Friday, February 12, 2010

குடை ரிப்பேர் செய்பவன். ஆங்கில மூலம்: மேரி ஈ வில்கின்ஸ் ஃப்ரீமேன்

குடை ரிப்பேர் செய்பவன்.
ஆங்கில மூலம்: மேரி ஈ வில்கின்ஸ் ஃப்ரீமேன்

அன்று உருப்படாத நாள். கொஞ்சம் கற்பனை செய்யும் உள்ளங்களுக்குத் தெரியும். சில நாட்களுக்கும் மனிதர்களைப் போலவே வினொத குணங்கள் உண்டு. அவை மனிதர்களை குற்றம் செய்யவோ, நல்லது செய்யவோ, மன அமைதியுடன் நல்லதை நினைக்கவோ, கமுக்கமாக ஏதாவது கள்ளத்தனம் செய்யவோ, கோபப்படவோ அல்லது சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளவோ தூண்டுகின்றன. அன்றைய தினம் கடைசியாக சொன்னது மாதிரிதான் இருந்தது. சூடான காற்றை உள்ளிளுத்து, இயற்கையின் அழுகிய புண்களிலிருந்து, உழைப்பில் எழுந்த வேர்வையிலிருந்து, கெட்ட நாற்றத்தை வெளியேற்றி, புயலில் பேயாட்டம் போடும் மரக்கிளைகள் போல, ஒழுக்கம் தன் ரத்தத்தில் ஓடாத மனிதனோ மிருகமோ வாழ்வின் துயரங்களை தானறியாமலே வெளியிடுகின்றனர்.
பலவாரங்களாக மழை பெய்யவில்லை ஆனால் காற்றில் பிசுபிசுப்பு ரொம்ப அதிகமாக இருந்தது. அந்த மனிதனின் காலடியிலிருந்து எழுந்த புழுதிப் புகைமண்டலம் அருவருக்கும் அளவுக்கு பிசுபிசுத்து ஒட்டிக் கொள்வதாக இருந்தது. அவன் கைகளும் காலணிகளும், விலைமலிந்த கோட்டும் சூட்டும், தொப்பியும் அழுக்காக இருந்தன. ஆனால் அவனுக்குத் தன் உடையைப் பற்றிப் பெருமிதம் இருந்தது. அவைதான் அவனுடைய விடுதலையின் அறிகுறி. முந்தின நாள்தான் சிறையை விட்டு வெளியில் வந்தான். அதிகாரிகள் கொடுத்திருந்த கோட்-சூட்டை வெறுத்தான். அந்த சூட்டைக் கொடுத்துவிட்டு தன்னிடமிருந்த கொஞ்சப் பணத்தில் பெரும்பகுதியை விலையாக கொடுத்துப் புதுசாக இந்தக் கட்டம் போட்ட சூட் வாங்கினான். அவன் நேற்றுத்தான் சிறையிலிருந்து வந்தவனென்று அதைப் பார்த்து யாரும் சொல்ல முடியாது. அவன் செய்த சிறிய குற்றத்திற்காக பலவருடங்கள் சிறையில் கழித்தான். குறைந்த வருடங்கள் தண்டனை கிடைத்திருக்கும் ஆனால் நீதிபதியின் கவனக் குறைவினாலும், அவனுக்கு யாரும் தெரிந்தவர்கள் இல்லாததாலும் இப்படியாகி விட்டது. யார் மீதும் ஸ்டெப்பின்ஸ் வெறுப்புக் கொள்ளாவிட்டாலும், நண்பர்களை அதிகம் சம்பாதித்துக் கொள்ளும் ரகமல்ல. அதிகத் தண்டனையின் அநீதி கூட யார் மீதும் அவனுக்கு வெறுப்பை உண்டாக்கவில்லை.
சிறையில் இருந்த காலத்தில் அவன் ரொம்ப வருத்தப்படவில்லை. தவிர்க்க முடியாததை - வலியவர்கள் எளியவர்கள் மீது சுமத்தும் நுகத்தடி - பொறுத்து ஏற்றுக் கொண்டான். அதனால் கொஞ்சம் மகிழ்வும் கொண்டான். விடுதலை பெற்றுவிட்டதால், வாழ்வை நன்றாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்புக்களை நோக்க, கவனத்தைக் கூராக்கிக் கொண்டான். கூட்டில் அடைபட்ட நாயாக இருந்தவன், முகர்ந்து வேட்டைக்குச் செல்லும், தனது நலனுக்காக வேட்டை நாயாக – பூமியிலேயே மிக துடிப்புள்ளது – மாறினான். சமூகத்தின் வெளியில் இருந்து, (சிறை), தன் முன் உள்ள சமூகத்துக்கு மாறினான். நடுத்தர வயதில் இருந்தாலும், இளைஞனாக உணர்ந்தான். அவன் பையில் கொஞ்சம் டாலர்கள் இருந்தன. அவன் கட்டம் போட்ட சூட்டை வாங்காமலிருந்தால் அதிகம் செலவாகி இருக்காது.
