Friday, January 24, 2020

சமையலறையிலிருந்து விடுதலை

      மனிதகுலத்தின் வரலாற்று நினைவுகள் தெரிந்த காலங்களிலிருந்து குடும்பம், வீடு என்ற அமைப்புகள் தோன்றுவதற்குச் சற்றேறக்குறைய சமகாலத்திலிருந்து பெண்கள் சமையல் செய்யும் வழக்கம் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் அதைப் பெண்களின் கடமை என்று சொல்கிறோம்.  சமையலறை பெண்களுக்கு ஒரு சிறைக்கூடம் ஆகிவிட்டது.  வரலாற்றில் போரிடுதல் ஆண்களின் கடமையாக இருந்தது. 

     இன்றைய காலத்தில் பெரும்பாலான பெரும்சமையல் கூடங்களில் -  திருமணம், விழாக்கள், சாப்பாட்டுக் கடைகள், விடுதிகள் – சமையலறையை எடுத்துக் கொண்டுவிட்டார்கள்.  இராணுவத்தில் பெண்கள் சேரத்தொடங்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.  எனவே ஆண்  செய்கிற வேலை, பெண் செய்கிற வேலை என்ற பாகுபாடு தகர்ந்துவிட்டது.

     இந்தப் பாகுபாடு இன்னும் முடிவுக்கு வராத இடம் ஒன்று உள்ளது.  அதுதான் வீட்டின் சமையல் அறை.  கடையில் சிறப்பாகச் சமையல் செய்கிறவர்கள் கூட வீட்டுக்கு வந்தால் மனைவி சமைத்துத் தரவேண்டும் என்பதையே விரும்புகிறார்கள்.  பெண்கள் சமையல் வேலை செய்யச் சென்றாலும், வேறு வேலைக்குச் சென்றாலும், கணவன் வீட்டில் இருந்தாலும், பெண்களே சமையல் வேலை செய்கிறார்கள். ’தாயோடு அறுசுவை போம்’ என்ற மொழியும் தாயன்பின் பெயரால், கடமையின் பெயரால் ஒரு சிறையாகவே ஆகிவிட்டது.

     ஆண்களும் பெண்களும் பணிபுரிகிற அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் இருபாலரும் சமமாகச் சம உரிமையுடன பணிபுரியும்போது, வீட்டில் மட்டும் சமையலறை பெண்ணின் இடமாக வரையறை செய்யப்படவேண்டும் என்று தற்காலத்தில் பலரும், குறிப்பாக உழைக்கும் பெண்களும்  கேள்வி எழுப்புகிறார்கள்.

     சமூகத்தில் மாற்றங்கள் கேள்விகளை எழுப்புவதால் தொடங்குகின்றன. ஆனால், அதைத் தொடர்ந்து செயல்பாடுகள் இல்லையெனில் கேள்வி நூற்றாண்டுகள் தாண்டியும் கேள்விகளாகவே நின்றுவிடும். ஆண்களும் வீட்டில் சமையல் செய்யும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று சம உரிமை கோருவது ஒருபுறம் சரியென்றேபடுகிறது. ஆனால் வீட்டில் சமைத்த உணவு எவ்வளவு சுவையானதாக இருந்தாலும் கடின உழைப்பு அதற்குப் பின்பலமாக உள்ளது. அப்படி உழைத்தவர்கள், ஆணோ பெண்ணோ அல்லது இருவருமோ மிகவும் களைப்படைந்து விடுவது இயற்கை. நாம் தினமும் காணும் காட்சி.

     இந்த நிலை தொடர முடியாது.  இதிலிருந்து இருவரையும் விடுவிக்க ஏதாவது வழிமுறையை சிந்தித்தாக வேண்டும். இன்றையப் பணிச்சூழலில் – அலுவலகப் பணிகள், ஆய்வுகள் எல்லாம் – வீட்டுக்கு வந்தபின்னும் தொடர்வதைப் பார்க்கிறோம்.  இது காலத்தின் கட்டாயம்.  பணிநேரத்தை எட்டு மணிநேரத்தில் இருந்து, நான்கு மணிநேரமாகக் குறைக்கலாம். குறைத்தால் இன்னும் இரண்டு மடங்கு மனிதர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. எல்லோருக்கும் இப்போதிருக்கும் சம்பளத்திலேயே இதைச் செய்யலாம் என்று ஒரு ஆய்வில் கண்டிருக்கிறார்கள். ஆனால், வேலை அளிப்பவர்கள் இன்னும் ஆளுக்கு எட்டு மணிநேரம் என்ற வலையில் இருந்து மனிதர்களை விடுவிக்கத் தயாராக இல்லை.  இந்த நிலையில் பெண்களின் மன அழுத்தத்தைக் குறைக்க சமையல் அறையில் இருந்து அவர்களை விடுதலை செய்வது குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் அவசியமானது.  மன அழுத்தத்துக்கு ஆளாகும் பெண்கள், உடல்நலக்குறைவு ஏற்படும் வரை உழைக்கும் பெண்கள் குடும்பத்தின் மேலும் அமைதி ஏற்பட உதவப்போவதில்லை. 

