Saturday, September 12, 2009

கடைசி மனிதனின் முதல் கதை

முன் குறிப்பு:- இந்த எழுத்து காகிதம் போன்ற ஏதோ ஒன்றில் எழுதப்பட்டிருந்தது. கீழ்க்கண்ட விபரங்களை வைத்து யாருக்காவது ஏதாவது தோன்றினால், எழுதியவனைத் தொடர்பு கொள்ளலாம். அவன் எங்கே என்பது முன்குறிப்பின் ரகசியம்.

இந்தக் கதை ஒரு எதிர்பாராத விதத்தில் என் கையில் கிடைத்தது. நான் யார் என்பதை இப்போதே சொல்லிவிடுவது அவசியம். நான் கவிஞனொ கதைஞனொ அல்ல. எனக்கு நன்றாக எழுதவோ படிக்கவோ சரியாகத் தெரியாது. மிருகங்களின் உலகில், ஒரு மனிதக் காட்சி சாலையில், மிக உயர்ந்த சுவர்களால் சூழப்பட்ட மிகப்பெரிய நிலப்பரப்பில், மிகக் குறைந்த சுதந்திரத்துடன் உலவ விடப்பட்டிருக்கும் மனிதன். மிருகங்கள் பூமியை மீண்டும் கைப்பற்றிவிட்டன. எவ்வளவு கொடுமையுடன் மனிதன் மிருகங்களை அடக்கி ஆண்டு வந்தானோ அதே வழியில் மிருகங்கள் மனித குலத்தை சிறைப்பிடித்து இப்போது அடக்கி ஆண்டு வருகின்றன. நான் சாந்தமாக இருப்பதால், என்னைக் கொஞ்சம் சுதந்திரமாக விட்டு வைத்திருக்கின்றன. இது நான் எழுதிய கதை அல்ல. இதே மனிதக் காட்சி சாலையில் முன்னெப்போதோ இருந்த ஒரு மனிதன் எழுதிய கதை. மிருகங்கள் இதைப்படித்துப் புரிந்து கொண்ட விஷயங்கள் சரியா என்று அறிந்து கொள்ள என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லி இருக்கின்றன. நான் புரிந்து கொண்டதை அவர்களுக்குச் சொல்லவேண்டும். என் மொழி அவர்களுக்குத் தெரியாது அவர்கள் கத்துவது எனக்குப் புரியாது. எந்த நூற்றாண்டிலோ எவனொ எழுதியதை எப்படி நான் புரிந்து கொள்வது? அப்புறம் இந்த மிருகங்களுக்கு எப்படி விளக்குவது? இதற்குத்தான் உங்கள் உதவி எனக்குத் தேவைப்படுகிறது.
அடிக்கடி மிருகங்கள் வந்து படித்தாயா சொல்லு என்று முறைவைத்துக் கொண்டு வந்து மிரட்டுகின்றன. சிங்கம் புலி மிரட்டுவதாவது பரவாயில்லை. அவை ஏற்கனவே மனிதனை விட பலம் வாய்ந்த்திருந்தவை. அடங்குவதில் தவறில்லை. குறிப்பாக இரண்டடி உயரமும் நாலடி நீளமும் இருக்கும் எலிகள். அவற்றைக் கண்டாலே எனக்குப் பயம். அதுவும் வெள்ளை எலிகள். சிலவை வெள்ளையாக மாற முயற்சித்துக் கொண்டிருந்த எலிகள். இவைகள் வரும் போதே எனக்கு வயிற்றைக் கலக்கும். சரி விஷயத்துக்கு வருகிறேன். மிருகங்களின் ஆராய்ச்சியில் நான் மாட்டிக்கொண்டதால் மீள ஏதாவது வழி சொல்லுங்கள். அதாவது இந்தக் கதையை என் மனித ஜாதியைச் சேர்ந்த யாராவது படிக்க நேர்ந்தால். சீக்கிரம் படித்துச் சொல்லுங்கள். கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் படிக்கிற நேரத்தில் நான் உயிரோடு இருப்பேனோ என்பது கூட நிச்சயமில்லை. எனவே அவசரம். அவைகள் கொடுத்து விட்டுப் போன வேலையைச் செய்யவில்லை என்று என்மீது கோபப் பட்டு, வளர்ப்பது வீணென்று என்னை இந்த மிருகங்கள் கொன்றுவிடக்கூடும். ரொம்ப அவசரம். மனிதன் மிருகங்களைச் செய்த கொடுமையின் வரலாற்றை அறிந்து கொள்வதில் இந்த மிருகங்களுக்கு என்ன ஆர்வமோ? எவனொ செய்த பாவத்துக்கு நான் விலை கொடுக்க வேண்டியதிருக்கிறது. அந்த மனிதர்களுக்குப் புரிந்திருக்குமோ வரலாறு இப்படி ஆகுமென்று? என் புலம்பலை விடுங்கள் ஐயா. இதை முதலில் படியுங்கள்:-

