந்து என்னைப் பார்த்துச் செல்கின்றன. சில எலிகள், என் முகத்தில் துப்புகின்றன. குரங்குகள் படுத்தும் பாடுதான் தாங்க முடியவில்லை. குச்சியை வைத்து இடிக்கின்றன. என்னையும் தங்களையும் பார்த்துக் கொள்கின்றன. அதைத்தான் என்னால் சகிக்க முடியவில்லை. எப்படி உலகை ஆண்டோம்? இப்போது குரங்கு நம்மைப் பார்த்து இளிக்கிறது.

நடுநடுவில் உலகம் ஏன் இந்தக் கதிக்கு வந்தது என்று எழுத வேண்டியிருக்கிறது. இல்லையெனில் நான் உபயோகமற்றவன் என்று ஊசிபோட்டு கொன்றுவிடக்கூடும். எல்லாம் கேள்விப்பட்டதுதான். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் டீசல் என்று ஒரு திரவத்தைக் கண்டு பிடித்தார்கள். அதை எரித்து வேகமாகச் சுற்றக்கூடிய சக்கரம் வண்டி கண்டுபிடித்தார்கள். எரியும் போது அதிலிருந்து நிறையப் புகை வந்தது. நடந்துநடந்து பழக்கப் பட்ட மனிதன் வேகமாக பயணம் செய்தான். அதனால் வந்தது வினை. இருந்த இடத்தை விட்டுக் கிளம்பி உலகத்தில் உள்ள எல்லா இடத்தையும் பிடித்து அங்கிருக்கும் எல்லாப் பொருள்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தான். ரப்பர், இரும்பு என்று வித வித வண்டிகளை ஓட்டினான். உயரத்தில் பறந்தான் என்று கூடச் சொன்னார்கள். அது எப்படி முடியும்? பொய்யாக இருக்கக் கூடும். கதை விடுவதில் மனித இனம் கைதேர்ந்தது. சிலவற்றைத்தான் நம்ப முடியும். நானும் மனிதன்தான். நான் சொல்வதும் பொய்யாக இருக்கலாம்.கடலிலும், தண்ணீரிலும் மனிதன் சென்றானாம். மிருகங்களுக்கு அது தெரியுமா என்று புரியவில்லை. இப்போதும் தண்ணீரைக் கண்டால் பயப்படுகின்றன. இருப்பதோ கொஞ்ச நிலம். அதையும் விட்டுப்போக முடியாது அவைகளால். தண்ணீரில் இருக்கும் மிருகங்கள் நிலத்திலிருப்பவற்றை விட பலமுள்ளவை. இவைகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதுதான் தண்ணீரின் பக்கத்தில் போவதே இல்லை.”

இதற்கு மேல் என்ன எழுதியிருந்தது என்று தெரியவில்லை. அந்த மனிதன் என்ன ஆனான் என்பதும் தெரியவில்லை. இதைப் படித்து நான் எதைப் புரிந்து கொள்வது? அதை எப்படி தினமும் வரும் சிங்கத்திடம் சொல்லப் போகிறேன்? மனித குல வீழ்ச்சியின் வரலாறு இப்படித்தான் தொடங்கவேண்டும் என்றிருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும்.

இவற்றை எல்லாம் எழுதுவது யார் என்று உங்களுக்குச் சந்தேகம் வரக்கூடும்? எனக்குப் பெயர் கிடையாது. கழுத்தில் ஒரு உலோகத் தகடு தொங்குகிறது. அதில் என் பெயர் மிருகங்களின் மொழியில் எழுதப் பட்டிருக்க வேண்டும். அதை என்னைப் பார்க்க வரும் எலிகள் படித்துவிடுகின்றன. குரங்குகளும் முக்கித் தக்கிப் படித்துவிடுகின்றன.

