Wednesday, February 01, 2017

கலைக்க முடியாத ஒப்பனைகள் - வண்ணதாசன்

வெகுநாட்களுக்குப் பிறகு தமிழில் ஒரு சிறுகதைத் தொகுப்பை வாசிதேன்.  இந்தப் புத்தகத்தை வாங்கக் காரணம் அல்லது தூண்டுதல் – வண்ணதாசன் இந்த ஆண்டு ’ஒரு சிறு இசை’  என்ற சிறுகதைத் தொகுப்பு நூலுக்காக வாங்கிய சாஹித்ய அகாதமி பரிசு – அது மீண்டும் வண்ணதாசனை தொட வைத்தது.

            அவருடைய கவிதைகளை, கதைகளை வெவ்வேறு தருணங்களில் படித்திருந்தாலும் அவருடைய முதல் தொகுப்பான ‘கலைக்க முடியாத ஒப்பனைகள் (!976) படித்ததும், அதில் அவருடைய தனித்தன்மை வெளிப்படுவதைக் காணமுடிந்தது.  கடைசித் தொகுப்பான ‘ஒரு சிறு இசை’ தொகுப்பையும் படித்து ஒப்பிட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் தான் இரண்டு நூல்களையும் வாங்கினேன்.   அதையும் படித்தபின் ஒப்பிட முயற்சி செய்வேன்.

            இத் தொகுப்பில் எல்லாக கதைகளிலும் இருக்கும் ஒரு பொதுப்பண்பு – மிக நுட்பமான விவரங்கள்.  மனிதர்களின், இயற்கையின், விலங்குகள் பறவைகளின் சிறு சிறு அசைவுகள், பேச்சுக்கள், செய்கைகள் பதிவாகின்றன. ஒரு நுண்ணோக்கியில் (மைக்ரொஸ்கோப்) மனிதர்களை அவர்களின் சூழலுடன் வைத்துப் பார்ப்பது போல் அமைந்த கதைகள்.   இன்னும் அவருடைய நடை அப்படித்தான் இருக்கிறதா என்பதை அடுத்த தொகுப்பை படித்துவிட்டு எழுதுகிறேன்.   மிக மிக எளிய மனிதர்களின் வாழ்க்கை, அதன் எல்லாப் பக்கங்களுடனும் சொல்லப்பட்டிருக்கிறது.

            தனது துயர்மிகுந்த வாழ்க்கையினூடே காலையில் சாலையில் உறங்கும் சிறுவர்களுக்குத் தேனிர் வாங்கித் தரும் ‘அவள்’(எச்சம்),  தனுவை மனதில் நேசித்து மயங்கும் ஞானப்பன், சினிமாவில் நடிக்க வந்து ஒரு கிளியுடன் வாழும் புட்டா, கிளியைத் திரைப்படக் காட்சிக்காக வாடகைகுக் கேட்கும் உதவியாளன், அதைத் தரமுடியாது என்று வறுமையிலும் மறுக்கிற புட்டா .. இன்னும் எத்தனையோ மனிதர்களை மிக யதார்த்தமான நடையில் எழுதப்பட்ட இந்தக் கதைகளில் சந்திக்கலாம்.  பரிவும் அன்பும் கொண்ட ஒரு மொழியை உடையவர் வண்ணதாசன்.


            மிக நல்ல கதைகள் அடங்கிய தொகுப்பு. ****

No comments:

Post a Comment