இதை எழுதவேண்டும் என்று எனக்கு ஏன் தோன்றியது என்று சொல்லத் தெரியவில்லை. மனிதர்களை மிருகங்கள் அடக்கி மனிதச் சாலைகளில் சிறைவைத்த கொடுமையைக் ஏதோ ஒரு காவியக் கொம்பனோ அல்லது குறைந்தது ஒரு கிம்பனோ எழுதியிருக்க வேண்டும். சிறந்திருந்தும் சிறு தவறுகளால் வீழ்ந்த மாபெருங் காவிய நாயகர்களைப் படைத்தவர்கள். ஆனால் இப்படிப்பட்டவர்கள் எல்லாம் தம் அறிவை அதிகம் காட்டி மிருகங்களுடன் சண்டை போட்டதால், அவர்களிடமிருந்த திறமைகளே அவர்களுக்கு எதிரியாகிப் போயின. மனிதன் மீது எல்லா மிருகங்களும் கூட்டணி அமைத்துப் போரிடும் போது அவர்களின் முதல் விதி புத்திசாலி, திறமைசாலி எவனையும் உயிரோடு விடக்கூடாது என்பது தான். மனிதர்களாகிய நமக்கு இது எப்போதும் அடுத்தநாட்டை, கலாச்சாரத்தை குலைத்து அழிப்பதற்கான வழி என்பது தெரிந்திருப்பது ஆச்சரியமில்லை. மனிதகுல வரலாறில் எண்ணற்ற முறைகள் மிகச் சரியாக இவற்றை அரங்கேற்றி இருக்கிறோம். இந்தியாவிலும், ஆஸ்திரேலியாவிலும், அமெரிக்காவிலும் காவு கொடுக்கப்பட்ட காட்டுவாசிகள் கோடிப் பேருக்கு மேல் தேறும். அவர்களைவிட இன்னும் பல கோடி மிருகங்களை அழித்து விட்டோம். ஆனால் மிருகங்களும் இதை நம்மிடமே கற்று நமக்கே பாடம் எடுத்து வெற்றி கண்டுவிட்டன. இதுதான் புதிய சோக காவியம். ஏற்கனவே சொன்னபடி, நான் முட்டாளாக இருப்பதால் உயிரொடிருக்கிறேன். கதைசொல்லும் முறையில் புத்திசாலித்தனத்தைத் தேடாதீர்கள். எனது முன்னோர்களும், அவர்களது முன்னோர்களும் சொன்ன, கேட்டவைகளில் எனக்குத் தெரிந்ததை ஞாபகமிருப்பதை இதில் எழுதுகிறேன்.
எனது மூதாதையர்கள் எதற்கெடுத்தாலும் சண்டை போட்டார்களாம். உதாரணமாகச் சில. திருநீறு பூசுவதா? பட்டைநாமம் அடிப்பதா? மாமிசம் உண்பதா வேண்டாமா? யாருமே வாழமுடியாத நிலா உனக்கா? எனக்கா?. மிருகங்களுடனும் சண்டை போட்டார்கள். மனிதன் குரங்கிலிருந்து வந்தானா? இல்லையா. கடைசிக் கேள்விக்கு மட்டும் சரியான விடை கிடைத்துவிட்டது. இப்போதைய நிலவரப்படி குரங்குகளே மனிதனின் பரிணாம வளர்ச்சியால் வந்தவர்கள்.(அவர்கள் என்றுதான் பேசவேண்டும்- அவர்கள் ஆட்சிசெய்கிறார்கள்).