பின்குறிப்பு:- நாலாயிரத்து ஐநூற்றி முப்பத்தி இரண்டாம் ஆண்டில் (அதாவது மிருகங்களின் ஆண்டுக் கணக்கில்) இந்த எழுத்துத் தொகுதி கண்டெடுக்கப் பட்டது. எழுதியவர் பெயர், ஊர் விவரம் தெரியவில்லை. நாடு, மொழி, கலாச்சாரம், இனம் தெரிந்தவர்கள் எனக்குத் தெரியப்படுத்தலாம்.

Friday, September 04, 2009

திரையிலும் திரைக்கு முன்னாலும்

திரைப் படங்கள் தங்கள் தளத்தை மீறி, அரசியலிலும் இன்னும் மற்ற துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகிற தமிழ்நாட்டில் நடந்திருக்கக் கூடிய ஒரு நிகழ்வு, வங்காளத்தில், அதுவும் ஐம்பதுகளில் நிகழ்ந்தது என்பதை அறிந்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
திரையில் வரும் கதைத் தலைவர்களைப் பார்த்து நேரடி வாழ்விலும் அவர்கள் கதாநாயகர்கள் என்பதாக மாயை கொண்டு அவர்கள் பின்னால் செல்லத் தயாராக நிற்கும் ஒரு கூட்டம், தமது பண, பதவி, வேட்டைக்காக மாயைகளை திட்டமிட்டு உருவாக்கி மக்களை ஏமாற்றும் இன்னொரு கூட்டம், இவர்களுக்கு நடுவே அல்லாடும் கூட்டம், இவற்றிடையே தமிழ்நாட்டின் அரசியலும் மற்றத் துறைகளும் மாட்டிக் கொண்டு விழிப்பது இன்றைய காட்சி.
இதற்குச் சற்றும் குறையாமல், திரைப்பட வில்லன்களைப் பார்த்துப் பயப்பட்ட கூட்டமும் காலமும் ஒன்றிருந்தது. இன்னும் இருக்கக் கூடும். மெல்ல மெல்ல, கதைத் தலைவர்கள், தன்னேரில்லாத தலைவன் என்ற நிலையிலிருந்து மாறி, தீய குணங்கள் உடையவனாக மாற ஆரம்பித்தனர். அவர்கள் கவர்ச்சிகரமாக காட்டப்பட்டனர். சின்னவயதில் நம்பியாரைக் கண்டு நடுங்கியவர்களைப் பார்த்திருக்கிறேன்.
இது போன்ற நிகழ்வொன்று வங்காளத்தில் 1951ல் நிகழ்ந்ததை சமீபத்தில் அறிந்து கொண்டேன். அதைப் பற்றிய குறிப்பு இது.
“வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் ஒருபகுதியாக மிட்னாப்பூர் என்ற ஊரில் நடந்த மிகக் கொடூரமான போலிஸ் வன்முறையை எதிர்த்து மக்கள் கலகம் செய்தனர். அதனால் அரசின் வன்முறையும், கலகமும் தொடர்ந்து நடந்தன. மேலும் மேலும் கிராமத்தினர் பெரும் துன்பத்துக்குள்ளாயினர். ஒருநிலையில் அடக்குமுறை உச்சத்தை அடைந்ததும் போலிஸ்காரர்கள் கிராமத்தினர் மீது துப்பாக்கியால் சுட மறுத்தனர். இந்த நிகழ்வுகள் மக்களிடையே பெரும் ஆத்திரத்தைத் தூண்டிவிட்டாலும், அன்னிய அரசின் அடக்குமுறைத் தந்திரங்கள் காரணமாக கொஞ்ச நாளில் அடங்கிவிட்டது.