     மேலும் குழந்தைகள் வளர்ப்பதில் தாய் தந்தையரின் பங்கு மிகவும் குறைந்து வருகிறது.  முந்தைய தலைமுறைவரை, இன்னும் கூடச் சில குடும்பங்களில் தாய் தந்தையர் உயிருடன் இருக்கும் வரை அவர்களுடைய பாதுகாப்பிலும், அவர்களுடைய அதிகாரத்திலும் அடுத்த தலைமுறை வளர்ந்தும், தவித்தும் வந்தது, வருகிறது.  இன்றைய நிலையில் பள்ளிகள், விடுதிப் பள்ளிகள், கல்லூரி விடுதிகள், வெளியூரில் கல்வி, உள்ளூரில் பயின்றாலும் தனிப்பயிற்சிக்காக பள்ளியிலேயே பெரும்பாலான நேரத்தைச் செலவிடுவது என்று குழந்தைகள் பெற்றோரை விட்டுத் தனித்து இயங்கும் காலமும், நேரமும் மிகவும் அதிகமாகிவிட்டன.  தாயும் தந்தையும் உழைத்துவிட்டு வீடு திரும்பும் போது குழந்தைகளைக் கவனிக்கும் நேரமும் குறைந்து போகிறது. 

     இவற்றுக்கெல்லாம் தீர்வுகளைக் கடந்தகாலத்து நடைமுறைகளில் தேடுவது மாற்றம் அல்லது வளர்ச்சி என்பனவற்றிற்கு முரணானது.  இதுபற்றி நினைத்தாலே தாயன்பு, குடும்பம், குழந்தைகளின் நலன் எல்லாம் எவ்வளவு முக்கியம் என்று உணர்ச்சிபூர்வமாக வாதிடுகிறவர்கள், மொத்தச் சுமையும் பெண்களின் மீது விழுகிறது என்பதை உணர்ந்தாலும் அதை மாற்றும் எண்ணம் கூட இல்லாத கருணையற்றவர்களாகவே இருக்கிறார்கள். உணர்ச்சிவசப்படுவது எளிது.  பணிச்சுமையில் இருப்பவர்களுக்கு வேலையைக் குறைப்பது அவசியமானது என்பதை உணரவேண்டும்.
 
     சமையலறை என்ற சிறையில் இருந்து பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் விடுதலை செய்யும் முறைகள்/வழிகள் குறித்துச் சிந்திக்க வேண்டும்.

     தெருவுக்கு ஒரு சமையல் கூடம் அமைத்து, குறைந்தபட்ச உணவுப் பொருட்களை வாங்கவும் வழங்கவும் ஏற்பாடும் செய்யலாம்.  ரெடிமேட் உணவுகளைத் தரமாகத் தயாரித்து விற்பனை செய்யலாம். அல்லாது ஆர்டர்கள் கொடுத்து வீடுகளில் டெலிவரி செய்யச் சொல்லலாம்.  பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் மதிய உணவு வழங்குவதைக் கட்டாயம் ஆக்கலாம்.

வீட்டில் இல்லத்தரசிகளாக மட்டும் இருக்கும் பெண்கள் சமையலறையை விட்டு வெளியே வந்தால், புதிய திறன்களைப் பெறவும், சமையலை வீட்டு வேலைகளை மட்டுமே செய்யும் நிலை மாறவும் இது உதவும்.  உலகில் பாதி ஜனத்தொகை வரையிருக்கும் பெண்களின் அறிவுத் திறனை, உழைப்புத்திறனை, சாதாரண வேலைகளில் வீணடிப்பது தகாது.  அவர்களின் பங்களிப்பு எல்லாத் துறைகளிலும் இருந்தால், உலகம் இன்னும் வேகமாக பல நன்மைகள் பெறும். 

