Thursday, September 24, 2009

அழகு


முன்நாளில் ஆல்ஃபிரட் என்ற சிற்பி இருந்தான். விலை மதிப்புள்ள தங்கப் பதக்கம் வாங்கிய புகழ்பெற்று, இதாலிக்குச் செல்லும் உதவித்தொகை கிடைத்து அங்கு சென்று சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்தான். அப்போது இளைஞனாக இருந்தான். பத்தாண்டுகள் கழிந்தாலும் இப்போதும் இளைஞன்தான். திரும்பி வந்ததும் சின்னத் தீவு நகரமான ஜீலண்ட்’டை பார்க்கச் சென்றான். ஊரில் எல்லாருக்கும் அந்தப் புதியவன் யார் என்று தெரிந்திருந்தது. ஊரிலுள்ள மிகப் பெரிய பணக்காரர் அவனுக்காக ஒரு விருந்து வைத்தார். ஊரிலுள்ள முக்கியமானவர்கள் சொத்த்து உள்ளவர்கள் அனைவரும் அழைக்கப் பட்டிருந்தனர். ஊரில அது பெரிய விசேஷம். அதனால் அதுபற்றி எல்லோருக்கும் தெரிந்திருந்தது. தண்டோரா போட்டு அறிவிக்க வேண்டியிருக்கவில்லை. வேலைக்காரப் பையன்கள், ஏழைகளின் குழந்தைகள், ஏழைகள், வீட்டின் முன்னால் நின்று வெளிச்சம் வரும் ஜன்னல்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். காவல்காரன் தான் விருந்து கொடுப்பதாக கற்பனை செய்து கொள்ளலாம். தெருக்களில் அவ்வளவு கூட்டம் இருந்தது. சிற்பி ஆல்ஃபிரட் அங்கு இருந்ததால், ஒரே கொண்டாட்டமாக இருந்தது. வீட்டுக்குள்ளும் அப்படித்தான். அவன் பேசும் போதும் கதைகள் சொல்லும் போதும் மிக மகிழ்ச்சியுடன் பெரும் வியப்புடன் எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தனர். அதில் குறிப்பாக ஒரு கடற்படை அதிகாரியின் விதவை மற்ற அனைவரையும் விட மிக மரியாதையாக அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். மையை உறிஞ்சும் பிளாட்டிங் பேப்பர் போல ஆல்பிரட் சொல்வதனைத்தையும் உறிஞ்சினாள். இன்னும் பேச வேண்டுமென்று விரும்பினாள். ரொம்பவும் பாராட்டினாள். ஒன்றுமே தெரியாத அசடு.
“நான் ரோம் நகரைக் பார்த்தே ஆகவேண்டும். வெகு அழகான நகரமாக இருக்கவேண்டும் இல்லையென்றால் இவ்வளவு வெளிநாட்டினர் அங்கே போய்க்கொண்டிருக்க மாட்டார்கள். ரோம் நகரைக் கொஞ்சம் வர்ணியுங்களேன். அதன் வாசலின் நுழையும்போது எப்படி இருக்கும்?” என்று கேட்டாள்.
“என்னால் சரியாக வர்ணிக்க முடியாது. ஆனால் நீங்கள் உள்ளே நுழையும்போது பெரிய திறந்தவெளியின் நடுவில் ஆயிரம் ஆண்டு பழமையான சதுரமான ஞாபகச்சின்னம் இருக்கும்.”
“இசைக்கலைஞனா?” வியந்து கேட்டாள் அந்த மாது. அவள் அதுவரை ஞாபகச் சின்னம் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. விருந்தினர்களில் பலருக்கு சிரிப்பை அடக்குவது கடினமாக இருந்தது. சிற்பியும் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளக் கஷ்டப்பட்டான். அவன் உதட்டிலிருந்த புன்னகை மறைந்து விட்டது.
