Sunday, October 11, 2009

தேர்வு


அம்மா அருணுக்கு சமஸ்க்ருதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

”ஜகத்குரு சங்கரர்”

“ஜகத்குரு எப்படிம்மா ஆகமுடியும்?” ஏழாவது நூற்றாண்டில் நம்மால் அமெரிக்கா போயிருக்க முடியுமா? அப்ப அமெரிக்காவை கண்டே பிடிக்கலையே?” அருண் படிப்பைத் தொடங்கியதும் பிடித்துக் கொண்டான். அம்மா அமைதியானாள். என்ன பதில் சொல்லுவாள்?”

“சரி நீ இங்க கவனி. அஞ்சடிக்கப் போகுது மணி. இன்னும் ஒண்ணுமே படிக்கல”. அவள் அர்த்தம் சொன்னாள் “முப்பத்தி ரண்டு வயதில் ஆதி சங்கரர் பகவானுடன் கலந்தார்”.

“கலந்தார் அப்படின்னா?”

“அதாவது கலந்தார்னா இறந்தார்”

“அம்மா கலந்தார்ங்கறதுக்கும் இறந்தார்ங்கறதுக்கும் என்ன வித்யாசம்?”

“எல்லாம் ஒண்ணுதான். அதாவது கடவுளுடன் இணைந்தார்.”

“அம்மா நீங்க என்ன சொல்றீங்க? ரெண்டும் எப்படி ஒண்ணாகும்?”

“தவம் பண்ணிக்கிட்டே இருந்தா ஆகும்.”

“என்ன தவம் பண்ணாரா? சாப்பாடு சாப்பிட்டிருக்க மாட்டாரே? உடம்புல சத்தெல்லாம் தீந்துருக்கும். செத்துப் போனார். பாவம். பைத்தியக்கார்ர் தான் அவரும். வீணாச் செத்துப் போனார். இல்லாட்டி எழுவது வயது வரைக்கும் இருந்திருப்பார்”.

“மேலே சொல்ல விடுடா. லொட லொடன்னு பேச்சு. போதும். இது ஏன்? அது ஏன்? வாயப் பொத்திகிட்டு இருக்க முடியாது. நீயே இதப் படி. எல்லாப் பிள்ளைகளும் தானாப் படிக்கிறாங்க. நீயாப் படிச்சா அப்பத் தெரியும்.” அம்மா போய்விட்டாள்.

அருணுக்கு ஆண்டுத் தேர்வு தொடங்கப் போகிறது. அவனை விட அம்மாவுக்குத்தான் தேர்வு.

“அப்பா… எப்பவும் டெஸ்ட், எக்ஸாம். சரியா தீபாவளிக்கு முன்னால் எக்ஸாம். ஏன் வருது?. போன வருஷமும் இதே மாதிரித்தான“. தேர்வை விட தீபாவளிக்காக தன்னைத் தயார் செய்து கொண்டிருந்தான். “இந்தத் தடவை அந்த லக்ஷ்மியை விடமாட்டேன். ரொம்ப வெடிகளை எடுத்துட்டு வரேன்னு சொல்லிட்டிருந்தா. நான் வெடி நிறைய வச்சிருந்தா அவளுக்கென்ன? உஹும்னு அழ ஆரம்பிச்சிடுறா”

