Sunday, July 08, 2018


எழுத்து, இலக்கியம், கலை.

இயல் ஒன்று


            எழுத்தாளர் பிரபஞ்சன் ஓரிடத்தில் சொல்லுகிறார், தமிழில் தீவிரமான விமரிசகர்கள் தேவை. ஆனால் பல நூல் வெளியீட்டு விழாக்களில் அவர் பேசுவதைக் கேட்டால், வெளியிடப்படும் புத்தகங்களை அனைத்தும் சிறப்பானவை என்றே தோன்றும்.  ஒருவேளை சிறப்பாகத் தான்கருதும் நூல் வெளியீட்டு விழாக்களில் மட்டுமே அவர் கலந்து கொள்வதாக எடுத்துக் கொள்ளலாம்.  நூல்கள் பற்றிய அவரது உரைகளில் தீவிர விமரிசனம் தென்படுவதில்லை.  சில சிறப்பான பகுதிகளை மட்டும் சொல்லிவிட்டு, சரியாக இல்லாத்து என்பதை நூலை வாசிக்கிறவர்களின் தீர்வுக்கு விட்டுவிடுகிறார் என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.  அவருடைய கதைகளில் வரும் மாந்தர்கள் நல்லவர்களாகவே இருக்கிறார்கள்.  அவர் உலகத்தின் மீதும் மனிதர்கள் மீதும் வைக்கிற விமரிசனத்தையே நூல்களின் மீதும் வைக்கிறாரோ? அதன் சாரம் இது தான் எல்லோரும் நல்லவரே எல்லா நூல்களும் நல்லனவே.. தீவிர விமரிசனத்தை எங்கே வைப்பது?  அவரை வம்புக்கு இழுப்பது எனது நோக்கம் அல்ல.  அதை ஒரு ஆரம்பப் புள்ளியாக வைத்து எனது பதிவைத் தொடங்குகிறேன். 

விமரிசனம் என்று தொடங்கினாலே அதற்கான அளவுகோல்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கிறது.  அப்படி நமக்கு நாமே வைத்துக் கொண்ட அளவுகோல்கள் ஒரு புதிய நூலில் முன்னால் அல்லது புதிய தத்துவத்தின் முன்னால் பொருத்தமற்றுத் தோன்றும் போது நமது அளவுகோல்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.  இது வரை தமிழில் வந்த விமரிசகர்களில் ஒருவர் கூட தன் அளவுகோல் இப்போது பொருத்தமில்லாமல் போய்விட்டது என்று ஒத்துக் கொண்டு புதிய விமரிசனத்தை வைப்பதைப் பார்ப்பது அரிது.  விமரிசனம் என்பது தன் நூலின் மீது வைக்கப்பட்ட தாக்குதலாகப் பார்ப்பது இங்கு வழக்கமாகிவிட்டது.  எனவே விமரிசனம் செய்தவர் மீது கொலைவெறி கொள்வது தமிழ் எழுத்தாளர்களின் பொதுவான குணமாகிவிட்டது.  இந்தப் பயத்தில் தர்க்க ரீதியான விமரிசனம் என்ற துறையே காணாமல் போய்விட்டது. தனக்குத் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள், அல்லது தம்மைப் பாராட்டுகிறவர்கள் அல்லது தூற்றுகிறவர்கள் என்ற இரட்டைப் பிரிவுகளில் விமரிசனம் (இதை விமரிசனம் என்று சொல்வதே தவறு) அடங்கிவிடுகிறது.  திருமணவீட்டில் மொய் எழுதுவதுபோல் கூப்பிட்டுவிட்டார்கள் என்பதற்காகப் பாராட்டிவிட்டு வந்து விடுகிறார்கள். 

