Monday, June 12, 2017

18 துறவாடைக்குள் மறைந்த காதல் மனம் – பிரபஞ்சன்

          தமிழ்பண்டிதராகத் (புலவர் பட்டம் பெற்ற) தொடங்கிய ஒருவர், நவீன இலக்கியத்தால் ஈர்க்கப்பட்டு, சிறுகதைகளால் புகழ்பெற்று, புதிய பார்வையில் பழைய தமிழ் இலக்கியத்தைப் பார்க்கிறார் என்றால் அது ஒரு அதிசயம்.  அப்படிப்ப்ப்ட்ட அதிசயங்களில் ஒருவர் பிரபஞ்சன்.  நவீனமனம் எவ்வளவு நாகரீகமாகச் செயல்பட முடியும் என்று உதாரணமாக விளங்குகிறார். எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலை கொண்டவராக இருக்கிறார்.  பண்டிதர் என்ற நவீனத்துக்கு முந்தையகால விளக்கத்துக்கு முற்றிலும் எதிர்மறையில், இந்தக் காலத்தின் நவீனச் சிந்தனைகள் அனைத்திலும் தேர்ந்து, அவற்றை விதந்தோதுகிறவராக இருக்கிறார். இவையெல்லாம் அவருடையநூல்களை சமீபத்தில் படித்ததன் காரணமாக எழுந்த கருத்துக்கள்.

             சங்க இலக்கியம் பற்றிப் பெருமை பேசும் நூல்கள் மிக ஏராளமாக உள்ளன. அவையாவும் மேட்டுக்குடியினரால், மேட்டுக்குடி மனப்பான்மையுடன் எழுதப்பட்டவை.  சங்க இலக்கியத்தில் உள்ள பாடல்களை எழுதிய மேட்டுக்குடிக் கவிஞர்களின் பார்வையை விட்டு எள்ளளவும் விலகாமல் ஆய்வு நோக்கின்றி எழுதப்பட்டவை.  இதனாலேயே நவீன மனம் கொண்ட ஒருவருக்கும் பழம்பெருமை பாடும் இந்நூல்களைப் படிப்பது வீண் என்றே தோன்றுகிறது.

            ஆனால் பிரபஞ்சனின் இந்த நூல் ஏற்கனவே சொன்னது போல் ஒரு விதிவிலக்கு.  சங்க இலக்கியத்தின் மேட்டுக்குடிப் பார்வையை சந்தேகம் இல்லாமல் சொல்வது பிரபஞ்சனின் சிறப்பு.  எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, என்றெல்லாம் யார் தேர்வு செய்தது, அவர்கள் இவற்றைத் தேர்ந்தெடுத்ததன் பின்புலம் என்ன? என்ற கேள்விகளை முன்வைக்கிறார்.  (பல ஆண்டுகளுகு முன்னால் நான் இந்தக் கேள்வியை ஒரு வரலாற்று பேராசிரியரிடம் கேட்டேன்.  பதில் அவருக்கும் எனக்கும் இன்றுவரை கிடைக்கவில்லை – காரணம் இது குறித்துப் தமிழ்ப் பண்டிதர்கள் சிந்திக்கவில்லையோ என்னவோ?).  அதைவிட தேர்வின் தரவுகள் குறித்துச் சந்தேகம் எழுப்புகிறார்.

இந்தக் கட்டுரைகளில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சமூகப் பார்வை, அவற்றில் விளிம்புநிலை மனிதர்களைப் பற்றிய குறிப்புகள், எதிர்மறை விமரிசனங்கள்,  மேட்டுக்குடி மக்களைக் குறித்த விவரங்கள், குடும்பம் சமூகம் இவை குறித்த மிக நவீனப் பார்வை கொண்ட கட்டுரைகள் அடங்கிய நூல் இது.

சுதந்திர இந்தியாவில் தமிழின் ஆளுமைய நிலை நிறுத்த, தொடக்கத்தில் குருட்டுத்தனமான பெருமிதம் ஒரு தேவையாகக் கூட இருந்திருக்கலாம்.  ஆனால் இன்றும் குருட்டு வழிபாடு தேவையா?

சங்க இலக்கியத்தில் பாணர்கள் நிலை என்ன? காலமாற்றம் ஏற்பட்டதும் அவர்களைப் பற்றிய விவரங்கள் எப்படி மாறுகின்றன, அந்தக் காலத்தில் பரத்தைமைக்கும், குடும்ப நிறுவனத்துக்கும் உள்ள சமூக உறவும் அதன் தேவையும் என்ன? அரசமைப்புக்கும் இவைகளுக்கும் உள்ள மறைமுக நியாயங்கள் என்ன? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பும் கட்டுரைகள், மிக முக்கியமானவை. இப்படிக் கேள்விகள் இதுவரை எழவில்லை.  சமூகம் குறித்த நவீனப் பார்வை இல்லாத தமிழ்ச் சமூகத்தில் இது சாத்தியமாகவில்லை. ஆனால் பிரபஞ்சன் இந்தக் கேள்விகளை எழுப்புகிறார்.  திணை குறித்தும், ஒவ்வொரு திணையிலும் வாழ்வின் அம்சங்களை மட்டுமன்றி அவற்றில், சில கருத்துக்கள் எழுந்த பின்புலம் குறித்துச் சிந்திக்கிறார்.

சிலப்பதிகாரத்தில், கண்ணகி (வயது பன்னிரண்டு) கணவன் மாதவியிடம் சென்றுவிட்டான் என்றறிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் எது தடுத்தது? மாதவி போன்றோரின் நியாயங்கள் என்ன? மாதவி கோவலன் ஒருவனுக்கு விசுவாசமாக இருக்க முடிந்ததா? சமூகம் என்ன செய்தது? அவளுடைய தாயின் நிலை என்ன? அவளது மகள் மணிமேகலை சாதாரணமாக வாழ முடிந்திருக்குமா? அவள் மீது சமூகத்தின் பார்வை என்ன? அவளுக்கும் காதல் ஏற்பட்டதா? அதற்கு அவள் விடை என்ன? உதய குமாரன் என்ற மேட்டுக்குடி மனிதன் அவளை எப்படிப் பார்க்கிறேன்.  அவள் விடுதலைக்காக புத்தமதத்தை நாடுவது என்ன நிலையில் நடக்கிறது?


இப்படிப்பட்ட ஆய்வுக் கேள்விகளை எழுப்பிப் பதில் தேட விழைவதே பிரபஞ்சனின் கட்டுரைகள்.  சரியான காலத்தில் சரியான கேள்விகளை கேட்கிறார். பதில் தேடவேண்டும்.  மிகச் சிறப்பாக எழுதப்பட்ட நூல்.   

No comments:

Post a Comment