சிறைச்சாலையின் பெரிய கறுப்பு இரும்புக் கதவுகளின் குறுகலான ஜன்னலைவிடச் சற்றுப் பெரிதான அடைப்புவழியே வெளிவந்ததும் பச்சன் சிங் உள்ளே பார்த்தான். மூடிக் கொண்டிருக்கும் கதவிடுக்கின் வழியே உள்ளே வராந்தாவில் இவன் வெளியே போகிறதைப் பார்த்தபடி சமையலுக்கு உதவி செய்யும் ரூப் தல்வார் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. பத்துவருடங்கள் பழகிய இடத்தைவிட்டுப் போகும்போது ஏற்படும் மனத்தவிப்பில் அவனால் எதையும் சரியாக யோசிக்க முடியவில்லை. மிக நெருங்கிய மனிதர்களின் முகங்கள் ஒவ்வொன்றாக வந்து நினைவைப் பின்னிழுத்தன. அவர்கள் உறவினர்கள் போலாகிவிட்டனர்.
கதவுகளுக்கு சற்றுத்தள்ளி வெளியே நின்று புகைபிடித்துக் கொண்டிருந்த சிறைக்காவலன் இளித்தான். “முபாரக் ஹோ”(வாழ்த்துக்கள்). பச்சன் சிங் கையில் வைத்திருந்த பத்து ரூபாயைக் கொடுத்தான், இப்போது அவன் புன்னகைத்தான். பிச்சை எடுத்தே பழகிய கைகள். முன்னால் பரந்துகிடந்த வெட்டவெளிப் பொட்டலில் சூரிய ஒளி மிக அதிகமாக இருந்ததால் கண்கள் கூசின. நிறம் மங்கிய செம்மண் நிலத்தில் சிறிது தூரத்திற்கு புல் பூண்டு கூட இல்லை. வெறிச்சோடிக்கிடந்தது. வெய்யிலின் சூடு முகத்தில் எரிந்தது. சற்றுத் தள்ளி நின்ற ஒரே வேப்ப மரத்தடிக்குச் சென்றான். ‘அப்பாட’ என்றிருந்தது. மரத்தடியில் நிலக்கடலை விற்றுக் கொண்டிருந்த கிழவி அவனைப் பார்த்தாள். இரண்டு ரூபாய்க்கு வாங்கிக் கொண்டான்.
யாரையுமே காணவில்லை. பரோலில் வெளிவரும் நாட்களில் கூட்டமாக இருக்கும். கிழவி அவன் பார்வையைப் புரிந்துகொண்டவள் போல் சொன்னாள் ”இன்னைக்கு மூணு மணிக்கு மேல்தான் ஆட்கள் வருவார்கள்”. பின்னர் சற்றுத் தயங்கியபடி குரலைத் தணித்துக் கொண்டு கேட்டாள் “இப்பத்தான் வெளியே விட்டாங்களா?” “ஹூம்” என்று தலையசைத்தான்.
“என்ன செய்வது? தன்வீர் சிங் ஏன் வரவில்லை?. கிழவியைப் பார்த்துச் சொல்வதுபோல் “வர்ரேன்” என்று சொல்லிவிட்டு துணிப்பையை தோளில் போட்டு நிலக்கடலையைக் கொறித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். மெயின்ரோடு சற்று தூரத்தில் தெரிந்தாலும் நடக்க நடக்க போய்க்கொண்டே இருந்தது.
அம்மா உயிரோடிருந்தால் இந்தக் கிழவிபோல் இருப்பாளோ? இவளைவிட வயது அதிகம். தன்வீர் சிங் எங்காவது கண்ணில் படுகிறானா என்று அவ்வப்போது சுற்றும்முற்றும் பார்த்தான். யாரையுமே காணவில்லை. வெய்யில் தலையிலும் முகத்திலும் உக்கிரமாக எரித்தது.
சிறைக்கூண்டுக்குள் வெக்கை அதிகமாகத்தான் இருக்கும்.ஆனால் வெய்யில் முகத்திலோ உடம்பிலோ விழாது. வெகுதூரம் நடக்கக் கஷ்டமாக இருந்தது. நடக்கிற பழக்கம் விட்டு ரொம்ப வருஷங்களாகி விட்டது. ஆறு கிலோமீட்டர் நடந்து வாராவாரம் சினிமா பார்த்தவன். இப்போது சுத்தமாக நடக்கமுடியவில்லை. எங்கே போவது? என்று யோசித்தான். அம்மா போன வருடம் வரை
2
இருந்தாள். வீட்டிற்குப் போகலாம். அங்கிருந்து பல வருடங்களாகி விட்டன. அது யாரோ வேறொருவருடைய வீடுபோல் தோன்றியது. வேறு வழியில்லை. அங்கேதான் போகவேண்டும்.