அடுத்த வாரம் விடுதலையாகும் இன்னொரு மனிதன் இருந்தான். அவனுக்கு உடம்பு சரியில்லாத மனைவியும் பல குழந்தைகளும் உண்டு. ஸ்டெப்பின்ஸ், இயல்பாகவே இருந்த கருணையினாலும், தயவினாலும் மூட நம்பிக்கை போல் அவனிடமிருந்த உணர்ச்சி வசத்தினாலும் தன்னிடமிருந்ததில் கொஞ்சம் அவனுக்குக் கொடுத்து விட்டான். பணத்தினால் அவனுடைய சுதந்திரம் பறிபோனது. இன்னொருவனுக்காக அதைத் கொடுத்து, அதில் பரவிய இசையில், விடுதலை பெற்றுத் திரும்பியதைக் கொண்டாட வேண்டும் என்று தனக்குச் சொல்லிக் கொண்டான்


நடந்து கொண்டே அவ்வப்போது தொப்பியை எடுத்து மொருமோரென்றிருந்த கைக்குட்டையை வைத்து நெற்றியைத் துடைத்துக் கொண்டான். அதிலிருந்த அழுக்கைப் பார்த்து கவலைப் பட்டான். குட்டையாக வெட்டப்பட்ட நரைத்த முடியைத் தடவிக் கொண்டான். கொஞ்சம் வளர்ந்தால் மகிழ்ச்சி அடைவான். கொஞ்சம் கூர்மையான கண்களுக்கு அதிலிருந்து தெரிந்துவிடும். அவ்வப்போது இன்னொரு பையிலிருந்து சற்று முன்னால் வாங்கியிருந்த கண்ணாடியை எடுத்து முகத்தைக் கவனித்தான். ஒவ்வொரு முறையும் அப்படிப் பார்க்கும் போது கன்னங்களை அழுத்தித் தேய்த்தான். மங்கலான, சிறையில் படிந்த மஞ்சள் நிறம் மறைந்து பளபளப்பு அதிகமாவதை நிறைவுடன் பார்த்துக் கொண்டான். அடிக்கடி ஞாபகத்துடன் தோள்களைச் சிலுப்பி, தாடையை உயர்த்தி, வலது காலை சற்று அகலமாக வைத்து நடந்தான். அப்படி நடக்கும் போது சில தடவைகள் தடுமாறினான். விடுதலையின் புது உணர்வில் திமிரும் இருந்தது. அனைத்து உயிர்களுக்கும் தலைமகனாக குறைந்த பட்சம் சமமாக உணர்ந்தான். காரோ குதிரை வண்டியோ தன்னைக் கடக்கும் போது, ஒரு நடிகனின் திறமையுடன், ஏதோ பிசினஸ்மேன் முக்கியமான வேலைக்குப் போவது போல் தனக்குத் தானே நடித்துக் கொண்டான். ஆனால் எப்போதும் அவன் மனதில் ஒரு பெரிய பிரச்சனையைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தது. தன்னிடமிருந்த பணம் குறைவு, அது எவ்வளவு கஞ்சத் தனமாக செலவழித்தாலும் ரொம்ப நாள் வராது என்பது அவனுக்குத் தெரியும். அவனுக்கு நண்பர்கள் இல்லை. வேலைதேடிப் போனால், உறுதியாக, சிறைவாசம் செய்தது தெரியவரும். உயிருடன் இருப்பதற்கான பிரச்சனையை எதிர்கொண்டான்.
ரொம்ப வெய்யில் அடித்தாலும், கோடை முடியும் நேரம். விரைவில் பனிபெய்யும், குளிர்காலம் வரும். விடுதலையை அனுபவிக்க வாழ விரும்பினான். விடுதலைதான் அவனிடம் இருந்த ஒரே சொத்து. அது முரண்பாடுதான். வாழ்வின் சக்தியான வேலை பெறுகின்ற திறமையை (விடுதலை) குறிக்கவில்லை. சிறைச்சாலையின் கற்சுவர்களுக்கு வெளியே நுணுக்கமான, புரிந்து கொள்ள முடியாத, ஒருநாளும் இணங்கிவிடாத சுவர் இருந்தது. சிறையிலிருந்து விடுதலையான மனிதனுக்கு எதிரான முன் தீர்மானமான வெறுப்பு. குதித்து நடந்தாலும், துடிப்புடன் தாவினாலும், அவன் சிறையிலிருந்து வெளிவந்தவன்தான். அவன் எப்போதும் போல ஒப்புக்கொள்ளாவிட்டாலும், அவன் பிறந்த நியு இங்கிலாந்து மாநிலத்தின் முரட்டுத்தனம் இருந்ததால் எப்படி வாழ்வது என்பதை யோசித்தான்.
வேலைகேட்டு எந்த மனிதனையும் அணுகுவதால் பயனில்லை என்பதை உள்ளுணர்வால் உணர்ந்தான். தன் ஐம்புலன்களால் உணர்ந்த விடுதலை ஒரு மணம்போல இருந்தாலும், சிறையின் நாற்றத்தை அதனால் மிஞ்ச முடியவில்லை. மூச்சடைக்கும் தூசிகளுக்குள் நடந்துகொண்டே, சுதந்திரமான மனிதர்களின் கூட்டத்திலிருந்து விலகுவதற்கு முன்னால், சட்டத்தின் கைகளில் தன் முதுகை வளைப்பதற்கு முன்னால், தனக்குப் தெரிந்த மனிதர்களை எல்லாம் ஒவ்வொருவராக நினைத்துப் பார்த்தான். சொந்த ஊரில் அவனுக்குத் தெரிந்தவர்களும் நண்பர்களும் இருந்தார்கள். யாரிடமும் உதவி கேட்கக் கூடாது என்ற தன் உறுதியை மீறி அவர்களிடம் செல்லும் அளவுக்கு அவர்கள் யாரும் அவனை நேசிக்க வில்லை. இருந்தும் இல்லாதது போலிருக்கும் தூரத்துச் சொந்தங்கள் தவிர யாரும் இல்லை. அவர்களும் தொடர்பு கொள்ள விரும்பியது கிடையாது.