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் மேல் எழுந்து பூமியின் எல்லாப் பாகங்களும் கடல்நீரில் மூழ்கிவிட்டன. மலைகளில் தங்கியிருந்த, மனிதர்களால் துரத்திவிடப்பட்ட, மிருகங்கள் மட்டும் உயிரோடிருந்தன. பிழைத்த ஒன்றிரண்டு மனிதர்கள் மிருகங்களின் ஆட்சிக்கு அடங்கவேண்டிய தாயிற்று. எனது மூதாதையர்கள் அப்படித்தான் சிறைப்பிடிக்கப் பட்டனர். பெரிய பெரிய விஷயங்களைக் கண்டுபிடித்திருந்த மனித சமூகம் ஏறக்குறைய முற்றிலும் அழிந்துவிட்டது.
, இப்போது உலகையாளும் மிருகங்கள், என்னைப் போன்ற மனிதர்கள் மூலம், மனித மூளையின் வளர்ச்சியை தங்கள் பயனுக்கு உபயோகப் படுத்த முடியுமா என்று பரிசோதிக்கவே கூண்டில் வைத்துப் பராமரித்து வருகின்றன. எங்களால் உபயோகம் இல்லை தெரிந்து கொண்டால் கொன்று புசித்துவிடும் இந்த மிருகங்கள். எனது மூதாதையர்கள் சொல்வதுண்டு. எலிகளை கூண்டில் வைத்துத்தான் மனிதர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளின் பயனை ஆராய்ச்சி செய்வார்களாம். அவர்கள் நினைத்துப் பார்த்திருப்பார்களா இரண்டாயிரம் வருடங்களில் விஷயம் இப்படித் தலைகீழாக மாறிவிடும் என்று. மனிதர்கள் பூமியில் ஆதிக்கம் செய்த காலத்தை “மிருக அறிவு வரலாற்றின் ஆரம்ப காலம்” என்று இப்போது மிருகங்கள் அழைக்கின்றன போலும். என்ன எழவோ? எப்படியும் அழைக்கட்டும். என்னை உயிரோடு வெளியில் விடுவதாகத் தெரியவில்லை. கொன்றுவிட்டால் தேவலை. ஊசி, மருந்து, சோதனை, பரிசோதனை என்று தினம் நான் படும் பாடு மனித குலத்தார் பட்டதில்லை.

இன்று காலையில் ஒரு பெரிய எலியும், சிங்கமும் ஊசியில் மருந்தேற்றி எனக்கு வயிற்றில் குத்திவிட்டன. ..ம்ம்…எலிக்கு வந்த வாழ்வு. அது மனிதனுக்கு ஊசிபோடுகிறது. துணைக்கு சிங்கம் வேறு. உறுமிக்கொண்டிருந்தது. அதுகள் ரெண்டும் ஏதேதோ கத்திக் கொண்டன. மிருக மொழியாக இருக்க வேண்டும். என்னிடமிருந்து எதை எதிர்பார்க்கின்றன என்பது எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை இந்தக் கதையை எழுதுவதற்காக ஊசி குத்தியிருக்கக் கூடும்.

