Sunday, August 16, 2009

கமலஹாசன் என்னும் நடிகர்.

கமலஹாசனுக்கு விழா எடுக்கிறார்களாம். ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டதாம். அதனால் என்ன? அதனாலேயே அது பெருமை கொண்டதாகி விடுமா?. அவர் ஐம்பதாண்டுகளின் தமிழ் சினிமாவை எந்த அளவு உயர்த்தினார் என்பதே கேள்வி.
தமிழ்க்கலாச்சாரத்தின் வழக்கமான மிகை தொடர்கிறது. சினிமாவில் கொஞ்சம் பிரபலமாகிவிட்டால் போதும். காக்கையை, குயிலென்றும், நரியைப் பரியென்றும் கூக்குரலிட்டு தொழுகையைத் தொடங்கிவிடும். வாய்ப்புக்கிடைத்தால் உட்னே பரிசுகளை வழங்கி தன்னையும், பரிசு வழங்குவோரையும் கௌரவித்துக் கொள்ளும். ஞானியென்றும் மேதையென்றும் சிலரைக்குறித்துக் கொள்ளும். அதுவும் அதற்கான் செலவுகளை விளம்பரதாரர்கள் ஏற்றுக்கொண்ட பிறகு.
முதலிலேயே ஒன்றை மிக மிக தெளிவாகச் சொல்லிவிட விரும்புகிறேன். எனது குரல் கமலஹாசன் என்ற தனி மனிதனின் பயணம் பற்றியதல்ல. தமிழ் சினிமாவுக்கு அவர் கொடுத்தது என்ன என்பதை மட்டுமே பற்றியது.
ஐம்பது ஆண்டுகளாக சாதனை புரிந்து வருவதாய், பஜனைக்கூட்டங்கள் கூக்குரலிடுவதை முதலில் பார்க்கிறேன். தமிழ் சினிமாவிம் வரலாற்றில் ஒரு திரைப்படம் கூட, மிக சிறப்பானதாக, உலக அளவில் சிறப்பாக பேசப்படும் அளவில், இல்லை என்பது என் கருத்து. இந்தக் கருத்தை எதிர்க்க உங்களுக்கு எவ்வளவு உரிமை உண்டோ அவ்வளவு உரிமை அதற்கு மாற்றான கருத்தைச் சொல்வதற்கு எனக்கும் உண்டு. இந்த லட்சணத்தில் ஐம்பது ஆண்டுகள் சினிமா வட்டாரத்தில் கழித்துவிட்டார் என்பதே ஒரு சாதனையாவது மிகவும் பின் தங்கிய நமது சினிமா மற்றும் கலாச்சார வெளியைத்தான் சுட்டுகிறது.
அவருக்கு திரைப்படத்துறை பற்றிய ஞானம் உண்டு என்பது அவரை அறிந்த சினிமாக்காரர்களும், மற்றவர்களும் சொல்லுகிறார்கள். இது பத்திரிக்கை, ஊடக வெளிகளில் அடிக்கடி வெளிப்படுகிறது. என்னைப் போல் அவரை தனிப்பட்ட முறையில் அறியாதவர்களுக்கு அவரது திரைப் படங்களே அவரைப் பற்றிய முடிவுகளுக்கான அடிப்படை.. அப்படிப் பார்த்தால், விளம்பரப்படுத்தப் படுகிறபடி மாபெரும் சாதனைகள் எதையும் அவர் செய்யவில்லை என்றே எனக்குப் படுகிறது. அவரை நேசிப்பவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். தனிப்பட்ட வாழ்வில் அவர் அறிஞராகவோ, கலைஞானியாகவோ இருக்கலாம். அது அவர் நடித்த அல்லது இயக்கிய படங்களில் முழுதாக வெளிப்படவில்லை. முழுதாக என்பதை மீண்டும் சொல்ல விரும்புகிறேன். அங்கங்கே சில படங்களில், சில இடங்களில் துண்டு துண்டாக வெளிப்படும் நல்ல காட்சிகளும், வசனங்களும், உத்திகளும் பிய்த்துப் போடப்பட்ட ரொட்டித்துண்டுகளைப் போல தென்படும். நல்ல திரைப்படத்துக்கான அனைத்தும் இணைந்து முழுத்திருப்தி தரும் படைப்பாக எதுவும் இல்லை. அவர் தரம் தாழ்ந்த தமிழ்ச்சினிமா உலகிற்கு நாயகனாக இருக்கலாம். உலக நாயகனாக ஒருபோதும் இல்லை.(உலக சினிமா நாயகன் இல்லையாம், உலக நாயகன் – அது அவரே அனைத்துக்கும் நாயகனோ?),
மசாலப் படங்கள், மசாலாப்படங்களிலிருந்து வேறுபட முயன்று நிற்கும் படங்கள் என்று தான் அவருடைய திரைப்படங்களை பிரிக்கலாம்.
நிறைவாக, உலகத்தரத்தில் ஒரு திரைப்படத்தைக் கூட தராத தமிழ் திரைப்பட உலகம், ஒன்று சேர்ந்து, பணம் வசூல் செய்து, மேலோட்டமாக ஒரு விழாவைக் கொண்டாடி ரசிகர்களிடமிருந்து பணத்தைக் கறக்கப் போகும் விழாவாகத்தானிருக்கும் அது. வருவோரும் போவோரும், அவர் புகழ்பாடி, அவர் தாள் பணிந்து ஏத்தி, வியாபார ரீதியில் விழாவை வெற்றிகரமானதாக்கி விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. மனிதனின் வெற்றி என்பது வியாபாரமாவது மட்டுமல்ல. அது வியாபாரிகளின் வெற்றி. சினிமாக்காரர்களின் வெற்றியல்ல.
இனிமேலாவது அவர் உலகத் தரத்தில் ஒரு தமிழ் சினிமா எடுக்கவேண்டும். அது குறும் படமாகக் கூட இருக்கலாம்.

No comments:

Post a Comment