அவன் திருமணம் செய்யவேண்டும் என்று நினைத்திருந்த பெண் ஒருத்தி இருந்தாள். தன்னை திருமணம் செய்து கொள்வாள் என்று உறுதியாக நினைத்தான். ஆனால் சிறைக்குச் சென்று ஒரு வருடம் கழிந்த பின் அவள் வேறொருவனை மணந்து கொண்டதாக சுற்றிமுற்றித் தகவல்கள் வந்தன. அவள் திருமணமாகாமலேயே இருந்தாலும் அவளிடம் உதவி கேட்டுப் போக முடியாது. தொடக்கத்தில் உணர்ச்சி வசப்பட்ட பெண்களிடமிருந்து கடிதங்களும் மலர்க்கொத்துகளும் வந்தன. சிறையிலிருந்த காலம் முழுவதிலும் அவளிடமிருந்து எந்த சமிக்கையோ கடிதமோ, செய்தியோ வரவில்லை. ஒன்று கூட வரவில்லை. அவன் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. சிறைக்கதவுகள் முதலில் மூடிய நாளிலிருந்து ஒரு வினொதமான பொறுமை அவனிடம் குடிகொண்டது. அதை அவன் பெருமையுடன் வைத்துக் கொண்டான். அவளை வேண்டுமென்றே மறக்கவில்லை. ஆனால் அவளை நினைந்து வருந்தவுமில்லை. அவனுடைய மாபெரும் இழப்பிலும், சிதைவிலும் அவள் விழுங்கப்பட்டு விட்டாள். துன்பத்தையும், வலியையும் தாங்க தன்னை முழுவதும் இரும்பாக்கிக் கொள்ள நேரும்போது ஒரு ஊசி குத்துவது ஒரு பொருட்டல்ல. அன்று துயரமேதும் படாமல் அவளை நினைத்துப் பார்த்தான். அழகான வீட்டில் கணவனோடும், குழந்தைகளோடும் அவளைக் கற்பனை செய்து கொண்டான். அவள் உடல் பருத்திருக்கக் கூடும். ஒல்லியாகத்தான் இருந்தவள். கற்பனையில் நேர்த்தியாக குண்டாக கற்பனை செய்தான். அவளை குண்டாக கற்பனை செய்ததன் தொடர்ச்சியாக தன்னுடைய தசை, குண்டான் உடம்பை எலும்பில் வைத்துப் பார்த்தான். இப்போது பிரச்சனை அந்தப் பெண்ணைப் பற்றியதல்ல. அவனுடைய வாழ்விலிருந்து போய்விட்டாள். தன் வாழ்வைத் தக்க வைத்துக் கொள்வதே பிரச்சனை. இந்த கஷ்ட உலகில் சிறிதும் கருணை இன்றி தன்னை விழச்செய்யும் ஓரு இரும்புப் பொறி. அதில் அவன் மாட்டிக் கொள்ளவேண்டும்.
அவன் நடந்து கொண்டே இருந்தான். நண்பகல் ஆகிவிட்டது. அவனுக்குப் பசித்தது.அவன் பாக்கெட்டில் ஒரு பிரட் பாக்கெட்டும், இரண்டு துண்டுகள் பன்றிக் கறியும் இருந்தன. தண்ணீர் நுரைத்துப் பாயும் சத்தம் கேட்டது. ரோட்டு சந்திப்பில் அடர்ந்த காடு தொடங்கியது. மரங்களையும் செடிகொடிகளையும் விலக்கிவிட்டுக் கொண்டு நீரோடையின் சலசலப்பில் குளிர்ந்த பசுமை நிழலின் அமைதியில் நிம்மதிப் பெருமூச்சு விட்டு அமர்ந்தான்.
தெளிந்திருந்த தண்ணீருக்குக் குனிந்து, கைகளைக் கிண்ணம்போல் குவித்துக் குடித்தான். பிறகு சாப்பிடத் தொடங்கினான். அவனுக்குச் பின்னால் துளசி போன்ற ஒரு செடி இருந்தது. ரொட்டியையும் கறித்துண்டுகளை உண்டபின் அச்செடியின் வாசனையான இலைகளைப் பிடுங்கி தன்னையறியாமல் சவைக்கத் தொடங்கினான். அதன் சுவை மேல் அண்ணத்தில் தெரிந்தது. சுர்ரென்று அதன் விறுவிறுப்பு முன்பு போலவே ஏறியதில் சுகமாக இருந்தது பழைய ஞாபகங்கள் வந்தன. குட்டையாக வளரும் அந்தச் செடியை சின்னப் பையனாக இருக்கும் போது அவனுக்கு ரொம்பவும் பிடிக்கும். அந்தப் பருவத்தின் இனிமைகளில் அதுவும் ஒன்று. இப்போது ருசி பார்த்ததும் மகிழ்ச்சியும் வருத்தமும் அவன் ஆத்மாவில் எழுந்தன. எவ்வளவு அதிசயமான இளமை, எத்தனை இனிமையானது அனுபவிக்க எத்தனை ஆழமானது, எத்தனை வருத்தப்பட வைப்பது. நீரோடையின் பக்கத்தில் துளசி இலைகளைச் சவைத்துக் கொண்டிருந்த அவன் இருதுருவங்களைப் புரிந்து கொண்டது போலிருந்தது. கடந்த காலத்தில் பின்னர் மாற்றமில்லாத எதிர்காலத்தில் - அந்த எதிர்காலத்தில், காலத்தின் சுழற்சிப்படி கடந்த காலமும் இருக்கும் - ஒருகணம் வாழ்ந்தான். அவன் புன்னகைத்தான். முகத்தில் சிறுவனைப் போல பாவனை தோன்றியது. தனது பழைய உறுதியான ரத்த நாளங்கள் புடைத்த கைகளால் இன்னொரு இலையைப் பறித்தான். கைகள் அவனுடைய மனநிலைக்குத் தகுந்து மாறவில்லை. ஆனால் கால்கள் சிறுவனைப் போல் ஆசுவாசம் கொண்டன. மண்ணின் நிறத்தில் நுரைபொங்கிப்பாயும் நீரோடையை, அதில் மங்கலாகச் ஜாலம் காட்டிய நிறங்களைப் உற்று நோக்கினான். தெளிவான பச்சைத் தண்ணீர், தெளியாத, மை போன்று தெரியும் ஆழம். மீன் இருக்கலாம் என்று யோசித்தான். மீன் பிடிக்க ஏதாவது இருந்தான் நன்றாக இருக்கும்.