அது ஆறாத காயமாக இருந்ததை பத்தாண்டுகள் பின்னர் நடந்த நிகழ்வுகள் காட்டின. இந்த நிகழ்ச்சியை ஆதாரமாக வைத்து 1949ல் ஹெமந்த் குப்தா என்பவர் பயாலிஷ்(42) என்று படம் எடுத்தார். முதலில் அது தடை செய்யப்பட்டது பின்னர் மாற்றங்களுடன் 1951ல் வெளிவந்தது. அதில் மிட்னாபூர் போலிஸ் நிலைய பொறுப்பாளராக பிகாஷ் ராய் என்பவர் நடித்தார். பிகாஷ் ராயின் நடிப்பில் படம் சிறப்பாக வந்திருந்தது. படத்தில் போலிஸ் இன்ஸ்பெக்டரின் கொடிய நடவடிக்கைகளைக் கண்டு கொதித்தெழுந்த பலர் பிகாஷ் ராயின் வீட்டில் தினமும் வந்து கல்லடித்தனர். இது பல நாட்கள் தொடர்ந்தது. அவர் வீட்டுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டது. அறிவாளிகள், பொதுமக்கள் மத்தியில் கல்லடி அவருடைய நடிப்புக்கு உயர்ந்த பட்சப் பரிசாக கருதப்பட்டது.
திரையில் காட்டப்படும் ஒரு பாத்திரம், அதுவும் வில்லன் பாத்திரம் இத்தகைய எதிர் வினையை ஏற்படுத்தியிருக்குமா என்பது வியப்பென்றாலும் இன்னும் வியப்புக்குரிய சில உண்மைகள், நிகழ்ச்சியின் பரிமாணத்தை மாற்றக்கூடியவை.
முதலில் இந்தப் படம் அரசியல் காரணங்களுக்காக பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டது. பின்னர் 1951ல் பல மாற்றங்களுடன் வெளியிடப்பட்டது. (எந்த அரசாக இருந்தாலும் போலிஸ்காரர்கள் சுடமறுப்பதை பெரிதாகக் காட்டினால் – அது சுதந்திரப் போரின் ஒரு பகுதியான சரித்திர நிகழ்வே ஆனாலும் கூட – பொறுத்துக் கொள்ள முடியுமா? போலிஸ் என்பது அரசின், சமூகத்தின் உச்சகட்ட, சட்டபூர்வமான வன்முறையின் கருவிதானே)
முன்னர் 1942ல் கொடுமையை நிகழ்த்திய போலிஸ் இன்ஸ்பெக்டர், 1951ல், கல்கத்தாவின் போலிஸ் கமிஷனராக இருந்தார். பத்தாண்டுகளில் வெள்ளை அரசும், சுதந்திர இந்திய (வங்க?) அரசும் அவருக்குப் பதவி உயர்வுகளை அளித்திருந்தன.
இந்த இரண்டு உண்மைகளும் நடந்த கல்லெறி சம்பவத்தின் மீது கேள்விகளை எழுப்புகின்றன.
மக்களின் சினம், (பத்தாண்டுகள் வரை காத்திருந்து வெடிக்கும் அளவு சினம் எழுந்திருந்தால்) கொடுமையை நிகழ்த்திய நிஜ வில்லனான, போலிஸ் இன்ஸ்பெக்டர் மீது 1942ல் ஏன் வெடிக்கவில்லை? 1951-2ல் எழுந்த சினம், நிஜ வில்லனான, முந்தைய இன்ஸ்பெக்டரான) போலிஸ் கமிஷனர் மீது எழாமல், அவரைப்போல் நடித்த பிகாஷ் ராய் மீது எழுந்த காரணம் என்ன?
