Thursday, October 08, 2009


முதற்காதல்

வீடு வெறிச்சென்றிருந்தது. நாற்காலியில் உட்கார்ந்து அருகிலிருந்த கேஸ்கட்டுகளை சுந்தர்ராமன் பார்த்தார். சற்றுத் தூரத்தில் கண்ணாடி அலமாறிக்குள் இருந்த காலாவதியான வழக்குகளின் கட்டுகளும் பல வருடங்களாக வாய்தாவில் தள்ளிப் போய்க்கொண்டிருக்கும் வழக்குகளும் மருத்துவமனையின் சவ அறையில் அடுக்கி வைக்கப்பட்ட பிணங்களைப் போல் தெரிந்தன. கட்டுக்களைத் தொட்டவுடன் பைல்களின் காகிதங்கள் பிரிந்து மின்விசிறியில் காற்றில் படபடத்து பிணங்களின் வாய்கள் போல் திறந்தன. ஒவ்வொரு கட்டுக்குள்ளிருந்தும் பல முகங்கள் எட்டிக் குதித்தோடின.

மச்சானை வெட்டிய முத்துச்சாமி, அண்ணனுடன் நிலத்தகறாறில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே வயதாகி இறந்து போன கணபதிதேவர் இன்னும் எத்தனையோ அலைந்த ஊர்களும், வாதாடிய சப்-கோர்ட்டுகளும் செஷன்ஸ் கோர்ட்டுகளும் நீதிபதிகளும் அலையலையாய் நினைவில் நகர்ந்தனர்.

வழக்குகளின் விவரங்களை படிக்க வேண்டிய அவசியமில்லை. வாழ்வின் பெரும்பகுதியை எடுத்துக்கொண்ட வழக்குகளின் ஒவ்வொரு நிகழ்ச்சியும், வாதமும், வெற்றியும் தோல்வியும் அவருக்கு ஞாபகம் உண்டு. பழைய புகைப்படங்களைப் பார்த்து நினைவுகளில் மூழ்கி அசைபோடும் எழுவத்தி ஆறு வயதாகிவிட்டது அவருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்தில் ஏதாவது பிரச்சனையுடன் யாராவது வரக்கூடும். அதுவரை இது தொடரும். களைத்தது போலிருந்ததும் நாற்காலியில் உட்கார்ந்தார்.

குமாஸ்தா வருவதற்கு நேரமாகிவிடுகிறது. பத்துமணிக்குக் கோர்ட்டுக்குப் போகவேண்டும். ஒன்பதே முக்காலுக்குத்தான் வருவான். வேலையில் இருந்த பிடிப்பும் உழைப்பும் இப்போது வரும் குமாஸ்தாக்களுக்கு இல்லை. வக்கீல்களுக்கே கேஸ்காரன் மீது கருணையும் தொழில்மீது பிடிப்பும் இருப்பதில்லை.

மீண்டும் எழுந்து வேட்டியை இறுக்கிக் கட்டிக்கொண்டு பழைய வழக்குகள் வைத்த அலமாரியைத் திறந்தார். ஒவ்வொரு கட்டாக, நூலகத்தில் புத்தகம் தேடுவதுபோல இலக்கின்றி தேடிப்பார்த்தார். கண்ணன் வாதி பிரதிவாதி முனிசிபாலிடி, கருப்பசாமி-பெரியசாமி (அவன் அண்ணன்) வெள்ளைப் பாண்டி- -- முனியம்மா(புருஷன் பொண்டாட்டி), ராமமூர்த்தி—காமாட்சி,.. அதைத்தான் கையில் எடுத்தார்.
அந்தப் பெண்ணை நன்றாக இருந்தது. தபாலாபிஸில் டைப்பிஸ்ட்டாக வேலைபார்த்தாள். கணவன் இறந்ததிலிருந்து கருணை அடிப்படையில் வேலைக்கு ஆணை வாங்கும் வரை அலைந்த அலைச்சல். வேறு வழக்குகளிலும் இதே உறுதி இருந்தாலும், தீவிரத்துடன் உழைத்தாலும், இந்த வழக்கில் வெற்றி பெற்று உயர்நீதி மன்றத்தில் ஆணை வாங்கியபோது அடைந்த மகிழ்ச்சி தனி. பாவப்பட்ட பெண், வேலைக்குப் போட்டியாக கணவனின் தம்பி, அவனுக்கு உதவிய அலுவலகத் தொடர்புகள். அவளுக்கு அண்ணனுடன் திருமணமாகவில்லை என்று மனதார பொய் சொல்லிய தம்பி. எல்லாம் சேர்ந்து அவள் வாழ்க்கை பாழாகியிருக்கக் கூடும்.

அதற்குள் தினமலரும் எக்ஸ்ப்ரஸ்ஸூம் வந்து தொப்பென்று விழுந்தன. இரண்டையும் படித்து முடிக்க அரைமணி நேரம் ஆனது. முடித்ததும் சலிப்புதான் எஞ்சியது. “என்னத்தையெல்லாம் போடறானுக” சுவாரஸியம் இல்லாமல் மாடியை விட்டுக் கீழே வந்தார். படிகளில் இறங்குவது சிரமமாகத்தான் இருந்தது. எழுவத்தி ஆறாம் வயதில் மாடிப்படி ஏற முடிவதே பெரிய விஷயம். அரிதரிது.

கீழே முன்னறையில் அவர் மகன் சிவசு உட்கார்ந்திருந்தான். அவனுடன் ராஜன். அவரைக் கண்டதும் இருவரும் நேராக உட்காருவதுபோல் அசைந்து மீண்டும் முன்னர் இருந்த மாதிரியே இருந்தனர். “இவனுக்கு என்னைக்கு புத்தி வருமோ? கண்ட பயலுக கூடச்சேர்ந்து சுத்த வேண்டியது. வக்கீல் தொழிலுக்கு வேண்டாத சகவாசம் வைச்சிருக்கான்”. யோசித்துக் கொண்டே தோளிலிருந்த துண்டை உதறி மீண்டும் போட்டுக் கொண்டு உள்ளறைக்குச் சென்றார்.
அடுக்களையில் மருமகள் மிக்ஸியில் அரைத்துக் கொண்டிருந்தாள். வேறு எதுவும் சத்தமில்லை. ஒரு காலத்தில் பத்து பதினைந்து பேர் இருந்த வீடு. சந்தக்கடை மாதிரி என்று இளைய மகள் சலித்துக் கொள்வாள். பாத்ரூம் படியில் நின்று விறகடுப்பில இருந்த வென்னீர்ப் பானையைப் பார்த்தார். முப்பது நாற்பது வருட்ங்களாக புகையடித்துப் போன அடுப்பும் பானையும் கோபத்தில் தள்ளி உட்கார்ந்திருக்கும் பெண்ணைப் போலிருந்தன. அதில் தான் செண்பகம் எத்தனையோ வருடங்களாய் புகையில் இருமிக் கண்கலங்கி, கசங்கி ஆஸ்மாவுடனும் அவருடனும் எட்டுக் குழந்தைகளுடனும் கொஞ்சிக் குலவி, கூப்பாடு போட்டு, கடைசிவரை நோயுடன் போராடி. சடக்கென்று போய்விட்டாள்.

