Tuesday, November 03, 2009

தவம்

விஸ்வாமித்திரன் ரிஷியாகி விட்டான். இந்த விஷயத்தை சேடிப் பெண் ஒருத்தி சொல்லிவிட்டுச் சென்றாள். அவனுக்கும் குஷியாக இருந்தது. அவனுடைய முன்னாள் நண்பன் ரிஷியானது மிக நல்ல செய்தி. அவனுடைய ஒற்றர்கள் வந்து சொல்ல வில்லை. அரசவைக்குச் சென்றவுடன் சொல்லுவார்கள். சேடிப் பெண் சொன்னது நல்லதாகப் போயிற்று. அரசவையில் அமரும் போது சொல்லிவிடலாம். அமைச்சர்களும் அதிர்ச்சி அடையக் கூடும். திரிசங்கு சாதாரண மன்னன் அல்ல. அவனுடைய ஒற்றர் வலை மிகவும் சக்தி வாய்ந்தது. ஒருபுறம் மகிழ்ந்தாலும் கொஞ்சம் தயக்கமும் இருந்த்து. விஸ்வாமித்திரன் கைமீறிப் போய் விட்டான். இனி அவனைப் பிடிக்க முடியாது. சின்ன வயதில் தன்னுடன் விளையாடிக் கொண்டிருந்தவன். பல வருட காலமாக காணாமல் போயிருந்தான். தவமிருக்கக் காட்டுக்குப் போயிருக்க வேண்டும். திடீரென்று ரிஷி – இப்போது தகவல் வருகிறது. பிள்ளைப் பருவத்திலேயே அப்பா பெயர் கேட்டால் தெரியாது. திரிசங்குவின் அம்மாதான் சொன்னாள். “க்ஷத்திரிய தகப்பனுக்கும் சூத்திரப் பெண்ணுக்கும் பிறந்தவன் என்று ஜோஸியக்காரன் சொன்னானாம்.” யாருக்கும் முழுவிபரம் தெரியவில்லை. இப்போது கேட்க முடியாது. ரிஷியாகி விட்டான். பெரிய மனிதன் ஆனபிறகு தாய் தகப்பன் பற்றிச் சொல்ல முடியாது. இது தானே உலக வழக்கம். ரிஷிமூலம் என்று இதைத்தானே சொல்லி வைத்திருக்கிறார்கள்.

திரிசங்குக்குத் தோன்றியது. இப்போது ராஜரிஷியாக இருக்கும் அம்பரன் சரியில்லை. தலைக்கனம் அதிகமாகிவிட்ட்து. அவனுக்குப் பதிலாக விஸ்வாமித்திரனை நியமித்து விடலாம். அவனுடைய சீடர்களிடமிருந்து எதிப்புக் கிளம்பும் அதை சமாளிக்க வேண்டும். விஸ்வாமித்திரனையே கேட்டு விடலாம். ஆனால் அவனை, தப்பு தப்பு அவரை கேட்டால் தர்ம சங்கடத்தில் மாட்டிக் கொண்டுவிடுவான். முதலில் அம்பரனை ஒழித்துவிட்டால், அவனும் தயங்கமாட்டான். வர வர அம்பரனின் போக்குச் சரியில்லை. அவனும் பிராமணர்களின் பேச்சைக் கேட்க ஆரம்பித்து விட்டான். அவனைப் பிரம்மரிஷி ஆக்குவதாக பேச்சு அடிபடுகிறது. அந்தப் பேச்சும் திரிசங்கு காதில் விழுந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அம்பரன் பிரம்மரிஷியாகிவிட்டால்? இப்போதே அவன் சரியில்லை. அப்புறம் அவ்வளவுதான். திரிசங்குவையே ஆட்டிவைப்பான்.
அன்றிலிருந்தே திட்டம் தீட்ட ஆரம்பித்தான். அம்பரனையும் அவனுடைய சீடர்களையும் எப்படி ஒழிப்பது? யாருக்கும் தெரியக்கூடாது. தன் பேரும் இதில் அடிபடக்கூடாது. ஏதோ ஒரு விபத்து மாதிரித் தெரியவேண்டும். யாராவது கொஞ்சம் சந்தேகப் பட்டாலும் அவர்களை ஒழித்துவிட வேண்டும்.

எட்டுமாதம் கழித்து ஒரு அம்மாவாசை நாளில், கங்கையில் சீடர்களுடன் அம்பரன் சென்ற படகு கவிழ்ந்துவிட்டது. ஒருவரும் தப்பவில்லை. கரையில் அந்த நேரம் யாருமில்லை. அம்மாவாசையன்று யார் நதியில் பயணம் போவார்? இதில் ஏதோ சூது என்று நிறையப் பேருக்குச் சந்தேகம். ஆனால் பேசமுடியவில்லை. பெரிய இடத்து விஷயம். பேசி வம்பில் மாட்டிக்கொள்ளக் கூடாது. அதற்கு முந்தினநாள், அம்பரன் ஏதோ யாகத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தானாம். அவனும் அவன் சீடர்களும் நதிக்கு எப்பொழுது போனார்கள் என்பதே தெரியவில்லை. திரிசங்கு யாரையும் ராஜரிஷியாக நியமிக்கவில்லை. ஏதோ வருத்த்த்தில் கழித்தான் என்று பேசிக்கொண்டார்கள் ஜனங்கள். அம்பரனுக்கு முதல் திதி பண்ணிவிட்டுத் திரும்பிய அவன் மகனும் இரண்டாவது நாள் இறந்துவிட்டான். அப்பாவை இழந்த சோகம் என்று ஊரில் பேசிக் கொண்டதாக கேள்விப்பட்டான் மன்னன். அரசவையில் அப்படித்தான் சொன்னான். அவன் யூகிப்பதற்கு எதுவுமில்லை.

அடுத்த முறை விஸ்வாமித்திரன் அம்பரன் அவைக்கு வர இரண்டு ஆண்டுகளாகி விட்டன. அதுவரை ராஜரிஷி பதவி காலியாகவே இருந்தது. விஸ்வாமித்திரனுக்கு பெரிய வரவேற்பு அளிக்கப்பட்ட்து. அவன் ராஜரிஷியாகிவிடலாம் என்று எல்லோருக்கும் தெரிந்தே இருந்தது. குறிப்பாக, அம்பரன் மனைவிக்கு. ஏற்கனவே, திரிசங்கு கூப்பிட்டு ரகஸியமாகச் சொல்லிவிட்டான். வெளியில் தெரியாமலிருந்தால் இரண்டு கிராமங்களை தானங் கொடுப்பதாகச் சொன்னான். செத்துப் போன கணவனைவிட இரண்டு கிராமங்களின் வரி முக்கியமானதென்று அவளுக்குத்தெரியும். இன்னும் பலகாலத்துக்கு நன்றாக வாழலாம். அரசனின் பேச்சைக் கேட்காமலிருக்க முடியுமா? உயிர்.

ராஜரிஷி ஆனதும் விஸ்வாமித்திரனுக்குத் தனிக்களையே வந்து விட்ட்து. திரிசங்குவுக்கும் ரொம்ப வசதியாகிவிட்டது. இதுவரை ராஜரிஷியாக இருந்தவர்கள் எல்லாம் அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தார்கள். நல்லநாள் கெட்டநாள் சகுனம், வரி படைஎடுப்பு, தண்டனை, பதவி, தானம் சொல்லப் போனால் மனைவியுடன் ஒன்றாக இருப்பதற்குக் கூட ராஜரிஷியின் அனுமதி பெற்று, அவன் நேரம் குறித்துத் தந்த பின்னால்தான் முடியும். ஒரே கொட்டம் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் திரிசங்கு கேட்டான் “ சொர்க்கம் என்றால் என்ன?”

விஸ்வாமித்திரன் சொன்னான் “ நானும் பார்த்த்தில்லை, ஆனால் அங்கே எல்லாவசதிகளும் உண்டென்று கேள்விப்பட்டிருக்கிறேன்”´

அப்படியானால் நாம் சென்று பார்க்கலாமா?

