தமிழ்க் கலாச்சாரத்தின் இன்றைய நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் எதுவும் இல்லை. குறைந்த பட்சம் பொதுவெளியில் எதுவும் இல்லை. மிக அதிசயமாக எங்காவது ஒளிந்திருக்கக்கூடும். பொருளாதாரத்தில் அப்படியொன்றும் பின் தங்கிவிடாத தமிழ் மாநிலத்தின் கலாச்சார வெளியை, சாரமற்ற பிரதிகளும், தனித்துவமற்ற, சுயசிந்தனையற்ற மனிதர்களும் (அவர்களைக் கலைஞர்கள் என்று சொல்லத் தகாது.) நிரப்பியிருப்பது புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது.
இந்தக் கட்டுரை முழுவதுமே ஒரு பார்வையாளன் என்ற தகுதியிலேயெ எழுதப்பட்டிருக்கிறது. சினிமாவையோ, நாடகத்தையோ தெருவுக்கு கொண்டு வரும் உரிமை யாருக்கும் எவ்வளவு உண்டோ அதே அளவு உரிமை, அதை தயவு தாட்சண்யமின்றி விமரிசிக்கும் தகுதி ஒரு பிரஜை என்ற வகையில் எனக்கு உண்டு.
மிகப் பிரபலமான சினிமாத்துறையிலிருந்து தொடங்குவோம். பார்த்ததும் நம்மை உலுக்கும் எத்தனையோ திரைப்படங்கள் உலகத்தில் உண்டு. எழுபதாண்டைத் தாண்டிய தமிழ் சினிமாத் துறையில் அவற்றில் ஒன்று கூட இல்லை. காட்டப்படும் கதையும் படமும் ஒரே மாதிரியான காட்சி, வசன, ஒலி, ஒளி கொண்டு, கோவிலில் பஜனை, அர்ச்சனை செய்வது போன்று மீண்டும் மீண்டும் திரைக்கு வருகின்றன. இளைஞர்களின் காதலைத் தாண்டி வேறு பிரச்சனைகள், கரு இருப்பதே இல்லை. இளைஞர்களுக்கு வேறு பிரச்சனைகளும் உண்டு. இளைஞர்களைத் தவிர மற்றவர்களுக்கும் திரைப்படங்களில் காட்டும் அளவுக்கு பிரச்சனைகள், தேவைகள் உண்டு. இப்படிக் குப்பைகள் திரைகளை, மனங்களை, பத்திரிக்கைகளை, தொலைக்காட்சியை, முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டால், நல்ல கதைகளுக்கு இடம் இல்லாமலாகி விடுகிறது.
இப்படி விமரிசனம் செய்தால் உடனே சினிமா வியாபாரம், அது கலைச்சேவை அல்ல என்று கூக்குரல் எழுகிறது. கலை வியாபாரம் அல்ல என்றால், உலகில் மற்ற நாடுகளில் கலையும் வியாபாரமாகிறதே என்பதுதான் பதில். நமது சினிமாக்காரர்கள் கலையை வியாபாரம் பண்ண விரும்பவில்லை. அவர்களுக்கு சினிமாவும் தெரியாது அதை வியாபாரம் செய்யவும் தெரியாது. அரைத்துப் புளித்த மாவையே அரைத்துப் பணம் பார்த்தவர்களுக்கு புதியதாக மாவரைக்கத் தெரியாது. யாரோ சொன்ன மாதிரி ‘காற்றைப் புணரும் அசைவுகளை’ நடனமாக்குகிறவர்கள். அவர்களுக்கு நல்ல நீலப்படம் எடுக்கவும் தெரியாது. நல்ல நடனப்படம் எடுக்கவும் தெரியாது.
அடுத்த சாக்கு(excuse). நீங்கள் வந்து படம் எடுத்தால் தெரியும். வந்து எடுங்கள். தோசைக்கடையில் போய் உன் தோசை சரியில்லை என்று சொன்னால் உடனே அவர்கள் நீங்கள் வந்து தோசை சுடுங்கள் என்று சொல்வது போன்றது.-- (War cannot be left to Generals alone. போர் நடத்துவதை ராணுவ அதிகாரிகளிடம் மட்டும் தந்துவிடமுடியாது. அது மற்றவர்களை பாதிக்கக் கூடியது)-- அதுபோல சினிமா எடுப்பவன் தான் அதுபற்றி விமரிசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.
தமிழ்வாழ்வின் எந்த அடையாளமும் இன்றி எவருடைய முகமோ கதையோ, வாழ்வோ, பாட்டோ, இசையோ திரையில் வருகிறது. இதற்கும் தமிழனுக்கும், இந்தியனுக்கும் ஏன் மனிதனுக்கும் எந்த உறவும் இல்லை. இவை எல்லாம் பொய்யானது, எங்கோ திருடியது. ஒட்டுப் போட்ட துணியால் தைத்த உடை போன்றது. வேறுவேறு அளவுள்ள, நிறமான பொம்மைகளிலிருந்து கைகளை, கால்களை முகங்களை அங்கங்களைப் பிரித்தெடுத்து ஒட்டவைத்து செய்த புதிய பொம்மை அது. இதுதான் தமிழ் சினிமா. இந்த சினிமா நமக்குத் தேவையில்லை. நம்மால் உடனடியாகச் செய்யக்கூடியது கடுமையாக இந்தச் செத்துப் போன சினிமாவை உரக்க விமரிசிப்பதும், அதைப்பார்க்காமலிருப்பதுமே.
No comments:
Post a Comment