தமிழில் வார இதழ்கள் வெளிவந்து பெரும் எண்ணிக்கையில் விற்பனை தொடங்கிய போது அவற்றில் எழுதி வந்தவர்கள் பெரும் புகழடைந்தனர்.   அவர்கள் ஒரே மாதிரிக் கதைகளை வாசகர்களின் மனம் கவரும் வகையில் திடீர்த் திருப்பங்கள் இன்னபிற அம்சங்களை வைத்து எழுதினர்.  இவர்களுக்கு முன்மாதிரியாக இருந்தவை ஆங்கிலப் பத்திரிக்கைகள்.   இதற்கு எதிர்வினையாக, இவையெல்லாம் இலக்கியமோ கதைகளோ ஆகாது, இவை வாசகர்களின் மேலோட்டமான பசிக்குத் தீனி போடுகிறவை என்ற கருத்துக்களை முன்வைத்து அக்காலத்தில் சிலர் இணைந்து சிறு பத்திரிக்கைகளைத்  தொடங்கினர்.  தீவிர உள்ளடக்கங்களை எழுதிய அவர்கள் தங்கள் கதைகளின் அம்சங்களை விமரிசன ரீதியாக, தர்க்க ரீதியாக நிறுவ முயன்றனர்.  இது அவர்களுக்கும் வெகுஜன இதழ்களுக்கும் இடையே ஒரு இடைவெளியை ஏற்படுத்தியது.  அந்த இடைவெளி எழுத்தாளர்களுக்கு இடையேயும் ஏற்பட்டது.  மற்ற மொழிகளிலும் இந்த இருவிதமான இதழ்கள் இருந்திருக்கக் கூடும்.  ஆனால் தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள் இருகட்சிகளாகப் பிரிந்து நின்றனர்.  உதாரணமாக மணிக்கொடி எழுத்தாளர்கள், ஆனந்த விகடனில் எழுதியவர்கள் என்று வைத்துக் கொள்ளலாம்.  இது முப்பதுகளில் நடந்தது.

நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம்  தோன்றியதும் அந்த இயக்கம் சார்ந்தவர்களும் அதன் பின்னர் பொதுவுடைமை இயக்கம் சார்ந்தவர்களும் நடத்திய சிற்றிதழ்களில் கதைகள் கட்டுரைகள் என்று அவரவர் வழியில் எழுதிக் குவித்தனர்.  வெங்கட் சாமிநாதன் போன்ற விமரிசகர்கள் இக்காலத்தில் தீவிரமான இலக்கிய விவாதங்களை நடத்தினர்.  அவற்றில் பல விமரிசனங்கள் நேர்மையான, உண்மையான நம்பிக்கையுடன் செய்யப்பட்டவை.  அவற்றை எதிர்த்து எழுதிய பொதுவுடமைவாதிகளும், அவரை கண்டுகொள்ளாமல் விட்ட மற்றவர்களும் தங்கள் அரசியல் காரணங்களுக்காகவை அவற்றைச் செய்திருக்கக்கூடும்.  வெ.சாமிநாதனும், தமிழின் மரபு இலக்கியங்களைத் தெரிந்து கொள்ளாமலேயே அது பாலைவனம் என்ற முடிவுக்கு அவசரமாக வந்துவிட்டது போல் தோன்றுகிறது. அவருடைய விமரிசனமும் தன்விருப்பம், புளகாங்கிதம் என்ற அளவுகோலைத் தூக்கிப் பிடித்திருந்தது.  விமரிசனம் அல்லது ரசனை ஒவ்வொருவரின் ரசனை சார்ந்த விஷயம் என்று நம்பிய ரசிகமணியின் அடுத்த கட்டமாக, ஆனால் அவரைவிட ஆழ்ந்த இலக்கியக் கொள்கைகளை முன்னிருத்துகிறவர்களாக, பிரமிள், சுந்தர ராமசாமி இன்னும் பலர் இக்காலகட்டத்தில் விமரிசன மரபை மேலெடுத்துச் சென்றனர்.   ஆனால் க. கைலாசபதி சுட்டிக் காட்டியது போல இவர்களிடையில் ஒரு பொதுவான அளவுகோல்கள் அல்லது தரவுகள் இல்லாததால், இலக்கியத் தெருச்சண்டைகள் போலவே அவர்கள் முடிந்தும் போனார்கள்.  இவையெல்லாம் குறைகள் என்று காணவேண்டியதில்லை.  வளர்ச்சியின் படிநிலைகள் என்று கொள்ளலாம். 

          இடதுசாரி அல்லது முற்போக்கு இலக்கியம் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த போது அதற்கு எதிர்நிலையாக இயங்கிய வெ.சாமிநாதனின் விமரிசனங்களும் மிகத் தீவிரமாக இருந்தன.  அதற்கு அடுத்த கட்டத்தில் அவர் விதந்தோதிய எழுத்தாளர்களை அவருடன் அதுவரை இருந்த மற்ற இலக்கியவாதிகளுக்குப் பிடிக்காமல் போக, எல்லோரும் இடதுசாரி, திராவிட மற்றும் வெகுஜன இதழ்களின் இலக்கியப் போக்குகளின் மீதான தங்களின் விமரிசனங்களை நிறுத்திக் கொண்டனர்.   