அப்போது கேட்பதில் ஆர்வமுள்ள அந்தப்பெண்ணின் அருகில் கருநீலக் கண்கள் இருப்பதைப் பார்த்தான். அவளைப் போன்ற பெண்ணைப் பெற்றவள் ஒன்றும் தெரியாதவளாக இருக்க முடியாது. அம்மா கேள்விகளின் ஊற்று. மகள் ஒன்றும் பேசாமல் கேட்டுக் கொண்டேஇருந்தாள். நீரூற்றின் அருகில் இருக்கும் பெண் பொம்மை போல் இருந்தாள். என்ன அழகு? சிற்பி படிக்க விரும்பும் சிற்பம். பேசுவதற்கல்ல. அவள் பேசவே இல்லை,
“போப் ஆண்டவருக்கு பெரிய குடும்பமா?” என்று கேட்டாள் அந்த அம்மா.
வேண்டுமென்றே வேறோரு கேள்விக்குப் பதில் சொல்வதுபோல் அவன் பதில் சொன்னான் “இல்லை. அவர் மிகப்பெரிய குடும்பத்தில் பிறந்தவர்”
“நான் அதைக் கேட்கவில்லை அவருக்கு மனைவி மக்கள் உண்டா?” அவள் விடவில்லை.
“போப் ஆண்டவர் திருமணம் செய்துகொள்ளமுடியாது”
“அது சரியில்லையே”
அதைவிட கொஞ்சம் புத்தியோடு கேள்வி கேட்டிருக்கலாம். அவள் நினைத்ததைக் கேட்க முடியாவிட்டால் மகள் அவள் தோளில் சாய்ந்துகொண்டு, அழகாக, சோகமான புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருப்பாளா?. ஆல்பிரட் மீண்டும் இத்தாலி பற்றிப், அதன் வண்ணமயமான காட்சிகள் பற்றிப் பேசினான். செந்நிற மலைகள், நீல நிற மத்தியதரைக் கடல், இளம் பெண்ணின் கண்களின் நீல நிறத்தை வெல்லமுடியாத தெற்குவானின் அடர்நீலநிறம்; இதைச் சொல்லும் போது அவன் குரலில் ஒரு மாற்றம் இருந்தது. அதை புரிந்து கொள்ள வேண்டிய அவளோ, அது புரியாமலிருந்தாள். அது கூட ஓரழகுதான்.
“அழகிய இத்தாலி” விருந்தினர்கள் வியந்தனர்.
“அங்கே செல்லவேண்டும்” என்றனர் பலர்
“என்ன அழகு அங்கே” என்று எல்லொரும் ஆமோதித்தனர்.
ஒரு வேளை ஒரு லட்சம் டாலர் லாட்டரி பரிசு எனக்கு விழலாம். அப்போது, நான், என் மகள், நீங்கள் மூவரும் பயணம் போகலாம். நீங்கள் தான் வழிகாட்டியாக இருக்கவேண்டும். சில நண்பர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்”. அவள் தலை அசைத்ததைப் பார்த்து ஒவ்வொருவரும் தங்களைத்தான் கூட அழைக்கிறாள் என்று நினைத்தனர். “கண்டிப்பாகப் போகவேண்டும் கொள்ளைக்காரர்கள் இருக்கும் இடங்களுக்குச் செல்லக் கூடாது. ரோமுக்கு மட்டும் போவோம். பொது இடங்களில் தான் பாதுகாப்பு”.
