நாவலின்
மொழி மிகவும் எளிமையானது. நேரடியானது. அதையே நான் நிறைவாகப் பார்க்கிறேன். சிக்கலான மொழியில் எழுதினாலேயே அறிவுஜீவி ஆகலாம்
என்ற கருத்துக்கு எதிராக இது இருக்கிறது. அதில்
வரும் மாந்தர்களும் அனைவருக்கும் புரியும் எளிய மொழியிலேயே பேசுகிறார்கள். யார் படித்தாலும்
புரிந்து கொள்ளக்கூடிய மொழியும் நடையும் வாதமும் இதன் மிகப் பெரிய பலம்.
மனித வாழ்வின்
அடையாளங்களின் பொருள் என்ன? என்ற கேள்விக்குப் பதிலை நாவல் தேடுகிறது. தன் மனைவி ஒரு நாவிதனுடன் ஓடிப்போய் விட்டாள் என்ற
அவமானத்தில் ஊரைவிட்டு ஓடும் பப்பா, ஒரு நேரத்தில், தன் நண்பன் இறந்ததும் அவனுடைய மனைவிக்கு
வாழ்க்கை தருகிறார். தாய் தகப்பன் அறியாத குழந்தையை எடுத்து இருவரும் வளர்க்கிறார்கள். இதுவெல்லாம், நினைவுகூரலாக வருகின்றன. அதனால், நிகழ்ந்ததை, விமரிசனங்கள், தர்க்கங்கள்
இன்றி எழுதிச் செல்கிறார் ஜெயகாந்தன். பப்பாவின்
வாழ்க்கை முழுவதும் யதார்த்தமாக நிகழ வேண்டியது நிகழ்ந்ததாகவே எந்த அறம்/ஒழுக்கம் குறித்த
பார்வைகளும் இன்றி கதை சொல்கிறார். வாழ்க்கை
அப்படித்தானே தன்னை எழுதிச் செல்கிறது?
ஒரு அடையாளமும்
இல்லாத மனிதன், தனது வேர்களைத் தேடி, சொந்தங்களைத் தேடி வருகிறான். ஆனால் அவனுக்கு வாழ்க்கை குறித்த தீர்க்கமான தத்துவப்
பார்வைகள் கிடையாது. அவனுக்குத் தெரிந்த ஒரே
நடைமுறை அடுத்தவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என்பது. அந்த மரியாதை அவர்களுடைய குலத்தினாலோ, மதத்தினாலோ,
ஊரினாலோ அல்லது ஆண்/பெண் என்பதாலோ, நல்லவன் கெட்டவன் என்பதனாலோ, சட்டத்தின் அடிப்படையினாலோ
பைத்தியம் அல்லது மற்றக் குணங்களினாலோ தீர்மானிக்கப் படுவது அல்ல. ஜெயகாந்தனும், மனிதனின் அசைக்க முடியாத உரிமைகளின்
ஒன்றாக அதைக் கருதுகிறார். அதையே நாவல் சொல்கிறது.
ஹென்றியின்
வழியே அறிவுஜீவி என்பவன் சமூகத்தின் சட்டகத்துக்கு வெளியே இருப்பான் என்றில்லாமல்,
சமூகத்துக்கு உள்ளேயே இருந்து கொண்டு அதை விமரிசிக்கிறவனாகவும், முரண்படுகிறவனாகவும்,
அறம் பற்றிய புரிதலை போதனைகள் மூலமாக இல்லாமல் வாழ்வதன் மூலமாக ஏற்படுத்துகிறவனாகவும்
இருக்கிறான் என்பதைக் காட்டுகிறார். அவன் சமூகத்தை
நோக்கியே வருகிறான். ஆனாலும் அதன் அறங்கள் குறித்துக் கவலைகொள்கிறான்.
நாவலில்
வருகின்ற பைத்தியக்காரி மனிதனுக்கிருக்கும் அளவற்ற சுதந்திரத்தின் குறியீடாக வருகிறாள். ஹென்றி தொடங்கிய இடத்திலிருந்து சமூகத்தில் ஓரங்கமாக
மாறும் கதையில் அதற்கு எதிர்த்திசையில் அடையாளங்கள் அற்ற விடுதலையை நோக்கிப் போகிறாள்.
தேவராஜனுக்கும்
அவனுடைய மனைவிக்கும் ஏற்படும் பிணக்கும், அக்கம்மாவுக்கும் தேவராஜனுடைய மனைவிக்கும்
ஏற்படும் பிணக்கும், தேவராஜனுக்கும், கிளியாம்பாளுக்கும் இருக்கும் உறவும், சமூக உறவுகள்
பல தளங்களில், சாதி இன்னும் பல சிக்கல்களுக்குள் இருப்பதைக் காட்டுகின்றன. இவர்களுக்குப் பகைப் புலமாகவே ஹென்றியும் பைத்தியக்காரியும்
இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment