நான் முட்டாளாகவே இருந்துவிட்டுப்போகிறேன்
ஐயா, அருமைப் பெரியவரே,
நீங்கள் பெரிய புத்திசாலி
இன்னும் நிறையப்பேரும்
அதைவிட அதிகமானவர்களும்,
புத்திசாலிகள் மட்டுமல்ல,
வாழத்தெரிந்தவர்கள்.
ஏகப்பட்ட புத்தகங்களைப்
படித்து, பட்டங்களை வாங்கிக்
குவித்து விட்டீர்கள்
சொத்துக்களை வைத்திருக்கிறீர்கள்
நானும் படித்துப் பார்த்தேன்,
படிப்பு வரவில்லை
அதனாலென்ன?
நான் மனிதனில்லையா?
நான் வேண்டுமென்றே
படிக்க விரும்பவில்லைதான்
நான் முட்டாள் தான்
ஆனால் முட்டாளாக இருக்க
எனக்கு
உரிமையில்லையா?
உங்களுக்குத் தெரிந்ததெல்லாம்
எனக்கு ஏன் தெரியவேண்டும்?
எனக்குத் தெரிந்தது ஏதாவது
உங்களுக்குத் தெரியுமா?
நான் வருத்தப்பட்டுப்
பாரத்தைச் சுமந்து, அறிவை
நெறித்துக் கொன்றவனில்லை.
ஆசிரியன் என்னை
அடிமைபோல் நடத்தினான்
.கேள்வி கேட்டால்,
சந்தேகம் கேட்டால்,
மிரட்டினான்
புத்தகத்திலிருப்பதையே
வாசித்துக் காட்டினான்
விளையாட விடாமல்
வீட்டுப் பாடம் கொடுத்தான்
செருப்புத் தைக்கும் ஃபேக்டரி
அது தானே பள்ளிக்கூடம்
ஒரே மாதிரி கையெழுத்து,
ஒரே மாதிரி மனப்பாடம்,
ஒரே மாதிரி மூளை
ஒரெ மாதிரி உலகம்
ஒரே மாதிரி ஒரேமாதிரி
புத்திசாலிகள்
==
வே. ராஜகோபால்
No comments:
Post a Comment