மகள் மெலிதாகப் புன்னகைத்தாள். அந்தப் பெருமூச்சில் எவ்வளவு இருக்கிறது? அல்லது எவ்வளவு அர்த்தம் அதில் காண்பது? இளைஞர்கள் அதில் பெரும் அர்த்தங்கள் கண்டனர். அவனுக்காக ஒளிவிடும் அந்த நீலநிறக் கண்களில், பல புதையல்கள், இதயத்திலும், மனதிலும் ஒளிந்திருக்கும் புதையல்கள், ரோமின் பெருமைகளைவிட நிறைவுதரும். அன்றிரவில் விருந்து முடிந்து போகும்போது அவன் அவளிடம் தன்னை இழந்துவிட்டிருந்தான். அவன் அடிக்கடி செல்லும் இடமாக ஆகிவிட்டது கடற்படைத்தளபதியின் விதவை வீடு. அவனும் விதவையும் பேசிக் கொண்டிருந்தாலும், அவளுக்காக அவன் அங்கு போகவில்லை என்பது புரிந்துவிட்டது. மகளைப் பார்க்கத்தான் வந்தான். அவளைக் கேலா என்று அழைத்தார்கள். அவளுடைய பெயர் கரன் மலேனா. இரண்டு பெயர்கள் சுருங்கி ஒரு பெயராகி விட்டது. அவள் ரொம்ப அழகு. ஆனால் கொஞ்சம் மக்குஎன்று சொன்னார்கள். காலையில் நேரம் கழித்தே எழுந்திருப்பாள்.

அவளுக்குப் பழக்கமாகிவிட்டது. அவள் மிக அழகு. அதனால் சீக்கிரம் களைத்துவிடுகிறாள். வெகு நேரம்வரை தூங்குகிறாள் ஆனால் கண்கள் அதனால்தான் மிகவும் தெளிவாக இருக்கின்றன
அந்தக் கண்களின் ஆழத்தில் எவ்வளவு சக்தி மறைந்துகிடக்கிறது. அமைதியாக இருக்கும் நீரில் ஆழம் அதிகம் என்ற பழமொழியில் உண்மையிருப்பதை அந்த இளைஞன் கண்டுகொண்டான். அவன் தன்னுடைய சாகஸங்களைச் சொன்னான். அவர்கள் சந்தித்த முதல் நாளில் கேட்டமாதிரியே அம்மா எளிய கேள்விகளை கேட்க விரும்பினாள். அவன எதைப் பற்றிப் பேசினாலும் கேட்பது இன்பமாக இருந்தது. நேபிள்ஸ் நகரின் வண்ணத் தட்டுகளைக் காட்டினான். வெசூவியஸ் மலைக்கு போனதைப் பற்றியும் அந்த எரிமலை தீயை உமிழ்ந்தது பற்றியும் பேசினான். கடற்படை அதிகாரியின் விதவை அவை பற்றி முன்னர் கேள்விப்பட்டதே இல்லை.
“அடக் கடவுளே அப்ப எரியும் மலை. அதற்குப் பக்கத்தில் வாழும் மக்களுக்கு ஆபத்து இல்லையா?” என்று ஆச்சரியத்தில் கேட்டாள்.
ஹெர்குலினியம் பாம்பீ பெரிய நகரங்கள் முழுதாக அழிந்துபோயிருக்கின்றன
பாவம் அந்த மக்கள். நீங்கள் உங்கள் கண்களால் அதையெல்லாம் பார்த்தீர்களா?”
“இந்தப் படங்களில் இருப்பதைப் போல் எரிமலை பொங்குவதைப் பார்த்ததில்லை.
நான் பார்த்த எரிமலை பொங்குவதைப் படமாக வரைந்திருக்கிறேன் அதைக் காட்டுகிறேன்.
பென்சிலால் வரைந்த படத்தை மேஜையில் வைத்தான். வண்ணப் படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த்த அந்த அம்மா, வெளிறிய பென்சில் படத்தைப்பார்த்து இன்னும் கலக்கமடைந்தாள்”அது வெள்ளை தீயை வீசி எறிவதைப பார்த்தீர்களா?”

ஒரு நொடி ஆல்ஃபிரட்டுக்கு, அந்த அம்மா மீதிருந்த மதிப்பு அதிர்ச்சியில் உறைந்து, குறைந்தது. ஆனால், கேலாவைச் சூழ்ந்திருந்த ஒளியில் தடுமாறிய அவன் அந்த அம்மாவுக்கு வண்ணங்களைப் பற்றித் தெரியாதது ஒன்றும் பெரிதல்ல என்று தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டான். ஏனெனில் அது ஒரு பெரிய விஷயமல்ல. எல்லாவற்றையும் விட மதிப்புள்ள சொத்து கேலாவின் அம்மாவிடம் இருந்தது. அது கேலா’தான்.

