Wednesday, November 11, 2009

பிரதிபலிக்கும் தளங்கள்

சைமன் வேலையை முடித்து வீட்டுக்கு வந்ததும், கலிஸ்தா சுறுப்படைந்து குளியலறைக்குச் சென்றாள். தண்ணீர் இதமான சூடாக இருந்த்து. பாத்ரூம் கண்ணாடி நீராவியால் பனித்திரை போல் மறைக்கப்படும் வரை, விரல்களில் சுருக்கம் ஏற்படும் வரை நீருக்கடியில் நின்றாள்.

தலையில் ஷாம்புவைச் சிறிது கொட்டி தேய்க்கும் போது முடி இழைகள் அவள் விரல்களில் சுற்றிக் கொண்டன. தன் மீது தண்ணீரை வழிந்தோடும்போது இன்னும் முடி இழைகள் நீரில் சுழன்று வடிகாலில் செல்வதைப் பார்த்தாள். உடலிலிருந்த சோப்புநுரை நுரைகளை கழுவிவிட்டு ஷவரை விட்டு வெளியில் வந்தாள். உடலைத்துண்டால் போர்த்திக் கொண்டு, கண்ணாடியைக் கையால் ஒரு முறை துடைத்தாள். நின்று பார்த்தாள்.

சைமன் கதவைத் தட்டினான் “என்ன உள்ளே ஓ.கே யா?

அவள் கதவைத் திறந்தாள்.

“ஏய், என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”

“நான் இதை வெறுக்கிறேன்” அவள் முணுமுணுத்தாள்

அவன் அவளைக் கட்டியணைத்து, கழுத்தில் முத்தமிட்டான்.

“சீரியஸாத்தான், சைமன், என் தலையைப் பார்த்தாயா? நான் எப்படி இருக்கேன்னு உனக்குத் தெரியுமா?”

“ஆமா, ரொம்ப அழகாக இருக்கிறாய்” அவன் தொடர்ந்தான் “எப்பவும் போல. இனிமேலும் அழகாய்த்தான் இருப்பாய்”

அவள் சிரித்தாள். அவளுக்குத் தெரியும் அவன் பொய் சொல்லுகிறான். சில விஷயங்கள் இயல்பாகவே பொய்யாகி விடுகின்றன.

“அழகா…இருக்கிறேன்.. ஹ...”

“ஆமா.”

“அது எப்படிங்கிறேன்?”

“நீ என்ன சொல்ற? எப்படியா? அது அப்படித்தான்..” அவன் கண்களில் ஒளியில்லை. நெற்றி சுருங்கியது. ஆயிரம் வாதங்களை மறுத்து கடைசித் தடவை அழுத்திச் சொல்வது போல்

மீண்டும் சொன்னான் “அழகாக இருக்கிறாய்”

“இல்லை” கலிஸ்தா யோசித்தாள். அவன் எப்படி நினைக்க முடியும்? அவனால் முடியாது. அவன் அப்படி நினைக்கவில்லை. இது அழகானதல்ல. இது புற்றுநோய். இது இழப்பு. நீலப்பச்சை டைல்ஸ் பதித்த பாத்ரூம் தரையெங்கும் அவள் கருத்த தலைமயிர் கொட்டிப் பரவியிருந்த்து. அவள் தலை கொஞ்சம் ஒட்டியிருந்த முடிகளுடன் சொரசொரப்பாக இருந்தது.
அவன் கையை நீட்டினான். அவள் கூச்சத்திலும் விலக்காமல் இருக்க முயன்றாள். ஆனாலும் விலகுவதைத் தவிர்க்க முடியவில்லை. அவள் முன்புபோல் இல்லை. அவன்மீதும் தான் முன்புபோல் உணரவில்லை என்று பயந்தாள்.

“மீதமிருப்பதையும் சிரைத்து விட வேண்டும்” சொல்லும் போது அவள் தொண்டை அடைத்தது. இதைச் சொல்லத் தயாராக இருப்பதாக நினைத்திருந்தாள். ஆனால் தயார்படுத்திக் கொள்ள முடிவதில்லை.

“நான் சிரைத்து விடுகிறேன். என்னைப் பண்ண விடு” அவன் சொன்னான்.

“நல்லது. இப்பவே பண்ணிவிடுவோம். இத்தோட இதை முடிக்கணும்னு விரும்புகிறேன்”
அவன் மருந்துகள் வைத்திருக்கும் மர டிராயரை உருட்டித் தேடி ஒரு புது ரேஸரை எடுத்தான். “மெல்லியது” என்று அதன் பிளாஸ்டிக் அட்டையில் சிவப்பெழுத்தில் இருந்தது

அவள் ஜாக்கிரதையாக பாத்டப்பின் விளிம்பில் உட்கார்ந்தாள். அவன் கையில் ஷேவிங் கிரீம் டப்பாவுடன் அவளருகில் நின்றான். அவன் ஷேவிங்கிரீமைத் தலையில் தடவத் தொடங்கியதும் அவள் கண்களை மூடிக்கொண்டாள். அவள் அழ விரும்பவில்லை. அவள் விரும்புவதால் எதுவும் மாறிவிடப்போவதில்லை.

“முடி, வெறும் முடிதானே” அவள் நினைத்தாள்.
அவன் சிங்க்கில் கைகளைக் கழுவினான். அவன் திரும்பி நிற்கும் போது அவனைப் பார்த்தாள். முடிச்சுருள்கற்றைகள் வேர்வையில் ஈரமாக இருந்தன. அவளுக்காக அவன் தைரியமாக இருந்தான். இதை எப்படிச் சமாளித்துக் கொண்டிருக்கிறான் என்று அவளுக்குப் புரியவில்லை.

ரேசருடன் அவளிடம் திரும்பினான். அவள் கைகளால் அவன் இடுப்பைச் சுற்றிக் கொண்டாள். பிடித்துக் கொள்ளவேண்டும்.

ரேசர் அவள் தலையை சிரைக்கிறது. ஒன்று, இரண்டு, மூன்று. அவள் எண்ணுவதை விட்டுவிட்டாள். ரேசரின் வேலை முடிவின்றித் தொடர்வது போல் தோன்றியது.
திடீரென்று அவளுக்குத் தோன்றியது. தம் உடலிலிருந்து, இதமான சூடுதரும் உரோமங்கள், சிரைக்கப் படும் போது செம்மறி ஆடுகள் என்ன உணரும்? செம்மறிகள் கொடுமை இழைக்கப்பட்டதாக, திருடப்பட்டதாக உணருமா? என்றெல்லாம் அவள் யோசித்ததில்லை. செம்மறிகள் பற்றி அவள் யோசித்ததே இல்லையே.

அவன் முடித்துவிட்டான். ரேசரைக் கழுவினான். தலையைத் துவட்ட செண்ட் போட்ட துண்டை எடுத்தாள். தன்கையால் மொட்டைத் தலையைத் தடவிப் பார்த்தாள்.

சைமன் ரேசரை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டான். பாத்ரும் டப்பின் விளிம்பில் அவளருகில் உட்கார்ந்தான். அவன் ஒன்றும் பேசவில்லை. கைகளால் அவளை அணைத்துக் கொண்டான். அவள் அவன் கையை விலக்கிக்கொண்டு விடாதபடி தலையை மென்மையாகத் தடவிக் கொடுத்தான். அவன் நீண்ட விரல்கள் அவளுடலின் இந்தப் புதிய பகுதியை தொடவும், தடவவும், நினைவில் இருத்திக் கொள்ளவும் விரும்பின.

கலிஸ்தா மென்மையாக அவனுடைய சுருள்முடிகளுக்கும் கைகளை விட்டு, அடிப்பகுதியைப்
பிடித்து அவற்றின் இளஞ்சூட்டில் கைகளை அப்படியோ வைத்துக் கொண்டிருந்தாள். சுருக்கம் விழுந்த அவன் வெள்ளைச் சட்டையில் புதைந்து அழுதாள்.

“அழகாக இருக்கிறது” இந்த வார்த்தைகளை மட்டும் அவன் முணுமுணுப்பதைக் கேட்க முடிந்தது.

கொஞ்சமாவது உறுதி இருந்தால் அவள் மீண்டும் சிரித்திருப்பாள். ஆனால் முடியவில்லை.
விழித்தபோது காலை மூன்று மணி.. கடிகாரத்தின் எண்களிலிருந்து வந்த ஒளி அவள் கண்களை உறுத்தியது. அவள் மறுபுறம் திரும்பிப் படுத்தாள். குளிர்ந்தது.

அறையிலிருந்த அமைதி வினோதமாக இருந்தது. மூச்சைப் பெரிதாக இழுத்து விட்டுக் கொண்டு சீராக்க் குறட்டைவிட்டுத் தூங்கும் சைமன் அவளருகில் படுத்திருக்கவில்லை என்பதை உணர்ந்தாள். எழுந்து உட்கார்ந்தாள். படுக்கையில் இருந்த கால்களை எடுத்துத் தரையில் வைத்தாள். காலில் ஒரு ஜீன்ஸ் பேண்ட் பட்டது. தன்னை தடுமாறாமல் நிறுத்திக் கொண்டு ஹாலுக்குள் கவனமாக நடந்தாள். ஹாலில் இருந்த பாத்ரூமில் லைட் எரிந்து கொண்டிருந்தது.

மெல்ல நடந்து கதவைத் திறந்தாள். அவன் தான். கையில் ரேசருடன் குப்பைத் தொட்டிப்பக்கம் தலையை நீட்டிக் கொண்டிருந்தான். அநேனகமாக வேலை முடிந்துவிட்ட்து. பாத்ரூம் டைல்கள் மீது கத்தை கத்தையாக முடி பரவிக் கிடந்தது. இரண்டு இழுப்புகளில் வேலை முடிந்துவிட்டது. நீல நிற ரத்தக் குழாய்கள் மொட்டைத் தலையில் பெரிதாகத் தெரிந்தன.

நம்பமுடியாமல் கால்கள், குரல், சிந்தனை எல்லாம் ஸ்தம்பித்துவிட்டன. அவன் நிமிர்ந்து அவள் நிற்பதைப் பார்த்தான். அவன் கண்கள், மூக்கின் நுனி சிவந்திருந்தன.
அவனிடம் போனாள். கழுத்தின் பின்புறம் தொடங்கிக் கண் இமைகள், கன்னங்கள் தாடை மீது கைகளைத் தடவினாள். அவன் முன்புறம் குனிந்து மென்மையான முன் தலையால் அவள் தலைமீது மெல்ல அழுத்தினான். அவன் உருவத்தை, கண்ணீரை, அவள் வலியைப் புரிந்து கொள்ள வேண்டிய அவன் தேவையை மனதில் இருத்திக் கொண்டாள். அவன் அவள் கண்களால் பார்த்தான். அவளும் அவன் கண்களால் பார்க்க முடிந்தது.

அவள் சொன்னாள் “அழகாக இருக்கிறது”

* * * * * * * * * * * * * * *

REFLECTING SURFACES, Christie Lambert Boston Literary Magazine, Fall,2009. Tamil Translation by V.Rajagopal

ஆங்கிலத்தில் கிறிஸ்டி லாம்பர்ட்., போஸ்டன் லிடர்ரி மேகஸீன், Fall, 2009
தமிழில் வே. ராஜகோபால்.

No comments:

Post a Comment