Tuesday, January 03, 2012

ஊழலிருந்து, கையூட்டிலிருந்து நமது வீடுவரை


ஊழல் என்பதும் நமக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றாகி விட்டது. எதிலாவது லஞ்சமோ, கூடுதல் வரும்படியோ இல்லை என்றால், அது அசாதாரணமாக, ’நார்மல்’ அல்லாமல் தோன்றுகிறது. இதை நமது சமூக அரசியல், பொருளாதார கலாச்சாரத் தளங்களில் மிகச் சாதாரண நடைமுறையாகக் காணலாம். இந்தச் சீரழிவுக்கு காரணம் காண்பதோ அல்லது தீடீரென ஒழித்துவிடலாம் என்று கனவு காண்பதோ நடைமுறைக்குச் சாத்தியம் அல்ல.

ஒரு மஹாத்மா காந்தியோ அல்லது அவரைப் பகடி செய்வது போல் தோன்றிக் கொண்டே இருக்கும் ஏமாற்றுக்காரர்களாலோ இந்தப் பிரச்சனையைத் தீர்த்து விடலாம் என்று நினைப்பதும் வெட்டிக் கனவே. எல்லாச் சட்டங்களையும் மதித்து நடக்கும் சாதாரண ஏழை மனிதனைத் தவிர மற்ற அனைவரும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். கடைக்கோடியில் இருக்கும் மனிதனும் ( வேறு சமூக மட்டங்களைச் சேர்ந்த இளிச்சவாயர்களும் இதில் அடக்கம்) தன்னால் முடியவில்லை என்பதால் நேர்மையாக இருக்கிறானோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது. நாம் பேசிக் கொண்டே இருப்பது தவிர வேறு எதுவும் செய்ய முடியாமலிருக்க்க் காரணம் என்ன என்று யோசித்தால், நாமும் இந்த ஊழலில், கையூட்டில் மிக அதிகமாக ஊறிவிட்டதுதான் காரணம்.

இரண்டாவதாக ஊடகங்களில், ஊழலுக்குக் கிடைக்கும் அளவு மரியாதையும், விளம்பரமும், நல்லவர்களுக்கோ நல்ல விஷயங்களுக்கோ கிடைப்பதில்லை. ஏனெனில் ஊடகங்களின் நிதி ஆதாரத்தில் இந்த ஊழலும் முக்கிய இடம் வகிக்கிறது. ஏதாவது ஏடாகூடம் செய்துதான், அந்தத் தொழிலும் நடக்கிறது.
ஊழல் மூலமும் கையூட்டு மூலமும் கிடைக்கும் பணம் நமது வாழ்வின் ஆதாரமாகிவிட்டது. அதன் மூலமாகவே நமது மற்ற நடவடிக்கைகளில் நமக்குப் பழகிப் போன ஆடம்பரத்தின் ஆரம்பம் இருக்கிறது. ஊழல் செய்தவன் அநியாயக்காரன் என்பதிலிருந்து தொடங்கி, ஊழல் செய்யாதவன்தான் பைத்தியக்காரன் என்றிருந்த காலமும் போய், இப்போது நேர்மையாக நடப்பவன் தான் ஏமாற்றுக்காரன் என்ற நிலைமை வந்துவிட்டது. நமக்கு எல்லோருக்குக் பங்கிருக்கும் ஒரு சமூகக் கேட்டைச் சில மாயக்காரர்கள் வந்து நீக்கி விடுவார்கள் என்பது பித்தலாட்டம்.

அன்னா ஹசாரேயும் அவரது கூட்டமும் ஊழல் செய்வதில்லை என்றே வரித்துக் கொண்டாலும், அவர்களைத்தவிர பலகோடிப் பேர் ஊழலிலும், கையூட்டிலும் ஊறித்திளைத்தவர்கள் என்பதை மறந்து விடமுடியாது. அவர்கள் எந்தச் சட்டம் வந்தாலும் தங்கள் கைவரிசையைக் காட்டக் கூடியவர்கள்.

மேலும் ஊழல் என்பது, பொருளாதாரக் காரணங்களினாலும் ஏற்படுகிறது என்பதை ஒதுக்கிவிட முடியாது. விரைவில் பணக்காரராக விரும்பும் ஆவலும் அதற்கான உந்துதலைத் தரும் சமூக நடைமுறையும் ( பணமிருந்தால் எதையும் செய்யலாம். சட்டம் ஒன்றும் செய்யாது என்பது போன்ற நடைமுறைகள் ) இருக்கும்வரை ஊழலின் வேர்கள் இருக்கத்தான் செய்யும்.

