Wednesday, November 04, 2009

Education in Mother tongue

தமிழில் கல்வி

உயர்ந்த நோக்கங்களைப் பற்றி காலங்காலமாகப் பேசி விட்டு, அதை நோக்கிய ஒரடி வைக்கவும் தயங்கும் மனிதர்களாகத்தான் நாம் இருக்கிறோம். சமூகம் பற்றிய நமது நம்பிக்கைகளுக்கும் அன்றாட வாழ்வில் நாம் எடுக்கும் முடிவுகளுக்கும் எந்தத் தொடர்பும், பெரும்பாலும், இருப்பதில்லை. வாழ்வின் முரண்பாடுகளில் இது ஒன்று என்று சப்பைக்கட்டு கட்டிக்கொண்டாலும், சமூகத்தை முன் செலுத்தும் வகையில் அரசியல் கலாச்சார வெளிகளில் ஆளுமைகள் இன்னும் நிறையத் தேவைப்படுகிறார்கள்.
உதாரணமாக, சட்டத்துக்கு முன்னால் மனிதர்களின் சமத்துவம் பற்றி மேடைகளில் உரக்கப் பேசுவதும் கீழிரங்கிப் போகும் போதே தன்னை உயர்த்திக்காட்டும் நடவடிக்கைகளை உறுதிப் படுத்திக் கொள்வதும் நமது தலைவர்கள்( கலாச்சார, இலக்கியத் தலைமகன்கள் உட்பட) வழக்கம்.

இந்த முறையில்தான் ‘தமிழில் கல்வி’ என்ற கருத்தும் கோஷமாக வைக்கப்படுகின்றது. மிகக் கசப்பான உண்மை ஒன்றை இந்த இட்த்தில் சொல்லியாக வேண்டியிருக்கிறது. தமிழில் உயர்கல்வி பெறும் அளவிற்கு அறிவியல் சாதனங்கள் (குறிப்பாக பாடப் புத்தகங்கள்) இல்லை என்பதே உண்மை. மைக்கேல் ஃபாரடேயின் கொள்கைகளை விளக்கும் காலத்துடன் தமிழ் அறிவியல் புத்தகங்களின் பயன்பாடு முடிந்துவிடுகிறது. இன்றைய அறிவியலின் மொழி பெரும்பாலும் ஆங்கிலமாக இருக்கிறது. இன்னும் ஒன்றிரண்டு மொழிகளை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் இந்தியாவில் இருக்கும் எந்த மொழியும் இன்றைய விஞ்ஞானத்தின் கருத்துக்களைத் தடையின்றி, படிப்போர் புரிந்து கொள்ளும் வகையில் கற்பிப்பதற்கு ஏற்றதல்ல. இந்த நிலையில் தமிழில் உயர்கல்வி என்பது இயலாதது. அனேகமாக இதை அனைவரும் ஒப்புக்கொள்வர். முதலில் விஞ்ஞானத்தை வளர்க்க வேண்டும். மொழி அதற்கேற்ப தானாக தன்னைக் கண்டுபிடித்துக் கொள்ளும். புதிய தொழில்நுட்பத்துடன் புதிய சொற்கள் புழக்கத்துக்கு வரும். உதாரணமாக டெலிவிஷனை தமிழன் கண்டுபிடித்திருந்தால், உலகமெங்குக் தமிழ்ச்சொல்லில்தான் அது அழைக்கப்பட்டிருக்கும். மொழியைவிட அறிவை மதிக்கவும் நாம் சொல்லித்தரவேண்டும். (தமிழில் நன்றாகப் பேசத்தெரிந்தால் அவர் அறிஞராகிவிடுவாரா?- பேச்சாளராகக்கூடும்). அறிவை மதிக்காமல் மொழியை மதிக்கும் நாட்டில் நன்றாகப் பொய்சொல்பவர்கள் கிடைப்பார்கள். உண்மைகளைக் கண்டு சொல்லும் விஞ்ஞானிகளோ அறிவை வளர்ப்பதன் மூலம், மொழியை வளர்க்கும் அறிவாளிகளோ இருப்பது குறைவு.