சித்திமகன் தன்வீர் சிங் பக்கத்து வீடான இவன் வீட்டிலும் இருக்கிறான். சின்னதாக இர்ண்டு அறைகள்தான். “நீ வரும்வரை” என்று அவன் சொன்னது தெளிவாக நினைவு வந்தது. அவன் தன்னைக் கண்டு பயப்படக்கூடும். இருந்தாலும் பாசம் உள்ளவன். முடிந்தபோதெல்லாம் சிறைக்கு வந்து பார்ப்பான். கையைவிட்டுப் போகாதிருந்த மீதி நிலத்தில் விவசாயம் பார்த்தான். அது கட்டுபடியாகாததால் மற்ற நேரங்களில் டிரைவர் வேலை, சுண்ணாம்பு அடிப்பது, பைப்ரிப்பேர் என்றுஏதாவது செய்து பிழைத்துக் கொண்டிருந்தான்.
மெயின் ரோட்டில் இரைச்சல் காதை அடைத்தது. கார்களும் பஸ்களும், ஆட்டோக்களுமாக நிரம்பி வழிந்து போய்க்கொண்டிருந்தன. உலகத்திலே தன்னந்தனியாக விட்டதுபோல் உணர்ந்தான். இடப்பக்கம் திரும்பி பஸ்ஸ்டாண்டை நோக்கி நடந்தான். எல்லோரும் பரபரப்பாகப் போய்க்கொண்டிருந்தனர். பஸ் ஸ்டாண்டிலும் கூட்டமாக இருந்தது. நடக்க வலுவில்லையோ? எல்லோர் கைகளிலும் மினுங்கும் தோல்பைகள், சின்ன பிரிஃப்கேஸ்கள். இப்போது யாரும் துணிமூட்டையைத் தூக்குவதில்லையோ?. அது தோளை அழுத்தியது.
ஒரு வழியாக பஸ்பிடித்து கிராமத்திற்கு வர இரண்டு மணி நேரத்துக்கு மேலானது. தெருவுக்குள் ஒன்றிரண்டு பெண்கள் இவனைக் கண்டதும் முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு பார்த்தார்கள். அடையள்ம் தெரிந்த்தோ இல்லையோ? அவனது வீட்டை தூரத்திலிருந்து கவனித்தான். மிக மோசமான நிலையில் இருந்தது. சுவர்களில் காரைபர்ந்தும் வெள்ளையடிக்காமலும், இது ஒரு வீடா? சிறையில் புதுசாக இல்லாவிட்டாலும் சுத்தமாக இருக்கும். அரசாங்கச் செலவில் ரிப்பேர் பார்ப்பார்கள். வீட்டை நினைத்து வெறுப்பாக இருந்தது. இனி இதில்தான் இருக்கவேண்டும். யாராவது சிமெண்ட் பூசி ரிப்பேர் பார்க்கக்கூடாதா? தன்வீர் சிங் மேல் கோபம் வந்தது. அவனும் பாவம் என்ன செய்வான்? வருமானம் கிடையாது. அவன் வீடும் இடந்து விழுவது மாதிரிதான் இருக்கிறது. அவன் ஒருவன் தான் நெருங்கிய சொந்தக்காரன்.
லொடலொட என்று ஆடிக் கிடந்த கதவைத்தள்ளித் திறந்து உள்ளெ நுழைந்தான். யாரும் வீட்டில் இல்லை. ஒரு தரைவிரிப்பும் கால் உடைந்து போன ஒரு நாற்காலியும் தண்ணீர்க் குடமொன்றும் இருந்தன. வெளியே வந்து குட்டித்திண்ணையில் உட்கார்ந்தான். வீட்டைசரிபார்ப்பது அப்புறம். அடுத்தவேளைச் சாப்பாடு ? தன்வீர் சிங் எத்தனை நாளுக்குப் போடுவான். சிறையில் சம்பாதித்த பணத்திலிருந்து கொடுக்க வேண்டியதுதான். அது எத்தனை நாளுக்குத் தாங்குமோ? சிறையில் மணியடித்தால் த்ட்டைத்தூக்கிக் கொண்டு போகலாம். இப்போது எங்கே போவது?
படிப்பு மண்டையில் ஏறாததால் எட்டாம் வகுப்பிற்குப் பிறகு பள்ளிக்கூடம் போகவில்லை. வாடகைக்கு டிராக்டர் ஓட்டிக் கொண்டிருந்தான். பிறகு கடனுக்கு டிராக்டர் வாங்கி வாடகைக்கு விட்டுப் பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தான்.
வெளியில் போயிருந்த தன்வீர் சிங்கின் மனைவி அவசரம் அவசரமாக உள்ளே வந்தாள். அவனைப் பார்த்து திடுக்கிட்டு விருட்டென்று முந்தானையால் மூடிக் கொண்டாள். “நமஸ்தேஜி. அவங்க உங்களைப் பார்க்கத்தான் போனாங்க இன்னும் வரலை. உங்களைப் பார்க்கலையா?
“இல்லை” என்று தலையசைத்தான்.
“அப்ப திரும்பி வந்திட்ருப்பாங்க. நான் ‘சாய்’ போட்டு வரேன்” சொல்லிவிட்டு அடுத்திருந்த அறைக்குள் போனாள். சோனம் அழகாகத்தான் இருந்தாள். அவன் தங்கைகள் இப்படி அழகாக இருந்திருக்கக் கூடும். சின்ன வயதில் கண்ம்ண் தெரியாத கோபத்தில் அப்படிச் செய்துவிட்டான். அவர்களுக்குப் பதின்மூன்று வயதிருக்கும். இப்போது ந்னைதாலும் துக்கம் மனதைக் கவ்வியது. நினைந்து நினைந்து வருந்தி மனதில் கல்லில் செதுக்கியது போலாகி விட்டது.
சிறையில் அவனும் என்னென்னவொ செய்தான். அவனுக்கும் ஏதேதோ நிகழ்ந்தது. சட்டப்படி அதெற்கெல்லாம் தண்டனை கொடுத்தால் அவன் வெளியே வந்திருக்கவே முடியாது.
அசதியாகயிருந்தது. உள்ளே போய் விரிப்பில் படுத்துத் தலையை மடித்த வலது கையில் வைத்தபடி கண் அசந்தான். சோனம் ‘சாய் கொண்டுவந்து அவனைப் பார்த்துவிட்டு திரும்பிப் போனாள்.
தன்வீர் சிங் வந்திருக்க வேண்டும். “ப்ச்சன் சிங் வந்துவிட்டானா?” சோனத்திடம் ஆன் கேட்டது இவன் காதிலும் கேட்டது. அசந்து தூங்கியிருந்தான். மேலெல்லாம் வேர்த்திருந்தது. பக்கத்தில் வைத்திருந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டான்.
உள்ளே வந்த தன்வீர் வருத்த்ததுடன் களைத்துப் போன குரலில் சொன்னான் “நமஸ்தேஜி.. பஸ் கிடைக்காமல் போய்ச்சேர நேர்மாகிவிட்டது. அதற்குள் நீங்க கிளம்பீட்டீங்க. சிறைக்காவலன் சொன்னான்” அவனுக்கு ஆறுதலாக இருந்தது. அவனைத்தேடிவரவும் ஆள் இருக்கிறது. சீக்கிரம் வந்தும் என்ன செய்வது? ஒன்றுமில்லை” விரக்தியில் அவன் பேசுவதைப் புரிந்துகொண்டு தன்வீர் இதமாக தொடங்கினான் “இருந்தாலும்…..” ஆனாலும் தொடரமுடியவில்லை. தன்வீர் சிங் சோனத்தைக் கூப்பிட்டுக் கேட்டான் “சாப்பாடு தயார் பண்ணிட்டியா? …. ஒன்றே முக்காலாகிவிட்டது. எனக்கும் பசிக்கிறது.”
“நீங்க குளிச்சிட்டு வந்திருங்க” பச்சன் சிங் குளிக்கப் போனான்.
சாப்பிடும் போது பச்சன் வீட்டைக் கவனித்தான். எளிமையாக இருந்தாலும் சுத்தமாக இருந்தது. மனைவி நச்சரித்திருப்பாள். சோனம் அழகாகத்தான் இருந்தாள். கைகளில் வளையல்கள் குலுங்கின. அவள் வரும்போதெல்லாம் ஏதோவொரு வாசனை வந்தது. சாப்பிடும் போது நடு நடுவில் பெருமூச்சு விட்டான். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?”
