Wednesday, July 15, 2009

தமிழ் நாடகம்,கவிதை -

2.அடுத்து நாடகத்தை எடுத்துக் கொள்வோம். முதலில் எழும் கேள்வி நாடகம் பற்றிப் பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது? நான் மீண்டும் சொல்ல விரும்புகிறேன். நல்ல நாடகத்தை ஒருமுறைக்கு மேல் பார்ப்பேன் என்ற தகுதியைத் தவிர வேறு என்ன தகுதி வேண்டும்?
சினிமாவைப் போலன்றி, தமிழில் நல்ல நாடகங்களைப் பார்த்த அனுபவம் ஒரு சிலருக்கேனும் உண்டு. எல்லோரும் எளிதில் பார்க்கும் வகையில் அவை நடத்தப்படுவதில்லை. ஏதாவதொரு நாளில் குறைந்த பார்வையாளர்களைக் கொண்டு நடத்தப்பட்டு, காணாமல் போய்விடுகின்றன இவை. சினிமாவுக்கு நேர் மாறான கதி தமிழ் நாடகத்துக்கு. நல்ல தமிழ் நாடகங்கள் (அவற்றில் கணிசமானவை மொழிபெயர்ப்புகள்) இருக்கின்றன. ஆனால் பார்க்க, ஆதரிக்க போதுமான ஆள் கிடையாது. நாடகத்தை தொழிலாக வைத்துக் கொண்டு யாரும் இங்கே வாழ முடியாது. யாராவது நல்ல நாடகம் பார்க்க விரும்பினாலும் எளிதில் கைகூடாது. அதற்கு கதி மோட்சம் கொடுக்க முடியாது. நாடகாசிரியர் என்று யாரும் இல்லை. கதாசிரியர்கள் அவ்வப்போது நாடகம் எழுதி பரிசோதனை முயற்சிகள் செய்கின்றனர். ஒரு மாநிலம் என்ற தளத்தில் தமிழ் நாடகத்தின் பங்கென்ன என்று யோசித்தால் ஒன்றுமில்லை. சொல்ல வருத்தமாகத்தான் இருக்கிறது.
அடுத்து இசை. பழங்காலந் தொட்டு தமிழ்நாட்டில் இசைக்கலைக்கு ஒரு மரபு உண்டு. பாட்டுக்கேட்காத தமிழனே இல்லை எனலாம். தொல்லிசைக்கு(classical music) ஆதரவு குறைவாக இருந்தாலும், அது சினிமாவில் புதுப்புது அயல் தேச இசைகளைக் கோர்த்து மெல்லிசை என்று பெரும் ஆதரவுடன் பவனி வருகிறது. தொல்லிசை ஒரு குறிப்பிட்ட இனம் ஜாதி வர்க்கம் என்ற வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டு விட்டது. அதனாலோ என்னவோ அதன் உள்ளடக்கம் பெரும்பாலும் பக்தி என்ற கடலுக்குள் மூழ்கிவிட்டது. சமகால உள்ளடக்கம் இசையிலும் அதன் ரசனையிலும் பெருமாற்றங்களைக் கொண்டு வரக்கூடும் சாத்தியம் இருக்கிறது. ஆனால் வாய்ப்பு குறைவாகவே தென்படுகிறது. இதற்கு மாற்றாக சினிமாப் பாடல் (அதன் யதார்த்தம், நேர்மை எவ்வளவு குறைந்து காணப்பட்டாலும்) சமகால பிரச்சனைகளை (ஆழமில்லாமல்) தீண்டிச் செல்கிறது. சினிமாவின் கதையற்ற தன்மை பாடலுக்கு ஊறு விளைவித்துக் கொண்டிருக்கிறது.
கருவி இசை என்ற வகையில் உன்னதமான இசை தமிழில், தமிழ்நாட்டில் உண்டு. நேரடி யாக கேட்க முடியாவிட்டாலும் ஒலிப்பதிவைக் கேட்டு ஆனந்தத்தின் எல்லைக்கே போய்விடலாம். இதற்கு எந்த இசைஅறிவும் தேவையில்லை. கேட்கும் ஆர்வம் இருந்தால் போதும்.
கவிதையின் நிலை தான் மிகப் பரிதாபகரமானதாகத் தெரிகிறது. நிறையப்பேர், அல்ல, ஏகப்பட்டபேர் கவிதை எழுதுகிறார்கள். ஆனால் படிக்கப் படிக்கக் கவலை எழுகிறது. அந்த அந்த பஜனை கோஷ்டிகளில் சேர்ந்துவிட்டால் அல்லது ஒரு சன்னிதானம் அருள் புரிந்தால் ஒருவேளை கவிஞன் கவனம் பெறலாம். நல்ல கவிதை காணாமல் போய்விடும். அபாயம் அதிகமிருக்கிறது. தேடிக்கண்டு கொள்ளும் அளவுக்கு வாசகனுக்கு அது எட்டுவதில்லை. பத்திரிக்கை,தொலைக்காட்சி என்று ஊடகங்களில் வடிகட்டிய பிறகு கவிதை, நல்ல கவிதை குப்பைக்குப் போய்விடும் போலத் தெரிகிறது. கொல்லன் உலையில் ஊசி தேடியது போல. எங்கே தேடுவது அதை? ஆனாலும் நிறைய நல்ல கவிதைகளை தமிழ் வாசகன் படித்துவிட வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் பிரபலங்களும், அரசியல்வாதிகளும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இடத்தை நல்ல கவிதைகள் பிடிக்க முடியாது என்பதே இப்போதைய நிலை.

No comments:

Post a Comment