இதனிடையே தலித் விமரிசகர்களாக அறியப்பட்ட பொ.வேல்சாமி, . மார்க்ஸ் இன்னும் பலர் வெளிப்பட்டனர்.  பின்னர் அவர்களுக்குள்ளும் பிரிவுகள் ஏற்பட்டுவிட்டது. 

இன்றைய நிலையில் தமிழில் விமரிசனம் என்பது தீண்டத்தகாத விஷயமாக மாறிவிட்டது.  ஏனெனில் விமரிசனம் செய்தால் பொறுத்துக் கொள்ள முடியாத மனிதர்களாக நாம் மாறிவிட்டோம்.  அரசியலிலும் விமரிசனங்களின் தரம் தாழ்ந்துவிட்டது என்பதை இத்துடன் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.

இலக்கியச் சூழலுக்கும் இதற்கும் சம்பந்தம் உண்டு.  முதலாவது தமிழின் வாசகப் பரப்பு.  இதையும் மற்ற சமூக நிலைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது.  பள்ளிகளில் இருந்து தொடங்கலாம்.  பாடத்தைத் தவிர எதையும் படிக்கக் கூடாது என்ற மனநிலை பெரும்பாலான ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், பள்ளிகளை நடத்துகிறவர்களுக்கும் இருக்கிறது.  இது ஒரு அடக்குமுறை.  பாட நூல்கள் தவிர மற்ற நூல்களைப் படிக்கிறவன் கேள்விகளைக் கேட்பான் என்ற பயமே நம்மை வேண்டாம் என்று சொல்ல வைக்கிறது. அவன் அப்பா அம்மா இவர்களின் சொல்படி நடக்க மாட்டான்.  படி, பணம் சம்பாதி என்பதே நமது தாரக மந்திரம்.  படி, சிந்தி என்பது மற்ற நாடுகளில் இருக்க, இங்கே அது தேவையில்லை.  நமது பொருளாதாரமும் இதில் சம்பந்தப் பட்டிருக்கிறது.  நாம் மேலைநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்யவும், ரிப்பேர் செய்யவுமே கற்றுக் கொடுக்கிறோம். நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளும் சிந்தனை செய்வதை முன்னிருத்துவதில்லை.   அரசியலும் இப்படியேதான் இருக்கிறது.  இந்த விஷச் சுழலில் சில ஆயிரம் பேர் தமிழில் படிப்பதே அதிசயம்.  அதற்கு மேல் விமரிசனத்துக்கு எங்கே போவது?

தமிழில் வாசிக்கிறவர்கள் குறைவாக இருப்பதால், எழுதுகிறவர்களும் குறைவாகவே இருக்கிறார்கள்.  எழுதுவது ஒரு பொருளாதார செயல்பாடாக, ஒரு தொழிலாக நிலைபெறவில்லை.  எழுதிப் பிழைத்தவர்கள் ஒன்றிரண்டு மனிதர்களே உண்டு. 

எனவே முதலடியாக, வெகுஜன இதழ்களில் கதைகள் எழுதுகிறவர்கள் அதிகமாக வேண்டும்.  தீவிர இலக்கியம் படைக்கிற எழுத்தாளர்களும், கலைஞர்களும் விமரிசகர்களும் வெகுஜன எழுத்தாளர்களின் பங்களிப்பை அங்கிகரித்து அவர்களுகுரிய மரியாதையை வழங்க வேண்டும்.  வாசகப் பரப்பு அதிகமானால் தானே அதிலிருந்து விடுபட்டுத் தீவிர வாசகர்கள் தோன்றுவார்கள்.  பதிப்பகங்களும் தீவிர இலக்கியப் பதிப்பகம், வெகுஜன இலக்கியப் பதிப்பகம் என்று தங்களுக்குத் தாங்களே போட்டுக் கொண்ட வரையறைகளில் சிக்காமல், வெகுஜன எழுத்தாளர்களைத் தீவிரப் பதிப்பகங்கள் வெளியிடவேண்டும்.  ஆங்கிலத்தில் வெளியிடும் பதிப்பகங்கள் ஒரே கம்பெனியாக இருந்தாலும், இம்பிரிண்ட் வேறுபெயரில் வெளியிடுவது போலவும் செய்யலாம்.  ஏனெனில், தீவிர இலக்கியத்தை வெளியிடும் பதிப்பகங்கள் கூட லாபகரமாக நடந்தால்தான் தீவிர இலக்கியங்களை மென்மேலும் வெளியிட முடியும்.
கலப்புப் பொருளாதாரம் போல, வெகுஜன்ங்களில் பேராதரவு பெற்ற எழுத்தாளர்களை (அப்படிச் சிலர் இருந்தால்) வெளியிடுவதன் மூலம் வரும் வருமானத்தைத் தீவிர எழுத்தாளர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.  இப்போதிருக்கும் நிலையில், நல்ல பதிப்பகங்கள் நட்டத்தில் நடக்கின்றன. நல்ல எழுத்தாளர்கள் வாழும் வகையில் வருமானம் இல்லை. ஆனாலும் பியுரிடன் (சுத்த இலக்கியம்) மனப்பான்மையில் நம்மை நாமே வதைத்துக் கொள்வதில் என்ன பயன்?

          இதனால்,
1.      வெகுஜன எழுத்து, தீவிர எழுத்து என்ற வகைமைகளை வாசகனின் தீர்வுக்கு விட்டுவிட வேண்டும். வாசகப் பரப்பை அதிகரிப்பதே பதிப்பகங்களின் பணி.  அது எந்தவகைப் பதிப்பகமாக இருந்தாலும் சரி.
2.     தீவிர இலக்கியங்களை பதிப்பிக்கவே பிறந்த பதிப்பகங்கள், வெகுஜன எழுத்தாளர்களைப் பதிப்பிப்பதன் மூலம் பயன் பெறலாம்.  பதிப்பகங்கள் தொடர்ந்து இயங்கினால்தான் தீவிர இலக்கியமோ அல்லது வெகுஜன இலக்கியமோ, வெளியிட முடியும்
3.     இவற்றின் தொடர்ச்சியாக எழுத்தாளர்களுக்கு உரிய சன்மான கிடைக்கும்.  இந்தத் தொடர்சியில் நல்ல தீவிர எழுத்தாளர்கள் இன்னும் எழுத முன்வருவார்கள்.  இந்த வளையம் தொடர்ந்து செயல்படும்.
4.     தம்மைத் தாமே உயர்ந்த இலக்கியம் மட்டுமே வெளியிடுவோம் என்று கொள்கை வைத்துக் கொண்டு, ஆனால் எல்லாம் நட்டம் என்று புலம்பிக் கொண்டு தங்களை தியாகிகளாகவும், துறவிகளாகவும் காட்டிக்கொண்டு, ஆனால் பணம் சம்பாதித்துக் கொண்டும் இருப்பது முரண்பாடான நிலை. 

இப்போதிருக்கும் நிலையில், நூல்களின் தயாரிப்பு விநியோகம் இவற்றில் முக்கியமாக எழுத்தாளனின் மதிப்பு அவன் எழுதுகிற தாளின் மதிப்பை விடக் குறைவாக இருக்கிறது.  அவன் எழுதுவதே நூலாக்கத்தின் முதல் படி.  பிஸ்கட் செய்வதற்கு கோதுமை போல.  அவன் உழைப்புக்கான ஊதியத்தை வழங்காத எந்தப் பதிப்பகமும் முதல்படியிலேயே தவறி விழுகிறது, தவறு செய்கிறது என்றே கருதுகிறேன்.  இது இப்படித்தான் என்று வழக்கம் போல பதில் சொல்லலாம். இது இப்படி இருக்க வேண்டியதில்லை என்பது தான் அறம்.  அறம் பேசுகிற பதிப்பாளர்கள் இதைத் .தொடங்கினால் மற்றவர்களும் இதைப் பின்பற்றுவார்கள். தாங்கள் ஒரு விஷயத்தில் முன்னோடி என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லையா? இதிலும் அடித்துக் கொள்ளட்டுமே? நட்டத்தில் செயல்படுகிறோம் என்று சொல்லிக் கொண்டே நாற்பது வருடங்களாக அத்தொழிலில் ஈடுபடுவது பொருளாதார ரீதியாகயும், தனிமனித ரீதியாகவும் ஒப்புக் கொள்ள முடியாத வாதம்.  வணிகம் என்ற முறையிலும், சமூகச் செயல்பாடு என்ற முறையிலும் தொடர்ந்து செய்ய முடியாத நிலைக்கே அது இட்டுச் செல்லும்.