குளித்துவிட்டு இடுப்பில் துண்டுடன் சாமி படங்கள் வைத்திருக்கும் அறைக்கு வந்தார். ஊதுபத்தியை எடுத்துக் கொளுத்தி சாமிகளுக்கெல்லாம் காட்டும் போது புதியதாகச் சேர்ந்திருக்கும் செண்பகத்தின் படத்தைப் பார்த்தார். இரண்டு மாதத்திற்கு மேலாகி விட்டது. வேட்டியைக் கட்டிக் கொண்டு அதே அறையில் சாப்பிட உட்காரும் போது குமாஸ்தா வந்தான்.
“இன்னைக்கு சீக்கிரம் கட்டுகளை எடுத்திட்டுப் போய்ரு. நம்ம கேஸ் முதல்ல வந்திரும் ”அவர் பேசுவது குமாஸ்தா மணிக்கும் வெளியறையில் இருந்த ஜூனியர் சங்கருக்கும் கேட்டது. மருமகள் இட்லித்தட்டுடன் வந்தாள். முதுகுக்குப் பின் செண்பகம் “தண்ணி வைம்மா” என்றாள். அவர் எப்போதும் போல திரும்பாமலே இருந்தார். சாப்பிட்டு எழும் போது கட்டில் வழக்கத்துக்கு மாறாக காலியாக் இருந்தது.
துண்டைத் தேடினார். அவராகச் சென்று உள்ளறையில் தேடி எடுக்க வேண்டியிருந்தது. யாரோ பின்னால் வருவது போலிருந்தது. ‘என்ன’ என்று கேட்டுக் கொண்டே திரும்பினார்.

செண்பகம் இந்த நேரத்தில்தான் சண்டைக்கார முதலாளியிடம் வேலைக்காரன் கேட்பதுபோல் “முன்னூறு ரூபா கொடுங்க” என்று கேட்பாள்.
“அன்னைக்குத்தான் எண்ணுறு ரூபாய் வாங்குன” பதில் தெரிந்திருந்தாலும் எப்பவும் இந்தக் கேள்வி வரும். நேரே பார்க்காமல் இருவரும் முனகிக் கொள்வார்கள்.
“சாமான் வாங்க வேண்டாம். வண்ணாத்திக்கு துணிபோடவேண்டாம். தூரவா போடுதேன்” கோபத்துடன் அந்த இடத்தைவிட்டு நகர எத்தனிப்பாள். “இந்தா இந்தா பைசா என்ன மரத்திலயா காய்க்கு..உழைச்ச காசு” என்ன பேசினாலும் கொடுக்காமல் விடமாட்டாள். “நாங்க மட்டும் உழக்கலையாக்கும் இவுக தான் உழக்காக” வக்கணையாக சொல்லிவிட்டுப் போய்விடுவாள். மனதுக்குள் சிரித்துக் கொண்டு அவரும் கோர்ட்டுக்குக் கிளம்பிவிடுவாள். கோர்ட்டில் நேரம் போவது தெரியாது.

சாயங்காலம் வீடு திரும்பும் போது அவர் மனதில் எதொ அழுத்தியது. வாசலில் ஒரு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. சிவசு எங்காவது கிளம்பிவிட்டானோ? அவன் கேஸ்காரர்களுடன் பேசிக் கொண்டிருந்ததான். “யாருக்கு ஆட்டோ? குறை சொல்லும் தொனியில் ஆனிடம் கேட்டுக் கொண்டே உள்ளே போனார். மூங்கில் சோபாவில் நிரம்பி வழியும் ஒரு சாக்குப்பை இருந்தது.
உள்ளே நின்ற மருமகள் கண்களில் தயக்கத்துடன் சொன்னாள் “அம்மாவுக்கு ரொம்பக் காய்ச்சல் அடிக்காம் அதாம் பாக்கப் போறோம்”
“சரி போ”

உடைகளை மற்றிக் கொண்டு வெளியே வருவதற்குள் ஆட்டோ கிளம்பிப் போய்விட்டது. வீட்டில் ஆள்ரவமில்லை. அவர் காலடிந் சத்தம் அவருக்கே வேறு யாருடையது போலவோ கேட்டது. உள்ளே நுழையும் போது செண்பகம் கட்டிலில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பாள்.
“எப்பப் பார்த்தாலும் டி.வி தானா? கொஞ்ச நேரம் சத்தமில்லாமல் இருக்காதா?”
அதைப் பற்றியெல்லாம் அவள் கவலைப் படுவதில்லை. மகன் இருந்தால் அவனிடம் சொல்லுவாள் “வீட்டுக்குள்ளயே இருந்து என்ன செய்ய? செத்த நேரம் உக்காந்தா?” அதற்குள் டி.வி. சிரியல் அவளை மீண்டும் உறிஞ்சிக் கொள்ளும்.
சிவசு என்ன செய்கிறான்? அடுக்களையில் ஏதோ உருளுவது கேட்டது. பக்கத்து வீட்டில் சுவரை இடித்துக் கொண்டிருந்தான். சாமி படங்களைப் பார்த்தார். தி.மு.க.வில் இருந்தாலும் கோயில்களுக்குத் தினமும் போகாவிட்டாலும் வீட்டில் குளித்துவிட்டு திருநீறு பூசி, சாமி படங்களுக்கு பத்தியைக் கொளுத்திவைத்து சுற்றிக் காட்டிவிட்டுச் சாப்பிடுவார். செண்பகத்தின் படத்தில் மல்லிகைச் சரம் தொங்கியது. கொஞ்ச நேரம் முன் மருமகள் தலையில் அதைப் பார்த்த ஞாபகம் வந்தது. முன்னறையில் சிவசுவைக் காணவில்லை. எங்கே போனான்? மாடி ஏற நினைத்தவர் தயங்கி நின்றார். இவ்வளவு பெரிய வீட்டைத் திறந்து வைத்துவிட்டு ….அங்கிருந்த நாற்காலியிலேயே உட்கார்ந்து கொண்டார்.