அருண் மெல்ல சத்தமில்லாமல் வந்தான். “அப்பா, ஒரு நிமிஷம் வா.”
“ஏன் சொல்லு”.
அவன் உதட்டை மூடி விரலால் பொத்தி அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினான். அப்பா அவன் பின்னால் சென்றார். எங்கே போகிறானென்று புரியவில்லை. ஜன்னல் பக்கம் விரலைக்காட்டி கிசுகிசுத்தான். “அங்கே பாரு”.
அப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனே அப்பாவின் தலையை பிடித்து இப்படியும் அப்படியும் அசைத்துச் சொன்னான். “அங்க பாரு அதோ”.
“அங்க என்ன?”
-2-
“மெல்ல ஜன்னலுக்குப் பின்னால பாருன்னா”.
“அங்க என்ன சொல்லு”
“அணில் குட்டி. மூணு. எப்படித் தூங்குதுன்னு பாரு?
ஜன்னலுக்குப் பக்கத்தில் கொய்யா மரம் இருந்தது. பலதடவை எட்டிப் பார்த்த பின் அப்பா அதைக் கண்ட்தும் அவர் கண்களும் விரிந்தன. “என்ன அழகாத் தூங்குது பாரேன். நானே முதல் தடவையாப் பாக்கேன்”.
“குட்டி அணில்கள். ஜாலியா தூங்குது பாரேன். ஒண்ணோட வால் இன்னொண்ணோட மூஞ்சில விழுந்திருக்கு.”
அப்பத்பாத்து அப்பாவுக்கு தும்மல் வந்த்து.
“மெல்லப்பா. பாரு ஒண்ணு முழிச்சிருச்சு. ச்ச்ச. இப்ப மூணும் ஓடிப் போயிரும். உங்களுக்கு இப்பத்தான் தும்மல் வரும்”.
எதுவரைக்கும் பாடம் படிச்சேன்னு கேட்க விரும்பினார் அப்பா. அவன் கவனம் வேறு விஷயத்தில் இருப்பதைப் பார்த்து பேசத் தயங்கினார்.
அம்மா அருணைத் தேடிக்கொண்டிருந்தாள். “இங்க பாரு. இப்பத்தான் அவனை இங்க விட்டுட்டு அடுகளைக்கு போனேன். இந்தப் பய என்னதான் செய்யணும்னு நெனக்கான்? கொஞ்சமாவது இவனுக்கு படிப்பில கவனம் இருக்கா? “அரூரூண்…. “ அவள் குரல் ஒரு கிலோமீட்டருக்கு மேல் கேட்டிருக்கும். திரும்பி வந்து அப்பாவைப் பார்த்துக் கூச்சலிட்டாள். “நீங்க புத்தகத்துக்குள்ள பூந்துக்கோங்க. எங்க போனான்? சொல்லுங்க. நான் அவனுக்கு சமஸ்க்ருத்த்தை முடிக்கணும். அவனுக்கு ஒண்ணுமே தெரியல. உங்க்கிட்ட கேட்டுட்டுப் போனானா?”
“எங்கிட்ட கேட்டுட்டு யாரும் போறதில்ல. நீக் கேட்டுட்டுப் போறயா?”
“ஆமா. அதுக்கென்ன? இப்பக் கேக்கறேன். சொல்லுங்க. அட ராமா. நான் என்ன செய்வேன். நாளைக்கு டெஸ்ட்ல இவன் என்ன எழுதுவான்? இவனுக்கு ஒண்ணுமே தெரியலையே?”
“வந்து சேர்வான். காலைல இருந்து படிச்சிருக்கான். பத்து நிமிஷம் சும்மா இருக்க மாட்டயா? சின்னப் பையந்தான. கொஞ்சம் ஃப்ரீயா விடேன்”
“இவனுக்கு வரும்னா நான் ஏன் இவன் பின்னால அலைறேன்.சமஸ்க்ருத்தை சொல்றான். அதை ஏன் பாடமா வச்சாங்கங்றான். என்ன ஆவான் இவன். அல்ஜீப்ரா எதுக்கு? ஜியாகிரபி எதுக்கு? பேசாம இவன வீட்லயே உட்கார வச்சிர வேண்டியதுதான்”. அவள் அடுக்களைக்குள் போய்விட்டாள்.
“அம்மா..” அருணின் குரல் கேட்டது. “வந்திட்டியா? வாடா கண்ணு” அம்மா அடுக்களையை விட்டு வெளியில் வந்தாள். ஆனால் அருணை எங்கும் காணவில்லை. “வா..இங்க வா.. உன்ன வெளுக்கல எம் பேரு… இல்ல” அடுக்களைக்குத் திரும்பினாள்.
அருண் கட்டிலுக்குக் கீழே ஒளிந்திருந்தான். ரொம்பச் சின்ன இடம். இதுக்குள் அவன் இருப்பானென்று கற்பனை செய்திருக்க முடியாது. “என்னை யாருங் கண்டே பிடிக்க முடியலயே.. நீங்க பேசுனதெல்லாம் கேட்டனே. அப்பாகூட எப்படிச் சண்ட போட்டீங்க?...”

