Tuesday, November 03, 2015

வாசகனும் நூலும்

       ஒரு வாசகன் என்ற முறையில் ஒரு நூலாசிரியரைத் தெரிந்து கொள்வதும், அதுவரை கேள்விப்பட்டிராத ஒரு நூலைக் கண்டடைவதும் அதைப் படித்துப் பரவசம் அடைவதும் ஒரு வாசகனுக்குக் கிடைக்கும் உச்சகட்ட மகிழ்ச்சியாகும்.      ’Savaging the Civilized, Verrier elvin and his tribals’ என்ற நூலின் பிரதியை 2009ஆம் ஆண்டு சென்னையில் ஆக்ஸ்போர்ட் புத்தக சாலையில் ஒருமுறை பார்த்துவிட்டு, அந்த நேரத்தில் எனக்குப் பிடித்திருந்தரிச்சர்ட் டாகின்ஸ்எழுதிய ‘selfish Gene’ என்ற நூலையும் இன்னும் சில நூல்களையும் வாங்கினேன். ஆனால் அதற்கு முன்னரே நூலாசிரியர்ராமச்சந்திர குஹா  ஹிந்து நாளிதழில் எழுதிய, சில கட்டுரைகளைப் படித்திருந்தேன்அவை பெரும்பாலும் எனக்குப் பிடிக்காத கிரிக்கெட் பற்றி சமூகவியல் நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகள். எனக்குப் பிடித்தும் இருந்தன. ‘’How much should a person consume ?என்ற நூலை நூலகத்தில் பார்த்த போது, அது என்னைக் கவர்ந்த்துஅதைப் படித்தபின்  ‘India After Gandhi, Patriots and Partisans, Makers of Modoern India, Gandhi before India, போன்ற நூல்களைத் தொடர்ந்து படித்தேன்பின்னர் எதிர்பாராமல் அவரது பெயரில் இயங்கும் இணையதளம் இருப்பதை அறிந்து, அதையும் படிக்கத் தொடங்கினேன். இப்போது யூ டியூபில் அவரது பதிவு செய்த உரைகளையும் கேட்கிறேன்.

 இந்தப் பின்னணியில், நண்பர் சுரேஷ் சுப்பிரமணியம் இந்த நூலை மொழிபெயர்க்கிறாயா? என்று கேட்ட போது விருப்பம் இருந்தாலும் தயக்கம் இருந்ததுஅவரது ஊக்கம் இன்றி இது நிறைவேறி இராதுகடுமையாக உழைக்கத் தயாராக இருந்தேன்ஆனால், மொழிபெயர்ப்புச் செய்யும் அளவுக்குத் தகுதியும் அறிவும், புரிதலும் எனக்கு இருக்கிறதா என்ற சந்தேகம் முதல் இரண்டு வரைவுகளைத் திருத்தி முடிக்கும்வரை இருந்தது.  எடுத்துக் கொண்ட நூலின் ஆசிரியர் மேலுள்ள மதிப்பும், அவரது நூலை மொழிபெயர்த்துக் கெடுத்துவிடக் கூடாதே என்பதும் ஒரு காரணம்.

நண்பர் நெல்லை சினிவாசனின் அறிவுரைகள் பயனுள்ளவைஅவற்றைக் கருத்தில் கொண்டேன்ஆனால் அவருடன் தொடர்ந்து பேசப் பயந்தேன். காரணம் பாதியில் எனது ஆர்வம் குறைந்துவிடும் என்ற அச்சம். தன்னம்பிக்கை மீதான அச்சம். போதும் போதும் நீ கிழித்தது எனது சோம்பேறித்தனத்துக்கும் ஒரு சாக்குக் கிடைத்துவிடும் என்ற அச்சம்.  

அதையெல்லாம் மீறி இந்த நூலை மொழிபெயர்த்தேன் என்றால் அதற்குக் காரணம், இருவர், சுரேஷ் சுப்பிரமணியன், தூத்துக்குடி செல்வக்குமார்.  தூத்துக்குடி பேராசிரியர் சிவசுப்பிரமணியன் அவர்கள் மொழிபெயர்ப்பை வாசிக்க ஒத்துக் கொண்டதே என் மீது கொண்ட அன்பின் காரணமாகவும், நாட்டார் பண்பாட்டில்  ஆய்வாளர் என்ற ஆர்வத்தின் காரணமாகவும் இருக்கலாம்.

என் மனைவிக்கு நூலின் உள்ளடக்கம் ஆர்வம் தருவதாக இல்லைஎன் மகனுக்கும், மகளுக்கும் இவ்வளவு படிக்கும் அளவு தமிழில் வாசிப்புப் பழக்கம் இல்லை.   அலுவலகத்திலும், டில்லிச் சமூக சூழ்நிலையிலும் இது பற்றி விவாதிக்கும் நிலைமை இல்லை.  அதனால், தனிமையில் பல தயக்கம், மயக்கம், சந்தேகம் என்று உழல வேண்டியிருந்தது.  மனைவியும் மக்களும் ஏதோ இவன் உருப்படியாகச் செய்கிறான் என்ற மனநிலையில் முயற்சிக்கு ஆதரவளித்தனர்.

குறைந்தது ஏழுமுறை மொழிபெயர்ப்பை மீண்டும் மீண்டும் திருத்தி இருக்கிறேன். அதற்கு அவ்வளவு பொறுமை இருந்தது அது எனக்கே வியப்புத்தரும். நான்கு கணினிகளில் பல முறை எழுத்துரு மாற்றங்களில் சிக்கிக் கொண்டு பல மணி நேரங்களை வீணாகச் செலவழித்தேன். மூன்றாண்டுகளுக்கு மேல் தினம் ஒரு மணிநேரம் சராசரியாக எடுத்துக் கொண்டேன்கடைசிக் கட்டத்தில் அதிக நேரம் ஈடுபட்டேன். சாதாரணமாக, மொழிபெயர்ப்புக்கான காலக்கெடு 18 மாதங்கள் என்றறிந்து கொண்டேன்அதற்குள் முடித்திருந்தால் பிரதி சரியாக வந்திராது என்பது என் எண்ணம். முழுநேர மொழிபெயர்ப்பாளர்களுக்கு அந்தக் காலக்கெடு பொருந்துமோ என்னவோ?

நூலாசிரியரையும் நூலையும், நூலின் உள்ளடக்கமாக இருந்த மனிதரையும் தெரிந்து கொண்டதில் தொடங்கி, நூலை மொழிபெயர்ப்பது வரை செய்த பயணம் இது. எனக்கு பெருமகிழ்வு தந்த ஒரே நிகழ்வு. வாசகனுக்கும் நூலுக்குமான உறவின் இங்கே நிறைவு பெறுகிறது.  இன்னும் இது போன்று எனக்கு விருப்பமான பணிகளைச் செய்யும் வாய்ப்புக் கிடைக்கும் என்றே நம்புகிறேன். நூல் வெளிவரும் நாளை எண்ணிக் காத்திருக்கிறேன்.


  முடிவில் பிரதி எவ்வாறு இருக்கிறது என்பதை மற்றவர்கள் தீர்மானிக்கட்டும்