அது முடியாது. செத்தபிறகு தான் அங்கே ஒருவனை அனுப்புவதா வேண்டாமா என்று
எமனுடைய காரியதரிசி சித்திரகுப்தன் தீர்மானிப்பான். அதுவரை பொறுத்திருக்க வேண்டும்

நாம் ஏன் பார்க்க முடியாது?

அது தான் முறை.

அதைமீறினால்?

மீற முடியாது
நான் அரசன் மீற முடியாதா?

முடியாது.

நீர்?

நானும் மீற முடியாது

அப்படியானால் ரிஷியான நீரே சொர்க்கம் போக முடியாதா?

விஸ்வாமித்திரன் யோசித்தான். “என்ன செய்வது? நானே அங்கே போக முடியாதா? ஒன்றும் தெரியாத அரசன் கேட்டுவிட்டான். அன்றிலிருந்து அவன் தூங்கவில்லை. இரவும் பகலும் அதைப் பற்றியே சிந்தித்தான். விஸ்வாமித்திரன் செய்யமுடியாத காரியம் உண்டா? என் தவ வலிமை என்ன என்பதைக் காட்டுகிறேன். சூளுரைத்துக் கொண்டான்.

அடுத்தநாள் காலையில் திரிசங்குவைச் சென்று பார்த்தான். தன் மனக் கிடக்கையைச்
சொன்னான். திரிசங்குக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏதோ விளையாட்டுப் போக்கில் சொன்னது இப்படி ஆகி விட்டதே என்று வருந்தினான். ஆனால் விஸ்வாமித்திரன் கிளம்பிவிட்டான்.
இருபதாண்டுகள் தவமிருந்தான். ஊண், உறக்கம் இன்றி, வேறு எந்த நினைவுமின்றித் தவம். சிவனுக்கே பொறுக்கவில்லை. தேவரும் அவுணரும் பயந்தனர். விஸ்வாமித்திரனைப் பற்றி அவர்களுக்குத் தெரியும். பிடிவாதம் பிடித்தவன். பிரதிவாதி பயங்கரம். எதுசொன்னாலும், ஏறுக்கு மாறாகத்தான் செய்வான். என்ன செய்வது என்று எல்லோரும் கலங்கினர். இந்திரன் தான் யோசனை சொன்னான். இவனையும் தேவர் குலத்தில் சேர்த்துவிடுவோம் அதுதான் சரியான வழி. பலசாலி, புத்திசாலி இவர்களைப் பகைத்துக் கொள்ளக்கூடாது. அது ஆபத்து. அவன் நம்மை எதிர்ப்பான். நமது கட்சியில் சேர்த்துவிடுவோம். அதை அனைவரும் ஒத்துக் கொண்டார்கள். எல்லாமறிந்த சிவபெருமான் சிரித்தான்.

தேவர்கள் சார்பில் இந்திரன் வசிஷ்டனை அனுப்பினான். வசிஷ்டனும் பல வாரங்கள் விஸ்வாமித்திரன் தவக்குடிலின் முன் காத்திருந்தான். அவன் விழிப்பதாக இல்லை. வசிஷ்டனுக்குத் தானே விஸ்வாமித்திரன் தவத்தைக் கலைக்க மனமில்லை. என்னதான் அவன் க்ஷத்திரியனாக இருந்தாலும், தவசி. தன்னையொத்த துறவி மீது அவனுக்கு ஒரு பரிவு இருந்தது. அதுவும் இத்தனை கடுமையான தவக்கோலம் யாரும் பூமியில் பூண்டதில்லை. ஒரு பயமும் இருந்தது. தவத்தில் தன்னை மிஞ்சியவன் சக்தியிலும் தன்னை மிஞ்சிவிடுவானோ என்ற பயம். பலமிகுந்த அனைவருக்கும் எழும் பயம். அவன் தவத்தைக் கலைக்கும் போது கோபத்தில் ஏதாவது சாபம் கொடுத்துவிட்டால்?அதிலிருந்து விடுபட அவன் காலிலேயே விழவேண்டும். பிரம்மரிஷிக்கு மனமில்லை. தான் பெற்றிருந்த வலிமை, துறவிகளின் தலைவன் என்ற பெருமை, எல்லாவற்றையும் இழக்க மனமில்லை. இந்திரனிடமே மீண்டும் சென்றான்.

இந்திரனுக்கும் ஒரு தயக்கம் இருந்தது. வசிஷ்டரால் முடியவில்லை என்றால் யாரால் முடியும். வசிஷ்டன் தவவலிமை இழந்தால் இந்திரனுக்கும் தேவர் குலத்துக்கும் இழப்புத்தான். இது மாதிரி தவ சிரேஷ்டன் இன்னொருவன் கிடைப்பானா? இப்போதே விஸ்வாமித்திரனை நினைத்தால் பயமாக இருக்கிறது. விஸ்வாமித்திரன் தவமும் கலையவேண்டும், நமது ராஜாங்கமும் நடைபெறவேண்டும். யோசித்து முடிவெடுத்தான்.

மேனகை. இந்திரனின் மிகநெருங்கிய காதலி. தேவர்களின் காமக்கிழத்தி. என்னதான் இந்திரனின் காமக் களியாட்டதின் தலைவியாக இருந்தாலும், அவனுக்கு அடிமைதானே. அவள் பெண். அவன் சொன்னதைக் கேட்டே ஆகவேண்டும். தேவ சபையின் நலன்
காக்கப்படவேண்டும்.

கலைந்தது தவம். மேனகை பெற்றாள் சாபம். கோபம் தணிந்த நேரம், வசிஷ்டன் அவனைப் பார்த்து வணக்கம் சொன்னான். விஸ்வாமித்திரனுக்கு ஆச்சரியம். வசிஷ்டரா? ஆம் வசிஷ்டரேதான். கோபம் தணிந்து புன்னகை பூத்தான்.

“ நமஸ்காரம் யாரைப் பார்க்க வந்தீர்கள் ஐயா?

உங்களைத்தான்

எங்களைத்தானா? நான் மிகவும் சிறியவன். நீங்கள் பிரம்மரிஷி. நீங்கள் என்னை?

அது நேற்று வரை. இன்று உன் தவ வலிமை என் பெருமையை மிஞ்சிவிட்ட்து. இன்றுமுதல்

நீயும் பிரம்மரிஷி

என்ன பிரம்மரிஷியா?

“பிரம்மனுக்கு ரிஷியா? பிராமணனுக்கு ரிஷியா?” ஆச்சரியத்துடன் கேட்டான் விஸ்வாமித்திரன்.

அவனுக்குப் புரிந்தது. என் தவ வலிமை மிகுந்த்தும் என்னைத் தங்களுடன் சேர்த்துக் கொள்ள முடிவு செய்துவிட்டார்கள். ஒத்துக் கொள்ளலாமா? திரிசங்குவும் ஷத்திரிய குலமும் என்னாவது? ஆனால் மேல்நிலைக்குச் செல்வது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. நான் மட்டும் விதி விலக்கல்லவே? சரி என்று ஒத்துக் கொண்டான். வசிஷ்டன் அவனை இந்திர சபைக்கு அழைத்துச் சென்றான். அங்கே பலநாட்கள் கொண்டாட்டங்கள் நடந்தன. விஸ்வாமித்திரன் பூலோகத்தை மறந்தே போனான்.

இந்திரன் ஒரு நாள் நினைவூட்டினான். “விஸ்வாமித்திர்ரே, நீங்கள் சாபமிட்ட மேனகை
இன்னும் பூலோகத்தில் வாடிக்கொண்டிருக்கிறாள். அவளை உங்கள் பழைய சிஷ்யன் திரிசங்குவிடம் சேடியாகப் பணிபுரிய அனுப்பி இருக்கிறேன். அவனுக்கும் தெரியாது. இப்போது நீங்கள் தயை கூர்ந்து, அவளுக்குச் சாப விமோசனம் அளிக்கவேண்டும்”

இந்திரனின் சூது விஸ்வாமித்திரனுக்கு இப்போதுதான் புரிந்தது. மேனகையைவிட்டுத் தன் தவத்தைக் கலைத்தது, பின்னர் தன்னை தேவலோகத்தில் தனது அவையில் வைத்துக் கட்டுப் படுத்தியது, எல்லாம் திட்டமிட்டுச் செய்திருக்கிறான். திரிசங்குவை நினைத்துப் பார்த்தான். தன்னை முதல் முதலாக அங்கீகரித்து, ராஜரிஷியாக்கியவன். அவனில்லாவிட்டால் தவம் செய்யப் போயிருக்கமாட்டேன். உடனே கிளம்பிவிட்டான்.

திரிசங்கு தூங்கிக் கொண்டிருந்தான். பக்கதில் மேனகை, லோகு என்ற பெயருடன் பணிவிடை செய்துவந்தாள். அவளுக்கும் தான் யாரென்று தெரியாது. எப்படி வந்தோம் என்பதும் நினைவில்லை. விஸ்வாமித்திரன் போனதும் திரிசங்கு விழுந்தடித்து ஓடிவந்தான்.

"தவசிரேஷ்டரே நான் உங்களை எதிர்பார்த்துக் காத்திருந்து காத்திருந்து இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இப்போது நான் சாவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். தவம் முடிந்து இங்கே வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். என் சேவகர்கள் தாங்கள் தவமிருந்த இடத்தில் உங்கள் வரவை நோக்கி இன்னும் நின்று கொண்டிருப்பார்கள்”
காலில் விழுந்தான். வயதான கோலத்தில் அவனைப்பார்த்த விஸ்வாமித்திரனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. முனிவன் தேவலோகத்தில் இருக்கும் வரை பூலோகத்தின் துயரங்கள் அவனை எட்டவில்லை. பூலோகம் வந்ததும் இப்படி நிகழ்ந்த்து ஆச்சரியமாக இருந்தது.

“கவலைப் படாதே. உன்னை நான் மறந்தது உண்மைதான். தேவகுமாரன் கொஞ்சம் என்னை தாமதிக்க வைத்துவிட்டான். உனக்காகத்தான் தவம் செய்யச் சென்றேன். சொர்க்கத்துக்கு உன்னை அனுப்பவே நான் தவமிருந்தேன். இத்தனைக் காலம் நீ கஷ்டப்பட்ட்தற்கு விடிவு வந்துவிட்ட்து. இப்போது என் தவ்வலிமையால் உன்னை சொர்க்கத்துக்கு அனுப்புகிறேன்.”

‘ஸ்வாமி, எனக்காக நீங்கள் இத்தனை கஷ்டப்பட்டபோது, நான் கொஞ்சம் கஷ்டப்படலாகாதா? நீங்கள் என்னுடனே இந்த ராஜியத்தில் இருக்க வேண்டும்.”
நீ ரொம்ப நாள் காத்திருந்துவிட்டாய். இனியும் உன்னை ஏமாற்றமாட்டேன். இதோ நீ, இந்த லோகு என்று இங்கே வந்த மேனகையுடன் தேவலோகம் செல்.” வானை நோக்கி இருவரையும் தள்ளினார் விஸ்வாமித்திரர்.

கொஞ்ச நேரத்தில் திரிசங்கு மீண்டும் அவர் காலடியில் பொத்தென்று விழுந்தான். விழுந்ததில் நல்ல அடிபட்டுவிட்டது. விஸ்வாமித்திரருக்கும் காலில் லேசான அடி. மேனகையைக் காணவில்லை. அவளை தேவ சபையில் சொர்க்கத்தில் உள்ளே விட்டு, திரிசங்குவை கீழே தள்ளிவிட்டார்கள் தேவலோகத்தில் இருந்த பிரம்மசபையினர். கோபத்துடன் எழுந்தார் விஸ்வாமித்திரர்.

திரிசங்கு சொன்னான் ”சொர்க்கத்தை வாசலில் இருந்து பார்த்தேன் அதுவே போதும்” விஸ்வாமித்திரன் யோசிக்க ஆரம்பித்தான். இப்படி அவன் கனவு நிறைவேறாது.

* * * * * * * * **

விஸ்வாமித்திரன் மீண்டும் தவம் செய்ய ஆரம்பித்தான். பலயுகங்கள் கழிந்தன.

நந்தன் சிதம்பரத்தில் நடராஜர் கோயிலுக்கு முன்னே வந்து நின்றான். வேலை செய்து செய்து உடம்பு மெலிந்து, ரொம்பவும் சீக்காளியாயிருந்தான். பிறந்ததிலிருந்து ஆண்டைக்கு அடிமையாக இருந்தே வாழ்நாள் கழிந்துவிட்டது. எத்தனை முறை முயன்றாலும் எந்த ஊரின் கோயிலுக்குள்ளும் அவன் நுழையமுடியவில்லை. நாயன்மார்களுடன் கலந்துவிடலாமென்றால், அவர்கள் இறைவனைப் பாடி ஊர் ஊராகச் செல்லும் போது எல்லோரும் முன்னே செல்ல அவன் நாற்பதடி பின்னே செல்லவேண்டியிருந்தது. ஆண்டை வயல்காட்டில் வேலையில்லாத காலங்களில் தான் பஜனைக் கூட்டத்தில் சேர அனுமதித்தார். அவன் இல்லாத வேளையில் அவன் மனைவியும் எட்டு வயது, பத்து வயதுப் பிள்ளைகளும் நந்தன் வேலையையும் சேர்த்துச் செய்ய வேண்டியிருந்தது.

“இந்த நாறப் பொழப்புக்கு நீ சிவபெருமானைப் பார்க்காமலே இருக்கலாம். சிவபெருமான் உன் வேலையைக் குறைக்கலாம் எங்க வேலையை பெருக்கிட்டாரு. சாமி கும்பிட்டதெல்லாம் போதும், ஆண்டை குடுத்த வேலையை ஒழுங்காச் செய்யி” அவன் மனைவி கறுப்பாயி அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். அவன் வேலை செய்து களைத்துவிட்டான். இனிமேல் முடியாது. வேலையிலிருந்து தப்பிக்க ஒரே வழி சைவ பக்திக் கூட்டதில சேர்றதுதான். நாற்பதடி பின்னாடி நடந்தாலும், வேளை தவறாமல், ஊர்தவறாமல் சோறு கிடைத்துவிடுகிறது. இன்றும் அப்படித்தான். செப்பரடிகள் கூட்டத்தில் சேர்ந்து வந்ததுமுதல் பிரச்சனையில்லை. இறைவன் பேரைச் சொல்லிக்கொண்டே இருந்தால் போதும். செப்பரடிகள் சொல்லும் பாடல் வரிகளைத் திரும்பச் சொல்ல வேண்டும். இதைவிட எளிதான வேலை உண்டா? இரவும் பகலும் வயலில் ஓய்வு இல்லாமல் உழைத்த உடம்பு. கோயிலுக்குள்ள விடவில்லை என்றால் என்ன? ஆண்டைகிட்ட படறபாட்டுக்கு இங்க ஒண்ணுமே இல்ல. கயிலாயம் செல்லவேண்டும் என்று மீண்டும் மீண்டும் அரற்ற ஆரம்பித்தான்.

அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற ஒரே வழி இறைவனின் அடிமையாவதுதான். இறைவனை வழிபடும் கூட்டங்களில் பித்தனைப் போல் அலைந்தான். செப்பரடிகளிடம் வந்து சேர்ந்ததிலிருந்து கொஞ்சம் விடுதலை கிடைத்தது.

இன்னைக்குத்தான் சிதம்பரம் வந்து சேர்ந்தார் செப்பரடிகள். அவருடன் அவனையும் சேர்த்து இருபத்தி எட்டுப் பேர். எல்லோரும் கோயிலுக்குள் போய்விட்டார்கள். அவன் மட்டும் வெளியில் காத்திருந்தான். உண்டைக்கட்டிச் சோறு கிடைத்துவிடும். நேற்றுக் காலையில் சாப்பிட்டது. சில நேரங்களில் இப்படி ஆகிவிடும். எல்லோரும் தர்மவான்களாக இருப்பதில்லை. சிவனடியார்களாக இருந்தால் கூட. அவனுக்கு வேறு தெரியவில்லை. வேலைபார்த்துக் களைத்த உடம்பு. சரியான நேரத்தில் ஆகாரம் கேட்கும். கூட்டதிலிருந்து விலகி ஒளிந்து, புத்தமடத்தில் கெஞ்சிக் கூத்தாடிக் கிடைத்தது. புத்தமடம் கொஞ்சம் ரகஸியமாக நடப்பதால் யாருக்கும் தெரியாது. அந்தந்த ஊரில் சிலருக்கு மட்டும் தெரியும். புத்தமடம் இருக்குதென்று தெரிந்தால் அடி கொளுத்திவிடுவார்கள். அவனுக்குத் தெரியும். பசித்தவனுக்குத் தெரியாதா சோறு எங்கே கிடைக்குமென்று?

இருப்பதிலேயே வயசான புத்த துறவி கேட்டார் “எங்கள் மடத்தில் சேர்ந்துவிடு தினமும் சாப்பாடு கிடைக்கும் வேலை செய்ய ஆட்களே இல்லை” நந்தனுக்குத் தோன்றியது “அங்கயும் வேலைதானா. இந்தச் சனியன் நம்மை விடாது. சைவத்துக்குப் போனாலும், புத்தத்துக்குப் போனாலும். கூட ஆண்டை வேற வந்து அடிப்பான். "ஏண்டா இங்க சேந்தே". சைவத்தில வருஷம் முழுக்க ஆண்டைக்கிட்ட வேல பாத்துட்டு எப்பவாவது கூடப் போய்ச் சேந்துக்கலாம். புதுசாச் சிவனடியார் கூட்டத்தைத் தொடங்கினால் தலைவனாக ஆகிவிடலாம். பஞ்சமரின் அடியார் கூட்டம். ஆண்டையும் சாமி பேரச் சொன்னா முதல்ல திட்டினாலும், பிறகு பயத்தில் அனுமதித்து விடுவார். புத்த மடத்தில அப்படி முடியாது. சதா நேரமும் அங்கயே இருக்கணும். நல்லது தான் ஆனா ஆண்டை விடமாட்டாரே. ஊர்பஞ்சாயத்தைக் கூட்டி, என்ன வேணாலும் செய்வாரு. குண்டில சூட்டுக் கம்பியக்கூட விட்டுருவாங்க. வழிவழியா வர்ற வழக்கத்தை மீறிட்டான்னு தண்டம் போடுவாரு. சாவறதுக்கு பதிலா சைவ அடியார்ட்ட சேந்துக்கலாம். இதான் முடிவு என்று நின்று கொண்டிருந்தான். அப்ப பாத்து, இரண்டு பேரு, நந்தன் மகனை அழைத்துக் கொண்டு அவனிடம் வந்தார்கள்.

வந்ததும் அடிதான். நல்ல வாட்டமான கட்டைகளை எடுத்து அடித்தார்கள். “அடிக்காதீங்க, நடராஜரைப் பாக்காமலேயே வந்திர்ரேன். ஆண்டைக்கிட்ட வர்றேன்.” அவன் மகனும் அலறிக் கொண்டிருந்தான். நந்தன் உணர்வின்றிக் கிடந்தான். அவனை யாரும் தூக்க வரவில்லை. தொட்டால் தீட்டு. அப்போது தான் “அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம்” என்று சொல்லிக் கொண்டே வெளியில் வந்த செப்பரடிகள் அவனைப்பார்த்தார்.

அடித்தவர்கள் நால்வரும் ஆண்டையின் ஆட்கள் என்று அவருக்கும் தெரிந்தது. ந்நதனுக்காக பரிந்து பேச முடியாது. இவன் எங்கடா நம்மிடம் வந்தான் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார். நல்ல வேளை தீட்டு ஒழிந்தது. இனி மனத்தடுமாற்றம் இன்றி அவர் இறைவனைப் பாடிப் பரவலாம். நந்தனின் மகனும் அடிவாங்கியதில் விழுந்து கிடந்தான். கொஞ்சம் உணர்வு வந்ததும் தட்டுத் தடுமாறிக் கொண்டே ஊரைப்பார்க்க நடந்தான். அப்பா இங்க கிடைக்காம இருந்திருந்தா பிழச்சிருப்பார் என்று முனகிக் கொண்டே சென்றான். நந்தனை அங்கே விட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும். அவனால் தூக்க முடியாது. யாரும் வரவும் மாட்டார்கள். நந்தன் பிணத்தை நாய்கள் காகங்கள் தின்றுவிடும். நினைக்கும் போது அழுதான். சிவன் பேரைச் சொல்லிச் சாவதில் என்ன இருக்கிறது? அடிமை என்றும் அடிமை தான். ஆண்டைக்கோ அல்லது சிவனுக்கோ. சொன்னாலும் அவன் கேட்டதில்லை.

செப்பரடிகள் தூரத்திலிருந்தே சொன்னார் “தீக்கு தீட்டுக் கிடையாது. எண்ணைய விட்டுக் கொளுத்திடு” நந்தன் கோயிலுக்குள் போகாமலேயே எரிந்தான். இனிமேல் எந்த அடிமையும் சைவக் கூட்ட்த்தில் சேரமாட்டான். ஆனால் புலையனும் சிவன் பேரைச் சொன்னால் அவனுக்கு நான் அடிமை என்று உரக்கப் பேசலாம்.

விஸ்வாமித்திரன் இன்னும் தவம் கலையவில்லை. நந்தன் இறந்தது தெரிந்து ஒருமுறை விழித்துப் பார்த்தான். இன்னும் தவம் செய்ய வேண்டும்.

• * * * * * * ** *

“விஸ்வாமித்திரனுக்கு தேவலோகத்தைப் பற்றித் தெரியுமா? ஏதோ புது லோகத்தப் படைக்கப் போரேன்னு கிளம்பினாராமே? அது போலத்தான் இப்போ கிளம்பிருக்காங்க. தினம் ஒரு கட்சி. அன்னன்னைக்குச் சோத்துக்கே வழியில்லாத பயக எல்லாம் புது உலகம் படைப்போம் அப்படீன்னா புது உலகம் என்ன பொம்மைக்கடையா? ஊர்வலம் போவாங்க. தகராறு பண்ணுவாங்க. அடிவாங்குவானுக. ஒளிஞ்சிக்குவானுக. இதுதான நடக்கு காலங்காலமா மாவோயிஸ்டுங்கிறான், புத்திஸ்டுங்கறான். தலித்துங்கறான், நந்தனார்ங்கிறான் ” சென்னையில் நடந்த ஊர்வலத்தைப் பார்த்து, சுப்பிரமணியனும், செல்லையாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். இருவரும் சரித்திரப் பேராசிரியர்கள். தினமும் கடற்கரைச்சாலையில் உடற்பயிற்சிக்காக நடப்பவர்கள். அம்பெட்கர் சிலை வரும்போது அவரைப் பற்றிப் பேசுவார்கள், பெரியார் சிலைவந்தால் அவரைப் பற்றிப் பேசுவார்கள். விஸ்வாமித்திரன் சிலையாக இல்லை. அதனால் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறாரா என்பது அவர்களுக்குத் தெரியாது. விஸ்வாமித்திரனும் தவமிருந்தே காற்றில் கரைந்துவிட்டான். அவன் ஏக்கம் கடைசிவரை தீரவே இல்லை.

No comments:

Post a Comment