Wednesday, February 10, 2010

வன்முறையின் கொடும்பசி தீராது

சரத் பொன்சேகா கைதானதும், முன் எங்கோ இலங்கை வன்முறைகளைப் பற்றிப் படித்த கவிதையொன்று மனப்புகையாக ஞாபகம் வருகின்றது. புலிகளைப் பார்த்துக் கேள்வி எழுப்பிய கவிதை அது. அப்போது அவர்கள் தமிழ் குழுக்களைக் கொலைசெய்யத் தொடங்கவில்லை. ‘நீ தூக்கி இருக்கும் துப்பாக்கியை எதிரியை நோக்கித் தூக்கி இருக்கிறாய். அதை எங்களை நோக்கித் திருப்ப மாட்டாய் என்று என்ன உத்திரவாதம்?’ என்ற தொனியில் இருந்தது கவிதை. எதிரியை நோக்கும் துப்பாக்கி நம்பக்கம் திரும்பிச் சுடும். அதிலும் இழப்பு நேரிடும் என்று வன்முறையின் உட்குணத்தை வெளிப்படுத்திய கவிதை அது. வன்முறையப் பழகிவிட்ட அதிகார மனம் அல்லது அரசு, அதிலிருந்து தன்னை மீட்டுக் கொள்வதென்பது எளிதல்லை. எளிய தீர்வாகத் தெரிகிறது. வன்முறையை பயன் படுத்துபவனுக்கு எளிய தீர்வாகத் தெரியலாம். ஆனால் வன்முறை அரங்கேறும் சமூகத்தில் அது ஒரு பழக்கமாக, எளிய தீர்வாக எந்தப் பிரச்சனைக்கும் சொல்லப் படுகிறது.
இலங்கையின் ஜனாதிபதியும், சரத் பொன்சேகாவும் அந்தச் சமூகம் முழுவதும் வன்முறையின் பசியில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிலிருந்து மீள அவர்கள் தீவிரமான முயற்சி செய்ய வேண்டியிருக்கும். வெற்றியும், தோல்வியும், வன்முறையைப் பொறுத்தவரை, நீண்ட நாள் விளைவுகளை ஏற்படுத்தும். துப்பாக்கி எடுத்தவன் அதன் பசிக்கு இரையாவான். புலிகளை வன்முறையில் ஒழித்துவிட்டால் அமைதி ஏற்படும் என்று எதிர்பார்த்த சமூகத்துக்கு இது ஒரு பாடம். நமது நாட்டில் இருக்கும் பிரச்சனைகளுக்கும் வன்முறை மூலம் தீர்வு காண நினைப்பவர்கள் இதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment