Tuesday, October 06, 2009

இந்தக் காலத்தில்

மழையில்லாமல் வெக்கையுடன் திங்கட்கிழமை விடிந்த்து. காலையிலேயெ எழுந்துவிடும் பழக்கமுள்ள, பட்டம் பெறாத பல் மருத்துவர் அரிலோ எஸ்கவர், ஆறுமணிக்கு தன் கிளினிக்கைத் திறந்தார். கண்ணாடிக் கூடுகளில் பிளாஸ்டர் அச்சுக்களில் வைத்திருந்த பொய்ப்பற்களை, தொழிலுக்குண்டான சிறு கருவிகளை மேஜை மீது வரிசையாக காட்சிக்கு அடுக்கி வைத்தார். காலர் இல்லாமல் கழுத்தை மூடிய கோடுபோட்ட சட்டையும், தோள் பட்டைகள் வைத்த பேண்ட்டும் போட்டிருந்தார். மெலிந்த நெட்டையான உருவம். காது கேட்காதவர்களைப்போல் நிலைமைக்குப் பொருத்தமில்லாதபடி பார்வை.
மேஜையில் பொருட்களை அடுக்கிய பிறகு, டிரில்லரை நாற்காலியின் பக்கம் இழுத்தார். பொய்ப்பற்களுக்கு பாலிஷ் போட ஆரம்பித்தார். என்ன செய்கிறாம் என்று யோசிக்காமலே தொடர்ந்தார். தேவையில்லாத போதும் அடிக்கடி துணியை இழுத்துவிட்டுக்கொண்டார். எட்டு மணிக்கு ஜன்னல் வழியே வானத்தைப் பார்க்க வேலையை நிறுத்தினார். அடுத்த வீட்டின் கம்பிகள் மீது அமைதியாக இரண்டு கழுகுகள் வெய்யிலில் ஈரம் காய்ந்து கொண்டிருந்த்தைப் பார்த்தார். மத்தியானச் சாப்பாட்டுக்கு முன் மழை பெய்துவிடும் என்ற நினைப்பில் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தார். அவருடைய பதினொரு வயது மகனுடைய கீச்சுக் குரல் அவருடைய கவனத்தை குலைத்தது. “அப்பா”
“என்ன”
“மேயர் தன் பல்லைப் புடுங்கி விடுவீர்களா என்று கேட்கிறார்”
“நான் இங்கே இல்லைன்னு சொல்”
அவர் ஒரு தங்கப் பல்லை பாலிஷ் செய்து கொண்டிருந்தார். கை நீளத்தில் அதைப் பிடித்துக் கொண்டு ஒண்ணரைக்கண்ணால் பார்த்தார். அவர் மகன் மீண்டும் சிறிய முன்னறையிலிருந்து கத்தினான்.
“நீ பேசறதை அவர் கேட்கமுடியும் அதான் சொல்றார் நீ இருக்கயாம்”
அவர் பல்லைப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த வேலையை முடித்துவிட்டு மேஜையில் வைத்தபின்னால் சொன்னார் “அதான” டிரில்லரை மீண்டும் ஓட்டினார். கார்டுபோர்ட் பெட்டியிலிருந்த்து இன்னும் செய்ய வேண்டிய வேலைகளுக்கான பல பொருட்களை வெளியில் வைத்து தங்கப்பல்லுக்கு பாலிஷ் போட ஆரம்பித்தார்.
“அப்பா”
“என்ன?”
முகபாவம் மாறவே இல்லை.
“அவர் பல்லைப் புடுங்கவில்லையென்றால் உன்னைச் சுட்டுவிடுவாராம்”


அவசரமில்லாமல் அமைதியாக டிரில்லரை நிறுத்தி, நாற்காலியை விட்டுப் பின்னால் தள்ளிவிட்டு மேஜையின் டிராயரைத் முழுதாக வெளியே இழுத்த்தார். அங்கே கைத்துப்பாக்கி இருந்த்து. “சரி வந்து என்னைச் சுடும்படி அவனிடம் சொல்”
நாற்காலியைப் எதிப்புறமிருந்த கதவுப் பக்கம் தள்ளினார். அவருடைய கை டிராயரின் முனையில் இருந்த்து. மேயர் கதவுப் பக்கம் வந்தார். வலியினால் முகத்தில் இடது பக்கம் மழித்திருந்தார். வலது பக்கம் வீங்கியிருந்த்து. ஐந்து நாள் தாடி இருந்தது. பல இரவுகளின் துயரம் அவன் களைத்த கண்களில் தெரிந்த்து. விரல் நுனிகளால் மேஜை டிராயரை முடிவிட்டுச் மெதுவாகச் சொன்னார்:
“உட்கார்”
“காலை வணக்கம்” என்றார் மேயர்.
“காலை வணக்கம்” பதிலுக்குச் சொன்னார்
கருவிகள் கொதித்துக் கொண்டிருந்த போது, மேயர் மண்டையை நாற்காலியில் சாய்த்துக் கொண்டார். இதமாக இருந்த்து. மூச்சுவிடக் கஷ்டமாக இருந்த்து. அது பாடாவது க்ளினிக். பழைய நாற்காலி, காலால் இயங்கு டிரில்லர், களிமண் குடுவைகள் வைத்திருந்த கண்ணாடி அலமாரி. நாற்காலிக்கு எதிர்ப்புறம் தோள் உயரத்துக்கு திரையால் மூடிய ஜன்னல். பல்டாக்டர் தன் பக்கத்தில் வந்ததும் வாயைத்திறந்தார்.
அரிலியொ அவன் தலையை வெளிச்சத்துக்குத் திருப்பினார். கெட்டுப்போன பல்லைப் பார்த்துவிட்டு, மேயரின் தாடையை ஜாக்கிரதையாக அழுத்தி மூடினார்.
“மயக்க மருந்து இல்லாமல் தான் எடுக்கணும்”
“ஏன்?”
“சலம் வைத்த கட்டி இருக்கிறது”