காட்டுக்குள்ளிருந்து திடீரென இரண்டு பெண்கள் வந்தார்கள். பெரிய, அதிர்ச்சியடைந்த கண்கள். பயந்து போன வட்டமான வாய்களிலிருந்து அலறல் எழுந்தது. விருட்டென்று ஓட்டம். பிறகு அமைதி. அந்தப் பெண்கள் ஏன் முட்டாள்த்தனமாக ஓடினார்கள் என்று வியந்தான். அவனைப் பார்த்துப் பயந்திருக்கக் கூடும் என்பதை அவன் யோசிக்கவில்லை. இன்னொரு இலையைப் பறித்துத் தின்றான். அவன் கைதாகிச் சிறைக்குச் சென்ற நேரத்தில் திருமணம் முடிப்பதாக இருந்த பெண்ணைப் பற்றி சிந்தித்தான். அவனுடைய குழந்தைப் பருவ நினைவுகளில் அவள் இல்லை. இளைஞனாகிய பின் தான் பார்த்தான். இலைகளின் சுவை எப்படியோ அவளது முகத்தை அவன் முன் கொண்டு வந்தது. ஐம்புலங்களின் ஒரு உணர்வு சிலநேரங்களில் இன்னொரு உணர்வைத் தூண்டிவிடுவது வியப்புத்தான். நாவின் சுவை இப்போது அந்தக் காட்சியின் முழு விளைவைக் கிளறியது. கடைசி முறையாகப் பார்த்த்து போலவே அவளை பார்த்தான். அவள் வடிவில் அழகானவள் இல்லை என்றாலும், வேறொரு அழகு அவளிடம் இருந்தது. அவள் நடையில், பாவனையில், ஒரு மேன்மை இருந்தது. அவளது சிறிய கரடு முரடான முகத்தை, தலையில் வழுவழுப்பான சுருண்ட முடியை தெளிவாகப் பார்த்தான். மெலிந்த மங்கலான கைகளை, கவனமாக வெட்டப்பட்ட நகங்களை, தெளிவாகத் தெரியும் ரத்த நாளங்களைப் பார்த்தான். அவளுக்குக் கொடுத்த வைரக்கல் ஒளிர்வதைப் பார்த்தான். அவன் கைதானதும் அவள் அதை அனுப்பிவிட்டாள். மீண்டும் அவனுக்கே கொடுத்துவிட்டான். அது அவளிடம் இன்னும் இருக்கிறதா அதை அணிகிறாளா அவள் கணவன் அதைப் பற்றி என்ன நினைக்கிறான் என்று வியந்தான்.
சிறைவாசம் குழந்தைத் தனமான கற்பனைகளை எப்படியோ வளர்த்திருந்தது. அவளுடைய கணவன் அதைவிடப் பெரிய விலையுயர்ந்த வைரத்தை கொடுத்திருப்பானோ என்று யோசித்தான். பொறாமையில் அவனுக்கு மனம் வலித்தது. அவளுடைய மெலிந்த, மங்கலான கையில் இன்னொரு வைரம் இருப்பதை அவனால் பார்க்கப் பொறுக்கவில்லை. அவளுக்குப் ரொம்பவும் பொறுத்தமான கறுப்பு கவுணில் அவளைப் பார்த்தான். அதில் ஒருவித சிவப்பு நிறமும், பளபளக்கும் கறுமையும் இருந்தது. அவளுடைய மிக அலங்காரமான கவுண் அது, அதில் ஒரு இளவரசி மாதிரி இருந்தாள். அவள் மெல்லிய உடல் சோபாவின் ஓரத்தில் சாய்ந்து நிற்க, முழங்காலில் பளபளக்கும் கறுப்பு மடிப்புகள் ஒளிர ஒரு காலின் அழகைப் பார்க்க முடிந்தது. கால்கள் கவர்ச்சியாக சிறியதாக நன்றாக வளைந்து இருந்தன. நகரின் இசையரங்கில் கச்சேரி கேட்டுவிட்டு ரெஸ்டாரெண்ட்டில் சூப் குடித்த அந்த மாலை நேரத்தை நினைத்தான்.
மீண்டும் மனம் உணவு, உடை, வீடு என்று இருப்பதற்கான பிரச்சனைகளை நோக்கித் திரும்பியது. மனதைவிட்டு அந்தப் பெண்ணைத் துரத்திவிட்டான். வாழ்வின் அடிப்படைப் பிரச்சனைகளைப் பற்றிக் கவலைப் பட்டான். இருந்த கொஞ்ச்சப் பணம் செலவான பின் எப்படிச் சாப்பிடுவது? நீரோடையைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான். இலைகளை அசைபோடவில்லை. பையிலிருந்து சிகரெட் பைப்பையும், புகையிலை வைத்திருந்த காகிதத்தையும் எடுத்தான். ரொம்பக் கவனமாக பைப்பில் புகையிலையை நிரப்பினான். புகையிலை அரிது. பிறகு புகைக்க ஆரம்பித்தான். நீல நிறப் புகையினூடே அவன் முகம் கவலையில் வயதானது போலிருந்தது. குளிர்காலம் வந்துவிடும். இருக்க இடமில்லை. பட்டினியிலிருந்து காப்பாற்ற ரொம்ப ஒன்றும் பணமில்லை. எப்படி வேலை தேடுவதென்று தெரியவில்லை. மரக்கட்டைகளை வெட்டலாம் என்று குழப்பத்தில் நினைத்தான். ஊர்க்காரர்களுக்கு விறகுக்காகும். உளுத்துப் போன காரணகாரிய அறிவில் மனம் பயணம் செய்தது. அவனைப் போன்ற மனிதனுக்கு விறகு வெட்டுவதுதான் கிடைக்கக்கூடிய உசிதமான வேலையாகத் தோன்றியது.
