ஒரு புத்தகம் வெளிவந்த
பிறகு அதை எப்போதும் வாசகன் படிக்கலாம். இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கும் முன்னால் எழுதப்பட்ட நூல்களை இன்று முதல் முறையாக வாசிப்பவர்கள் பல்லாயிரம்
உண்டு. திருக்குறளையோ சங்க இலக்கியப் பாடல்களையோ
ஒருமுறையேனும் கேட்காத, அல்லது படிக்காத தமிழர்களைப் பார்ப்பது அரிது.
நான் தேடிய அந்த நூலை ஒரு முறை இருபது
வயதில் படித்திருக்கிறேன். அதாவது சுமார் முப்பத்தைந்து
ஆண்டுகளுக்கும் முன்னால். அப்போது ஏதோ பிதற்றலாகத்
தோன்றியது. புத்தகத்தின் பெயரையும் மறந்துவிட்டேன். ஆனால் மரணம் குறித்து விரிவாக எழுதப்பட்டிருந்த்து
என்பது நினைவுக்கு வந்த்து. அதற்கும் ஒரு காரணம்
இருந்தது. ‘இன்ஃபேச்சுவெஷன்ஸ்” என்ற ஸ்பானியக்
குறு நாவலை வாசித்த கணத்தில் அது நினைவுக்கு வந்தது. ஏதோ ஒரு இடத்தில் ஒரு கோழிக்கறியைச் சாப்பிடும்
போது, பல ஆண்டுகளுக்கு முன்னால் அதே சுவையில் சாப்பிட்ட கோழிக்கறி ஞாபகம் வருகிறதல்லவா?
அது போன்றது தான் இதுவும். தமிழில் படித்த
வரிகள் சில அப்படியே ஆங்கிலத்தில் படித்த நாவலில் எழுதப்பட்டிருந்தது போல் தோன்றியது.
‘தோன்றியது’ என்பது முக்கியம். ஏனெனில் தமிழில்
படித்த நாவலை அதற்கப்புறம் தேட ஆரம்பித்தேன். ஒரு புத்த்கத்தில் அதுவும் தமிழ்ப்புத்தகத்தில்
படித்த சிந்தனையின் தொடர்ச்சி ஒரு ஆங்கிலப் புத்தகத்தில் இருப்பது அடிக்கடி நேர்வதல்ல. ஆசிரியர் பெயர் உடனே ஞாபகம் வந்து விட்டது என்றாலும்
எந்தப் பதிப்பகம் வெளியிட்டது என்பது ஞாபகம் வரவில்லை. ஆனால் அந்த நினைவு என்னைக் குடைந்து கொண்டே இருந்தது. முழுவதாகப் படித்திருந்தாலும், கதையின் சிறு கோட்டோவியம்
போன்ற உருவம் தவிர எதுவும் ஞாபகம் இல்லை. எனக்கு
வயதாகிவிட்டது ஒரு காரணமாக இருக்கும். படித்த
சமயத்தில் அந்த நாவல் எனக்கு ஒரு புத்துணர்ச்சியை, அல்லது எழுச்சியைத் தரவில்லை என்பதனாலும்
இருக்கலாம். ஆனால் இத்தனை வருடங்களுக்குப்
பிறகு கொக்கி போட்டு இழுக்கிறதென்றால் அதில் ஏதோ இருந்திருக்க வேண்டும்.
இந்த நவீன உலகத்தின் முழுமுதற் பொருளான
இணையத்தில் தேடத் துவங்கினேன். அந்த நாவல் வெளிவந்த காலத்தில் இணையம் இருந்ததில்லை.
இருந்தாலும் ஒரு நப்பாசைதான். அழியாச் சுடர்கள் போல ஓரிடத்தில் அது கிடைக்கக் கூடும். தமிழ் வாசகப் பரப்பு மிகவும் குறைவென்றாலும், அந்தக் குறைந்த வாசகப் பரப்பில் இயங்குகிறவர்கள்
மிகவும் தீவிர ஆர்வம் உடையவர்கள். நல்ல நூல்
எங்கிருந்தாலும் அதை தான் மட்டும் அல்ல மற்றவர்களும் படிக்கவேண்டும் என்பதில் ஆர்வம்
உள்ளவர்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக, இந்த
எழுத்தாளரை இணையத்தில் தேடிக் கண்டுபிடிக்க பிடியவில்லை. தமிழ் இலக்கிய உலகம் அவரை மறந்து விட்டிருக்குமா? இணைய எழுத்துக்களில் இருந்து துப்புத் துலக்க முடியவில்லை. தமிழ் இலக்கியவாதிகள் அவரை முப்பத்திஐந்து வருடங்களுக்குள்
மறந்துவிட்டார்கள். எந்த இலக்கியம் குறித்த
உரையாடலிலும் அவர் எழுதிய ஒரே நாவலான அது குறித்த விவாதங்கள் இல்லை. அவர் பெயர் கூடச் சொல்லப்படவில்லை. அந்த எழுத்தாளன் மறைந்து விட்டான் என்பது எனக்குத்
தெரியும். ப. சிங்காரம் என்ற எழுத்தாளர் 1959 ஆம் ஆண்டுகளில்
எழுதிய நாவல்களை யாரும் பேசாமல் விட்டுவிட்டனர்.
90களின் மத்தியில் யாரோ அவற்றைப் படித்துவிட்டு விதந்தோத, பலர் படித்தனர். அனைவருக்கும் அவர் எழுதிய கடலுக்கு அப்பால், புயலிலே
ஒரு தோணி இரண்டு நூல்களும் மிகவும் பிடித்துப் போய் விட்டது. திருக்குறள் 19ஆம் நூற்றாண்டு வரை சுவடிகளில் மறைந்திருந்து,
ஒரு ஆங்கிலேயரால் பதிப்பிக்கப்பட்ட பின்னரே பரவலாக வாசிக்கப்பட்டது என்பதும் நினைவுக்கு
வந்தது.
ஓலைச்சுவடுகளின் காலத்தில் திருக்குறளுக்கு
நேர்ந்தது புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
ஆனால், 1980களி வெளிவந்த நூல் மறைந்து போக என்ன காரணம்? மீண்டும் தமிழ்ப்பதிப்புலகின் நிலை ஞாபகம் வந்தது. 1921இல் மறந்து போன பாரதியின் வரலாற்றைக் கூட நாம்
ஆவணப்படுத்த இன்னும் முயன்று கொண்டிருக்கிறோம்.
தனிப்பட்ட சிலரின் அயராத உழைப்பு இல்லையெனில் அவை மறைந்தே போயிருக்கும். பாரதியின் நிலையே இப்படி என்றால் அதற்கு முன்னும்
பின்னும் இருந்த எழுத்தாளர்களின் நிலைமை சொல்ல வேண்டியதில்லை. புதுமைப் பித்தனுக்கு நல்ல வேளையாக தொ.மு. சி கிடைத்தார். மற்றவர்களின் வாழ்க்கை வரலாறுகள் எழுதப்பட வேண்டியவை
இன்னும் எழுதப்படவில்லை. உ.வே சாமிநாத அய்யரின்
சுய சரிதம் முக்கியமானது. உள்ளார்ந்த பொறுப்புணர்வோடு
எழுதிச் செல்கிறார். ஆனால் அது அவரது பார்வையில்
எழுதப்பட்ட ஆவணம். இன்னொருவர் அதை எழுதும் போது புதிய தரவுகளின் அடிப்படையில், புதிய
பார்வையில் பல புதிய உண்மைகளை வெளிக் கொண்டுவரலாம். மஹாத்மா காந்தி சொல்வது போல, ஒருவன் தன்னைப் பற்றி
வழக்குமன்றத்தில் சாட்சி சொன்னால் எப்படி இருக்கும்? அது போன்றதுதான் சுய வரல்லாறு.
பல சங்கடந்தரும் உண்மைகளை எழுதுகிறவன் மறைத்துவிடக் கூடும்.
தமிழகத்தில் பல முக்கிய ஆளுமைகளின் வரலாறு
எழுதப்படவில்லை. எழுதப்பட்டவைகளில் பல தலைவனின்/
தலைவியின் புகழ்பாடும் காவியங்களாக இருக்கின்றன.ஆளுமைகளின் வெற்றிகள், தொட்ட உயரங்கள்
இவற்றுடன் அவர்கள் செய்த தவறுகள், மனிதப் பண்புகள் இவற்றை எங்கிருந்தும் பெறமுடியாத
வகையில் தமிழ்ச்சூழல் இருக்கிறது.
இந்தப் புகை மூட்டங்களுக்கு நடுவே ஒரே
ஒரு நூலை எழுதிய எழுத்தாளனையும் அவனது நூலையும் கண்டுபிடிப்பது எப்படி? மரணம் என்ற சாசுவதமான பொருள் குறித்த அந்த நாவலைக்
கண்டுபிடுத்து விடுவேன் என்றே நம்புகிறேன்.
தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறைக்கு
எழுதினேன். அவர்களுக்கு அது வேலை இல்லையாம். பணக்கொடை வளங்குவதுடன் அது முடிந்து விடுகிறது. நூலக ஆணைக்குழுவிற்கு எழுதினேன். பதில் இல்லை.
பல்கலைக் கழகங்களுக்கும் எழுதினேன்.
பதில் இல்லை. மேன்மைமிகு தமிழக அரசின்
மூன்றாந்தரப் பணியாளனுக்கு நாயினும் கீழான அடியேனின் கடித்ததுக்குப் பதிலெழுதத் தகுமோ?