ஆல்ஃபிரட்டுக்கும் கேலாவுக்கும் திருமணம் நிச்சயமானது. இயல்புதான். திருமணம் அந்தச் சின்ன நகரத்தின் செய்தித் தாள்களில் அறிவிக்கப்பட்டது. நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அதில் வந்த போட்டோவை அனுப்புவதற்காக, அம்மா முப்பது பிரதிகள் வாங்கினாள். திருமணம் நிச்சயமானது குறித்து, மணமக்களும், அம்மாவும் மகிழ்ந்தனர். தோர்வால்சென்னுடன்* தனக்குத் தொடர்பு ஏற்பட்டதுபோல் தோன்றுவதாக சொன்னாள்.

“நீ தோர்வால்சென்னின் உண்மையான வாரிசு’ என்று அம்மா சொன்னாள். இம்முறை அவள் புத்திசாலித்தனமாக பேசிவிட்டாள் என்று தோன்றியது. கேலா அமைதியாக இருந்தாள். அவள் கண்கள் ஒளிர்ந்தன; உதடுகள் புன்னகைத்தன; ஒவ்வொரு அசைவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது; அவள் அழகாக இருந்தாள். அதையே மீண்டும் மீண்டும் சொல்ல முடியாது. கேலாவையும், அம்மாவையும் போல் நெஞ்சு வரையிலான சிற்பம் செதுக்க முடிவு செயதான். அவன் சொன்னது மாதிரி இருவரும் உட்கார்ந்திருந்தனர்.அவன் மிருதுவான களிமண்ணை விரல்களால் வடிவமைப்பதைப் பார்த்தனர்.
“நீ எங்களுக்காகத்தான் இதுமாதிரி சாதாரண வேலையை வேலைக்காரர்களிடம் தராமல் நீயே செய்கிறாய் என்று நினைக்கிறேன்”
“நானே வடிவமைப்பது மிகவும் அவசியம்”
ஓ நீ எப்போதுமே ரொம்பப் பணிவு.” அம்மா சொன்னாள்; கேலா அமைதியாக களிமண்ணாக இருந்த அவன் கைகளை அழுத்தினாள்.
அவன் இருவருக்கும் இயற்கையின் அழகைப் பற்றிச் சொன்னான். படைப்பில் உயிரினங்கள் உயிரற்ற பொருட்களைவிட மேன்மையானவை என்பதையும், பொருட்களைவிட செடிகொடிகள், செடிகொடிகளை விட மிருகங்கள் அனைத்துக்கும் மேலாக மனிதன் என்பதை குறிப்பிட்டான். மனதின் அழகை எப்படி வெளியே காட்டமுடியும் என்று காட்ட முயன்றான். அழகு வெளிப்படும் விதத்தைப் புரிந்துகொண்டு சிற்பி தன் சிற்பதில் காட்டுகிறான் என்றும் சொன்னான். கேலா அமைதியாக ஆனால் அவன் சொன்னது சரியென்று தலையை அசைத்துக் கொண்டு இருந்தாள். மாமியார் சொன்னாள் “நீ சொன்னது ஒன்றும் புரியவில்லை. ஆனால் கேட்டுக் கொண்டே இருந்தேன். நீ சொன்னது கேட்டுத் தலை சுற்றுகிறது. என்னால் முடிந்தவரை புரிந்து கொள்ள முயன்றேன்”.
