Wednesday, May 31, 2017

வரலாற்றின் பேரரசர்

புதிய பேரரசர்
அரியாசனத்தில் அமர்ந்துவிட்டார்
மனிதரைப் போலவே இருக்கிறார்
அவதார புருஷன் போலப் பேசுகிறார்
பாய்ந்தோடும் கருப்பு நதிகளின்
களங்கமனைத்தும் நீங்கிவிடும்
பாலும் தேனும் பாய்ந்துவரும்
ஏனெனில்
பேரரசர் ஆணையிட்டுவிட்டார்

விண்மீன்கள் பாடுகின்றன
அசரீரிகள் கேட்கின்றன
இனிய வார்த்தைகள்
நேரான பார்வையில் தெரியாத
நச்சுத் துளிகள் ஆவியாகிப்
பரவுகின்றன
ஏனெனில்
பேரரசர் ஆணையிட்டுவிட்டார்
கொசுக்களைக் கொல்ல வேண்டும்.
நமக்கும் கொஞ்சம் மூச்சடைக்கும்
அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்
நாட்டுக்காக

நாமெல்லாம் நாடில்லையா?
என்று
கேள்வி கேட்கக் கூடாது
பேரரசரின் ஆணையில் இதுவும் இருக்கிறது

நான் பதின்மூன்றாம் நூற்றாண்டைப்
பற்றித்தான் பேசுகிறேன்
நாமிருப்பது இருபத்தி ஒன்றாவது
என்று உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்

பணம் இல்லை என்றால்
உங்கள் விரலைச் (டிஜிட்) சப்புங்கள்
பிரெட் இல்லை என்றால்
கேக் சாப்பிடுங்கள்

கிரேக்கர்கள் 3500 ஆண்டுகளுக்கு முன்னரே
வானத்தில் பறக்கும் இயந்திரத்தைப் படைத்தார்கள்
நாம் கிரேக்கர்களாக வேண்டியதில்லை

தேவதூதர்கள் தொட்டதும்
நோய்கள் குணமாகிவிடும்
நாம் ஒன்றும் கிறித்தவர்கள் ஆகவேண்டியதில்லை

ரோமானியக் கடவுள்கள்
எத்தனையோ ஆயிரம் உண்டு
எல்லா ரோமனியர்களும்
பேரரசர்களாக முடிந்த்தா?

அடிமைகளாக இருந்தவர்கள் தானே
வரலாற்றில் அதிகம்
நாம் மட்டுமென்ன
வரலாற்றை மாற்றி எழுத முடியுமா?

எதையெதையோ எழுதி,
கவிதை என்றும் சொல்ல்லாம்

எவரெவரோ வந்து ஆட்சி செய்வதைப் போலவே..

Monday, May 22, 2017

வெளியேறுதல்

மேய்ப்பரே
உங்கள் மந்தையிலிருந்து
சில ஆடுகள்
தப்பிவிட்டன

கழுத்தில், காலில்
பிணைத்திருந்த தளைகள்
அறுந்துவிட்டன

தறிகெட்டு அவை
ஓடுவதாய்ப் புலம்புவதேன்

என்றாவது வரும் தீர்ப்பு நாளுக்குப் பின்
வரப்போகின்ற
பரலோக சாம்ராஜ்யத்தின்
மூச்சடைக்கும் சட்டங்களைவிட

இன்று
வெயில் கொளுத்தும்
பாலைவனத்தின் மணல்வெளியும்
அதில் வீசும் வெப்பக் காற்றும்
காய்ந்த சருகுகளும்
எங்காவது இருக்கும்
சோலையும்,
அதன் இதமான நிழலும், காற்றும்
போதுமே..
நாங்கள் இன்று உயிருடனிருக்க..

Saturday, May 06, 2017

கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும் - மஹாஸ்வேதா தேவி

வங்க மொழியில் மிகப்புகழ்பெற்ற இந்தப் படைப்பாளியின் பெயரைப் பலமுறை கேட்டிருக்கிறேன், படித்திருக்கிறேன்.  ’1084ன் அம்மா’ என்ற திரைப்படத்தைப் பார்த்தபின் அவரைப் பற்றிய, அவரது படைப்புகள் பற்றிய ஓர் அறிமுகம் கிடைத்தது. அந்தத் திரைப்படத்தில் மாவொயிஸ்ட் போராளி ஒருவன் சிறைப் பிடிக்கப்பட்டு, போலிஸாரின் வதையால் இறந்து விடும் கதை. அதைப் பார்க்கச் செல்லும் அம்மாவிடம் சொல்லப் படும் அவனது அடையாளம் தான் 1084 எண்.  மனதைத் தொடும் அந்தப் படம்.

            காலச்சுவடு பதிப்பபம் வெளியிட்ட இந்த நூலை மேற்கண்ட பின்னணியில் வாங்கினேன்.  புதுப்புதுப் படைப்பாளிகளின் படைப்புக்களை இனங்காண்பதும், அவர்களது சிறந்த படைப்புக்களை படித்து அதனால் பெறும் இன்பமும், ஞானமும் வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களுக்கு பழகிப்போன விளையாட்டு.  அதை அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும். 

            வழக்கத்துக்கு மாறான தலைப்புக் கொண்ட நாவல் இது.  ஏதோ உண்மையில் இருந்த எழுத்தாளனின் வாழ்க்கையையும் அவனது படைப்புக்களையும் பற்றிப் பேசுகிறதோ என்னும் மயக்கத்தைத் தரும் தலைப்பு. 

