இந்த நூல் வெளிவந்த நாளில் இருந்தே வாங்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், ஆஷ்
பற்றிய ஆசிரியரின் கட்டுரையை ஃபிரண்ட்லைன் இதழில் படித்துவிட்ட்தால் இந்நூலில் உள்ள
மற்றக் கட்டுரைகள் எவை என்று அறிய விரும்பினேன்.
ஆஷ்
தவிர இன்னும் தமிழ்நாட்டோடு தொடர்பு கொண்ட பலருடைய வாழ்க்கைகள் இந்நூலில் பேசப்படுகின்றன. இராமனுஜ நாயுடு பற்றி ஆசிரியருடைய இன்னொரு புத்தகத்தை
ஏற்கனவே படித்திருக்கிறேன்.
எல்லீஸ்
என்ற ஆங்கிலேயர், ஜியு போப், பாரதி ஆய்வாளர், ரா.அ. பத்மனாபன், உ.வே. சாமிநாதய்யர்,
போன்ற ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தவர்களுடன், சி.எஸ். சுப்பிரமணியன் (பொதுவுடமைக் கட்சி),
ம.வெ. ராமானுஜாச்சாரியார் போன்ற, தமிழ்நாட்டினர் அறிந்து கொள்ளவேண்டிய ஆளுமைகள் குறித்த
ஆவணப்பதிவாகும் இந்நூல்.
உ.வே.சா
பற்றிய கட்டுரை முக்கியமானது. அவரது புலமையின்
மேன்மையும், (என் சரிதம் போன்ற நூல்களில்) நடையின் எளிமையும், யாருக்கு, எதை, எப்படிச்
சொல்ல வேண்டும் என்பது அவருக்குப் புரிந்தும் தெரிந்தும் இருந்ததை எடுத்துரைக்கின்றது. இது இன்றைய எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் பின்பற்ற
வேண்டிய நடைமுறை.
ம.வே.
ராமானுஜாச்சாரியார் மஹாபாரதத்தை முழுமையாக வெளியிட வேண்டும் என்ற தன் அவாவை நிறைவேற்ற
என்னென்ன பெருமுயற்சிகள், அயராத உழைப்பில் ஈடுபட்டார் என்பதை அவர் குறித்த கட்டுரை
விரிவாக எடுத்துரைக்கிறது. என்னைப் பொறுத்தவரை,
மஹாபாரதம் ஒரு பெருங்கடல். அதில் கரையில் நின்று
பார்க்கும் அளவுதான் பொறுமையும் நேரமும் இருக்கிறது. அதை இப்போது கிடைக்கும் காவிய நடையிலோ, அல்லது ஜெயமோகன்
நடையிலோ படிக்க அயற்சியாக இருக்கிறது. இந்நூலாசிரியர்
குறிப்பிடுவது போல, நவீன மொழியில் – பாரதியின் வார்த்தைகளில் அல்லது அவருடைய பாஞ்சாலி
சபதம் போன்ற கவிதை மொழியில், புதிய பதங்களுடன், புதிய நடையில் – எழுதப்பட வேண்டிய தேவை
இருக்கிறது.
மிக
மேன்மையான மனிதர்களைப் பற்றிய அருமையான தெளிவான, சான்றுகளுடன் கூடிய கட்டுரைகள்.
No comments:
Post a Comment