Monday, October 05, 2009

ஆ.மாதவையா

மிகுந்த தயக்கத்துடன் மாதவையாவின் சிறுகதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். இன்னும் பத்மாவதி சரித்திரம் படிக்கவில்லை. பழைய பாடாவதி என்று ஒவ்வொருமுறை அதை எடுத்துவிட்டு மீண்டும் நூலகத்தின் அதன் இடத்தில் வைத்துவிடுவேன். ஆனால் சிறுகதைகளில் களைப்பு ஏற்படும் முன்னர் முடித்துவிடலாமென்று இந்தப் புத்தகத்தை எடுத்தேன். ஆச்சரியம்.
“ஏணியேற்ற நிலையம்” என்ற தலைப்பில் இருந்த கிண்டல்தான் என்னை அவரிடம் இழுத்தது. (நான் எடுத்த புத்தகத்தில் இந்தக் கதையில்லை.)
அவரது கதைகளில் அவர் எடுத்துக் கொண்ட விஷயங்கள் அனைத்தும், அவரது கூரிய விமரிசனப் பார்வையிலிருந்து தப்பவில்லை. பெண்களின் நிலையை அவர் அக்காலத்திலேயே இக்காலத்தைய நோக்கில் கண்டது முக்கிய, ஆச்சரியமான விஷயம். பிராமணராக இருந்தும் அந்தச் சாதிக்காரர்களிடம் நிலவும் மோசமான பழக்க வழக்கங்களை மிக வேகமாகச் சாடும் அவரது தைரியம், ஜெயகாந்தனை நினைவுபடுத்துகிறது.
இன்று சமூக வழக்கங்களைச் சாடுவது பழைய விஷயமாகி விட்டது. யாரும் யாரையும் சாடவிரும்புவதில்லை. சுரணையற்ற மனிதர்களின் புகலிடமாகிவிட்டது இலக்கியம். புதிய விஷயங்கள் பற்றி பேசவேண்டும் என்பது ஒரு தேவையாக, நிர்ப்பந்தமாக, சொல்லப்படுகிறது. புதிய விஷய்ங்கள் இல்லையெனில் புதிய வடிவங்கள் வேண்டும். காலந்தோரும், புதிய வடிவங்கள், புதிய கதைகள் வந்தாலும், மனிதனின் மேன்மையும், கயமைத்தனமும் எப்போதும் போலவே தொடர்கின்றன. மனிதன் மாறும் வரை அவை மனிதனின் கதைப் பொருளாக வடிவெடுக்கத்தானே செய்யும். மாதவையாவை ஆங்கிலக் கல்வி பெற்ற மனிதராகப் பார்க்கப் போனால், அவர் சமூகத்தைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமலே போயிருக்கலாம்.
வரதட்சணை, மாமியார், மாமனார், மாப்பிள்ளை கொடுமைகளை, நமது கலாச்சாரம் என்று சொல்லுகிறோமெ அதில் உள்ள வேடிக்கைகளை, கயமையை, பொய்கலாச்சாரத்தை அவருடைய கதைகளில் காணலாம். காலம் மாறும் போது, நேற்றுத் தீண்டத் தகாதவனாக இருந்தவன் இன்று ராஜ மரியாதை பெறுவதை சகிக்க முடியாமல், ஆனாலும் எதிர்க்க முடியாமல் வயிறெரியும் பிராமணர்களை இந்தக் கதைகளில் காணலாம். மாதவையாவுக்கு பிராமணர்கள் பரிச்சயம் என்பதால் அவர்களைப் பற்றி எழுதியிருக்கிறார். மற்றப்படி வேறு தனிக்காரணம் இல்லை. மேல் ஜாதிக்கார விதவைகளைப் பற்றியும் மிக அனுதாபத்துடன் எழுதியிருக்கிறார். இன்றுகூடச் சிலர் உடன்கட்டை பற்றி சிலாகித்துப் பேசும் நிலையில் காலத்துக்கு முன்னரே மாதவையா சிந்தித்தது அதிசயம்தான்.
இந்தக் கொடுமைகள் இன்னும் தொடர்வதை எண்ணிப்பார்த்தால், நம் சமூகம் உளவியல் ரீதியாக முன்னேறி இருக்கிறதா என்று சந்தேகம் வருகிறது. சுலபமாக பணக்காரனாக எளிய வழியாக திருமணத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கிறோம். திருமணம் மட்டுமல்ல. கலாச்சாரம் என்னும் வட்டத்துக்குள் வருகிற அனைத்தும் வியாபாரமாகிவிட்டன. எப்படி சீக்கிரம் பணத்தைப் பெறுவது என்பதே முதல் கேள்வி. தேவைக்கான பணத்தை அல்ல. தேவைக்குப் பலமடங்கு அதிகமான பணத்தை. எத்தனையோ வாழ்க்கைகளும், நாவல்களும் வெறும் பணத்தைக் குவிப்பதால் மகிழ்ச்சி கிடைக்கப்போவதில்லை என்று காட்டிய போதும், மீண்டும் மீண்டும் மனிதன் பணத்திலே உழல நினைக்கிறான். மனிதன் மாறுவானா? கதைகளின் உள்ளடக்கம் அப்போதுதான் மாற முடியும்.

காலத்தை மீறி யோசித்த எழுத்தாளர் ஆ.மாதவையா.

No comments:

Post a Comment