வன்முறையும், உண்முறையும்
வன்முறை என்ற கருதுகோள் மிகவும் சிக்கலானது. விலங்குகள் விலங்குகளை உண்பதற்கும் மனிதன் விலங்குகளை உண்பதற்கும் வேறுபாடு உண்டா என்பதைக் கூட நம்மால் தீர்மானிக்க இயலாது. உலகிலிருக்கும் தாவரங்கள், உயிர்கள் அனைத்தையும் உள்ளடக்கிய பயோஸ்பியர்(Biosphere) பல உயிர்களாகவும், தாவரங்களாகவும் வடிவெடுத்துள்ளது. அடிப்படை அலகான செல்’தான் அனைத்தின் கட்டுமானப் பொருள். அனைத்து உயிர்களும் (இதில் தாவரங்களும் வைரஸ்களும் அடக்கம்). இயற்கை என்னும் (உயிரற்ற) கைவினைஞன் எண்ணிலடங்காத செல்களாலான பயொஸ்பியரை, கலைத்துக் கலைத்துப் போட்டும் புதிய பொருள்களைச் புதிய உயிர்களைச் செய்கிறான் என்று புரிந்து கொள்வதற்காகச் சொல்லிக் கொள்ளலாம். பிறக்கும் குழந்தை புதியதாகத் தோன்றினாலும், அது எதிலிருந்து தோன்றியதோ அது ஏற்கனவே இருந்த பொருள்களிலிருந்து ஆனதே ஆகும். ஆகவே உயிர்களின் சாரம் (உயிரியல் ரீதியில்) ஒன்றுதான்.
இப்படியிருக்கும் உயிர்வகைகளில் ஒன்று மற்றொன்றை உட்கொண்டாலும் அடிப்படையான செல்லின் தளத்தில் வன்முறை நிகழ்வதில்லை. நம் உயிர்களை செல்களின் காலனி(colony) என்று கொண்டால் ஒரு உயிரின் பகுதியாக இருந்த செல்கள் இன்னொரு உயிரின் பகுதியாக மாறுவது தான் நிகழ்கிறது. உதாரணமாக கோழியின் உடற்பகுதியாக இருக்கும் செல்கள் மனிதன் கோழியை உண்ணும் பொழுது, மனிதனின் உடற்பகுதி செல்களாக மாறிவிடுகின்றன. பூமியின் அளவில் நடக்கும் இந்த மாற்றத்தால் பயோஸ்பியரில் எந்த மாற்றமும் நடக்குமா என்பது கேள்வி. இல்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இப்படியொரு நிலையில் வன்முறை என்பது உண்பதற்காக செய்யப்பட்டால் அதை வன்முறை என்றழைப்பதைவிட கொள்முறை என்றழைபதே பொருத்தமானது. சின்ன மீனின் செல்களை பெரிய மீன் (உட்)கொள்ளுகிறது. மிருகங்கள் பசியில் தன் இனத்தையே உண்டுகொள்ளும் முறையில் இதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். இதைத்தான் கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்ற பழமொழியும் சுட்டுவதாக இருக்கலாம். உண்பதற்காக கொன்ற பொருளை, தின்னாமல் விட்டால் தான் பாவம் என்ற தொனியும் இந்தப் பழமொழியில் இருக்கிறது.
வன்முறையின் இன்னொரு வடிவம் உண்டு. வைக்கோல் போரை நாய் காத்தது போல என்ற பழமொழியின் வகை. கொல்வதற்காகவே கொல்வது. இதில் தான் மனிதன் மிகவும் தேர்ச்சி பெற்றிருக்கிறான். தானும் கொள்ளாமல், அடுத்தவரையும் கொள்ளவிடாமல் வீணாக மனிதர்களைச் சாகடிக்கிறான். பசியில்லை எனில் மிருகங்கள் மற்ற மிருகங்கள் கண்ணெதிரே இருந்தாலும் கொல்வதில்லை. மனிதனின் மூளையில் தான் பசியிருக்கிறது. தான் மற்றவர்களை அடக்கியாள வேண்டும் என்ற பசி. பூமியின் வளங்கள் தனக்கு மட்டும் வேண்டும் என்ற பசி. இப்படி நிகழும் வன்முறையில், மரணத்தில் நமது(பயொஸ்பியரின்) அடிப்படை அலகான செல்கள் வீணாகின்றன. இதுதான் உண்மையான வன்முறை.
சுருக்கமாகச் சொன்னால் ஒரு உயிரினம் மற்றொரு உயிரினத்தின் உணவாகும் போது, செல்கள் இடம் மாறுகின்றன. அதாவது ஒரு உடலைவிட்டு இன்னொரு உடலுக்கு. அப்படி ஆகாத வன்முறையும் மரணமும் வீணாக விரையமாவதால் அதையே உண்மையான யாருக்கும் பயனிலாத வன்முறை என்று மறுக்கலாம்.
எல்லாரும் கறி உண்பவர்களாக ஆனாலும் சிக்கல். யாருமே கறி உண்பவர்களாக இல்லாவிட்டாலும் சிக்கல். ஏனெனில், எல்லோரும் உண்ணும் அளவுக்கு உலகில் மிருகங்கள் கிடையாது. எல்லோரும் தாவர வகை உணவு உண்டாலும், அவர்களுக்கு வேண்டிய அளவு உணவு கிடைக்காது. எனவே, இருக்கிற வகை உணவுகளைப் பகிர்ந்து கொள்வதே சரி. அதற்காக நாம் ஏற்றுக் கொள்கிற வேஷந்தான், புலால் உண்பவன், புலால் உண்ணாதவன் என்ற வேறுபாடு. எப்படியோ மனிதன் வாழ உணவு வேண்டும். அதில் வேற்றுமை காட்டி,ச் சச்சரவு கொள்வது புரிந்து கொள்ள முடியாதது. நமக்கு இதில் தேர்ந்தெடுக்கும் உரிமை மெத்த இருப்பதாகத் தெரிந்தாலும், உண்மையில் பூமியில் உள்ளவர்கள் அனைவருக்கும் கறி உண்ணலாமா அல்லது வேண்டாமா என்று தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு,மிகக் குறுகலானதே.
No comments:
Post a Comment