சிகரெட்டைப் புகைத்துவிட்டு ஏதோ முடிவுக்கு வந்தவனாக எழுந்தான். வேகமாக நடந்து காட்டிலிருந்து மீண்டும் ரோட்டுக்கு வந்தான். வேலையைப் பற்றி முடிவை மனதில் வைத்து செல்பவனைப் போல் ஒரு வீடுவரை நடந்தான். சின்னச் சின்ன கட்டங்கள் அடங்கிய வெள்ளையான பெரிய பண்ணைவீடு. நம்பிக்கையாகத் தெரிந்தது. ஒருபுறம் இருந்த கதவை நெருங்கினான். மூலையிலிருந்து ஒரு நாய் பாய்ந்துவந்து குரைக்கத் தொடங்கியது. அவன் பேசியதும் நாயின் வால் குழைந்து ஆடியது. நாயைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த போது கதவு திறந்தது, அவனைப் பார்த்து ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவனிடம் இருந்த சிறையின் கறை பார்த்த்தும் தெரிந்தது.நாயின் முன் குறுகாதவன், அந்த வெள்ளை வீட்டில் வசித்த மனிதன் முன் கூனிக் குறுகினான். அந்த மனிதனுக்கு சுதந்திரம் பறிபோவதென்றால் என்னவென்றே தெரியாது. தலையைக் குனிந்து கொண்டே முனகினான். வீட்டுக்காரன், அவனைவிட வயதானவன். காது கொஞ்சம் கேட்காது. அவனை முறைத்தான். கடைசியில் வீட்டைவிட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டான், போனான். ஆனால் நாய் வாலாட்டிக் கொண்டு காலின் பின்னாலேயே வந்தது. அதைக் கூப்பாடு போட்டு அழைக்கவேண்டியிருந்தது. அவன் தன் வழியே போகும் போது நாயின் நினைவு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அவனுக்கு எப்போதும் மிருகங்களைப் பிடிக்கும். தோழமையான நாய் வாலாட்டுவது குறிப்பிடத் தகுந்ததுதான். அறிமுகத்தில் கைகுலுக்கும் நிலைமையைத் தாண்டிவிட்டான்.
அடுத்த வீடு ஒரு அழகான காட்டேஜ். ஜன்னல் வழியெ திரைச்சிலைகளில் இருந்த பூ வேலைப்பாடுகள் தெரிந்தன; வீட்டுச் சுவர்களின் மேல் படர்ந்திருந்த வர்ஜீனியாக் கொடி அங்கங்கே சிவப்பாகத் தெரிந்தது. ஸ்டெப்பின், வீட்டைச் சுற்றிக் கொண்டு பின் கதவை அடைந்து தட்டினான். ஆனால் யாரும் வரவில்லை. அங்கே வெட்டப் படாத மரக்கிளைகள் குவிந்திருப்பதைக் கவனித்து ரொம்ப நேரம் சும்மா நின்றிருந்தான். கவனமாகச் சுற்றி வாசல் கதவை அடைந்தான். அப்போது கடந்து போன நாட்களின் மனநிலை ஞாபகம் வந்தது. யாருடைய வாசலுக்கும் செல்லப் பயப்படும் நிலை வரும் என்று ஜோஸப் ஸ்டெப்பின்ஸ்சுக்கு தெரிந்திருந்தால்.. மின்சார அழைப்பு மணியை அழுத்திவிட்டு ஜன்னலிலிருந்து பார்த்தால் தெரியாதபடி கதவினருகில் நின்றான். கதவிலிருந்த சங்கிலியின் நீளத்துக்குக் கதவு திறந்தது. வெள்ளைக்காரப் பெண்ணின் தலை தெரிந்தது. காட்டுக்குள்ளே அவனைப் பார்த்துப் பயந்து அலறிய பெண்களில் ஒருத்தி. அவனுக்குத் தெரியவில்லை. முன்போலவே பயத்தில் அவள் கண்கள் விரிந்தன வாயும் குவிந்தது. ஏதோ கத்திக் கொண்டே கதவை அவன் முகத்தில் தடாலெனச் சாத்தினாள். தொடர்ந்து கூக்குரல்கள் கேட்டன. இரண்டு வெளிறிப்போன அழகிய முகங்கள் திரைகள் போட்டிருந்த ஜன்னலின் ஓரத்திலிருந்து அவனைப் பார்த்தன. அவர்களுக்கு தான் பயங்கரமானவன் என்பதைப் புரிந்து கொண்டான். சட்டம் அவனை கைது செய்தபோது கூட அவ்வளவு அவமானத்தை உணர்ந்ததில்லை. அவ்வளவு கூனிக் குறுகினான். தலையே நிமிர்த்திக் கொண்டு அங்கிருந்து போனான். அவன் ஆத்மா அவமானப் படுத்தப்பட்ட கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. “அந்த இரண்டு பெண்களும் பயப்படுகிறார்கள்” தானே சொல்லிக் கொண்டிருந்தான். அந்தப் பயங்கரத்தில் அவன் முழங்கால்கள் நடுங்கின. கடினமான வாழ்வில் அவனைப் பற்றிய பயத்தைத் தான் அவனால் தாங்க முடியவில்லை. மீண்டும் காட்டிற்குச் சென்று ஒதுக்குப் புறமான இடத்தில் அமர்ந்தான். வாழ்வைப் பற்றியோ, மரக்கட்டைகளைப் பற்றியோ கொஞ்சநேரம் யோசிக்காமல் இருந்தான். தன்னைப் பார்த்துப் பயந்த இரண்டு பெண்களை யோசித்தான். யாரையும் துன்புறுத்த வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியதே இல்லை. அவன் அப்படி நினைப்பதாக குற்றம் சாட்டும் இந்த அனைவரின் மீதும் வினொதமான வெறுப்பு ஏற்பட்டது. அவன் வெறுப்புடன் சிரித்தான். மீண்டும் அவர்கள் வந்து அவனை அந்தச் செடிகளுக்குள் எட்டிப் பார்க்கவேண்டும் என்று விரும்பினான். புத்தியில்லாத அவர்கள் அவனைப் பார்த்து பயந்தோடுவதற்காகவே மிரட்டுவதுபோல் முன்னால் வருவான்.