3
அவன் கண்கள் புத்தகத்தையே பார்துக் கொண்டிருந்தன. தன்னம்பிக்கையுடன் நோட்டில் எதையோ எழுதிக் கொண்டிருந்தான். “ அப்பா… குட்டி நாய் இருந்த்தில்ல அது செத்துப் போச்சு.” ஒரு நொடி தலையை உயர்த்திச் சொல்லிவிட்டு மீண்டும் எழுத ஆரம்பித்தான். “பாவம்,.. பசுமாடு மாதிரிச் செத்துப் போச்சு”
இப்போது அப்பாவுக்கு அதிர்ச்சியாக இருந்த்து. நாய் மாதிரிச் செத்தான் என்று கேள்விப்பட்ட்துண்டு. பசுமாதிரிச் செத்தது என்றால்..”எப்படி?”
“பசுமாடு செத்த்து மாதிரி செத்த்து. இழுத்து இழுத்து மூச்சுவிட்டு…” அருண் அதே மாதிரி மூச்சுவிட்டுக் காட்டினான்.
“மாடு சாகறத நீ எங்க பாத்த?”
“நிறைய தடவை பத்திருக்கேன். எங்க ஸ்கூலுக்குப் பின்னால் பெரிய இடங்கடக்குல்ல. அதுல. வாய்ல இருந்து நுரையா வரும். நானும் நாராயணனும் தினம் பாப்போம். எதைத்தின்னுட்டு அது சாகும்னு தெரியல. மாட்டு டாக்டரும் வருவார். அப்படியும் சாகும். அங்க நிறைய பட்டாம்பூச்சியும் செத்துக் கிடக்கும். சரி, இப்ப இது என்னன்னு சொல்லுங்கப்பா..” நோட்டின் கடைசிப் பக்கத்தில் ஏதோ பறவையின் கால் சுவடுகள் போல வரைந்திருந்தான். அதைக் காட்டிக் கேட்டான்.
அப்பாவுக்குப் புரியவில்லை. படித்துக் கொண்டிருக்கும் போது, நாய், பசுமாடு, பட்டாம்பூச்சி, பறவையின் கால்விரல்கள். இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?
“மயிலின் காலுப்பா. மழையில மயிலின் கால்தடம் இப்படித்தான் இருக்கும். எங்க ஸ்கூலுக்குப் பின்னால் நிறைய மயிலும் இருக்கும்”.
அருண், என்ன வெட்டிப் பேச்சு பேசிக்கிட்ருக்க. எதெல்லாம் படிச்ச. என்ன ஆனாலும் சரி இன்னைக்கு உன்னை விளையாடப் போக விடமாட்டேன். இதுல அப்பாவும் உங்கூட சேந்து வெட்டிப் பேச்சுப் பேச ஆரம்பிச்சாச்சு”
அம்மா சொன்னதைக் கேட்டு, அப்பாவும் அருணும் உடனே நேராக உட்கார்ந்தனர்.
“அப்பா, ஃபோன்ல எல்லாரும் என்னை அக்கான்னு சொல்றாங்கப்பா” சிரித்துக் கொண்டு கேட்டான் ”சொல்லுங்கப்பா, ஏன்?”
அப்பாவுக்குப் புரியவில்லை. “சொல்லுடா.., ஏன் என்ன நடந்தது?
“இப்ப நான் ஃபோனை எடுத்தன்ல. அதுல பேசுனாங்க. அக்கா வணக்கம், மிஸ்ராஜி இருக்காங்களா? எல்லோரும் இப்படித்தான் சொல்ராங்க”.
“அக்காவாகுறது என்ன பிரச்சனை?
அவன் அண்ணன் பிரஷாந்த் காதிலும் அது விழுந்த்து. “முதல்ல எங்கிட்டயும் அதுமாதிரித்தான் கேப்பாங்க. பிறகு, நான் தொண்டைய கரகரப்பாக்கிட்டேன். இப்ப யாரும் கேக்றதில்ல”
“ஊம்.. எப்படி?”
பிரஷாந்த் இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. ஓடிவிட்டான்.

