Friday, June 05, 2020


அப்பாவின் சினேகிதர், என்னுடைய தாத்தா

               நம் வாழ்வில் சிலரை நாம் எப்போதாவது சந்திப்பதுண்டு.   அவர்கள் நம் வாழ்விலிருந்து வெகுதூரம் சென்ற பின்னும் அல்லது மறைந்து வெகுகாலம் ஆனபின்னும் நம் நினைவில் உந்து சக்தியாக இருப்பார்கள்.  நமது பெற்றோர்களை அந்த பட்டியலில் சேர்க்காமல் இருக்க முடியாது.  ஆனால், மற்றவர்கள், முக்கியமாக நமது உறவினர் அல்லாதவர்கள், அதுவும் நமக்குத் தெரிந்தவர்களாக இருப்பதனால் மட்டுமே, அவர்கள் நம் வாழ்வில் செலுத்தும் பங்கு நம்மால் மறக்க முடியாதது.   நம்முடன் ஒத்த கருத்துக்கள் கொண்டவர்களை இதில் சேர்க்க முடியாது. ஏனெனில் அவர்களுடன் நமக்குப் பொதுவான ஒரு தளம் இருக்கிறது.  நமக்குத் தெரிந்தவர்களாக இருப்பவர்கள், அந்தக் காரணத்திற்காக மட்டுமே நமக்கு உதவி செய்கிறார்கள்.  வேறெந்த காரணத்துக்காகவும் அல்ல. எதையும் நாம் அவர்களுக்குத் திருப்பிச் செய்துவிட முடியாத இடத்தில் இருப்பவர்கள்.  அவர்கள் நமக்கும் அதையேதான் சொல்லித் தருகிறார்கள்.  அதாவது எதையும் எதிர்பாராமல் இன்னொருவருக்கு உதவிசெய்வதைக் கற்றுத் தருகிறார்கள்.  அவர்களால் நமது வாழ்வின் வண்ணங்கள் ஒளிபெறுகின்றன.  உறவுகளில் உணர்ச்சிகள், நினைவுகளை அவர்கள் வழங்கிச் செல்கிறார்கள்.

             அப்படி ஒரு உறவினரைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.  அவர் என் அப்பாவின் நண்பர், ஆனால் எனக்குத் தாத்தா.  அவரைப் பார்த்தது முதல் தாத்தா என்றே அழைத்திருக்கிறேன்.  அவர் பெயர் ராசகோபால். ஆமாம் என்பெயர்தான். அதை இப்படித்தான் அவர் உச்சரிப்பார்.  தமிழ்மீதுள்ள காதலாலோ கடமையினாலோ அல்ல.  அதுதான் அவருக்குத் தெரிந்தது.  அவரைப் ’புலவர் தாத்தா’ என்றே அழைப்போம்.  புலவர் என்பது ஒரு ஜாதிப் பெயர்தான்.  இன்னொரு வகையில் அவர் புலவர்.  இசையைக் கற்றவர்.  நாகஸ்வரத்துடன் தவில் வாசித்தவர்.  குட்டையான உருவம், நல்ல கருப்பு, ஆனால் உள்ளம் மட்டும் தங்கம்.  என் மீதும் எங்கள் குடும்பத்தின் மீது எல்லையற்ற பாசத்தைப் பொழிந்தார்.

            என் தந்தையும் தாயும் வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள்.  அதனால் இருவருடைய குடும்பத்தினருடனும் எங்களுக்கு தொடர்புகள் இருந்ததில்லை. எங்கள் வீட்டுக்கு உறவினர்கள் அனேகமாக வந்ததே இல்லை.  தந்தையும் தாயும் அரசு ஊழியர்கள்.  அதனால் ஒருவழியாக பொருளாதாரப் பிரச்சனை அதிகம் இல்லை.  ஆனால் எங்களுக்கு உறுதுணையாக, நம்பிக்கையுள்ள, உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளக்கூடியவர்கள் இல்லை.  குழந்தைப் பருவத்தில் யாருடைய வீடுகளுக்கும் எங்களால் செல்வதற்கு முடியவில்லை. பள்ளிப் பருவத்தில், அப்பாவின் சகோதரிகளில் ஒருவர் வீட்டுக்குச் செல்வோம். அங்கேதான் வரவேற்புக் கிடைக்கும்.  எனது குழந்தைப் பருவத்திலிருந்து இன்று வரை நான் தாத்தா என்றழைப்பது அவரைத்தான். பல வருடங்களுக்கு முன்னால் அவர் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டார்.