கொஞ்சநேரம் கழித்து மனதிலுள்ளதையெல்லாம் தூர எறிந்துவிட்டு, தன் பிரச்சனையைப் பற்றி சிந்தித்தான். காட்டுக்குள் படுத்துக் கொண்டே யோசித்துக் கொண்டிருந்தான். கடைசியில் அதிகரித்துக் கொண்டிருக்கும் வெப்பக்காற்றில் தூங்கிப் போனான். இடியோசை தான் அவனை எழுப்பியது. ஒருமாதிரி இருட்டிவிட்டது. ‘இடியும் மழையும் புயலும்’ முனகினான். தன் புதிய உடைகளைப் பற்றி யோசித்தான் – என்ன துரதிருஷ்டம் அவற்றை நனைந்து விட்டால் -. எழுந்து சுற்றியிருந்த செடிகொடிகளுக்குள் புகுந்து வண்டிப் பாதைக்கு வந்தான். அப்போதுதான் அவன் வாழ்வின் திசையை அதிர்ஷ்ட்த்தை நோக்கிச் செலுத்திய படிக்கட்டைக் கண்டான். முத்துக்கள் பதித்த கைப்பிடி கொண்ட ஒரு சின்ன பட்டுத்துணியால் செய்த குடை.. அவனுடைய உடைகளுக்கு மோட்சம். பெருமகிழ்ச்சியுடன் அதை எடுத்துக் கொண்டான். மழை துவங்காவிட்டாலும் அதைப் விரித்துத் தலைக்குமேல் வைத்துப் பார்த்தான். ஒரு கம்பி மட்டும் உடைந்திருந்தது. சரிபார்த்து விடலாம். வண்டிப்பாதையில் விரைந்தான். அவனுக்கே ஏனென்று புரியவில்லை. புயலிலிருந்து தப்பவேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் அவனுக்கிருந்தது, நடந்தான். காட்டுப் பாதையில் போனால் என்ன பாதுகாப்புக் கிடைத்துவிடும். ஒருகுருட்டு நம்பிக்கைதான் அவனைத் தள்ளியிருக்க வேண்டும் என்று பின்னால் நினைத்துப் பார்த்தான்.
ரொம்ப தூரம் ஒன்றும் போகவில்லை, அரை மைல் இருக்கும், எதிர்பாராத்தைப் பார்த்தான். காலியாகத் தெரிந்த ஒரு சின்ன வீடு. மகிழ்ச்சியில் மெல்லக் கூவினான். கொஞ்சம் குழந்தைத் தனமும் வருத்தமும் அதில் கலந்திருந்தது. கதவைத் தள்ளித் திறந்து நுழைந்தான். அரைகுறையாய் கட்டப்பட்ட ஒரு அறையும் அதையொட்டி இன்னொரு அறையும். ஒரு வாசலும். வேறு எதுவும் இல்லை. கூரை இல்லை. டெண்ட் போட்டது போல் சாய்ப்பு பொட்டிருந்தது. அது ரொம்ப இறுக்கமாக கட்டப்பட்டிருந்தது. தரை காய்ந்துபோய் தூசியாக இருந்தது. உடைந்த நாற்காலி ஒன்று இருந்தது. ஸ்டெப்பின்ஸ் அடுத்த அறை காலியாக இருப்பதை உறுதி செய்து கொள்ள எட்டிப் பார்த்துவிட்டு உட்கார்ந்தான். மனம் நிறைவாக உணர்ந்தான். தன்மீது ஒரு மரியாதை வந்தது. ஒரு ஏழை நத்தை தன் கூட்டைக் கண்டுகொண்டது. இருக்க அவனுக்கு இடமும் தங்கிக்கொள்ளக் கூரையும் கிடைத்துவிட்டது. அந்த இருண்ட இடம் உடனே வீடாகத் தகுதி உயர்ந்தது. பெருமழை பெய்தது. இடி விழுந்த்து. அந்த இடமெங்கும் கண்ணைக் கூசும் நீல ஒளியால் நிறைந்தது. ஸ்டெப்பின்ஸ் இந்த்த் தடவை புகையிலையை பைப்பில் தாராளமாக நிரப்பினான். நாற்காலியை சுவற்றி சாய்த்துக் கொண்டு புகைத்தான். தன்னிலை உணர்ந்து நிறைவோடு அங்கும்மிங்கும் பார்த்தான். உண்மையிலேயெ ரொம்பவும் சின்னதுதான். ஆனால் அவனுக்கு ரொம்ப வேண்டியது. குளிர்காயும் அடுப்பும் ரொம்பநாள் பயன்படுத்தாது விடப்பட்ட சமையல் அடுப்பும் பார்த்தவுடன் திருப்தியுடன் தலை ஆட்டிக் கொண்டான். .
புயல் அடித்து ஓயும் வரை உட்கார்ந்து புகைபிடித்துக் கொண்டிருந்தான். ரொம்ப மழை பெய்துவிட்டது. காற்றும் பலமாகத்தான் வீசி இருந்த்து. அந்தச் சின்னவீடு ரொம்பக் கச்சிதமாக இருந்தது. குளிர்ந்த வடமேற்குக் காற்று திறந்திருந்த கதவின் வழி வீசியது. காற்று சூழ்நிலையை மாற்றி விட்டது. சூடாக எரிக்கும் காற்று போய்விட்டது. இரவு குளிரும். ரொம்பவும் குளிரக் கூடும்.

