Monday, October 05, 2009

தமிழ்நாட்டு இசை

தமிழ் இசை என்றால் எதைக் குறிக்கிறது?. தமிழ் நாட்டில் பயிலப்படுவதால் அது தமிழ் இசையா? தமிழ் மொழியில் பாடல்கள் பாடுவதால் தமிழ் இசையா? தமிழர்களால் பாடப்படுவதால் தமிழ் இசையா? கருநாடக இசை தான் தமிழ் இசையா?
தமிழ்நாட்டில் இசைக்கப்படும் இசைதான் கேரளாவிலும் இசைக்கப் படுகிறது. ஆந்திராவிலும், கர்னாடகாவிலும் பல பகுதிகளில் இதே இசை ரசிக்கப்படுகிறது, பயிலப்படுகிறது.
சாதாரண மனிதன், இசையை முறையாகக் கல்லாதவன், இசையைக் கேட்கும்போது ரசிக்க முடிகிறது. தமிழ்நாட்டு இசையோ, வடநாட்டு இசையோ அல்லது மேல்நாட்டு இசையோ எதுவானாலும் காதுக்கு இனிமையாக இருந்தால், இசையைக் கேட்டும் காதுகள் இருந்தால், கேட்டு ரசிக்கலாம். எந்த இசையையும்.
இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், தமிழ்நாட்டின் இசையின் வெளிப்பாட்டுக்குத் தனித்துவம் உண்டு என்று ஒப்புக்கொண்டாலும், அது ஏழு சுரங்களை அடுக்கும் வகையில் தான் இருக்கிறதே தவிர, கருநாடக இசை எழுப்பும் உணர்வுகளை, உணர்ச்சிகளை வேறு எந்த இசையும் எழுப்பும் வல்லமை கொண்டது என்றே கருதுகிறேன். ஒவ்வொரு இசைமுறைக்கும் அதனதன் வெளிப்பாடுகளில் தனித்தன்மைகள் இருக்கலாம். ஆனால் மனதை உருக வைப்பதில், மகிழ்ச்சியை கொந்தளிக்கவிடுவதில் எந்த வகையான இசையும் குறைந்ததல்ல.
கருநாடக இசையை பக்தி என்னும் சிமிழுக்குள் அடைத்துவிட்டார்கள். அது தங்கச் சிமிழே ஆன போதிலும், இசையின் பாடுபொருள் அல்லது களம் இன்னும் விரிவடைய வேண்டும். மீண்டும் மீண்டும் ஒரேமாதிரியான பாடல்கள் பாடப்படுகின்றன. அல்லது கருவி இசையாக இசைக்கப்படுகின்றன. இதற்கு மேல் இல்லை என்ற பாவனையை இவை தோற்றுவிக்கின்றன. ஆனால் எதுவும் ஒரு குறிப்பிட்ட நிலையில், மேலே செல்லாமல் நின்றால் அது குறைந்தபட்சம், உள்ளடக்கத்திலேனும் மரணமடைந்துவிடுகிறது. மெல்லத்தமிழினிச் சாகும் என்றது கருநாடக இசைக்கும் பொருந்தும்.
கருநாடக இசை எங்கே தோல்வி அடைகிறதோ அங்கே மெல்லிசையும், திரையிசையும் வெற்றி பெறுகின்றன. இறைவனை இறைஞ்சுவதோடு கருநாடக இசை பெரும்பாலும் நிறைவு பெற்றுவிட, திரையிசை, புதிய களங்களைச் சந்தித்து வந்தது. வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் அது இசையின் உள்ளடக்கமாக்கியதால் மனிதனின் ஒவ்வொரு உணர்வையும் பதிவு செய்ததால் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. பாடலின் அடையாளமின்றித் திரையிசையை தனித்துக் கேட்க முடியாது. இப்போது அதுவும் மெல்ல மெல்ல மாறிக் கொண்டிருக்கிறது. இசையின் ஒலியளவு பாடல்களில் அதிகரித்து விட்டது. குரல்களில் தனித்தன்மை, அல்லது இசையில் தனித்தன்மை குறைந்து வருகிறது. இசை தமிழ்நாட்டுக்கானதாக இல்லை. உலக இசையாகிறது என்று சொல்லி நம்மை நாம் ஏமாற்றிக் கொள்ளலாம். ஆனால், உலகில் பல்வேறு பகுதிகளில் வழங்கிவரும் இசை, தமிழ் வார்த்தைகளின் மாலை போட்டு வலம் வருகிறது. இதிலெல்லாம், தமிழ்நாடோ, தமிழ் இசையோ இல்லை.
இந்த இடத்தில் கருநாடக இசை மீண்டும் தன் அடையாளங்களுடன் ஒரு மரபாக நிலைத்து நிற்கிறது. அதில் தமிழ் வாசனை யில்லையென்றாலும், தென்னிந்திய வாசனை வருகிறது. பலபொருள்களை, வாழ்வின் பல சிக்கல்களைப் பற்றிய உணர்வற்று தன்னேரில்லாத் தலைவனான
இறைவனை விட்டு வெளிவரத் தயங்குகிறது.
இசையின் அளவற்ற, சாத்தியங்களை எட்ட முயலாமல், ஒரேவகையில் மாட்டிக் கொண்டு பிதுங்கிக் கொண்டிருக்கிறது. விடிவு விரைவில் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

No comments:

Post a Comment