     இப்படி புதிய முறைகளைப் பற்றி சிந்திக்க வேண்டியிருக்கிறது.  முன்பெல்லாம், குழந்தைகள் தாய்ப்பாலை மட்டும் பல மாதங்கள் அருந்திவந்தார்கள்.  அந்தக் காலத்தின் நீளம் காலம் போகப் போகக் குறைந்து கொண்டெ இருக்கிறது. அதனாலெல்லாம் தாய்ப்பாசம் குறைந்து விடவில்லை.  குழந்தைகள் முந்தைய தலைமுறையை விட சுதந்திரமாகச் சிந்திக்கிறவர்களாக, சிறுவயதிலேயே தனித்துச் செயல்படக்கூடிய திறன் பெற்றிருக்கிறார்கள். மனிதன் அன்பு எங்கு கிடைத்தாலும் மிக மகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறான்.  அன்பு சாப்பாட்டிலோ, சமையல் அறையிலோ, பள்ளியிலோ அலுவலகத்திலோ இல்லை. அன்பு நாம் ஒருவருடன் ஒருவர் பழகுவதில் இருக்கிறது. மனிதர்கள் சமமானவர்கள் என்ற உணர்விலிருந்து பிறக்கிறது. எந்தத் தொழில்நுட்பம் மாறினாலும் அது தொடரும்.

     சமையல் அறையின் கடும் உழைப்பிலிருந்து மனிதர்களை, குறிப்பாகப் பெண்களை, ஆனால் ஆண்களையும் விடுதலை செய்யும் தேவை இன்று உணர்ந்தால், வருங்காலங்களில் தீர்வுகள் கிடைக்கும்.

      வரலாற்றில் மனிதன் சிந்தித்து வெற்றி காணாத பிரச்சனைகள் உண்டா?

கவனத்தைச் செலுத்தினால் தீர்வுகள் கிடைக்கும்.