ஸ்டெப்பின்ஸ் எழுந்து அடுப்பையும் அதன் குழாயையும் கூர்ந்து பார்த்தான். ரொம்ப நாளாக பயன்படாதவை ஆனால் நம்பிக் காரியத்தில் இறங்கலாம். வெளியே சென்று மரக்கட்டைகள் கிடந்த இடத்திலிருந்து நனையாமல் இருந்த விறகுக் கட்டைகளை எடுத்துவந்தான். தீயைப் கொளுத்தி அடுப்பைப் பற்றவைத்தான். அடுப்பு நன்றாக எரிந்தது பார்த்துப் பெருமகிழ்ச்சி அடைந்தான். இன்னொரு பரிசும் வெளியே காத்திருந்தது. ஒரு சின்னக் காய்கறித்தோட்டம், அதில் உருளையும் மக்காச்சோளமும் இருந்தன. அந்த வீட்டில் யாரோ பலவருடங்கள் சும்மா குடி இருந்திருக்கவேண்டும். தோட்டமும் போட்டிருக்க வேண்டும். சில வாரங்களுக்கு முன்னால்தான் இறந்து போனான். அடுப்பு நாற்காலி சின்ன அறையில் ஓய்விடம் ஒன்றிரண்டு இரும்புப் பானைகள், இலுப்புச்சட்டிகள் தவிர மற்ற எல்லாம் போய்விட்டன. ஸ்டெப்பின்ஸ் மக்காச் சோளம் எடுத்து, தோண்டி உருளைகள் எடுத்து அடுப்பில் சமைக்க ஆரம்பித்தான். வேகமாக கிராமத்துக் கடைக்குச் சென்று பதப்பட்ட கறியும் அரைடஜன் முட்டையும் கால்கிலோ தேனீரும் உப்பும் வாங்கிவந்தான். திரும்பி வந்ததும் ரொம்ப வருடங்களாக மறந்து போன காட்சியைப் பார்த்தான். சிரித்துக் கொண்டிருந்தான். “வா., இது உனது மாளிகை” தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். பெருமகிழ்ச்சியுடன் தனக்குள்ளே சிரித்துக் கொண்டான். வெறுப்பெற்றும் வீடற்ற வெளிகளிலிருந்து ஒரு வீட்டுக்குள் நுழைந்திருக்கிறான்.

இயல்பாகவே குடும்ப உணர்வுள்ள மனிதன். அவனுடைய இளமைக் காலங்களை சிறையில் கழிக்காமல் வீட்டில் இருந்திருந்தால், அவனிடம் உள்ள நல்ல குணங்கள் வளர்ந்திருக்கும். அப்படி ஒன்றும் இப்போது காலம் கடந்துவிடவில்லை. முட்டையையும் கறியையும் சமைத்து, டீப் போட்டு, காய்கறியை வேகவைத்து உடைந்த நாற்காலியில் உட்கார்ந்து சிறு குச்சிகள் மீது நிற்கும் பழைய போர்டு மீது சாப்பாட்டைப் பரப்பி வைக்கும் போது ரொம்பவும் மகிழ்ந்தான். ஆத்மா வரை சென்ற ரசனையுடன் மிகவும் அனுபவித்துச் சாப்பிட்டான். வீட்டில் உட்கார்ந்து சாப்பாட்டு மேஜையில் சாப்பிட்டான். சாப்பிடும் போது திரையில்லாத, கண்ணாடிகள் உடைந்த, இரண்டு ஜன்னல்களையும், அடிக்கடி பார்த்துக் கொண்டான். அவன் பயப்படவில்லை. அது முட்டாள்த்தனம். அவன் எந்த நாளும் கோழையாக இருந்ததில்லை. ஜன்னலை முடிவைக்க திரையோ எதுவோ தேவைப் பட்டது. இயற்கையின் பரந்த வெட்டவெளியிலிருந்து அல்லது எட்டிப் பார்க்கும் மனிதர்களிடமிருந்தும் மறைந்து கொள்ள வேண்டியிருந்தது. யாராவது வீட்டிலிருக்கு விளக்கொளியைப் பார்த்து சந்தேகப் படக்கூடும். ஒரு பழைய பாட்டிலுக்குள் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்திருந்தான். இரவின் கறுப்பு வெறுமையில் முறைத்துக் கொண்டிருக்கும் ஜன்னலை மூட திரைகள் இருப்பதை விரும்பினாலும், இப்போது அவன் பெருமகிழ்ச்சியுடனிருந்தான்..
இரவுச் சாப்பாட்டை முடித்தபின் ஏக்கத்துடன் புகைபிடிக்கும் பைப்பைப் பார்த்தான். புகையிலை அருகிவிட்டது. அதை சேமித்து வைத்துக் கொள்ளும் தேவையை உணர்ந்து ஒரு நொடி தயங்கினான். பிறகு அந்தக் கவலையை மறந்தான். இவ்வளவு பெரிய வீடு கிடைத்தது அதிர்ஷ்டம் இன்னும் தொடரும். தொடரப் போகும் இன்பங்களின் வரிசையில் முதலாவது வீடு. பைப்பை நிரப்பி புகைத்தான். அடுத்த அறையில் இருந்த பழைய படுக்கையில் தூங்கப் போனான். கோடுகளைப் போல ஒளிரும் மரக்கிளைகளின் இடையே வெய்யில் அடிக்கும் வரை குழந்தையைப் போலத் தூங்கினான். பின்னால் எழுந்தான். வீட்டுக்கு அருகிலிருந்த நீரோடைக்குப் போனான். தண்ணீரை மேலே அடித்துக் குளித்தான். வீட்டுக்குத் திரும்பினான். மீதமிருந்த முட்டைகளையும், கறித்துண்டுகளையும் சமைத்தான். இரவில் வெகு அமைதியாக சாப்பிட்டது போல காலைச் சாப்பாட்டை முடித்தான். சரியாக நிற்காமல் கீழே இறங்கிப் போயிருக்கும் வாசல் நிலைப்படியில் உட்கார்ந்தான். மீண்டும் தனது முக்கிய பிரச்சனையைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். புகைக்கவில்லை. அது தீரப்போகும் நிலையில் இருந்தது. அதனால் கவனமாக