4
”அடுத்த வருஷம், எனக்கும் டீன் ஏஜ் ஆகிவிடும். அப்பறம் யாரும் அக்கான்னு சொல்ல மாட்டாங்க”
“இப்பப் படிக்கிறயா?. எழுதப் படிக்க வருதோ இல்லையோ, டீன் ஏஜ் வந்துரும்”. அம்மா இரைந்தாள்.
“உங்களுக்குத் திட்றதத் தவிர என்ன தெரியும்? எப்பப் பாரு திட்டிக்கிட்டே இருக்கீங்க.”
அடுத்த நாள் வரலாறு-புவியியல் தேர்வு. அம்மா சரித்திரத்தில் வீக். அவனிடமே விட்டுவிட்டாள். அப்பாவையும் அவனையும் திட்டிக்கொண்டே “இவன்ட்ட கேள்வி கேட்டுப் பாருங்க. பெரிய சரித்திரப் பேரறிஞர்கள்” கோபமும் சிரிப்பும் லாவா மாதிரிப் பொங்கி வரும்போது நமது பதிலுக்குக் காத்திருப்பதில்லை. பதில் பேச நம்மாலும் முடிவதில்லை. அருணுக்கு இது தெரியும். சொன்னதால் எந்தப் பயனும் இல்லையென்று அவன் முகம் காட்டியது. அப்பா மீதும் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் அவனுக்குத் தெரியும்.
அவன் அப்பா பக்கத்தில் உட்கார்ந்து, சரித்திரப் பாடம் எழுதிக் கொண்டிருந்தான். அப்பா பலமுறை எச்சரித்தும் முதல் பாடத்தில் இரண்டாவது வரியிலேயே படிப்பது நின்று விட்ட்து.
“அப்பா, சொக்குத் தாத்தா நம்ம வீட்டுக்கு ஏன் வர்றதில்ல? கேட்டுவிட்டு அப்பாவின் முகத்தைக் கூர்ந்து கவனித்தான். “அவரு பேசறதக் கூட நான் பார்த்த்தில்லை. சொல்லுங்களேன். ஏன் வர்றதில்லை?
முதல் சுதந்திரப் போரின் தோல்விகளைப் பற்றிய கேள்விகளுக்குப் பதில் எழுதிக் கொண்டிருந்த போது இதைக் கேட்டான்.
“அப்பறமா சொல்றேன்.”
“முதல்ல சொல்லு. எப்பவும் இப்படித்தான். அப்புறம் சொல்றேன்னு சொல்லவே மாட்டீங்க.”
“சரித்திரத் தேர்வுக்கப்புறம் நிச்சயமாச் சொல்லுவேன்”. அப்பா பக்கத்தில் வந்த்தும், இந்த மனப்பாடம் செய்ற படிப்பு நின்றுவிடும். அருணின் பூகோளப் புத்தகம் காணாமல் போய்விட்ட்து. இது முதல் தடவை அல்ல. மாசத் தேர்வென்றாலும், வருடத் தேர்வென்றாலும் ஏதாவதொரு பாடப் புத்தகம் தொலைந்துவிடும்.
ரொம்ப நேரமாக எந்தச் சத்தமும் இல்லையென்று அம்மாவுக்குப் பதற்றம். “அருண் இவ்வளவு கவனத்துடன் படிக்க மாட்டானே?”
அருண் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தான். “அம்மா, புத்தகம் கிடைக்கல”
“அதான பாத்தேன். அதைத்தான் சத்தமில்லாம தேடுறியா? ரொம்பக் கவனமாப் படிச்சிக்கிட்டு இருக்கான்னு நான் நினச்சுக்கிட்ருக்கேன். அருண் நீ ஒவ்வொரு தடவையும் இதைத்தான் செய்ற. அண்ணன் புத்தகம் எப்படித் தொலையாம இருக்கு. இப்ப புத்தகம் கிடைக்கல உன்னைத் தொலச்சிட்டேன், கொன்னுபோட்ருவேன். தேடு நல்லாத் தேடு.”


