Friday, September 04, 2009

திரையிலும் திரைக்கு முன்னாலும்

திரைப் படங்கள் தங்கள் தளத்தை மீறி, அரசியலிலும் இன்னும் மற்ற துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகிற தமிழ்நாட்டில் நடந்திருக்கக் கூடிய ஒரு நிகழ்வு, வங்காளத்தில், அதுவும் ஐம்பதுகளில் நிகழ்ந்தது என்பதை அறிந்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
திரையில் வரும் கதைத் தலைவர்களைப் பார்த்து நேரடி வாழ்விலும் அவர்கள் கதாநாயகர்கள் என்பதாக மாயை கொண்டு அவர்கள் பின்னால் செல்லத் தயாராக நிற்கும் ஒரு கூட்டம், தமது பண, பதவி, வேட்டைக்காக மாயைகளை திட்டமிட்டு உருவாக்கி மக்களை ஏமாற்றும் இன்னொரு கூட்டம், இவர்களுக்கு நடுவே அல்லாடும் கூட்டம், இவற்றிடையே தமிழ்நாட்டின் அரசியலும் மற்றத் துறைகளும் மாட்டிக் கொண்டு விழிப்பது இன்றைய காட்சி.
இதற்குச் சற்றும் குறையாமல், திரைப்பட வில்லன்களைப் பார்த்துப் பயப்பட்ட கூட்டமும் காலமும் ஒன்றிருந்தது. இன்னும் இருக்கக் கூடும். மெல்ல மெல்ல, கதைத் தலைவர்கள், தன்னேரில்லாத தலைவன் என்ற நிலையிலிருந்து மாறி, தீய குணங்கள் உடையவனாக மாற ஆரம்பித்தனர். அவர்கள் கவர்ச்சிகரமாக காட்டப்பட்டனர். சின்னவயதில் நம்பியாரைக் கண்டு நடுங்கியவர்களைப் பார்த்திருக்கிறேன்.
இது போன்ற நிகழ்வொன்று வங்காளத்தில் 1951ல் நிகழ்ந்ததை சமீபத்தில் அறிந்து கொண்டேன். அதைப் பற்றிய குறிப்பு இது.
“வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் ஒருபகுதியாக மிட்னாப்பூர் என்ற ஊரில் நடந்த மிகக் கொடூரமான போலிஸ் வன்முறையை எதிர்த்து மக்கள் கலகம் செய்தனர். அதனால் அரசின் வன்முறையும், கலகமும் தொடர்ந்து நடந்தன. மேலும் மேலும் கிராமத்தினர் பெரும் துன்பத்துக்குள்ளாயினர். ஒருநிலையில் அடக்குமுறை உச்சத்தை அடைந்ததும் போலிஸ்காரர்கள் கிராமத்தினர் மீது துப்பாக்கியால் சுட மறுத்தனர். இந்த நிகழ்வுகள் மக்களிடையே பெரும் ஆத்திரத்தைத் தூண்டிவிட்டாலும், அன்னிய அரசின் அடக்குமுறைத் தந்திரங்கள் காரணமாக கொஞ்ச நாளில் அடங்கிவிட்டது.



