Thursday, December 06, 2018


முடிக்கப்படாத கதைகள்

தொடங்கப்பட்ட கதைகள் எல்லாம்
முடிந்துவிடுவதில்லை

கதையில்
காட்டில் விடப்பட்ட மனிதன்
அங்கேயே அலைந்து கொண்டிருக்கிறான்

முடிந்த கதைகளிலும் கூட
சிலர்
என்ன செய்வதென்று
திகைத்து நின்றுவிடுகிறார்கள்

பக்கத்து வீட்டுப் பெண்ணைக்
காதலித்த விடலைப் பையன்
மீளாமலேயே தவிக்கிறான்

ரஜினி படங்களைப் போலவே
ஓரிரவில் பணக்காரனாகிவிட
சாகும்வரை
விரும்புகிறான்

கற்பனையாக நிகழ்த்தப்பட்ட
புரட்சியில்
விடுதலை நிகழாமல்
நிறுத்திவிட்ட எழுத்தாளன்
சாபத்துக்கு உள்ளாகிறான்

எக்காளத்துடன்
இரு கால்களில் நிற்கும்
குதிரையில் சிலைபோல
உறைந்து நின்றுவிட்ட மாந்தர்கள்

ஓவியமாகவோ
திரைப்படமாகவோ
கதையாகவோ அல்லது
தொடங்கி நிறுத்தப்பட்ட
குட்டிச் சுவர்போலவோ
நீங்கள் வடித்துக் கொள்ளலாம்

தங்களை முழுமைப்படுத்துகிறவர்களிடம்
அவையாவும் யாசிப்பது அதுவே


தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்

          பரியேறும் பெருமாள்திரைப்படத்தின் இயக்குனர், மாரி. செல்வராஜ் எழுதிய இந்த நூலைப் படிக்கத் தூண்டியது அந்தப் படம்தான்.  வெகு அரிதாகவே வரும் சில நல்ல தமிழ்ப் படங்களில் ஒன்று அது. தமிழ்த் திரைப்படங்களின் அரைத்த மாவையே அரைக்கும் கதை, காட்சிகள் இவற்றை மீறி, தமிழ்ச்சமூகத்தின், இந்தியச் சமூகத்தின் அவலத்தை, அடங்கிய குரலில் பதிவு செய்தது.  அதன்விளைவாக அவர் ஒரு நல்ல எழுத்தாளராக இருக்க வாய்ப்பு அதிகம் என்றே கருதி இந்த நூலை வாங்கினேன். 

            இந்த வாய்ப்பு விண்போகவில்லை என்பதை தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்காட்டுகிறது.  திரைப்படத்தின் வெற்றிக்குக் காரணம், அவருக்குள் ஒளிந்திருக்கும் ஒரு கலைஞன் என்பதைப் புத்தகம் நிறுவுகிறது.  இதுவரை நாம் பார்த்திராத வலிமிகுந்த காட்சிகளை, தன் கதைகள் என்ற ஜன்னல்களைத் திறப்பதன் மூலம் நமக்குக் காட்டுகிறார்.  இதுவரை அரிதாகவே சொல்லப்பட்ட புதிய கதைக்களங்கள், புதிய பார்வைகள் சில இடங்களின் மொழியின் மேன்மை வலியையும், அதனூடே எழும் முரண்கள், நகைப்புக்களையும் எழுதிச் செல்கிறார்.   ஒரு மனிதனுக்குள் புதைந்திருக்கும் வன்ம்மும், அன்பும், அவர்கள் சறுக்குகிற இடங்களும் மிக இயல்பாக, எந்த மறைவும் இன்றி வெளிச்சத்துக்கு வருகின்றன.  அதிகாரத்தின் கெட்டிதட்டிப்போன நடைமுறையாகிவிட்ட வன்முறையை தலைப்புக் கதையான தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் காட்டுகிறது. போராட்டக் காரர்களை அடக்கி ஒடுக்குவதில் அரசுகள் காட்டும் தேர்ச்சியையும் போராடுகிறவர்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக பொதுச் சமூகம் அவர்களுக்கு ஆதரவு தர மறுப்பதையும் பதிவு செய்கிறது கதை. 

            சுரேஷ் என்ற நாய் என்றோ ஒரு நாள் ஒருவனைத் தவறாகக் கடித்துவிட்டது என்பதற்காக மனிதர்களிடம் அது படும்பாடு   ஒரு கதையில் பதிவாகிறது. மனிதர்களின் மீது மனிதர்கள் காட்டும் வன்மத்திற்கே எல்லையில்லை என்றாகிவிட்ட பண்பாட்டில், ஒரு சிறுமிருகம் என்ன ஆகும்?  நாய்க்குப் பதிலாக ஒரு மனிதன் என்று எடுத்துக் கொண்டால் இன்னொரு தளத்திற்குக் கதை செல்கிறது.  நம்மை விமரிசிப்பவர்களைக் கூட (கடிப்பதுதானே அதுவும்) நாம் எப்படி நடத்துகிறோம்? வேறுபட்ட, தனித்துவமான கதை.   வன்முறை இயல்பானதாகிவிட்ட ஒரு கொடுஞ்சமூகத்தில் வன்முறை எந்த ராவண வேஷமும் போடாமல் ஒரு சடங்காக,, அதன் குதூகலத்தோடும், ஜாக்கிரதை உணர்வோடும் (தமிழ்நாட்டிலும், பொதுச் சமூகத்திலும்,  திரைப்படங்களிலும் அதை ஒரு கலையாக்கி வைத்திருக்கிறோம் அல்லவா?)