அம்மாவின் கூப்பாடு, அவனுக்கு பறந்துவரும் கத்தி மாதிரி. உடனே ஓடிப்போய்த் தேட ஆரம்பித்தான். கட்டிலுக்குக் கீழே, சோஃபாவின் மெத்தையின் கீழே, பழைய பத்திரிக்கைகளுக்குப் பின்னால், அவன் புத்தகங்கள் இருக்கும் இடங்கள் இவைதான். சந்து பொந்துகளில் அறிந்தும் வைப்பான் அறியாமலும் வைப்பான். அப்பா சரித்திரப் பாடத்தில் டெஸ்ட் வைக்கும் நாளில் சரியாக, சரித்திரப் புத்தகம் காணாமல் போய்விடும். டெஸ்டு முகூர்த்தம் முடிந்த்த்டும் கிடைத்துவிடும். புவியியல் புத்தகம் காணாமல் போய்விடும். தீப்பெட்டி அட்டை, பழைய பேட்டரி செல், சாக்பீஸ், ஸ்டிக்கர், டபிள்யூ.டபிள்யூ.ஈ. அட்டைகள், சாக்லெட் தாள்கள், சச்சின் டெண்டுல்கர் படம் நாய்களின் கழுத்தில் கட்டும் மணி இதெல்லாம் ஒருபோதும் காணாமல் போனதில்லை.
“அருண், தண்ணீர் டாங்கி வழியாப் போகாதெ. அங்க ஒரு கடி நாய் இருக்கு. ராமச்சந்திரன் மகளைக் கடிச்சிருச்சு”.
“அம்மா, அது எந்தக் கலர் நாய்?”
“கறுப்பு மூஞ்சி செவலை உடம்பு”
“அதுக்கு என்னைப் பிடிக்கும்மா. எஞ்சத்தம் கேட்ட்தும் ஓடி வந்திரும். அதுக்கு நானும் எட்வர்ட்டும் ரொட்டி கொடுப்போம்.” அம்மா பையன் இருவரும் புத்தகம் டெஸ்ட், மிரட்டல் எல்லாவற்றையும் மறந்துவிட்டனர்.
“நான் சொல்றேன். நீ அங்க போகாதே. கடிச்சிட்டாப் பதினாலு ஊசி இவ்ள இவ்ள பெருசாப் போடுவாங்க. வயித்தில. புரியுதா?”. அருண் இதைப் பற்றி கவலைப்படுவதில்லை. தன் நாயின் மீது அவ்வளவு நம்பிக்கை. “அம்மா, அது ஒண்ணும் ரொம்பப் பெரிசு இல்லையே. நேத்துக் கூட அது கூட வெளையாண்ட்டோம். ரொம்ப ஜாலியா இருந்த்து. மணின்னு கூப்பிட்டேன். இன்னொரு பையனைப் பார்த்துச் சாடை காட்டினேன். அவனத் துரத்தி விரட்டுச்சு. அவன் ஓடியே போய் வீட்டுக்குள்ள புகுந்துக்கிட்டான். இப்படி சேட்டைகளை விபரிக்கும் போது அவன் முகம் காலைச் சூரியன் போல் ஜொலிக்கும்.
அன்று அம்மா ஒரு திருமணத்துக்குப் போக வேண்டியிருந்தது. அவளுக்கு எல்லாவற்றிலும் பதட்டம். அவனையும் கூட்டிப் போக வேண்டுமென்று நினைத்தாள். பிள்ளைகளோடு விளையாடுவான். ஏதாவது சாப்பிட்டுக் கொள்வான். நாளக்கிப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொள்ளலாம். “எல்லா ஹோம் ஒர்க்கும் முடிச்சால்தான் கூட்டிப் போவேன்” அவள் சொன்னதை அவன் காதில் வாங்கிக் கொண்ட்தாகவே தெரியவில்லை. அமைதியாக இருந்தான்.
“காதில விழுதா? டெஸ்ட் முடிக்கலன்னா கூட்டிப் போக மாட்டேன்”
அவன் சொன்னான் “நான் வரலே. யார் போவா அங்க. ஒரே போரடிக்கும்”. அப்பாவும் அவனை வருமாறு அழைத்தார். “நான் படிக்கப் போறேன்”
இப்போது என்ன செய்வது? அம்மாவின் திட்டம் தவிடு பொடியாகி விட்டது. அவள் கிளம்பிக் கொண்டிருந்தாள். தலைசீவிக் கொள்வதும், முகத்தைத் துடைத்துக் கொள்வதும், நடு நடுவில் அவன் படிக்கிறானா என்று எட்டிப் பார்த்துக் கொள்வதுமாக இருந்தாள். இப்படி அவனை விட்டுச் சென்றால் கவலை நான்கு மடங்காகிவிடும். இந்த ஜன்மம் முழுவதுக்கும் சேர்த்து உபதேசம் செய்வாள். இதைச் செய் அதைச்செய் என்று கட்டளைகள் இடுவாள். அருண் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருப்பான். அம்மா இந்தப் பக்கம் வெளியே போனதும் அவனும் வெளியே பறந்துவிடுவான். மணி ஆறாகிவிட்டாலும் அம்மா இன்னும் கிளம்பவில்லை. அருண் அம்மாவின் முன்னால் நின்றான்.
