Thursday, August 03, 2017

நீ
ஆகாயத்தில் பறக்கிறாய்
வானவில்லில் அம்பு கோர்க்க எண்ணுகிறாய்
நடைமுறைக்கு ஒவ்வாததைப் பேசுகிறாய்

நான்
துயரங்களை மறப்பதற்காக அல்ல
உலகத்தில் துயரங்கள் இல்லாதொழியக்
கனவு காண்கிறேன்

நீ
பெண்ணுரிமை பேசுகிறாய்
உனக்கு வந்தால் தெரியும்

நானும்
ஆண் வர்க்கத்தின் மோசமான
பிரதிநிதிதான்
ஆனாலும் கனவுகாணும் நேரத்தில்
எனக்கும் அவர்களுக்கும் சேர்த்தே
கனவு காண்கிறேன்

அதிகாரத்தின் மடியில் அமர்ந்து கொண்டே
அதை எதிர்ப்பது குறித்துப் பேசுகிறாய்

முதல் அடிமை என்பதால் மட்டும்
எனக்கு என்ன
விடுதலை வேட்கை கிடையாதா?

உணர்ச்சியைக் கிளத்தும்
தேசம், மொழி, குடும்பம்
இவற்றின் அமைப்பைக்
கேள்வி கேட்கிறாய்?
இவையன்றி எதுவும் இல்லையே?

கடலில் கிடக்கும் மீன்கள்
கடலுக்கு வெளியில் எதுவும் இல்லை
என்று நினைக்கலாம்
அதனால் கடலுக்கு வெளியில்
எதுவும் இல்லாமல் போய்விடுமா?

அறம் அற்றுப் போன உலகில்
கடவுள்
அறத்தின் குறியீடாக இல்லையா?

அறம் அற்றுப் போகவும் அவரது
பெயர் ஒரு காரணமல்லவா?
கடவுளின் பெயரால்,
மதத்தின் பெயரால்
அடையாளங்களின் பெயரால்
நடந்த கொலைகள் எத்தனை எத்தனை?

உன்னால் எதுவும் செய்ய முடியாது
நாங்கள் தான் பெரும்பான்மை

செய்ய முடிந்தால் எழுதிக் கொண்டிருக்கமாட்டேன்
மீண்டும் மீண்டும் எழுதப்பட்டவைகள்தான்
வரலாற்றை உந்துகின்றன
சிறுபான்மையினர் அல்லது
ஒரே ஒருவன் கூட
உலகைப் புரட்டிவிட முடியும்

கூட்டத்தோடு போக வேண்டியது தானே

கூட்டத்தோடுதான் போகிறேன்

கூவிக்கொண்டே போகிறேன்

No comments:

Post a Comment