நல்ல நடிப்பு என்பது கேள்வியின் எல்லாப் பரிமாணங்களுக்கான விடையாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் நிஜவில்லன் பொது மக்கள் பார்வையில் படும் பதவியில் இருந்தார். போலிஸ் கமிஷனர் பதவி, அதுவும், 1951-52ல் சாதாரணமானதல்ல. மக்கள் சினம் ஏன் அவர் மீது செல்லவில்லை. அவர் பாதுகாப்பான பதவியில் இருந்ததாலா?
இதை எப்படி விளங்கிக் கொள்வது? 1942ல் மக்களின் இயலாமை, வெள்ளை அரசின் பயங்கர அடக்குமுறையின் முன்னால் ஒடுங்கிய சினம், 1951ல் போலிஸ் கமிஷனராக இருந்த, அரசின் வன்முறையின் பிரதிநிதியாக இருந்தவர் மீது வெளிப்பட முடியாமல் மழுங்கிப்போன சினம், அந்தப் பாத்திரத்தைப் போல நடித்த( சிறப்பாக நடித்த) பிகாஷ் ராய் மீது வடிந்து விடுகிறதா?
சிறுவயதில் அடக்கப்பட்ட சினம், பெரியவனானபின் யார் மீதாவது, வேறு எங்காவது வெளிப்படும் என்று கேள்விப் பட்டதுண்டு. மக்களுக்கும் (Masses) இது பொருந்துமா?
இந்த நிகழ்வுக்கு குயுக்திமுறையில், விதண்டாவாதமாக இன்னொரு விளக்கமும் அளிக்க முயலலாம். நிஜ வன்முறையை நிகழ்த்திய, இன்ஸ்பெக்டர், போலிஸ் கமிஷனராக இருந்ததால், முன்பு மக்களுக்குத் தன்மீது இருந்த சினத்தைக் கணக்கில் கொண்டு, திரைப்படத்தைப் பார்த்து ஏற்படும் மக்களின் சினம் தன் மீது வந்துவிடக்கூடாதென்று, திசைதிருப்பும் முயற்சியாக கல்லெறி நாடகத்தை அரங்கேற்றி இருக்கலாம். பிகாஷ் ராயின் நடிப்பைப் புகழ்வது போல, அதன் மயக்கத்தில் பிகாஷ் ராயும் மக்களும் மயங்கித் திளைக்கவிட்டு, தன் பதவியைக் காத்துக் கொண்டிருக்கலாம்.
இது ரொம்ப அதீதமான விளக்கமாகத் தெரிகிறது. 1942ல் இப்படி ஒரு வன்முறையை அரங்கேற்றிய ஒருவர், அடுத்த பத்தாண்டுகளில் அன்னிய அரசிலும், காங்கிரஸ் அரசிலும் தனது கடந்த கால சிறப்புகளின் காரணமாக அல்லது அவற்றை மறக்கடித்து - அரசுகளும், மக்களைப் போலவே மறக்கவும் மன்னிக்கவும் செய்கிறதோ? – 1952ல் வங்காளத்தின் தலைநகரில் போலிஸ் கமிஷனராகிரார் என்றால் அவரின் ‘திறமை’ அதிகமாகத்தான் இருக்க வேண்டும்.
இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் போலிஸ்காரர்கள் சீருடை அணியாமல் பொதுமக்கள் போல் வந்து அரங்கேற்றும் வன்முறை நாடகங்கள் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியாது.