இதிலிருந்து அடுத்த படியாக உயர்கல்வி பெற்றால் தான் உய்வுண்டு என்று ஆகிவிட்ட சூழலில், உயர்கல்வி பெறும் அதே மொழியில் சிந்திக்கப் பயில்வது தவிர்க்க இயலாதது. அமெரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ மற்ற நாடுகளிலோ சென்று ஆராய்ச்சி செய்யவிரும்பும் ஒருவன், அடிப்படைக்கல்வியை ஆங்கிலத்தில் பெறுவதே நல்லது. அது அவன் அந்த மொழியில் சிந்திப்பதை எளிய செயலாக்கிவிடும். எனவே ஆரம்பக் கல்வியும் (தமிழ் என்ற பாடத்தைத் தவிர) ஆங்கிலத்தில் இருப்பது வசதியானதே.

வெளிநாடுகளில் சென்று பயிலாதவரும் கூட, இந்தியாவுக்குள்ளேயே வெளிமாநிலங்களுக்குச் சென்றால், ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு, அங்கிருக்கும் மொழியைக் கற்றுக் கொள்ளும் வரை, அல்லது அதற்குத் தேவை ஏற்படும் வரை, தன் தொழிலை, வேலையைப் பார்த்துக் கொள்ளலாம்.

தமிழிற்கல்வி என்று சொல்லும் போது யாரைக் குறிபார்த்துச் சொல்லப் படுகிறது? நகரங்களில், பெரிய பணக்காரர்களோ, அல்லது மேல்மத்திய வர்க்கத்து பிள்ளைகளோ பயிலும் பள்ளிகளை வைத்தோ சொல்லப்படுவதில்லை. ஏற்கனவே, அதிகப் படிப்பறிவு இல்லாத பெற்றோர்களுடைய பிள்ளைகளாய், கிராமங்களில் அறிவுச்சாதனங்களின்/(ஊடகங்களின்) பயனைப் பெறமுடியாத அளவில் பிற்படுத்தப் பட்ட மாணவர்களை நோக்கித்தான் இந்த தமிழிற்கல்வி என்ற வாசகம் (கோஷம்) வீசப்படுகின்றது. இவர்களின் கனவுகள் கூட, நகரத்தில் வசிக்கும், முழுஅறிவுச் சாதனங்களைப் பயன்படுத்தும் பணக்கார, மத்திய வர்க்கத்து மக்களின் கனவுகளின் அடிப்படையில்தான் எழுகின்றன. சென்னையில் இருப்பவன் அமெரிக்கா செல்ல நினைத்தால், அதையே கிராமத்திலிருப்பவனும் நினைக்கிறான். எனவே, அந்த நோக்கிலும் ஆங்கிலக்கல்வி கிராமத்துப் பள்ளியில் முக்கியமானதாகி விடுகின்றது.

தமிழில் கல்வி கற்றால் என்ன பயன் என்று கேட்டால் மீண்டும் பதில் கசப்பானதாகவே இருக்கிறது. தமிழில் கல்வி கற்றவன், சிறுதொழில் செய்யவும், சிறுவேலைகள் செய்யவும் தான் ஏற்றவன் என்பது சமூகத்தில் நாம் காணும் காட்சி, நிதரிசனம். இன்றைய நிலையில் இதுமாதிரி தொழிலில் உள்ளவர்கள் கூட ஆங்கிலம் பயின்றால் நல்லது. எனது சொந்தக்காரர் ஒருவர், தொழிற்சாலைகளுக்கான ‘ஏர் கண்டிஷனிங்’ மெஷின்கள் ரிப்பேர் பார்த்துவந்தார். அவர் ஃபிட்டர் வேலைக்குப் படித்திருந்தாலும், இதில் ஈடுபட்டிருந்தார். அவரும் சொன்னார் “இதே வேலையில் ஆங்கிலத்தில் பேசும் தகுதி இருப்பதாலேயே இவருடைய போட்டியாளருக்கு அதிகம் வேலைகள் வருகின்றன. எனது வருமானத்தை அது பாதிக்கிறது” எனவே தாய்மொழிக்கல்வி என்பது, எல்லோரும் சமம் என்பதைப் போல நல்ல கோஷமாக இருக்குமே தவிர, செயல் படுத்த முடியாததாகவே இருக்கும். எல்லோரும் சமம் என்பதிலாவது ஒரு உயரிய நோக்கம் இருக்கிறது. தமிழிற்கல்வி என்பதில் தமிழிற்கல்வி என்பதற்காகவே தவிர வேறு உயரிய நோக்கம் இல்லை. (just for the sake of it) அது கிராமத்தில் உள்ளவரை, ஏற்கனவே உயர்கல்வி கிடைக்காமல் தவிக்கும் ஒரு மக்கள் திரளை, ஓதுக்கிவைக்கப் பயன்படும்.

நமது அரசியல் வாதிகளும், கல்வியாளர்களும் சும்மா சொல்லுகிறார்களே தவிர, முழுமனதோடு எதையும் சொல்வதில்லை. அதைச் செய்யவும் விரும்புவதில்லை அல்லது அவர்களால் முடிவதில்லை. திட்டங்களைச் செயல்படுத்தும் நமது (efficiency) திறமை/செயல்முறை மிகக் கேவலமானது. எல்லாத்திட்டங்களையும் போலவே, அரைகுறையாக முடிந்துவிடும். இதுவும் ஒரு காரணம். அறுபதாண்டுகளாகியும் எல்லாக்குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பமுடியாத நாட்டின் அரசியல்வாதிகள், மக்கள் நாம் என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது.

ஆங்கிலத்தில் கல்விபயின்றால் விரைவில் பொருளாதார ரீதியில் உயரமுடியும் என்ற நம்பிக்கை உள்ளவரை, உயரமுடியும் என்ற அரசியல் கலாச்சார நிலை உள்ளவரை எல்லோருக்கும் ஆங்கிலக்கல்வி தருவதே நல்ல நடைமுறையாக இருக்க முடியும்.
பஞ்சத்தில் அடிபட்டு, கூலிகளாய் பலதேசமெங்கும் சென்ற பழைய தலைமுறையினர், வயிற்றுப் பாட்டுக்குத் தானே வெளிநாடு சென்றனர். இப்போதும், பெரிய பெரிய நிறுவங்களில் நாடு விட்டு நாடு சென்று கூலிக்காக (அது டாலரில் வருகுதென்றால் கூலியாகாதா?) அறிவை விற்பவர்கள் தமிழைப் பயில்வதில் ஆர்வம் காட்டியிருந்தால் போயிருப்பார்களா? அவர்கள் எல்லாம் தமிழை மறந்துதானே விட்டார்கள். அது தவறல்ல. பொருளாதார முன்னேற்றதின் முன் மொழி அடிவாங்கிவிடுகிறது. சரித்திரமெங்கும் நிகழ்ந்த்து தான். அவர்கள் பொருளாதார நிலை உயர்ந்த்தும் தமிழைப்பற்றிக் கவலைப் படுகிறார்கள். இப்போது வறிய நிலையிலிருந்து ஆங்கிலக்கல்வி பயில முடியாதவன், ஆங்கிலக்கல்வியா பொருளாதார முன்னேற்றம் அடையவிரும்பினால் அதை நாம் ஏன் தடுக்க வேண்டும்? இவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு இது எதிரானதில்லையா?

தமிழிற்கல்வி என்று பேசும் அனைவரும் (முக்கியமாக அரசியல் கலாச்சாரத் தலைமைகள்) முதலில், ஏற்கனவே பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இல்லாதவர்களை இன்னும் ஓட்டாண்டிகளாக்கும் இந்தக் கோஷத்தை உடனடியாக கை விடவேண்டும். கல்விச் சாதனங்களை (புத்தகங்கள்) உயர்கல்வித் தரத்தில் கொண்டுவந்த பிறகு இந்தக் கோஷத்தைக் கையில் எடுக்கலாம். சமச்சீர் கல்வி பற்றிப் பேசும் இந்தக் காலத்தில், பயிற்றுமொழியும் சமமானால், இதுபற்றிப் பேசலாம். அதுவரை ஆங்கிலத்தில் படிக்க விரும்புபவர்கள் படிக்கட்டும். பயிற்றுவிப்பவர்கள் பயிற்றுவிக்கட்டும்.

No comments:

Post a Comment