Tuesday, February 28, 2017

நானும் ஒரு இந்து

என் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள்
அதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள்
என் தாய் தந்தையரின் பெயரை,
என் ஜாதியை,
என் சான்றிதழ்களைத் சரிபார்த்துக் கொள்ளுங்கள்
நான் ஒரு இந்து என்பதற்கான எல்லா
சான்றுகளும் உள்ளவன்

என் ஊரைத் தெரிந்து கொள்ளுங்கள்
மொழியின் பெயரையாவது சொல்லுங்கள்
நடை உடை பாவனைகளை வைத்து
எழுதிக் கொள்ளுங்கள்
இருபத்தி ஐந்து அடையாள அட்டைகள்
என்னிடம் உள்ளன
நான் இந்தியன் என்பதற்கான எல்லாச்
சான்றுகளும் என்னிடம் உள்ளவன்

நான் இன்னொரு பெயரை,
இன்னொரு ஜாதியை,
தாய் தந்தையரை
இன்னொரு மதம் சார்ந்தவனை
வெறுப்பவனில்லை
என்பதையும் எழுதிக் கொள்ளுங்கள்

ஆங்கிலேயன் கிழித்த கோட்டுக்குள்
தேசம் தேசம் என்று
குதித்துக் கொண்டிருக்கும்
விட்டில் பூச்சிகளுக்குத் தெரியாது
மனிதர்களின் சிறகுகள்,
அவர்கள் பறந்து தாண்டும் எல்லைகள்
அவன் வானத்தின் எல்லையின்மை

இன்னொரு நாட்டை, ஊரை, மொழியை
நடை, உடை பாவனைகளை
வெறுப்பவனில்லை என்பதையும்
எத்தனை அடையாள அட்டைகளில்
என்னை அடைக்க  நீங்கள் முயன்றாலும்
என்னை முழுமையாகக் காண
உங்களால் முடியாது என்பதைப்
புரிந்து கொள்ளுங்கள்

என் முதுகில் குத்தப்பட்ட
எல்லா முத்திரைகளின் இடையிலும்
என் முதுகு முழுமையாக
சேதப்படாமல் இருக்கிறது என்பதை
பார்த்துக் கொள்ளுங்கள்

எல்லாவற்றிற்கும் மேலாக
நான் ஒரு இந்து என்பதையும்
பார்த்து, கேட்டு, தெரிந்து
புரிந்துகொள்ளுங்கள்

நான் யாருக்கும்
எதிரியல்ல
நான் யாருக்கும் அஞ்சவேண்டியதில்லை
யாரையும் கொல்ல வேண்டியதில்லை
என் அடையாளத்தை நிரூபிக்க என்பதையும்

நான் ஒரு இந்து என்பதையும்,


No comments:

Post a Comment