இருந்தான். வீடு கிடைத்துவிட்ட நினைப்பில் அவன் இல்லை. வீட்டுக்காரனைப் பற்றி நினைத்தான். அவனுக்கு வீடு வாடகைக்கு விடுவானா? வெகு விரைவிலேயே அந்த சந்தேகத்துக்கு விடை கிடைத்தது. வண்டிப் பாதையில் விழுந்த பெரிய மரக்கிளைகளில் நிழல் நீண்ட இருண்ட நிழலால் அசைவது போலிருந்ததும் அவனுக்குப் புரிந்து விட்டது. யாரோ மனிதனுடைய நிழல். நேராக உட்கார்ந்து கொண்டான். முதலில் எதற்கும் கவலைப்படாதவன் போல் முகபாவம் தெரிந்தது. பிறகு குழந்தை தனக்குப் பிடித்த ஒரு பொருளை வைத்துக் கொள்ள மன்றாடுவது போல முகம் மாறிவிட்டது. நிழல் முன்னால் வர வர, அவன் நெஞ்சின் படபடப்பு அதிகமானது. நிழல் மெதுவாக வந்தது. கிழவனுடையது போல. அவன் வயதானவந்தான். ஆனால் ரொம்ப குண்டு. ஒருபக்கம் சரியும் உடலின் ஒரு பக்கத்துக்கு தடியை ஊன்றி தன்னுடைய நிழலுக்குப் பின்னால் வந்தான். விவசாயி மாதிரி இருந்தான். அவன் வந்ததும் ஸ்டெப்பின்ஸ் எழுந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

Wednesday, February 10, 2010

வன்முறையின் கொடும்பசி தீராது

சரத் பொன்சேகா கைதானதும், முன் எங்கோ இலங்கை வன்முறைகளைப் பற்றிப் படித்த கவிதையொன்று மனப்புகையாக ஞாபகம் வருகின்றது. புலிகளைப் பார்த்துக் கேள்வி எழுப்பிய கவிதை அது. அப்போது அவர்கள் தமிழ் குழுக்களைக் கொலைசெய்யத் தொடங்கவில்லை. ‘நீ தூக்கி இருக்கும் துப்பாக்கியை எதிரியை நோக்கித் தூக்கி இருக்கிறாய். அதை எங்களை நோக்கித் திருப்ப மாட்டாய் என்று என்ன உத்திரவாதம்?’ என்ற தொனியில் இருந்தது கவிதை. எதிரியை நோக்கும் துப்பாக்கி நம்பக்கம் திரும்பிச் சுடும். அதிலும் இழப்பு நேரிடும் என்று வன்முறையின் உட்குணத்தை வெளிப்படுத்திய கவிதை அது. வன்முறையப் பழகிவிட்ட அதிகார மனம் அல்லது அரசு, அதிலிருந்து தன்னை மீட்டுக் கொள்வதென்பது எளிதல்லை. எளிய தீர்வாகத் தெரிகிறது. வன்முறையை பயன் படுத்துபவனுக்கு எளிய தீர்வாகத் தெரியலாம். ஆனால் வன்முறை அரங்கேறும் சமூகத்தில் அது ஒரு பழக்கமாக, எளிய தீர்வாக எந்தப் பிரச்சனைக்கும் சொல்லப் படுகிறது.
இலங்கையின் ஜனாதிபதியும், சரத் பொன்சேகாவும் அந்தச் சமூகம் முழுவதும் வன்முறையின் பசியில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிலிருந்து மீள அவர்கள் தீவிரமான முயற்சி செய்ய வேண்டியிருக்கும். வெற்றியும், தோல்வியும், வன்முறையைப் பொறுத்தவரை, நீண்ட நாள் விளைவுகளை ஏற்படுத்தும். துப்பாக்கி எடுத்தவன் அதன் பசிக்கு இரையாவான். புலிகளை வன்முறையில் ஒழித்துவிட்டால் அமைதி ஏற்படும் என்று எதிர்பார்த்த சமூகத்துக்கு இது ஒரு பாடம். நமது நாட்டில் இருக்கும் பிரச்சனைகளுக்கும் வன்முறை மூலம் தீர்வு காண நினைப்பவர்கள் இதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

Thursday, February 04, 2010

மரங்களின் கதை

வ.வே.சு ஐயரின் குளத்தங்கரை அரசமரம் பற்றிப் சமீபத்தில் படித்தேன். அரசமரம் தான் கதை சொல்லுகிறது. உடனடியாக ஞாபகம் வந்தது புளியமரத்தின் கதை. அடுத்து ஞாபகம் வந்தது சோ.தர்மனின் கூகை. இந்த வரிசையில் இந்தக் காலக்கட்டத்தில், தமிழ் இலக்கியத்தில் மரத்தின் பரிணாம வளர்ச்சி மனதில் பட்டது.

குளத்தங்கரை அரசமரத்தில் பேசிய (அரச) மரம், புளிய மரத்தின் கதையின் மரம் பேசாத சாட்சியாக நிற்கிறது. தெருவிலும் ஊரிலும், நாட்டிலும் நடப்பதின் சாட்சியாக நிற்கிறது. கூகையில் வரும் மரம், கூகையின் தங்குமிடமாக, வாய்பேசாமலும், சாட்சியாக இராமலும் (இருந்தாலும் அது வெளியே தெரிவதில்லை) அமைதியாகிவிடுகிறது. கதைகளைப் பொறுத்தவரை வெளிப்படையாக துருத்திக் கொண்டு நின்ற மரம், இரண்டாவது கதையில் பேசாதிருந்து, மூன்றாவது கதையில் இருக்கும் இடம் தெரியாமல் ஆனால் ஒரு பின்புலமாக இருக்கிறது. இன்னொரு விதமாகச் சொன்னால் நான் நான் என்று தம்பட்டம் அடித்த மரம், இரண்டாவதில் சத்தம் குறைந்து, மூன்றாவதில் கதையுடன் இயைந்து மெனக்கெட்டுப் பார்த்தால் ஒழிய தெரியாததாகி விடுகிறது.

இந்த வரிசையில் பார்த்தால், அது சமூகத்தின் குரல் என்றே அதைச் சொல்லலாம்.