பணத்துக்கு இருக்கும் மதிப்பு அறிவுக்கு இருக்கிறதா? பணத்துக்கு இருக்கும் மதிப்பு நேர்மைக்கு இருக்கிறதா? நல்ல கவிஞனுக்கோ, தத்துவஞானிக்கோ சிந்தனையாளனுக்கோ சமூகம் என்ன மரியாதை தருகிறது? இவை என்றும் நம்முன் உள்ள கேள்விகள். பணம் எதையும் வெல்லும் என்ற நிலைமை இருக்கும் வரை, பணத்தை மட்டுமே நோக்கிய மக்கள் திரளின் பயணம் இருக்கும். பணம் சிலருக்கு நேர்மையான உழைப்பின் மூலம் கிடைத்ததாய் அவர்கள் நம்பக் கூடும். மற்றவர்கள் அதையே மற்ற வழிகளிலும் அடையத் துடிப்பதும் நடக்கும். இந்த நேரத்தில் ஒரு வாசகம் ஞாபகம் வருகிறது. “ஊசிமுனைத் துளை வழியே ஒட்டகம் சென்றாலும், பணக்காரம் சொர்க்கம் செல்ல முடியாது”.

ஒரு சமூகத்தில் அனைத்து மனிதர்களின் உழைப்பையும் ஒரு கூடையில் வைத்தால், அந்தக் கூடையில் இருந்துதான் அனைத்துப் பொருட்களும், தேவைகளும் நிறைவு செய்யப்படும் என்று ஏற்றுக் கொண்டால், உழைக்காமலே அந்தக் கூடையில் இருந்து எடுத்துக் கொள்ளும் நபர்கள் இருக்கும் வரை, அவர்களுக்காகவும், மற்றவர்கள் உழைக்க வேண்டியிருக்கும். கூடை நிறைவதற்கான உழைப்பாளிகளின் பங்களிப்பு, உழைக்காத மற்றவர்களூக்காகவும் சேர்த்துத்தான் இருக்கும் இந்த இடைவெளியைப் பணம் என்னும் காகிதம் நிரப்புகிறது. அது நாய் விற்ற காசா? ஊழலில் விளைந்த பணமா என்று யோசித்தால் தீர்வு இல்லை.

ஊழலை ஒழிக்க முடியுமா என்ற கேள்விக்கு பதில் நாம் உண்மையிலேயே உழலை ஒழிக்க விரும்புகின்றோமா என்பதிலும் அதற்காக என்ன செய்ய விரும்புகிறோம் என்பதிலும் இருக்கிறது. வரதட்சனைக்கு எதிராகச் சட்டம் இருந்தும், அதற்காக யாராவது வருந்துகிறோமா? வரதட்சனைக்கு எதிரான சட்டத்தைக் கண்டு பயப்படுகிறோமா? வரதட்சனை வாங்கவிரும்புகிறோமா? அல்லது வாங்காமல் இருக்க விரும்புகிறோமா? பெண்களைச் சமமாக மதிக்கிறோமா அல்லது மதிக்க விரும்புகிறோமா? இரண்டுக்கும் தீர்வு ஒன்றுதான். கொடிய சட்டங்களைக் கொண்டுவந்து விடுவதால் மட்டுமே எதையும் மாற்றிவிடமுடியாது. என்ன செய்யலாம்?

மனிதனின் தேவைகள் அதிகமாகின்றன. அதற்கான விலைகளும் அதிகமாகின்றன. ஆசைக்கும் விலைக்கும் உள்ள தூரமே ஊழல் நிரப்பும் இடைவெளி. பேராசையைக் கொஞ்சம் குறைக்கலாம். உலகத்தின் பொருட்களை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பதைக் குறைக்கலாம். உழைக்காமல் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையைக் குறைக்கலாம். அடுத்தவனின் பணத்தை எளிதாக அடைய முயலாமல் இருக்கலாம். குறுக்கு வழியில் அடுத்தவன் நிலைக்கு உயரவேண்டும் என்று நினைக்காமல் இருக்கலாம். பணத்தைத் தவிர, ஆடம்பரத்தைத் தவிர, பல நல்ல பொருட்களும், கலைகளும், விஷயங்களும் இருப்பதை அடைய முயலலாம்.

எளிமையான தீர்வுகள் இருந்தால் நல்லது. ஆனால் சமூகத்தில் எதுவும் எளிமையான வகைப்பாடுகளுக்குள், தீர்வுகளுக்குள் அடங்குவதில்லை.