Wednesday, December 02, 2009
காந்திஅடிகள் - சாதாரணப் பிரஜையின் பார்வையில்..

காந்தி அடிகள் என்ற பெயரைக் கேட்டதும் ஒரு இந்தியப் பிரஜை பெருமிதம் கொள்கிறான். வன்முறையை நம்புகிறவனாக இருந்தாலும், அஹிம்சையை (இன்முறை என்று சொல்லலாமா? – என் பள்ளியில் இந்த வார்த்தையை அஹிம்சைக்கு மாற்றாக, அதே பொருளின் உபயோகித்த, மார்டின் லூதர் கிங் பற்றிய ஒரு புத்தகத்தைப் படித்த ஞாபகம்) நம்புகிறவனாக இருந்தாலும் இந்தப் பெயர் ஒரு மனதில் பேரலையை உண்டாக்குகிறது. அது ஒரு ரசிகனுக்கு மட்டும் தோன்றும் மயக்கமல்ல. மிகவும் உண்மையானது. 1915ல் இருந்து 1948 வரை இந்திய சமூகத்தை மிக நேரடியாக அசைத்த பேரலையின் நினைவுகள் தான் அது. அது நல்லது அல்லது கெட்டது என்று வாதிடும் அறிவுஜீவிகள் உண்டு. ஆனால் அதன் தாக்கம் இல்லாத இந்தியரைக் காண்பது அரிது. புத்தருக்குப் பிறகு இரண்டாவது அலையாக அது நிகழ்ந்தது.
காந்தியைப் பற்றிய நமது பெருமிதம் எப்போதும் உவகை தரக்கூடியதாக இருக்கும் அதே வேளையில், அவரைப் பார்த்து, அறிந்து ஏற்படும் பிரமிப்பும் அது போன்று ஒரு சத்தியவானாக சாதாரண மனிதராகிய நாம் ஒருபோதும் ஆக முடியாது என்ற இயலாமையும் ஒருங்கே ஏற்படும். அவருடைய அரசியல் கருத்துக்கள், ஆன்மீக தேட்டம், சமூகக் குறிக்கோள்கள் அவருடைய காலத்தாலும், அவருடைய அனுபவத்தாலும் வரையறுக்கப் பட்ட போதும், அவர் உண்மைமீது கொண்ட அசைக்க முடியாத பற்றினால், பெரும்பாலான விஷயங்களில் சிந்தனையையும், விவாதத்தையும், தர்க்கத்தையும் அரசியல் உலகின் நடைமுறையாக்கிக் காட்டினார்.
ஒரு சாதாரண மனிதன் காந்தி இன்றைய நிலையில் அவரிடமிருந்து பெறக்கூடியது என்ன? இன்றைய நிலையில் தான் சரியென்று நம்புவதை சொல்வதும், கடைப்பிடிப்பதும், அன்பும் பரிவும் அடுத்தவர்கள் மீது அவர்கொண்ட கருணையும், கனிவும் அவரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். அவரை விட மிக புத்திசாலிகள் தோன்றிவிடலாம். தோன்றி இருக்கலாம். இனிமேலும் தோன்றலாம். அஹிம்சை/இன்முறை என்பது வீரரின் ஆயுதம், கோழைகளின் கேடயமல்ல என்று நிரூபித்தார். காட்டுமிராண்டிகளின் குணமான வன்முறையை நாம் கைவிட முடியும் என்பதை நிரூபித்தார். அதாவது மனிதன் மிருகங்களை விட உயர்ந்தவன் என்பதை செய்கையில் காட்டினார்.
எவ்வளவு கசப்பான ஒப்பந்தங்களைச் செய்து கொள்ள நேர்ந்த போதிலும், அதன் மூலம் எவ்வளவு ஏமாற்றங்கள் ஏற்பட்ட போதிலும், மாறுபட்ட கருத்துடையவர்கள், எதிரிகள், வன்முறையைக் கைவிட்டுப் பேச்சு வார்த்தை நடத்துவதே நாகரீகம் அடைந்த மனிதனின் செயல் என்று நடைமுறைப் படுத்தினார். இந்த நடைமுறை இது அவர் வாழ்வின் செய்தி.
ஒரு வன்முறையாளன் அவர் வாழ்வை முடித்துவைத்தான் என்பது முரண் ஆனாலும், தன் உயிரை விட தன் செய்தியை (அது அவர் வாழ்வே) மிகவும் நேசித்தவர். அந்த செய்தி என்றும் இருக்கும்.
இந்த நேரத்தில் ஈழத்திலும், மேற்கு வங்கத்திலும் நிகழும், நிகழ்ந்த வன்முறையை கருத்தில் கொள்வது மிகப் பொருத்தம். பிரபாகரனும் அவர் சார்ந்த இயக்கமும், மாவோயிஸ்டுகளும் வன்முறை ஒன்றே வழி என்று சொல்வதால் செயல்படுவதால் உயிர் இழப்புகளைத்தவிர எதுவும் நிகழ வாய்ப்பில்லை. ஈழத்தில் இறந்த தியாகிகளின், மாவோயிஸ்டுகளின் தன்னலமற்ற தன்மை பாராட்டுக்குரியதாக இருந்தபோதும் அவர்களின் நடைமுறைத் தந்திரம் இப்படிப் பட்ட தியாகிகளின் தியாகத்தைச் சமூகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாதவாறு செய்கிறது. வீரம் என்பது வன்முறையினால் மட்டும் நிரூபிக்கப் படக்கூடியதல்ல. ஈழத்தில் இறந்து போன ஆயிரக்கணக்கானவர்கள் சத்தியாகிரகத்திலோ, உண்ணாவிரத்ததிலோ இறந்திருந்தால் அவர்களின் தியாகம் இப்போது இருந்ததை விட இன்னும் கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். அப்படிப் பட்ட நடவடிக்கை ஏற்படுத்தும் அற உணர்வு சாதாரணமாக இருந்திருக்காது.
வன்முறையை அரசியல் இயக்கங்கள் கையில் எடுப்பது, நிலைமையை அரசைப் பொறுத்தவரை எளிதாக்கி விடுகிறது. அரசின் வன்முறை தேவையானதாக, தவிர்க்க முடியாததாக மக்கள் மத்தியில் நம்பவைக்க எளிதாகி விடுகிறது. வன்முறையின் மிகப் பெரிய பலவீனம் இதுதான். இதன் மூலம் அரசு அற உணர்வைத் தான் தக்க வைத்துக் கொண்டுவிடுகிறது. காந்தி இந்த தந்திரத்தை மிகச் சாதுரியமான அஹிம்சை என்ற வழியில் முறியடித்தார். அற உணர்வு அவருடைய நடவடிக்கைகளில் இருந்தது. அரசு எப்போதும் தன்னிடம் அற உணர்வு இருப்பதாக உணர அவர் விடவில்லை. அப்படிக் காட்டிக் கொள்ள அவர் அரசை அரசியல் ரீதியாக, தந்திரமாக அனுமதிக்கவில்லை. இப்படிப்பட்ட தலைமையின் தந்திரம் பிரபாகரனிடமோ மாவோயிஸ்டுகளிடமோ இல்லை. இன்றைய நிலையில் காந்தி நமக்கு இதைத்தான் சொல்கிறார்.

No comments:

Post a Comment