அது ஆறாத காயமாக இருந்ததை பத்தாண்டுகள் பின்னர் நடந்த நிகழ்வுகள் காட்டின. இந்த நிகழ்ச்சியை ஆதாரமாக வைத்து 1949ல் ஹெமந்த் குப்தா என்பவர் பயாலிஷ்(42) என்று படம் எடுத்தார். முதலில் அது தடை செய்யப்பட்டது பின்னர் மாற்றங்களுடன் 1951ல் வெளிவந்தது. அதில் மிட்னாபூர் போலிஸ் நிலைய பொறுப்பாளராக பிகாஷ் ராய் என்பவர் நடித்தார். பிகாஷ் ராயின் நடிப்பில் படம் சிறப்பாக வந்திருந்தது. படத்தில் போலிஸ் இன்ஸ்பெக்டரின் கொடிய நடவடிக்கைகளைக் கண்டு கொதித்தெழுந்த பலர் பிகாஷ் ராயின் வீட்டில் தினமும் வந்து கல்லடித்தனர். இது பல நாட்கள் தொடர்ந்தது. அவர் வீட்டுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டது. அறிவாளிகள், பொதுமக்கள் மத்தியில் கல்லடி அவருடைய நடிப்புக்கு உயர்ந்த பட்சப் பரிசாக கருதப்பட்டது.
திரையில் காட்டப்படும் ஒரு பாத்திரம், அதுவும் வில்லன் பாத்திரம் இத்தகைய எதிர் வினையை ஏற்படுத்தியிருக்குமா என்பது வியப்பென்றாலும் இன்னும் வியப்புக்குரிய சில உண்மைகள், நிகழ்ச்சியின் பரிமாணத்தை மாற்றக்கூடியவை.
முதலில் இந்தப் படம் அரசியல் காரணங்களுக்காக பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டது. பின்னர் 1951ல் பல மாற்றங்களுடன் வெளியிடப்பட்டது. (எந்த அரசாக இருந்தாலும் போலிஸ்காரர்கள் சுடமறுப்பதை பெரிதாகக் காட்டினால் – அது சுதந்திரப் போரின் ஒரு பகுதியான சரித்திர நிகழ்வே ஆனாலும் கூட – பொறுத்துக் கொள்ள முடியுமா? போலிஸ் என்பது அரசின், சமூகத்தின் உச்சகட்ட, சட்டபூர்வமான வன்முறையின் கருவிதானே)
முன்னர் 1942ல் கொடுமையை நிகழ்த்திய போலிஸ் இன்ஸ்பெக்டர், 1951ல், கல்கத்தாவின் போலிஸ் கமிஷனராக இருந்தார். பத்தாண்டுகளில் வெள்ளை அரசும், சுதந்திர இந்திய (வங்க?) அரசும் அவருக்குப் பதவி உயர்வுகளை அளித்திருந்தன.
இந்த இரண்டு உண்மைகளும் நடந்த கல்லெறி சம்பவத்தின் மீது கேள்விகளை எழுப்புகின்றன.
மக்களின் சினம், (பத்தாண்டுகள் வரை காத்திருந்து வெடிக்கும் அளவு சினம் எழுந்திருந்தால்) கொடுமையை நிகழ்த்திய நிஜ வில்லனான, போலிஸ் இன்ஸ்பெக்டர் மீது 1942ல் ஏன் வெடிக்கவில்லை? 1951-2ல் எழுந்த சினம், நிஜ வில்லனான, முந்தைய இன்ஸ்பெக்டரான) போலிஸ் கமிஷனர் மீது எழாமல், அவரைப்போல் நடித்த பிகாஷ் ராய் மீது எழுந்த காரணம் என்ன?
நல்ல நடிப்பு என்பது கேள்வியின் எல்லாப் பரிமாணங்களுக்கான விடையாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் நிஜவில்லன் பொது மக்கள் பார்வையில் படும் பதவியில் இருந்தார். போலிஸ் கமிஷனர் பதவி, அதுவும், 1951-52ல் சாதாரணமானதல்ல. மக்கள் சினம் ஏன் அவர் மீது செல்லவில்லை. அவர் பாதுகாப்பான பதவியில் இருந்ததாலா?
இதை எப்படி விளங்கிக் கொள்வது? 1942ல் மக்களின் இயலாமை, வெள்ளை அரசின் பயங்கர அடக்குமுறையின் முன்னால் ஒடுங்கிய சினம், 1951ல் போலிஸ் கமிஷனராக இருந்த, அரசின் வன்முறையின் பிரதிநிதியாக இருந்தவர் மீது வெளிப்பட முடியாமல் மழுங்கிப்போன சினம், அந்தப் பாத்திரத்தைப் போல நடித்த( சிறப்பாக நடித்த) பிகாஷ் ராய் மீது வடிந்து விடுகிறதா?
சிறுவயதில் அடக்கப்பட்ட சினம், பெரியவனானபின் யார் மீதாவது, வேறு எங்காவது வெளிப்படும் என்று கேள்விப் பட்டதுண்டு. மக்களுக்கும் (Masses) இது பொருந்துமா?
இந்த நிகழ்வுக்கு குயுக்திமுறையில், விதண்டாவாதமாக இன்னொரு விளக்கமும் அளிக்க முயலலாம். நிஜ வன்முறையை நிகழ்த்திய, இன்ஸ்பெக்டர், போலிஸ் கமிஷனராக இருந்ததால், முன்பு மக்களுக்குத் தன்மீது இருந்த சினத்தைக் கணக்கில் கொண்டு, திரைப்படத்தைப் பார்த்து ஏற்படும் மக்களின் சினம் தன் மீது வந்துவிடக்கூடாதென்று, திசைதிருப்பும் முயற்சியாக கல்லெறி நாடகத்தை அரங்கேற்றி இருக்கலாம். பிகாஷ் ராயின் நடிப்பைப் புகழ்வது போல, அதன் மயக்கத்தில் பிகாஷ் ராயும் மக்களும் மயங்கித் திளைக்கவிட்டு, தன் பதவியைக் காத்துக் கொண்டிருக்கலாம்.
இது ரொம்ப அதீதமான விளக்கமாகத் தெரிகிறது. 1942ல் இப்படி ஒரு வன்முறையை அரங்கேற்றிய ஒருவர், அடுத்த பத்தாண்டுகளில் அன்னிய அரசிலும், காங்கிரஸ் அரசிலும் தனது கடந்த கால சிறப்புகளின் காரணமாக அல்லது அவற்றை மறக்கடித்து - அரசுகளும், மக்களைப் போலவே மறக்கவும் மன்னிக்கவும் செய்கிறதோ? – 1952ல் வங்காளத்தின் தலைநகரில் போலிஸ் கமிஷனராகிரார் என்றால் அவரின் ‘திறமை’ அதிகமாகத்தான் இருக்க வேண்டும்.
இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் போலிஸ்காரர்கள் சீருடை அணியாமல் பொதுமக்கள் போல் வந்து அரங்கேற்றும் வன்முறை நாடகங்கள் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியாது.

No comments:

Post a Comment