பொய்யாய்ப் பழங்கதையாய்.........
தமிழ் நாட்டு அரசியல்வாதிகளில் பலரும் பெருங்கனவொன்றைச் சுமந்து கொண்டிருக்கின்றனர். ‘பொன்னியின் செல்வன்’, சிவகாமியின் சபதம் இன்னும்பல -சரித்திர நாவல் என்றழைக்கப்படுகிற- கட்டுக்கதைகளை சரித்திரமென்று நம்பி அல்லது நம்புவதாக அடுத்தவர்களை நம்பவைத்து, பல சோழப் பேரரசர்களின் வாரிசாக தங்களை விளம்பரப்படுத்த விரும்புகிறார்கள்.
டான் க்விக்சாட் என்ற ஸ்பானிய நாவலில் வரும் வீரன் காணும் கனவுகள் போல் இவர்களின் கனவும் காலத்துக்கு ஒவ்வாதது. கதைகளெல்லாம் சரித்திரமானால், சரித்திரமெல்லாம் கதையாகுமா? பொற்காலம் என்ற ஒன்று எப்போதும் இருந்ததில்லை இருக்கப் போவதும் இல்லை. இன்றைய அரசியலில் தாங்கள் பயன் படுத்தத் தேவையான மாய்மாலங்களை, நேற்றைய சரித்திரத்தின் தொடர்ச்சியாக நீட்டிப்பது ஒரு தந்திரம்.
தமிழ்நாட்டை விட்டு பல நாடுகளுக்கும் சென்று பல மொழி, இன மக்களிடையே வாழும் தமிழர்களுக்கு இந்தப் புனைவுகள் வெற்றுப் பெருமை பேச வாய்ப்பைத் தருகின்றன.
அப்படி என்ன தமிழினம் மற்றவர்கள் செய்யாததைச் செய்துவிட்டது? நன்றாக யோசித்துப் பார்த்தால் ஒன்றுமில்லை. இது கனவுகளிலும் மாயைகளிலும் உழன்று கொண்டிருப்போர்க்கு அதிர்ச்சி தரக்கூடும்.
கம்பனைப் போல் வள்ளுவன் போல் கவிஞன் உண்டா? என்று வீரச் சவால் விடுபவர்கள் யோசிக்கவேண்டியது ஒன்றுண்டு. கவிஞன் இல்லாத மொழி உண்டா? அவர்கள் புகழ் பாடாத இனம் உண்டா?
எல்லோருக்கும் இருக்கும் மூக்கு நமக்கும் உண்டு. வடிவில் சிறிது மாறுபட்டாலும் மூக்குதானே? அதன் பயன் ஒன்று தானே?
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பேசிவிட்டு, தமிழினம் தான் பெரிது, இதைவிட சிறந்தது இல்லை என்பதோ அதன் காரணமாக மேலும் உரிமையோ சலுகையோ கேட்பது நியாயமற்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றாமல் நேற்றுத் தோன்றிய மொழி என்பதனாலேயே ஒரு மொழியோ இனமோ தாழ்ந்து விடுமா? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதால் மட்டும் தமிழ் எல்லாவற்றுக்கு பெரியதாகி விடுமா?
மனிதரனைவரும் ஒரேவிதமான உரிமைகளைப் பெற்றவர்கள். அவர்களுடைய மொழியின் பெருமையும் அவ்வாறே. கவிதை, வரலாறு கலாச்சாரம் என்றெல்லாம் எதைக் கருதுகின்றோமோ அவை எல்லாம் மனித குலத்தின் பொது. அதற்கு ஒருவரோ, ஓரினமோ உரிமை கொண்டாட முடியாது.
தாய் மொழியில் கல்வி என்று கூக்குரலிடுவோர்க்கு ஒரு கேள்வி. தாய் மொழி எனக்குச் சோறு போடவில்லையெனில் அது எனக்கு எதற்கு வேண்டும்? பட்டினி கிடப்பவனுக்கோ தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாதவனுக்கோ, அதற்காக வேற்றிடம் தேடிச் சென்றவனுக்கோ தமிழின் பழம்பெருமை பேசுவது தவிர வேறு வழி என்ன? அது வெறும் பழங்கதை(nostalgia). தமிழ்நாட்டில் பாலும் தேனுமா ஓடுகிறது?
இங்கே கலைமேதைகளும் கவிப்பேரரசுகளும் தாங்கள் அடைந்துவிட்ட இடங்களில் நின்று என்னதான் பேசினாலும் கடைக்கோடியில் நிற்கும் தமிழனுக்கு என்ன பயன்? நீங்கள் பெற்ற வசதிகளை எல்லாம் எங்களுக்கும் தாருங்கள் நாங்களும் தமிழ் பற்றிப் பெருமை பேசுகிறோம்.
இந்தக் காலத்தில் மொழி, இனம், ஜாதி, தேசம் என்ற அடையாளங்கள் விஞ்ஞானபூர்வமாகத் தேவையற்றவை. இந்த அடையாளங்களை மீறி வருகிறவர்களுக்கே இனி வருங்காலம். அதுதான் நடைமுறைக்கு ஒத்துவரும்,(pragmatic). இதைப் பலமுறை பல மனிதர்கள் நிரூபித்திருக்கிறார்கள். எங்கேயோ பிறந்து யாருக்காகவோ வாழ்ந்து சேவை செய்து மடிந்தவர்களே இந்த யுகத்தின் முன்மாதிரிகள். ஸி.எஃப்.ஆண்ட்ரூஸ், வெரியர் இர்வின், மிரா பென் அய்ன்ஸ்ஸ்டீன், சந்திர சேகர், ஹர் கோவிந் குரானா போன்றவர்கள்.
தமிழையோ அதன் வரலாற்றையோ காப்பாற்ற படைகளும் கோஷங்களும் தேவையில்லை. தமிழர்கள் உலகம் வியக்கும் சாதனைகள் செய்தால், தமிழ், படைகள் இல்லாமலே வாழும்.
No comments:
Post a Comment