அடைமொழிகள்

மானுடம் வென்றதம்மா என்று களிப்பெய்தும் போது, மானுடத்துக்குள் என்னென்ன சண்டைகள் சச்சரவுகள் என்பது நினைவில் வருகிறது. இனம், மதம், இடம், பொருள், பால் என்னும் எத்தனையோ? இலக்கியத்திலும் இது வந்து விடுகிறது. தமிழ் இலக்கியத்தில் பெண்ணியம், தலித்தியம் என்று புதிய போக்குகள் எழுந்திருக்கின்றன. அதனதன் முக்கியத்துவத்தை அழுத்திச் சொல்லவே இவை பயன் பட்டாலும், அவையே புதிய மடங்களாக நிறுவிக் கொள்ளும் போக்கு கவலை தருகிறது.
இலக்கியம் என்பது எப்படி இருக்கவேண்டும் என்று பழைய மடங்களின் பீடாதிபதிகள் ஆணையிடுவதே போல் கூட்டம் சேர்த்துக் கோஷமிட்டு அலையும் போது, இன்னும் புதிய எழுச்சிகளின் தேவை அதிகமாகி விடுகிறது. இலக்கியத்தின் உள்ளடக்கத்தையும் அதன் வடிவத்தையும் ஒருங்கே காணாமல் பெண்ணியம் தலித்தியம் என்ற பெயர்களில் வலம்வரும் பல நூல்களின் நிலைமையை விமரிசிக்க முடிவதில்லை.
பூமணியின் கதைகள் தமிழ்ப் புனைகதையில் கொண்டு வந்த உலகையே இன்று ஒருவர் மீண்டும் புனைகதையாக்கும் போது அது தலித்தியம் என்று பெயர் பெறக்கூடும். பூமணியின் கதைகள் தலித்தியம் என்ற அடைமொழிக்குள் வராமலேயே நல்ல இலக்கியமாகத்தானே இருந்தன.
பாமாவின் எழுத்துக்களை தலித்தியம் என்ற அடைமொழி இல்லாமலேயே இலக்கியம் தான். இதுபோன்றே பெண்ணியம் என்ற கருத்தும். பல பெண் எழுத்தாளர்களுடைய எழுத்துக்கள் இந்த அடைமொழி இல்லாமலே இலக்கியத்தகுதி உள்ளவை. அடைமொழி கொடுப்பது என்பது தமிழகத்தின் இயல்புகளில் ஒன்று. யாரையும் சூபர் என்றோ ஞானி என்றோ நாயகன் என்றோ அழைக்கக் கூசுவதில்லை. இப்படி அடைமொழிகள் கொடுப்பதில் எழுத்தாளர்களுடைய ஆளுமை அல்லது எழுத்தின் முழுவீச்சு குறைப்பட்டுவிடுகிறது. பலநேரங்களில் சில எழுத்தாளர்கள் இந்தப் பெண்ணியத்துக்கோ அல்லது தலித்தியத்துக்கோ தலைமை தாங்க விரும்புவதையும் காண முடிகிறது. வேறு மாதிரிச் சொன்னால் தாங்களே இதைக்கண்டு பிடித்தவர்கள் என்று சொல்லும் போக்கு தென்படுகிறது.
தகுதிக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத அடைமொழிகள் தருவது தமிழக அரசியலிலிருந்தே தொடங்கியிருக்க வேண்டும். இன்னும் அடைமொழிகளின் ஆதிக்கம் அரசியலில் மிகக் கொடூரமாக ஆட்சி செய்வதைக்காண முடிகிறது. கண்ணதாசனைக் கவியரசு என்று அழைக்கும் போது மெல்லியதாகத் தெரிந்த அடைமொழி, கவிப்பேரரசு என்று வைரமுத்துவை அழைக்கும் போது அதிகமாகத் தெரிகிறது. அறிஞர் அண்ணா என்றழைக்கும் போது மெதுவாக உள்நுழைந்த அதீதம், அவரையே பேரறிஞர் என்றழைக்கும் போது மீறலாகத் தெரிகிறது. ஜவகர்லால் நேருவை யாரும் அறிஞர் என்ற அடைமொழியுடன் சேர்ப்பதில்லை. உண்மையாகவே அறிஞராக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். இரண்டாவது இரும்புமனிதர் என்றழைக்கப்பட்ட எல்.கே அத்வானியின் நிலை இப்போது எப்படி என்று சொல்ல வேண்டியதில்லை.
சாதாரண மனிதர்களை ‘சூபர்மென்’ ஆக்கும் நமது நேசம் சினிமாவில் அரசியலில் இதைச் செய்யவிடாது. ஆனால் அறிவுஜீவிகளாகிய எழுத்தாளர்கள் கவிஞர்கள் இதைச் செய்யலாம். கலாப்ப்ரியாவோ, வைத்தீஸ்வரனோ கவியரசு என்று போட்டுக் கொள்வதில்லை. அதுவரையில் சந்தோஷம். அவர்கள் கவிதை எழுதி காசு சம்பாதிப்பதில்லை. சினிமா போன்ற காசு போட்டு காசு சம்பாதிக்கும் தொழிலில் அது தேவைப் படுகிறது போலும்.