ஒரு பெண் மாணவி பதினோராம் வகுப்பில் தகுதியான மதிப்பெண்கள் பெறவில்லை என்று மத்திய அரசின் பள்ளியிலிருந்து அவளை மாற்றச் சான்றிதழ் கொடுத்து வெளியேற்றி விட்டார்கள். சாதாரணமாக பன்னிரண்டாம் வகுப்பில் எங்கும் குழந்தைகள் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்தே இது செய்யப்பட்டிருக்கிறது. கபில் சிபல் (மத்திய கல்வி அமைச்சர்) பள்ளிக் கல்விச் சீர்திருத்தம் பற்றிப் பேசும் புதுடில்லியில் அவரது அலுவலகத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் கூட இல்லாத இடத்தில் நடைபெற்றிருக்கிறது. ப்ள்ளியில் சேர்ந்து படித்த குழந்தை மேலே என்ன செய்யும் என்று சிறிது கவலைப்படாமல் செய்த கொடுஞ்செயல் இது.
இதிலிருந்து பல கேள்விகள் முறைதவறிய நடைமுறைகள், அவைகளைச் செய்யச் சிறிதும் அஞ்சாத கல்வியாளர்கள் பற்றி பார்க்கவேண்டியிருக்கிறது.
சில அடிப்படையான விஷயங்களிலிருந்து ஆரம்பிப்போம்.
1. பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகமாக வேண்டுமென்றுதான், விஞ்ஞானப் பிரிவில் குறைவான மதிப்பெண் பெற்ற அந்த மாணவியை வெளியேற்றி இருக்கவேண்டும் அந்தப்பள்ளி. குறைவான மதிப்பெண் பெறுவது அப்படியென்ன குற்றமா?
2. மனிதத்தன்மையில்லாமல் குழந்தைகளை நடத்துவதைத்தான் பள்ளிகளில் முன்னுதாரணமாக காட்டவேண்டுமா? இந்தக் கல்வியாளர்களும், நிர்வாகமாக இருக்கும் அரசும், இது மாதிரி நடந்தால் மற்றவர்கள் மீது இழைக்கப்படும் தவறுகளை எவவாறு எதிர்கொள்ளுவார்கள்? கொஞ்சம் மந்தமான பிள்ளைகளுக்கு தாங்கள் விருப்பிய பாடத்தில் ஃபெயிலாகக்கூட உரிமையில்லையா?
3. இதே வேகத்தில் போனால், இன்னும் கொஞ்ச நாளில் அறிவு, "அதுவும் பள்ளிகளும், அரசும் வரையறுக்கும் அறிவு" இல்லாதவர்கள், வாழவே தகுதியற்றவர்கள் என்ற நிலைதான் ஏற்படும். இந்த நேரத்தில் பெர்னார்ட் ஷா வின் கூற்றொன்று நினைவில் வருகிறது. "எனது கல்வி பள்ளிகளால் தடைப்பட்டது"(my education was interrupted by schooling"). ஒரு மாணவி தேரவில்லை என்றாலும், பள்ளிக்கு அவமானமென்று நினைக்கும் பள்ளி நிர்வாகங்கள் எதை முன்னுரிமைப் படுத்துகின்றன. கல்வி அல்லது மனிதம் என்ற இரண்டைக் கொடுத்தால் கல்விக்குத்தான் முன்னுரிமை. இதனால் கல்விக்கு, பள்ளிக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். ஆனால் இத்தகைய செயல்கள் மனிதனை கீழே தள்ளுகின்றன. கல்விதான் மனிதனை மனிதனாக்குகிறது. இங்கோ கல்வியின் பெயரால், மனிதனை, குழந்தையை, மனிதத் தன்மையை, இழிவு செய்கிறார்கள்.
இன்னும் கொஞ்ச நாட்களில், பள்ளித் தேர்வில் தேரவில்லையெனில், வாழத் தகுதியில்லை யென்று தூக்குத்தண்டனை கூடக் கொடுக்கலாம். முட்டாள்களைக் குறைத்தால் கணிசமாக ஜனத்தொகை குறையுமே.
இஞ்சினியர் ஆகவில்லையென்று காட்டுக்கு அனுப்பலாம். டாக்டர் ஆகவில்லை என்று ஒரு வேளைச் சாப்பாட்டைக் குறைக்கலாம். அறிவைக் கூட்ட, குழந்தைகளின் முயற்சியை, செயல் திறனைக்கூட்ட எத்தனையோ வழிகள்.
No comments:
Post a Comment