Tuesday, November 10, 2009

வில்லேருழவர் 2

“நீங்கள் மிகச்சிறந்த வில்வீரர் என்று அவன் சொன்னான். நீங்கள் வில்வித்தையில் வல்லவர் என்று எனக்குத் தெரியாது. நீங்கள் ஏன் மரவேலை பார்க்க வேண்டும்.

“மரவேலை செய்யவேண்டும் என்பது என் கனவு. வில்வித்தை எல்லாவற்றுக்கும் உதவும். சொல்லப்போனால் வில்வித்தை கற்றவனுக்கு வில் அம்பு, இலக்கு எதுவும் தேவையில்லை’

அந்தச் சிறுவன் தொடர்ந்தான் “ இந்தக் கிராமத்தில் சுவராஸ்யமாக எதுவும் நடப்பதில்லை. இப்போது திடீரென்று நான் ஒரு வில் வீர்ரை, ‘குரு’வைப் பார்க்கிறேன் யாருமே அவரைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. அவன் கண்கள் ஒளிவிட்டன.

வில்வித்தை என்றால் என்ன? எனக்குச் சொல்லித் தருவீர்களா?

சொல்லித் தருவது ஒன்றும் கஷ்டமானதல்ல. கிராமத்துக்குச் செல்லும் போதே வழியில் ஒருமணி நேரத்துக்குள் முடித்துவிடுவேன். மிக மிகச் தேர்ச்சி பெறுவது வரை நீ தினமும் பயிற்சி செய்வது தான் கஷ்டமானது.,

சரியென்று சொல்லிவிடுங்களேன் என்று சிறுவனின் கண்கள் அவனைக் கெஞ்சுவது போலிருந்தது. பத்துப் பதினைந்து நிமிடம் டெட்சுயா அமைதியாக நடந்தான். அவன் மீண்டும் பேசிய போது அவன் குரல் இளமையாக ஒலித்தது.

“இன்று எனக்குத் திருப்தியாக இருக்கிறது.. ரொம்ப வருஷங்களுக்கு முன் என் உயிரைக் காப்பாற்றிய ஒருவருக்கு நான் மரியாதை செய்தேன். அதனால் நான் எல்லா விதிகளையும் சொல்லித்தருவேன். அதற்கு மேல் முடியாது. நீ நான் சொல்வதைப் புரிந்துகொண்டால் என் உபதேசத்தை நீ விரும்பியபடி உபயோகிக்கலாம். கொஞ்சநேரத்துக்கு முன்னால் என்னை ‘குரு’ என்று சொன்னாய். குரு என்றால் யார்? எதையாவது யாருக்காவது சொல்லித் தருபவன் குரு அல்ல. யார் ஒருவன் ஒரு மாணவனின் ஆத்மாவில் ஏற்கனவே இருக்கும் முழுத் திறமையையும் அவனே கண்டு கொள்ளக் கற்பிக்கிறானோ அவன்தான் குரு. மலையிலிருந்து இறங்கும் போது டெட்சுயா வில்வித்தையை அவனுக்கு விளக்கினான்.

தோழர்கள்

அம்பும் வில்லும் பற்றிய தனது மகிழ்ச்சியை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளாத வில்வீரன் தனது குணங்களையும் குறைகளையும் அறிந்துகொள்வதில்லை. அதனால் எதையும் நீ தொடங்குமுன் உன் வேலையில் ஆர்வமுள்ள தோழர்களை, தெரிந்தவர்களைத் தேடு. மற்ற வில்வீர்ர்களைத் தேடு என்று நான் சொல்லவில்லை. மற்ற திறமைகள் உள்ளவர்களைத் தேடு. மகிழ்ச்சியுடன் தொடரும் எந்த வித்தையையும் மாதிரித்தான் வில்வித்தையும். எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தி இவரை விடச் சிறந்தவர் இல்லை என்று குறிப்பிடும் அளவுக்குத் திறமையான தோழர்கள் பற்றிச் சொல்லவில்லை
.தவறுசெய்யப் பயப்படுகிற, அதனாலேயே தவறுகள் செய்கிற மனிதர்கள். அதனால் அவர்கள் வேலையை யாரும் அங்கீகரிப்பதில்லை. ஆனால், அது போன்றவர்கள் தான் உலகை மாற்றி அமைக்கிறார்கள். பல தவறுகள் செய்த பின்னால் ஏதாவது செய்து, அவர்கள் வாழும் சமூகத்தில் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவந்து விடுவார்கள். தங்களைச் சுற்றி ஏதாவது நடக்கும் என்று காத்திருந்து பின்னர் தங்கள் பாதையை அதற்கேற்றாற்போல் மாற்றிக் கொள்ளும் அளவுக்கு பொறுத்திருக்க மாட்டாதவர்கள். செயலில் ஈடுபடும் போதே பெரும் ஆபத்து என்று தெரிந்தும் முடிவெடுப்பவர்கள்.

இலக்கை எதிர்கொள்ளும் முன்னால் வில்லை நெஞ்சுக்கு உயர்த்தும்போதே திசையை மாற்றும் சுதந்திரத்தை அவன் உணரவேண்டியது அவசியம். அதனால் இதுமாதிரி மனிதர்களுடன் வாழ்வது முக்கியம். நாணிலிருந்து கையை விடும்போது தனக்குள் சொல்லிக் கொள்ளவேண்டும் “நாணை இழுக்கும்போது நீண்ட பாதையைக் கடந்துவிட்டேன். தேவையான சவால்களை என்னால் முடிந்த வரை எடுத்து இந்த அம்பை விடுகிறேன்.

எல்லோரையும் போல் சிந்திப்பவர்கள் நல்ல தோழர்கள் அல்ல. வில்வித்தையில் ஆர்வத்தை நீ பகிர்ந்து கொள்ளும் தோழர்களைத் தேடும் போது உள்ளுணர்வை மட்டும் நம்பு. மற்றவார்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளாதே. மனிதர்கள் தங்களுடைய குறைகளைக் கவனத்தில் வைத்துக்கொண்டு மற்றவர்களை எடைபோடுகிறார்கள். புதிய முயற்சிகள் செய்பவர்கள், துணிந்து சவால்களை சந்திப்பவர்கள், அதனால் கீழே விழுந்தாலும் அடி பட்டாலும் மீண்டும் துணிந்து இறங்குபவர்கள், இவர்களுடன் சேர்ந்து கொள்.

ஏற்கனவே சொல்லப்பட்ட உண்மைகளை ஒத்துக்கொள்வோர், தங்களைப்போல் எண்ணாதவர்களை விமரிசிப்போர், ஓரடி எடுத்து வைக்கும் முன்னால் நமக்கு மரியாதை கிடைக்கும் என்று தெரிந்த பின்னரே அடுத்த அடி எடுத்து வைக்கும் மனிதர்கள், ஐயங்களைவிட அறுதியிட்ட உண்மைகளை விரும்புவோர், இவர்களிடமிருந்து தள்ளியிரு.,

திறந்த மனதுடையோர், பலங்குறைந்திருப்பதைப் பற்றி அஞ்சாதவர்களுடன் சேர்ந்துகொள். அடுத்தவர்கள் செய்வதைக் கவனித்தால், முன்னேறமுடியும் என்பது புரிந்தவர்கள். கவனிப்பது தீர்ப்புச் சொல்வதற்காக அல்ல உறுதியையும், ஈடுபாட்டையும் நேசிப்பதற்காக.

வில்வித்தை மீது விவசாயிக்கோ, சமையல்காரனுக்கோ ஈடுபாடு இருக்காது என்று நீ நினைக்கலாம். தாங்கள் எதைப் பார்க்கிறார்களோ அதை தங்கள் வேலையிலும் புகுத்திவிடுவார்கள் என்று நான் நிச்சயமாகச் சொல்லுவேன். நீயும் அதையே செய். ரொட்டி செய்பவனிடமிருந்து கைகளை எப்படிப் பயன்படுத்துவது, மசாலாக்களை சரியாக எப்படிச் சேர்ப்பது என்று நீ அறிந்து கொள்வாய். பொறுமை, கடும் உழைப்பு, பருவங்களை மதிப்பது, புயல்களை திட்டாமலிருப்பது(ஏனெனில் அது நேரத்தை வீணாக்குவதுதான்) இவற்றை விவசாயியிட்டமிருந்து கற்றுக் கொள்ளலாம். உனது வில்லின் மரத்தைப் போல் வளைந்துகொடுக்து, பாதையில் வரும் குறிப்புகளை உணர்ந்து கொள்பவருடன் சேர்ந்துகொள். அவர்கள் தாண்ட முடியாத தடைகள், நல்ல வாய்ப்புக்கள் வரும்போது திசைமாறத் தயங்காதவர்கள்.

அவர்கள் தண்ணீர் போல. பாறையைச் சுற்றி ஓடும்; நதியின் பாதையில் சென்று சில நேரம் பெரிய ஏரியாக நிறையும்வரை காத்திருந்து பின் வழிந்தோடிப் பயணம் தொடரும்; ஏனெனில் இலக்கு கடல் என்று தண்ணீர் எப்போதும் மறப்பதில்லை. இப்போது அல்லது அப்புறம் அதை அடைந்தே ஆகவேண்டும்.

சரி இதுதான் முடிவு. இதற்குமேல் செல்லமாட்டேன் என்று சொல்பவருடன் சேராதே. குளிருக்குப் பிறகு வசந்தம் வருவதுபோல் நிச்சயம். எதுவும் முடிவதில்லை. உனது இலக்கை அடைந்த பின் மீண்டும் தொடங்கு. வந்த வழியில் நீ கற்றதையெல்லாம் பயன்படுத்து.

பாட்டுப்பாடி கதைசொல்லி, இன்பங்களை அனுபவித்து, கண்களில் மகிழ்ச்சியுடன் இருப்பவர்களுடன் சேர்ந்துவிடு. ஏனெனில் மகிழ்ச்சி அடுத்தவர்களைத் தொற்றிக் கொள்ளும். தன்னிரக்கத்தில், தனிமையில் கஷ்ட்த்தில் ஸ்தம்பித்து விடுவதிலிருந்து தடுக்கும்.

உற்சாகத்துடன் வேலை செய்பவர்களுடன் சேர்ந்து கொள். அவர்கள் உனக்கு உபயோகப் படுவது போலவே நீயும் அவர்களுக்கு உபயோகப்படுவாய். அவர்களின் கருவிகளைப் புரிந்துகொள். அவர்களின் திறனை அதிகரிப்பது பற்றி யோசி.

உன் வில்லையும், அம்பையும், இலக்கையும் பாதையையும் நீ சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. .

வில்

வில்லே உயிர். சக்தியின் ஊற்று. அம்பு ஒரு நாள் சென்றுவிடும். இலக்கு வெகு தூரத்தில் இருக்கிறது. வில் உன்னுடனே இருக்கும். அதை எப்படிப் பாதுகாத்து வைத்துக் கொள்வது என்பதை நீ அறிந்து கொள்ளவேண்டும். அதற்கு அவ்வப்போது ஓய்வு வேண்டும். எப்போதும் நாணேற்றிய வில் பலத்தை இழந்துவிடுகிறது. எனவே மீண்டும் உறுதிபெற அதற்கு ஓய்வு கொடு. பின் நீ நாணேற்றும் போது அது முழுபலத்துடன் இருக்கும். வில்லுக்கு மனசாட்சி கிடையாது. அது வில்வீரனின் ஆசையின், கைகளின் நீட்சி. அது கொல்ல அல்லது அமைதிக்கு உதவும். அதனால் நீ தெளிவான எண்ணங்களுடன் இரு. வில் நன்றாக வளைந்து கொடுத்தாலும் அதற்கும் ஒரு எல்லை உண்டு. அதற்கு மேல் வளைத்தால் உடைந்துவிடும் அல்லது வைத்திருப்பவனை களைப்படையச் செய்யும். உன் கருவிகளுடன் இயைந்து இரு. அதனால் முடிந்த்தற்கு மேல் எதிர்பார்க்காதே.

வில், வீரனின் கைகளில் இருக்கிறது அல்லது ஓய்வெடுக்கிறது. ஆனால் கைகளில் உடம்பின் எல்லாத் தசைகளும், வீரனின் எண்ணங்களும் வில்விடும் முயற்சியும் ஒருமுனைப்படுகிறது. நாணேற்றும் போது கம்பீரமாக நிற்க, உடம்பின் எல்லாப் பாகங்களும் தம்முடைய வேலையை வேண்டிய அளவு மட்டுமே செய்ய விடு. சக்தியை வீணாக்காதே. அப்படிச் செய்தால் களைத்துவிடாமல் தொடர்ந்து அம்புகள் விடலாம். வில்லை அறிந்து கொள்வதற்கு அது உனது கைகளின் உறுப்பாகவும் எண்ணங்களின் நீட்சியாகவும் இருக்கவேண்டும்.

'

No comments:

Post a Comment