மனிதன் பேசுவது எழுதுவதும் அவைகளுக்குப் புரியாது. புரியும் முயற்சியாக இருக்கும். மனித சமூகம் வளர்ந்தது உலகை ஆண்ட விதத்தைத் தெரிந்து கொண்டால், மிருகங்கள் எளிதாக உலகை ஆளலாம். ஆனாலும் நான் அதைப் பற்றிச் சொல்லப் போவதில்லை. முதலில் மனிதன் உலகின் மூளை பலமுள்ளவனாக எப்படி ஆனான் என்பது எனக்குத் தெரியாது. யாருக்கும் தெரியாததாகக் கூட இருக்கலாம். மனித வரலாற்றுக்கு முன்னால் யாரும் திட்டமிட்டு இதைச் செய்திருக்க முடியாது. ஒரு விபத்தாக, எதிர்பாராததாக நடந்திருக்கும். இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னால் மிருகங்கள் என்ன திட்டமிட்டா ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன?. என்ன ஆனதோ தெரியவில்லை. கடல்நீரின் மட்டம் மிகமிக அதிகமாகிவிட்டதாம். பனிப்பாறைகள் உருகி கடலை நிரப்பிவிட்டதால் பூமியில் தரையே தெரியாமல் இமயமலை மட்டும் அதுவும் எவரஸ்ட் இருக்கும் மலைகள் மட்டும் தப்பித்தன.

மீண்டும் தண்ணீர் மட்டம் இறங்குவதற்கு பல ஆயிரம் ஆண்டுகள் ஆயின. அதற்குள் பூமியின் உயிரினங்கள் செடிகள், மரங்கள், எல்லாம் வேறுமாதிரியாக வளர்ச்சியடைந்தன. இதெல்லாம் நான் கேட்ட கதைகள். சரித்திரம், சான்றுகள் இலக்கியம், தரவுகள் எதுவும் எனக்குத்தெரியாது. படிக்கிறவர்கள் நம்பினால் நம்புங்கள். தெரிந்ததைச் சொல்லுகிறேன்.

மூன்று நாட்கள் முன்னால் நடந்ததைச் சொல்லுகிறேன். நானும் இன்னும் இரண்டு பேரும்,(ஒரு பெண்ணும்), இந்தப் பெரிய கூண்டில் இருந்தோம். திடீரென்று இரண்டு நாய்கள் வந்து மற்ற இருவரையும் வேறு எங்கோ கூட்டிச் சென்று விட்டன. இனி எனக்குத் துணையில்லை. அந்த வருத்தத்தில் தான் இதை எழுத ஆரம்பித்தேன். துயர்மிகுந்த நிலையில் மனிதன் எழுத ஆரம்பிக்கிறான் என்று என் முன்னோர்கள் சொல்வதுண்டு. அது உண்மைதான். அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. கொன்று விட்டார்களா? இன்னும் பெரிய கூட்டத்தில் வைத்துவிட்டார்களா?

நான் உயிருடனிருந்து இந்த மிருகங்களுக்கு எந்தப் பயனுமில்லை என்று நினைக்கிறேன். ஒருவேளை இதுவே எனது கடைசி நாளாக இருக்கக்கூடும்.

எனது மூதாதையர்கள் மிருகங்களைச் சிறையில் அடைத்து வைத்திருந்ததைத் தெரிந்து கொண்டே புலிகள் ஒன்று சேர்ந்து என்னைச் சிறையில் அடைத்தன. பூனைகள், எலிகள் எல்லாம் குடும்பத்தோடு வந்து என்னைப் பார்த்துச் செல்கின்றன. சில எலிகள், என் முகத்தில் துப்புகின்றன. குரங்குகள் படுத்தும் பாடுதான் தாங்க முடியவில்லை. குச்சியை வைத்து இடிக்கின்றன. என்னையும் தங்களையும் பார்த்துக் கொள்கின்றன. அதைத்தான் என்னால் சகிக்க முடியவில்லை. எப்படி உலகை ஆண்டோம்? இப்போது குரங்கு நம்மைப் பார்த்து இளிக்கிறது.

நடுநடுவில் உலகம் ஏன் இந்தக் கதிக்கு வந்தது என்று எழுத வேண்டியிருக்கிறது. இல்லையெனில் நான் உபயோகமற்றவன் என்று ஊசிபோட்டு கொன்றுவிடக்கூடும். எல்லாம் கேள்விப்பட்டதுதான். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் டீசல் என்று ஒரு திரவத்தைக் கண்டு பிடித்தார்கள். அதை எரித்து வேகமாகச் சுற்றக்கூடிய சக்கரம் வண்டி கண்டுபிடித்தார்கள். எரியும் போது அதிலிருந்து நிறையப் புகை வந்தது. நடந்துநடந்து பழக்கப் பட்ட மனிதன் வேகமாக பயணம் செய்தான். அதனால் வந்தது வினை. இருந்த இடத்தை விட்டுக் கிளம்பி உலகத்தில் உள்ள எல்லா இடத்தையும் பிடித்து அங்கிருக்கும் எல்லாப் பொருள்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தான். ரப்பர், இரும்பு என்று வித வித வண்டிகளை ஓட்டினான். உயரத்தில் பறந்தான் என்று கூடச் சொன்னார்கள். அது எப்படி முடியும்? பொய்யாக இருக்கக் கூடும். கதை விடுவதில் மனித இனம் கைதேர்ந்தது. சிலவற்றைத்தான் நம்ப முடியும். நானும் மனிதன்தான். நான் சொல்வதும் பொய்யாக இருக்கலாம்.கடலிலும், தண்ணீரிலும் மனிதன் சென்றானாம். மிருகங்களுக்கு அது தெரியுமா என்று புரியவில்லை. இப்போதும் தண்ணீரைக் கண்டால் பயப்படுகின்றன. இருப்பதோ கொஞ்ச நிலம். அதையும் விட்டுப்போக முடியாது அவைகளால். தண்ணீரில் இருக்கும் மிருகங்கள் நிலத்திலிருப்பவற்றை விட பலமுள்ளவை. இவைகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதுதான் தண்ணீரின் பக்கத்தில் போவதே இல்லை.”

இதற்கு மேல் என்ன எழுதியிருந்தது என்று தெரியவில்லை. அந்த மனிதன் என்ன ஆனான் என்பதும் தெரியவில்லை. இதைப் படித்து நான் எதைப் புரிந்து கொள்வது? அதை எப்படி தினமும் வரும் சிங்கத்திடம் சொல்லப் போகிறேன்? மனித குல வீழ்ச்சியின் வரலாறு இப்படித்தான் தொடங்கவேண்டும் என்றிருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும்.

இவற்றை எல்லாம் எழுதுவது யார் என்று உங்களுக்குச் சந்தேகம் வரக்கூடும்? எனக்குப் பெயர் கிடையாது. கழுத்தில் ஒரு உலோகத் தகடு தொங்குகிறது. அதில் என் பெயர் மிருகங்களின் மொழியில் எழுதப் பட்டிருக்க வேண்டும். அதை என்னைப் பார்க்க வரும் எலிகள் படித்துவிடுகின்றன. குரங்குகளும் முக்கித் தக்கிப் படித்துவிடுகின்றன.

பின்குறிப்பு:- நாலாயிரத்து ஐநூற்றி முப்பத்தி இரண்டாம் ஆண்டில் (அதாவது மிருகங்களின் ஆண்டுக் கணக்கில்) இந்த எழுத்துத் தொகுதி கண்டெடுக்கப் பட்டது. எழுதியவர் பெயர், ஊர் விவரம் தெரியவில்லை. நாடு, மொழி, கலாச்சாரம், இனம் தெரிந்தவர்கள் எனக்குத் தெரியப்படுத்தலாம்.

No comments:

Post a Comment