Friday, October 02, 2009

மத்திய காலத் தென்னிந்தியாவில் நில உடைமையும் சமூகப் பிரிவினைகளும்

மத்தியகாலத் தென்னிந்தியாவில் சமூகம் முரண்பாடுகள் இல்லாமல், சுமூகமான உறவுகள் உள்ள சமூகமாக இருந்ததாக பழைய சரித்திர ஆசிரியர்கள் கருதி வந்துள்ளனர். சமத்துவத்தை விட வர்க்கங்களின் ஒத்திசைவை முன்வைத்து அரசியல் உணர்வுகள் அக்காலத்தில் இருந்ததாகவும், ஒரு வர்க்கத்தின்மீது இன்னொரு வர்க்கத்தின் கொடுமையான் அடக்குமுறை இருந்ததில்லை என்றும் அச்சமூகத்தை நீல கண்ட சாஸ்திரி பெருமைப்படுத்துகிறார். இதுபோன்று சொல்வதற்கும், மறுபுறம், தன் எழுத்துக்களில் அவர் திரட்டிய வர்க்க வேறுபாடுகள் குறித்த தகவல்களுக்கும் உள்ள முரண்பாடுகளை பல நேரங்களில் அவர் புரிந்து கொள்ளவில்லை. அப்பாத்துரை, மீனாட்சி, மகாலிங்கம் போன்றோரின் ஆய்வுகளிலும் இதில் எவ்வித மாற்றமும் இல்லை. கி.பி. 1000 லிருந்து 1500 வரையிலான காலத்தின் தென்னிந்தியாவின் பொருளாதார நிலையை ஆய்ந்த அப்பாத்துரையின் நூல்களிலும் வர்க்கப் பிரிவினைகள் குறித்து ஏதாவது இருக்கும் என்ற இயல்பான எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிகிறது.

நீலகண்ட சாஸ்திரி போன்றோரால் செய்யப்பப்ட்ட வரலாற்றாய்வுகளில் இருந்த தவறுகளைச் சீர்படுத்தும் நோக்கத்துடன் சமீபத்தில் வந்த அமெரிக்க ஆய்வாளர்களாலும் நிலைமை மாறவில்லை. பல்லவர் காலத்திலும் அதைத்தொடர்ந்த சோழர்காலத்திலும் சமூகம் ஏராளமான வேளாண் குடியிருப்புகளாக இருந்ததாக மத்திய காலத் தென்னிந்தியாவில் அரசுகளை சமூகத்தை ஆய்ந்த பர்ட்டன் ஸ்டெயின் குறிப்பிடுகிறார். நீலகண்ட சாஸ்திரியின், அவரது சீடர்களின் வரலாற்றாய்வியலின் மீது தொடுத்த கருத்துத் தாக்குதலின் நிறைவாகவும், தொடர்ச்சியாகவும் செய்யப்பட்ட இவ்வாய்வுகளிலும் வளர்ந்த வேளாண் சமூகத்தில் முறைப்படுத்தப்பட்ட சமூக உறவுகள் குறித்த விபரங்களை எதிர்பார்ப்போம். ஆனால் பண்ணையார்கள் இல்லாத உழவுக்குடிகள் பற்றித்தான் இந்நூல் எழுதப் பட்டிருக்கிறது. ஸ்டேயின் குறிப்பிட்டதுபோல கருத்து ரீதியாகவும் வரலாற்று ரீதியிலும் இந்நூல் குறையுள்ளது. ‘பண்ணையார் இல்லாத குடிகள்’ பற்றிய தன் கருத்தை அடைய, வேளாண் குடிகளிடம் காணப்பட்ட உயர்வு தாழ்வுகள் பற்றி தனக்குக் கிடைத்த பல தகவல்களை, ஸ்டெயின், வெட்கமில்லாமல், கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். பிராமணர்களுக்கும் விவசாயக்குடிகளுக்கும் இருந்த உறவுகளைச் சித்தரிக்கும்போது பெருவாரியான குடிகள் பற்றிய விபரங்களை மறைத்துவிடுகிறார். சமூகத்தில் வேறுபாடுகள் இல்லை என்ற கருத்து, கோணலான கொள்கையிலிருந்தும், கிடைக்கும் தகவல்களை கண்டுகொள்ளாமல் விடுவதிலிருந்தும் எழுகிறது.

ஆனால், நொபொரு கராஷிமொ, எம்.ஜி.எஸ் நாராயணன், ஒய். சுப்பராயலு, டி.என். ஜா, ஆர். சம்பகலக்ஷ்மி, ராஜன் குருக்கள் போன்றோரின் மூலம் சமீப காலங்களில் வளர்ச்சி ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. இவர்கள் ஒவ்வொருவரும் ஒரே பார்வையைக் கொண்டவர்கள் என்றோ, ஒரே கருத்துக்கள் கொண்டவர்கள் என்றோ சொல்லவில்லை. மாறாக, இவர்கள் ஒவ்வொருவரது கொள்கைகளும் ஆய்வு முறைகளும் வெவ்வேறானவை. ஒவ்வொருவரும் அடிப்படைத் தகவுகளை அறிந்தவர்கள். வரலாற்றிப்பற்றிய தனித் தத்துவப்பார்வை கொண்டவர்கள். இது தென்னிந்திய இந்திய வரலாற்றியலில் மகிழ்ச்சிதரும் விஷயமாகும்.



பல்லவர், பாண்டியர் காலத்து தாமிரப் பட்டயங்களில் பலவிதமான உரிமைகள் பற்றி பதிவுகள் உள்ளன. சமூகத்திலுள்ள பல்வேறு பிரிவினருக்கும் குறிப்பிட்ட நிலத்தின் மீது கிடைக்கும் உரிமைக்கு ஏற்றாற் போல் சமூகத்தில் அவர்களது இடம் இருந்தது. பிராமணர்களுக்கு நிலம் தான்மளிக்கப்பட்டதையே பல்லவ காலத்தின் தாமிர பட்டயங்கள் பதிவு செய்கின்றன. நிலத்தின் மீது கூடுதல் உரிமையை கொடுப்பதும் அதைப் பெயர்மாற்றம் செய்வதும் பற்றியதாக இருந்தன. இது சில பல்லவர் பட்டயங்களில் ‘குடி நீக்கி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னர் இருந்த குடிகளை நீக்குவது என்பது தான் இதன் பொருள். இதே கருத்து, சில பல்லவகாலப் பதிவுகளில் ‘முன் பெற்றாரை நீக்கி’ என்றும் குறிப்பிடப்படுகிறது. நிலத்தைத் தானம் பெற்றவர்கள் முன்னால் இருந்தவர்களை நீக்கிவிட்டு தங்களுக்குப் பிடித்த புதியவர்களை குடியமர்த்தும் சுதந்திரம் இருந்ததைக் குறிப்பிடுகின்றன. இந்தப் பதப் பிரயோகங்கள் பழைய குடிகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு விரட்டப் பட்டதைக் குறிப்பிடவில்லை என்று ஆர். திருமலை எழுதுகிறார். ஏற்கனவே இருந்த நிலத்தின் மீதான் உரிமையை இழப்பதை இது குறிக்கலாம் என்கிறார் அவர். எல்.பி. அலயேவ், குடிநீக்கி என்பதை, நிலம் கைமாறும் போது, குடிகள் அத்துடன் சேர்ந்து மாற்றிக் கொள்வது கிடையாது என்பதை குறிக்கிறது என்பார். விரல்விட்டு எண்ணக் கூடிய பதிவுகளே முன்னர் இருந்த குடிகள் பற்றிப் பேசுகின்றன. பெரும் பான்மையான பல்லவர்காலப் பதிவுகள் முன்னரிருந்த குடிகள் பற்றிப் பேசுவதே இல்லை. அவர்கள் இடத்தை விட்டுத் துரத்தப் பட்டனரா அல்லது உரிமைகள் மட்டும் பறிக்கப் பட்டனவா அல்லது அவர்களை இந்த (உரிமை மாற்றம்) தொடவில்லையா என்பது தனி விஷயம்.

kesavan veluthat

மொழிபெயர்ப்பு.வே.ராஜகோபால்

No comments:

Post a Comment