“அம்மா என்ன செய்ற. கெட்ட நாத்தம் வருது”
6
அதற்கு அம்மா என்ன பதில் சொல்லுவாள்?. அவன் தொடர்ந்தான் “அம்மா இங்கிலிஷ் டீச்சர்ட்டப் போனா கெட்ட நாத்தத்தில மூக்கே வெடிச்சிரும். என்னத்தையோ போட்டுக்கிட்டு வர்றா. ஒரு நாள் எங்கிட்ட எம் மேஜையில ஒரு புத்தகம் இருக்கு எடுத்திட்டு வான்னு சொன்னாங்க. கேளேன்…. அம்மா… அதுல ஃபேர் அண்ட் லவ்லி, பவுடர், லிப்ஸ்டிக் இன்னும் என்னென்னமோ இருந்த்து. இதெல்லாம் ஏம்மா ஸ்கூல்ல வச்சிருக்காங்க.”
அம்மா கன்னத்தில் எதையோ வைத்துக் தேய்த்துக் கொண்டிருந்தாள். “என்னை ரெடியாக விடுவியா இல்லயா? படிச்சு முடிச்சிட்டயா?”
“இப்ப முடிச்சிருவேன்ல். நான் சொல்லிட்டேன்ல. அம்மா சொல்லு இதெல்லாம் எதுக்கு வச்சிருக்காங்க. ஸ்கூல்ல”.
“அதெல்லாம் உனக்குப் பிடிக்காதா?”
அருண் அமைதியாக இருந்தான். என்ன பதில் சொல்ல.
“உன் பொண்டாட்டி போடுவாள்ள…. அப்ப..?
“எனக்கு கவிதா மேம் தான் பிடிக்கும் அவங்க கிட்ட எந்த வாசனையும் வராது”.
அம்மா நினைத்துக் கொண்டாள் “படிக்கிறத்த் தவிர எல்லா வேலையும் பிடிக்கும்”
அம்மா, எங்க கிளாஸ்ல ஒரு பொண்ணு இருக்கா. அவளுக்கும் பொறந்தநாள் பதினைஞ்சு மார்ச் என்னை மாதிரி. நான் பன்னிரண்டு மணிக்குத் தான பிறந்தேன். அவ பன்னிரண்டரைக்குப் பொறந்தாளாம்”
“நீ பன்னிரண்டே காலுக்குப் பொறந்தெ”
“அப்படின்னாலும், அவளைவிட பதினைந்து நிமிஷம் பெரியவந்தான.”
இந்தக் கணக்கெல்லாம் அவனுக்குத் தப்பாமல் வரும். பள்ளிக்கூடக் கணக்குத்தான் தகராறு. அடுத்தநாள் கேட்டுக் கொண்டிருந்தான். “அப்பா. ஏம்ப்பா அல்ஜீப்ரா படிக்கிறாங்க.. அதில என்ன இருக்கு” அவன் கேள்விகள் கேட்கும் மனநிலையில் இருந்தான். அப்பாவும் தான்.
“எல்லாத்துக்கும் ஏதாவது பலன் உண்டு. சிலதுக்கு இப்பவே இருக்கும் சிலதுக்கு நாளைக்கு”
“அது எப்படி?”
லாப நஷ்டக் கணக்கு, சதவீதம் படிக்கிறீல்ல. கடைக்குப் போனாப் புரிஞ்சுக்கலாம். எதுல கமிஷன் கிடைக்கும்? எது விலை மலிவு. எந்த பேங்கில வட்டி அதிகம் அதுமாதிரி. அல்ஜீப்ரா பெரிய பெரிய கணக்குப் போடும்போது தேவைப் படும். நிலாவுக்கு எவ்வளவு தூரம்? ஒலியின் வேகம் ஐன்ஸ்டீன் த்த்துவம் அது மாதிரி.”
அவனுக்கு முதலில் சொன்னது மட்டும் புரிந்த்து. அமைதியாகப் படிப்பதில் ஈடுபட்டான். ரொம்பக் கேள்வி கேட்டால் அப்பாவும் அம்மாவும், கூப்பாடு போட்டு திட்டித் தீர்த்து வாயை மூடி விடுவார்கள். கொஞ்ச நேரம் கழித்து அமைதியைக் கலைத்தான்.
“அப்பா இதெல்லாம் ஒருத்தனுக்குப் பிடிக்கலைன்ன்னா? என்ன ஆகும் அதுனால?”
அப்பாவிடம் அதற்குப் பதில் கிடையாது. “நீ முதல்ல ஹோம் ஒர்க்க முடி..”
7

