வில்லேருழவர் 3
அம்பு
அம்பு என்பது நமது எண்ணம். வில்லின் உறுதியையும் இலக்கின் மையத்தையும் இணைக்கிறது. எண்ணம் மிகமிகத் தெளிவாக, நேராக, சமச்சீராக, இருக்கவேண்டும். அம்பை விட்டுவிட்டால் திரும்ப வராது. இலக்குத் தயாராக இருக்கிறது என்பதற்காகவோ வில்லில் நாணேற்றிவிட்டோம் என்பதற்காகவோ முழுக்கவனமின்றி அம்பை எய்துவிடாமல், அதைச் செலுத்துவது வரைக்கும் நடந்ததனைத்தும் முறையாக, மிகச் சரியாக இல்லை என்றால், அது செலுத்தாமல் இருபதே நல்லது. தவறு செய்துவிடுவோம் என்ற பயத்தின் காரணமாக மட்டும் அம்பு எய்வதை நிறுத்தாதே. சரியான முறையில் நாணேற்றினால் கைகளை விரித்து அம்பை விடு. அம்பு இலக்கைத் தவறவிட்டாலும் அடுத்தமுறை எப்படி சரியாக விடுவது என்பதை நீ அறிந்து கொள்வாய். அந்த சவாலை எதிர்கொள்ளாவிட்டால் என்ன மாற்றங்கள் செய்யவேண்டும் என்பதை நீ அறிய முடியாது. ஒவ்வொரு அம்பும் தன் நினைவை விட்டுச் செல்லும் அந்த மொத்த நினைவுகள் தான் மேலும் மேலும் சிறப்பாக அம்புவிட வைக்கும்.
இலக்கு
அடையவேண்டிய குறிக்கோள்தான் இலக்கு. வில்வீரன் அதை தீர்மானிக்கிறான். அது வெகு தூரத்தில் இருந்தாலும் நாம் அடையமுடியவில்லை என்றால் அதைக் குறை கூற முடியாது. இதில்தான் வில்வித்தையின் பெருமை இருக்கிறது. எதிரி உன்னைவிட பலசாலி என்று நீ சாக்குச் சொல்ல முடியாது. நீதான் இலக்கைத் தேர்ந்தெடுத்தாய் அதற்கு நீதான் பொறுப்பு. இலக்கு முன்னாலோ பின்னாலோ பெரிதாகவோ சிறிதாகவோ இடப்புறமோ வலப்புறமோ இருக்கலாம். அதை மதித்து மனத்தின் அருகில் கொண்டுவரவேண்டும். அது உன் அம்பின் முனையில் இருக்கும் போது அதை நாணிலிருந்து விடவேண்டும். இலக்கை எதிரியாக மட்டும் நினைத்தால், இலக்கை நீஅடித்துவிடலாம். ஆனால் உனக்குள் எந்த நிறைவையும் அடையமுடியாது.
ஒரு காகிதத்தின் அல்லது மரத்தின் நடுவில் அம்பைவிடுவது தான் வாழ்வின் அனுபவமாகிவிடும். அது பொருளற்றது. மற்றவர்களுடன் இருக்கும் போது, சுவராஸ்யமாக எதையும் செய்யமுடிவதில்லை என்று புலம்ப நேரிடும். அதனால், இலக்கைத் தேர்ந்தெடுத்து, அதை அடிக்க முயலவேண்டும். இலக்கைப் பெருமையுடனும் மரியாதையுடனும் அணுகவேண்டும். அதன் மதிப்பென்ன? அதற்காக எவ்வளவு பயிற்சியும் உள்ளுணர்வும் உனக்குத் தேவைப்பட்டது என்பது உனக்குத் தெரியவேண்டும். இலக்கைப் பார்க்கும் போது அதை மட்டும் கவனிக்காதே. சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் கவனி. ஏனெனில், அம்பை விடும்போது, காற்று, எடை, தூரம் என்பன போன்ற நீ கவனிக்காத பல விஷயங்கள் அதை பாதிக்கும்.
நீ இலக்கைப் புரிந்து கொள்ளவேண்டும். நான் இலக்காக இருந்தால் எப்படி இருப்பேன்? எய்தவன் பெருமைப்பட வேண்டுமெனில் அம்பு எங்கே குத்துவதை விரும்புவேன்? என்று எப்போதும் உன்னை நீயே கேட்டுக்கொள்ள வேண்டும். வில்வீரன் இருந்தால்தான் இலக்கும் இருக்கும். அதை அடையவேண்டும் என்ற வீரனின் ஆசைதான் இலக்கின் இருப்பதற்கான நியாயம். இல்லையெனில் அது வெறும் உயிரற்ற பொருள், மரத்துண்டு அல்லது காகிதத்துண்டு. அம்பு எவ்வாறு இலக்கைத் தேடுகிறதோ அவ்வாறே இலக்கும் அம்பைத் தேடுகிறது. ஏனெனில் அம்புதான் இலக்கு இருப்பதற்கான அர்த்தத்தைத் தருகிறது. அது வெறும் காகித அல்லது மரத் துண்டு அல்ல. வில்வீரனுக்கு அதுதான் உலகின் மையம்.
No comments:
Post a Comment