எல்லாப் பிள்ளைகளும் வெளியூரில் இருந்தாலும் கடிதம் எழுதுகிற வழக்கமில்லை.. இப்போது யாருமே கடிதங்கள் எழுதுவதில்லை. எல்லாம் போனில் பேசிவிடுகிறார்கள். அவருடன் யாரும் ரொம்ப பேசுவதில்லை. சின்ன வயசிலிருந்தே அப்படித்தான் வழக்கம்.

பக்கத்து வீட்டு முத்தையாபிள்ளை நடக்க முடியாமல் பேரனின் கைத்தாங்கலுடன் போய்க்கொண்டிருந்தார். நல்ல வேளை அவரால் நடக்கமுடிகிறது. பேரன்கள் வெவ்வேறு ஊர்களில் வேலைக்கும், மற்றதற்கும் அலைந்து கொண்டிருந்தார்கள்.

மாத்திரை சாப்பிட வேண்டும். அதைத்தேடக் கண்ணாடி வேண்டும். ‘ஏ இந்தக் கண்ணாடி” பாதியிலேயே குரல் நின்றுவிட்டது. இந்த வீட்டில் இப்போது யாருமில்லை. அப்புறமாக மாத்திரை சாப்பிட்டுக் கொள்ளலாம். மாத்திரை தேடக் கண்ணாடி தேடி, தண்ணி எடுத்து, .. நினைக்கவே களைப்பாக இருந்தது. யாராவது வேண்டும். செண்பகம், பேத்தி பேரன். சிவசுவின் மனைவி இருந்தால் சிடு மூஞ்சியுடனாவது எடுத்துத் தருவாள். இப்போதுதான் யாரும் இல்லையே. வயசான காலத்தில் முடியாத நேரத்தில் ..

“இஞ்சி பூண்டு தினம் சாப்பிட்டால் போதாது. இந்த மூன்று மாத்திரைகளையும் கண்டிப்பாகச் சாப்பிடவேண்டும்” என்று டாக்டர் பாண்டியன் சொன்னது ஞாபகம் வந்தது. எழ மனமில்லை. வியாதி என்ன செய்யும்? இப்ப இருக்கும் டாக்டர்கள் விலை கூடுன ஊசி மருந்து மாத்திரைன்னு எழுதிக் கொடுத்திர்ரானுக. இஞ்சி பூண்டு வேப்பந்தழை தெனமும் சவைச்சாலே ஒரு வியாதியும் வராது. மகள் டாக்டராக இருந்தாலும் அல்லோபதி மீது கொஞ்சம் வெறுப்பும் பயமும் உண்டு. எல்லோரையும் போல.

மறுநாள் சாயங்காலம் திருநெல்வேலியிலிருந்து பஸ்ஸில் வந்து இறங்கியதும் வீடு ரொம்பத்தூரம் போல் தோன்றியது. கார் வாங்கியதிலிருந்து வெளியூர் கேஸ்களுக்கு அதில் போவது வழக்கமாகிவிட்டது. சிவசு காரை எடுத்துக் கொண்டு மதுரை போயிருந்தான். வீட்டில் மருமகள் இருந்தாள். வாசல் விளக்கு ஏனோ எரியவில்லை. செண்பகம் இருந்தால் பளிச்சென்று வெளிச்சமாக இருக்கும். அவள் உயிரோடிருக்கும் போது ஒருமுறை கூட ‘நீ இருந்தால் வீடு வெளிச்சமாக இருக்கிறதெ’ன்று அவளிடம் சொன்னதில்லை. சொல்லத் தோன்றியது கூட இல்லை.

வீட்டில் கால் வைத்ததும் மனதுக்கு இதமாக இருந்தது. செல்லம்மாவும் சிவசுவும் ராத்திரி வரலாம். வந்தால் தேவலை. ஏதாவது பேசலாம். பிள்ளைகளிடமும் பணம் படிப்பு கல்யாணம் தவிர அதிகம் பேசியது கிடையாது. பம்பாயிலிருந்து வரும் லக்ஷ்மி ஒருமுறை கேட்டாள் “அப்பா நான் எப்படி இருக்கேன். என்ன நினைப்பேன். என்னெல்லாம் கஷ்டப்படுவேன் இப்படியெல்லாம் யோசிப்பீங்களாப்பா. .பேசணும்னு தோணுமா? பாபு வீட்ல பேரன் தாத்தா மேல ஏறி விளையாடுதான். நீங்க பேசவே யோசிக்கிறீங்க..” அவருக்கு அப்படித் தோன்றியதே இல்லை. அவருடைய அப்பாவும் இப்படிக் கேட்டதில்லை. “எப்படித் தெரியும் எனக்கு?” அந்தச் சமயத்தில் கேட்டிருக்கலாம். இப்போது தோன்றியது. போன் பேசலாம். ஆனாலும் ஒரு தயக்கம் தடுத்தது.
“மருமகள் வந்து கேட்டாள்” சாப்பிடுறீங்களாப்பா..? அவரு மதுரையிலைருந்து வர லேட்டாகும்ல. “
உம்.. வை. என்னது சாப்பிட?”
“இட்லி”
அவருக்குச் சுவராஸ்யமாக இல்லை. விஸ்கி ஏதாவது அடிக்கலாம் என்றால், துணைக்கு ஆள் வேண்டும். யாராவது எல்லாவற்றையும் தயார் பண்ணி வைத்தால், குடிக்கலாம். தொட்டுக்க கறி மீன் ஏதாவது வைத்துக் கொள்ளலாம். எல்லாவேலைக்கும் ஆள் வைத்தே பழகிவிட்டது. இப்போது அவரே எல்லா வேலையையும் செய்ய முடியாது. ஒரு தயக்கம்.

தூங்கும் முன் அடுத்தநாளுக்கான கேஸ் கட்டுகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது “வணக்கம் சார்” என்று பெண்குரல் கேட்டது. கேட்ட குரலாக இருக்கிறதே என்று நிமிர்ந்தார். புரிந்து விட்டது. “வாங்க..வாங்க. அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. முந்தினநாள் காலையில் பார்த்த கேஸ்கட்டில் எழுத்தாக இருந்த பெயர், இப்போது அவரெதிரில். காமாட்சி.
“நீங்க எப்ப வந்தீங்க? உக்காருங்க..
இந்த ஊருக்கு மாத்திட்டாங்க. சார். அதான் பாத்திட்டுப் போகலாம்னு வந்தேன். சீக்கிரம் வந்தா இருக்க மாட்டிங்கன்னு நேரங்கழிச்சு வர்றேன்”.
“பரவாயில்லை. சும்மாதான் இருக்கேன்’.
“அம்மா இறந்த அண்ணைக்கு வந்தேன்…” கொஞ்ச நேரம் இருவரும் அமைதியாக இருந்தனர்.
ரொம்ப நல்லவங்க.. எப்ப வந்தாலும் விசாரிப்பாங்க.. பொதுவா எல்லார்ட்டயுமெ நல்லா பேசுவாங்க.. அதெப்படி சார் திடீர்ன்னு சுகர் குறஞ்சு போச்சு.”
ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுப் போனாள் காமாட்சி. மணி பத்துக்கு மேலாகிவிட்டது. அதற்குள் பலதடவை மருமகள் மாடியில் லைட் எரிகிறதா என்று பார்த்துவிட்டுப் போயிருந்தாள். சிவசுவும் செல்லம்மாவும் வர ராத்திரி பன்னிரண்டாகிவிட்டது.

சுந்தர்ராமன் கண்கள் நிலைகுத்தியிருக்க எதையோ யோசித்துக் கொண்டிருந்தார். காமாட்சிக்கு நாற்பத்தி ஐந்து வயதிருக்கும். நாட்டுக் கட்டை உடம்பு. ”ஒரு பொண்ணு இருக்கா சார். காலேஜ் படிக்கா. உங்க புண்ணியத்தில நல்லாயிருக்கேன். அவள் மேல படிக்க வைக்கணும்”. அவள் போய்விட்டாலும் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. எட்டுப் பிள்ளைகளைப் படிக்க வைத்தது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. இப்போது பெரிதாகத் தெரிந்தது. அவர்கள் என்ன படித்தார்கள் எப்போது முடித்தார்கள் அதெல்லாம் மீண்டும் ஞாபகப் படுத்திப் பார்த்தார். மங்கலாக ஞாபகம் இருந்தது.

யாருடனும் மனம் விட்டுப் பேசி நாளாகிறது. அண்ணன் தம்பி எல்லாம் மேலே போய்விட்டார்கள். அடுக்களையில் ஏதோ பாத்திரம் உருண்ட சத்தம் கேட்டது. அங்கு யாரும் இல்லை. முன்பு கலகலத்திருந்த வீடு. சாப்பாடு பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது.

செண்பகம் இருந்தவரை சாப்பாடு பற்றி ரொம்ப யோசித்ததில்லை. “உப்பு சரியில்லை. ருசியா இல்லை. சகுந்தலா ஓட்டல்ல இதைவிட நல்லாயிருக்கும்” என்று எதையாவது சொல்லிக் கொண்டுதான் சாப்பிடுவார். அவளோ பிள்ளைகளோ அந்த நேரம் எதுவும் பேசாது. கோபம் வந்துவிடும்.
கடைசியாக செண்பகத்துடன்……….எப்போது என்று யோசித்துப் பார்த்தார்… வருடங்கள் சரியாக ஞாபகமில்லை. முப்பது-நாற்பது வருடங்கள் இருக்கும். அவளுக்கு இளைப்பும், சர்க்கரை நோயும் வந்து பாடாய்ப் படுத்தியது. அதில் தான் போய்ச்சேர்ந்தாள். நடுநடுவில் வெளியூர்களில் பல இடங்களில் … கழித்ததுண்டு. பின்னர் யோசித்தால் அது ஒன்றுமில்லை போலிருக்கும். திருப்தி இல்லை. ஒரு மனச்சங்கடம் இருந்து கொண்டே இருக்கும். சிலநேரம் தண்ணீர் குடித்தால் தாகம் அடங்கிவிடும்.

இருட்டில் ஒளிரும் அவரது கடிகாரம் பதினொன்றைக் காட்டியது. இப்போதெல்லாம் தூக்கம் வர நேரமாகிறது. இரண்டு வருடங்களாகத்தான் இந்தப் பிரச்சனை. வர வர அதிகமாகிவிட்டது. காமாட்சி மனதில் நிழலாடிக் கொண்டிருந்தாள். எவ்வளவு நன்றி விசுவாசம் அவளுக்கு. இந்தக் காலத்தில் பெற்ற பிள்ளைகள் கூட தாய் தந்தையைப்பற்றி யோசிப்பதில்லை. அவனவன் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்விடுகிறார்கள். எத்தனையோ வருடங்களுக்குப் பின் அவரைப் பார்க்க வந்திருக்கிறாள். மூத்த மகளைப் போல என்று சொல்லிக் கொள்ளலாமா? அவரால் முடியவில்லை. என்ன சமூகம் இது? மனைவியைத் தவிர வேறு பெண்ணாக இருந்தால் அக்காவாக அம்மாவாக மகளாகத்தான் ஒரு மனிதன் வரித்துக் கொள்ளவேண்டும். அவளோ நாய்க்கமாரு. நிறம் கொஞ்சம் சிவப்பு. இப்படி நாற்பத்தைந்து வயதில் உருண்டுழலும் அவள் பேசிக் குழைந்ததும் அவளை நினைத்தாலே ஜிவ்வென்றேரும் உணர்ச்சி.
அவளும் சொன்னாள் “ எனக்கு யார் சார் இருக்கா? பதினெட்டு வருஷமாச்சு அவரு போயி. ஒரு நாதி கிடையாது. தலைஎழுத்து. எத்தனை பிரச்சனைகள்?. மக மட்டும் இல்லைன்னா…. எப்பவோ போய்ச்சேந்திருப்பேன்” அவள் கண் கலங்கியதில் அவருக்கும் என்னவோ செய்தது. செண்பகம் போனவருஷம் தான் போனாள். ஆனால், இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அவளை நெருங்கி. காமாட்சியின் வேதனைகளும் அவள் பிரச்சனைகளும் அவருக்குப் புரிந்தன.
அவள் அவர் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.” நீங்க மட்டும் அந்த வேலையை வாங்கிக் கொடுக்கலைன்னா…” அவளால் பேச முடியவில்லை விம்மினாள். அவள் துயரம் அது மட்டுமில்லை என்று அவருக்குத் தோன்றவில்லை. கைகள் மெத்து மெத்தென்றிருந்தன. இத்தனை வருடம் யாரும் தொடாத கைகள். அப்படித்தானிருக்கும். இருக்கவேண்டும். அவருடைய கைகளும் தான். அவள் தோளைத் தட்டிக் கொடுத்து “கவலைப் படாதேம்மா.. எல்லாம் நல்ல படியா நடக்கும்”
“ நீங்கதான் சார்……” அவளுக்குத் தொண்டை அடைத்துக் கொண்டது. அவருக்குக் கண்ணில் நீர் துளிர்த்தது. அவளும் அதைப் பார்த்தாள்.
“நான் இருக்கேம்மா பயப்படாதே”. எத்தனை பேருக்கு மனைவியை தவிர வேறு ஒரு பெண்ணிடம் இப்படிச் சொல்ல வாய்ப்புக் கிடைக்கும். நினைத்தாலும் சொல்ல முடியாது. மனிதர்கள் எல்லோரும் கருணைமனம் படைத்தவர்கள். குறிப்பாக பெண்களிடம்.
“ஒரு மக இருக்கா. அவ படிச்சு மேல வரணும். உங்களை மாதிரி வக்கீல் ஆக்கணும்”
“அதுக்கென்ன, அவ படிச்சு வக்கீல் ஆகிருவா” அவர் முடித்ததும் அவளுக்கு ஆறுதலாக இருந்தது. அவருக்கும் மனதுக்கு இதமாக இருந்தது. யாருக்காவது ஆறுதல் சொன்னால் ஒரு அமைதி கிடைக்குமே அது. யாரிடமாவது இது மாதிரிப் பேசியிருக்கேனா என்று அவருக்குள் கேட்டுக் கொண்டார். எந்தப் பெண்ணும் அவரிடம் பேசியதில்லை. எத்தனையோ பெண்களுக்காக வழக்குகளில் ஆஜராகி இருக்கிறார். இவள் மட்டும் ஏதோ தனி. வீட்டில் யாரும் துணைக்கு இல்லாமல் தான் இப்படித் தோன்றுகிறதோ என்றும் நினைத்தார். ஆனால் இந்த உணர்ச்சி நிஜமானது. இல்லையென்றால் காலையில் கேஸ் கட்டுக்குள் பெயராக இருந்த ஒருத்தி மாலைக்குள் குழைந்து உருகும் மனமாக திரண்ட உடலாக வருவாளா? பாவம் இந்தப் பெண்ணுக்கு முடிந்தவரை உதவ வேண்டும்.

காலையில் ஐந்து மணிக்கு வழக்கம்போல் வேப்பங்குச்சியில் பல்தேய்த்துக் கொண்டே ‘வாக்கிங்’ போனார். வர ஆறு மணியாகிவிட்ட்து. அன்றைக்கான கேஸ் கட்டுகளைப் பார்க்க அலமாரியைத் திறந்தார். நேற்றுப் பார்த்த கேஸ்கட்டு கையில் அகப்பட்ட்து. முடிந்துபோன கேஸ்தான். ஆனால் அதை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தார். காமாட்சி நேற்றிரவு பேசிக் கொண்டிருக்கும்போது ஆறுதலாக அவள் கையைப் பிடித்த போது சரிந்துவிழுந்த முந்தானையும், உருண்டு திரண்டு நிற்கும் உடலும் ஞாபகம் வந்த்து. இன்றைக்கும் வருவாளா? வரவேண்டும். அவர் மனம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த்து. இப்படியெல்லாம் நினைக்கக் கூடாதோ மகனும், மருமகளும் வீட்டில் இருக்கிறார்கள் மகள்கள்… அதற்கு மேல் யோசிக்க வேண்டாம் என்று நிறுத்தினார். ஆனாலும் காமாட்சி மீண்டும் நினைவில் வந்தாள். பஸ்ஸில் போகும்போதும், கோர்ட்டில் பேசும் போதும். எழுபதிலும் ஆசை அடங்குவதில்லை. அவளும் பாவம் தான். இருபது வருடங்களுக்கு மேலாக அவள் கணவன் இல்லாமல் தனியாக இருக்கிறாள். தன்னால் இரண்டு வருடங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. சண்பகம் இறந்தது சமீபத்தில் தான் என்றாலும், அவளுக்கும் அவருக்கும் இருபது வருடங்களுக்கு மேலாகவே தனியாகத்தான் படுக்கை.

செண்பகம் இருக்கும் போது சண்டை போடவாவது பேச்சுக் கொடுப்பாள். இப்போது தனிமையும் அமைதியும் தான். குடும்பத்தில் பிள்ளைகள் மனைவி என்று கூட்டத்துடன் இருக்கும் போது அமைதி வேண்டும் என்று மனம் அல்லாடுகிறது. தனிமைதான் இனிமை என்று கனவு காண்கிறது. முதுமையில் தனிமையும், அமைதியும் வரும்போது அதுவே வதையாகிவிடுகிறது.

நாற்பது வருடங்களுக்கு மேலாக நோயுடன் போராடினாள். சொன்னதையெல்லாம் செய்தாள். இப்போது கூப்பிடக் கூட ஆள் இல்லை. ஆண்கள் பெண்கள் மீது சார்ந்து வாழ்ந்து வாழ்ந்து தனியாய் நிற்கும் வலுவிழந்து விடுகிறார்கள். மீண்டும் காமாட்சி நினைவில் வந்தாள். அவளுடன் வாழ முடிந்தால்.. அவளை வீட்டுக்குள் விட முடியுமா? சொந்த பந்தங்கள் கொத்திப் புடுங்கிவிடும்.

செண்பகத்தின் ஸ்பரிசம் பட்டு முப்பத்தைந்து வருடங்களிருக்கும். ரொம்ப வருஷங்களுக்கு முன் வெளியூர் போய்விட்டு வரும் நாட்களில் சாப்பிடாமல் காத்திருப்பாள். அப்புறம் சர்க்கரைவியாதி வந்த்திலிருந்து தான் சாப்பிட்டுவிட்டுக் காத்திருப்பாள். பிறகு சர்க்கரையுடன் மூச்சிறைப்பும் சேர்ந்து கொண்டது. இப்போது வெளியூர் போனால், சாப்பிட்டு விட்டுத்தான் ஊருக்குப் பஸ் ஏறுவார். ஹோட்டல் சாப்பாடு பிடித்துவிட்ட்து. வேறு வழியில்லை என்றால் தான் உள்ளூர்ச் சாப்பாடு. வாய் ருசி கேட்கிறது. மறந்து போன ருசிகள் மீண்டும் ஞாபகம் வருகின்றன. தொந்தரவு செய்கின்றன.

காமாட்சி எட்டு மணிக்கு வர ஆரம்பித்தாள். பத்துப் பதினொன்று வரை மாடியில் அவருடன் பேசிக்கொண்டிருந்து விட்டுப் போனாள். சிவசுவும், மருமகளும் தினமும் பார்த்துப் பார்த்துப் புழுங்கிக் கொண்டிருந்தார்கள்.
இன்றும் வந்திருந்தாள். சிவசு மாடியில் என்ன பேசிக் கிழிக்கிறார்கள் என்பதை மாடிப் படிகளில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தான்.

“நாற்பது வருஷமாச்சு. தனியாத்தான் போராடிக்கிட்ருக்கேன்” அவள் சொன்னதற்கு பல அர்த்தங்கள். மூவருக்கும் புரிந்தது. அவளுக்குத் துணை தேவைப்படுகிறது என்பதையும், அதற்கு நீங்கள் தகுதியானவர் என்பதையும் அவள் உணர்த்தினாள் என்று சுந்தர்ராமன் அர்த்தப் படுத்திக் கொண்டார். “இந்தப் பொம்பளை அப்பாவை எப்படி வசப்படுத்த முனைகிறாள். அம்மா இறந்து போய் ஒருவருடம் முடிவதற்குள்… ச்ச்ச என்ன மனுஷன்யா’ என்று சிவசு கோபப்பட்டான். காமட்சிக்கு ஏதோ தினமும் நம்முடன் பேசிக் கொண்டிருக்க ஆள் கிடைத்ததே. எதுவரை போகுதென்று பார்க்கலாம். உதவிக்கு இந்த ஊரில் ஆள் வேண்டும். கொஞ்சம் ஆள் அதிகாரம் பலமுள்ள ஆளிருந்தால் தான் சமாளிக்க முடியும். ஒத்தப் பொம்பளை என்ன செய்யமுடியும். அவனவன் போய் நின்னாலே வழியுரானுக. ஒரு ஆள் துணையிருந்தா மத்த கழுதைகளாவது தொந்தரவு செய்யாமலிருக்கும்”
அவர் சொன்னார் “நானே ரொம்ப வருஷமாத் தனியாத்தான்.” பல வேளைகளில் சொற்களுக்கு அர்த்தம் சொல்ல வேண்டியதில்லை. சூழ்நிலை அர்த்தம் தந்துவிடுகிறது. முப்பது வருடங்களுக்கு மேல் நோயாளி மனைவி. அவருக்கே மலைப்பாக இருந்தது. “நான் தான் பேசுகிறேனா? எனக்குள் இருக்கும் ஏதாவது பேசுகிறதா”
“எங்க வீட்டுக்கார்ர் போயி இருவது வருஷமாச்சு. என்னாலயே தனியா சமாளிக்க முடியல. ஆம்பள, அதுவும் எல்லாரிடம்மும் பழகிறவங்க இத்தனை வருஷமா எப்படி இருக்கிறீங்க. வாய்க்கு ருசியா சாப்பிட்டுப் பழகியிருப்பீங்க. இப்ப என்ன செய்வீங்க.”
“ஆமா மருமக சாப்பாடு காரசாரமில்ல. பத்தியச் சாப்பாடு மாதிரியிருக்கு. நல்லாச் சாப்பிட்டுப் பல நாள் ஆச்சு.”
“நான் நல்லாச் சமைப்பேன் சார். கொண்டு வாரேன். என் சாப்பாடு சாப்பிட்டுப் பாருங்க..இன்னைக்குக் கூடப் பாருங்க சார். சட்டியில இருந்து எண்ணை தெறிச்சி” சொல்லிக் கொண்டே வலக்கையை நீட்டி எண்ணை பட்டுப் புண்ணான கழுத்தையும் கழுத்துக்குகீழேயும் காட்டினாள். நல்ல வேளை சார். சேலையில் பட்டும் இந்த இடத்தில ஜாக்கெட்டில படல.” அவள் காட்டிய இடங்களில் கொப்புளங்கள் தெரிந்தன.
அதைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே, “களிம்பு வேணுமா” என்றார்
“இருந்தா குடுங்க. தடவிக்கிறேன்”

சிவசுவுக்கு அதற்கு மேல ஒன்றும் கேட்கவில்லை. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தது. என்னென்னவோ அர்த்தப் படுத்திக் கொண்டான். அப்பாவைப் பற்றி அப்படி நினைக்க அவனுக்கே வருத்தமாகத்தான் இருந்த்து. ஆனாலும், இந்த வயசுல இப்படி பண்வாகளா?” என்று வருத்தப் பட்டான். இன்னொரு பயம் வேறு தொத்திக் கொண்டது. ஏதாவது ஏடா கூடமா பண்ணிருவாரோ? கல்யாணம் தொடுப்புன்னு வச்சுக் கிட்டா, சொத்து என்னாவது. இந்தக் காலத்துப் பொம்பளைகள், அதுலயும் இவ… ரொம்ப மோசம்னு எல்லாரும் பேசிக்கிடுராங்க. என்ன செய்ய? அம்மா இன்னுங் கொஞ்ச நாள் கழித்துச் செத்திருக்கக் கூடாதா? பெருமூச்சு விட்டுக் கொண்டே படுக்கப் போனான்.
“அவுக என்ன இப்படிப் பேசிக்கிட்ருக்காக” மனைவி கேட்ட்தும் கோபத்தில் ஜிவ்வென்று முகம் சிவந்தது. “ஊரெல்லாம் வக்கீலய்யா எங்கையிலன்னு பேசிக்கிட்ருக்கா? அந்த தேவடியாள அடிச்சுத்தான் வெரட்டணும். இல்லாட்டி இவுகளை வீட்ல தனியா விட்டுப் பிரித்திரணும் அப்பந்தான் தெரியும்”. திட்டிக் கொண்டே மனைவியுடன் படுக்கையில் சாய்ந்தான். மனைவியில்லாமல் அவனுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை.

இரவில் மணி என்னவென்று தெரியவில்லை. தூக்கம் கலைந்துவிட்ட்து. விலகிக்கிடந்த வேட்டியை கட்டிக்கொண்டே மனைவியைப் பார்த்தான். கையையும் காலையும் எப்படியோ வைத்துக் கொண்டு, அசையாமல் கிடந்தாள். அப்பா ஞாபகம் வந்தது. அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அப்பா தனியாகத்தான் படுத்திருக்கிறார். அவருக்கு தேவையாக்க் கூட இருக்கலாம்.
இன்னொரு நாள் அமுக்கி வைத்த கோபம் வெளிப்பட்டுவிட்டது.
“யார் சொன்னா?”
“யார் சொல்லணும். அவ தான் ஊரெல்லாம் சொல்லிட்டுத் திரியறா. கோர்ட்ல ஒவ்வொருத்தனும் என்னப்பா இதெல்லாம். இவள அடி பின்னிருவமானு கேக்கறான்.’ சட்டென்று நிறுத்திவிட்டான். அப்பாவிடம் இப்படிப் பேசிப் பழக்கமில்லை.
“ஊர்ல இருக்கிறவன் என்னென்னமோ பேசுவான். அதுக்காக….அந்தம்மா ஏதோ பேசிக்கிட்ருக்க வருது. தொழில விட்டுட்டா அது கிட்டப் பேசிக்கிட்ருக்கேன். உன்னமாதிரி. கண்டவங்கிட்டயும் பிரயோசனமில்லாம. புள்ளை குட்டியிருக்கா.. மனுஷன் என்னதான் செய்யணுங்க” வெடித்துச் சீறிவிட்டார். பேசியதில் அவருக்கே பாதி நம்பிக்கையில்லை. அவனுக்கும் தான். நடுவில் குழந்தைகள் இல்லை என்பதை குத்திக் காட்டி விட்டார். “‘குழந்தைகள் இருந்தால் மட்டும் கொஞ்சிக் கிழிச்சிருவாக. எங்களுக்குத் தெரியாது. நாங்களும் இங்கதான இருந்தோம். வயசான காலத்தில இதெல்லாம் தேவையா? கேஸப் பாத்தமா, சாப்டமா தூங்னமான்னு இருக்க வேண்டியது தான“” அவன் முனகியது அடுத்த அறையிலிருக்கும் அவருக்கும் கேட்ட்து.
அவர் பதிலுக்கு அங்கிருந்தபடியே மருமகளுக்கும் கேட்கட்டும் என்று சத்தமாகச் சொன்னார் “எனக்குத் தெரியாததால? எழுவத்தைந்து வயசுல எத்தனை பேரைப் பாத்திருப்பேன். பேசுனாக்கில. என்ன? மனுஷன் யார்ட்டயும் பேசக்கூடாதா? எனக்கு புத்தி சொல்லுதீகளோ?”
அவர் சொல்லிக் கொண்டே இருந்தாலும் மனதில் இன்னொரு விதமாக யோசித்துக் கொண்டிருந்தார். ”மனுஷன் என்ன இன்னும் அஞ்சு வருஷமோ? பத்து வருஷமோ? வயசுக்கொத்த துணை வேண்டாம்னு எப்படிச் சொல்ல முடியும். பொண்டாட்டி செத்ததும் எல்லாத்தையும் உடனே மறந்திரணுமா? மிஷினா? சுட்ச ஆஃப் பண்ண? அதுக்கு முன்னாலயுந்தான் என்ன?”

செவ்வாய்க் கிழமை காலையில் கமட்சியம்மா மகளுடன் வந்து பெஞ்சில் உட்கார்ந்தாள். சிவசுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன புதுசு? என்று கோர்ட்டில் கேஸ் இல்லையே.
அப்பாவிடம் கேட்டான் “எங்க வெளியூர் எங்கயும் போறீகளா?”
“திருநெல்வேலிக்கு. கரிவலங் கேஸ் இருக்கு.”
“அந்தம்மா வந்திருக்கு. பிள்ளையோட.”
“அதுக்குந் திருநெல்வேலி போணுமாம் அதான் என்கூட வாங்கண்ணேன். வண்டியில போயிரலாம்ல”
“நான் தெங்காசி, சிவகிரி போவேண்டியிருக்கு. நீங்க பஸ்ல போகலாம்ல. ஒரு ஆளு தான” அவர் மட்டும் போனால் என்ன என்ற கேள்வி அதிலிருந்தது. ரொம்பத்தான் பெருசாகுது… என்று நினைத்துக் கொண்டான். .
“நான் சொல்லிவிட்ருந்தேன் அவங்களும் வந்துட்டாங்க. முதல்லயே சொல்ல வேண்டியது தான” என்று சிவசுவிடம் சொல்லிவிட்டு. டிரைவரிடம் “வண்டிய எடுங்க” சொல்லிவிட்டு காரில் ஏறினார்.. அவருடன் காமாட்சியும் அவள் மகளும்.

இந்த டிரைவரும் சொல்லியிருக்கலாம்ல. அவனும் கூட்டு” முணுமுணுத்துக் கொண்டே உள்ளே போனான். வாடகைக் கார் பிடித்துப் போக வேண்டும். அதைவிட இவர்கள் மூவரும் காரில் போவதை ஊர்க்கார்ர்கள் பார்த்து…” நினைக்கவே கசந்தது. பதில் சொல்லி முடியாது.
sunthar ராமனுக்குத் தெரியும். யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள். சின்ன வயதிலிருந்தே. தேவையிருந்தால் யாரோ மூன்றாம் மனிதரிடம் பேசுவது போல் அப்பாவிடம் பேசிப் பழக்கம். செண்பகம் மட்டும் தான் எதிர்த்துக் கேட்பாள். இத்தனை வருஷங்களாக குடும்பத்துக்கு உழைத்துப் போட்டேன். எல்லாச் சுகத்தையும் பிள்ளைகளுக்காக விட்டுக் கொடுத்தேன். இப்ப யாரும் பாக்க நாதியில்ல. மருமக ஏதோ வித்தியாசமாப் பாக்கா. அவுக வீட்டுக்கே சொத்தேல்லாம் கொண்டுபோகணும்னு நினைக்கா. இவன் என்னடான்னா அவளுக்காக எங்கிட்ட எதுத்துப் பேசுறான். சும்மா தொணைக்கு ஒர் ஆள்ட்ட பேசினா, உடனே ஓன்னு கூப்பாடு. இத்தனை வருடம் எப்படி இருந்தேன்.. காமாட்சியம்மா பாவம். பிள்ளைய படிக்கவைக்க்க் கஷ்டப்படுது. அவளுக்கு உதவி செய்யலாம்ன்னா?”
காமாட்சியின் குரல் சிந்தனையைக்கலைத்த்து. “என்ன சார் பலமா யோசிக்கிறீங்க”.
“ஒண்ணும் இல்லம்மா”
“ஏதாவது பிரச்சனையா? எங்களாலயா?” அவள் புரிந்து கொண்ட்து ஆச்சரியமாக இருந்த்து.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல.. பிள்ளைகளுக்கு எவ்வளவு செஞ்சிருக்கேன். எதாவது ஞாபகம் வருதா? உங்களைக் திருநெல்வேலிக்குக் கூட்டிட்டுப் போறேன்னா கோப பொத்துக்கிட்டு வருது. எல்லாம் பிள்ளைகளையும் செட்டில் பண்ணியாச்சு. இனிமே எனக்கென்ன ? இவகளுக்கு அடிமையா?”
“கோப்ப்படாதீங்க சார். பிள்ளைகள் எவ்வளவு செஞ்சாலும் இப்படித்தான் பேசும். எங்களால உங்களுக்குத்தான் சார் கஷ்டம். இப்படித் தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேன்” பொய்யாகச் சடைத்துக் கொள்வது போல் அவருக்குப் பட்டாலும், கூட்டி வந்தபின் ஆறுதல் சொல்லவேண்டியிருக்கிறது. இது மாதிரி பெண்களுடன் அவர் ஆறுதலாகப் பேசியதில்லை. வயசானால் பக்குவம் வந்து விடுகிறது போலும். ஆனால் மனைவியிடம் இப்படிப் பேசியதில்லை. அது அவள் கடமை. அவளை, குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியது அவர் கடமை. செண்பகம் என்னைச் சரியாகத்தான் கவனித்துக் கொண்டாள். நான் அவளை நன்றாகத் தான் வைத்திருந்தேன். சண்டைகள் போடுவது மாதிரி, ஏதோ மூன்றாவது ஆடகள் மாதிரி, மற்றவர்கள் முன்னால் செண்பகமும் நானும் பேசிக் கொண்டாலும் கெடுதல் எதுவும் செய்து கொண்ட்தில்லை. ஆனால் காமாட்சி வேறு. பொழுதுபோகாமல் சினிமா பார்க்கிறது மாதிரி. ஒரே வித்தியாசம். சினிமாவில் வரும் வசனம் நானும் காமாட்சியும் பேசுகிறோம். இது எனக்குப் புதுசு. காமாட்சிக்கும் புதுசாக இருக்கலாம்.
மீண்டும் ஒருமுறை காமாட்சி சொன்னாள் “எங்களால உங்களுக்குக் கஷ்டம்”
“அதெல்லாம் இல்ல. எவன் என்ன கேப்பான்? என் இஷ்டம். நா என்ன கெட்ட்தா செய்யறேன் ஒளிச்சு ஒளிச்சு.. சின்னக் கழுதைகளுக் கென்ன? உங்க மகளைப் படிக்க வக்கது என் பொறுப்பு”
கோபத்தில் கேட்காத உறுதிமொழியை கொடுத்துவிட்டேனோ? என்று அவர் நினைத்தாலும், காமாட்சிக்கு அது ரொம்ப ஆறுதலாக இருந்த்து அவள் முகத்தில் தெரிந்த்து. அவள் மகளும் திருப்தியாக நன்றியுடன் பார்த்தாள்.
“பிள்ளைகளுக்கெல்லாம் நல்லாத்தான செஞ்சிருக்கீங்க. நல்லாப் படிச்சிருக்காங்க. நல்ல இட்த்துல கல்யாணம் முடிச்சிருக்காங்க. ஒரு குறை வக்கல்ல”.அந்தக் கேள்விகளில் வேறு ஏதோ தொனித்தது.
“ஆமா பெறகென்ன யாருக்காவது உதவி செய்யணும்ணாக்கூட பிள்ளைகள்ட்ட் கேட்கணுமா? என்னாலதான் இவுகல்லாம் முன்னுக்கு வந்தாங்க. அவங்களால நான் முன்னேறல இவுகளுக்கு நான் அடிமையா இருக்க.
அன்றிரவு வெளியூரில் சாப்பிட்டுவிட்டு, மூவரும் வந்திரங்கும் போது மணி பன்னீரண்டாகி விட்டது. சிவசு தூங்கவில்லை. அந்தப் பொம்பளை “போய்ட்டு வர்ரேன்”னு சொல்லும் போது அப்பா முகத்தில், குரலில் அமைதி தெரிந்தது.
சிவசு அம்மாவின் படத்தை வைத்து சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தான். எப்போதோ எடுத்த பட்த்தி மீண்டும் ப்ரிண்ட்போட்டு பிரேம் போட்டு சாமி படங்களின் நடுவில் மாட்டியிருந்தது. வரிசை வரிசையாக சுவரில் ஆணியடித்து மாட்டப்பட்ட படங்கள். செந்தூர் முருகன், பழனி முருகன், வில்லிபுத்தூர் ஆண்டாள், கோமதி அம்பாள், அப்பாவின் அப்பா, மதுரை மீனாட்சி, நெல்லை காந்திமதி.. இன்னும் பல.
அம்மாவுக்கு முதல் வருடத் திதி. அப்பாவும் பின்னால் உட்கார்ந்து இருந்தார். முகத்தில் களை இல்லை. அம்மாவின் நினைவில் இருக்க்க்கூடும். சிவசுவுக்கு காமாட்சி ஞாபகம் வந்தது. இவரா அப்படி? அம்மா இறந்த பின்னால் மனம் துணை தேடியிருக்கும். அது ஒன்றும் தப்பில்லை போலத் தோன்றினாலும், மனம் ஒப்பவில்லை. பெயர் கெட்டுவிடும். அப்பாவுக்கென்ன? பெயர் கெட்டால் என்ன குறைந்துவிடும்? ப்ராக்டீஸ இப்பவா தொடங்கிறாங்க? நல்லா சம்பாதிச்சாச்சு. ஆனால், ஊர் ஒன்று இருக்கிறதே. சொத்து போய்விடும் என்று பயம். திதி முடிந்து எல்லோரும் பேச விரும்பியதைப் பேசமுடியவில்லை. அப்பாவிடம் பேசிப் பழக்கமில்லை. அதுவும் இந்த மாதிரி விஷயம். அவர்களுக்குள்ளேயே குசுகுசுத்துக் கொண்டு கலைந்து போய்விட்டனர். போனில் விவாதங்கள் தொடர்ந்தன. அவளை அடித்து விரட்டலாமா? அவரைக் கட்டி வைத்து உதைக்கவா? ஊர் என்ன நினைக்கும்? ரகஸியமா கல்யாணம் முடிச்சுக்கிட்டா? சொத்துக் கேப்பாள்ள?
கொஞ்ச நாளில் அந்தப் பெண் வருவதை நிறுத்திவிட்டாள்.
சுந்தர்ராமன், அவ்வப்போது வெளியூர்களுக்கு சென்றுவிட்டு, இரவு வெகுநேரம் கழித்தே வருகிறார். அடிக்கடி இப்போது வெளியூர் செல்கிறார். காமாட்சியைப் பார்க்கப் போவதில்லை, அவளும் வருவதில்லை, என்று பிள்ளைகளும் மருமக்களும் திருப்திப்பட்டுக் கொண்டனர். புதுசு புதுசாய்ப் பெண்களைப் பார்ப்பதில் ஒன்றுமில்லை. அவர்களுக்குத் தெரியும். அவருக்கும் புரியும் யாராவது ஒருத்தியைக் காதலித்தால், அது தான் ஆபத்து. அதுவும் எல்லோருக்கும் தெரியும்படி.

No comments:

Post a Comment