            நாவலின் கரு மிக எளிமையானது.  ஆனால், அது சொல்லப்படும் விதம் மிக மிகப் புதிய பாணியில் சொல்லப்படுகி்றது. நாவல் பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்கிறது.  பழங்குடிச் சமூகமான சுயாட் என்ற இனத்தில் பி பிறந்து, பல்வேறு தடைகளை மீறிக் கல்விகற்று, ஞானவானாகக் கனவுகாணுகிறான் ஒரு இளைஞன்.  அது நிறைவேறுகிறது.  பெரிய கவிஞனாகிக் காவியம் படைத்து, அந்தக் காலத்து வழக்கம் போல அந்தப் பகுதி அரசனிடம் பதவி பட்டங்கள் பெறுகிறான்.  ஆனால் கல்வி பயிலக்கூடாது என்று விதிக்கப்பட்ட பிரிவில் தோன்றிய அவன் தனது பழைய அடையாளத்துக்காகவே பலி கொடுக்கப்படும் நிலை ஏற்படுகிறது.   இதனூடே செயல்படும் ஜாதி அடையாளங்களின் அடிப்படையிலான வன்மம் மிக அழகாக, இயல்பாகச் சொல்லப்படுகிறது.  அவன் மிகப்பெரிய நிலையை அடைய வேண்டிய நேரத்தில், அவனது உண்மையான ஜாதி என்ன என்பது வெளிப்படுகிறது.  பெரும் கவியாகக் கல்விமானாக இருந்த போதிலும், அவனுடைய சமூக நிலையைத் தீர்மானிப்பது அவனுடைய கல்வியோ மேதைமையோ அல்ல.  ஜாதிதான் அதைத் தீர்மானிக்கிறது.  தவறான அடையாளத்தால் அவனது உண்மை சாதியைச் சொல்லாததால், அவனுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கிறது.  அரசசபையில் பெரும்பதவி வகிக்கும் ஒரு பிராமணரின் மகள் அவனுடைய கல்வி மேன்மை, புகழ், ஞானம் கண்டு அவனைக் காதலிக்கிறாள் அவளுக்கும் நிறைவேறாத காதலாகிறது.  அரசனுக்கும், கவியுடன் பழகிய, அவனது கவித்துவம் அறிந்த, அவன் காவியத்தைப் பயின்ற அனைவருக்கும், ஏன் தண்டனை வழங்கும் போது கூட அரசரும், அவரது சபையிலிருக்கும் பெரியவர்களும் தடுமாறுகிறார்கள்.  ஆனால் பாரதிதாசன் பாடியது போல, ‘நால்வருணம் ஏனிரங்கும்?’

            பாரதி தாசன் புனைந்த புரட்சிக் கவி (பில்கணியம்) என்ற குறுங்காவியத்தின் நாவல் வடிவம் போல இருக்கிறது.  ஆனால் கதையில் மாந்தர்கள் அனைவரும், ஜாதிக் கட்டுப் பாட்டின் வலையில் சிக்கிய மீன்கள் போலவே வெளிவர இயலாமல், எது அறம் என்று தெரிந்தாலும், அறமற்ற, ஏற்கனவே நிலவும் கொடுமையான பண்பாட்டைத் தான் தூக்கிப் பிடிக்கிறார்கள்.  நாட்டார் கதைகளும், தொன்மங்களும், புராணங்களும், இயைந்து, (உதாரணமாக, கி.ராஜநாராயணன் எழுதிய கோபல்ல கிராமம்’ போன்ற), ஒரு நல்ல நாவலாக இருக்கிறது.  இதன் பாத்திரங்கள், நவீனச் சமூகத்தின் மீதாகப் பல கேள்விகளை முன்வைக்கின்றனர்.  வரலாற்று நாவல் போன்றே இருந்தாலும், சமகாலப் பிரச்சனைகளைப் பற்றிய புரிதலை உருவாக்குகிறது. 

            டாக்டர் அம்பேத்காரை ஞாபகப்படுத்தும் கவிஞனின் பாத்திரம். எவ்வளவு படித்தாலும், ஞானவானாக இருந்தாலும், பொதுச் சமூகாத்தைப் பொறுத்தவரை, அவர் ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்த மனிதன் என்ற அடையாளமே, அவரைச் சார்ந்தவர்களாலும், மற்றவர்களாலும் முன்னிருத்தப்படுவதை இந்த நாவல் ஒரு துயரக் காவியமாக்குகிறது. நமது ஜாதியச் சமூகத்தில் ஞானவான்களாக இருக்கும் பலருக்கும் நேரும் அனுபவம். அப்படி இருக்கும் கல்விமான்களை மட்டம் தட்ட அவ்வளவு கல்வி பயின்றிருக்காத மேல்ஜாதியினருக்கும் ஜாதி அடையாளம் வசதியான ஆயுதம்.  பண்பாட்டு ஆதிக்க்த்தின் வெளிப்பாடு.


            நான் படித்த மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று.  ***** 

Tuesday, May 02, 2017

வருகை

மாதம் ஒருமுறை
இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை
சாக்லெட் பாக்கெட்டுகள்
அந்த நேரத்து லேடஸ்ட் பொம்மைகளுடன்
அடுத்த முறை வரும்போது
என்ன வாங்கிவர வேண்டும்
என்ற கேள்வியுடன்

புன்னகையை மறைத்துக் கொண்டு
கதவைத் திறக்கும் போது
அம்மாவுக்கும் தெரியும்
மணியடிப்பது யாரென்று..

கண்களில் தெரியும் ஒளியை
ஊதி அணைத்துவிட்டு
வருகிறவரின்
கண்களைப் பார்க்க
விரும்பியும் விரும்பாமல்
பார்க்க நேர்ந்து
காபி கொடுத்து உபசரித்தாலும்...

இப்படித்தான் வருகிறார்
கோர்ட் தீர்ப்புப்படி
அப்பா
எப்போதும் காத்திருக்கிறேன்
நான்