“ஒரு பொண்ணு இரண்டு பையன்கள். மூத்தவன் ஏழாவது இன்னொரு பையனும் பொண்ணும் மூன்றாவது. இரட்டைப் பிள்ளைகள்”
“உன் அண்ணன் மான்சிங் எங்கே?”
“அவன் பாம்பே போய்ட்டான். அங்கெ நல்ல ச்ம்பாத்தியம். ஆனாப் பிள்ளைகள் இல்ல” வருத்தப்பட்டான். பிள்ளைகள் பிறப்பது கடவுள் கொடுக்குஒம் வரம்… வச்சு வளக்றது ரொம்பக் கஷ்டம்.” சடக்கென்று. நிறுத்திக் கொண்டான்.
சற்று நேரம் அமைதி நிலவியது. பிறகு தன்வீர் சொன்னான் ”ரெஸ்ட் எடுத்துக்கொங்க. நான் கடைவரைக்கும் போய்ட்டுவர்ரென்”
கடைவேற வச்சிருக்கயா? என்று ஆச்சரியத்துடன் பச்சன்சிங் பார்ப்பதைப் புரிந்து கொண்டு தொடர்ந்தான். “இந்தக் கிராம்த்ல என்ன கடை. எல்லோரும் அப்படியே சொல்லி பழக்கம் ஆயிடிச்சு. தெருக்கடைசியில கூரை போட்டு டெய்லரிங் மெஷின் வச்சிருக்கேன். கூட ஒரு சின்னப் பையன் இருக்கான்…. ஹூம்”… பெருமூச்சுவிட்டுத்தொடர்ந்தான் “ பண்டி இறந்து போய்ட்டான்ல அவன் பையன்” ஏதோ அரைகுறையாய் கேள்விப்பட்டிருந்தான் .
“பன்டி எப்படி இறந்தான்?”
யாரோ பைக்கை எடுத்திட்டு மெயின் ரோட்ல போயிருக்கான். லாரிக்காரன் அடிச்சிட்டுப் போய்ட்டான். லைசென்ஸ் இல்லாததால கேஸும் ஒண்ணும் ஆகல. ஒரு பைசா கிடைக்கல.
பச்சன்சிங்கிற்கு என்னவோ போலிருந்தது. சிறைக்குப் போவதற்கு முன்னால் இருவரும் ஒன்றாக அலைந்தவர்கள்.
“அவன் பெண்டாட்டி?”
“இன்னொருத்தன் கூட இருக்கா. எப்பவாவது இந்தப்பக்கம் வருவா. பன்டியப் பத்திப் பேச்செடுத்தாலே ஓ’ன்னு அழ ஆரம்பிச்சிருவா.”
“பையன் எங்க இருக்கான்?”
“அவகூடத்தான்”
ஜீரணிக்கமுடியவில்லை எதையும். பன்டி பெண்களைப் பற்றிக் கறாறாக பேசுவான். ஆண்கள் எப்படியிருந்தலும் பெண்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும். அவன் மனைவியும் பிள்ளையும் யார் வீட்டிலோ?” உலகமே தலைகீழாக மாறிவிட்டது. பத்துவருடத்துக்குள்.
தன்வீர் தொடர்ந்தான் “ அவ பாவம் என்ன செய்வா? தனியா இருக்கிற பொம்பளைய யாரு விடுவா? சாப்பாட்டுக்கு …? சரி நான் இதோ வர்ரேன்” அவன் வெளியே போய்விட்டான்.
இரண்டு நாட்களுக்குள் கிராம்த்தில் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. தெருவில் நடந்தால் எல்லோரும் அவனையே பார்த்தாலும் யாரும் பேசவில்லை. முகங்கள் தெரிந்த மாதிரியிருந்தாலும் சரியாக இனங்காண முடியவில்லை. மனம் தத்தளித்துக் கொண்டிருந்தது. நான் ரொம்ப நல்லவன் என்று எல்லோரிடமும் சொல்லவேண்டும். ஆனால் சொல்லமுடியவில்லை.
தன்வீரின் குழந்தைகள் மூன்றும் அவனிடம் ஒட்டிக் கொண்டனர். அவர்களிடம் பேசும் போதும் விளையாடும் போதும் மனம் லேசானது. ஒன்றிரண்டு முறை தன்னை அறியாமலேயே புன்னகைத்தான். குழந்தைகளின் ஸ்பரிசம் இவ்வளவு மென்மையாக இருக்குமா? தங்கைகள் கையில் ராக்கி கட்டியது நினைவு வந்தது. கைகள் மிகமென்மையாக இருந்திருக்கும். இப்போதும். பெண்களின் கைகள் எப்பவும் மென்மையாக இருக்குமாம். இன்னும் தொட்டதில்லை. சிறையில் ‘ஆஸாராம்’ என்ற ஹரியானா பயில்வான் முதல்முறை அவன் கையைப்பிடித்து பெண்களின் கைபோல இருப்பதாகச் சொன்னான். பச்சன் சிங்குக்கு அப்போது வயது பதினெட்டு.
சிலநாட்கள் வீட்டை நினைத்து இவன் அழும்போது கன்னத்தையும் தலையையும் ஆஸாராம் வருடிக் கொடுத்தான். பச்சன் சிங்குக்கு இதமாக, ஆறுதலாக இருந்தது. கைதிகளை உலவவிடும் போதுஇவனை அழைத்து பிரியாணி கொடுத்தான். கிடைக்குக்ம் போதெல்லாம் ஏதாவது பலகாரம் கொடுத்தான். சில நாட்கள் கழித்து ஜெயிலரிடம் சொல்லி தன் கூண்டுக்குள்ளேயே பச்சன் சிங்கையும் வைத்துக் கொண்டான். ஆஸா ராமை நினைத்தால் அழுகை வந்தது. அவனைப் போல் அமைதி கொடுத்தவன் யாருமில்லை. விடுதலையாகி வரும் போதுய் அவ்வளவு பெரிய பயில்வான் சின்னக் குழந்தை போன் அழுதான். சிறுவனுக்காக இவ்வளவு பெரிய ஆள் அழுவதை எல்லோரும் பார்த்தார்கள். சிலர் ஆறுதல் சொன்னார்கள் சிலர் நமட்டுச் சிரிப்புச் சிரித்தனர். இவனுக்கும் கண்ணீர் முட்டியது. அடக்கிக்கொண்டான். நடந்ததை எல்லாம் யாரிடமும் சொல்லமுடியாது. இன்பமும் துன்பமும் சேர்ந்தே வந்தன. சேர்ந்தே போய்விடுமா?
பதினைந்து வருடங்களுக்கு முன் இர் தங்கைகளும் குடும்பத்தின் மானத்திக் கப்பலேற்றி விட்டார்கள். பதினெட்டு வயது கிஷனுடன் கோயிலுக்குப் போனவர்கள் மூன்று நாட்கள் கழித்துத் திரும்பி வந்தார்கள். பையன் ஊரைவிட்டே ஓடிவிட்டான். இருவரையும் பார்க்கப் பார்க்க பச்சன் சிங்குக்குக் கோபம். சிறுவனாக இருந்தாலும் குடிந்தமட்டும் தங்கைகளைக் கன்னத்திலும் கைகளிலும் அடித்தான். அவ்வப்போது உதைத்தான். அப்பா வந்தபிறகு ரகளை அதிகமாகிவிட்டது. அப்பாவும் சித்த்ப்பாவும் தொடர்ந்து கத்திக் கூப்பாடு போட்டனர். அம்மாவையும் சித்தியையும் மறுபடி மறுபடி அடித்து உதைத்துக் கொண்டிருந்தனர். வீட்டைச்சுற்றி ஓரே கூட்டம். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவன் காதில் எல்லாம் விழுந்தாலும் எதுவும் பதியவில்லை. அவனும் அப்பாவும் சித்தப்பாவும் கெட்ட வார்த்தைகளை கூவிக் கொண்டு, தங்கள் கோபத்தைக் கிளறிவிட்டு உள்ளெபோய்த் தங்கைகளை உதைத்துக் கொண்டிருந்தார்கள். எல்லாமே கட்டுப்பாட்டை மீறிப் போய்க்கொண்டிருந்தது.
இரு தங்கைகளையும் அப்பா ஒரு சிறிய அறையில் பூட்டி வைத்துவிட்டார். இதே அறைதான். இப்போது வேறு அறையாகத் தோன்றியது. அன்று கலகலத்த வீடும் குடும்பமும் இன்று இல்லை. பெண்கள் ஒப்பாரி வைத்துபோல் அழுது கொண்டிருந்தார்கள். வீட்டுக்கு ஏற்பட்ட களங்கம் எப்படிப் போகும்? மற்றப் பெண்களுக்குத் திருமணம் வாய்க்குமா? யார்யாரோ என்னவெல்லாமோ கேட்பார்களே?