அல்ஜீப்ராவில் பாக்கியிருந்த்து. முதல் கேள்வியிலேயே வண்டி நின்று விட்ட்து.
“உனக்குத் தெரியலைன்னா கேட்டா என்ன? எனக்குப் பரிச்சயா உனக்கா?” திடீரேன கோபத்தில் இரண்டு மூன்று அடிவிட்டார். முடியைப் பிடித்து உலுக்கினார். “இப்பக் கணக்குப் போட்டு முடியறவரைக்கும் இங்கிருந்து எந்திருச்ச தொலச்சிட்டேன். குறுக்குக் கேள்வி மட்டும் கேட்க மட்டும் எப்படித் தெரியுது? மூச்சு விட்ட நொறுக்கிட்டன் நொறுக்கி..”
கொஞ்ச நேரம் கழிந்து மொட்டை மாடியில் தவறு செய்துவிட்ட உணர்வுடன் உலவிக் கொண்டிருந்தார் அப்பா. “எதுக்கு அடிச்சேன்? அடிச்சாப் படிப்பு வந்திருமா? தப்பில்லையா? கண்ணுல எங்காவது பட்டிருந்தா? அவன் சீக்கிரம் அழமாட்டானே? இன்னைக்கு குலுங்கிக் குலுங்கி அழுதுக்கிட்டு இருக்கான்”
“கணக்கு, கணக்கு கணக்கு.. சாகவா? சாயந்தரம் அஞ்சு மணியில இருந்து எட்டு மணிவரைக்கும் படிக்கிறனா இல்லையா? கிரிக்கட் வேண்டான்னீங்க போகலை. கம்ப்யூட்டர் வேண்டாம் அங்கயும் போகலை. உலகத்ல எல்லாப் பிள்ளையும் ஒரே மாதிரியா இருக்கு. உங்களுக்குந்தான் படிப்பு வரலை. அடிங்க அடிங்க நல்லா அடிச்சுக் கொல்லுங்க…”
மீண்டும் மீண்டும் கண்ணீர் வழியும் அவன் முகம் மனக்கண்ணில் வந்துசென்றது. பயந்து போயிருந்தான். சீக்கிரம் எழுந்து படிக்கத் தொடங்கினான். அலாரம் வைத்துவிட்டுத் தூங்கினான்.
விடிந்தும் விடியாத காலையில் வரண்டாவிலிருந்து கூப்பிட்டான் “அப்பா அப்பா..நிலாவைப் பாருங்க.. எவ்வளவு அழகா இருக்கு மரத்துக்கு நடுவில். சீனரி நல்லா இருக்கில்ல. பரிட்சை முடிஞ்சதும் இதைப் படமா வரைவேன்”
நேற்று அந்த அடி வாங்கினான் என்றோ, இன்று அவனுக்குப் பரிட்சை என்றோ யாரும் சொல்ல முடியாது.

ஹிந்தி மூலம் : பிரேம் பால் ஷர்மா.
தமிழில் : வே ராஜகோபால்.

No comments:

Post a Comment