என் நண்பரிடம் முறையிட்ட போது அவர் சொன்னார்
’எவனோ கிறுக்கன் இன்னொரு கிறுக்கனைத் தேடிக்கொண்டிருக்கிறான். அப்படி என்ன அந்த எழுத்தாளன் பெரிய கம்பனோ கொம்பனோ
அல்லது பெரிய ஆளா? கலைமாமணி விருது சாகித்ய அகாடமி விருது கிடைத்த்தா? அல்லது நோபல்
பரிசுதான் கிடைத்துவிட்டதா?” நான் சொல்ல நினைத்துச்
சொல்லாமல் விட்டது இதுதான் ‘ இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் இலக்கியப் பாரம்பரியமும்
தொடர்ச்சியும் உள்ள மொழிக்கு இன்னும் உலக அரங்கில் திருக்குறளுக்கு இணையான் இன்னொரு
நூலைத் தரமுடியவில்லை என்பதற்கு இங்கிருக்கு வாசகப் பரப்பும், எழுதாளர்கள் மீது சமூகம்
காட்டும் புறக்கணிப்புத் தானே காரணம்.” வாசகன்
ஒரு கிறுக்கன் என்பதில் சந்தேகம் இல்லை. எவனோ
எழுதிய ஒரு நூலின் பெயரையும், அதன் உள்ளடக்கத்தையும் நினைவில் வைத்துக் கொண்டு ஒரு
காதலன் அல்லது காதலியைப் போலத் தேடிக் கொண்டிருக்கிறான்.
கடைசியில் தெரிந்த விஷயம் இதுதான். எழுத்தாளாரின் குடும்பத்தினர் மறுபதிப்பு வெளிவர
அனுமதி கொடுக்கவில்லை. அதனால் அந்த நூல் மீண்டும்
வெளிவர வாய்ப்பில்லை.
ஒரு எழுத்தாளன் படைப்பும் அதன் உரிமையும்
அவனது சொத்துக்களின் ஒன்றாக கருதப்பட்டு, வாரிசு உரிமை அடிப்படையில் குடும்பத்தாரிடம்
இருக்கிறது. ஒரு புறம் அந்த உரிமையை ஏற்றுக்
கொள்ளும் அவர்கள், எழுத்தாளனின், படைப்பின் அடிப்படை விஷயமான அனைவருக்கும் படைப்பின்
உன்னதத்தை சென்று சேர்த்தல் என்பதையே தடை செய்வது தகாதது. படைப்பை குடும்பத்தினரே தணிக்கை செய்வது எவ்வளவு
கொடுமையானது?.
குழந்தைகள், மனைவி குடும்பத்தினர் மீது
வன்முறை நிகழ்த்தும் மனிதன், அதை கணவன் என்ற உரிமையைக் காரணம் காட்டுகிற கொடுமையைப்
போல, படைப்பாளியின் படைப்பை உலக மெங்கும் கொண்டு
சேர்க்க விரும்பவேண்டிய அவனது குடும்பத்தினர் தணிக்கை செய்து தடை செய்வது படைப்பின்
மீதும் அந்த எழுத்தாளன் மீது நிகழ்த்தும் வன்முறையே ஆகும்.
ஏற்கனவே குடும்பம், பள்ளி, அலுவலகம், அரசு,
சமூகம், பத்திரிக்கை என்று ஒவ்வொரு தடங்கலாக, பல வடிகட்டல்களுக்குப் (அவற்றில் பல மறைமுகமானவை)
பிறகே தன்னையும் தனது கருத்துக்களையும் வெளிக்கொணர வேண்டியிருக்கிறது.
அமெரிக்காவைல், சில்வியா பிளாத் என்றா
கவிஞரின் கணவர், கவிஞர் குறித்த தகவல்களை, ஆவணங்க்களை யாரிடமும் காட்டுவதில்ல்லை என்று
கவிஞரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆசிரியர் எழுதியிருக்கிறார்.
படைப்பாளியோ உலகம் முழுவதற்கும் சொந்தமானவன். அவன் மானிட சிந்தனையில் ஒரு பகுதியாகிவிடுகிறான். அவன் பேச்சும் எழுத்தும், மானிட குலத்தின் சொத்து. அவன் வரலாற்றின் ஒரு பகுதி. அவன் எழுதிய நூல் உலக வரலாற்றின் ஒரு ஆவணம்.
அவனுக்கு இத்தனை தடைகள் என்றால் மனிதகுலம்
என்ன செய்ய வேண்டும்?
தணிக்கை அதிகாரியாக
குடும்பம், சமூகம், ஊர் நாடு, நீதி மன்றங்கள், ஜாதி அமைப்புக்கள் செயல்பட்டால், எழுத்தாளன்
இவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளின்படி எழுத வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டால்,
எந்த மாற்றமும் சமூகத்தில் சாத்தியமா? மாற்றமே
நிகழாமல் ஒரு சமூகம் உயிர்ப்ப்புடன் இருப்பதும்
சாத்தியமா? முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
No comments:
Post a Comment