கேலாவின் அழகில் ஆல்ஃபிரட் மயங்கிவிட்டான். அது ஆன்மாவில் நிறைந்து அவனை அடிமையாக்கி விட்டது. கேலாவின் உடம்பிலிருந்து அழகு ஒளிவிட்டது. கண்களில் பளபளத்தது. இதழ்களின் ஓரத்தில் மறைந்திருந்தது. விரல்களின் ஒவ்வொரு அசைவிலும் கலந்திருந்தது. ஆல்ஃபிரட் என்ற சிற்பி அதைக் கண்டான். அவளையே நினைத்தான், அவளிடமே பேசினான், இருவரும் ஒன்றாகிவிட்டனர். அதனால் இப்படியும் சொல்லலாம். அவள் நிறையப் பேசினாள், ஏனெனில் அவன் எப்போதும் அவளிடமே பேசினான், அவர்கள் இருவரும் ஒன்றுதான். நிச்சயதார்த்தம், திருமணம், மணப்பெண்ணின் தோழியர், பரிசுகள், எல்லாம் திருமண உரையில் குறிப்பிடப்பட்டது.
மாமியார் தோர்வால்சென்னின் மார்பளவுச் சிலையை மேஜையின் ஒரு ஓரத்தில்வைத்தாள். அவன் விருந்தினனாக இருக்க வேண்டும் என்பது அவள் விருப்பம். பாடல்கள் பாடினர், மகிழ்ச்சிக் கூச்சலிட்டனர். கோலாகலத்திருமணமாக இருந்தது. அவர்கள் அழகான ஜோடி. “பிக்மலியன் தனது கலாடியை காதலித்தான் என்றிருந்தது ஒரு பாடல்.

“ஓ அது உங்கள் புராணக் கதைகளில் ஒன்று”, என்றாள் மாமியார்.
அடுத்தநாள் புதிய தம்பதிகள் இருவரும் கோபன்ஹாகன் நகருக்குப் புறப்பட்டனர். அங்குதான் அவர்கள் குடியிருக்கவேண்டும். வீட்டில் கடமுட வேலைகள்- வீட்டு வேலைகளை மாமியார் அவ்வாறுதான் குறிப்பிட்டாள்- செய்வதற்காக மாமியாரும் உடன் சென்றாள். அங்கே எல்லாம் புதியதாக பளிச்சிட்டன. கேலா கொலுவிலிருக்கும் பொம்மைபோல் இருந்தாள். மூவரும் ஓரிடத்தில் அமர்ந்தனர். ஆல்ஃபிரட், பழமொழியில் சொல்வது போல வாத்துக்களின் நடுவில் அன்னம் போலிருந்தான். மாய உருவம் அவனை மயக்கிவிட்டிருந்தது. உள்ளிருப்பது என்னவென்று கேட்க விருப்பமின்றி முடியிருந்த பெட்டியைப் பார்த்தான். அப்படிச் செய்வது திருமண வாழ்வில் பெரும் துன்பத்தைத்தரும். பெட்டி அடிபட்டிருக்கக் கூடும், பூச்சு உதிர்ந்து விடலாம். அதை வாங்கியவன் வருத்தப்படலாம்.
பெரிய விருந்தின்போது ஒரு பட்டன் பிய்ந்தபின் அதை சரிபண்ண ஒன்றும் செய்ய முடியாதிருந்தால்; அதைவிட மோசமான நிலை. உங்கள் மனைவியும், மாமியாரும் முட்டாள்த்தனமாக பேசிக்கொண்டிருக்க, அவர்களின் முட்டாள்த்தனத்தின் விளைவை உங்களுடைய புத்திசாலித்தனமான பேச்சால் சரிக்கட்டிவிட முடியாது.
இளம் தம்பதியர் அவ்வப்போது கைகோர்த்து உட்கார்ந்திருந்தனர். அவன் பேசுவான். அவள் எப்போதாவது இசைபோன்ற தன் குரலில் ஒரு வார்த்தை, மணியொலிபோலச் சொல்லுவாள். சோஃபி என்ற அவள் தோழி வந்தது மனசுக்கு நல்லதாகப் போயிற்று. சோஃபி ஒன்றும் அழகல்ல. ஆனால், உடல் அமைப்பில் எந்தக் குறையும் இல்லை. அவள் கொஞ்சம் கோணல்புத்திக்காரி என்று கேலா சொல்லுவாள். ரொம்ப நெருங்கியவர்கள் தவிர யார் கண்ணிலும் அது படாது.
