Wednesday, July 15, 2009
உரையாடல் - ஒரு பக்கக் கதை
ஒரு நீண்ட பயணத்தின் பிறகு ஏற்படும் களைப்பு இன்னும் தீரவில்லை. இந்தக் களைப்பு எப்போதும் அவளிடம் குடியிருந்தது. இன்று புதிய இடத்தில் தூங்குவது கஷ்டமாக இருந்தது. இரவின் அமைதியில், ஊரிலிருந்து சொல்லாமல் வந்துவிட்ட பதட்டம் இன்னும் இருந்தது. ‘மகனும் மருமகளும் தேடிக் கொண்டிருக்கக்கூடும். நன்றாகத் தேடட்டும். நான் இல்லை என்றால் தான் தெரியும். அவள் வந்ததில் இருந்தே ராசியில்லை. அதைச் சொன்னால் என்ன தப்பு? அதுதானே உண்மை. பொண்டாட்டி வந்ததில் இருந்தே இந்தப் பயலை வளைத்துப் போட்டுவிட்டாள். இத்தனைக்கும் தம்பி மகள். என்ன சொல்ல?. எல்லாம் தலைஎழுத்து.” நெடுநேரம் விழித்திருந்த பின் எப்போது தூங்கினாள் என்றே தெரியவில்லை.
காலை எழுந்த போது நன்றாக விடிந்துவிட்டது. மகள் அடுப்படியில் ஏதோ செய்து கொண்டிருந்த சத்தம் கேட்டது. விறுவிறு என்று எழுந்து போய்க்கேட்டாள் “ஏண்டி எழுப்ப வேண்டியது தானே.” “ஆமா அங்கிருந்து பஸ்ல வந்திருக்க. சரி தூங்கட்டும்னுதான் விட்டேன் இப்ப அவசரமா எழுந்து என்ன செய்யப் போற?”
“ஒண்ணும் இல்ல.” சொல்லிவிட்டு பல்விளக்கப் போனாள். மீண்டும் மீண்டும் நேற்று மத்தியானத்துக்கு மேல் மருமகளுடன் சண்டையிட்டது நினைவில் வந்தது. “அதிகமாகப் பேசி விட்டேனோ? சரி போ ஆனது ஆய்ப்போச்சு. இவ வீடு எப்படியோ? இவளும் சரியில்லைன்னா இங்கிருந்தும் போக வேண்டியதுதான். எனக்கு ஏன் இப்படி வாய்க்கிறது? எல்லோரையும் போல சுமூகமா வாழ முடியல….. இந்த வீட்டிலும் சண்டை வந்துருமா?” பயமாக இருந்தது. அவள் வாக்கில் சனி இருப்பதாக கல்யாணி அம்மா சொல்வாள். அது சரி
அம்மா, சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வந்திருக்கிறாள். ஏதாவது சண்டையாக இருக்கவேண்டும் என்று அகிலாவுக்குப் புரிந்தது. இங்கயும் இதே கதை. ஏண்டா கல்யாணம் முடித்தோம் என்றிருந்தது அவளுக்கு. ஆம்பளப் பயகளெ இப்படித்தான் இருக்கானுக. பிள்ளைய வேற பெத்தாச்சு. கழுதய எப்படியோ காலத்தை ஓட்டவேண்டியதுதான். இவரை விட்டுட்டு தம்பி கிட்ட போக முடியாது. அவனே தரிகணத்தோம் போடுறான். இந்தா அம்மா கூடச்சண்டை போட்ருப்பான். பொண்டாட்டிக்காக. கொஞ்ச நாளு அம்மா இருந்துட்டுப் போகட்டும்” அம்மா பல் விளக்கிட்டு வந்தாள்.
“எப்ப கிளம்பினீங்க?”
‘நேத்து ராத்திரி எட்டு மணிக்கு”
“தம்பி எப்படியிருக்கான்?’
“ஹூம்….. அவனுக்கென்ன நல்லாத்தான் இருக்கான்”. வார்த்தைகளை கிண்டலாக இழுத்துச் சொன்ன விதத்தில் ஏதோ பிரச்சனையுடன் தான் வந்திருக்கிறாள் என்பது வெளிப்பட்டது. அதற்கு மேல் பேசினால் இப்போதே தொடங்கிவிடும். அகிலா வேண்டுமென்றெ அமைதியாக இருந்தாள். நேற்று மாமியார் இங்கே இருப்பதற்காக வந்து சண்டைபோட்டுவிட்டுப் போனதை அம்மாவிடம் சொன்னால் அவளும் கத்த ஆரம்பித்து விடுவாள். இவரு கிட்ட பேச ஆரம்பிச்சிட்டான்னா ஓயாது. நல்லா கவனிச்சுக்கிட்டாலோ “எங்கம்மா கூட மட்டும் சண்ட போட்ட உங்கம்மாவை ரொம்பக்கவனிக்கிற” என்று குற்றம் சாட்டுவார்.
மாலையில் அம்மா ஊருக்குப் போகிறேன் என்று கிளம்பியபோது, அவள் “சரி” என்று பேச்சை முடித்தாள். ஏன் அப்படிச்சொன்னோம் என்று அவளுக்கே புரியவில்லை. அம்மாவுக்கும்தான்.
இப்படித்தான் தாம்பத்தியம் போய்க்கொண்டிருக்கிறது. சொல்ல வேண்டியதைச் சொல்லாமலும் சொல்ல விரும்பாததைச் சொல்லியும். சண்டை ஏதாவது வந்துவிடக்கூடாதே என்று பதுங்கிப் பதுங்கி உள்ளெ அமுங்கிப் போகிற எண்ணங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment