Friday, September 04, 2009

அடைமொழிகள்

மானுடம் வென்றதம்மா என்று களிப்பெய்தும் போது, மானுடத்துக்குள் என்னென்ன சண்டைகள் சச்சரவுகள் என்பது நினைவில் வருகிறது. இனம், மதம், இடம், பொருள், பால் என்னும் எத்தனையோ? இலக்கியத்திலும் இது வந்து விடுகிறது. தமிழ் இலக்கியத்தில் பெண்ணியம், தலித்தியம் என்று புதிய போக்குகள் எழுந்திருக்கின்றன. அதனதன் முக்கியத்துவத்தை அழுத்திச் சொல்லவே இவை பயன் பட்டாலும், அவையே புதிய மடங்களாக நிறுவிக் கொள்ளும் போக்கு கவலை தருகிறது.
இலக்கியம் என்பது எப்படி இருக்கவேண்டும் என்று பழைய மடங்களின் பீடாதிபதிகள் ஆணையிடுவதே போல் கூட்டம் சேர்த்துக் கோஷமிட்டு அலையும் போது, இன்னும் புதிய எழுச்சிகளின் தேவை அதிகமாகி விடுகிறது. இலக்கியத்தின் உள்ளடக்கத்தையும் அதன் வடிவத்தையும் ஒருங்கே காணாமல் பெண்ணியம் தலித்தியம் என்ற பெயர்களில் வலம்வரும் பல நூல்களின் நிலைமையை விமரிசிக்க முடிவதில்லை.
பூமணியின் கதைகள் தமிழ்ப் புனைகதையில் கொண்டு வந்த உலகையே இன்று ஒருவர் மீண்டும் புனைகதையாக்கும் போது அது தலித்தியம் என்று பெயர் பெறக்கூடும். பூமணியின் கதைகள் தலித்தியம் என்ற அடைமொழிக்குள் வராமலேயே நல்ல இலக்கியமாகத்தானே இருந்தன.
பாமாவின் எழுத்துக்களை தலித்தியம் என்ற அடைமொழி இல்லாமலேயே இலக்கியம் தான். இதுபோன்றே பெண்ணியம் என்ற கருத்தும். பல பெண் எழுத்தாளர்களுடைய எழுத்துக்கள் இந்த அடைமொழி இல்லாமலே இலக்கியத்தகுதி உள்ளவை. அடைமொழி கொடுப்பது என்பது தமிழகத்தின் இயல்புகளில் ஒன்று. யாரையும் சூபர் என்றோ ஞானி என்றோ நாயகன் என்றோ அழைக்கக் கூசுவதில்லை. இப்படி அடைமொழிகள் கொடுப்பதில் எழுத்தாளர்களுடைய ஆளுமை அல்லது எழுத்தின் முழுவீச்சு குறைப்பட்டுவிடுகிறது. பலநேரங்களில் சில எழுத்தாளர்கள் இந்தப் பெண்ணியத்துக்கோ அல்லது தலித்தியத்துக்கோ தலைமை தாங்க விரும்புவதையும் காண முடிகிறது. வேறு மாதிரிச் சொன்னால் தாங்களே இதைக்கண்டு பிடித்தவர்கள் என்று சொல்லும் போக்கு தென்படுகிறது.
தகுதிக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத அடைமொழிகள் தருவது தமிழக அரசியலிலிருந்தே தொடங்கியிருக்க வேண்டும். இன்னும் அடைமொழிகளின் ஆதிக்கம் அரசியலில் மிகக் கொடூரமாக ஆட்சி செய்வதைக்காண முடிகிறது. கண்ணதாசனைக் கவியரசு என்று அழைக்கும் போது மெல்லியதாகத் தெரிந்த அடைமொழி, கவிப்பேரரசு என்று வைரமுத்துவை அழைக்கும் போது அதிகமாகத் தெரிகிறது. அறிஞர் அண்ணா என்றழைக்கும் போது மெதுவாக உள்நுழைந்த அதீதம், அவரையே பேரறிஞர் என்றழைக்கும் போது மீறலாகத் தெரிகிறது. ஜவகர்லால் நேருவை யாரும் அறிஞர் என்ற அடைமொழியுடன் சேர்ப்பதில்லை. உண்மையாகவே அறிஞராக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். இரண்டாவது இரும்புமனிதர் என்றழைக்கப்பட்ட எல்.கே அத்வானியின் நிலை இப்போது எப்படி என்று சொல்ல வேண்டியதில்லை.
சாதாரண மனிதர்களை ‘சூபர்மென்’ ஆக்கும் நமது நேசம் சினிமாவில் அரசியலில் இதைச் செய்யவிடாது. ஆனால் அறிவுஜீவிகளாகிய எழுத்தாளர்கள் கவிஞர்கள் இதைச் செய்யலாம். கலாப்ப்ரியாவோ, வைத்தீஸ்வரனோ கவியரசு என்று போட்டுக் கொள்வதில்லை. அதுவரையில் சந்தோஷம். அவர்கள் கவிதை எழுதி காசு சம்பாதிப்பதில்லை. சினிமா போன்ற காசு போட்டு காசு சம்பாதிக்கும் தொழிலில் அது தேவைப் படுகிறது போலும்.

No comments:

Post a Comment