            பெரும்பாலான கதைகள் இளம்பருவத்தின் அதீத உணர்வுகளைப் பதிவு செய்கின்றன.  காதலும் காமமும் வேகத்தோடும் வீச்சோடும் வெளிப்பட்டு, அதன் விளைவுகளும் அவ்வாறே நிறைவேறுகின்றன.

            தனக்குத் தானே ஆண்மையை நிறுவிக்கொள்ள வேண்டித் தொடங்கிய உணர்ச்சி வேகம், காமம், குற்றம், தண்டனை என்ற வளையத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கும் சாதாரண மனிதன் சாவை எதிர்நோக்கும் நிலையைச் சொல்கிறது உடுக்கு என்னும் கதை.  பல கொடுமையான குற்றங்களைச் செய்துவிட்டு அறம் பேசும் மனிதர்களுக்கிடையில், செய்யாத கொலைக்காக தண்டனை பெற்ற இளைஞனின் பாத்திரம் வேறுபட்ட படைப்பு.

                        சதித் திட்டம்கதையில் காந்தியும் அம்பேத்கரும் ஜாதிய வாதிகளின் இரட்டை முனைகளில் மாட்டிக்கொண்டு என்ன பாடுபடுகிறார்கள் என்று சிறுவர்களின் நடவடிக்கைகள் காட்டுகின்றன.

            விலைமாதிடம் செல்லத் திட்ட மிட்டுச்செல்லும் சிறுவர்கள்.  அவளை உபயோகித்து விட்டுக் கொலைசெய்து தூக்கி எறிந்துவிடும் காவல் இயந்திரம்.  அவளுடைய தொழிற் கூட்டாளியான ஆணுக்கு ஏற்படும் துயரம். இது ஒரு புதிய களம்.  விலைமாதின் வாழ்வை மிகச் சிறிய வரிகளில் ரத்தமும் சதையுமாகச் சொல்லிச் செல்கிறது. 

            மாரி செல்வராசுக்கும் வண்ணதாசனுக்கும் நட்பு இருக்கலாம்  இருவரும் எழுதிக்காட்டும் மாந்தர்களும் வாழ்க்கையும் அவர்களது வாழ்நிலையைப் பிரதிபலிப்பது மிகத் தெளிவு.  அன்பையே வரிக்கு வரி சிலாகித்துக் காட்டும் வ்ண்ணதாசனும், அன்பை எழுதினாலும் அதன் மறுபுறமான வன்முறையை வெளிச்சம் போட்டுக் காட்டும் மாரியும் எதிரெதிர் முனைகள்.

            பல திசைகளில் சிதறிய, நான் லினியர், எழுத்துக்கள் புகழ்பெற்றுவரும் இந்தக் காலத்தில், நடையழகில் மட்டும் கவனம் செலுத்தாமல், சிதறிய சித்தரிப்புக்கள், வாக்கியங்களுடன் ஆனால் ஒருமுகப்படுத்தப்பட்ட, நடை நன்றாக இருக்கிறது.

            A raw, intense and expressive and emotionally loaded text..





நிலம் பூத்து மலர்ந்த நாள்
-        மனோஜ் குரூர்
-       தமிழில் கே.வி. ஷைலஜா

தமிழ்நாட்டின் சங்ககாலம் பற்றிக் கட்டுரைகள், ஆய்வுநூல்கள் படித்திருப்போம்.
ஒரு மலையாள எழுத்தாளர் சங்ககாலத்தை நாவலாக்கி அவர்மொழியில் எழுதி, அதைத் தமிழில் படிக்கிற வாய்ப்பு இப்போதுதான் நேர்கிறது.

            சிறப்பான மொழிபெயர்ப்பில் நாவலின் நடையும் பொருளும் மிகச் சரளமாக அந்தக் காலத்தை, சில வர்ணனைகளிலேயே கண்முன் நிறுத்திவிடுகிறது.  மிக யதார்த்தமாக அந்தக் காலத்தைப் புனைவு மொழியில், மெருகூட்டிச் செல்கிறது கதை.  வாழ்வின் ஒரு பகுதியை மிக இயல்பாகச் செதுக்கி, அதிலும் ஒரு ரகசியத் திறப்பை நிகழ்த்திவிடுகிறது. 

            ஒரு சிறிய கருவை வைத்துக் கொண்டு அழகிய நாவலை எழுதிய மலையாள எழுத்தாளருக்கு நன்றி சொல்ல வேண்டும்.  மலையாளி எழுதியிருக்கிறார் என்பது அதிசயம் அல்ல.  அங்கே எழுத்தாளர்களும் வாசகர்களும் ஏராளம்.  தமிழர்களால் இப்படி ஒரு படைப்பை இதுவரை தரமுடியவில்லை என்பது ஒரு அவமானம்.  நமது வரலாற்று நாவலாசிரியர்கள் எழுத ஆரம்பித்தால் ஆயிரம் பக்கங்களுக்குக் குறைவாக எழுதுவதில்லை. அப்படி எழுதினாலும் அது சமகாலக் குறிப்புக்களைக் கொண்டிருந்தாலும், அதில் இந்தக்காலத்துக் காதலும், முத்தமும், இடுப்பழகும், மர்ம்மும், சாமியார்களும், சமண முனிவர்களும் வந்தே தொலைந்துவிடுகிறார்கள்.

            இந்தக் கதை,  குலக்குழு வாழ்க்கை, குறிஞ்சி நில வாழ்வு, என்று, சங்க காலத்தின் சில பகுதிகளைப் பதிவு செய்கிறது. அது பாரியின் கொலையில் முடிகிறது.  மன்னராட்சிக் காலத்தின் தொடக்கத்தை மிக அடக்கமான தொனியில் பதிவு செய்கிறது.  மிகவும் உயிர்ப்பான பாத்திரங்கள், அந்தக்காலத்தை ஒட்டிய மொழிநடை இவற்றுடன் நம்மை கடந்த காலத் தமிழகத்துக்குள் ஒரு சுற்றுலாச் செல்லவைக்கிற நாவல்.  தமிழும் மலையாளமும் தொன்மைக்காலத்தில் ஒன்றுதான் என்பதை ஓவியமாக வரைந்து காட்டியிருக்கிறார் மனோஜ் குரூர். 

            சில இடங்களில் தோழரே என்ற சொல் நெருடுகிறது.  அது 20ஆம் நூற்றாண்டின் வார்த்தையில்லையா? 

சமீபத்தில் நான் படித்த புதிய பொருளுடன், புதிய வார்த்தைகளுடன் வெளிவந்த நல்ல நாவல்.


வரிசையில் நிற்கும் மனிதன்

நீண்ட வரிசையில்
நின்று கொண்டிருக்கிற மனிதர்கள்
பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார்கள்

எண்ணிலடங்கா இடங்களில்
பல வரிசைகளில்
கால்கடுக்க நின்று கொண்டேயிருக்கும்
பல லட்சம் மனிதர்களில்
அவனும் ஒருவன்

அசாமின்
தேசியக் குடிமக்கள் ஆவணத்தில்
பெயர்பதிந்து அங்கு வாழ
சிறு குழந்தைகளுடன்
வரிசையில் நிற்கும்
ஒன்றும் புரியாத மனிதன்

லிபியாவில் ஐஸ்பெட்டி வண்டியில் ஏறி
ஒடுங்கி விரைத்து
ஐரோப்பாவில் நுழையவிரும்பும்
இலங்கையன்

சூடானில் பாலைவனத்திலிருந்து
ஜெர்மனியில் நுழைய விரும்பிய
ஒரு ஆப்பிரிக்க முஸ்லிம்
கடற்கரையில் கரையொதிங்கிய,
வரிசையிலிருந்து விலகிய
குழந்தையின் பிணம்

பம்பாயைவிட்டு
92ஆவது வயதில்
சுதந்திர இந்தியாவில்
மூச்சுவிட முடியாமல் அரேபியாவிற்குச்
சென்ற கலைஞன்

எல்லோரும் விரட்டப்பட்டவர்கள்
அவர்கள்
தொப்பிகளை மாற்றுவதுபோல்
தேசங்களை மாற்றினால்தான் என்ன?
பேரரசுகளின் துப்பாக்கிகளின் முனையில்
தேசங்களின் எல்லைகள் மாற்றப்படவில்லையா?

வேலைதேடி வரிசையில் நிற்பவர்கள்,
சான்றிதழ் பெற
கையூட்டுப் பணத்தைக்
கணக்கிடும் ஏழையும் அதில் ஒருவன்

குற்றம் செய்துவிட்டு
ஆடைகள் மாற்றுவது போல்
குடியுரிமையை மாற்றிக் கொள்ளும்
அவர்களுக்கு மட்டும்
கிடைக்கிறதே
உடனடிக் குடியுரிமை

அடுத்து
எந்த வரிசையில்
நீங்களும் நானும்
எப்போது நிற்க வேண்டியிருக்கும்?