Thursday, June 01, 2017

பிரபஞ்சன் கட்டுரைகள் (தொகுப்பு- முருகேசபாண்டியன்)

        பிரபஞ்சனின் மிகச் சிறந்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது.   தமிழில் புனைவு நூல்களுடன் ஒப்பிடும் போது கட்டுரைத் தொகுப்புக்களை மிகக் குறைவாகவே படிக்கிறேன்.   தமிழில் மிகத் தரமான கட்டுரைகள் மிகக் குறைவாக வெளிவருகின்றன என்ற கருத்துக் கொண்டிருந்தேன்.  தற்போது சில கட்டுரை நூல்களை வாங்கிப் படித்து வருகிறேன். அவற்றில் பிரபஞ்சனின் கட்டுரை நூல்கள் அடங்கும்.  காத்திரமான கட்டுரைகளை அவர் எழுதியிருக்கிறார்.

            கடினமான வாழ்க்கைத் தருணங்களையும் எளிதாக எடுத்துக் கொண்டு, நகைச்சுவை ததும்பும் மொழியில் விவரித்துச் செல்கிறார்.  வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும் எல்லாம் கடந்து போகும் என்ற தொனி அவைகளின் அடிநாதமாக இருக்கிறது. இப்படி ஒரு அறிவுஜீவி நம்மிடையே வாழும்போது, பொய்வேஷ அறிவாளிகளின்  புளுகுகளுக்கு தமிழ்ச்சமூகத்தில் கிடைக்கும் இடம் என்னைக் கவலைக்கு உள்ளாக்குகிறது.

  தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் என்பதான் விஷயகனம் மிகுந்தவற்றையே சேர்த்திருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் வாங்கினேன். நம்பிக்கை வீண்போகவில்லை.

            சுயவாழ்க்கை பற்றிய எள்ளலும், மனச் சங்கடத்தை உண்டாக்கும் சம்பவங்களையும் உள்ளடக்கிய நானும் நானும் உறங்கும் அறை, தொன்மங்களும் வாழ்க்கையின் தேவைகளும் சந்திப்பதை விவரிக்கும் ‘முனீஸ்வரனைப்’ பற்றிய கட்டுரையும் நினைவுகூரலாக இருந்தாலும், சமூகம் பற்றிய புரிதலைத் தருகின்றன. பேய்களைப் பற்றிய கட்டுரை வித்தியாசமானது.  இலக்கியத்தில் வரும் பேய்களும் வந்து போகின்றன.

            சிறுமிட்டாய்களை விற்றுப் பிழைக்கும் மிட்டாய்த் தாத்தா பற்றிய கட்டுரையும் நன்றாக இருக்கிறது.  இப்படிச் சிற்றுண்டிப் பொருட்களைத் தாமே தயாரித்து காலையிலிருந்து மாலைவரை விற்கிற சிறு வியாபாரிகள், கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருக்கிறார்கள்.  பெருநிறுவனங்களின் கொறிப்புப் பண்டங்கள், சாக்லெட்டுகள் பிரபலமாகி பணம் வெளிநாடுகளுக்குப் போய்க்கொண்டிருக்கிறது.  உள்ளூரில் பிழைப்பு மோசமாகி, தயாரித்து விற்றவர்கள் கூலி வேலைக்குப் போய்க்கொண்டிருக்கலாம்.  மகன் செய்த துரோகமும், அவர் மகனுக்காக விட்டுச் சென்ற சேமிப்பும் அவர்களுக்கு இருக்கும் விழுமியங்களைத் தெரிவிக்கின்றது.

            எல்லாவற்றிலும் எனக்குப் பிடித்தமான கட்டுரை ‘ வன்முறையைப் பயிற்றுவிக்கும் வகுப்பறைகள்” பள்ளிக் கூடத்தைப் பற்றிச் சொல்லப்படும் ஒவ்வொரு நிகழ்வும் என் பள்ளிநாட்களை நினைவுபடுத்தியது.  ஒழுக்கத்தின் பெயரால், அறிவை சேகரிக்கும் பெயரால் வகுப்பறை சிறைக்கூடமாக மாறிப்போனதை மிக விரிவாக எடுத்துப் பேசுகிறது.  கல்வியின் பெயரால் நிகழும் வன்முறைகளைப் பற்றிப் பேச யாருக்கும் தெம்பில்லாமல் போனது ஏன்?  இடம்கிடைக்காமல் போய்விடும் என்ற பயத்தில் இருந்து தொடங்கிய பயத்தில் முதுகெலும்பு நிமிர்வதே இல்லை.  பள்ளிப் படிப்பு முடிந்தபின் பள்ளிக் கல்வி பற்றிய சிந்தனை தேவையற்றதாகிவிடுகிறது. அதனால் அதுபற்றி யாரும் பேசுவதில்லை.  சமீப நாட்களில் படித்த, கல்வி குறித்த நல்ல கட்டுரை இது.  எத்தனை காலை இதன் விமரிசனம் சமூகத்திற்குப் பொருந்தி வருகிறதோ அத்தனை கேடுகாலம் நமக்கு. 


            பழைய திணைக் கோட்பாட்டை விளக்கும் கட்டுரைகள், சென்னைத் தெருக்கள் மாறிவருவதை, அவற்றின் பண்பாடுகள் மாறிவருவதை கவனிக்கும் கட்டுரைகள், இன்னும் பல நல்ல கட்டுரைகள் கொண்ட தொகுப்பு.  படிக்க வேண்டிய நூல். 

No comments:

Post a Comment