பொய்யான தீர்வுகள்

     இந்தியா மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவிட்டது என்று அரசுகள் சொல்லுகின்றனமின்சக்தி உற்பத்தித்திறன் தேவைக்கு அதிகமாக இருக்கிறது. ஆனால் முழு உற்பத்தித்திறனையும் செயல்படுத்துவதில்லை. சில மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படாமலேயே இருக்கின்றன என்றும் சொல்லப்படுகிறதுமறுபுறம் பெரிய நகரங்களில் கூட வாரத்திற்கு இரண்டு மூன்றுமுறை மின்சார வினியோகத்தில் தடைகள் ஏற்படுகின்றனஉற்பத்தித் திறன் இருந்தும், மின்சாரத்திற்கான தேவை அதிகம் இருந்தும் ஏன் இந்த நிலைமை? இதற்கான இந்தியா முழுமைக்குமான விடை அல்லது காரணத்தை அரசு பொதுமக்களுக்குத் தெரிவிப்பதில்லை அல்லது பற்றாக்குறை பிரச்சனையைத் தீர்க்க முயற்சிகள் எடுப்பதில்லை
     இதன் எதிர்விளைவாக, பெரும்பாலான வீடுகளில் தடையற்ற மின்வசதி தேவை என்பதால் இன்வெர்டர் போன்ற சாதனங்கள் பொருத்தப்படுகின்றன. வீட்டின் அளவுக்கேற்ப பத்தாயிரத்தில் இருந்து அதன் சராசரி விலை இருக்கிறது. இந்தியாவில் எத்தனை வீடுகளில் இந்த வசதி இருக்கிறது? எவ்வளவு செலவாகிறது என்றெல்லாம் அரசு கணக்கெடுக்கவில்லைஅரசு கணக்கெடுக்காது. ஏனெனில் கணக்கெடுத்தால், இரண்டு மூன்று மின் உற்பத்தித் தொழிற்சாலைகள் கட்டுகிற அளவில் செலவு ஏற்படுகிறதுஒவ்வொரு தனிமனிதனும் இதற்கான செலவுகளை ஏற்கிறான். இது போலவே விதிவிலக்கே இல்லாமல், ஒவ்வொரு தொழிற்சாலையிலும்ஜெனரேட்டர்மின்கருவி  வைத்திருக்கிறார்கள்அலுவலகக் கட்டடங்களிலும், வணிக வளாகங்களிலும் தவறாமல் இந்தச் சாதனம் இருக்கிறதுஇதன் மொத்தச் செலவைக் கணக்கிட்டால் இன்னும் ஒரு பெருந்தொகை என்பது புரியும்இவ்வளவு பெருந்தொகை செலவுகளைப் பார்த்த பின்னும் அரசுகள் வாளாவெட்டியாக இருக்கின்றன
     இது போலவே அடிப்படை உரிமையான நீர் வழங்குதலும் இருக்கிறதுஅரசுகள் பொதுமக்களுக்குத் தண்ணீர் வழங்கும் முறையிலும் இவ்வாறே விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் நீரின் குண்ங்கள் பற்றிப் பயமுறுத்தி, ஒவ்வொருவர் வீட்டிலும், மின்சாதன நீர் வடிகட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவருக் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இந்த சாதங்களை வாங்கிவிடுகிறார்கள்இவற்றின் விலை சராசரியாக ஐந்தாயிரம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது. பல்லாயிரம் கோடி ரூபாய்கள் இவற்றில் செலவு செய்யப்படுகிறதுஇதைத் தவிர, தண்ணீர் பாட்டில்கள் விற்பனையிலும் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவாகின்றன.
     அரசுகள் தரமான மின்விநியோகம் அல்லது தண்ணீர் விநியோகம் செய்யவில்லை அதனால்தான் இந்தச் செலவுகள் பொதுமக்கள் தலையில் விழுகின்றன என்ற உணர்வு அறவே அற்றுப்போய்விட்டது.
     மின்விநியோகம் தடைப்படும் நேரங்களில் கடைவீதிகளில் நடந்து சென்றால், எத்தனை ஜெனரேட்டர்கள் புகைகளைக் கக்கிக் கொண்டிருக்கின்றன என்பதை கவனித்தவர்கள் கண்ணீர் விட வேண்டியிருக்கும்புகையாலும், இதன்மூலம் ஏற்படும் வீண் செலவாலும், வீணாகும் அதித மூலப்பொருட்களால்  ஏற்படும் தீய விளைவுகளாலும் பொருளாதாரமும் சுற்றுச் சூழலும் மோசமாகப் பாதிக்கப்படுகின்றன.    
     தண்ணீர் விற்பனையில் நிகழும் அநியாயங்களைச் சொல்லிமுடியாதுநதிகளின் நீரை தனியாருக்குத் தாரை வார்ப்பதிலிருந்து, பாட்டிலில் உள்ள தண்ணீர் எவ்வளவு சுத்தமானது அல்லது அவற்றில் இருக்கும் தாதுக்கள், கனிமங்கள், பாக்டீரியாக்கள் எவ்வளவு என்பது பற்றிய எந்த விவரங்களும் பாட்டிலின் மேல் ஒட்டப்பட்ட தாளில் இருப்பதில்லை. எப்போதாவது சாப்பிடும் மருந்துகளில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த விவரம் எல்லோருக்கும் எப்போது விநியோகமாகும் தண்ணீர் பாட்டிலில் இல்லை. அதன் தரம் குறித்து யாருக்கும் தெரியாது. எந்த உத்தரவாதமும் இல்லாத தண்ணீர் பாட்டிலை நம்பித்தான் நாம் வாழுகிறோம்.
     தொடர்ந்து மின்சாரம் பெற தனித்தனி ஜெனரேட்டர்கள் தீர்வாகாது. சுத்தமான தண்ணீர் பெற தனித்தனி நீர்வடிகட்டிகள் தீர்வாகாது. திடீர்த் தீர்வுகள், உடனடித் தீர்வுகள் தற்காலிகத் தீர்வுகளேமின் உற்பத்தியைப் பெருக்குவதை விட்டு, ஜெனரேட்டர்கள் உற்பத்தியைப் பெருக்குவதும், சுத்தமான  தண்ணீரை விநியோகிக்காது, நதிகளை நீர்நிலைகளை சுத்தப்படுத்தாமல், வீட்டுக்கு வீடு தீர்வுகளைக் காண்பது விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் தீராத தாகத்துக்கு உப்புத் தண்ணீர் குடிக்கும் வேலை. அதைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
     பெரும் கார்ப்பரேட்கள், இன்னும் கொஞ்சநாளில் வீட்டுக்கு வீடு காற்றையும் விற்பனை செய்வார்கள்இது ஏற்கனவே தொடங்கிவிட்டது. டில்லியில் காற்றைச் சுத்தப்படுத்தும் கருவியை பொது இடத்தில் வைத்திருக்கிறார்கள். இன்னும் சில வருடங்களில் நாமும் வீட்டுக்கு வீடு காற்றைச் சுத்தப்படுத்தும் கருவியை வாங்கி வைக்க வேண்டிய நிலை ஏற்படும்இது காற்றுடன் முடிவதில்லை.