மேயர் அவர் கண்ணில் நேராகப் பார்த்தார். “சரி” சொல்லிவிட்டு சிரிக்க முயன்றார். அரெலியொ பதிலுக்குச் சிரிக்கவில்லை. கருவிகளை கொதிக்க வைத்த பேசினை எடுத்துக் கொண்டு மேஜைக்கு வந்தார். இடுக்கிகளால் வென்னீரிலிருந்து கருவிகளை எடுத்தார். துப்புவதற்கான கோப்பையைக் ஷூ அணிந்த கால்களால் தள்ளிவிட்டு, வாஷ் பேஸினில் கைகளைக் கழுவச் சென்றார். மேயரைப் பார்க்காமலேதான் இதையெல்லாம் செய்தார். இவரை விட்டு மேயரின் கண்கள் அகலவேயில்லை.
அறிவுப் பல் தான் கெட்டுப் போயிருந்த்து. அரெலியொ கால்களை அகற்றி இடுக்கியால் பல்லை இறுக்கிப் பிடித்தார். மேயர் நாற்காலியைப் பிடித்து இறுக்கிக் கொண்டார் கால்களை வசதியாகத் தளர்த்திக் கொண்டார். விதைக்கொட்டையில் ஜில்லேன்று ஏறுவதை உணர்ந்தார் ஆனால் ஒரு சத்தமும் போடவில்லை. பல்டாக்டர் தன் மணிக்கட்டை மட்டும் அசைத்தார். எரிச்சலைக் காட்டாமல், ஆனால் மெதுவாக்க் கசப்புடன் சொன்னார் “இருபது பேர் செத்தார்களே அதுக்கு இப்ப பதில் கிடைக்கும்”
மேயர் தாடை எலும்புகள் நொறுங்குவதை உணர்ந்தார். கண்களில் நீர் நிரம்பியது. பற்கள் வெளிவருவதை உணரும் வரை அவர் மூச்சுவிடவில்லை. பின் கண்ணீருக்கிடையில் அதைப் பார்த்தார். அவருடைய வலிக்கும் அதற்கு சம்பந்தமே இல்லாதது போலிருந்தது. முந்தைய ஐந்து இரவுகளின் கொடுமையை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.
வேர்த்து, விறுவிறுத்து, துப்ப வைத்திருந்த கோப்பைக்குக் குனிந்தார். மேல் கோட்டின் பட்டன்களைத் திறந்தார். பேண்ட் பாக்கெட்டிலிருந்த கைக்குட்டையை எடுத்தார். பல் டாக்டர் சுத்தமான துணியொன்றை நீட்டினார்.


“கண்ணீரைத் துடைத்துக் கொள்”
மேயர் துடைத்துக் கொண்டார். அவர் நடுங்கிக் கொண்டிருந்தார். பல் டாக்டர் கைகளைக் கழுவும் போது, உடைந்து நொறுங்கிக் கொண்டிருந்த கூரையை, தூசி படிந்த எட்டுக்கால் பூச்சி வலையில் இருந்த அதன் முட்டைகளை, அதில் சிக்கியிருந்த செத்த பூச்சிகளைப் பார்த்தார். கைகளைத் துடைத்துவிட்டு பல் டாக்டர் திரும்பிவந்தார். “வாயை உப்புத்தண்ணீரில் கொப்பளித்துவிட்டுப் படு”.
மேயர் எழுந்து நின்று, ராணுவ பாணியில் சல்யூட் அடித்து குட் பை சொன்னார். கால்களை சரிசெய்து கொண்டு, பட்டனைப் போடாமல் வாசலை நோக்கி நடந்தார்.
“பில்லை அனுப்பிவிடு” என்றார்
“உனக்கு அனுப்பவா? அல்லது ஆபீஸுக்கா?
மேயர் அவரைப் பார்க்கவில்லை. கதவைமூடிக்கொண்டே சொன்னார் “எல்லாம் ஒண்ணுதான்"

------------------------------------------------------------------------------------------------
Gabriel Garcia Marquez-
மொழிபெயர்ப்பு

No comments:

Post a Comment