இரண்டு நாட்களாக வீட்டில் யாரும் சரியாகச் சாப்பிடவில்லை. தூங்கவும் இல்லை. திடீரென்று அடிகளும் அழுகையும் ஓலமும் கேட்டன. மூன்றாம்நாள் ராத்திரி பதினொருமணிக்கு அப்பா அவனைக் கூப்பிட்டார். சித்தப்பாவையும் அவனையும் இரண்டு பெண் தங்கைகளின் கை கால்களைப் பிடித்துக் கொள்ளச் சொல்லி கயிறு வைத்துக் கட்டினார். இரண்டு பெண்களும் சாப்பாடு தண்ணீரில்லாமல் அழக்கூடச் சக்தியின்றி முனகினர். கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டிருந்தது. பயத்திலும் வெட்கத்திலும் கூனிக் குறுகி முடிந்தமட்டும் அரைமயக்கத்தில் இரைஞ்சினர். “இனிமே பண்ணமாட்டோம்ப்பா…அப்பா ஒரு தடவை மன்னிச்சிடுங்க …சாச்சா இனிமே பண்ணமட்லோம்.. வீட்டைவிட்டே வெளொயே போமாட்டோம். பர்தா (முகத்திரை) போட்டுட்ருப்போம். கட்டிப் போட்டிருந்தாலும் துடித்துத் துள்ளின பிள்ளைகளை கட்டுப்படுத்த குடியவில்லை. அவனும் ஏதோ ஒரு வெறியில் அழுத்திப் பிடித்தான். சித்தப்பாவும் கால்களை அழுத்திப் பிடித்தார். அப்பா போய் அரிவாளை எடுத்து வந்தார். தங்கைகள் ஓ வென்று அலறினர். மூச்சிரைக்க அப்பாவும் இருவரைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டு அவனிடம் சொன்னார் “கழுத்தை அறு” அவ்வளவு நேரம் அடக்கிப்பிடித்த் வெறியும் கோபமும் அவனிடம் ஜிவ்வென்று ஏறியது. அறுத்ததும் ரத்த்ம் கழுத்திலிருந்து சளசளவென்று கொப்பளித்து, உடல் துடிக்கத் துடிக்க வெளியேறியது.
அந்த நேரத்திலும் தங்கைகளின் கைகள் மிருதுவாகத்தான் இருந்திருக்கும். அப்போது தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைந்து இற்று விழத்தயாராக கரையான் அரித்துப் போட்ட இதே அறைதான். இப்போது ரத்தக்கறை இல்லை.
பச்சன் சிங் பாயிலிருந்து எழுந்து சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். இந்த அறையும் அடுத்த அறையும் குடும்பத்துக்குள் இருக்கிறது. மற்றதெல்லாம் கேஸிலும் மற்றச் செலவுகளிலும் விற்றாகிவிட்டது.
பத்தாண்டுகளுக்கு மேல் ஆசாராமும் போலிஸும், ஜெயிலர்களும் அவனை என்னென்னவோ பாடாய்ப் படுத்தினார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி.
இரண்டு வாரம் போயிருக்கும் பச்சன்சிங்கிற்கு காய்ச்சல் வந்தது விடவேயில்லை. இடைவிடாத வலி. நேராக உட்கார முடியவில்லை. ஆசனவாயில் புண். பரவிவிட்டிருந்தது. டாக்டர் சிறையில் நடந்ததைப் புரிந்து கொண்டிருந்தார். டாக்டர் வேறு ஏதோ கேட்க முனைந்தபோது கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. பிறகு அவர் எதுவும் கேட்கவில்லை.
இன்னொரு நாள் டாக்டரைப் பார்த்துவிட்டு வரும்போது டாக்டரின் வயதான உதவியாளன் இவன் முதுகுக்குப் பின்னால் அவரிடம் சொன்னது காதில் விழுந்தது. “குடும்பத்தின் மானத்தைக் காப்பாற்றிவிட்டான். பூராப் பழியையும் தானே ஏற்றுக் கொண்டான்”
பச்சன் சிங்குக்கு ஏதாவது பதில் சொல்ல வேண்டும் போல் இருந்தது. உடம்பு வலி, காய்ச்சல், நோய், தீராத மன உளைச்சல், சிதிலமடைந்த வீடு, நிம்மதியின்றிச் செத்துப் போன அம்மா, அப்பா சித்தப்பா, தங்கைகள் எல்லாம்தான் பதிலாக இருக்கக்கூடும். டாக்டரின் உதவியாளனுக்கு அது தெரிய வாய்ப்பில்லை.
No comments:
Post a Comment