            எனக்கு நினைவுதெரிந்த நாளிலிருந்து அவர் உருவத்தில் எந்த மாற்றமும் இல்லை. என்று பதினாறு என்று மார்க்கண்டேயனைச் சொல்வது போல் அவரைச் சொல்லலாம்.  இன்றும் என் மனதில் புலவர் தாத்தா அப்படியே இருக்கிறார்.  குட்டையான, கருப்பான, மெலிந்த உடல். ஆனால் பலமுள்ளவர்.  உழைத்துக் கெட்டியான உடல்.  அவரால் அந்தக் காலத்தில் தன் உழைப்பைத்தான் அனைவருக்கும் தரமுடிந்தது.  ஆனால் அதை மிகுந்த அன்புடன் யாருக்கு வேண்டுமென்றாலும் வழங்கினார்.  பேரன்பை எங்களுக்கு வழங்கினார்.  அன்பைத் தேடிய எங்களுக்கு அவர் மிகவும் தேவைப்பட்டார்.  இறக்கும் போதும் அவருடைய உடம்பு முன்னிருந்ததைப் போலவே இருந்ததென்று  சொன்னார்கள். அவர் கடுமையாக உழைப்பவர்.  மற்றவர்கள் ஓய்வு பெறுகிற வயதில் அவர் உழைத்துக் கொண்டிருந்தார்.  அவருடைய மகளுக்கு வெகு காலம் முன்பே திருமணம் முடித்துவிட்டுத் பல வருடங்கள் தனியாகவே வாழ்ந்து வந்தார். ஒவ்வொரு ஊருக்கும் என் அம்மா, அப்பா மாற்றலாகிச் சென்றாலும், எப்போதாவது ஒருமுறை வந்து செல்வார்.  அப்பா அவரிருக்கும் ஊருக்குச் சென்றால், அவரைப் பார்த்தீர்களா என்று நாங்கள் கேட்போம்.

            என்னுடைய அம்மாவின் அப்பா எங்களைப் புறக்கணித்துவிட்டார்.  அப்பாவின் அப்பா நான் குழந்தையாக இருக்கும் போதே இறந்துவிட்டார். அதனால் எனக்குத் தெரிந்த ஒரே தாத்தா, புலவர் தாத்தா மட்டுமே. அவருக்குக் காது சரியாகக் கேட்காது.  அதனால் உரக்கப் பேசவேண்டும்.  அல்லது மிக மெதுவாகப் பேச வேண்டும்.  முகபாவத்தை வைத்தும், உதட்டசைவை வைத்தும் பேசுவதைப் புரிந்து கொண்டுவிடுவார்.

            அவர் என்னுடைய ரத்தபந்தமாக இல்லாவிட்டால் என்ன?  அன்பும் பாசமும், உயிரியலின் விளைவு அல்ல. அப்படி இருந்தால், அப்படி இருக்குமென்று எதிர்பார்த்தால் அது மிருகங்களின் குணம் மட்டுமே. மற்றவர்களிடமும், தெரியாதவர்களிடமும் நாம் காட்டும் நேசமும் அன்பு மட்டுமே நம்மை சமூக மனிதர்கள் ஆக்குகிறது.  புலவர் தாத்தாவின் பொருளாதார நிலைமை சிக்கலானதுதான்.  அப்பா எப்போதோ உதவி செய்ததாகவும் சொல்வார். என் அம்மா அவரிடம் தன் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்வார்.  அம்மாவுக்கும் அப்பா இல்லாத குறையை அவர் போக்கியிருந்தார்.

            என் மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பேரன்பு செலுத்திய மனிதர்களில் முதலிடம் அவருக்கு உண்டு. எனது 16-17 வயதில், (அவருக்கு 60 வயதுக்கு மேலிருக்கும்) என்னை சைக்கிளில் வைத்துக் கொண்டு அவர் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.  அப்போதும் இப்போது எனக்கு வெட்கமாக இருக்கும். எனக்கு சைக்கிள் ஓட்டத்தெரியாது.

            அவர் இறந்து போன அன்று கூட தனது சைக்கிளின் இருபுறமும் குடங்களில் தண்ணீர் நிரப்பி, இன்னொன்றை கேரியரில் வைத்துச் செல்லும் போது ஒரு விபத்தில் அடிபட்டுக் கிடந்திருக்கிறார்.  விபத்து நிகழந்த இடத்துக்கும் வீட்டுக்கும் 50 மீட்டர் தூரம்.  விபத்து நடந்த இடத்திற்கு எதிரே மருத்துவமனை.  அந்தப் பகுதியிலேயே வாழ்கிற மனிதர்.  யாருக்கும் கவலையில்லை.  காலில் லாரியின் சக்கரங்கள் ஏறிவிட்டன. பல மணிநேரங்கள் அங்கேயே கிடந்ததில் ரத்தம் அதிகம் வெளியேறி இறந்துவிட்டராம்.  நமது தேசம், போலிஸ், மருத்துவர்கள், மனிதர்களைப் பற்றி இது ஏதேதோ சொல்ல முடியும்.  காயம்பட்டவர்களுக்கு உதவும் மனிதாபிமானம் அது எங்கே என்றுதான் தேடிக்கொண்டிருக்கிறது நமது சமூகமும் அரசு இயந்திரமும்.

            புலவர் தாத்தா சட்டை போட்டுப் பார்த்ததேயில்லை. ஒரு முறை அப்பாவிடம் கேட்டேன்.  ’அவர் மனைவி இளம்வயதில் இறந்துவிட்டார்.  அதற்குப் பிறகு அவர் சட்டை அணிவதில்லை. அவர் தவில் வாசிப்பதையும் நிறுத்திவிட்டார்’ என்றார் அப்பா. இப்படி ஒரு மனிதரை நான் பார்த்ததில்லை.  அவரது சகோதரி காருக்குறிச்சி அருணாசலம் அவர்களின் மனைவி.  அவரும் விரைவில் இறந்துவிட்டார் என்றே அறிகிறேன். என்றோ மறைந்துவிட்ட என் அருமைப் புலவர் தாத்தாவுக்கு அஞ்சலி.