அவள் புத்திசாலிப் பெண். இந்த வீட்டில் ஒரு ஆபத்தான பெண்ணாக ஆகிவிடக்கூடிய நிலை இருந்தது அவளுக்குப் மனதில் படவில்லை. அவள் வந்தது அந்தப் பொம்மைகளின் வீட்டில் புதிய சூழலை ஏற்படுத்தியது. அந்த மாற்றம் எல்லோருக்கும் தேவைதான். அது எல்லோருக்கும் புரிந்தது. அதனால் தம்பதிகளும் அம்மாவும் இத்தாலிக்குச் சென்றனர்.
“நமது வீட்டின் நான்கு சுவர்களுக்குள் வந்ததற்கு கடவுளுக்கு நன்றி” ஒரு வருடத்திற்குப் பின் வீடு திரும்பிய அம்மாவும் மகளும் சொன்னார்கள்.
“பயணம் செய்வது உண்மையான மகிழ்ச்சியைத் தரவில்லை” அம்மா தொடர்ந்தாள். “உண்மையைச் சொல்வதானால், அது மிகவும் களைப்பைத்தருகிறது; அப்படிச் சொல்வதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். என் குழந்தைகள் என்னுடன் இருந்தாலும் சீக்கிரத்தில் நான் களைத்துவிட்டேன். அது மட்டுமல்ல ரொம்பச் செலவாகிறது இந்த வேலைக்கு, ரொம்ப. எல்லா கவின்கலைக்கூடங்களுக்கும் செல்லவேண்டியிருக்கிறது. ஏகப்பட்ட விஷயங்களுக்குப் பின்னால் ஓடவேண்டியிருக்கிறது. செய்தே ஆகவேண்டிய வேலைகள். இல்லை என்றால் மானம் போய்விடும். திரும்பி வந்ததும் எல்லாவற்றையும் பார்த்துவிட்டீர்களா என்று கேட்டுவிட்டு, இருப்பதிலேயே முக்கியமானதைப் பார்க்காமல் வந்துவிட்டீர்களே என்று சொல்வார்கள். மாறி மாறி மடொன்னாக்களையே பார்த்துக் களைத்துவிட்டேன். நானே மடொன்னாவாகி விட்டேனோ என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன்”.
“அப்புறம், வாழ்க்கை, அம்மா” கேலா சொன்னாள்.
“ஆமா, நல்ல கறி சூப் கூட கிடையாது. சமையல் ரொம்ப மோசம்”
இந்தப் பயணத்திலும் கேலா களைத்தாள். எப்போதுமே அவள் களைப்படைந்து காணப்பட்டாள். அதுதான் ரொம்ப மோசம். சோஃபிக்குச் சொல்லிவிட்டார்கள். அவர்களுடன் அவள் தங்கிக்கொண்டாள். அவள் இருந்தது ரொம்ப வசதியாக இருந்தது. வசதி குறைந்த அவளிடம், எதிர்பார்க்க முடியாத குணங்கள் அவளிடம் இருந்தன. மாமியார் ஒத்துக் கொண்டாள், அவள் புத்திசாலியான பெண் மட்டுமல்ல. நிறைய விஷயங்களைத்தெரிந்து வைத்திருந்தாள். கெட்டிக்காரி. கருணை உள்ளம் கொண்டவள்; நம்பிக்கைக்குரியவள். கேலாவுக்கு உடம்பு சரியில்லாமல் வெளிறிக் கிடந்த நாட்களில் இதெல்லாம் வெளிப்பட்டன. மேல்மூடிதான் எல்லாம் என்னும் போது, அது நல்லதாக இருக்க வேண்டுமல்லவா? அல்லது எல்லாம் முடிந்துவிடும். அப்படித்தான் மேல்மூடியின் கதை முடிந்துவிட்டது. கேலா இறந்துவிட்டாள்.
“அவள் ரொம்ப அழகு” அம்மா சொன்னாள்; “புராதன அழகு என்று சொல்லும் அனைத்தையும் விட வேறு மாதிரியான அழகு, ஏனெனில் புராதனப் பொருட்கள் ரொம்ப சேதமடைந்திருக்கும். எழில் மிகவும் கச்சிதமாக இருக்கவேண்டும். அவள் கச்சிதமான அழகு.
ஆல்ஃபிரட் அழுதான். அம்மாவும் அழுதாள். துக்கநாள் அனுசரித்தனர். அம்மாவுக்கு கறுப்பு உடை நன்றாக இருந்தது. ரொம்ப நாள் அதை அவள் அணிந்திருந்தாள். அவள் இன்னொரு துயரத்தையும் அனுபவிக்க வேண்டியிருந்தது. ஆல்ஃபிரட் இன்னொரு திருமணம் செய்துகொண்டான். அதுவும் பார்க்க ஒன்றுமில்லாத சோஃபியை. “ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்கே சென்றுவிட்டான் ரொம்ப அழகிலிருந்து, ரொம்ப கோரத்திற்குச் சென்றுவிட்டான். முதல் மனைவியை மறந்துவிட்டான். ஆண்கள் நிதானமற்றவர்கள். என் கணவர் மிக வித்தியாசமானவர். ஆனால் எனக்கு முன்னால் போய்ச்சேர்ந்துவிட்டார்.
“பிக்மாலியன் கலேட்டியைக் காதலித்தான் என்று என் திருமணத்தில் பாடினார்கள்”. ஆல்ஃபிரட் தொடர்ந்தான். முன்னால், என் கைகளில் உயிர்பெற்று எழுந்த, அழகிய சிலையைக் காதலித்தேன். ஒரு கனிந்த இதயத்தை, வானிலிருந்து வந்த பரிசை, என்னைப் புரிந்து கொண்டு நம்மை உன்னத நிலைக்கு உயர்த்தும் ஒரு தேவதையை நான் இன்னும் காணவில்லை, அடையவில்லை. சோஃபி, நீ வந்தாய், தேவைக்கு அதிகமாகவே நீ அழகாக இருந்தாலும், வெளிப்படையான பேரழகின் மேன்மையுடன் அல்ல. முக்கிய விஷயம் மீதமிருக்கிறது. சிற்பியின் வேலை மண்ணாலும் தூசியாலும் ஆனது என்று கற்பிக்க வந்தாய். அந்த உருவம் அழிந்துவிடும். நாம் மனதின் ஆத்மாவின் சாரமான உன்னதத்தை அடைய முயலவேண்டும். பாவம் கேலா. போகும் வழியில் ஏற்பட்ட சந்திப்புப் போன்றது எங்கள் வாழ்வு. இன்னொரு உலகில் நாங்கள் மனங்கள் ஒன்றாகி ஒருவரை ஒருவர் அறியும் போது, நாங்கள் பழகியவர்களாகத்தான் இருப்போம்.
“இது மிக அன்புள்ள பேச்சல்ல” சோஃபி தொடர்ந்தாள் “கிறிஸ்தவனுடைய பேச்சுமல்ல. எதிர்காலத்தில் திருமணங்களோ, திருமணம் செய்துகொடுப்பதோ இல்லாத காலத்தில், நீ சொன்னமாதிரி, இதயங்கள் அன்பினால் ஈர்க்கப்படும். எல்லாம் தானாக அழகாக பரிணமிக்கும். வளர்ந்து இன்னும் மேலான நிலைக்கு உயரும். என்னைவிட அதிகமாக உன் ஆன்மாவுடன், இசைவுறும் அளவுக்கு அவளுடைய ஆன்மா முழுமை பெறும். அப்போது நீ முதலில் சொன்னது போல காதலில் ரொம்ப வியந்து சொல்லுவாய் “அழகு என்ன அழகு”.

மொழிபெயர்ப்பு

No comments:

Post a Comment