Wednesday, March 30, 2016

நமக்குள் ஒளிந்திருக்கும் பூதம்

            நமக்குள் ஒளிந்திருக்கும் பூதம்
            எப்போதும் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது
           
            கண்ணாடி போல
            அது நம்மை நமக்கே
காட்டிக் கொடுத்து விடுகிறது

நாமே வடித்துக் கொண்ட முகத்தை
கிழித்தெறிய முடியாதது போல
அதை எறிந்து விட முடியாது

அவ்வப்போது புதைத்தாலும்
அறியாத நேரத்தில்
எழுந்து விஸ்வரூபம் எடுக்கிறது

நமது கீரீடங்களின் பின்புறத்தில்
ஒட்டியிருக்கும் ரத்தக் கறையைச்
சுட்டுகிறது

பொதுவெளியில் பட்ட
அவமானங்களின் பின்னிருக்கும்
நமது மேன்மையையும்
ஜொலிக்க வைக்கிறது

அரிதாரங்களைக் கழுவிவிட்டு
நம்மை நிர்வாணமாய்
நிறுத்துகிறது

அந்த
நமக்குள் ஒளிந்திருக்கும்
பூதம்.

            எப்போதும் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது

ஐந்தொகை

ஒளிதரும் விளக்கெனும் ஒன்றினை ஏற்றினாய்
            உவகையும் உணர்விலே ஒன்றிடும் வகைசொனாய்
களிதரும் அனுபவக் காற்றிலே பறக்கிறாய்
            கானகம் வைகயம் கடலிலும் மிதக்கிறாய்

பலவகைப் பறவைகள் பாடுதல் கேட்கிறாய்       
            பரவசம் அடைந்துன் பார்வையை விரிக்கிறாய்
நிலவதன் குளிரொளி நித்தமும் கலக்கிறாய்
            நீலவான் வெளியிலே நித்யமாய்க் கலக்கிறாய்

சங்கிலி பிணைத்தவுன் சரித்திரம் சிதைக்கிறாய்
            சகலமும் பூமியில் சரிசமம் என்கிறாய்
எங்கெலாம் துயர்களின் ஏக்கமிசைக்குதோ       
            எழுந்தது எண்திசை கேட்க ஒலிக்கிறாய்

இசையிலே மயங்கினாய் இலக்கியம் தேறினாய்
            எழில்மிகும் கலைகளின் இன்பதி லூறினாய்
தசைகளில் அறத்தின் தண்மையை ஏற்றினாய்
            தர்மத்தின் சங்கொலி எங்குமுழக்கினாய்

வானிலே கோள்களின் வனப்பை அளக்கிறாய்
            வைகயகம் புள்ளியாய் வலம்வரக் காண்கிறாய்
தேனிலும் எண்ணரும் உயிரிலும் செல்களின்
 திண்மையைக் கண்டுளே திகைக்கிறாய் மகிழ்கிறாய்

அழகதன் சிரிப்பினை எண்புறம் பார்க்கிறாய்
            ஆயுத வாதிகள் ஆணவம் நகைக்கிறாய்
பொழுதொரு வண்ணமாய்ப் புரள்கிற மானிடர்
            புன்னகை பூக்கவே உண்மைகள் சொல்லுவாய்

சொர்க்கமும் நரகமும் சொந்தமென் றாடுவாய்
            சோதிவான் வெளியிலே சூரியன் நடுவிலே
அர்த்தமில் அமைதியில் சூனியம் போற்றுவாய்
            ஆயிரம் கேள்விகள் அடிக்கடி எழுப்புவாய் 

உன்னைநான் கண்டனன் உயிருளே இருக்கிறாய்
            ஒவ்வொரு நாளுமென் உள்ளிலே வளர்கிறாய்
என்னவென் றின்றுனை எவர்க்கும் உரைப்பதோ?

            எத்தனை பேறனெ எனக்குளே மறைப்பதோ?

யாருக்கும் தேசமில்லை

மீன்பிடிக்க வீசுகின்ற வலைக ளுக்குள்
                சிக்குகிற மீன்களுக்கே தேச முண்டு
வானெங்கும் சென்றுவர விரும்பு கின்ற
                மானிடரைப் பீடிக்கும் தேசம் ஏது?

கிணற்றுக்குள் கிடக்கின்ற தவளை யெல்லாம்
                கிளப்புகிற ஓசையிலே தேச முண்டு
கணக்கில்லாப் புதுமைகளைக் கண்டு சொல்லும்
                கடுந்தவத்துப் பயணிகட்குத் தேசம் ஏது?

மானிடரின் முதுகினிலே குத்திக் குத்தி
                மழுங்கிவிட்ட முத்திரைதான் தேசப் பாசம்
ஞானியரின் பாதையிலே தேச மில்லை
                நல்லோரின் சிறகுகளில் தேச மில்லை

அம்மணமாய்த் திரிந்தோமே தேச முண்டா?
                அரைகுறையாய் உண்டோமே தேச முண்டா?
பொம்மைகளாய் நமைநடத்தும் ஆட்சி யாளர்
                போடுகிற உடைகளிலே தேச முண்டா?

சாதிவெறிக் கொலைகாரக் கும்ப லுக்கும்
                சகித்துக்கொண் டிருக்கின்ற சட்டத் தோர்க்கும்
ஆதிக்க வாதிகட்குத் தேசம் உண்டா?
                அலைந்துபொருள் தேடுபவர்க்குத் தேசம் உண்டா?

சோறென்று கேட்போர்க்குத் தண்ணீர் தந்தால்
                சொர்க்கம்போல் தேசம்வரும் அங்கே அங்கே
யாரென்றும் கேட்கவொரு ஆளில் லாத
                அனாதைகட்கு வீடுதந்தால் தேசம் அங்கே 


நீயாரோ நான்யாரோ என்று வாழும்
                நீசருக்கு வொருபோதும் தேச மில்லை
சேயாக நமைஎண்ணும் மனமி ருந்தால்
                சிந்தித்து நமைக்காத்தால் தேசம் உண்டு

ஓயாத கூச்சலிலே தேச மில்லை
                உதவவரும் கரங்களிலே தேச முண்டு
ஆயாமல் சொலும்சொல்லில் தேச மில்லை

                அனைவரையும் அணைத்துநின்றால் தேச முண்டு